அவனுடைய பேச்சு முடிய, குட்டிப் பானை ஒன்றில் ‘கிரிபத்’ என்னும் பால் சோறு பொங்க ஆரம்பித்தார்கள். அந்த இடைவெளிக்குள் இவர்களிடம் ஓடிவந்தான்.
நிரல்யாவின் கையில் ஒரு பையைத் திணித்துவிட்டு,
“எப்பிடியாவது அவளைப் போட வச்சுக் கூட்டிக்கொண்டு வா. உனக்கும் இருக்கு.” என்று சரண்யாவிடம் சொல்லிவிட்டு மீண்டும் ஓடிப் போனான்.
அந்தப் பைக்குள் அவர்களின் பாரம்பரிய உடைகள் இரண்டு கிடந்தன.
“இதையா?” என்று அதிர்ந்த நிரல்யா, “நான் போடமாட்டன்!” என்றாள் உடனேயே.
அது சற்றே வில்லங்கமான உடைதான். கீழே தைக்காத சரம் போன்ற ஒரு துணி. அதை இடுப்பில் சுற்றிக் கட்டிக்கொள்ள வேண்டும். உடலை அப்படியே கவ்விக் பிடிக்கும் மேல் சட்டை. வயிறும் தொப்புளும் தெரியும் வகையிலும் அதை அணியலாம். அதனால்தான் நிரல்யா மறுக்கிறாள் என்று தெரிந்து, அதற்கு ஒன்றும் சொல்லாமல்
அந்த உடையின் மேல் சட்டையை எடுத்துப் பார்த்தாள் சரண்யா. அது அவள் பயப்படும் அளவுக்கு இருக்காது என்றே தோன்றிற்று.
“முதல் போட்டுப் பாப்பம் வா. நல்லா இல்லாட்டி மாத்துவம்.” என்று சரண்யா சொன்னது சரியாகவே பட, தயக்கமும் குறுகுறுப்புமாக உடைகள் மாற்றும் அறைக்குள் சென்று அணிந்துகொண்டனர்.
உண்மையில் அவள் பயந்த அளவில் இருக்கவில்லை. மேலே அணியும் சட்டை, இடுப்பில் சரம் கட்டியிருந்த இடம் வரைக்கும் வந்திருந்தது. கூடவே கழுத்தைச் சுற்றிப் பிறில் வைத்துத் தைக்கப்பட்ட துணி, முன் பக்கத்தையும் கச்சிதமாக மறைத்துக்கொண்டதில் சங்கடம் அகன்றாள் நிரல்யா. இப்போது பார்க்கையில் அவளுக்கே அந்த உடை மிகவும் பிடித்துப் போயிற்று. அவன் பார்த்துவிட்டு என்ன சொல்லுவான் என்கிற ஆவலும் ஆசையும் பிறந்திருந்தது.
“எனக்கும் சூப்பரா இருக்கு என்னடி?” என்றுகொண்டு வந்தாள் சரண்யா.
“ஓமடி. ஆனா மறந்தும் கையத் தூக்கக் கூடாது. பிறகு வயிறு தெரியும்.” என்று பேசிக்கொண்டு வெளியே வந்தனர்.
இவர்களுக்காகவே காத்திருந்தான் போலும் சிசிர. இவர்கள் தூரத்தில் வரும்போதே கண்டுவிட்டான். தயங்கி தயங்கி நடந்து வந்தவளிடமிருந்து பார்வையை அகற்றவே முடியவில்லை. அப்படியே அவர்கள் இனத்துப் பெண்தான். அந்த நிமிடமே மாலையை மாற்றிவிடலாமா என்று தோன்றிவிடவும் தடுமாறிப்போனான்.
மெல்ல அவன் முன்னே வந்து நின்றவளால் அவன் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. கை விரலைப் பற்றியபடி பார்வையை எங்கெங்கோ அலையவிட்டாள்.
“நீங்க ரெண்டுபேரும் கதைச்சிட்டு வாங்க, நான் அங்க போறன்.” என்று அவர்களைத் தனியாக விட்டுவிட்டுச் சரண்யா நழுவியதைக் கூட உணரும் நிலையில் இருவரும் இல்லை.
அவன் ஒருவித மயக்கத்தில் இருந்தான். அவளை இழுத்துக்கொண்டு தனியாகச் சென்றவனுக்குள் பெரும் தவிப்பு. அவளைப் பார்ப்பதும் பார்வையை அகற்றுவதுமாக நின்றான். தலையைக் கோதினான். சேர்ட்டை பின்னால் இழுத்துவிட்டான். ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் ஒரு வேகத்துடன் அவளை அணைக்க வந்தான்.
அவள் பயந்து மிரளவும் கன்னங்களைத் தாங்கி, அவள் நெற்றியில் முட்டி, “வடிவா இருக்கிறாய் நிரா.” என்றான் தமிழில்.
ஆனந்தமாய் அதிர்ந்து விழிகளை விரித்தாள் நிரல்யா. “என்ன பார்வை இது?” சிரிப்புடன் கேட்டவனின் கைகள் அவள் இடையில் படிந்தன. “ஹே…” என்று திகைத்து அவள் விலக முயல, “பிழையா நடக்கமாட்டன். எனக்கும் நீ முக்கியம்!” என்றான் இப்போதும் தமிழில்.
அவளால் இன்னுமே நம்ப முடியவில்லை. தமிழில்தான் கதைக்கிறானா என்று அவனையே பார்த்திருந்தாள்.
அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்து, “எங்கட கம்பஸுக்கு புதுசா ஒருத்தி வந்தா. என்னை முறைச்சு முறைச்சுப் பாத்தா. எனக்கு என்னவோ அவள் என்னைக் கண்ணாலையே சாப்பிட்ட மாதிரித்தான் இருந்தது. அந்தக் குவேனிக்கு இந்த விஜயனைப் பிடிக்குமா தெரியாது. ஆனா இந்த விஜயனுக்குக் குவேனியத் தவிர வேற எதுவும் முக்கியம் இல்ல. அதான் தமிழ் படிக்கிறன்.” என்றான். உச்சரிப்புகள் அத்தனையும் படு பிழை. இவ்வளவையும் சொல்லி முடிப்பதற்குள் திணறிப்போனான். ஆனாலும் தமிழில்தான் சொன்னான்.
அதுவே அவள் விழிகளைத் தளும்ப வைத்தது. நெஞ்சமெல்லாம் உருகிக் கரைய, அதுவரையில் அவளை ஆட்டிய தடுமாற்றங்கள் எல்லாம் மறைய, அவன் மட்டுமே சகலதுமாய் அவள் எண்ணங்களில் நிறைந்து நின்றான். அவன் மூச்சுக் காற்று முகத்தில் மோதும் தூரத்தில் அவன் கைவளைவுக்குள் நிற்கிறோம் என்பதையே மறந்து அவனையே பார்த்து நின்றாள்.
அவனுக்குள்ளும் என்னென்னவோ ஆசைகள் எல்லாம் எழுந்து வந்தன. இருக்கும் இடமும் அவள் சங்கடப்பட்டுப் போவாள் என்கிற எண்ணமும் கட்டுப்படுத்த அவளோடு சென்று தனியாக அமர்ந்துகொண்டான். அதற்கு முதல் அவள் தோளைச் சுற்றி கையைப் போட்டு ஒரு செல்பி எடுத்துக்கொண்டான்.
தோளினை உரசிக்கொண்டு இருந்தவனைக் கண்டு, “ஆரும் பாத்தாலும்…” என்று முணுமுணுத்தாள்.
“பிழையா நினைக்கிற மாதிரி நாங்க ஒண்டும் செய்ய இல்ல நிரா.” என்றான் அவன்.
“எண்டாலும் வேண்டாம்.”
சரி என்று கொஞ்சமே கொஞ்சம் விலகி அமர்ந்தான். இருவராலும் ஒன்றும் கதைக்க முடியவில்லை. ஓராயிரம் எண்ணங்கள் உள்ளத்தில் பொங்கின. வார்த்தைகளாய் ஒன்று கூட வரமாட்டோம் என்று சண்டித்தனம் செய்தன.
அவள்தான் சமாளித்து, “என்ன உடுப்பு இது?” என்றாள் சிரிப்புடன்.
தன்னை ஒருமுறை குனிந்து பார்த்துவிட்டு, “ஏன் நல்லா இல்லையா?” என்றான் சிசிர.
அவள் இல்லை என்று சிரிப்புடன் உதட்டைப் பிதுக்கினாள்.
“நீ வாங்கித் தந்திருக்கலாம்தானே.” விளையாட்டுக்குத்தான் கேட்டான். ஆனால், அன்னையோடு கடைக்குபோய் அவனுக்கு ஒன்றும் வாங்காமல் திரும்பி வந்தது நினைவில் வர, அவள் முகம் வாடிப்போனது.
“இதுக்கே முகம் வாடுவியா? நான் சும்மா சொன்னனான்.” என்று ஒற்றைக் கையால் அவளை ஒருமுறை இறுக்கி அணைத்து விடுவித்தான். ஆனாலும் அவளின் மனவாட்டம் போகவில்லை. “இஞ்ச(இங்க) வாங்க, ஒரு நாளைக்குப் போய் எடுத்துக்கொண்டு வருவம்.” என்று சொன்னாள்.
மறுத்தால் இன்னும் முகம் வாடுவாள் என்று தெரிய, சரி என்று அவள் நெற்றியில் முட்டி விலகினான்.




