• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் அன்புக்கு நன்றி! - கதைத்திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 37


அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளட்டும் என்று அவன்தான் அனுப்பி வைத்தான். அப்படிப் பேசித் தெளிவதுதான் சரி என்பதும் தெரிந்துதான் இருந்தது. பிறகும் எதற்கு அவனுக்குள் இத்தனை புழுக்கம்?

சிசிரவுக்கு நினைவு வந்துவிட்டதாம் என்று அறிந்ததிலிருந்து இதை எதிர்பார்த்தான்தான். இதையெல்லாம் தானும் கடந்து வர வேண்டும் என்றும் தெரியும்தான். ஆனாலும் கண்முன்னே காட்சிகள் அரங்கேறுகையில் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. அவனும் எத்தனையைத்தான் கடந்து வருவது? பொறுத்துப் போவது?

மாலை ஒரு பிறந்தநாள் விழாவுக்குச் செல்ல வேண்டும். அதற்கு முதலில் செய்வதற்கு நிறைய வேலைகள் கிடந்தன. பார்த்துக்கொண்டிருந்த முக்கியமான கணக்குவழக்கை அப்படியே விட்டுவிட்டுத்தான் ஓடி வந்திருந்தான். அதை முடிக்க வேண்டும். ஆனாலும் எதையும் செய்யும் மனநிலை இல்லாமல், எங்கென்று இல்லாமல் பஜிரோவை விரட்டிக்கொண்டிருந்தான்.

இனியும் எதற்கடா பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறாய்?
அவரவர் அவரவருக்கான பாதையில் பயணிப்பதுதான் இதற்கு முடிவு. பிறகும் ஏன் இதெல்லாம்? உன் முகம் பார்த்து அவள் ஒன்றைக் கேட்டுவிட்டால் தலையை ஆட்டிவிடுவாயா? நீ உறுதியாய் நின்று மறுத்திருந்தால் இது நடந்திராதே! அவனே அவனைத் திட்டிக்கொண்டான்.

காரணமற்ற ஆத்திர மூச்சுகள் அனலாய் வெளியேறின. விழிகளில் கோபம் கொப்பளித்தது. எங்கும் இறக்கிவைக்க முடியாத அந்த அழுத்தம் அவனையே அழுத்துவது போலிருக்க, பல்லைக் கடித்தபடி கிடைக்கிற திருப்பங்களில் எல்லாம் பஜிரோவை வெட்டித் திருப்பினான்.

ஒரு கட்டத்துக்குமேல் அவனால் முடியவே இல்லை. அவர்கள் பேசிக்கொண்டதெல்லாம் போதும் என்று தோன்றிவிட பஜிரோவை வீட்டுக்குத் திருப்பியிருந்தான். ஒருவித சினத்துடன் கடகடவென்று படியேறி வந்து நின்றால், இவன் அவளுக்குப் பொருத்தம் இல்லையாம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறான் அவன். அவள் வேறு அதற்கு விடமாட்டானாம் என்று சொல்கிறாள்.

“உன்ன எதுக்கு விடோணும்?” அவள் முன்னே வந்து நின்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் வினவினான். “சொல்லு, இன்னும் உன்ன எதுக்கு விடோணும்? விட்டதெல்லாம் காணாதோ?” என்றதும் அவளுக்கு விழிகள் கலங்கிப் போயின. அவளை அறியாது விளையாட்டாய் வந்த வார்த்தைகள் அவை. அதற்குப்போய்… பரிதவிப்புடன் அவனைப் பார்த்தாள்.

சிசிரவும் இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை. அவன் கோபத்தை மிக நன்றாக அறிந்திருந்தவன் திகிலுடன் அவனை நோக்கினான்.

இப்போது அனந்தனின் சினம் அவன் புறம் திரும்பிற்று. “என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறாய் உன்னைப் பற்றி? நீ பெரிய ஹீரோ எண்டா? அவள் ஆசைப்பட்ட மாதிரி நான் நடக்கேல்ல எண்டுற கோவத்திலதான் அவள் உன்ர பக்கம் திரும்பினவள். இல்லையோ என்னைத் தாண்டி உன்னட்ட வந்தே இருக்க மாட்டாள். அதுக்காகப் பெரிய இவன் மாதிரி கதைப்பியோ?” என்று அவன் சிசிரவை நெருங்க, ஒரு கணம் அதிர்ந்தாலும் வேகமாக அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்து நின்ற நிரல்யா, “மச்சான் ப்ளீஸ், கோபப்படாதீங்க. அவருக்கு உங்கட கோபம் விளங்காது.” என்றாள் அனந்தனின் கைகள் இரண்டையும் பற்றி, அவனை நிறுத்த முயன்றபடி.

“உனக்கு விளங்குமோ?” என்றான் அடுத்த நொடியே விழிகளில் கூர்மையோடு.

“விளங்குது.” என்றாள் மெல்லிய குரலில். “நானும் அது… பழைய நினைப்பில… விளையாட்டுக்குத்தான் அப்பிடிச் சொன்னனான். வேணுமெண்டு இல்ல.” என்று திக்கித் திணறிச் சொன்னாள்.

அனந்தன் மேலே கோபப்படவில்லை. அசையாது அவளையே பார்த்தான். அவளும் பார்வையை அகற்றிக்கொள்ளவில்லை. அனந்தன் மனத்தின் சீற்றங்களெல்லாம் அடங்கிப் போயிற்று.

“கதைச்சது காணும். அவனை அனுப்பு!” என்றுவிட்டு அறைக்குள் சென்று மறைந்தான்.

இருவருக்கும் பேச்சு நின்று போயிற்று. நிரல்யாவினுள் மெல்லிய சங்கடம். போ என்று எப்படிச் சொல்லுவாள்? நெஞ்சினுள் ஏதோ ஒன்று வந்து அடைத்தது.

சிசிரவுக்கு அந்த இடத்திற்குத் தான் அதிகப்படி எனும் உணர்வை நொடியில் விதைத்திருந்தான் அனந்தன்.

நிதர்சனமும் அதுதானே! இனி அவன் தள்ளித்தான் நிற்க வேண்டும். அதுதான் சரியும் கூட. அவன் வாழ்க்கைக்காகச் சற்று முன் வரையிலும் எவ்வளவு சொன்னாள்? அதைப் போல அவன் விலகிக்கொள்வதுதான் அவர்களின் வாழ்க்கைக்கு அவன் செய்யும் நல்லது. கொஞ்சம் கொஞ்சமாய் அறிவுக்கு எல்லாம் புலப்படுகிறதுதான். இந்த மனதுதான் அழியாமல் சேமித்து வைத்திருந்த அழகிய நினைவுகளுக்கும் நிஜத்துக்குமிடையில் கிடந்து துடிக்கிறது. இவ்வளவு காலமும் அவளை மறந்து அவளை உயிரோடு கொன்றான். இப்போது அவளை மறக்க முடியாமல் கிடந்து அவன் சாகிறான். அவனுக்கு விதிக்கப்பட்டிருப்பது இதுதான் போலும்.

நெஞ்சிலிருந்து ஏதோ ஒன்று வெடித்துக்கொண்டு கிளம்ப வேகமாக அவளுக்கு முதுகு காட்டித் திரும்பிக்கொண்டு தலையைக் கோதிவிட்டான். ‘இங்கிருந்து போய்விடு, இனி அவளைப் பார்க்கவோ, பேசவோ முயலாதே. இனி அவள் உன்னுடையவள் இல்லை. உன் வாழ்க்கை அங்கே இருக்கிறது’ என்று அறிவு அவனுக்கு எடுத்துரைத்தது.

“சிசிர!” அவன் மனத்தின் போராட்டத்துக்குள் இடையிட்டது நிரல்யாவின் குரல்.

ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்டான். கைகள் இரண்டாலும் முகத்தை அழுத்தித் துடைத்துவிட்டுத் திரும்பி, “நான் வெளிக்கிடப்போறன் நிரா.” என்றான் உணர்வுகள் எதையும் காட்டாத குரலில்.

நிரல்யாவின் உள்ளமும் துடித்தது. விழிகளில் நீர் சேரப் பார்த்தது. ஆனால், இதுதானே சரி! இதை இப்படித்தானே கடக்க வேண்டும்! அதில் மெதுவாய்த் தலையைச் சரி என்பதுபோல் அசைத்தாள்.

கூடவே, “எதையும் யோசிக்காமப் போயிற்று வாங்க சிசிர. உங்கட வைஃப்போட போய்க் கதைங்க. சமாதானமாகுங்க. அதுவும் இந்த நேரத்தில அவாவைக் கவலைப்பட விடாதீங்க.” என்றாள் கரகரத்த குரலில்.

சரி என்பதுபோல் தலையை அசைத்தான். ஆனாலும் அசையவில்லை. அசைய முடியவில்லை. அத்தனை இலகுவாய் அவனால் அவளைக் கடந்துசெல்ல முடியவில்லை. அவளையே பார்த்து நின்றான்.

நிரல்யாவுக்கும் கையாளவே முடியாத மிகக் கடினமான நிமிடத்துளிகள்தான் அவை. அவர்கள் எப்போதோ பிரிந்துவிட்டார்கள். காலம் அவர்களைப் பிரித்து வைத்துவிட்டது. ஆனாலும் இது அவர்களே உணர்ந்து பிரிவது.

கைச்சாத்திடப்படாத காதல் ஒன்று எப்படிப் பேராதனைப் பல்கலைக்கழக மைதானத்தில் வைத்து இரு உள்ளங்களால் போடப்பட்டதோ, அதைப் போலவே அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் வைத்துப் பிரிவும் அந்த இரு உள்ளங்களாலும் பகிரப்பட்டது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member

உடலைப் பிரியும் உயிர்களாக உள்ளங்கள் இரண்டும் கிடந்து கதறின. காட்டிக்கொள்ளாமல் இருக்க முயன்றபடி ஒருவர் மற்றவரைப் பார்த்துத் தலையை அசைத்து விடைகொடுத்தனர். இருவர் விழிகளும் தளும்பிப் போயின.

அதற்குமேல் நின்றால் கட்டுப்பாட்டை இழந்து எதையும் செய்துவிடுவோமோ என்று பயந்த சிசிர வேகமாய் விலகி நடந்தான். இரண்டடித்தான் எடுத்து வைத்திருப்பான். மீண்டும் ஒரு வேகத்துடன் திரும்பி வந்து அவளின் ஒற்றைக் கையைத் தன் இரு கரங்களாலும் பற்றி, “முடிஞ்சா என்னை மன்னிச்சிரு நிரா. இப்ப யோசிச்சுப் பாத்தா உன்ர இந்த நிலைமைக்கு நான் மட்டும் தான் காரணம் எண்டு வடிவாத் தெரியுது. அவர் சொன்ன மாதிரி நான் நடுவுக்க வராம இருந்திருந்தா நீ எவ்வளவோ சந்தோசமா இருந்திருப்பாய். நிம்மதியான ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்கும். நான்தான் ப்ச்… உண்மையா சொறி நிரா. இப்பிடி எல்லாம் நடக்கும் எண்டு அந்த நேரம் தெரியேல்ல… அந்த வயசில…” என்றவனால் மேலே பேசவும் முடியவில்லை.

அவன் சொல்ல சொல்ல அவள் விழிகள் நீரால் நிறைந்து போயின. இதெல்லாம் வேண்டாமே என்பதுபோல் அவனைப் பார்த்தாள். “நீ நல்லாருக்கோணும் நிரா. சந்தோசமா வாழோனும் அத மட்டும் எனக்காகச் செய்திடு, ப்ளீஸ்!” என்றவன் அதற்குமேல் அங்கே நிற்கவில்லை. அவள் கையை விட்டுவிட்டுத் திரும்பியே பாராமல் புறப்பட்டிருந்தான்.

கண்ணீரை உள்ளுக்கிழுத்தபடி அவன் மறையும் வரையில் பார்த்து நின்றிருந்தாள் நிரல்யா. ஒரு வேகத்துடன் படிகளை இறங்கி, அவர்கள் வீட்டு கேட்டை தாண்டி, வீதிக்கு இறங்கி கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துபோனான் அவன்.

முடிந்து போயிற்று! அனைத்தும் முடிந்ததே போயிற்று. அசைக்க முடியாது போன்று தோன்றிய கால்களை அசைத்து அவள் படிக்கட்டை நெருங்கியபோது, “நிரல்!” என்று ஆனந்தனின் குரல் கேட்டது.

மெல்ல வந்து அவன் அறை வாசலில் நின்றாள். ஈரத்
தலையைத் துடைத்தபடி வந்தவனின் கையில் ஒரு சேர்ட் இருந்தது. “இதை ஒருக்கா அயர்ன் பண்ணித் தந்திட்டுப் போ!” என்று அதை அவளிடம் நீட்டினான்.

அவளுக்குள் மெல்லிய திகைப்பு. என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதுவரையில் அவன் இப்படி ஒன்றைக் கேட்டதும் இல்லை, அவள் செய்ததும் இல்லை.

அவள் அசையாமல் நிற்கவும், “என்ன?” என்றான்.

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு அதை வாங்கி அயர்ன் செய்து கொடுத்தாள். அவனும் அணிந்திருந்த டி சேர்ட்டை கழற்றிக் கட்டிலில் போட்டுவிட்டு அதை வாங்கி அணிந்தான். சேர்ட் பட்டன்களை மாட்டியபடி, “நீயும் வாறியா?” என்றான் அவள் புறம் திரும்பி.

“எங்க?” என்றாள் தயங்கி.

“சசிசேகரன் அண்ணான்ர மகளுக்குப் பிறந்தநாள். ஹோல் எடுத்துச் செய்றார். போயிற்று ஓடிவருவம் வா!”

“அது… நான் எதுக்கு?”

“ஏன் வந்தா என்ன? உனக்கும் அவரைத் தெரியும்தானே.”

“ஓம். ஆனா அது அழுதது… முகம் வீங்கி இருக்கு.” என்று தடுமாறினாள் அவள்.

அவள் முகத்தை ஒருமுறை பார்வையால் அளந்துவிட்டு, “அள்ளித் தலைக்கு நல்லாத் தோஞ்சுபோட்டு(தோய்ந்துவிட்டு) வெளிக்கிடு. தெரியாது.” என்றான் அவன்.

அதிலேயே கூட்டிக்கொண்டு போவதாக அவன் முடிவு செய்துவிட்டது விளங்கிப் போயிற்று. மறுக்கத் தைரியம் இல்லாமல் தலையை ஆட்டிவிட்டுத் திரும்ப, “அண்டைக்கு எங்கட கடை திறப்பு விழாவுக்கு ஒரு சாறி கட்டினியே. அதைவிடக் கொஞ்சம் சிம்பிளா ஆனாலும் கிராண்ட்டா இருக்கோணும். அப்பிடி ஒண்டு கட்டு.” என்றான் அவன்.

‘சாறியா?’ என்று உள்ளே ஓடினாலும் அதற்கும் தலையை அசைத்துவிட்டு இறங்கியவளுக்கு அன்று என்ன சேலை அணிந்திருந்தோம் என்கிற நினைவே இல்லை. அதில் தலைக்குக் குளித்துவிட்டு வந்து, பிறந்தநாள் விழா ஒன்றுக்கு ஏற்ற வகையிலான சேலையில் தயாராகி வெளியே வர, அவனும் வந்தான்.

ஒற்றைப் பார்வையில் அவள் தோற்றத்தை அளந்துவிட்டு, “வா!” என்று அவளோடு படிகளை இறங்கினான்.

ஒரு அழைப்பு வரவும் கைப்பேசியை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்த சுந்தரலிங்கம் அப்படி அவர்கள் இருவரும் ஒன்றாக மாடி இறங்கிவரும் காட்சியைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டார். சிசிர வந்ததினால் உண்டாகியிருந்த அழுத்தங்கள் எல்லாம் நொடியில் மறைந்துவிட, அவர் விழிகள் கசிந்து போயிற்று.

ஒரு நாள் இப்படி அவர்கள் இருவரும் ஒன்றாக நடந்து வந்ததைப் பார்த்துத்தான் அவர்களை இணைத்து வைக்கும் ஆசை அவருக்குள் முதன் முதலாய் எழுந்தது. இன்று மீண்டும் பார்க்கிறார். நடுவில் என்னென்னவோ நடந்து போயிற்றுத்தான். என்றாலும் எல்லாம் சரியாகும் என்கிற நம்பிக்கை இப்போது பிறந்திருந்தது.

தான் காணும் இந்தக் காட்சியை மனைவிக்கும் காட்டிவிடும் துடிப்புடன், “அமிர்தம்!” என்று அவசரமாகக் குரல் கொடுத்தார். திரும்பவும் ஏதுமோ என்று பயந்து, “என்னப்பா?” என்றுகொண்டு வேகமாக வந்த அமிர்தவல்லியும் இவர்களைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டார். விழிகள் இரண்டும் நிறைந்துபோயின.

பெற்றவர்களின் உள்ளத்தில் ஓடுவதை உணர்ந்த நிரல்யாவுக்கு உள்ளுக்குள் ஒருவித வலி உயிரைக் குடைந்தது. சிசிர நினைவுக்கு வந்து போனான். எல்லாவற்றையும் தனக்குள் போட்டுப் புதைத்துக்கொண்டு வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல் நின்றாள். பெரியவர்களிடம் சொல்லிக்கொண்டு அவளோடு புறப்பட்டான் அனந்தன்.

அங்கே மண்டபத்தில் இவர்கள் இருவரும் சோடியாக உள்ளே நுழைந்ததைக் கண்ட பலரின் விழிகள் வியப்பில் விரிந்து போயின. அவர்கள் உறவு என்பதும் அவன் அவர்கள் வீட்டில்தான் இருக்கிறான் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இதற்கு முதலும் அவர்களின் கடையில், சில நேரங்களில் வெளியில் என்று அவர்கள் இருவரையும் இப்படி ஒன்றாகப் பார்த்தும் இருக்கிறார்கள்தான்.

ஆனாலும் இப்படி விழா ஒன்றுக்கு அவர்கள் இருவரும் மட்டும் சோடி போட்டு வருவது இதுதான் முதல் முறை.

அருகருகே நடந்து வந்ததும், எதிர்ப்பட்ட தெரிந்த முகங்களைக் கண்டு பேசுகையில் அவளையும் பக்கத்திலேயே வைத்துக்கொண்டதும், அவளுடனேயே அமர்ந்திருந்ததும், உணவு அவளுக்கும் சேர்த்து அவனே எடுத்து வந்து கொடுத்ததும் என்று அரசல் புரசலாக இருந்த கதையை இன்று உண்மையாக்கி இருந்தான். கூட்டம் கூட்டாமல், மேடை போடாமல் அவனுக்கும் அவளுக்குமான உறவை மறைமுகமாக அறிவித்திருந்தான்.

அதுவும் அவளோடு மேடையேறி, பிறந்தநாள் குழந்தைக்குப் பரிசு கொடுத்துவிட்டு இறங்கப் போனவர்களைத் தடுத்து நிறுத்தி, மகளை அவன் கையில் கொடுத்து, அவர்கள் மூவரையும் மட்டும் சசிசேகரன் புகைப்படத்துக்கு நிறுத்த, அனந்தனும் மறுக்காது நின்று எடுத்துக்கொண்டதைப் பார்த்திருந்த எல்லோருக்கும் எல்லாம் உறுதியாயிற்று.

இவர்கள் வீடு சென்று சேர்வதற்கிடையில் ஊகித்த விசயம் உண்மைதானா என்று அறியும் நோக்குடன் சுந்தரலிங்கத்துக்கு அழைப்புகள் பறந்தன.

தொடரும்...

கருத்திடும் அனைவருக்கும் நன்றி.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 38



திருகோணமலை நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருந்தது அந்தப் பேருந்து. அதில் யன்னலோரத்து இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தான் சிசிர. விழிகள் வெளிப்புறத்தில் இருந்தாலும் அவன் சிந்தை அங்கில்லை. அலங்கோலமாகிப்போய்விட்ட தன் வாழ்க்கையை எண்ணியெண்ணி துடித்துக்கொண்டிருந்தான்.

அச்சோ அச்சோ
என்னை உன்னிடம் தந்தேனே
வழியினில் தொலைத்தாயே....

அன்பே அன்பே
என்னிடம் நானே இல்லாமல்
என் சொல்வேனோ சொல் என்று பேருந்தில் பாடல் ஒலிக்கவும் முற்றிலுமாய் உடைந்து போனான்.

உண்மைதானே. அவள் அப்படியே தன்னைத் தூக்கி அவனிடம் கொடுத்தாளே! அவன்தான் தானும் தொலைந்து அவளையும் தொலைத்துவிட்டான். திரும்பவும் பெற்றுக்கொள்ளவே முடியாத அளவுக்குத் தொலைந்துவிட்டான். பக்கத்தில் இருக்கிறவர் அவனை வித்தியாசமாகப் பார்க்கவும் கைக்குட்டையை எடுத்து முகத்தின் மீது போட்டுக்கொண்டு, சீட்டில் தலை சாய்த்துக்கொண்டவனின் கண்ணோரங்கள் கசிந்து போயின. மனத்தில் பெரும் போராட்டம்.

என்னவோ மனம் மகளைத் தேடிற்று. அவளின் அருகண்மையில் கிடைக்கும் ஆறுதலும், அந்தப் பிஞ்சு மேனி தரும் இதமும் வேண்டுமாய் இருக்க, இரவு ஒன்பதைக் கடந்த பொழுதில் காமினி வீட்டுக் கதவைத் தட்டினான்.

அது ஒரு அறை, கோல், தனியாக இருக்கும் குட்டிக் குசினி என்று இருந்த சின்ன வீடு. இவர்களும் அங்கேயே இருக்க என்று வந்த பிறகு, எல்லோருமாகச் சேர்ந்து இன்னொரு அறையை இழுத்துக் கட்டியிருந்தார்கள். மத்தும விறாந்தையில் ஒரு பாயில் சரிந்திருக்க, அறைக்குள் இருந்த கட்டிலில் மகளைப் படுக்க விட்டுவிட்டுப் பேத்தியோடு பாயில் படுத்திருந்தார் காமினி.

யாரும் யாரோடும் கதைக்காதபோதும் பெரியவர்கள் மூவரும் விழித்தே கிடந்தனர். யார் மனத்திலும் அமைதியில்லை. இனி என்னாகும் என்கிற கேள்விக்கும் பதில் இல்லை. இப்படி இருக்கையில்தான் திடீர் என்று கதவு தட்டுப்பட்டது.

“ஆரு?” என்றபடி மத்தும எழுந்து அமர, “நான் சிசிர.” என்றது சிசிரவின் குரல். அடுத்த நொடியே ஓடிப்போய்க் கதவைத் திறந்த ருக்க்ஷி, தாடி வளர்ந்து, தலை கலைந்து, கண்கள் சிவந்து, கசங்கிய ஆடை என்று நின்ற கணவனைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள். எளிமையான ஆடைகளை அணிந்தாலும் மிகுந்த நேர்த்தி பார்ப்பான். எப்போதும் தன்னைப் பளிச்சென்று காட்டிக்கொள்கிறவன். அப்படியானவனை நேசித்த பெண்ணை இழந்துவிட்டோம் என்கிற ஒன்று இப்படி மாற்றிவிட்டதா? மனத்தில் மிக ஆழமாய் அடி வாங்கினாள்.

அவனால் அங்கிருந்த யாரையும் எதிர்கொள்ள இயலவில்லை. மனம் மகளைத்தான் தேடிற்று. எந்தக் கேள்விகளும் கேளாமல், குற்றங்களும் சாட்டாமல் அரவணைத்துக்கொள்ளும் ஒற்றை ஜீவனாக அவள் தெரிந்தாள். மத்துமவுக்கு மகன் தேடி வந்ததில் மகிழ்ச்சி என்றால் காமினிக்கு கோபம் ஒரு பக்கம் ஆறுதல் ஒரு பக்கம் என்று கலவையான உணர்வு. நன்றாக நான்கு கேள்விகள் கேட்க மனம் உந்தினாலும் அவன் நிலையும் மகள் வாழ்க்கையும் அவர் வாயைக் கட்டிப்போட்டது.

“வாங்க!” குரலடைக்க அழைத்து கணவனை ருக்க்ஷி அறைக்கு அழைத்துச் செல்ல, அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வேறு ஒரு பாயையும் தலையணையும் கொண்டு வந்து ஹோலில் இன்னொரு பக்கம் போட்டுக்கொண்டு சரிந்துகொண்டார் காமினி.

அறையில் தரையில் நல்ல உறக்கத்தில் இருக்கும் மகளைக் கண்டதும் சிசிரவுக்கு அள்ளியணைக்கும் ஆவல் எழுந்தது. அதை அடக்கி, அங்கிருந்த துவாயை எடுத்துக்கொண்டு கிணற்றடிக்கு நடந்தான்.

போகும் கணவனையே பார்த்தாள் ருக்க்ஷி. எப்படி இருக்கிறாய், என்ன செய்கிறாய் என்று ஒரு வார்த்தை அவளோடு கதைக்கவில்லையே. மன்னிப்பு, அது கூடக் கேட்கவில்லை. கேட்கும் தேவை இல்லை போலும்.

அடைத்துக்கொண்டு வந்த தொண்டையை விழுங்கிக்கொண்டு வேகமாகக் கிணற்றடி லைட்டை போட்டுவிட்டாள். அப்படியே அவனுக்கான மாற்றுடையை எடுத்துக்கொண்டு தானும் கிணற்றடிக்கு நடந்தாள். அவன் அங்கே குளிக்க ஆரம்பித்திருந்தான். இவளைக் கண்டுவிட்டு, “இந்த நேரம் உன்னை ஆரு இங்க வரச் சொன்னது? நீ போ, நான் குளிச்சிட்டு வாறன்.” என்றான் உடனேயே.

அதற்குப் பதில் சொல்லாது, கொண்டு வந்த சாரத்தை அங்கிருந்த கொடியில் போட்டுவிட்டு, அவன் களைந்து போட்டிருந்த அழுக்கு உடைகளை எடுத்துத் தோய்க்கும் வாளிக்குள் போட்டுவிட்டு நேராகக் குசினிக்கு நடந்தாள்.

மௌனமாய் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த காமினிக்கு மனம் கேட்கவில்லை. ‘அவளைக் கவனிக்க வேண்டிய நேரத்தில இவள் அவனைக் கவனிச்சுக்கொண்டு இருக்கிறாள்’ என்று மனம் பொருமினாலும், “என்ன வேணும் மகள்?” என்றபடி எழுந்து வந்தார்.

“எப்பிடியும் சாப்பிட்டு இருக்கமாட்டார் அம்மா. அதான்…” அன்னை அவன் மீது கோபமாய் இருக்கிறார் என்று தெரிந்ததால் அவள் குரல் தயங்கி வந்தது.
“இப்பிடியே எல்லாத்தையும் பாத்து பாத்துச் செய்ங்க மகள். இன்னும் உங்கட தலைல நல்லா மிளகாய் அரைக்கட்டும்.” என்ற அன்னையின் வார்த்தைகள் வலித்தாலும், “இது மட்டும் அவர் இல்லை அம்மா. இதுக்கு முதல் என்னோட அன்பா வாழ்ந்தவரும் அவர்தான். மறந்துடாதீங்க.” என்றாள் மெல்லிய குரலில்.

மத்துமவுக்கு மருமகளின் பதிலில் விழிகள் கலங்கிப் போயின. காமினியாலும் அதை மறுக்க முடியவில்லை. தள்ளி இருப்பதுதான் என்றைக்கும் நல்லது என்று அவர் அவரின் வீட்டிலேயே இருந்துகொண்டாலும் அவரையும் பார்த்துக்கொள்வது அவன்தான். அவர் வேலைகளுக்குப் போவதில் அவனுக்கு உடன்பாடே இல்லை. அவர்தான் சும்மா இருந்து உண்ணப் பிடிக்காமலும், அப்படி வீட்டிலேயே இருந்து செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதாலும் தொடர்ந்து வேலைகளுக்குப் போகிறாரே தவிர்த்து, பணத்தேவை என்பது அவருக்கில்லை. அவன் வரவிடுவதில்லை.

ருக்க்ஷி மூலம் மாதா மாதம் அவர் கையில் காசைப் பொத்திவிடுவான். கடைசி காலத்துக்கு மகள் இருக்கிறாள் என்பதை விட மருமகன் இருக்கிறான் என்றுதான் நினைத்தும் இருக்கிறார். எல்லாம் சரிதான். அதற்கென்று மகள் வெளியே காட்டாவிட்டாலும் தனக்குள் கிடந்து துடிப்பதையும் பார்க்க முடியவில்லையே!

ஒரு நெடிய மூச்சுடன் அவனுக்கு உண்ணக் கொடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார். இரவுணவு முடிந்த கையேடு அவர்தான் எல்லாப் பாத்திரங்களையும் கழுவிக் கவிழ்த்திருந்தார். இப்போது பாண் மட்டுமே இருந்தது. அதைத் தோசைக்கல்லில் வைத்து மெலிதாக வாட்டினார். அவசரத்துக்குத் தேங்காயைத் துருவி, அதற்குள் மூன்று சின்ன வெங்காயம், தனித்தூள், மிளகு, உப்பு சேர்த்து, தேசிப்புளியும் விட்டு அவசரச் சம்பல் ஒன்று செய்தார். ஒரு முட்டையையும் நல்லெண்ணையில் பொறித்து எடுத்து எல்லாவற்றையும் ஒரு தட்டில் போட்டுக் கொடுத்தார். அவற்றை அவள் எடுத்துக்கொண்டு அறைக்கு வந்தபோது அவனும் குளித்து முடித்திருந்தான்.

ஒன்றும் சொல்லாமல் அவனிடம் தட்டை நீட்டினாள். அவன் முகம் கன்றிப்போனது. மறுக்காமல் வாங்கிக்கொண்டு மகளருகிலேயே தரையில் அமர்ந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.

பானில் ஒரு துண்டைப் பிய்த்து, சம்பலும் சேர்த்து வாயில் வைக்கப் போனவனால் முடியவில்லை. கை இடையில் நின்றது. நெஞ்சில் ஒரு துடிப்பு. நிமிர்ந்து ருக்க்ஷியைப் பார்த்தான். கண்ணீரைக் கண்களுக்குள் தேக்கியபடி அவனையே பார்த்திருந்தாள் அவள். மற்றக் கையால் அவள் கரம் பற்றித் தன்னருகில் அமர வைத்து, அந்த வாயை அவளுக்கு நீட்டினான்.

அதுவரையில் அவள் நெஞ்சைப் போட்டு அழுத்திக்கொண்டிருந்த வலி கண்ணீராய் வழிய, வாய் திறந்து வாங்கிக்கொண்டாள். என்னவோ கணவன் மீண்டும் கை சேர்ந்த உணர்வு. அமைதியாகவே அவளுக்கும் கொடுத்துத் தானும் சாப்பிட்டு முடித்துத் தட்டையும் கொண்டுபோய்க் கழுவி வைத்துவிட்டு வந்து அறையின் கதவை அடைத்தான்.

இனியாவது ஏதாவது கதைப்பானா என்று அவன் முகத்தையே பார்த்தாள் ருக்க்ஷி. அப்போதும் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி, “நேரமாயிற்றுது, எழும்பிப் படு ருக்க்ஷி.” என்றவன் மற்றப்பக்கம் சென்று மகளருகில் படுத்துக்கொண்டான்.

ருக்க்ஷியால் அசையவே முடியவில்லை. தனக்கு முகம் காட்ட மறுத்து, மகளோடு ஒன்றிக்கொண்டு, குப்புறக் கிடக்கும் கணவனின் முதுகையே அந்த இரவு விளக்கின் வெளிச்சத்தில் வெறித்திருந்தாள்.

அவளிடம் கேட்க, சொல்ல ஒன்றுமே இல்லையா!

“எழும்பிப் படு ருக்க்ஷி!” அவனுடைய கரகரத்த குரல் மட்டும் மீண்டும் கேட்டது.

அழுகை வந்தது, ஆத்திரம் வந்தது, என்னை என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய் என்று அவன் சட்டையைப் பற்றிக் கேட்கும் ஆவேசம் வந்தது. எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு மகளின் இந்தப் பக்கம் தானும் சரிந்துகொண்டாள்.

கொஞ்ச நேரம்தான் அந்தக் கோபங்கள் கூட. கணவனுக்கும் அவளுக்குமிடையிலான அந்தச் சிறிய இடைவெளியை இல்லாமல் செய்துவிடச் சொல்லி உள்ளம் உந்தியது.

அவர்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்த நாள்களிலேயே மகள் அவர்களுக்கு நடுவில் வந்தால் செல்லக் கோபம் வந்துவிடும் அவளுக்கு. அவள் உறங்கியதும் அவர்கள் இருவருக்கும் நடுவில் புகுந்துவிடுவாள். உள்ளம் பரிதவித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கணவனை இன்னும் அதிகமாய்த் தேடினாள். அவன் கதகதப்பும் கை வளையும் பெரும் திடத்தையும் தைரியத்தையும் தந்துவிடுமே!

அவள் கணவனோ முடியாது, தள்ளியே நில் என்கிறான்.

அவளால் முடியவில்லை. வயிற்றில் இருக்கும் குழந்தையா, அவன் மீது அவளும் கொண்டிருக்கும் உயிர் நேசமா விட்டுவிடாதே என்று கதறிற்று. மெல்ல மகளை அணைத்திருந்த அவன் கையை எடுத்துத் தன் வயிற்றின் மீது வைத்தாள்.

சிசிரவுக்குள் பெரும் துடிப்பு. உடல் சிலிர்த்தது. அவளே அந்தக் கையால் அவளின் மேடிட்ட வயிற்றை வழியும் கண்ணீரோடு வருடிக்கொடுத்தாள். சிசிரவுக்கு நெஞ்சு வெடிக்கும் போலாயிற்று. தலையணையில் முகம் புதைத்துக் கண்ணீர் உகுத்தான். மனைவியாய் ஒருத்தி, காதலியாக இன்னொருத்தி. அவள் நினைவுகளை ஒதுக்கி வைக்கவும் முடியாமல் இவளிடம் நெருங்கவும் முடியாமல் என்ன வாழ்க்கை வாழ்கிறான்? இனி எப்படி இப்படி வாழ்வான்?

இப்போது அவள் அவன் கரத்தை எடுத்துத் தன் கன்னத்தில் வைத்தாள். ஒரு கணம் அப்படியே உறைந்து போனான் சிசிர. அவள் கன்னத்து ஈரம் அவன் நெஞ்சாய்ச் சுட்டது. நெஞ்சின் காயம் ஆறாமல், நிரல்யாவின் நினைவுகளை ஒரு ஓரமாய் ஒதுக்காமல் மனைவியை நெருங்க முடியவில்லை. மெல்ல அவளிடமிருந்து தன் கையை எடுத்துக்கொண்டான்.

ஒரு கணம் நம்ப மாட்டாமல் திகைத்த ருக்க்ஷி விழிகளை இறுக்கி மூடிக்கொண்டாள். உதடுகள் அழுகையில் நடுங்கின. அதன் பிறகு அவள் அசையவேயில்லை.

ஆழ்மனம் இதுதான் உன் இடம் என்று உணர்ந்து இருந்ததா, இல்லை காலைத் தூக்கி அவன் மீது போட்டுக்கொண்டு கழுத்தைக் கட்டிக்கொண்டு உறங்கும் மகளின் அருகண்மை தந்த ஆறுதலா தெரியவில்லை. விடிந்தும் எழுந்துகொள்ளவில்லை சிசிர.

கணவனையும் மகளையும் ஒரு பெருமூச்சுடன் பார்த்துவிட்டுச் சத்தம் இல்லாமல் எழுந்து, முகம் கழுவிக்கொண்டு வந்தாள் ருக்க்ஷி. உண்ணவும் பருகவும் கொடுத்தார் காமினி. மனம் இயல்பாய் கணவனோடு உண்ண ஆசைகொண்டாலும் அன்னை விடமாட்டார் என்று தெரிந்து வாங்கிக்கொண்டாள்.

“கதைச்சனீங்களா மகள்?” சக்கரைத் துண்டோடு தானும் ஒரு தேநீரைப் பருகியபடி வினவினார்.

உணவை முடித்துக்கொண்டு விறாந்தையில் அமர்ந்திருந்த மத்துமவும் காதைத் தீட்டிக்கொண்டார்.

ஆனால், பதில் எதுவும் சொல்லாமல் உணவில் கவனம் செலுத்தினாள் அவள்.

“இப்பிடி அமைதியாவே இருந்தா என்ன மகள் அர்த்தம்? என்ன எண்டு கேட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டாமா?”

“...”

“முதல் உங்களை இங்க அனுப்பிப்போட்டு அவர் எங்க போனவாரம்?”

“...”

மகளின் பிடிவாத அமைதி காமினிக்கும் கோபத்தை உண்டாக்கிற்று. “எதையாவது வாயத் திறந்து கதைங்க மகள்!” என்றார் கோபமாக.

“என்னம்மா சொல்லச் சொல்லுறீங்க? அஞ்சு வருசம் அவரோட வாழ்ந்து இருக்கிறன். ஒண்டுக்கு ரெண்டு பிள்ளைகளை வச்சுக்கொண்டு இருக்கிறன். நானா மட்டுமே எந்த முடிவும் எடுக்கேலாது. அவர் இப்ப தடுமாறிப்போய் நிக்கிறார். ஒரு நிலைக்கு வரட்டும். கதைக்கிறன். இப்ப பேசாம இருங்க. ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு முடிவு எடுக்கிற நேரம் இல்ல இது.” என்றாள் அவளும் மெல்லிய கோபத்தோடு.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவளுக்குப் பதில் சொல்லாமல் அவளுக்குப் பின்னால் பார்த்தார் காமினி. என்ன பார்க்கிறார் என்று திரும்பிப் பார்த்தாள் ருக்க்ஷி. அங்கே ஜீன்ஸ் சேர்ட் அணிந்து வெளியே செல்வதற்குத் தயாராய் நின்றிருந்தான் அவன். ‘திரும்பவும் போப்போறானா?’ அவளுக்கு ஒருமுறை உள்ளுக்குள் சுருக்கென்று வலித்தது. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், “சாப்பிடுறீங்களா?” என்று அவன் விழிகளை நேராக நோக்கி வினவினாள்.

அதில் அவன்தான் தடுமாறிப்போனான். “இல்ல… நான் வெளிக்கிடப் போறன். பிள்ளை நித்திரை. பாத்துக்கொள்.” என்றான் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி.

“எழும்பினா சிணுங்குவா. நீங்க சாப்பிட்டுப் போங்க!” எங்கே, ஏன் என்கிற எந்தக் கேள்விகளும் இல்லாமல் சொல்லிவிட்டு அவனுக்கான உணவைத் தட்டில் எடுத்துவைக்கப் போக, “இல்ல, எனக்கு வேண்டாம். இரவு லேட்டா சாப்பிட்டது பசிக்கேல்ல.” என்றவன் அந்த நொடியே அங்கிருந்து வெளியேறி இருந்தான்.

“மகன்…” என்று அழைத்து நிறுத்தப்பார்த்த மத்துமவின் குரலுக்கும் செவி சாய்க்கவில்லை. அந்தளவில் அவள் காட்டும் அன்பு அவனைக் குத்தியது.

அவளுக்கு எந்தளவுக்குத் தன்னைப் பிடிக்கும் என்று அவனுக்குத் தெரியும். இரவு அவள் தன் அண்மையைத் தேடி, ஆறுதலை நாடியதும் தெரியும். அதைக் கொடுக்காமல் அவளை ஆழமாகக் காயப்படுத்தி இருக்கிறான். தன் சிறு முகச்சுளிப்பைக் கூடத் தாங்க முடியாதவள். நிச்சயம் தனக்குள் நொறுங்கிப் போயிருப்பாள். ஆனாலும் தன் தாயிடம் கூட ஒரு வார்த்தை அவனை விட்டுக்கொடுக்கவில்லை. அப்படியானவளின் முகம் பார்க்க அவனால் முடியவில்லை. அந்த அன்புக்குப் பயந்து ஓடி வந்திருந்தான்.

இங்கே அனந்தனும் அன்றே நிரல்யாவை வலுக்கட்டாயமாகக் கடைக்கு இழுத்துக்கொண்டு வந்தான். அங்கும் அவளைச் சும்மா இருக்க விடவில்லை. ஏதாவது ஒரு கணக்குவழக்கைப் பார் என்று கொண்டுவந்து கொடுத்தான், இல்லையோ யாருக்காவது அழைத்து அவனுக்குத் தேவையான தகவல்களைக் கேட்கச் சொன்னான். அதுவும் இல்லையா கீழே கடைக்குப் போய் வாடிக்கையாளர்களைக் கவனிக்கச் சொன்னான்.

தன்னைத் தன் மன உளைச்சல்களிலிருந்து வெளியில் கொண்டுவருவதற்காகவே இப்படிச் செய்கிறான் என்று அவளுக்கு விளங்காமல் இல்லை. ஆனாலும் சிசிரவை மறந்து வேலையில் கவனம் செலுத்த இயலவே இல்லை. விழிகளில் வலியைத் தேக்கி, தன் கரம் பற்றிக் கண்ணீருடன் விடைபெற்றவனே கண்ணுக்குள் நின்றான். மனம் திரும்ப திரும்ப ஏன் இப்படியாகிப்போனது என்பதிலேயே நின்றது. ஒரு வேதனை நிரந்தரமாக அரித்துக்கொண்டேயிருந்தது. சில நேரங்களில் அவனோடான அழகிய நினைவுகள் வந்து மளுக்கென்று விழிகளை நிறைத்துப் போயின. வேகமாய்க் குளியலறை சென்று தன்னைச் சமாளித்துக்கொண்டு திரும்பி வந்தாள்.

*****

சிசிர நேராகச் சென்று நின்றது பேராதனையில். அங்கே பூத்திருக்கும் மலர்களைப் போல மிக அழகாய் மலர்ந்த காதல் இன்று கருகியே போயிற்று!

முதன் முதலாய் அவள் குடைக்குள் அவன் புகுந்தது, அவள் பயந்து விழித்தது, அந்த அக்பர் பாலம், அதிலிருந்து பாய்வது போன்று அவளுக்குப் பயம் காட்டியது, அவள் காட்டிய கோபம், இருவரும் அமர்ந்திருந்து கச்சான் சாப்பிட்ட மரம், மெல்ல மெல்ல அவர்களுக்குள் அரும்பிய நேசம், அவளோடு அமர்ந்திருந்த தொங்குபாலம், அப்போது பாய்ந்த குரங்கு, அவளை இழுத்து மார்பில் சேர்த்தபடி தலையைக் குனிந்துகொண்டது என்று அன்று தனிமையில் நினைத்து நினைத்து மகிழ்ந்த அழகிய நிகழ்வுகள் எல்லாம் இன்று நினைவில் வந்து உயிர் போகும் வலியைத் தந்தன.

கடைசியாக அவர்களின் மைதானத்துக்கு வந்தவன் அதற்குமேல் முடியாமல் அங்கேயே தரையில் சரிந்து குலுங்கி குலுங்கி அழுதான். அவள் அணிந்துவந்த அவர்களின் கலாசார உடை, அவன் பாடிய பாடல், அவள் உருகிக் கரைந்து நின்றது, முதல் அணைப்பு, முதல் முத்தம் எல்லாம் இங்கேதான் நிகழ்ந்தன. அவர்களின் பிரிவும் அங்கேதான் தொடக்கி வைக்கப்பட்டது. அவன் அடி வாங்கிய இடம், அவள் கதறியது, அவளின் தகப்பன் ஒரே இழுவையாக அவளை இழுத்துக்கொண்டு போனது என்று அத்தனையையும் நினைக்க நினைக்க நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது.

ஏன் இந்த நினைவுகள் திரும்பி வந்தன? இப்படி அவனைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்லவா? உயிரைத் துறக்கவும் முடியாமல் வாழவும் முடியாத நிலையில் நிறுத்திவிட்டானே அந்தக் கடவுள்!

அப்போது அவன் கைப்பேசி மெலிதாய் இசைத்தது. அவன் எடுக்கவில்லை. திரும்ப திரும்ப அழைப்பு வந்துகொண்டே இருந்தது. மெல்ல முகத்தைத் துடைத்துக்கொண்டு எழுந்து அமர்ந்து எடுத்துப் பார்த்தான்.

‘நிரா’ என்று காட்டிற்று கைப்பேசி. அதற்கே நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. அழைப்பை ஏற்காமல் அதையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

*****

அன்று மாலை வேலைகளை முடித்துக்கொண்டு வீடு வந்த நிரல்யாவினுள்ளும் அமைதியில்லை. என்னவோ மனத்தைப் போட்டுப் பிசைந்துகொண்டே இருந்தது. முதல் நாள் புறப்பட்ட சிசிர நல்லபடியாக வீடு போய்ச் சேர்ந்திருப்பானா, மனைவியோடு சமாதானமாகியிருப்பானா என்கிற கேள்விகள் எழுந்துகொண்டு இருந்தன.

அவனுக்கு அழைக்க வேண்டாம், எந்த வழியிலும் மீண்டும் அவனோடு பேசி அவனை இன்னுமின்னும் காயப்படுத்த வேண்டாம் என்றுதான் முடிவு செய்துவைத்திருந்தாள். ஆனால், இங்கிருந்து புறப்பட்டபோது அவன் இருந்த கலங்கிய நிலை அவளை அதில் நிலைத்து நிற்க விடமாட்டேன் என்றது. ஒரேயொருமுறை அவன் நலனை மட்டும் அறிந்துகொண்டால் போதும் போலிருந்தது. அப்போதும் ஒருவிதப் பிடிவாதத்துடன் அறைக்குள் அங்குமிங்கும் நடந்தவள் ஒரு கட்டத்துக்குமேல் முடியாமல் போக, நேற்று அவனிடம் வாங்கி வைத்திருந்த கைப்பேசி இலக்கத்துக்கு அழைத்திருந்தாள்.

திரும்ப திரும்ப அழைத்தும் அவன் எடுக்காமல் இருக்கவும் ஒருவிதப் பயம் தொற்றிக்கொண்டது. அவனுக்கு ஏதுமோ? அதற்குமேல் யோசிக்க முடியாமல், “ப்ளீஸ் சிசிர, உங்களுக்கு ஒண்டுமில்லை, நீங்க நல்லா இருக்கிறீங்க எண்டு மட்டும் எனக்குத் தெரிஞ்சாப் போதும். போன் எடுக்காட்டியும் பரவாயில்ல. ஒரு மெசேஜ் மட்டும் அனுப்புங்க ப்ளீஸ்.” என்று ஒரு குறுந்தகவல் அனுப்பிவிட்டாள்.

அதைப் பார்த்தவனின் விழிகளில் மீண்டும் நீர் சேர்ந்து போயிற்று. அவளுக்குத் தானே அழைத்தான்.

“சிசிர! உங்களுக்கு ஒண்டும் இல்லையே?” அவள் குரலில் தெரிந்த தவிப்பு அவனை இன்னும் உடைத்தது.

“நான் நல்லாவே இல்ல நிரா. எனக்கு உன்னட்ட வரோணும் மாதிரி இருக்கு. உன்னைப் பாக்கோணும் மாதிரி இருக்கு. உன்னோடயே இருக்கோணும் மாதிரி இருக்கு. ஆனா இனி அதெல்லாம் கூடாது எண்டும் தெரியும். அதான்…” என்றவன் அப்படியே நிறுத்த, பேச்சற்றுப் போனது அவளுக்கு.

“இப்ப எங்க நிக்கிறீங்க நீங்க?” என்றாள் அவசரமாக.

“எல்லாமே முடிஞ்சு எண்டுறதை இன்னும் நம்பவே ஏலாம இருக்கு நிரா. அதே பேராதனை, அதே மரங்கள், அதே கம்பஸ், அதே கிரவுண்ட், என்னோட கோவிச்சுக்கொண்டு வந்து இருந்தியே அந்த மரம் கூட அப்பிடியே இருக்கு நிரா. நான் பூ பிடுங்கித் தந்த அந்தக் கொடி கூட இன்னும் இருக்கு. ஆனா நீயும் நானும் உயிரா விரும்பின அந்தக் காதல் மட்டும் இல்லையாம் எண்டா எப்பிடி நிரா?” உடைந்து கரகரத்த குரலில் ஏக்கத்துடன் அவன் வினவியபோது அவளுக்கு உயிரே போயிற்று.

“பேராதனைலையா நிக்கிறீங்க?” அவன் அங்கு வரைக்கும் போயிருப்பான் என்பதை நம்பவே முடியவில்லை.

“வீட்டுக்குப் போகேல்லையா?” குரலடைக்க வினவினாள்.

“போயிற்று விடிய இங்கே வெளிக்கிட்டு வந்தனான்.”

அப்படியானால் இன்று முழுக்க அங்கேயேதான் இருந்திருக்கிறான். “ஏன்?” என்றவளுக்கு குரலே எழும்ப மாட்டேன் என்றது.

இத்தனை வருடத்தில் அவள் அங்குச் சென்றதே இல்லை. அந்தத் தைரியம் அவளுக்கு வந்ததேயில்லை. அந்த இடமும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் தன்னை உயிருடன் கொன்றுவிடும் என்கிற பயம். அவன் போயிருக்கிறான், இன்று முழுக்க அங்கேயே சுற்றியிருக்கிறான் என்றால். மேலே யோசிக்க முடியாமல் நெஞ்சை அடைத்தது அவளுக்கு.

“வேற எங்க போறது எண்டு தெரியேல்ல. உன்னட்டையும் வரேலாது. ருக்க்ஷின்ர முகம் பாக்கவே ஏலாம இருக்கு. இங்கயாவது ஆறுதல் கிடைக்குமா எண்டு வந்தன். அழுகைதான் வருது.” என்றதும் அவள் விழிகளும் நிறைந்து போயின.

ஆனால், அழும் நேரம் இதுவன்று என்று அறிவு சொல்ல, “சிசிர, நான் சொல்லுறதைக் கேக்குறீங்களா?” என்றாள் பட்டுப்போன்ற குரலில்.

“ம்.”

“எல்லாம் முடிஞ்சுது சிசிர. எல்…லலாமே. அதை முதல் நீங்க ஏற்க வேணும். முடிஞ்சதை திரும்ப திரும்ப நினைக்கிறதால வேதனை மட்டும்தான் மிஞ்சும். முதல் ருக்க்ஷிய யோசிச்சுப் பாருங்க. இருக்கிற வாழ்க்கையையும் இன்னுமின்னும் சிக்கலாக்காதீங்க சிசிர. இதெல்லாம் தெரிய வந்தா ருக்க்ஷி உங்களோட சண்டைக்கு வர மாட்டாவா?”

“ருக்க்ஷி அப்பிடி இல்ல. எனக்குத் தெரியும்.” என்றான் அவன் உடனேயே.

அவள் உதட்டோரம் மெல்லிய முறுவல் அரும்பிற்று. அதை மறைத்துக்கொண்டு, “அந்தத் தைரியத்திலதான் இப்பிடியெல்லாம் நடக்கிறீங்களா? பாவம் எல்லா அவா. அதுவும் இந்த நேரம் மனுசனை மனம் கூடத் தேடுமாம் எண்டு கேள்விப்பட்டு இருக்கிறன் சிசிர. அப்பிடியான நேரம் பக்கத்தில இருக்காம விட்டுட்டு பிறகு நீங்க என்ன செய்தும் பிரயோசனம் இல்ல. பிறகு அதுக்கும் சேர்த்து நீங்கதான் கவலைப்படுவீங்க.”

இரவு அவள் தன் கையை எடுத்து வயிற்றில் வைத்தது நினைவில் வந்து நெஞ்சை அடைத்தது அவனுக்கு. அத்தனைக்குப் பிறகும் காலையிலும் சாப்பிட்டுப் போ என்று சொன்னாளே!

“முதல் இன்னும் அங்க இருந்து என்ன செய்றீங்க? பேராதனையைப் பாத்தது எல்லாம் காணும். இன்னும் கொஞ்ச நேரத்தில இருட்டிடும். எழும்பி வெளிக்கிடுங்க.”

அவன் சத்தமில்லாமல் அமர்ந்திருந்தான்.

“சிசிர.”

“ம்!”

“திரும்ப திரும்ப நாங்க பாக்கிறது நல்லம் இல்ல சிசிர. அது இன்னுமின்னும் பழைய நினைவுகளைத்தான் கிளறும். பாக்காம இருந்து, நடந்ததை ஏற்று, அதில இருந்து வெளில வாறதுதான் எல்லாருக்கும் நல்லது. கஸ்டம்தான். ஆனா முயற்சி செய்தா நடக்காது எண்டு இல்ல. எழும்பி பஸ்ஸுக்கு நடவுங்க.” என்றவள் பேசி பேசி, திருகோணமலை பஸ்ஸில் அவனை ஏற்றிவிட்டே அழைப்பைத் துண்டித்தாள்.

தொடரும்...

கருத்திடும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி. வீக்கெண்டே முடியப்போகுது. ஆனாலும் ஹனபி வீக்கெண்ட்!

 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 39


வேலைகளை முடித்துக்கொண்டு கடையிலிருந்து வந்து குளித்து, இலகு உடைக்கு மாறிய அனந்தனை அமிர்தவல்லி இரவு உணவுக்கு அழைக்க, இறங்கி வந்தான். இத்தனை காலமும் தவிர்க்க முடியாத தருணங்கள் தவிர்த்து வெளிப் படியை மட்டுமே பயன்படுத்தி வந்தவன் இப்போதெல்லாம் அடிக்கடி உள் படிக்கட்டையும் பயன்படுத்த ஆரம்பித்திருந்தான். அப்படி உள் படியால் இறங்கி வந்தவன் நிரல்யாவின் அறை திறந்திருக்கவும் எட்டிப் பார்த்தான்.

அழுத தடயங்களை முகத்தில் சுமந்தபடி கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். அவன் புருவங்கள் சுருங்கின.

“நிரல்!” என்று குரல் கொடுத்தான். அவள் திரும்பிப் பார்க்கவும், “என்ன?” என்றான்.

அவளுக்கு அவனிடம் இதைச் சொல்வதா, வேண்டாமா என்கிற தடுமாற்றம். சொன்னால் கோபப்படுவானோ என்று வேறு ஓடிற்று.

அவள் சொல்லும் அவசியமே இல்லாது, அவளின் தயக்கமே விசயத்தைச் சொல்ல, “அவனோட கதைச்சியா?” என்று அவனே வினவினான்.

தயக்கத்துடன் தலையை ஆம் என்பதுபோல் அசைக்க, அவளை ஒரு பார்வை பார்த்தான் அனந்தன்.

அவள் தலை வேகமாகத் தாழ்ந்து போனது. “இல்ல பிழையா இல்ல. அவர் அவேன்ர வீட்டை போயிட்டாரா எண்டு தெரியத்தான்…”

“என்னவாம்?”

“அங்க பேராதனைல நிண்டவர். இப்ப திருகோணமலை போறார்.”

“அதான் போறான்தானே. பிறகு என்ன?”

“இல்ல, நடந்த எல்லாத்திலையும் இருந்து வெளில வாறதுதான் சரி எண்டு இப்ப தெரியுது. ஆனா, அவருக்கு அது ஏலாம இருக்குப் போல. அது… அதுதான் மனதுக்கு ஒரு மாதிரி இருக்கு.” சரியான முறையில் இதை விளங்கிக்கொள்வானா என்கிற பதற்றம் இருந்தாலும் அவள் தடுமாறும் பொழுதுகளில் எல்லாம் தாங்கிக்கொள்கிறவன் அவன் என்பதில் மெல்லச் சொன்னாள்.

“ஏலாது எண்டு ஒண்டும் இல்ல. நாளடைவில எல்லாம் மாறும். அதுக்காக அடிக்கடி அவனோட கதைக்காத. நீ விலகி நிக்கிறதுதான் சரி. அவனுக்கு எண்டு ஒரு குடும்பம் இருக்கு!” என்றான் கண்டிப்புத் தொனிக்கும் குரலில்.

அறை வாங்கியவள் போன்று வேகமாய் நிமிர்ந்தாள் அவள். “நான் ஏதும் பிழையா நடப்பன் எண்டு நினைக்கிறீங்களா மச்சான்? அவ்வளவு மோசமா நான்?” என்று கேட்கும்போதே அவளுக்குக் குரல் கரகரத்துப் போயிற்று.

“ஏய் முதல் வெளில வாடி!” என்றான் சினத்துடன். இதுவரையில் அவள் அறைக்குள் செல்லாதவனால் இன்று சென்று அவளிடம் கோபப்பட முடியவில்லை.

அவள் வெளியே வர, “அப்பிடி எண்டு சொன்னனானா நான்? சும்மாவே தடுமாறிக்கொண்டு நிக்கிறான் அவன். இதில நீயும் எடுத்து எடுத்துக் கதைச்சா அது இன்னும் அவனை மோசமாக்கும். அவனா இதுதான் வாழ்க்கை எண்டு விளங்கி வெளில வரோணும். இல்லையா, இதையெல்லாம் செய்ய வேண்டியது அவன்ர மனுசி. அவாதான் இறுக்கிப் பிடிச்சு அவனை வழிக்குக் கொண்டுவரோணும். இப்ப நான் உனக்குச் செய்ற மாதிரி.” என்றதும் அவள் விழிகள் விரிந்து போயின.

அவள் அவன் மனைவி. அவள் அப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. இவன்? இவன் யார் அவளுக்கு?

“என்ன பார்வை? கழுத்தில எதையாவது மாட்டினாத்தான் அந்த இடத்தில என்ன வைப்பியோ?” என்றான் ஒரு மாதிரிக் குரலில்.

பதில் சொல்ல இயலாமல் அவள் தலை குனிய, “உன்னையும் அவனையும் அதே பேராதனைல வச்சுப் பாத்த நிமிசத்தில இருந்து நானும் இப்பிடித்தான் துடிச்சனான். அது தெரியவே இல்ல உனக்கு. ஆனா இன்னும் அவனையே யோசிச்சுக்கொண்டு இருக்கிறாய். நட சாப்பிட!” சூடாகச் சொல்லிவிட்டு அவன் வேகமாகப் படியிறங்கப் போக, அவசரமாக அவன் கையைப் பற்றித் தடுத்து நிறுத்தினாள் நிரல்யா.

அன்று சுயம் இழந்து நின்ற நாள் தவிர்த்து நிறைய நாள்களுக்குப் பிறகு அவளாக அவனைப் பற்றியிருக்கிறாள்.
அவன் புருவங்களைச் சுருக்கியபடி திரும்பிப் பார்த்தான்.

“எனக்கு அதெல்லாம் உண்மையாத் தெரியாது மச்சான். உங்களில பாசம்… அது நிறைய இருக்கு. நீங்க நான் சொன்னதைக் கேக்காம நடந்ததில கோவமும் நிறைய இருந்ததுதான். ஆனா இது… உங்கள அப்பிடி யோசிச்சது இல்ல. பிறகு எப்பிடி உங்களுக்க இருக்கிற வலி எனக்குத் தெரிஞ்சிருக்கும்?” என்று கலக்கத்துடன் வினவினாள் அவள்.

“தெரிஞ்சிருந்தா?” என்றான் அவன் சுருக்கமாக.

அவளுக்குப் பதில் தெரியவில்லை. ஆனால், அவன் சிசிரவிடம் சொன்னது போன்று, சிசிரவிடம் மனம் சாய முன்பு தெரிந்திருந்தால் நிச்சயமாய் அவனைத் தாண்டிப் போயிருக்க மாட்டாள் என்று தோன்றிற்று. அதைச் சொல்ல முடியாமல் அவள் அமைதி காக்க, “முதல் நீ ஏன் அப்பிடி என்னை யோசிக்கேல்ல?” என்று கேட்டான் அவன்.

இதற்கு என்ன பதில் சொல்வது? உண்மையில் தெரியவில்லை அவளுக்கு. எப்போதுமே அவளுக்குப் படிப்புச் சொல்லித்தரும், புத்தி புகட்டும் ஒருவனாக அவனை உயரத்தில் வைத்துத்தான் பார்த்திருக்கிறாள். அதைவிட இங்கேயே இருந்திருக்க அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். அங்கே சென்றதில் இவனை முந்திக்கொண்டு சிசிர மனத்தில் இடம் பிடித்திருந்தான். இதை எப்படிச் சொல்வது என்று தெரியாது அவள் நிற்க, அவளை நெருங்கி, அவளின் நாடி பற்றி முகத்தை நிமிர்த்தினான்.

அவளுக்குள் மெல்லிய திகைப்பு. கை பற்றுவது, தோள் பற்றி நகர்த்துவது எல்லாம் அவர்களுக்குள் இருந்திருக்கிறதுதான். பாதுகாப்பைக் கருதி அவளைத் தன் கை வளைவுக்குள் கூடக் கொண்டு வருவான்தான். அதெல்லாம் ஒரு அவசியத்தின்போது நடப்பவை. ஆனால் இது, இப்படி நாடி பற்றுவது? அவள் விழிவிரித்து நோக்க, “என்ன?” என்றான் அவள் முகத்தின் மீதே பார்வையைப் பதித்து.

என்னவென்று சொல்லத் தெரியாமல் ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தாள்.

“நான் பக்கத்தில வாறது பிடிக்கேல்லையோ?”

“இல்ல… அப்பிடி இல்ல.” பயத்தில் படபடத்தாள்.

“எனக்கும் உனக்கும் நடக்கப்போற கலியாணம் உனக்கு ஓகே தானே?”

அவள் தலையை ஆம் என்பதுபோல் அசைத்தாள்.

“அதுக்கு நீ அவனைக் கடந்து என்னட்ட வரோணும். இனியும் சும்மா அவனைப் பற்றியே யோசிச்சுக்கொண்டு இருக்கிறேல்ல.” என்றான் கட்டளை போன்று.

சரி என்பதுபோல் தலை அசைத்தாள்.

“இவ்வளவு காலமும் நீ என்னை அப்பிடி யோசிக்காததைப் பற்றி யோசிக்காத. ஆனா, இனி என்னைப் பற்றி மட்டும்தான் யோசிக்கோணும். விளங்கினதா?” என்று அதட்டினான்.

அவள் வேகமாய் அதற்கும் தலையை அசைத்தாள்.

“முதல் என்ன இது உனக்குத் தொட்டத்துக்கெல்லாம் கண்ணீர்? துடை.”

வேக வேகமாகத் துடைத்துக்கொண்டு அடுத்து என்ன என்பதுபோல் அவன் முகம் பார்த்தாள்.

எழுந்த சிரிப்பைக் கொடுப்புக்குள் அடக்கியபடி, “முகத்தைக் கழுவிக்கொண்டு கெதியா வா, பசிக்குது!” என்று அதட்டலாய்ச் சொல்ல முயன்றும் முடியாமல் அவன் குரல் தணிந்து ஒலித்தது.

அவளும் அடுத்த கணமே தலையை ஆட்டிவிட்டு பாத்ரூமுக்குள் ஓடிப்போனாள்.

பார்த்திருந்தவன் முகத்தில் மெல்லிய சிரிப்பு. சிசிரவோடு அவள் பேசியதில் அவனுக்குப் பெரிதாய் ஒன்றும் தோன்றவில்லை. அவளின் பயத்தை அல்லது தவிப்பை விளங்கிக்கொள்ள முடிந்தது. என்ன, அதை ஊக்குவிப்பதில் உடன்பாடு இல்லை. அந்த உறவை மறந்துவிடு, முற்றிலுமாக உன் நினைவிலிருந்து அழித்துவிடு என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமானது என்று அவனுக்கே தெரியும். அதெல்லாம் மறக்க முடியாதவை. கடந்துதான் வர வேண்டும். அதுதான் அப்படிச் சொன்னான்.

அவள் முகம் கழுவிக்கொண்டு வரவும் சேர்ந்தே இறங்கினர். உணவு முடிந்ததும், “மேல வா!” என்று அழைத்துப் போனான்.

மேலே வந்ததும், “என்னவாம் அவன்?” என்று கேட்டு, அவர்கள் பேசிக்கொண்டதை அறிந்துகொண்டபோது அவள் சரியான பாதையில் சிந்திப்பதாகவே பட்டது.

சிசிரவும் அவனைப் போன்று உறுதியானவன் இல்லை. மென்மையான மனம் கொண்டவன். தேறிக்கொள்ள நாளாகும் என்றே தோன்றிற்று.

அதன் பிறகு இருவரிடத்திலும் மௌனம். எப்போதும்போலக் கையைக் கட்டிக்கொண்டு, மொட்டை மாடிச் சுவரில் சாய்ந்திருந்தவன் அவள் மீதே பார்வையைப் பதித்திருந்தான். அவனுடைய பீன் பாக்கில் சாயாமல் அமர்ந்திருந்த நிரல்யா, அவனை நிமிர்ந்து பாராமல் தன் கால் விரல்களை வருடிக்கொண்டிருந்தாள்.

“வாறியா, சும்மா நடந்திட்டு வருவம்.” என்றான் திடீரென்று.

ஆர்வமாக நிமிர்ந்தவள் தயங்கித் தலையை அசைத்தாள். அறைக்குள் இருந்து டோர்ச் லைட்டை எடுத்துக்கொண்டு அவளோடு இறங்கினான்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு அவர்கள் இருவருமாக அந்த வீதியில் அப்படி ஒரு நடை. அப்போதெல்லாம் உற்சாகப் பந்தாய் அவள்தான் சலசலத்துக்கொண்டு வருவாள். சின்ன முறுவலோடு அவன் கேட்டுக்கொள்வான். ஆனால் இன்று இருவரிடையேயும் மௌனம் மட்டுமே நிறைந்து கிடந்தது. ஆனாலும் சுற்றம் முழுவதும் வியாப்பித்திருந்த இருள், அதனூடு புகுந்து மெலிதாய் வெளிச்சம் பரப்பிய நிலவு, ஆரவாரம் இல்லாத தெரு, சில்லென்று வீசிய காற்று, இதையெல்லாம் அனுபவித்தபடி அவளோடு ஒரு நடை உண்மையில் மிகுந்த சந்தோசத்தை அனுபவித்தான் அனந்தன்.

“ஐஸ் வாங்கித் தரவா?” அந்தத் தெருவை எட்டியபோது அவளுக்குப் பிடிக்கும் என்று தெரிந்து வினவினான்.

அவள் வேண்டாம் என்று மறுத்தாள். அந்த நடை மனத்துக்கு இதம் பரப்பினாலும் ஐஸை ஆசையாய் அனுபவித்து அருந்தும் மனநிலை இல்லாமல் இருந்தது.

அவன் விடவில்லை. “அந்தளவுக்கு நல்ல பிள்ளை ஆகிட்டியா நீ?” என்று கேட்டு வாங்கிக் கொடுத்தான்.

நிரல்யாவுக்குப் பழைய நினைவுகள் நெஞ்சில் முட்டி மோதின. அவனை நிமிர்ந்து பாராமல் அருந்தினாள். ‘அவள் விரும்பின மாதிரி நான் மாறி இருந்தா அவள் என்னைத் தாண்டி உன்ர பக்கம் வந்திருக்க மாட்டாள்’ என்று அவன் சொன்னது மீண்டும் அவள் காதினுள் எதிரொலித்தது.

திரும்பி வரும்போது இரண்டு தரம் அவனை அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“என்ன சொல்லோணும் உனக்கு?”

“அது…”

“சொல்லு நிரல்!”

“அது சிசிரன்ர பிரென்ட் மகிந்த எண்டு இருக்கிறார். அவரும் சிசிரவைத் தேடிக்கொண்டுதான் இருந்தவர். அவருக்கு நடந்ததை எல்லாம் எடுத்துச் சொல்லவா? அவர் கதைச்சா சிசிரவுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும். நடந்த எல்லாத்திலையும் இருந்து வெளில வந்து அவரின்ர குடும்பத்தோட சேர்ந்திடுவார்.”

அவன் திரும்பிப் பார்க்க, “ப்ளீஸ் மச்சான். ஒரு மாதிரிக் குற்ற உணர்ச்சியா இருக்கு. எனக்கு எப்பவும் நீங்க இருந்திருக்கிறீங்க. என்னைத் திட்டி, அதட்டி, எவ்வளவு கோபப்பட்டாலும் எதையும் தனியா அனுபவிக்க விட்டதே இல்ல. ஆனா அவருக்கு அப்பிடி ஒருத்தரும் இல்ல. அதான்…” என்றாள் அவன் தன்னைத் தவறாக நினைத்துவிடக் கூடாது என்கிற அவசரத்தில்.

“சரி சொல்லு!”

மொட்டை மாடிக்கு வந்ததும் முதல் வேலையாக அவன் முன்னாலேயே மகிந்தவுக்கு அழைத்து நடந்தவற்றைச் சொன்னாள். அவனால் நம்பவே முடியவில்லை. கொஞ்ச நேரம் பேச்சற்றுப் போனது. “சொறி நிரா!” என்றான் அப்போதும் என்ன சொல்வது என்று தெரியாது.

“பரவாயில்ல சீனியர்.” என்றாள் குரலடைக்க. “ஆனா அவரை மட்டும் என்ன எண்டு பாருங்க. அவரின்ர வைஃப் எட்டு மாதம் அடுத்த பேபிக்கு.” என்றாள் கெஞ்சலாய்.

“அத நீ சொல்லோணுமா நிரா? எத்தின வருசமாச்சு அவனைப் பாத்து. எனக்கு இங்க கிரிக்கெட் கிரவுண்ட்ல டியூட்டி. லீவு எடுத்துக்கொண்டு போய்ப் பாக்கிறேன். நான் மட்டும் இல்ல அவன் இருக்கிற இடம் தெரிஞ்சா எங்கட பிரெண்ட்ஸ் எல்லாரும் அவனைத் தேடிப் போவினம். அதால இனி நீ அவனைப் பற்றி யோசிக்காத. அவன் என்ர பொறுப்பு. நீ உன்ர மச்சானோட சந்தோசமா இருக்கோணும். சரியா?” உற்ற நண்பனாய் அவன் பொறுப்பை எடுத்துக்கொண்டதில் உள்ளமும் கண்களும் நிறைய, “தேங்க்ஸ் சீனியர்!” என்றுவிட்டு சிசிரவின் கைப்பேசி எண்ணெயும் கொடுத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தவள் அனந்தனைப் பார்த்தாள்.

“இப்ப ஓகேயா நீ?”

“ம் தேங்க்ஸ் மச்சான்!” என்றாள் நெகிழ்ந்த குரலில்.

“ஓ!”

அப்போதுதான் அவனுக்கு நன்றி சொன்னால் பிடிக்காது என்பது நினைவில் வந்தது. மனத்தினுள் தன்னையே குட்டிக்கொண்டு, “சொன்ன தேங்க்ஸ் வாபஸ் மச்சான்!” என்றுவிட்டு இறங்கி ஓடிப்போனாள்.

உதட்டோரம் சின்ன முறுவல் அரும்ப வானத்தை நிமிர்ந்து பார்த்தான் அனந்தன். இருளைத் தவிர்த்து வேறு எதுவும் புலப்படவில்லை. ஆனால், அவன் உள்ளத்தில் மெல்லிய வெளிச்சக்கீற்று இதமாய்ப் பரவிற்று.


*****


அன்று ருக்க்ஷிக்கு மாதாந்திர செக்கப் நாள். போக வேண்டும். எழுந்து தயாராகவே மனமில்லை. நேரத்துக்கே போனால்தான் நேரத்துக்கே காட்டிக்கொண்டு வரலாம். இத்தனை காலமும் நினைவு படுத்தவேண்டிய அவசியம் கூட இல்லாமல், அந்த நாளையே அவளுக்கென்று ஒதுக்கிக்கொண்டு தயாராய் நிற்பான் சிசிர. இந்தமுறை அது நடக்காது என்றே தோன்றிற்று.

அன்று காலையில் கிட்டத்தட்ட அங்கிருந்து ஓடிப்போனவன் கடந்த இரண்டு நாள்களாக அவர்களின் வீட்டில் தனியாகத் தங்கி இருக்கிறானாம். அதையும் அழைத்துச் சொல்லவில்லை. குறுந்தகவலாக அனுப்பியிருந்தான். முற்றிலுமாக அவளிடமிருந்து விலகி நிற்கும் கணவனின் செய்கை அவளுக்கு வலிதான். ஆனாலும் விட்டுவிட்டாள்.

வேறு என்னதான் செய்ய? அவளுக்குத் தெரியவில்லை. என்னவோ கணவனின் முகம் பார்த்து, நீ எனக்குச் செய்வதெல்லாம் நியாயமா என்று கேட்டுச் சண்டை பிடிக்க வரமாட்டேன் என்றது.

“நானும் வாறன் மகள். எழும்பி வெளிக்கிடுங்க.” என்றுகொண்டு வந்தார் காமினி.

“இல்ல அம்மா, நீங்க சச்சினியோட இருங்க. நான் போயிற்று வருவன். மாமா என்னோட துணைக்கு வரட்டும்.” என்றவள் வேறு வழியில்லாமல் எழுந்து தயாராகி, அறையை விட்டு வெளியே வந்தபோது வீட்டுக்குள் வந்துகொண்டிருந்தான் சிசிர.

அப்படியே நின்றுவிட்டாள் ருக்க்ஷி. அவன் மறக்கவில்லை. அவளை மறக்கவில்லை. மனத்தின் அத்தனை அலைப்புறுதல்களும் நொடியில் அடங்கிவிட உள்ளம் ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தது. இமைக்காமல் அவனையே பார்த்து நின்றாள்.

அவன் விழிகளில் மெல்லிய தடுமாற்றம். “நேரமாகுது. வெளிக்கிட்டாச்சு எண்டா போவம்.” என்றான் அவளைப் பாராமல்.

இதற்குள் அவனைக் கண்டுவிட்டு, “தாத்தே!” என்று கத்திக்கொண்டு ஓடிவந்து தாவினாள் சச்சினி.

“மகள்!” என்றபடி வாரி அணைத்து, அள்ளித் தூக்கிக்கொண்டவனின் விழிகள் கலங்கிப் போயின. “சாப்பிட்டாச்சா மகள்?” அவளை உச்சி முகர்ந்து கரகரத்த குரலில் வினவினான்.

“ஓ சாப்பிட்டேனே. அம்மம்மா பால்ச்சோறு செய்து தந்தவா.” என்று அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். ஆயிரம் முத்தங்கள் தந்தாள். அவன் கையிலேயே இருந்துகொண்டு, அவன் முகத்தைத் தன் இரு பிஞ்சுக் கைகளாலும் தாங்கி நிறையக் கதையெல்லாம் சொன்னாள். அதில் நிறைந்து கிடந்தது முழுக்க முழுக்க அவனைக் காணாத ஏக்கம் மட்டுமே!

இதையெல்லாம் பார்த்திருந்த பெரியவர்கள் இருவரும் அவனைக் கண்டனத்துடன் நோக்கினர். மனைவியை எதிர்கொள்ளப் பயந்து மகளைத் தவிக்க விட்டுவிட்டது அவனுக்கும் புரிந்தது. யார் முகத்தையும் பாராமல் அவளோடு சென்று முற்றத்தில் நின்றுகொண்டான். அவனுக்கு அவனைச் சமாளிக்கவேண்டி இருந்தது.

இரண்டு நிமிடத்தில், “சச்சினி! அப்பாவைக் கையக் கழுவிக்கொண்டு வரச் சொல்லுங்க மகள்.” என்று வீட்டுக்குள்ளிருந்து குரல் கொடுத்தாள் ருக்க்ஷி.

“நேரமாகுது.” என்று முணுமுணுத்தாலும் மனைவி சொன்னதைச் செய்தான் சிசிர. பாணும் பருப்புக் கறியும் கொண்டுவந்து கொடுத்தாள் ருக்க்ஷி. மகளை மடியில் வைத்துக்கொண்டே அவளுக்கும் கொடுத்துத் தானும் சாப்பிட்டு முடித்தான். அடுத்ததாக அவனுக்குப் பிடித்த பதத்தில் தேநீரை நீட்டினாள். அவனால் அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.

பெரியவர்கள் இருவரும் நடப்பதை எல்லாம் அமைதியாகப் பார்த்திருந்தாலும் நடுவுக்குள் போகவில்லை. மருமகன் மீது கோபம் இருந்தாலும் அவனை பார்த்து பார்த்துக் கவனிக்கும் மகளின் மனமும், யாரும் சொல்லாமலேயே செக்கப்புக்கு வந்து நின்ற மருமகனின் செய்கையும் காமினியின் வாயையும் கட்டிப் போட்டிருந்தது.

இவர்கள் புறப்பட்டபோதும் தானும் அப்பாவோடு வருவேன் என்று சச்சினி சிணுங்கினாள். சிசிரவுக்கும் அவளை விட்டுவிட்டுப் போக மனமில்லை. “கொஞ்சத்துக்கு அழுதாலும் பிறகு சமாதானமாகிடுவா.” என்று சொல்லிக்கொண்டு வலுக்கட்டாயமாக அவளை வாங்க வந்த காமினியிடம் கொடுக்காமல், “இல்ல மாமி. மகளும் வரட்டும் விடுங்க!” என்றவன் மனைவி மகளோடு புறப்பட்டான்.

அந்தக் காட்சியைப் பார்த்திருந்த பெரியவர்கள் இருவரின் உள்ளமும் கண்களும் நிறைந்து போயிற்று.

வெளியே ஆட்டோ காத்திருந்தது. அவன் பைக்கைக் காணவில்லை. புருவம் சுருக்கிக் கணவனைக் கேள்வியாக ஏறிட்டாலும் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை ருக்க்ஷி.

தன் புறம் திரும்பியும் பாராத, தன்னோடு ஒரு வார்த்தை கூடக் கதைக்காத மகனின் செய்கை மத்துமவை ஆழமாகக் காயப்படுத்தினாலும் அவன் வாழ்க்கை நன்றாய் இருந்தால் போதும் என்று எண்ணியவர் அமைதியாகச் சென்று அமர்ந்துகொண்டார்.

எல்லாப் பரிசோதனைகளும் முடிந்து, அவள் ஆரோக்கியமாக இருப்பதை அறிந்துகொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். வீடு பூட்டி இருந்தது. காமினி வேலைக்குச் சென்றிருந்தார். மத்தும நடக்கப் போயிருக்கலாம் என்று தெரிய தன்னிடம் இருந்த திறப்பைக் கொண்டு கதவைத் திறந்தாள் ருக்க்ஷி.

சச்சினி அவன் தோளிலேயே உறங்கி இருந்ததில் அறைக்குள் சென்று அவள் உறக்கம் கலையாமல் கவனமாகக் கிடத்தினான். அவர்களோடே நாள் முழுக்க அலைந்ததில் களைத்துப்போயிருந்தாள்.

அவள் கேசத்தை மிக மென்மையாக ஒதுக்கி, நெற்றியில் இதமாய் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, போர்வையையும் போர்த்திவிட்டுச் சத்தமில்லாமல் வெளியே வந்து, அறையின் கதவைச் சாற்றிவிட்டு அவன் திரும்ப, அவனுக்காய்க் காத்திருந்தாள் அவன் மனைவி.

அவன் எதிர்கொள்ளத் தயங்கி ஓடிய சந்திப்பு எதிர்பாராமல் உருவாகிப் போனது.


தொடரும்...
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 40


அன்று சிசிர பேராதனையிலிருந்து புறப்பட்டுத் திருகோணமலை வந்து சேர பத்து மணி நேரங்களுக்கு அதிகமாய்ப் பிடித்திருந்தது. ஒரே நாளில் இருப்பது மணி நேரங்களுக்கு மேலாய்ச் செய்த பேருந்துப் பயணம், அங்கும் கால் போன திக்கெங்கும் நடந்து திரிந்தது, ஒழுங்கான உணவு உண்ணாதது என்று முற்றிலுமாகச் சோர்ந்து போயிருந்தான். கூடவே திரும்பவும் மனைவி முன்னால் சென்று நிற்கத் தைரியமில்லை.

அவள் அவன் சட்டையைப் பற்றிச் சண்டைக்கு வந்திருந்தாள் கூடப் பரவாயில்லை. அதற்கு மாறாய், முதல் நாள் இரவு அவள் கேட்ட சின்ன ஆறுதலைக் கூடக் கொடுக்காமல் ஒதுங்கியவனைத் தாயிடம் கூட விட்டுக்கொடுக்கவில்லை. அது அவன் நெஞ்சைச் சுட்டது. என்ன மனிதன் நீ என்று அவன் மனச்சாட்சியே கேள்வி கேட்டது.

அதில்தான் அவர்களின் வீட்டுக்கே வந்திருந்தான். கதவைத் திறந்ததும் முதலில் வெறுமை அறைந்தாலும் அந்த வீடு ருக்க்ஷியோடான இனிய இல்லறத்தைக் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருந்தது.

அவளைப் பிடித்துத்தான் மணந்தான். பிடித்துத்தான் வாழ்ந்தான். குழந்தைகள் கூட மனமொத்த தாம்பத்தியத்தின் பரிசுதான். அங்கே விறாந்தைச் சுவரில் தங்கையின் திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட அவர்களின் குடும்பப் புகைப்படம் கொழுவி இருக்கவும் அதன் முன்னே சென்று நின்றான்.

அவன் மகளை வைத்திருக்க அவனருகில் நின்றிருந்த ருக்க்ஷியின் முகத்தில் மிகுந்த மலர்ச்சி. மென்மையே குடிகொண்டவள். அவளின் கோபங்கள் கூட அவனுக்குச் சிரிப்பு மூட்டுபவை. ஆனால் இன்று… விரல்கள் நடுங்க அவள் முகத்தை வருடியவனின் விழிகள் கலங்கிப் போயின.

நினைவு திரும்பியபிறகு நடந்தவைகளை அறிந்து அவனுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியோ, அதேயளவு அதிர்ச்சியை இந்த வீட்டில் வைத்து இன்னொரு பெண்ணுக்காக அவன் உடைந்து குமுறியபோது அவளும் அனுபவித்திருப்பாள் என்று தெரியும்.

உயிராய் வாழ்ந்து இரண்டு குழந்தைகளுக்கு அவளை அன்னையாக்கிய கணவன் யாரோ ஒரு பெண்ணுக்காய்க் கதறினால் எப்படி இருக்கும்? இதில் அவளை வேறு போகட்டும் என்று விட்டிருக்கிறான்.

அவளுக்கு அவன் செய்வது கொஞ்சமுமே நியாயமில்லை என்று தெரியும். ஏற்கனவே அதிர்ச்சியில் இருக்கிறவளை அவன் செய்கைகளை இன்னுமே நோகடிக்கும் என்றும் தெரியும். ஆனாலும் முடியவில்லை. மனத்தின் வேதனைகளை மறைக்கத் தெரியவில்லை. அதையெல்லாம் மறைத்துக்கொண்டு நல்ல கணவன் போன்று அவளிடம் நடிக்கவும் தெரியவில்லை. மனம் மகளை அளவுக்கதிகமாகத் தேடியபோதும் போகவில்லை.

அவன் வாழ்வில் இன்றியமையாதவர்களாக மாறிப்போன இரண்டு பெண்களுக்கும் தன்னால் நேர்மையான ஒருவனாக இருக்க முடியவில்லையே என்கிற வேதனை அரித்தது. இருவரும் அருமையானவர்களே. இருவரும் அவன் மீது உயிரையே வைத்தவர்கள். அதுதான் இன்று அவன் அனுபவிக்கும் அத்தனை துன்பத்துக்கு அடிநாதம்!

தெரிந்தோ தெரியாமலோ உயிராய் நேசித்தவளைக் கைவிட்டுவிட்டான். அவளை மறந்து, மனைவியாகிப்போனவளை மட்டும் மனத்தில் இருத்தி வாழ முடியாமல் இறந்தகாலம் அவனுக்குள் கிடந்து அழுத்துவதால் மனைவியோடும் இணக்கமாக இருக்க முடியவில்லை. உண்மையில் கோழையாக ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறான்.

அவளிடமிருந்து வெளியே வந்து இவளிடம் உன்னை ஒப்புக் கொடுத்துவிடு என்று அறிவு அறிவுறுத்தாமல் இல்லை. எல்லா நேரங்களிலும் மனதை ஒதுக்கி வைத்துவிட்டு அறிவைக் கொண்டு நடக்க முடியுமாயின் இங்கே உணர்வின் வெடிப்புகளும், உறவின் தடுமாற்றங்களும் இருக்கவே இருக்காதே!

கோபத்தில் வார்த்தைகளை விடுவதில் தொடங்கி, அர்த்தமற்ற ஒன்றுக்காய் அழுவது வரை ஆதிக்கம் செலுத்துவது உள்ளத்தின் உணர்வுகளாயிற்றே!

அடுத்த இரண்டு நாள்களும் கூட அந்த உணர்வுகளை நிலைப்படுத்தப் போராடிக்கொண்டிருந்தான். மகிந்தவோடு மனம் விட்டுக் கதைத்ததும் கூடப் பழைய நினைவுகளைத்தான் கிளறிவிட்டிருந்தன.

அதனாலேயே ருக்க்ஷியின் முன்னால் செல்லவேயில்லை. ஆனால், செக்கப் நாள் என்று தெரிந்த பிறகும் இன்றும் அவனால் அப்படி இருக்க முடியவில்லை. அன்று அவளைப் போ என்று சொன்னதும், அங்கே வீட்டுக்குச் சென்றபோது அவள் தன் அண்மைக்கு எஞ்சியதைத் தெரியப்படுத்தியும் விலகி நின்றதும் நெஞ்சில் உறுத்திக்கொண்டே இருக்க, புறப்பட்டு வந்துவிட்டான்.

அவளைக் காட்டிக்கொண்டு வீடு வருகையில் மாமி வேலைக்குச் சென்றிருப்பார் என்று அவனுக்குத் தெரியும்தான். அப்பாவும் இல்லாமல் இருப்பார் என்பதை எதிர்பார்க்கவில்லை. இப்படி மனைவியிடம் தனிமையில் மாட்டிக்கொள்வோம் என்றும் யோசிக்கவில்லை. அவள் வேறு அவனோடு கதைப்பதற்கு என்றே காத்திருக்கவும், “நான் வெளிக்கிடப்போறன்.” என்றான் அவளைப் பாராமல்.

“எங்க?”

அவன் பதில் சொல்லாமல் நிற்க, “சொல்லுங்க சிசிர. எங்க வெளிக்கிடப்போறீங்க? உங்கட குடும்பம் முழுக்க இங்கதானே இருக்கு?” என்று வினவினாள் ருக்க்ஷி.

அவனால் அவளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் முடியவில்லை, உடையைக் கூட மாற்றாமல் தன்னோடு கதைக்க நிற்கும் அவளைத் தாண்டிப் போகவும் முடியவில்லை.

“இல்ல, உங்கட குடும்பம் நாங்க இல்லையா?” திடமாய்க் கேட்க முயன்றும் முடியாமல் அவள் குரல் மெலிதாய் உடைந்தது.

“ருக்க்ஷி?” இயலாமையுடன் அவளைப் பார்த்தான்.

இப்போது அவள் பார்வையை அகற்றிக்கொண்டாள். உள்ளத்துக்குள் நிறையக் குமுறல்கள். எதையும் கேட்க முடியவில்லை. உடைத்துப் பேசு என்று அறிவு சொல்லிற்று. உடைத்துப் பேசினால் ஒட்டவே முடியாத அளவுக்கு உடைந்துவிடுவோமோ என்கிற பயம் நெஞ்சைக் கவ்விப் பிடித்தது. தன்னைச் சமாளித்துக்கொண்டு திரும்பி, “எங்க உங்கட பைக்?” என்றாள்.

பதில் சொல்லாமல் அவளிடமிருந்து பார்வையை அகற்றிக் கொண்டவனின் தொண்டை ஏறி இறங்கிற்று.

“பைக் எங்க சிசிர?”

“வீட்டை நிக்குது.”

“பிறகும் ஏன் ஆட்டோல வந்தனீங்க?”

“அது… கை எல்லாம் நடுங்குது…” அப்போதும் அவளைப் பாராமல் பதில் சொன்னான்.

அப்படியே நின்றுவிட்டாள் ருக்க்ஷி. நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டு வந்தது. அந்தளவிலா அந்தப் பெண் அவன் மனத்தில் ஆழப் பதிந்துபோயிருக்கிறாள்? திரும்ப திரும்பத் தான் தோற்றுக்கொண்டிருப்பதாய் ஒரு தோற்றம் உண்டாகி அவளை வதைத்தது.

அவளை அப்படிப் பார்க்க முடியாமல், “என்னைப் போக விடு ருக்க்ஷி.” என்றான் கெஞ்சலாய்.

“உங்களுக்கு அவவ நிறையப் பிடிக்குமா?” தொண்டை அடைக்க வினவினாள்.

அவன் விழிகள் கண்ணீரில் நிறைந்துவிட அவளுக்கு எதிர்புறம் முகத்தைத் திருப்பித் தன்னைச் சமாளிக்க முயன்றான்.

“என்னை விட?” அவள் குரலும் உடைந்தது.

“என்ர சிசிரவுக்கு என்னைவிட இன்னொருத்தியை பிடிக்கும் எண்டு நம்பேலாமா இருக்கு.” என்றவள் கன்னத்தில் வழிந்துவிட்ட கண்ணீரை வேகமாகத் துடைத்துக்கொண்டாள்.

“உங்களை இப்பிடித் தவிக்க வச்சுப் பாக்க எனக்கும் விருப்பம் இல்ல சிசிர. பிள்ளைகள் இல்லாடி உண்மையா விலகி இருப்பன். ஆனா ஒண்டுக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்கே…” என்றதும் அவளை இழுத்து தன் மார்பில் அழுத்திக்கொண்டான் அவன்.

“இப்பிடி எல்லாம் கதைச்சு என்னைக் கொல்லாத ருக்க்ஷி.” என்றான் கரகரத்த குரலில். அவன் தேகம் மெலிதாய் நடுங்கிற்று. அவன் மார்பில் முகம் புதைத்திருந்தவள் மெல்ல நிமிர்ந்து அவனை நோக்கினாள்.

“பிறகு ஏன் இப்பிடி விலகி விலகிப் போறீங்க? உண்மையைச் சொல்லுங்க. நினைவு திரும்பின பிறகு என்னைப் பிடிக்காமப் போயிற்றுதா? இல்ல, தெரியாம இவளைக் கட்டினதாலதானே இவ்வளவும் எண்டு யோசிக்கிறீர்களா?” என்றவள் முகத்தை ஒருகணம் ஆழ்ந்து பார்த்தவன், அடுத்தகணம் இரு கைகளாலும் ஏந்தி அவள் முகம் முழுக்க முத்தங்கள் பதித்தான்.

“சத்தியமா அப்பிடி இல்ல ருக்க்ஷி. உன்னக் கட்டினதுக்காகக் கவலைப்பட இல்ல. அவளை இப்பிடி விட்டுட்டனே எண்டு அழுறன்.” என்றதும் அவள் முகம் கசங்கிப் போயிற்று.
 

நிதனிபிரபு

Administrator
Staff member

விழிகளிலும் நீர் சேர, “ப்ளீஸ் மா. அவசரப்பட்டு அழாத ப்ளீஸ்! நான் சொல்லுறதை முழுசாக் கேளு. அவள் எனக்காகச் செய்தது நிறைய.” என்றவன் அவள் சத்தியம் செய்தது, அவனுக்காக அதை மீறியது, அவர்கள் பிடிபட்டது, கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் இருந்தது, அவனுக்கு அடித்துக் கடையையும் உடைத்தது தெரிந்து தன் நகையை வீட்டுக்குத் தெரியாமல் எடுத்துத் தந்தது, இங்கு வேலைக்குப்போய் அவனுக்குச் செலவுக்கு அனுப்பியது, ஐந்து வருடங்களாகக் காத்திருந்தது என்று அனைத்தையும் அவன் சொல்ல சொல்ல அப்படியே நின்றுவிட்டாள் ருக்க்ஷி.

இந்தளவில் ஒரு பெண்ணினால் ஒருவனை நேசிக்க முடியுமா என்ன? அவன் அவளை மறக்க முடியாமல் துடிப்பது ஏன் என்றும் விளங்குவது போலிருந்தது.

“இப்ப மச்சானைக் கட்டப் போறாளாம். அத அவளுக்கு முதலே செய்யத் தெரியாதா? ஏன் செய்யேல்ல? அவ்வளவு நம்பிக்கை. எங்க இருந்தாலும் கட்டாயம் அவளைத் தேடி நான் வருவன் எண்டு நினைச்சிருந்திருக்கிறாள். கடைசில…” என்றவனால் மேலே பேச முடியவில்லை.

அவளுக்கும் பேச்சே வரமாட்டேன் என்றது.

“உன்னைக் கட்டி, உயிரா வாழ்ந்தவன் நான். எங்களுக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்கு. ஆனாலும் இதெல்லாம் நினைவு வந்த பிறகு என்னால உனக்குப் பக்கத்திலையே வரேலாம இருக்கு. ஆனா அவள்… அவளின்ர மச்சானைக் கட்டி… உனக்கு விளங்குதா?” என்று கேட்டவனின் விழிகளில் மிகுந்த பரிதவிப்பு.

மனம் ஒருவரிடமும் வாழ்க்கை இன்னொருவனிடமும் சிக்கினால் என்னாகும் என்று கேட்கிறான் கணவன். நரகம்தான். ஒரு பெண்ணாய் அவளுக்கு அது விளங்கிய நொடியில் மளுக்கென்று விழிகள் கலங்கி போயிற்று.

“இனி என்ன செய்யப் போறீங்க?” மெல்லிய நடுக்கத்துடன் வினவினாள்.

“செய்றதுக்கு ஒண்டுமே இல்ல. முழுசா ஒதுங்குறதுதான் சரி. கொஞ்சக் காலம் போக மனம் மாறிச் சந்தோசமா வாழுவாள் எண்டு நம்புறன். வாழோணும். இல்லையோ என்ர மனமே என்னைக் கொல்லும் ருக்க்ஷி.” என்றவன் தன்னையே சுமக்க முடியாதவன் போன்று சென்று அமர்ந்துகொண்டான்.

“இப்பிடி அவளோட பழகினது, அவளைப் பிரிஞ்சது, என்னால இண்டைக்கு அவள் இருக்கிற நிலை எண்டு அவளைப் பற்றியே யோசின ஓடிக்கொண்டு இருக்க உனக்குப் பக்கத்தில எப்பிடி வருவன் சொல்லு? அது உனக்கு நான் செய்ற துரோகம் எல்லா ருக்க்ஷி?” என்றதும் கண்ணீருடன் ஓடி வந்து அவனைத் தன் வயிற்றுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள் ருக்க்ஷி.

“இப்பிடி நிறைய யோசிக்காதீங்க. அவாக்கு வாழ்க்கை இப்பிடியே இருந்திடாது சிசிர. நிச்சயமா அவா சந்தோசமா இருப்பா. இந்தளவுக்கு ஒருத்தரை உயிரா நேசிச்ச ஒருத்தியக் கடவுள் இனியும் தண்டிக்க மாட்டார் பாருங்க. அவவின்ர மச்சான் அவாவை நல்ல சந்தோசமா வச்சிருப்பார்.” மிகுந்த நம்பிக்கையாய் அவள் சொல்ல விழியோரம் கரிக்க நிமிர்ந்தவன், “கட்டாயம் அவள் சந்தோசமா இருந்திடனும் ருக்க்ஷி. இல்லாம என்ர மனம் ஆறாது.” என்றான் கரகரத்த குரலில்.

“கட்டாயம் நடக்கும். அதை நாங்களும் பாப்பம். அதுக்காக எங்களிட்ட இருந்து விலகி நிக்காதீங்க சிசிர. உங்களை நம்பி நாங்க மூண்டு பேர் இருக்கிறம். அதே மாதிரி உங்களுக்காகவும் நாங்க மூண்டு பேரும் இருக்கிறம். உங்களுக்கு ஒண்டு எண்டா நீங்க எங்களிட்டத்தானே வரோணும்? ஏன் வரேல்ல? சும்மா நீங்களா ஏதோ எல்லாம் நினைச்சு ஒதுங்கி நிக்காதீங்க. அதுதான் இது எல்லாத்தையும் விட வலிக்குது.” என்றதும் அவள் இடுப்பை கட்டிக்கொண்டு வயிற்றில் முகம் புதைத்தவன் தன் குழந்தைக்குக் குட்டி குட்டி முத்தங்கள் பதித்தான். அவளிடம் ஆயிரம் மன்னிப்பை வேண்டினான். என்னவோ நெஞ்சில் இருந்த பாரமெல்லாம் பாதியான உணர்வு.

“என்னில கோவம் இல்லையே உனக்கு?” அவள் இடுப்பைக் காட்டியபடியே அவன் நிமிர்ந்து அவள் முகம் பார்த்துக் கேட்க சிறு புன்னகையும் கண்ணீருமாய் அவன் கேசத்தைக் கோதிவிட்டவள் மறுப்பாய்த் தலையை அசைக்க வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

வேகமாக இருவரும் விலகினர். உள்ளே வந்த மத்தும மகன் மீது ஒரு பார்வையைச் செலுத்தினார். அவன் அவர் வானத்தை அறிந்தும் அவர் புறம் திரும்பவில்லை. அவளிடம் திரும்பி அவள் உடல் நிலையைப் பற்றிக் கேட்டுது தெரிந்துகொண்டார்.

“சாப்பிட்டீங்களா மாமா?”

“ஓம் மகள். நான் கொஞ்சம் சரிஞ்சு எழும்பப் போறன்.” என்றுவிட்டு அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த மரக்கட்டிலில் மெதுவாய்ச் சரிந்தவரின் உள்ளத்தில் மெல்லிய நிம்மதி பரவிற்று.

சிசிரவும் எழுந்துகொள்ள விடவில்லை ருக்க்ஷி. “எங்கயும் போறேல்ல, சாப்பிடோணும் இருங்க. உடுப்பை மாத்திக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு அவர்களின் அறைக்குள் நுழைந்தவளுக்கு அவளைக் குறித்தே ஆச்சரியம்தான்.

இவ்வளவு பெரிய விடயத்தைத் தான் இத்தனை பொறுமையோடும் நிதானத்தோடும் அணுகுவோம் என்று கனவிலும் எண்ணியிருந்ததில்லை. ஆனால், இந்தப் பொறுமைக்கும் நிதானத்துக்கும் பின்னால் இருந்தது கணவனுக்கு அவள் மீதிருக்கும் நேசத்தின் ஆழத்தை அறிந்திருந்தமைதான் என்று அறிவு சொல்லாமல் இல்லை.

அவன் தெளிவான. நிச்சயம் அவளின் சிசிரவாக மட்டுமே மாறுவான். இது அவர்கள் வாழ்வில் அலையடிக்கும் காலம். அலையடிக்கிறது என்பதற்காகக் கடலை விட்டு வெளியேறினால் மீனுக்குத்தான் உயிர்போகும். கால நிலையை உணர்ந்து அலை அடங்கட்டும் என்று காத்திருப்பதுதானே உசிதம்.


*****

மாதா மாதம் அவர்கள் செக்கப்புக்குப் போவதால் எத்தனை மணிக்குக் கிட்டத்தட்ட திரும்பி வருவார்கள் என்கிற அனுமானம் மத்துமவுக்கு ஓரளவுக்கு இருந்தது. அதைக் கணக்கிட்டுத்தான் வெளியே போனார்.

தானும் தங்கையும் கூடவே இருப்பதே அவர்கள் வாயைக் கட்டிப்போட்டு வைத்திருப்பதை உணர்ந்திருந்தவர், அவர்கள் இருவரும் தனியாக மனம் விட்டுப் பேசிக்கொண்டால் இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு கிட்டும் என்று எண்ணினார்.

மகனுக்கு இந்தத் திருமணத்தைச் செய்து வைக்காமல் இருந்திருக்கலாமோ, அந்தப் பெண்ணுடனேயே அவன் வாழ்க்கை அமையட்டும் என்று விட்டிருக்கலாமோ, குறைந்த பட்சமாக நினைவு திரும்பும் வரையாவது காத்திருந்திருக்கலாமோ என்று இன்றைக்கு யோசிக்கிறார்தான்.
அன்று தான் செய்தது தவறு என்றும் தெரிகிறது.

ஆனால், அன்றைக்கு அவர் இழந்தவைகள் சாதாரண விசயங்கள் இல்லை. கட்டிய மனைவியை, காலை, மகனின் நினைவை, மகளின் இயல்பை என்று திரும்புகிற பக்கமெல்லாம் அவர் பார்த்தது பாரிய இழப்புகளை மட்டுமே! மொத்தமாய் இடிந்து போயிருந்தார்.

இனி வேலை செய்ய முடியாது, மகனை என்ன செய்வேன், மகளை என்ன செய்வேன், மனைவி இல்லாமல் இந்தக் குடும்பத்தை எப்படிக் கொண்டு நடத்துவேன் என்று ஓராயிரம் பயங்கள். எப்படி வாழப்போகிறோம் என்கிற பயம், வாழத்தான் வேண்டுமா என்கிற விரக்தி என்று அவரைச் சுற்றி இருந்தது முழுக்க எதிர்மறை உணர்வுகள் மட்டுமே!

கிட்டத்தட்ட தன் தங்கையிடம் பிள்ளைகளோடு தஞ்சம்தான் புகுந்தார். அவர்தான் அவர்களுக்கு உணவிட்டு, உடுக்க உடை தந்து, படுக்கப் பாய் தந்து, மருத்துவத்துக்குப் பணம் தந்து என்று அத்தனையையும் பார்த்தது.

கடன் பட்டுக்கூட அவர்களைப் பார்த்த போதும் ஒரு பொழுதில்கூட முகம் சுளித்ததில்லை. இவர்களைப் பாரமாய் எண்ணியதே இல்லை. பலனை எதிர்பாரா அந்த அன்புக்கு, இவரால் என்ன செய்ய இயலும்? அவரின் ஒரே பயம் தன் மகளை நல்லவன் ஒருவனின் கையில் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது. நிரல்யா வீட்டினரின் மீதிருந்த பயமும் சேர்ந்துகொள்ள, அவர்கள் எல்லோருக்குமே இதுதான் நல்லது என்று எண்ணித் திருமணத்தை முடித்துவிட்டார்.

அன்றைக்கு அவருக்குத் தெரிந்த, அவரின் அறிவுக்கு எட்டிய மிகச் சரியான முடிவாக அதுதான் இருந்தது. அனால் இன்று அவசரப்பட்டிருக்க வேண்டாம் என்றுதான் திரும்ப திரும்பத் தோன்றியது.

இனி நடந்ததை மாற்ற அவரால் இயலாது. இருப்பதை நேராக்க விரும்பினார். அதற்கு அவர்கள் இருவரும் பேசிக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு நடுவில் நந்தியாகத் தான் இருக்க கூடாது என்று நினைத்துத்தான் வெளியே போனார்.

வந்து பார்த்தபோது அது நடந்திருப்பதாகவே அவர்களின் முகங்கள் சொல்லின. இனியாவது எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு விழிகளை மூடினார் மத்தும.

தொடரும்...
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 41



அன்றைக்குப் பிறகு இரவு நேரத்து நடையையும் அவளோடான அந்தப் பொழுதையும் நிரந்தரமாக்கியிருந்தான் அனந்தன். அந்த நடையின்போது பெரிதாகப் பேசிக்கொள்ள மாட்டார்கள். முக்கியமாகத் தம்மைப் பற்றியோ, தம் எதிர்கால வாழ்வு பற்றியோ, ஏன் இறந்தகாலம் பற்றியோ கதைப்பதே இல்லை.

நடக்கும்போது எதிர்ப்படுகிற எதைப் பற்றியாவது மற்றவரிடம் பகிரத் தோன்றினால் மட்டுமே பேசிக்கொள்வார்கள். ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பக்கம். அப்படி நடந்துவிட்டு வருகையில் வார்த்தைகளில் வடித்துவிட முடியா ஒரு அமைதி உள்ளத்தில் வியாப்பித்துக்கொள்வதையும் இரவுகளில் நிம்மதியாக உறங்க முடிவதையும் கண்டுகொண்ட நிரல்யா, அவளாகவே, “நடக்கப் போவமா மச்சான்?”என்று கேட்டுக்கொண்டு வருமளவில் முன்னேறியிருந்தாள்.

அன்று அவர்கள் இருவரும் பிறந்தநாள் விழாவுக்குச் சென்று வந்ததிலிருந்தே எப்போது திருமணம் செய்துவைக்கப் போகிறீர்கள் என்கிற கேள்வி சுந்தரலிங்கத்துக்கு வர ஆரம்பித்திருந்தது. ஆனாலும் மகளின் மனம் கொஞ்சம் தேறட்டும் என்றுதான் காத்திருந்தார். இப்போது அனந்தன் அவளோடு நேரம் செலவழிக்க ஆரம்பித்ததும், அவளும் சற்றுத் தெளிந்து தெரிவதையும் கண்டவர் திருமண ஏற்பாட்டைச் செய்ய ஆரம்பித்தார்.

பழைய சுந்தரலிங்கமாக இருந்திருக்க ஊரே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்குத் திட்டமிட்டிருப்பார். வாழ்க்கையில் அடிபட்டுத் தெளிந்த சுந்தரலிங்கத்துக்கு ஊருக்குக் காட்டுவதை விட அவர்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைவதே முக்கியமாகப் பட்டது.

அன்று இரவு உணவின்போது அடுத்த வாரத்தில் நாள் குறித்திருப்பதை அவர்கள் இருவரிடமும் அவர் தெரிவிக்க, திகைப்புடன் பார்த்தாள் நிரல்யா. என்னதான் இதுதான் நடக்கப் போகிறது என்று முதலே தெரிந்திருந்தாலும், தன்னைத் தானே அதற்குத் தயார் படுத்த ஆரம்பித்திருந்தாலும் நெஞ்சில் ஒரு வலி பரவுவதையும் ஒரு அதிர்வு உண்டாவதையும் அவளால் தவிர்க்க முடியவில்லை. வேகமாக அனந்தனைப் பார்த்தாள்.

அவன் பார்வையும் ஒருவித ஆராய்ச்சியுடன் அவளில்தான் இருந்தது. பதறி வேகமாகத் தலையைக் குனிந்துகொண்டாள். அதற்குமேல் சாப்பிட முடியாமல் தொண்டையில் ஏதோ ஒரு முள்ளுச் சிக்கிக்கொண்டது.

அங்கு வைத்து எதுவும் கேட்காத அனந்தன், மேலே வந்த பிறகு விசாரித்தான்.

“ஏற்கனவே இதைப் பற்றிக் கதைச்சு, நீயும் ஓம் எண்டு சொன்ன பிறகுதான் எல்லாம் நடக்குது. பிறகும் என்ன அப்பிடி ஒரு பார்வை?”

“நான் ஒண்டும் சொல்லேல்லையே.” மெல்லத் தடுமாறிச் சொன்னாள் அவள்.

“சொல்லேல்லத்தான். ஆனா உனக்குள்ள என்னவோ ஓடுது. அது என்ன எண்டு சொல்லு!”

அவள் அமைதி காக்க, அவனுக்கு அவளின் அமைதி அழுத்தத்தைக் கூட்டியது.

“வாயத் திறந்து கதை நிரல்!”

“இல்ல ஒண்டும் இல்ல.”

அவன் அழுத்தமாக அவளையே பார்த்தான்.

என்னதான் அவளைக் கேட்டு நடந்தாலும் இன்னுமே இந்தத் திருமணத்தை ஏற்க முடியாமல் தடுமாறுகிறேன் என்று சொல்ல முடியாமல், “இல்ல… அது டாட்டூ…” எனவும் அவன் முகம் இறுகிற்று. “அதுக்கு என்ன?” என்றான் குரலிலும் அந்த இறுக்கம் பரவ.

“இல்ல அதோட…”

“அதைப் பற்றி எனக்கு ஒண்டும் இல்லை எண்டு எப்பவோ சொல்லிட்டன்.” அவள் முடிக்க முதல் இடையிட்டுச் சொன்னான்.

அவளால் அதை நம்ப முடியவில்லை. அவனுக்கும் அவளுக்கும் என்று பேசப்பட்ட திருமணத்தையே நிறுத்தும் வல்லமை கொண்ட அந்தத் டாட்டூ எப்படி அவனுக்கு ஒன்றுமில்லாமல் போகும்?

“அத… அத அழிக்கவா?”

“ஏன்?”

அது ஒன்றும் சாதாரணமாகக் கடந்து போகும் இடமில்லையே! அதை அவனிடம் சொல்ல முடியாமல் உதட்டைக் கடித்தாள்.

“எங்க எண்டு தெரியாட்டியும் ஒரு ஊகம் இருக்கு. எண்டாலும் இன்னுமொருக்காப் போய் உன்னைக் காயப்படுத்தினியோ என்னட்ட நல்லா வாங்கிக் கட்டுவாய் சொல்லிட்டன்!” என்று எச்சரித்தான்.

அவன் என்ன சொன்னாலும் அவளால் சமாதானமாக முடியவில்லை. அவளுக்கே உறுத்துகையில் அவனுக்கு எப்படி உறுத்தாமல் இருக்கும்?

இந்தக் கொஞ்ச நாள்களாக அவனுடைய பீன் பாக் அவளுக்குச் சொந்தமாகியிருந்தது. மேலே வந்தாலே அதில்தான் அமர்வாள். இன்றும் அதில் அமர்ந்திருந்தவளை இமைக்காது பார்த்தான் அனந்தன். அவள் அதைக் குறித்து தனக்குள் மருகுவது தெரிந்தது.

ஒரு நெடிய மூச்சுடன், “இத உனக்கு எப்பிடிச் சொல்லுறது எண்டு எனக்குத் தெரியேல்ல நிரல். மாமாட்டப் போய் உங்கட மகளை எனக்குத் தாங்க எண்டு எண்டைக்கும் என்னால நேரடியாக் கேட்டிருக்க ஏலாது. உன்னட்ட வந்து என்ர மனதைச் சொல்லுற அளவுக்கு உனக்கு வயசும் இருக்கேல்ல. ஆனாலும் நீ எனக்குத்தான் எண்டுறதில அவ்வளவு உறுதியா இருந்தனான். எப்பிடி அப்பிடி ஒரு நம்பிக்கை வந்தது எண்டு தெரியாது. ஆனா நம்பினான்.” எனும்போதே அவளுக்கு முகம் கன்றிப் போயிற்று.

அந்த நாள்களில் அவளுக்கு எல்லாமே அவன்தானே. மச்சான் மச்சான் என்று காலைச் சுற்றும் நாய்க்குட்டியாகச் சுற்றியிருக்கிறாள். அதுதான் அவனுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்க வேண்டும். இங்கே அவனுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்துவிட்டு அங்கே இன்னொருவனிடம் தன் மனத்தைக் கொடுத்திருக்கிறாள்.

“அப்பிடி நான் ஆசைப்பட்ட மாதிரியே நீ எனக்குச் சர்வ சாதாரணமாக் கிடைச்சிருந்தா எனக்கு இது ஒரு பெரிய விசயமாத் தெரிஞ்சிருக்குமோ தெரியாது. ஆனா, ஒரு நேரம் கிட்டத்தட்ட உன்ன முழுசா இழந்திட்டன் எண்டு நினைச்சிருக்கிறன். இனி நீ எனக்கு இல்லவே இல்ல எண்டு முடிவான பிறகு திரும்பவும் எனக்குக் கிடைச்சிருக்கிறாய். அதால எல்லாத்தையும் விட நீ எனக்குக் கிடைச்சதுதான் பெருசா இருக்கு. அண்டைக்குச் சொன்னதுதான், அது எனக்குத் தூசுக்கும் சமன் இல்ல.” என்று தெளிவாய்ச் சொன்னவனை மலைப்புடன் பார்த்தாள் நிரல்யா.

இத்தனை ஆழமாய் அவள் மீது அன்பு வைத்தவன் சிசிரவுக்காக அவள் காத்திருந்த நாள்களில் சிறிதாகவேனும் தன் மனத்தை அவளுக்கு உணர்த்த முற்பட்டதே இல்லை. அவள் மனத்தைக் கலைக்கவோ, அவளைத் தன் புறம் திருப்பவோ முயலவே இல்லையே.

இந்த ஒப்பற்ற அன்புக்கு என்ன செய்யப் போகிறாள்? அவளுக்குப் புரியவே இல்லை.

சிசிர அடி வாங்கி வெளி நாடு வரை போனான் என்றால் அதன் பின்னிருந்தது இவளும் இவளின் நேசமும். அவன் காணாமல் சென்றும் இவள் அவனுக்காகக் காத்திருந்தாள் என்றால் அதன் பின்னிருந்தது அவன் இவள் மீது காட்டிய உயிர் நேசம். அப்படி அவர்களின் நேசத்துக்குப் பதில் நேசம் அங்கே இருந்தது. இவனின் நேசத்தின் பின்னே எந்த ஒரு காரணியும் இல்லையே!

“ஏன் இந்தளவுக்கு என்னைப் பிடிக்கும் உங்களுக்கு?” அடைத்த குரலில் மெல்ல வினவினாள்.

“காரணத்தோட எல்லாம் பிடிக்காது நிரல். ஏன் பிடிச்சிருக்கு எண்டு தெரியாமலே பிடிக்கிறதுக்குப் பெயர்தான் காதல். அப்பிடி என்ன பிடிச்சிருக்கு எண்டுற தேடல்தான் எங்களைக் கடைசி வரைக்கும் கூட்டிக்கொண்டு போகப்போறதும்.”

அவன் தன் மனத்தை வெளிப்படுத்துகிற ஒவ்வொரு முறையும் இவளுக்கு வாயடைத்துப் போய்விடுகிறது. இப்போதும் அப்படித்தான் அமர்ந்திருந்தாள். அன்றைய நடையிலும் எப்போதும் இல்லாத அமைதி அவளிடம்.

இரண்டு நாள்கள் அதுபாட்டுக்கு நகர்ந்தன. திருமண வேலைகளைச் சுந்தரலிங்கமும் அனந்தனுமாகப் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள்.

அன்று வேலைகளை முடித்துக்கொண்டு அனந்தன் வீடு வருவதற்கே எட்டுத் தாண்டியிருந்தது. வேகமாகக் குளித்து, உடையை மாற்றிக்கொண்டு, “நிரல்!” என்று குரல் கொடுத்தபடி இறங்கி வந்தான்.

எப்போதும் ஒற்றைக் குரலுக்கே வெளியே வருகிற நிரல்யா அன்று வரவில்லை. அவளிடமிருந்து பதிலும் இல்லை என்றதும் அறை வாசலுக்குச் சென்று, கதவைத் தட்டிவிட்டு இலேசாய்த் திறந்திருந்த கதவை விரியத் திறந்தான்.

அங்கே அவள் கட்டிலிலிருந்து எழுந்து அமர முயன்றுகொண்டிருந்தாள். கலைந்திருந்த தலையும், சிவந்திருந்த முகமும், உடல் மொழியில் தெரிந்த சோர்வையும் கண்ணுற்றவன், “ஏன் இப்பிடி இருக்கிறாய்? உடம்புக்கு ஏலாம இருக்கா?” மாதாந்தப் பிரச்சனையோ என்றெண்ணிப் பொதுவாய்க் கேட்டான்.

“இல்ல. ஒண்டும் இல்ல. அது சும்மா காய்ச்சல்!” என்று அவள் முணுமுணுக்க, அவனுக்குக் கோபம் வந்தது. “சும்மா எப்பிடிக் காய்ச்சல் வரும்? அதுவும் மத்தியானம் வரைக்கும் நல்லா இருந்தவளுக்கு?” என்றவன் எழுந்து வெளியே வந்தவளின் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தான். நன்றாகச் சுட்டது. “இந்தச் சூடு சுடுகுது. நீ சும்மா காய்ச்சல் எண்டு சொல்லுறாய்? வா, காட்டிக்கொண்டு வருவம்.” என்று அவள் கரம் பற்ற, “இல்ல வேண்டாம். அது… அப்பிடித்தான் ரெண்டு நாளைக்கு இருக்கும்.” என்றாள் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்து.

“அது என்ன ரெண்டு நாள் கணக்கு? முதல் ஆர் உனக்கு இதச் சொன்னது?” அவன் கேள்விகளால் துளைக்க, பதில் சொல்ல இயலாமல் திணறினாள்.

அவளின் அமைதியும், தன் பார்வையைத் தவிர்ப்பதும் என்னவோ இருப்பதாகச் சொல்ல, “என்ன நடந்தது எண்டு கேட்டனான் நிரல்!” என்றான் பார்வையில் கூர்மையுடன்.

“டாட்டூவை அழிச்சிட்டன்.” இப்போதும் அவனைப் பாராமல் முணுமுணுத்தாள்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member

ஒருகணம் பேச்சற்று நின்றவன், “அறிவு கொஞ்சமாவது இருக்காடி உனக்கு? எனக்கு அதால ஒண்டும் இல்லை எண்டு உனக்கு எத்தின தரம் சொல்லுறது? மடச்சி மடச்சி மடச்சி!” என்றான் ஆத்திரத்தை அடக்க இயலாமல்.

“எனக்கு அது உறுத்துதே…” என்றாள் விழிகள் கலங்க. உண்மையிலேயே அவனால் அதை இலகுவாய்க் கடக்க முடியுமாய் இருக்கலாம். அவளால் முடியவில்லை. அதோடு அவனுக்கு மனைவியாகுவதை நினைத்தாலே உடலும் உள்ளமும் கூசிற்று.

“என்னடி நீ? ஏன் இப்பிடித் திரும்ப திரும்ப உன்னையே காயப்படுத்திறாய்? எனக்கு நீதான் வேணும். நீ மட்டும்தான் வேணும், இதெல்லாம் ஒண்டுமே இல்லை எண்டு இன்னும் எத்தின தரம் சொல்லுறது?” என்றான் சலிப்பும் அவள் வலியைப் போக்க முடியா இயலாமையுமாய்.

“அதுதான் மச்சான் அழிச்சனான்.” என்றாள் கரகரத்த குரலில். “இந்த அன்புக்கு என்ன செய்யப்போறன் எண்டு எனக்குத் தெரியுதே இல்லை. குறைஞ்ச பட்சமா அந்த அன்புக்கு நான் மரியாதையாவது தரோணும்தானே?” என்றாள் சூடான கண்ணீர் கன்னத்தில் இறங்க.

வார்த்தைகளற்று அவளையே பார்த்தவன் முதன் முறையாக அவள் முகத்தை இழுத்துத் தன் மார்பில் அழுத்திக்கொண்டான். அவன் உள்ளமும் அவளுக்காய்த் துடித்தது. அதை உணர்ந்தவள் விழிகளில் கண்ணீர். “சொறி மச்சான். உங்களுக்கு என்னை இவ்வளவு பிடிக்கும் எண்டு எனக்குத் தெரியாமப் போச்சே. சின்ன வயது எண்டு பாக்காம நீங்க எனக்குச் சொல்லி இருக்கலாம்.” இப்படி எல்லோரும் அனுபவிக்கும் இந்தத் துன்பங்களைத் தவிர்த்திருக்கலாம் என்கிற தவிப்புடன் சொன்னாள்.

அதை எண்ணி அவனும் பலமுறை வருந்தியிருக்கிறான்தான். ஆனால், அது எப்படி அவனால் முடியும்? கிட்டத்தட்ட அந்த வீட்டுக்கு அவன் தலைச்சம் பிள்ளை போன்றவன். பெண் பிள்ளையை வைத்திருந்தபோதிலும், அவளைக் கட்டும் முறை அவனுக்கு இருப்பது தெரிந்தும் சுந்தரலிங்கம் அவனைத் தூரத்தில் நிறுத்தியதே இல்லை. அனாதையாய் நின்றவனைக் கூட்டிக்கொண்டு வந்து வளர்க்க நல்ல மனம் போதும். தன் வீட்டுப் பிள்ளையாக முழுமையாக நம்புவதற்கு உயர்ந்த உள்ளம் வேண்டும். அது சுந்தரலிங்கத்துக்கு இருந்தது. அப்படியிருக்கையில் காதலை மட்டுமே முதன்மையாய் எண்ணி அவனால் நடக்க முடியவே முடியாது. அந்தக் குடும்பத்தின் நலன் முதற்கொண்டு சுந்தரலிங்கத்தின் கௌரவம் வரை அவன் பொறுப்பில் இருக்கையில் எப்படி அப்படிச் சொல்லுவான்?

அதில் அதைப் பற்றிப் பேசாமல், “பாக்கவா?” என்றான் அவள் முகம் பார்த்து ஆழ்ந்த குரலில்.

அவளுக்கு விளங்கவில்லை. முகம் நிமிர்த்தி என்ன என்று புருவம் சுருக்கினாள். பார்வையால் அவள் டாட்டூவை அழித்த இடத்தைக் காட்டி, “எப்பிடி இருக்கு எண்டு பாக்கவா?” என்றான் மீண்டும்.

அவள் அதிர்ந்துபோனாள். காய்ச்சலில் சிவந்திருந்த முகம் இன்னும் சூடாக, “இல்லை இல்ல…” என்று தடுமாறி, அவனிடமிருந்து விலக முயல, விடவில்லை அவன்.

“ஏன்?” என்றான் அவள் முகத்தின் மீதே கூர்மையாகப் பார்வையைப் பதித்து.

என்ன கேள்வி இது? எப்படி அவளால் அதற்கு அனுமதிக்க முடியும் என்று யோசிக்க மாட்டானா?

“எனக்காகத்தானே அழிச்சுக்கொண்டு வந்திருக்கிறாய். எனக்குப் பாக்கோணும்!” என்றவன் அவளைப் பிடிவாதமாய்ப் பற்றி நிறுத்தி, தொளதொளப்பாய் அவள் அணிந்திருந்ததை மெதுவாய் விலக்கிப் பார்த்தான்.

அந்த இடமே சிவந்து கிடைப்பதைக் கண்டு அவன் விழிகளில் கோபம் கொப்பளித்தது. “உண்மையாவே நீ மடச்சிதாண்டி! செய்ய முதல் ஒரு வார்த்த கேக்க மாட்டியா?” என்றான் பல்லைக் கடித்தபடி.

“கேட்டா விடுவீங்களா? அதான் கேக்கேல்லை.” மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

“எரிச்சலைக் கிளப்பாத நிரல். இதுதான் இப்பிடி நீ தேவை இல்லாம நடக்கிறது கடைசியும் முதலுமா இருக்கோணும். இல்லையோ கட்டாயம் வெளுப்பன் உனக்கு!” என்றான் கோபத்தோடு.

அவள் முகம் சுருங்கிப் போனது.

“நடிக்காத நீ! எவ்வளவு சொன்னாலும் நீ நினைக்கிறதைச் செய்ற குணம் இன்னும் உன்ன விட்டுப் போகேல்ல என்ன?” என்றான் கடுகடுப்பாய்.

அவள் முகத்தில் மெல்லிய முறுவல். அதைக் கண்டவனுக்கும் சிரிப்பு வரப் பார்த்தது. “போடி!” என்றான் சலிப்புடன்.

*****


அடுத்த நாள் வேலை முடிந்து நேராக அவளிடம் வந்தவன்,
“இப்ப எப்பிடி இருக்கு உனக்கு?” என்றான் இயல்பாய்.

அந்தக் கேள்வியில் சங்கடமாய் நெளிந்த நிரல்யா, அவன் முகம் பார்க்க முடியாமல், “ம் பரவாயில்ல!” என்றாள்.

ஒருகணம் ஒன்றும் விளங்காமல் அவளைப் பார்த்தவனுக்கு அவள் நிலை விளங்க மெல்லிய சிரிப்பு உதட்டோரம். அதைக் காட்டிக்கொள்ளாமல், “பாக்கவா?” என்றான் இப்போதும்.

அவள் பதறிப்போனாள். “இல்ல இல்ல. உண்மையாவே இப்ப பரவாயில்ல! காய்ச்சலும் விட்டுட்டுது.” என்று உள்ளே செல்ல முயல, கையைப் பிடித்து இழுத்துத் தன்னருகில் கொண்டு வந்தவன், நேற்றுப் போலவே அவள் உடையை இலேசாக விலக்கி அதை ஆராய்ந்துவிட்டே விட்டான்.

அவள் சிவந்த முகத்துடன் முகம் திருப்பி நிற்கவும் வாய் விட்டுச் சிரித்தான் அனந்தன். அவளை வெட்கப்பட வைக்கும் எண்ணம் அவனுக்கு மருந்துக்கும் இல்லை. ஆனால், அவளின் வெட்கம் சிரிப்பு மூட்டியது.

அந்தச் சிரிப்பில் ஆச்சர்யமாய் அவள் திரும்பி அவனைப் பார்க்க, “வெக்கம் வருதாடி என்ர நிரலுக்கு?” என்று நெற்றி முட்டினான்.

அவன் சொன்ன ‘என்ர நிரல்’, ‘மகே நிரா’வை நினைவூட்டிவிட்டதில் விதிர்விதிர்த்துப்போனாள் நிரல்யா. தேகம் ஒருமுறை தூக்கி போட அவளிடத்தில் பெரும் பதற்றம். அதைப் படித்துவிடுவானோ என்கிற பயத்தில் அவசரமாக அவன் தோளிலேயே முகத்தைப் புதைத்து மறைத்தாள்.

அனந்தன் இதை எதிர்பார்க்கவில்லை. மெல்லிய திகைப்புடன், “நிரல்?” என்றான் கேள்வியாய்.

“...”

“நிரல்!”

“ம்”

“என்ன?”

“ஒண்டும் இல்ல.” அவள் குரலே நடுங்கிற்று. மனத்தினுள் பெரும் புயல் வீசிற்று. அதையெல்லாம் மறக்கவே முடியாதா என்று உள்ளுக்குள் அழுதாள்.

“ஏலாம இருக்கா?” அவள் நிலை அறியாமல் வினவினான்.

“ம்”

“சரி, போய்ப் படு!”

வந்து கட்டிலில் விழுந்தவளால் முடியவே இல்லை. கடைசியாக லண்டனுக்கு புறப்படும்போது சிசிர சொன்ன வார்த்தைகளைத் திரும்பவும் கேட்க வேண்டும் போலிருந்தது. ‘எனக்காகக் காத்திரு நிரா. கட்டாயம் வருவேன்’ என்றவன் வராமலேயே விட்டுவிட்டானே.

என்ன இது, அந்த நினைப்பே இனிக் கூடாது என்று உள்ளம் அடித்துக்கொள்ள ஆரம்பிக்க ஒரு வேகத்துடன் எழுந்து மாடியேறினாள்.

அங்கே குளிப்பதற்கு மேற்சட்டையைக் கழற்றிக்கொண்டிருந்தவன் அவள் வந்த வேகத்தைக் கண்டுவிட்டு, “என்ன?” என்று அவளிடம் விரைந்து வந்தான்.

வேகமாய் வந்து அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்தவள் சத்தமற்று குலுக்கினாள்.

ஒருகணம் அப்படியே நின்றுவிட்டான் அனந்தன். அன்று தன் இடுப்பைக் கட்டிக்கொண்டு அவள் கதறியது கண் முன்னே வந்து போயிற்று. அதுவே ஏதோ ஒரு வகையில் அவன் நினைவு வந்துவிட்டது என்று சொல்ல, அவன் தேகமும் ஒரு நொடி இறுகிப் போயிற்று. தலையைக் கோதித் தன்னை அடக்கினான்.

“ஏன் அழுறாய்?” என்றான் எதையும் காட்டிக்கொள்ளாத குரலில்.

“ஒண்டும் இல்ல. அந்த இடம் தாக்குப்பட்டுட்டுது.”

“இதுக்குத் தானேடி சொன்னனான்…” என்று ஆரம்பித்தவன் அதைக் கதைத்துப் பிரயோசனமில்லை என்று உணர்ந்து, “டொக்டரிட்ட போவமா?” என்று இதமாய் வினவினான்.

“இல்ல வேண்டாம்.”

“சரி, ரெண்டு நாளில ஆறிடும். நீ போய்ப் படு!” என்றான் அவள் தலை வருடி.

“இல்ல. எனக்கு உங்களோடயே இருக்கோணும்.” அவனை இன்னும் இருக்கமாய்க் கட்டிக்கொண்டு அவள் சொல்ல மீண்டும் சிலையானான் அனந்தன்.

மெல்ல அவள் முகம் நிமிர்த்திப் பார்த்தான். கலங்கிச் சிவந்திருந்த அவள் விழிகள், அவன் பார்வையைச் சந்தித்த கணத்தில் மிக மென்மையாய் அவள் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தவன் அவளைத் தன் மார்புடன் சேர்த்து அணைத்துக்கொண்டான்.




தொடரும்...

அனைத்து அன்பு இஸ்லாமிய சகோதர சகோதரியாருக்கு இனிய ரமலான் வாழ்த்துகள்!

 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom