• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் அன்புக்கு நன்றி! - கதைத்திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
“ஓ!” என்றவளுக்கு நிரல்யாவிடம் கொடுக்க முடியுமா என்று கேட்க வாயே வரவில்லை.

அமிர்தவல்லியும் அதற்குமேல் பேச்சை வளர்க்க விடவில்லை. “நீங்களாவது உங்கட வீட்டுக்கு உண்மையா இருங்கோம்மா. எங்கட பிள்ளைகள், தவறிப் போகாயினம் எண்டு நம்பித்தான் படிக்க அனுப்புறது. அந்த நம்பிக்கையைக் கெடுத்துப் போடாதீங்கோ!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

அவளிடம் அப்படிப் பேசி வைத்தாலும் அன்று வீடுவந்த கணவரை இனி என்ன செய்யப் போகிறார் என்கிற கேள்வியோடு அணுகினார்.

“என்ன செய்யக் கிடக்கு? இனி அங்கயெல்லாம் விடேலாது!” என்றார் குறையாத சினத்துடன்.

அதில் அமிர்தவல்லிக்கும் உடன்பாடுதான். ஆனால் அவளின் படிப்பு இடையில் நிற்பதில் விருப்பமில்லை.

“படிப்பு?”

“என்ன கண்டறியாத படிப்பு? உன்ர மகள் படிச்ச படிப்பைப் பாத்தாய்தானே?” என்று அதற்கும் சீறினார் அவர்.

அமிர்தவல்லிக்கு முகம் சுண்டிப் போயிற்று. இதுவரை காலத்தில் இப்படி ஒரு முகத்தைக் கணவர் அவரிடம் காட்டியதில்லை. அதைப் பிடித்துக்கொண்டு தொங்கி, மகள் பற்றிய பேச்சை அப்படியே விட விரும்பாமல், “அங்க அனுப்பச் சொல்லி நானும் சொல்லேல. இங்க சேர்த்து விடுங்கோவன்.” என்று தணிந்தே பேசினார்.

“அதுக்கு அங்க இந்த செமஸ்ட்ரை முடிக்கோணும். அதுக்கு அங்க போக வேணும். அதெல்லாம் சரி வராது!” என்று ஒரேடியாக முடித்துக்கொண்டிருந்தார் சுந்தரலிங்கம்.

சுந்தரலிங்கத்தின் குரல் உயர்ந்தபோதே படக்கென்று எழுந்து வந்து, மாடிப் படியருகில் நின்ற நிரல்யா திகைத்துப் போனாள். எப்படியும் படிப்பை நிறுத்தமாட்டார்கள் என்று நம்பிக்கொண்டு இருந்தாளே!

இனியும் அமைதியாக இருக்க முடியாது என்று தெரிந்துவிட, அடுத்தநாள் சுந்தரலிங்கம் வீட்டில் இல்லாத நேரம் அன்னையைத் தேடி வந்தாள்.

பகல் சமையலில் மும்முரமாய் இருந்த அமிர்தவல்லி, “அம்மா…” என்ற மகளின் கண்ணீர்க் குரலில் வேகமாகத் திரும்பிப் பார்த்தார்.

ஒரு பழைய சட்டை, கடைசியாக எப்போது வாரினாளோ என்று தெரியாத அளவுக்குக் கலைந்து கிடந்த தலை, அழுது சிவந்த விழிகள், தடித்த கண்மடல்கள், அதைத்த முகம் என்று அவள் நின்ற கோலம் கண்டு ஒருகணம் துடித்துப்போனார்.

அவளுக்கும் அன்னையின் பார்வையில் கண்ணீர் கொட்டியது. “எக்ஸாம் எழுத மட்டும் போயிற்று வாறன் அம்மா. பிறகு நீங்க சொன்ன மாதிரி இங்கயே எங்கயாவது சேர்த்து விடுங்க. தொடந்து படிக்கிறன். பிளீஸ் அம்மா, எனக்குப் படிக்கோணும்.” என்று கெஞ்சினாள்.

“இந்த அறிவு தேவையில்லாத வேலைகளப் பாக்க முதல் இருந்திருக்க வேணும்!” என்றார் பட்டென்று.

பதில் சொல்லத் தெரியாமல் கண்ணீர் உகுத்தாள் நிரல்யா. அப்படி அவளைப் பார்க்க முடியாமல் அவருக்கும் உள்ளம் பிசைந்தது. இத்தனை நாள்கள் கழிந்திருந்ததாலோ என்னவோ அவள் மீதான கோபம் கொஞ்சம் குறைந்து நிதானத்துக்கு வந்திருந்தார்.

“நீயாத்தான் பிள்ளை உன்ர வாழ்க்கையைக் கெடுத்து வச்சிருக்கிறாய். என்னை என்ன செய்யச் சொல்லுறாய்? அப்பா வெளில எப்பிடி இருந்தாலும் ஒரு நாள் உன்னட்டக் கோபப்பட்டு இருப்பாரா? இல்ல, என்னட்டத்தான் இப்பிடி எப்பயாவது கதைச்சிருக்கிறாரா? நீ முகத்தைத் திருப்பிக்கொண்டு திரிஞ்ச காலத்தில கூட ஒரு வார்த்த கதைக்க மாட்டியா எண்டு உன்ர முகத்தை முகத்தைப் பாத்த மனுசன எப்பிடி மாத்தி வச்சிருக்கிறாய் எண்டு விளங்குதா?” அவரும் பொறுக்க மாட்டாமல் பொருமினார்.

அதற்கு அவளால் அழ மட்டுமே முடிந்தது. “ப்ளீஸ் அம்மா. அப்பாவோட இன்னொருக்காக் கதைங்களன். இனி அப்பிடி எல்லாம் நடக்க மாட்டன். எக்ஸாம் மட்டும் எழுதிப்போட்டு வாறனே.” என்று மீண்டும் கெஞ்சினாள்.

என்னவோ அவருக்கு அதற்குமேல் அவளிடம் கோபப்பட முடியவில்லை. “கேட்டுப் பாக்கிறன். ஆனா, ஓம் எண்டு சொல்லுவார் எண்டு நினைக்கேல்ல. அவருக்கு உன்னில இருந்த நம்பிக்கை மொத்தமா போயிற்றுது!” என்றவருக்கு தன் தலையில் தானே மண்ணை அள்ளிக் கொட்டிக்கொண்ட மகளை எண்ணிக் கவலைதான்.

அன்று இரவு திரும்பவும் பேச்சை எடுத்தார்.

“உனக்கு ஒருக்கா சொன்னா விளங்காதா? திரும்ப திரும்ப அந்தக் கதையையே எடுக்காத!” என்று ஆரம்பிக்க முதலே அடித்து மூடினார் சுந்தரலிங்கம்.

“அப்பா ப்ளீஸ்…” நிரல்யாவின் கண்ணீர்க் குரல் படியின் பாதியிலிருந்து கேட்டது. சுந்தரலிங்கத்தின் முன்னாலிருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆனந்தனின் கை, ஒரு முறை அப்படியே அந்தரத்தில் நின்று போயிற்று. நிமிர்ந்தே பார்க்காமல் திரும்பவும் உணவில் கவனமானான்.

சுந்தரலிங்கமும் மகளைத் திரும்பியும் பார்க்கவில்லை. முகம் சினத்தில் சிவக்க தட்டில் பார்வையைப் பதித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

“ப்ளீஸ் அப்பா. இனி இப்பிடியெல்லாம் நடக்க மாட்டன். எக்ஸாம் எழுத மட்டும் விடுங்கோ. எனக்குப் படிக்கோணும்.” என்று அழுதாள்.

“அவதான் சொல்லுறாவே. இனி அங்க நாங்க விடப்போறேல்ல தானே. வேணுமெண்டா நந்தன் கூட்டிக்கொண்டு போயிற்று அங்கேயே இருந்து கையோட கூட்டிக்கொண்டே வரட்டும்.” அமிர்தவல்லியும் அவளுக்காய்க் கதைத்தார்.

இல்ல மாமி. கம்பசுக்குள்ள நாங்க போகேலாது. அதைவிட, என்னதான் பயந்து நடுங்கினாலும் தான் நினைச்சதைப் பிடிவாதமா நிண்டு செய்றதுதான் அவளின்ர குணம். அவள் சொல்லுறதை நம்பி அனுப்ப வேண்டாம். அப்பிடிப் படிச்சே ஆகவேணுமெண்டால் இங்க வேற ஏதாவது கோர்ஸ் எடுத்துப் பகடிக்கச் சொல்லுங்க.” என்று இடையிட்டுச் சொன்னான் அனந்தன்.

இதை எதிர்பாராத நிரல்யா திகைத்துப்போனாள். அதுவும் ஒருகணம்தான். அன்று சிசிரவை அந்த அடி அடித்து அவன் உடம்பைப் புண்ணாக்கியது போதாது என்று அவள் படிப்பிலும் விளையாடுவானா என்கிற ஆத்திரம் கிளம்ப, “அதச் சொல்ல நீங்க ஆரு? எங்கயோ இருந்த உங்களக் கூட்டிக்கொண்டு வந்து வீட்டில வச்சிருந்தா எல்லாத்துக்கையும் தலையிடுவீங்களா நீங்க?” என்றாள் பட்டென்று.

சாப்பிட்டுக்கொண்டிருந்த அனந்தன் விறைத்து நிமிர்ந்தான்.

அதற்குள், “அறஞ்சன் எண்டா? பொம்பிளைப் பிள்ளை, கை நீட்டக் கூடாது எண்டு பாத்தா என்ன கதை கதைக்கிறாய் நீ?” என்று சாப்பிட்டுக்கொண்டிருந்த கையை உதறிக்கொண்டு அவளுக்கு அடிக்கப் பாய்ந்தார் சுந்தரலிங்கம்.

அதைக் கண்டு அமிர்தவல்லி நெஞ்சை பற்றிக்கொண்டு நின்றுவிட, இடையில் புகுந்து அவரை அழைத்துவந்து மீண்டும் இருத்தியது அனந்தன்தான்.

அப்போதும் சினமடங்காமல், “பாத்தியா உன்ர மகளின்ர வாய்க் கொழுப்பை? இவளுக்காகத்தான் நீ கதைச்சுக்கொண்டு நிக்கிறாய்!” என்று அதற்கும் மனைவியிடம்தான் சீறினார் சுந்தரலிங்கம்.

அனந்தன் அதற்குமேல் சாப்பிடவில்லை. கையைக் கழுவிக்கொண்டு மேலேறினான். “அவள் கதைச்சதைப் பெருசா எடுக்காம சாப்பிடப்பு!” என்ற அமிர்தவல்லியிடம், “காணும் மாமி.” என்றுவிட்டு விடுவிடு என்று படியேறியவன் அவளைக் கடக்கும் வேளையில் நொடி தாமதித்து, “எனக்கு உன்னத்தான் கொல்ல ஆத்திரமா இருக்கு. அதுக்குத் தைரியம் இல்லாமத்தான் அவனை முறிச்சு அனுப்பினான். இனியும் நீ ஆரு, உனக்கு என்ன உரிமை இருக்கு கேட்டுக்கொண்டு இருந்தாய் எண்டு வை, தெரியும் பிறகு?” என்று சீறிவிட்டு அவளைக் கடந்துபோயிருந்தான்.

நடுங்கிப்போனாள் நிரல்யா. மாட்டை அடிப்பதுபோல் சிசிரவை அவன் அடித்ததால் உண்டான வெறுப்பு நெஞ்சில் மண்டிக் கிடந்ததும், இவனே மறுத்தால் அப்பா அசையவே மாட்டார் என்கிற பதற்றமும் சேரத்தான் அவனிடம் பாய்ந்திருந்தாள். அவனானால் அவளைக் கொல்லும் ஆத்திரத்தில் இருக்கிறானாமே! இனிப் படிப்பு? மெல்ல அறைக்குள் புகுந்துகொண்டவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவேயில்லை.



தொடரும்...


நேற்றுச் சொன்ன அதே டயலாக்தான். முடிந்தால் வியாழன் அடுத்த அத்தியாயம் வரும். இல்லை என்றால் வெள்ளி. (சும்மா சும்மா சொல்லுறேன் என்று நினைக்காதீங்க மக்களே. இதெல்லாம் பீல் குட் எபிஸோட்ஸ் இல்லை. ஒவ்வொரு எபி முடியும்போதும் மைண்ட் அவ்வளவு பாரமா இருக்கு. இப்ப இந்த நிமிஷம் நாளைக்கு எபி எழுத முடியும் என்கிற நம்பிக்கை இல்லை. ஆனா, நாளைக்கு முடிந்தால் எழுதிடுவேன். நீங்க எதிர்பார்த்து ஏமாந்திட கூடாது என்றுதான் நானே முதலே சொல்லிடுறேன். எழுதி முடிச்சிட்டா போட்டுடுவேன். டீல் ஓகே தானே?)
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 14


சுந்தரலிங்கம் ஓய்ந்து போனார். இப்படி ஒரு பிரச்சனை வீட்டுக்கு வெளியே நடந்தால் இதயத்தையும் மனத்தையும் கழற்றி வைத்துவிட்டுக் கரடு முரடாக நடந்துவிடுவார். இதெல்லாம் அவருக்கு ஒரு விசயமே இல்லை. ஆனால், என்னதான் கோபமும் குமுறலும் நெஞ்சுக்குள் நிறைந்து கிடந்தாலும் வீட்டுக்குள் ஒரு அளவுக்கு மேல் கடுமையாக நடக்க அவரால் முடியவில்லை. அது அவர் வீடு! மனத்தால் வாழுமிடம். அங்கேயும் நிம்மதி இல்லை என்றால் என்னதான் செய்வார்?

அதற்குமேல் சாப்பிட முடியாமல் அப்படியே அமர்ந்துவிட்டார். அனந்தனைப் பார்த்து மகள் அப்படிச் சொன்னதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. பெற்ற மகன் என்று ஒருவன் இருந்தால் கூட அவர்களுக்காக இவ்வளவு செய்வானா தெரியாது. அந்தளவுக்கு அவர்களுக்கு ஒரு தூணாக நிற்பவன். அவரின் பாதுகாப்பு வளையமே அவன்தான். உடலும் வயதும் தளர ஆரம்பித்திருக்கும் இந்த நாள்களில் அவரின் மொத்த நம்பிக்கையும் கூட அவன்தான். அப்படியிருக்க என்ன சொல்லிவிட்டாள்?

இதுவரையில் அவரே அவனைக் குறித்து அப்படி நினைத்ததில்லை.

“அப்பா என்ன?” கணவரின் உடைந்த தோற்றம் நெஞ்சில் கிலியைப் பரப்ப, பயத்துடன் வினவினார் அமிர்தவல்லி.

தளர்வுடன் நோக்கி, “என்ன அமிர்தம் இதெல்லாம்? கொஞ்சம் பாத்துச் சொல்லிக் குடுக்க மாட்டியா? இப்பிடிக் கதைக்கலாமா?” என்றார் ஆற்றாமையுடன்.

அவருக்கும் அவள் அனந்தனிடம் பேசிய விதம் பிடிக்கவில்லைதான். ஆனால், மகளின் குழம்பிய மனநிலையையும் யோசிக்க வேண்டும் என்று எண்ணினார்.

அதில், “அப்பா, அவளும் நிதானத்தில இல்ல. தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு பிழையைச் செய்திட்டாள். அதைப் பற்றின யோசின இருக்கும், இனி என்ன எண்டு தெரியாம இருக்கும், அந்தப் பெடியனுக்கு வேற நல்லா அடிச்சிருக்கிறீங்கள், அது தன்னால எண்டுற கவலை இருக்கும். நீங்களும் இந்த வீட்டுக்குக் கொண்டு வந்து தள்ளினதோட ஒதுங்கிட்டீங்க. இனி என்ன எண்டு சொல்லேல்ல. அவளோட ஒருத்தரும் முகம் பாத்துக் கதைக்கவும் இல்ல. சிறை வச்ச மாதிரி வீட்டுக்கையே வச்சிருக்கிறம். இதில படிப்பையும் நிப்பாட்டப் போறம் எண்டதும் நல்லா பயந்திருப்பா. அந்தக் கோவத்தில, யோசிக்காம கதைச்சதுகளை நாங்களும் தூக்கிப் பிடிக்க வேண்டாம். நிதானமா இருங்கோ.” என்று கணவரை ஆற்றுப்படுத்தினார்.

அவருக்கும் புரிந்தது. அவரும் ஒன்றும் ஆசைப்பட்டு அவள் படிப்பை நிறுத்த நினைக்கவில்லை. அங்கே அனுப்பினால், அப்படியே அவனோடு போய், காலத்துக்கும் அழியாத அவமானத்தைத் தேடித் தந்துவிடுவாளோ என்கிற பயத்தில்தான் அந்த முடிவை எடுத்தார்.

அப்படி ஒன்று நடந்துவிட்டால் அதன் பிறகு யாரால் என்ன செய்துவிட முடியும்? அதனாலேயே இந்தப் பிரச்சனை வந்ததிலிருந்தே பேசாமல் அனந்தனுக்கும் அவளுக்கும் திருமணத்தை முடித்துவிடலாமா என்கிற யோசனை ஓட ஆரம்பித்திருந்தது.

கூடவே, இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு என் மகளைக் கட்டிக்கொள்கிறாயா என்று கேட்பது? கேட்கும் நிலையில் மகள் அவரை நிறுத்தவில்லையே! அவளைத் தன் தலையில் கட்டி, அவள் செய்த தவறை மூடி மறைக்க நினைக்கிறார் என்று அவன் நினைத்துவிட்டால் என்று என்னன்னவோ எல்லாம் அவருக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

ஆனால், அவர் பெண்ணைப் பெற்றவர். அவளுக்குத் தன்னால் இயன்ற நல்லதைச் செய்துவிட நினைத்தார். இன்னும் காலத்தைக் கடத்தி, மாற்றவே முடியாத எதுவும் நடப்பதற்கு முதல் அவர் முந்திக்கொள்ள வேண்டும். கூடவே, அவன் மறுக்கமாட்டான், அவரை விளங்கிக்கொள்வான் என்று ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, அவனோடு பேச எண்ணி மாடியேறினார்.

அங்கே, எப்போதும்போல மொட்டை மாடியின் சுவரைப் பற்றிக்கொண்டு, வான் வெளியை வெறித்தபடி நின்றிருந்தான் அனந்தன். அவனுக்குள் என்ன ஓடுகிறது, அவன் மனநிலை என்ன என்று யாராலும் கணிக்க முடியவில்லை. கை நரம்புகள் புடைத்திருந்தன. கண்களில் அப்படி ஒரு சிவப்பு. பெரும் தீயொன்று பற்றிக்கொண்டது போன்று நெஞ்சு எரிந்துகொண்டிருந்தது.

யாரோ ஒருவராய் இருந்திருக்க தூக்கிப் போட்டு மிதித்துவிட்டுப் போய்விடுவான். அங்கே வலித்தால் இங்கே அவனுக்கு உயிரே போகும் என்கையில் எல்லா வலியையும் அவனே சுமக்கவேண்டியிருந்தது.

யாரோ ஒருவனுக்காக அவள் கதறியதைப் பார்த்தே தன் உறக்கத்தைத் தொலைத்துவிட்டு அலைகிறான். இதில் கத்தியாய் வார்த்தைகளை வீசிவிட்டாள் அவள்.

ஒரு நெடிய மூச்சு ஒன்று பெரும் அனலாய் அவனிடமிருந்து வெளியேறிற்று.

யாரோ மேலே வரும் அரவம் கேட்கவும் திரும்பிப் பார்த்தான். நிரல்யாவோ என்று ஒரு கணமென்றாலும் தோன்றாமல் இல்லை. அவளைத் தவிர்த்து வேறு யாரும் மொட்டை மாடிக்கு வந்ததில்லையே!

சுந்தரலிங்கம் என்றதும், “என்ன மாமா?” என்றபடி அவரிடம் விரைந்தான்.

இரண்டு மாடிகளை ஏறியதால் பேச முடியாமல் அவருக்கு இலேசாக மூச்சு வாங்கியது. வேகமாக ஒரு கதிரையை எடுத்துப் போட்டு அமர வைத்தான்.

அவர் சற்று ஆறியதும், “நீங்க ஏன் மேல ஏறி வந்தனீங்க? கூப்பிட்டிருக்க நானே கீழ வந்திருப்பனே.” என்றான்.

அதற்குப் பதில் சொல்லாது அவன் கையைப் பற்றிக்கொண்டு, “பிள்ளை கதைச்சதைப் பெருசா எடுக்காத நந்தா!” என்றார் அவன் முகம் பார்த்து.

“விடுங்க மாமா. அவள்தானே!” என்றான் அவரிடமிருந்து பார்வையை அகற்றிக்கொண்டு. அதைப் பற்றி மேலே அவர் பேசுவதை விரும்பாமல், “இதுக்கா மேல வந்தனீங்க?” என்று கேட்டான்.

இல்லை என்பதுபோல் தலையை அசைத்தவர் சில கணங்களுக்கு அமைதி காத்தார். பின் பேசியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தவர் போன்று மீண்டும் அவன் முகம் பார்த்து, “இத உன்னட்ட கேக்கலாமா தெரியேல்ல. ஆனா…” என்று இழுத்துவிட்டு, “என்ர பிள்ளையை நீயே கட்டுறியா தம்பி?” என்றார் நேரடியாக.

இதைக் கொஞ்சமும் எதிர்பாராதவன் திகைப்புடன் அவரைப் பார்த்தான். தன் மனத்தின் ஆசை நிறைவேறப் போகிறதே என்று மகிழ முடியவில்லை. சிசிரவை அடித்தபோது தரையில் விழுந்த மீன் போன்று துடித்துக் கதறிய நிரல்யா கண்ணுக்குள் வந்து போனாள்.

“இவ்வளவு நடந்த பிறகு கேக்கிறன் எண்டு மட்டும் நினைச்சுப் போடாத நந்தன். அண்டைக்குக் கடை திறப்பு விழாக்கு நீயும் பிள்ளையும் சேர்ந்து வந்ததப் பாத்த நிமிசம் எனக்கு வந்த ஆசை இது. படிச்சு முடியவிட்டி, ரெண்டு பேரிட்டயும் கேட்டுக் கட்டி வைப்பம் எண்டு நினைச்சிருந்தனான். ஆனா இப்ப…” என்றவருக்கு மேலே பேச முடியாமல் போயிற்று.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
மகள் பார்த்த வேலையால் அவனிடம் உரிமையாய்க் கேட்க முடியாமல் மனதளவில் தலை குனிந்து நின்றார். ஒரு தகப்பனாய் அது நெஞ்சை அறுத்தது.

“என்னதான் கோபமா வீராப்புக் காட்டினாலும் ஒரு அப்பாவா பயமா இருக்கு நந்தா. எங்கட கைய மீறி போயிடுவாளோ எண்டு.” என்றவரிடம் தேகம் இறுக, “அப்பிடி ஒண்டும் நடக்காது மாமா. சும்மா எதையும் யோசிச்சுக் கவலைப்படாதீங்க.” என்றான் வேகமாக.

“நடக்காட்டிச் சந்தோசம்தான். நடந்திட்டா?”

“நடக்காது மாமா. நான் இருக்கிறன் தானே!” என்றவனை ஒன்றும் சொல்லாமல் பார்த்தார்.

“என்ன மாமா?”

“உனக்கு… உனக்கு அவளைப் பிடிக்கேல்லையா?”

அதற்கு உடனடியாக ஒன்றும் சொல்லாமல் நின்றவன் மெல்ல அவரிடமிருந்து தன் கையை விடுவித்துக்கொண்டு மீண்டும் மொட்டை மாடிச் சுவரில் கைகளை ஊன்றி, அவருக்கு முதுகு காட்டி நின்றான்.

அவன் மனத்துக்குள் பெரும் போராட்டம் ஒன்று ஆரம்பமாயிற்று. அவர் கேட்பதுபோல் என்றைக்குமே உங்கள் மகளை எனக்குத் தாருங்கள் என்று அவனால் கேட்டுவிட முடியாது. அவரே கேட்டு நிற்கையில் தவற விட்டுவிடாதே என்றுதான் அவளைச் சுமக்கும் நெஞ்சம் ஆர்ப்பரித்தது.

ஆனாலும் முடியவில்லை. அவர்களைச் சோடியாகப் பார்த்தபோது அவள் முகத்தில் தெரிந்த பூரிப்பு, சிசிரவை அவன் அடித்தபோது அவள் துடித்த துடிப்பு இரண்டும் சேர்ந்து வந்து அவன் உயிரை வதைத்தது.

“நந்தா…”

அவன் பெயரையே கேள்வியாக்கியவருக்கு, “அவளை எனக்குப் பிடிக்கும் மாமா. அவளை மட்டும்தான் பிடிக்கும்!” என்றது அவனின் ஆழ்ந்த குரல்.

அவர் முகம் பளிச்சென்று மலர்ந்து போயிற்று. எழுந்து அவனருகில் ஓடி வந்தார். “பிறகு என்னத்துக்கு யோசிக்கிறாய்? இப்ப நடந்த பிரச்சினைய நினைச்சா?”

பார்வை இன்னுமே எங்கோ இருக்க இல்லை என்பதுபோல் தலையை அசைத்தவனுக்குமே அது தெளிவில்லை.

“பிறகு என்ன? நீ அவளைக் கட்டிட்டா எனக்கு எந்தப் பயமும் இல்ல நந்தா. உன்னைத் தாண்டி எதுவும் நடக்காது. அவளைப் படிக்கவும் அனுப்பலாம்.”

அவர் சொல்வது எல்லாம் சரிதான். அவன் மனதுதான் முரண்டிக்கொண்டு நின்றது.

ஒரு நெடிய மூச்சுடன் திரும்பி, “எனக்கு அவளைப் பிடிக்கும் எண்டுறது வேற. எனக்கும் அவளுக்கும் கலியாணம் எண்டுறது வேற. எல்லாத்தையும் விட இப்ப கலியாணத்துக்கு எந்த அவசரமும் இல்லை மாமா. முதல் அவள் இப்ப நடந்ததுகளில இருந்து வெளில வரட்டும்.” என்றான் நிதானமாய்.

அவர் முகம் மீண்டும் தன் பொலிவை இழந்து போயிற்று. ஆயினும் தற்போதைக்கு அவன் திருமணத்திற்குச் சம்மதித்ததே போதும் என்று ஆறுதல் கொண்டார். கூடவே, “இனி அவள் உன்ர பொறுப்பு நந்தா.” என்று அவள் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தார்.

கைகளைக் கட்டிக்கொண்டு மொட்டை மாடிச் சுவரில் சாய்ந்து நின்றிருந்தவன் ஆம் என்பதுபோல் தலையை அசைத்தான்.

“அவளின்ர படிப்பு?”

“நானே கூட்டிக்கொண்டு போறன். எக்ஸாம மட்டும் எழுதிப்போட்டு வரட்டும்.”

“பயம் இல்லையா?”

“என்னைத் தாண்டி அப்பிடி என்னதான் செய்றாள் எண்டு பாப்பமே!” என்றான் நிதானமாக. அவனுக்குள் இருந்த முரடன், அப்படி என்னதான் செய்கிறாள் என்று பார்க்கிறேனே என்று உறுமினான். வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

“இதுக்குப் பேசாம நீ சொன்ன மாதிரி இங்க வேற எதையாவது படிக்கட்டுமே நந்தா.” அவருக்கு என்னவோ அவளை அங்கு அனுப்புவதில் உடன்பாடில்லை.

“அவளுக்கு அக்ரி விருப்பம் மாமா. அதையே படிக்கட்டும். ரெண்டு வருசம் வேற முடிஞ்சுதே!” இத்தனைக்குப் பிறகும் அவள் விருப்பம் அவனுக்கு முதன்மையாய் இருந்தது.

சுந்தரலிங்கத்துக்கு அப்போதும் அதில் விருப்பமில்லை. அதேநேரம் அவனில் மலையளவு நம்பிக்கை இருந்தது. அதில் தலையை அசைத்துவிட்டு கீழே இறங்கிச் சென்றார்.


*****

வகுப்பில் அவள் வரவு போதியளவு இருந்ததும், இவள் போகாத நாள்களில் சரண்யா சமாளித்ததும் சேர்ந்து பிரச்சனை இல்லாமலேயே பரீட்சைக்குத் தயாராகினாள் நிரல்யா. இதோ இன்று பேராதனைக்குப் புறப்படுகிறாள்.

நெஞ்சம் முழுவதும் சிசிரவின் நினைவுகள் நிறைந்து தளும்பின. அவனைப் பார்த்துவிடப் போகிறோம் என்று நினைக்கையிலேயே விழிகள் கரிக்கும் போலாயிற்று. இது எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல், தன் பொருட்கள் அடங்கிய ட்ராவல் பாக்குடன் அவள் கீழே வர, அங்கே ஏற்கனவே தயாராகி தேநீர் பருகிக்கொண்டு அமர்ந்திருந்தான் அனந்தன்.

அவனுக்கு எதிரிலில் முகத்தில் இறுக்கத்துடன் அமர்ந்திருந்த சுந்தரலிங்கம், இவளைக் கண்டதும், “ஒழுங்கா போயிற்று ஒழுங்கா திரும்பி வருவாளா எண்டு கேளு உன்ர மகளிட்ட!” என்றார் மனைவியிடம்.

அவளுக்கு விழிகளில் நீர் கோர்த்தது. நல்லவன் ஒருவனிடம் மனத்தைக் கொடுத்ததற்கு அவர்கள் வீசும் வார்த்தைகளுக்கு அளவேயில்லையா என்று உள்ளுக்குள் அழுதாள். “ஒரு பிழையும் செய்ய மாட்டன் அப்பா. போற மாதிரியே திரும்பி வருவன்.” என்றாள் குரல் தழுதழுக்க.

அமிர்தவல்லி நிறையக் கதைக்கவெல்லாம் இல்லை. அவளை இழுத்துக்கொண்டு சுவாமிப் படங்களின் முன்னே சென்று நின்றார்.

“உனக்குத் தெரியும், நான் கடவுளையும் சத்தியத்தையும் நம்புறவள். சத்தியம் செய்தா உயிரைக் குடுத்து எண்டாலும் காப்பாத்த வேணும் எண்டு நினைக்கிறவள். உன்னையும் அப்பிடித்தான் வளத்திருக்கிறன் எண்டு நினைக்கிறன். நீ என்னில பாசம் வச்சிருக்கிறது உண்மை எண்டா, அம்மா எண்டு மதிப்பு இருந்தா என்ர தலைல கை வச்சுச் சத்தியம் பண்ணு. அந்தப் பெடியனோட ஒரு வார்த்தை கூடக் கதைக்காம, டெஸ்ட்டுகளை மட்டும் எழுதிப்போட்டு திரும்பி வருவன் எண்டு சொல்லு!” என்றார் தீர்க்கமான குரலில்.

நடுங்கிப்போனாள் நிரல்யா. நிச்சயமாக அவள் இதை எதிர்பார்க்கவே இல்லை. உடலும் உள்ளமும் நடுங்க, அவர் கேட்ட சத்தியத்தைச் செய்துகொடுத்துவிட்டுப் புறப்பட்டாள்.



தொடரும்...
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 15


பரீட்சசைக்கு மட்டும் அனுப்புகிறோம் என்று வீட்டினர் சொன்னதும் அவள் கொண்ட ஆனந்தத்துக்கு அளவேயில்லாமல் போயிற்று. அதன் பிறகு அவனைப் பார்க்க முடியாதே என்று தோன்றினாலும் கலங்கவில்லை. முதலில் அவனைப் பார்க்க வேண்டும், எப்படி இருக்கிறான் என்று அறிய வேண்டும், தேறிக்கொண்டானா, காயமெல்லாம் மாறிவிட்டதா என்று கேட்க வேண்டும்.

இது எல்லாவற்றையும் விட அவனின் ஒற்றை அணைப்புக்கு அவள் உடலும் உள்ளமும் ஏங்கிக் கிடந்தது. அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டு, இத்தனை நாள் அனுபவித்த துன்பங்களை எல்லாம் அழுது தீர்க்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு இருக்கையில்தான் அவனைப் பார்க்கவோ, கதைக்கவோ கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டார் அமிர்தவல்லி.

இனி என்ன செய்வாள்? அவன் அருகண்மைக்குச் சென்ற பின்னும் அவனைப் பார்க்காமல் இருப்பது என்றால் எப்படி? நெஞ்சு வெடிக்கும் துயருடன் தளும்பும் கண்ணீரைக் கண்களுக்குள் பிடித்தபடியேதான் அனந்தனோடு பேராதனைக்கு வந்து சேர்ந்தாள் நிரல்யா.

அங்கே ஒரு ஹொட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தான் அனந்தன். இடைப்பட்ட நாள்களில் பல்கலை விடுதியிலிருந்து அவள் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டிருந்தனர். இங்கே இரண்டாம் மாடியில் இருந்த ஒரு அறையின் கதவைத் திறந்து, அவளை உள்ளே விட்டவன் தானும் உள்ளே வந்து கதவைச் சாற்றவும் அதிர்ந்து நின்றுவிட்டாள் நிரல்யா. இருவரும் ஒரே அறையிலா? என்ன இது? அசையக்கூட மறந்தவளாய்த் திகைப்புடன் அவனையே பார்த்து நின்றாள்.

என்ன இவள் பிடித்து வைத்த சிலை போன்று நிற்கிறாள் என்று திரும்பிப் பார்த்த அனந்தன், அவள் பார்வையில் தெரிந்த பயத்தையும் திகைப்பையும் கண்டதும் கொதித்துவிட்டான். “ஏய், என்னடி பார்வை இது? எத்தினை நாள் இரவிரவா மொட்டை மாடில என்னோட இருந்து கதைச்சிருக்கிறாய்? அப்பிடியே என்ர தோள்ல சாஞ்சு நித்திரை கொண்ட நாள் எத்தின? நடுச் சாமத்தில எல்லாம் என்னோட சேந்து ஊரைச் சுத்தேல்ல நீ? அப்பயெல்லாம் செய்யாத கருமத்தையா இப்ப செய்யப் போறன்? இல்ல அப்பிடி ஒரு எண்ணம் இருந்தா அதுக்கு இங்க வரைக்கும் வரவேணுமா நான்?”

கண்கள் சிவக்கக் கேட்டவனைக் கண்டு அவளுக்கு முகம் கன்றிப் போயிற்று. தன் தவறும் புரிய, “சொறி!” என்றாள் குரலடைக்க.

“என்னத்துக்கு? இப்ப நீ பாத்த பார்வைக்கா, இல்ல அண்டைக்குப் பேசின பேச்சுக்கா? சொல்லு!” அவள் முகத்துக்கு நேரே வந்து சீறினான். அவளின் அந்தப் பார்வை அவனை அந்தளவில் சீண்டிவிட்டிருந்தது. “நான் உனக்குப் பிடிக்காத பாதைல போனது உண்மைதான். அதுக்காக அப்பிடிக் கதைப்பியா என்னட்ட? சொல்லடி! கதைப்பியா என்னட்ட? என்னைப் பாத்தா எப்பிடித் தெரியுது உனக்கு? பொம்பிளைப் பொறுக்கி மாதிரியா?” தன் வலியைக் கூடக் கோபமாய்க் காட்டிக்கொண்டிருந்தவனைக் கண்டு திகைத்து நின்றாள் அவள்.

“உன்னை எதுவும் செய்ற ஐடியா எனக்கு இல்ல. ரெண்டு ரூம் கிடைக்கேல்ல. அதோட உன்ன இன்னொரு அறைல தனியா விடவும் விருப்பம் இல்லை.” என்றதும் திகைத்து, “மச்சான்?” என்றாள் மளுக்கென்று விழிகளில் கண்ணீர் தளும்ப.

நொடியில் அவன் விழிகள் இரண்டும் சினத்தில் சிவந்து போயிற்று. “கூப்பிடாத! இனி என்னை நீ அப்பிடிக் கூப்பிடக் கூடாது! கூப்பிட்டியோ உன்ன கொண்டுடுவன்!” என்றான் விரல் நீட்டி.

“எனக்குத் தெரிஞ்ச நிரலுக்கு இப்பிடியெல்லாம் கதைக்கத் தெரியாது. அதுவும் என்னைக் காயப்படுத்த அவளுக்குத் தெரியவே தெரியாது. ஆனா இந்த நிரல்யாக்கு என்னை அப்பிடிக் கூப்பிட உரிமையே இல்ல! எப்பவும் போல மொட்டையாவே கதை. இல்ல கதைக்காம இருந்தாலே சந்தோசம்தான்.” என்றுவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்து, கதவை அடித்துச் சாற்றினான்.

தொப்பென்று கட்டிலில் அமர்ந்து தலையைப் பற்றிக்கொண்டவளுக்கு ஏன் இப்படித் தப்பும் தவறுமாய் நடக்கிறோம் இரு விளங்கவேயில்லை. அன்று தந்தை அடிக்கப் பாய்ந்த போதே தன் பேச்சின் வீரியத்தை உணர்ந்திருந்தாள். இல்லாவிட்டாலும் அப்படியெல்லாம் கதைப்பது அவள் இயல்பே இல்லை.

குழம்பிய மனநிலை, அளவுக்கதிகமான யோசனை, சீரான நித்திரை இல்லாமை, அவளைப் போட்டு அழுத்திக்கொண்டே இருக்கும் பயம், மனம் திறந்து கதைக்க யாருமில்லா நிலை என்று எல்லாம் சேர்ந்து அவள் இயல்பைப் பறித்திருந்தன.

முதலில் அவள் சிரித்து எத்தனை நாள்களாயிற்று? இதில் திடீர் திருமணம் என்று சொல்லி எவனாவது ஒருவனின் கையில் பிடித்துக் கொடுத்து விடுவார்களோ என்கிற பயம் வேறு.

இல்லாமல் அவனைக் குறித்து அவளுக்கு அப்படியொரு பயம் வந்தே இராது. அவன் கோபத்தில் இருக்கும் நியாயம் புரிந்தவளால் தன்னையேதான் திரும்ப திரும்ப நொந்துகொள்ள முடிந்தது.

சற்று நேரத்தில் குளித்து, இலகுடைக்கு மாறிக்கொண்டு குளியலறைக் கதவைத் திறந்துகொண்டு வந்தவன் அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை. உணவு வந்தது. அவளுக்கானதை அவளருகில் வைத்துவிட்டுத் தன்னுடையதைச் சாப்பிட்டான். அங்கிருந்த பால்கனிக்குச் சென்று முடிக்கவேண்டி இருந்த சில கைப்பேசி அழைப்புகளை முடித்தான். அதன் பிறகும் பால்கனியின் இடை வரையில் இருந்த கம்பியைப் பற்றியபடி நின்றவனின் மனத்தின் கொதிப்பு மட்டும் அடங்கவேயில்லை.

உண்மையில் இரண்டு அறைகள் கிடைக்கவில்லை. அவன் நினைத்திருந்தால் வேறு ஹொட்டல்களைப் பார்த்திருக்கலாம். அவளைத் தனியாக விடுவதில் பெரிதளவில் விருப்பம் இல்லாததால்தான் அதைச் செய்யவில்லை.

கூடவே, போலீஸ் கேஸ் விசயமாக வந்த பொழுதுகளில் எல்லாம் இங்கேதான் தங்கியிருந்தான். அதில் பரீட்சயமான இடம் என்பதும், பல்கலைக்கு அருகில் என்பதும், தரமான ஹொட்டல் என்று அவனுக்கே தெரிந்திருந்ததும் ஒற்றை அறை என்றாலும் பரவாயில்லை என்று இங்கேயே அறையை எடுத்திருந்தான். எப்படியும் அவள் எனக்குத்தான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அதைவிட, தான் உயிராய் நேசிக்கும் ஒருத்தி என்பதைத் தாண்டி, அவனை நம்பித்தான் சுந்தரலிங்கம் அவளை அனுப்பி வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கைக்கு எந்தப் பாதகமும் ஏற்படாமல் அவளைப் பாதுகாக்கும் பொறுப்பு அவனுக்கு உண்டே! ஒரே அறை என்றாலும் கூட இரட்டைப் படுக்கை, சோபா, படிக்க மேசை எல்லாம் இருக்கிறதா என்று கேட்டுத்தான் எடுத்திருந்தான்.

முதலில் எதற்கு அவளுக்கு அந்தப் பயம் வந்தது? அவன் இதையெல்லாம் யோசித்திருக்க மாட்டான் என்று எப்படி நினைத்தாள்? அப்படி அவளை என்ன செய்துவிடுவான் என்று பயந்தாளாம்? திரும்பவும் போய் ‘என்னப் பற்றி என்னடி நினைக்கிறாய்?’ என்று கேட்டு அவளை உலுக்கும் ஆவேசம் வந்தது.

ஒரு காலத்தில் எந்த யோசனையும் இல்லாமல், நடு இரவில், தாய் தகப்பனிடம் சொல்லாமல் அவனோடு வவுனியாவிலிருந்து சங்குப்பிட்டிப் பாலம் வரைக்கும் பைக்கில் வந்து, நிலவின் அழகை ரசித்துவிட்டு வந்தவளுக்கு இன்றைக்கு ஏன் இந்தப் பயம் வந்தது?

தன் வார்த்தைகளாலும் செயல்களாலும் மீண்டும் மீண்டும் மொத்தமாய் அவனை அடித்துச் சாய்க்கிறவள் மீது பெரும் கோபம் வந்தது. எப்போதும்போல அவள் மீது அதைக் காட்டும் தைரியமில்லாமல் தனக்குள் வைத்துப் பொசுங்கிக்கொண்டு நின்றிருந்தான்.

அவள் எழுந்து குளியலறை செல்வது தெரிந்தது. அறைக்குள் வந்து சேர்த்துப் போடப்பட்டிருந்த கட்டில்களைப் பிரித்தான். அவள் கட்டிலைத் தலையணை, போர்வை என்று ஒழுங்கு செய்துவிட்டுத் தன்னுடையதில் ஏறிப் படுத்துக்கொண்டான்.

நெஞ்சில் அமைதியில்லை. நிம்மதியெல்லாம் அவளை இன்னொருவனுடன் பார்த்ததில் இருந்தே தொலைந்து போயிற்று. இனி என்னாகும்? அவன் வாழும் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? அவனுக்கே தெரியவில்லை.

சுந்தரலிங்கத்துக்கே அவன் அவளை மணப்பதுதான் விருப்பம் என்கையில் நொடியில் அவனால் அவன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும்!

அது மட்டும்தானா அவனுக்கு வேண்டியது? இல்லையே! அவள், அவளின் சந்தோசம், அவளோடான மனமொத்த ஒரு வாழ்வு இதெல்லாம் வேண்டும். அப்படி வலுக்கட்டாயத்தில் மணந்தால் அது கிடைக்குமா? மொத்தமாய் அவனை வெறுத்துவிடுவாளோ என்று பயந்தான். நினைத்தே பார்த்திராத கணமொன்றில் அனாதையாக்கப்பட்டவன். அவனுக்கு உயிர்ப்பில்லாத வாழ்க்கை வேண்டவே வேண்டாம்!

அவள் குளியலறையிலிருந்து வெளியே வந்தது, உடைகளை அங்கிருந்த அலமாரியில் எடுத்து வைப்பது, புத்தகங்களை எல்லாம் மேசையில் ஒழுங்கு படுத்துவது, இருந்து சாப்பிடுவது என்று அனைத்தும் அவன் கவனத்தில் பதிந்தாலும் விழிகளைத் திறக்கவில்லை.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
உணவை முடித்து, கொஞ்ச நேரம் படித்துவிட்டு அவள் வந்து படுக்கும் வரையிலும் கூட அவனால் உறங்க முடியவில்லை. அவள் உறங்கிய பிறகு தலையை மட்டும் தூக்கிப் பார்த்தான். கழுத்துவரை போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு சுருண்டு கிடந்தாள். மின்விளக்கு போட்டபடியே இருந்தது.

எழுந்து அதை அணைத்துவிட்டு வந்து அவளருகில் நின்றான். ஏற்கனவே மிக மெல்லிய உடல்வாகு. இந்தக் கொஞ்ச நாள்களில் இன்னும் பாதியாகி இருந்தாள்.

ஏதோ ஒரு வகையில் அவள் நிலையும் நெஞ்சை அறுத்தது. இருவர் மனத்திலும் ஆழமான நேசம். அவனுக்கு அவள் மீது அவளுக்கு இன்னொருவன் மீது. என் நேசம் ஈடேறுமா என்பதுதான் இருவர் உள்ளத்திலும் இருக்கும் அலைப்புறுதல்.

ஒரு நெடிய மூச்சுடன் அவள் தலையை ஒருமுறை வருடி விட்டுவிட்டு வந்து படுத்துக்கொண்டான்.

அடுத்தநாள் காலையில் பல்கலையின் வாசலில் பஜிரோவைக் கொண்டு வந்து நிறுத்தினான் அனந்தன். அவள் இறங்க முயல, “எக்ஸ்சாம மட்டும் எழுதிப்போட்டுத் திரும்பி வாறாய். அத விட்டுட்டு அவனோட சேர்ந்து என்னை மொக்கன்(மக்கு) ஆக்கிற வேலை எதுவும் பாத்தாய் எண்டு வை, உன்னை ஒண்டும் செய்ய மாட்டன். அவனும் அவன்ர குடும்பமும் இருக்கிற இடம் தெரியாமப் போயிடும். அது மட்டும் இல்ல, உன்ர நண்பி சரண்யான்ர மொத்த டீடெயிலும் என்னட்ட இருக்கு.” என்று சொன்னவன் சரண்யாவின் வீடு இருக்குமிடம் தொடங்கி அவள் தகப்பன் வேலை பார்க்கும் இடம்வரை சொல்லவும் ஆடிப்போனாள் நிரல்யா.

“அவள்… அவள் என்ன செய்தவள் உங்களுக்கு?” அவள் குரல் நடுங்கிற்று.

“இப்ப வரைக்கும் ஒண்டும் செய்ய இல்ல எண்டுதான் நினைக்கிறன். இனியும் எதுவும் செய்யாம இருந்தாத் தப்புவாள்.”

“இது பிழை எண்டு உங்களுக்குத் தெரிய இல்லையா?”

“அதைப்பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்ல. நீ ஒழுங்கா இருக்கிற வரைக்கும் எதுவும் நடக்காது. அத நினைப்பில வச்சுக்கொண்டு இறங்கிப் போ. நான் இங்கயேதான் நிப்பன். பேப்பரைக் குடுத்ததும் நேரா இங்க வரவேணும்!” என்று சொல்லி அனுப்பிவைத்தான்.

*****

அன்று காலையில் இருந்தே சரண்யாவுக்கு நிரல்யா வருவாளா, இல்லையா என்கிற தவிப்புத்தான். நேரத்துக்கே அவள் பல்கலைக்கு வந்தபோது, சிசிர அவளுக்கு முதலே வந்திருந்து, அவர்களின் வகுப்பில் காத்திருந்தான்.

“வருவாளா? உனக்கு ஏதும் தெரியுமா?” இவளைக் கண்டதும் ஆவலுடன் ஓடிவந்து வினவினான்.

“இல்ல சீனியர். அண்டைக்குப் பிறகு எடுத்துக் கதைக்க எனக்குப் பயமா இருந்தது. சொறி!” தயங்கி மெல்லச் சொன்னாள்.

புரிகிறது என்பதுபோல் தலையைச் சிறிதாக அசைத்தவன் முகத்தைத் திருப்பிப் பார்வையை அலையவிட்டான். எதுவும் செய்ய முடியாத் தன் கையறு நிலையை எண்ணி நொந்தபடி கேசத்தைக் கோதிக்கொடுத்தான். வவுனியாவுக்கே சென்று பார்த்துக்கொண்டு வரலாமா என்று பலமுறை யோசித்திருந்தான். பார்க்க முடியுமா என்பது முதல் கேள்வி. தப்பித்தவறி அவர்களின் கண்ணில் பட்டு, அது இன்னும் பிரச்சனையாகி, அவசரத் திருமணம் எதையும் நடத்திவிட்டார்கள் என்றால் எல்லாம் முடிந்துவிடும் என்றுதான் பரீட்சை வரையும் காத்திருக்க முடிவு செய்திருந்தான்.

பரீட்சைக்கு எப்படியும் அனுப்பி வைப்பார்கள், அவளைப் பார்த்துவிடலாம் என்கிற பெரும் நம்பிக்கையோடு ஓடி வந்தவன் இந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறினான். அவன் தொண்டை ஏறி இறங்குவதைக் கண்டவளுக்குத் தன் பயத்தை உதறிவிட்டு எடுத்துக் கேட்டிருக்கலாமோ என்று தோன்றிற்று.

உற்சாகப் பந்தாய், எப்போதும் சிரிப்பும் விளையாட்டுமாக இருப்பவன். தன் காதலைக் கூடத் துள்ளும் இசையின் இலாவகத்துடன் நேசித்த பெண்ணிடம் சொன்னவன். அவன் கண்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும். அப்படியானவன் இப்போதெல்லாம் அந்தச் சிரிப்பைத் தொலைத்துவிட்டிருந்தான். கண்களில் நிரந்தரமாய் ஒரு வலி, எதையும் செய்ய முடியாக் கையறு நிலையில் நிற்கிறோமே என்கிற இயலாமையின் வெளிப்பாடு என்று சரண்யாவால் அவனை அப்படிப் பார்க்க முடியவில்லை.

அவனுக்கும் அன்றைக்குப் பரீட்சை இருந்ததில் ஒரு அளவுக்குமேல் அங்கேயே நிற்க முடியவில்லை.

“இன்னும் நேரம் இருக்குத்தானே. அவள் வந்தா உடனேயே எனக்கு ஒரு மெசேஜ் மட்டும் போட்டுவிடு, ப்ளீஸ்!” என்றுவிட்டுப் போனான்.

ஒவ்வொருவராக மாணவர்கள் வர ஆரம்பித்தார்கள். நிரல்யாவை மட்டும் காணவில்லை. இதற்குள் வந்துவிட்டாளா என்று குந்தகவல் வாயிலாகப் பலமுறை கேட்டிருந்தான் சிசிர. இப்போதாவது அழைத்துக் கேட்போமா என்று சரண்யா யோசித்துக்கொண்டு இருக்கையில் வகுப்புக்குள் நுழைந்தாள் நிரல்யா.

அங்கிருந்த அத்தனை பேரின் முகமும் பளீர் என்று மலர்ந்து போயிற்று. ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டு அழுதாள் சரண்யா. நிறைய நாள்களுக்குப் பிறகு அவளைக் கண்டதில் கண்ணீர் பெருகிற்று.

“எப்பிடியடி இருக்கிறாய்?”

“ம்!” என்றவளுக்கும் அடக்கமுடியாமல் கண்ணீர் கொட்டியது. அந்தப் பல்கலைக்குள் காலை எடுத்து வைத்த நொடியிலிருந்து அவள் அவளாய் இல்லை. அத்தனையும் அழகான நினைவுகள். அவள் நெஞ்சில் நேசத்தை மலர வைத்தவனோடு அவள் வாழ்ந்த இடம் இது. அத்தனையும் இப்போது கண்ணீரைத்தான் கசிய வைத்தன.

மற்ற மாணவர்களும் அவளைச் சூழ்ந்தனர். என்னென்னவோ விசாரணைகள், ஆறுதல் வார்த்தைகள், அன்பு வருடல்கள் என்று நிமிடங்கள் கழிந்தன. வீட்டினரால் அவளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை அறிந்து எல்லோரும் கவலை கொண்டனர்.

இதற்குள் அவர்களின் ஸ்டாப் இருவர் உள்ளே நுழைய, பரீட்சை ஆரம்பமாகிற்று. அதற்குள் வேக வேகமாக அவள் வந்துவிட்ட செய்தியைச் சிசிரவுக்கு அனுப்பிவிட்டாள் சரண்யா.

பரீட்சையில் ஏதோ எழுதினாள் நிரல்யா. எந்த அரியரும் வைக்காமல் இந்த செமஸ்ட்ரைக் கடந்தால் போதும் என்கிற நிலையில் இருந்தாள். அவனுக்குப் பக்கத்தில் வந்தும் இன்னும் பார்க்கக் கிடைக்கவில்லையே என்கிற தவிப்பு, அவளைப் பரீட்சையில் கவனம் செலுத்த விடவில்லை. அவனும் அவளுக்காக வந்து காத்திருந்துவிட்டுத்தான் போயிருக்கிறான் என்று தெரிந்ததிலிருந்து இன்னுமே பரிதவித்தாள்.

அன்னையின் சத்தியத்துக்குப் பயந்தாலும் அதையும் மீறி அவனைக் கண்ணால் தன்னும் பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கினாள். நொடிக்கொரு தரம் விழிகள் அலைபாய்ந்து, எங்காவது அவன் தென்பட்டுவிட மாட்டானா என்று தேடிற்று.

ஒரு வழியாகப் பரீட்சை முடிந்து போயிற்று. இனிப் போக வேண்டும். அங்கே வாசலில் அனந்தன் காத்திருக்கிறான். அடுத்த இரண்டு நாள்களுக்குப் பரீட்சை இல்லை. இன்று பார்க்க முடியாவிட்டால் மூன்றாம் நாள்தான். அதுவும் முடியுமோ தெரியாது. அவளால் அங்கிருந்து நகரவே முடியவில்லை. கால்கள் அவனிடம் ஓடிவிடத் துடித்தன. என்ன வேதனை இது? தூரத்தில் இருந்தபோதாவது சமாளிக்க முடிந்தது. இவ்வளவு பக்கத்தில் வந்துவிட்டுப் பார்க்காமல் போவதென்றால்?

“சீனியரப் பாக்கேல்லையா?” சரண்யா இரகசியமாக வினவினாள்.

மனத்துக்குள் மிகப்பெரிய போராட்டமே நடந்தபோதும் மறுத்துத் தலையசைத்தவளின் விழிகளிலிருந்து கண்ணீர் மளுக்கென்று நிறைந்து வழிந்தது. வேகமாகத் துடைத்துக்கொண்டு வகுப்பை விட்டு வெளியேறினாள்.

அதற்குள், ‘சீனியர், எங்களுக்கு எக்ஸாம் முடிஞ்சுது. அவள் போப்போறாள்.’ என்று அவனுக்குத் தகவல் அனுப்பிவிட்டு ஓடிவந்து சேர்ந்துகொண்டாள் சரண்யா.

அவர்களின் வகுப்பு இரண்டாம் மாடியில் இருந்தது. அந்த கொரிடோரால் நடந்து, படியிறங்கி முடிக்கையில் யாருமே எதிர்பாரா நொடி ஒன்றில் மின்னலாக அவளை நெருங்கிய சிசிர, அவளையும் இழுத்துக்கொண்டு படிக்குப் பின்னால் சென்று மறைந்தான். அவனோடு வந்த மகிந்த அண்ட் கோ மற்றவர்களின் கவனத்துக்கு வராத வகையில் அவர்களை மறைத்து நின்று கொண்டனர்.

பக்கத்தில் நடந்து வந்துகொண்டிருந்த சரண்யாவுக்கே என்ன நடந்தது என்று விளங்கிக் கொள்வதற்குச் சில நொடிகள் பிடித்திருந்தன. விளங்கியதும் திரும்பிப் பார்த்தாள். அவளுக்கே அவர்கள் இருவரும் தெரியவில்லை. மதிற்சுவராய் அவர்களை மறைத்து நின்றிருந்தனர் அவன் நண்பர்கள்.

“கொஞ்சம் வெய்ட் பண்ணு. நிரல்யா வந்ததும் சேர்ந்து போ!” என்றான் மகிந்த. சரி என்று தலையை அசைத்துவிட்டுத் தள்ளி நின்றுகொண்டாள் சரண்யா. ஒருகணம் அவளில் அதிகமாய்ப் படிந்து மீண்டது மகிந்தவின் பார்வை.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
இங்கே நிரல்யாவுக்குமே நடந்ததை நம்ப முடியவில்லை. தன் முன்னால் நிற்பது அவனா? அவனை அவள் பார்த்துவிட்டாள்தானா? நெஞ்சு அளவை மீறித் துடிக்க, விழிகள் கலங்கிக் கண்ணீர் வடிக்க, “சிசிர!” என்றாள் நடுங்கும் குரலில்.

சிசிரவின் நிலையும் அதேதான், “நிரா! மகே லஸ்ஸன!” என்றபடி அவளை வாரியணைத்துத் தன் நெஞ்சுக் கூட்டுக்குள் பொத்திக்கொண்டான்.

எத்தனை நாள்களின் தவிப்பிது? அதுவும் இன்று விடிந்ததிலிருந்து அவள் வருவாளா, மாட்டாளா என்று துடித்த துடிப்புக்கு அப்படியே அவளைத் தனக்குள்ளேயே புதைத்துவிட மாட்டோமா என்று துடித்தான். மனத்தின் தவிப்பெல்லாம் அடங்கும் வரை அவள் முகமெங்கும் முத்தமிட்டான். அப்போதும் முடியாமல் மீண்டும் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.

அவளும் அவன் இடுப்பை இறுக்கிக் கட்டிக்கொண்டு, அவன் நெஞ்சில் முகம் புதைத்துச் சத்தமில்லாமல் குலுங்கி அழுதாள். இத்தனை நாள்களும் என்னவோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போன்று அவள் பயந்த பயத்துக்கு அவன் அணைப்பு, அவன் கைகளுக்குள் கிடைக்கும் ஆறுதல், அவன் தேகத்தின் சூடு, அது அவள் உடலின் அணுக்களெங்கும் பரவி உண்டாக்கும் ஆசுவாசம் எல்லாம் அவளுக்கு இன்றியமையாததாயிற்று.

இன்னுமின்னும் அழுதாள். அப்படி அவள் அழுவதைத் தாங்க முடியாமல் அவள் முகம் நிமிர்த்தி, “போதும் அழுதது!” என்றபடி கண்ணீரைத் துடைத்துவிட்டவன், “எப்பிடி இருக்கிறாய்?” என்றான் அவள் முகத்தையே பார்த்து.

“ம்!”

“அடிச்சவையா?”

“சேச்சே!” என்றவளுக்கு அன்று அவன் அடி வாங்கியதையும் அவமானத்தில் குறுகி நின்றதையும் எண்ணிக் குரல் அடைத்துக்கொண்டது.

“சொறி!” என்றாள் அவன் கன்னம் தடவி. “நான் நிக்க நிக்க இன்னும் உங்களுக்கு அடிப்பார் எண்டுதான் அண்டைக்கு நீங்க சொல்ல சொல்லக் கேக்காமப் போனனான்.” என்றாள் கண்ணீர் பெருகி வழிய.

சிவந்த விழிகள், கண்ணீரில் நனைந்த இமைகள், அழுகையில் துடிக்கும் இதழ்களை எல்லாம் ஒருகணம் பார்த்தவன், அவளே எதிர்பாரா கணமொன்றில் அவள் இதழ்களில் தன் உதடுகளை அழுத்தமாய் ஒற்றி எடுத்தான்.

அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து போயின. வேகமாய் அவனிடமிருந்து விலக முயன்றாள். விடாமல் பற்றி, “இனி இல்ல. விலகாத ப்ளீஸ்!” என்றான் மெல்லிய முணுமுணுப்பாய்.

அவளுக்கு அவன் முத்தம் தந்த அதிர்ச்சியில் அழுகை நின்றுபோயிற்று.

அவள் முகத்தை மீண்டும் கைகளில் ஏந்தி, “நிரா, நான் சொல்லுறதைக் கேள்! இது நாங்க ஸ்ட்ரோங்கா இருக்க வேண்டிய நேரம். நீயோ நானோ எங்கயும் போக இல்ல. இதே கம்பசுக்கதான் இருக்கிறம். எக்ஸாம் வடிவா எழுது. எனக்கும் ஒண்டும் நடக்கேல்ல. நல்லாத்தான் இருக்கிறன். நீ அண்டைக்கு எனக்காகக் கதறினதே கண்ணுக்க நிக்குது. அத நான் மறக்கோணும். எனக்கு உன்னப் பழைய நிராவாப் பாக்கோணும். இனி எதுக்கும் அழாத ப்ளீஸ்!” என்றான் கெஞ்சலாய்.

மீண்டும் விழிகள் கலங்க, “ஆனா, இனி அப்பிடி ஒரு காலம் எங்களுக்கு அமையாது சிசிர. அடுத்த வருசம் அங்கதான் சேர்க்கப் போயினம். எக்ஸாம் எழுத மட்டும்தான் வந்திருக்கிறன்.” என்றாள் அவள்.

“ஓ!” ஏதோ ஒரு வகையில் இதை அவன் எதிர்பார்த்தான்தான்.

“உங்களப் பாக்கக் கூடாது, கதைக்கக் கூடாது எண்டு சத்தியம் வாங்கித்தான் அம்மா அனுப்பினவா. இங்க வரவேணும் எண்டுறதுக்காக நானும் சத்தியம் செய்து குடுத்திட்டன். ஆனா, இனி என்ன நடக்குமோ எண்டு பயமா இருக்கு.” என்னதான் காதலும் காதலனும் முதன்மையாகிப் போனாலும் அன்னைக்குச் செய்துகொடுத்த சத்தியத்தை மீறிவிட்டோம் என்பது அவளைப் பெரிதாகத் தாக்கியதில் குரல் உடைந்து தழுதழுத்தது.

இதை அவன் எதிர்பார்க்கவில்லை. கூடவே, அந்தச் சத்தியத்தை மீறித் தன்னோடு கதைக்கும் அவள் நேசத்தின் ஆழம் விளங்க, அவள் மனத்தின் காயங்களுக்கெல்லாம் மருந்திடுகிறவனாக அவள் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான்.

இதமான குரலில், “அப்பிடிப் பயப்பிட ஒண்டும் இல்ல நிரா. நாங்களாச் சொல்ல முதல் எங்களைப் பற்றி அவேக்குத் தெரிய வந்திட்டுது. அதால கவலையான சில விசயங்கள் நடந்திட்டுது. அவ்வளவுதான். இனி நீ அவே சொல்லுற மாதிரி அங்கயே படி. அவே அமைதியாகிற வரைக்கும் பிரிஞ்சே இருப்பம். கஷ்டம்தான். ஆனாலும் பரவாயில்ல. இது நிரந்தரம் இல்லையே. அவே கொஞ்சம் அமைதியான பிறகு உன்னப் பாக்க நான் வருவன். சரியா? கலியாணம் எங்களுக்கு அவசரம் இல்ல. உனக்குப் படிக்கோணும். எனக்கும் இனி என்ன எண்டு பாக்கோணும். குறைஞ்சது அஞ்சு வருசமாவது எங்களுக்கு டைம் இருக்கு நிரா. அதால எதையும் யோசிக்காமப் போ. இதைவிட வேற பிரச்சினைகள் இனி வராது. சரியா?” என்றான்.

என்னவோ அவனோடு பேசிய பிறகுதான் அவளுக்கும் ஓரளவுக்கேனும் மனம் தெளிந்தது. சரி என்று தலையை அசைத்துவிட்டு, கண் முகமெல்லாம் துடைத்துக்கொண்டாள்.

“உங்களுக்கு என்னில கோவம் வரேல்லையா?” கொஞ்சமாய்த் தெளிந்த குரலில் அவன் முகம் பார்த்து வினவினான்.

“ஏன்?” அவனுக்கு மெய்யாகவே விளங்கவில்லை.

“என்ர வீட்டு ஆக்கள் இப்பிடி எண்டு தெரிஞ்சும் உங்களை விரும்பினதுக்கு? நான் உங்களுக்கு ஓம் எண்டு சொல்லாம இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது தானே?”

அதற்குப் பதில் சொல்லாது பார்வை மின்னலாய் நண்பர்கள் பக்கம் சென்று வர, அவளை இழுத்து அவள் இதழ்களைச் சத்தமேயில்லாமல் முற்றுகையிட்டான். அதிர்ந்து, அவனைப் பிடித்து அவள் தள்ளிவிட்டபோது சின்ன சிரிப்புடன் அவளை விட்டவன், அவள் காதோரம் குனிந்து, “இதுக்காகவும் இந்த நிராவுக்காகவும் இன்னும் எவ்வளவு அடியையும் வாங்கலாம்.” என்றான் சிரித்துக்கொண்டு.

அந்தச் சிரிப்பை, சிரிக்கும்போது மின்னும் அவன் கண்களைப் பார்த்தவளுக்கு மீண்டும் விழிகள் கலங்கிப் போயின. எப்படி இருந்தவன்? அன்று அவனை எப்படிப் பார்த்தாள்? காலகாலத்துக்கும் அவளால் மறக்க முடியாத காட்சியது!

தொண்டை அடைத்துக்கொள்ள அவனை நெருங்கி, அவளுக்கு மிக மிகப் பிடித்த அவனின் சுருண்ட குழல்களுக்குள் கைகளை நுழைத்துக் கோதியவள், அவன் விழிகள் வியப்பில் விரிவதைக் கவனித்தபடியே எம்பி அவன் முகமெங்கும் முத்தமிட்டாள். அவன் கன்னங்கள் இரண்டையும் தாங்கி, அவன் விழிகளோடு தன் விழிகளைக் கலந்து, “என்ர வீட்டு ஆக்கள் என்ன செய்தாலும் என்னை விட்டுடாதீங்க சிசிர. நீங்க எனக்கு வேணும்! நான் வாழுற காலம் வரைக்கும் நீங்க வேணும்! இல்லையோ…” என்றவள் வேறு பேசவில்லை. அழுகையில் உதடுகள் துடிக்க இன்னும் எம்பி அவன் நெற்றியில் தன் இதழ்களை அழுத்தமாய் ஒற்றி எடுத்துவிட்டு விலகி வெளியே வந்தாள்.

சிசிரவுக்குத் தன்னைச் சமாளித்துக்கொள்ள சில பல வினாடிகள் பிடித்தன.



தொடரும்...

ஹாப்பி வீக்கெண்ட்! இனித் திங்கள்தான் வருவேன். கருத்திடும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.





 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 16


பரிட்சை முடிந்து பல்கலை வளாகத்துக்குள்ளிருந்து வந்துகொண்டிருந்தவளைப் பார்த்த அனந்தனின் முகம் இறுகிற்று. விழிகளில் கோபம் படர்ந்தது. விடாமல் அவளையே கூர்ந்து பார்த்திருந்தான்.

அவன் பார்வையை, அதிலிருந்த அனலை அவனைப் பாராமலேயே உணர்ந்த நிரல்யாவுக்கு நெஞ்சு கிடுகிடு என்று நடுங்கிற்று. அழுத தடம் தெரியாமல் இருக்க முகத்தைக் கழுவிச் சீராக்கி, பரீட்சையை முடித்துக்கொண்டு நேராக வருகிறவள் போன்றுதான் காட்டிக்கொள்ள முயன்றாள். அவளின் அத்தனை முயற்சிகளையும் அவனின் விடாத ஒற்றைப் பார்வை ஒன்றுமில்லாமல் ஆக்கிற்று. அவனைப் பாராமல் ஜீப்பை சுற்றி வந்து ஏறி அமர்ந்தாள். அவள் கதவைச் சாற்றிய நொடியில், “பாத்துக் கதைச்சாச்சுப் போல!” என்றது அனந்தனின் இரும்புக் குரல்.

இவனுக்கு எப்படித் தெரியும்? அவளுக்கு இதயத் துடிப்பே நின்றுவிடும் போலாயிற்று. தன் அதிர்ச்சியை அவனுக்குக் காட்டிக்கொள்ளக் கூடாது என்பதையும் மறந்து, அவனைப் பார்த்துத் திகைத்து விழித்தாள். கடவுளே கடவுளே என்று நெஞ்சு அடித்துக்கொண்டது.

“என்னைப் பாத்தா எப்பிடித் தெரியுது உனக்கு? நீ பாக்கிற வேலைக்குக் காவலுக்கு நிக்கிறவன் மாதிரியா? இல்ல, உள்ள என்ன நடக்கும் எண்டு தெரியாம இருக்கிற அளவுக்கு லூசு மாதிரியா? இண்டைக்கு அவனுக்கும் எக்ஸாம் எண்டும் தெரியும், எப்பிடியும் அவன் உன்ன வந்து பாத்திருப்பான் எண்டும் தெரியும். இதில ஒண்டுமே நடக்காத மாதிரி ஒரு நடிப்பு?” என்றவனின் பேச்சில் விழிகள் கலங்கி, முகம் கன்றி போயிற்று.

“மாமா சொன்ன மாதிரி உன்ர படிப்பை நிப்பாட்டி இருக்க வேணும். இல்ல, அவள் ஆசைப்பட்டது, படிக்கட்டும் எண்டு கூட்டிக்கொண்டு வந்தா, அத நீ உன்ர வாசிக்குப் பயன்படுத்திறாய் என்ன?” என்றவனுக்கு நெஞ்சு கொதிக்கும் கொதிப்புக்கு ஜீப்பை எங்காவது கொண்டுபோய் மோதலாமா எனும் அளவுக்கு வெறி கிளம்பிற்று.

“இஞ்ச(இங்க) கொண்டு வந்து விட்டா நீ அவனைப் பாப்பாய், கதைப்பாய் எண்டு எனக்குத் தெரியாது எண்டு நினச்சியா? ஆனாலும் ஒரு நம்பிக்கை. மாமின்ர தலைல சத்தியம் பண்ணி இருக்கிறாய், அந்த மனுசில நீ நல்ல பாசம், அந்தச் சத்தியத்தை மீறிப் போகமாட்டாய் எண்டு உன்னப் பற்றிப் பிழையா நினைச்சிட்டன். உன்னையெல்லாம்…” என்றவன் அவள் மீதிருந்த ஆத்திரத்தில் சரக்கென்று ஜீப்பை கிளப்பவும் அது உறுமிக்கொண்டு பாய்ந்தது.

நிரல்யாவினால் மூச்சுக்கூட விட முடியவில்லை. அவன் பார்வையில் தரமிழந்து நிற்கிறோம் என்பதும், இனி என்னாகுமோ என்கிற பயமும் சேர்ந்து அவளை ஒருவழியாக்கின.

இங்கே அவள் தந்த முத்தங்களை எல்லாம் உணர்ந்து, உள்வாங்கி, நெஞ்சுக்குள் பொத்திவைத்துவிட்டு வெளியே வந்த சிசிரவின் முகம், விளக்குப் போட்டது போன்று பளீரென்று மலர்ந்திருந்தது. ஓடிவந்து மகிந்தவை இறுகக் கட்டிக்கொண்டு, “தேங்க்ஸ் மச்சான்!” என்றான்.

“எங்களுக்க என்னடா தேங்க்ஸ் எல்லாம்? இப்ப நீ ஓகேயா?” அவன் தோள்களைப் பற்றிச் சற்றே தள்ளி நிறுத்தி, மலர்ந்திருந்த அவன் முகத்தைப் பார்த்தபடி வினவினான்.

“ம் டபிள் ஓகே!” என்றான் சிரித்தபடி.

“இந்தச் சிரிப்பைப் பாக்கிறதுக்கு அவள் வரவேண்டி இருந்திருக்கு!” என்றுவிட்டு அவன் தோளைச் சுற்றிக் கையைப் போட்டு நடந்தபடி, “என்னவாம் அவள்? என்ன சொன்னவையாம் வீட்டில?” என்று விசாரித்தான்.

சிசிரவும் அவள் வீட்டில் நடந்தவற்றைப் பற்றி, சத்தியத்தைப் பற்றி எல்லாம் பகிர்ந்துகொண்டான்.

“ஓ!” என்று கேட்டுக்கொண்டுவிட்டு, “அவளும் பாவமடா!” என்றான் மகிந்த. “எதுக்கும் கவனமா இரு மச்சான். இங்க இல்லாட்டி அங்க எண்டு அவளைப் படிக்க வைக்கவும் பாக்கவும் ஆக்கள் இருக்கினம். உனக்கு அப்பிடி இல்ல. திரும்ப திரும்ப அடி வாங்கவும் ஏலாது. உன்ர குடும்பமும் முக்கியம். அங்கிள் என்ன செய்றார்? கடையத் திருத்தியாச்சா? முதல் அங்க நடந்தது அவளுக்குத் தெரியுமா?”

“சொல்லேல்ல மச்சான். சும்மாவே எனக்கு அடி விழுந்ததுக்குக் காரணம் தான்தானாம் எண்டு இன்னும் அழுதுகொண்டு இருக்கிறாள். இதுவும் தெரிஞ்சாத் தாங்க மாட்டாள், கவலைப்படுவாள். நீயும் சொல்லிப்போடாத ப்ளீஸ்!” என்றான்.

சரி என்று கேட்டுக்கொண்டான் மகிந்த.

“கடைக்கு என்ர பைக்கை வித்தாச்சு மச்சான். கடையக் கொஞ்சம் பெருசாப் போடப்போறம். காலைச் சாப்பாடு, ஷோர்ட் ஈஸ்ட், கேக் ஐடம்ஸ் எல்லாம் விக்கிற மாதிரி. எக்ஸாம் முடிய நானும் அங்க போயிடுவன் தானே. எது என்ன மாதிரி எண்டு பாத்து, கொஞ்சம் கூட வருமானம் வாற மாதிரிச் செய்ய வேணும் எண்டு இருக்கிறன்.”

“நல்ல ஐடியாதான். அதுக்கு ஏன் உன்ர பைக்கை குடுத்தனி? இனித்தானேடா வேலை எதுக்கும் போய் வாறதுக்கு உனக்கு அவசியம்.”

“விடு மச்சான்! பாவம் அப்பா. மொத்தமா உடைஞ்சிட்டார். இன்னும் என்னாலதான் இதெல்லாம் எண்டு தெரியாது. வட்டிக்கு வாங்கப்போறன் எண்டு சொன்னவர். அது வேற நெஞ்சை அரிச்சுக்கொண்டே இருந்தது. என்னால அந்தத் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டாம் எண்டுதான் பைக்கை குடுத்திட்டன். எனக்கு என்ன, அப்பிடியே வேலை கிடைச்சாலும் கொஞ்ச நாளைக்கு பஸ்ல போயிற்று, பிறகு வேற ஒண்டு வாங்குவம் எண்டு இருக்கிறன்.” என்றான் கண்ணை எட்டாத ஒரு முறுவலோடு.

மகிந்தவுக்கு நெஞ்சை என்னவோ செய்தது. அவன் வீட்டில் மிகவும் சிரமம்தான். அதெல்லாம் அவனைப் பாதித்ததே இல்லை. தான் ஏழை வீட்டுப் பிள்ளை என்று தன்னைத் தானே ஒடுக்கியோ, ஒதுங்கியோ அவன் இருந்ததில்லை. இருப்பதை வைத்துப் பல்கலை வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தவன். ஆனால் இன்று? எல்லாம் இந்தக் காதல் படுத்தும் பாடு. மனதார விரும்புகிறவளையும் இழக்க விரும்பாமல், குடும்பத்தையும் பார்க்க நினைக்கும் ஒரு சராசரி இளைஞன் இப்போதே தன்னை ஒடுக்கித் தான் நேசிக்கும் மனிதர்களுக்காக ஓட ஆரம்பித்துவிட்டது விளங்கிற்று.

“நீ நல்லா வருவாய் மச்சான், நான் சொல்லுறன் பார்!” என்றான் அவன் தோளைத் தட்டிக்கொடுத்து.

“கட்டாயம் மச்சான்! நல்லா வந்தே ஆகவேணும்.” என்றவனுக்குள்ளும் அந்த நெருப்பு எரிந்துகொண்டுதான் இருந்தது.

அன்று மைதானத்தில் வைத்து அனந்தன் அடித்தது பற்றி நிரல்யாவிடம் பெரிதாக எதையும் காட்டிக்கொள்ளவில்லை. அவனைச் சுற்றி இருக்கும் நண்பர்களிடம் கூட எதுவும் சொன்னதில்லை. ஆனால், அன்றிலிருந்து அவனுக்குள் ஒரு அவமானத்தீ எரிந்துகொண்டே இருந்தது. இந்த நான்கு வருடங்களும் மாணவர் மத்தியில் அவன் சேமித்து வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் அந்த ஒற்றை நாளிலேயே போயிற்றே. இன்று எவ்வளவோ பரவாயில்லை, சமாளித்துக்கொண்டுவிட்டான். அது நடந்த அந்த நாள்களில் முதல் வருடத்து மாணவர்களைக் கூடத் தலை நிமிர்ந்து பார்க்க முடியாமல் குன்றிக் குறுகியிருக்கிறான்.

ஒரு நெடிய மூச்சுடன் நடையைக் கட்டியவனின் மனத்தில் எதிர்காலம் குறித்துப் பல யோசனைகள்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
*****

வருகிற வழியில் உணவும் வாங்கிக்கொண்டுதான் வந்தான் அனந்தன். அதை அவள் படிக்கும் மேசையில் வைத்துவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தவன், வெளியில் வருகையில் ரன்னிங் செட் உடையில் வந்தான். அறையின் கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்ல முதல் திரும்பி, “என்ர போன் நம்பர் இருக்கா? இல்ல அதையும் தூக்கி எறிஞ்சிட்டியா?” என்றான் நிரல்யாவிடம்.

“இல்ல… இருக்கு.” அவன் கேள்வியின் முழுமையான பொருள் புரியாமல் தடுமாறிச் சொன்னாள்.

“சந்தோசம். கதவைப் பூட்டிப்போட்டுப் போறன். என்ன எண்டாலும் கோல் பண்ணு. நான் ஓடப் போறன்.” சொன்ன மறுநிமிடமே அறையை விட்டு வெளியேறி, கதவைப் பூட்டித் திறப்பை எடுத்துக்கொண்டு போயிருந்தான்.

வேறு எதைத் தூக்கி எறிந்தாளாம்? குழப்பத்துடன் வந்து கட்டிலில் அமர்ந்தாள். அவளுக்குத் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள நேரம் தேவையாய் இருந்தது.

எழுதிய பரீட்சை, அதற்குக் கண் விழித்துப் படித்தது, சிசிரவைப் பார்த்தது, அவன் கைகளுக்குள் நடந்த உணர்வுப் போராட்டம், அதன் பிறகான அனந்தனின் கோபம் என்று அனைத்தையும் உள்வாங்க மிகவும் கடினப்பட்டாள். ஓய்வே இல்லாமல் பெரும் புயலொன்று அடித்துக்கொண்டே இருப்பது போலவும், அந்தப் புயலுக்குள் சிறு துரும்பாய் மாட்டிக்கொண்டு மூச்செடுக்கவே முடியாமல் திணறுவதும் போலவும் இருந்தது அவள் நிலை.

சிசிரவைப் பார்த்தது, அவனோடு கதைத்தது, அழுது தீர்த்தது, அவன் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் எல்லாம் சேர்ந்து ஓரளவுக்கு அமைதி அடைந்திருந்தாள். கவனமாக இருந்தால் படித்து முடிக்கிற வரை வேறு பிரச்சனைகள் வராதது என்று தெளிந்தும் இருந்தாள்.

இப்போது மனம் மீண்டும் எதையெதையோ நினைத்துப் பயந்து நடுங்கிற்று. என்ன வாழ்க்கை இது என்கிற சலிப்பு, எல்லாவற்றையும் நல்லபடியாக நடத்திவிட முடியாதா என்கிற ஏக்கம், சத்தியத்தை மீறியது அம்மாக்கு தெரிந்தால்? அவளால் அதை யோசித்தே பார்க்க முடியவில்லை. அனந்தனுக்காகக் காத்திருந்தாள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்தபிறகு வியர்த்து வழிய அறையின் கதவைத் திறந்துகொண்டு வந்தான் அவன்.

அவள் அவனோடு கதைக்க எண்ணி வேகமாக எழுந்து நின்றாள். அதைக் கவனித்தாலும் பொருட்படுத்தாமல் மாற்றுடைகளை எடுத்துக்கொண்டு அவன் மீண்டும் குளியலறைக்குள் நுழையப் போகவும், “உங்களோட கதைக்கோணும்.” என்றாள் தைரியத்தைத் திரட்டிக்கொண்டு.

“இப்பிடியேவா?” தன்னைக் காட்டி வினவினான்.

முக கன்ற, “இல்ல, நீங்க குளிச்சிட்டு வாங்க.” என்றாள் மெல்லிய குரலில்.

“சாப்பிடேல்லை?” பார்வை மேசையில் இருந்த உணவுக்குச் சென்று வர வினவினான்.

சாப்பிடும் நிலையிலா அவள் இருக்கிறாள்? பதில் சொல்லாமல் நின்றாள். ஒருகணம் அவளையே பார்த்துவிட்டு, “சாப்பிடு!” என்றுவிட்டுக் குளியலறைக்குள் நுழைந்துகொண்டான்.

அவனை இன்னும் கோபப்படுத்த விரும்பாமல் பார்சலை பிரித்து உண்ண ஆரம்பித்தாள். உணவு உள்ளே போக வேண்டுமே!

குளியலறையிலிருந்து வந்தவன் நேராகச் சாப்பிட வந்து அமர்ந்தான். அதற்குமேல் முடியாமல் கையைக் கழுவ அவள் எழுப்பவும் கேள்வியாகப் பார்த்தான்.

“இல்ல, காணும் எனக்கு. நீங்க பாத்ரூம்ல இருந்து வெளில வாற வரைக்கும்தான் வெய்ட் பண்ணிக்கொண்டு இருந்தான்.”

“நீ எவ்வளவு சாப்பிடுவாய் எண்டு எனக்குத் தெரியும். இருந்து சாப்பிட்டு முடி!” என்றான் குரலைச் சற்றே உயர்த்தி.

அடுத்த நிமிடமே விறு விறு என்று உள்ளே இறங்கிற்று உணவு.

“சொல்லு!” இருவரும் உணவை முடித்ததும், கைகளைக் கட்டிக்கொண்டு அவர்கள் சாப்பிட்ட மேசையிலேயே சாய்ந்து நின்றபடி வினவினான்.

சரக்கென்று அவன் மொட்டை மாடிச் சுவரில் இப்படி நிற்கும் காட்சி மின்னி மறைய, நிரல்யா ஒருகணம் தடுமாறிப்போனாள். அப்போதெலலாம் இப்படி ஒரு கடின முகத்தை அவனிடம் கண்டதே இல்லை. அவ்வளவு அன்பாய் இருப்பான், கனிவுடன் நடப்பான், அவள் சொல்வதை எல்லாம் சின்ன முறுவலோடு பொறுமையாகக் கேட்பான், அவளின் விருப்பங்கள் ஆசைகள்தான் அவனுக்கு முதன்மையானவை. அவள் ஒன்று கேட்டால் அது நடந்துவிடும். அதே அவன் இன்று அவள் இன்னொருவனில் உயிரையே வைத்திருப்பது தெரிந்தும் கல்லாய் நிற்கிறானே! இவன் அவள் பக்கம் இருந்தால் அவள் எதற்கும் அஞ்சமாட்டாளே!

பெருகி வழியப் பார்த்த கண்ணீரைக் கண்களுக்குள்ளேயே பிடித்து வைத்துக்கொண்டு, “இல்ல, உண்மையா நானாப் போய் அவரைப் பாக்கேல்லை. சத்தியத்தை மீற நினைக்கவும் இல்ல. அவர் என்னத் தேடி வந்தது உண்மைதான். ஆனா, இனிக் கதைக்க மாட்டன். அவரிட்டயும் சொல்லி விடுறன். நான் சத்தியம் பண்ணினது அவருக்குத் தெரியாது. அதான் வந்து கதைச்சவர். எக்ஸாம் முடிஞ்சதும் நான் வந்திடுவன். வேற ஒண்டும் செய்ய மாட்டன். ப்ளீஸ் அவரை ஒண்டும் செய்து போடாதீங்க ப்ளீஸ்!” என்று உடைந்து கரகரத்த குரலில் கெஞ்சினாள்.

அவனுக்காகத் தன்னிடமே கெஞ்சுகிறவளை இமைக்காது பார்த்தவனின் தாடை இறுகி, கை நரம்புகள் புடைத்தன. சற்று முன்னர் ஓட்டத்தில் இறக்கிவிட்டு வந்த மனத்தின் அழுத்தம் திரும்பவும் ஏறுவது போலிருக்க, “வேற ஒண்டும் செய்ய மாட்டாய் எண்டால் என்ன செய்ற பிளான் இருந்தது?” என்று அவள் மீதே பார்வை இருக்க நிதானமாய் வினவினான்.

நெஞ்சு சில்லிட்டுப் போயிற்று அவளுக்கு. “ஐயோ இல்ல. கடவுள் சத்தியமா எந்தப் பிளானும் இல்ல. நீங்க தனி ரூம்ல கூட விடாத அளவுக்கு என்ன நம்பேல்ல. அதான் அப்பிடிச் சொன்னனான்.” என்றாள் பயத்தில் வெளுத்துவிட்ட முகத்திஹோடு.

அவன் உதட்டோரம் இலேசாக வளைந்து போயிற்று. “பெத்த தாயின்ர தலைல பண்ணின சத்தியமே இங்க சந்தி சிரிக்குது. இப்ப கடவுள்ள சத்தியமா?” என்றதும் அவமானத்திலும் அழுகையிலும் அவள் முகம் சிவந்து போயிற்று.

அவள் என்ன செய்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்? அன்னைக்கு நல்ல மகளாய் நடந்திருந்தால் உயிராய் நேசித்தவனை ஏமாற்றியவளாகிவிடுவாளே! யாருக்கு அவள் நியாயமாய் நடக்க? உயிர் தந்து உலகைக் காட்டிய குடும்பத்துக்கா, உயிராய் நேசிக்கும் அவளின் உயிரானவனுக்கா?

கண்ணீர் வழிய அவனையே பார்த்து நின்றாள். சில கணங்களுக்கு அவளையே வெறித்தவன், “இரவிரவா கண் முழிச்சுப் படிச்சனி எல்லா? கொஞ்ச நேரம் படுத்து எழும்பு!” என்றுவிட்டு பால்கனியில் சென்று நின்றுகொண்டான்.

என்ன துன்பம் இது? ஏன் இந்த வேதனை? அவள் கண்ணீர் அவன் உயிரைக் குடித்தது.

நிரல்யாவும் அழுதாள். ஏன் என்றில்லாமல் அழுது தீர்த்தாள். அவளின் மச்சானின் பார்வையில் இன்னுமின்னும் அவள் கீழுறங்குவது பிடிக்கவில்லை. அவன் கேட்ட கேள்வி திரும்ப திரும்ப நெஞ்சில் அறைந்தது. சிசிர இல்லாத ஒரு வாழ்க்கையை யோசிக்கவும் முடியவில்லை. என்ன செய்யப் போகிறாள்? அவள் வாழ்க்கை இனி என்னாகும்? அம்மாவுக்குச் சத்தியத்தை மீறியது தெரிய வந்தால் அவர் என்ன செய்வார்?

கண்ணீர் உகுத்தபடி கிடந்தவள் எப்போது உறங்கினாள் என்று தெரியாமலேயே உறங்கிப் போனாள்.

தொடரும்...

நாளைக்கு வீட்டில நிக்க மாட்டன். சோ நாளைக்கு எபி வராது. வியாழன் சந்திக்கலாம். கருத்திடும் அனைவருக்கும் நன்றி. (இந்த அத்தியாயத்தில் இன்னுமொரு துண்டு பின்னால வரவேணும். அத எழுத முடியாம போச்சு. வியாழக்கிழமை போடும்போது சேர்த்து போட்டுட்டு சொல்லுறேன்.)
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 17


பல்கலையின் உள்ளக விளையாட்டு அரங்குக்குக் கிட்டத்தட்ட அவளைக் கடத்திக்கொண்டு வந்திருந்தான் சிசிர. இன்று அவளுக்குக் கடைசி நாள். பிரசன்டேஷனை தன்னால் இயன்றவரையில் நல்லபடியாக முடித்துவிட்டு, இனிப் புறப்பட வேண்டும் என்று மனம் கனக்க வெளியே வந்தவளை இங்கே கூட்டிக்கொண்டு வருவதற்குள் அவனுக்குப்
போதும் போதும் என்றாயிற்று.

அன்று அவள் முகத்தை வைத்தே சிசிரவைச் சந்தித்துப் பேசியிருக்கிறாள், சத்தியத்தை மீறிவிட்டாள் என்று அனந்தன் கண்டுபிடித்துக் கோபப்பட்ட பிறகு, தன்னைச் சந்திக்க வர வேண்டாம் என்று சரண்யா மூலம் உறுதியாகத் தெரிவித்திருந்தாள் நிரல்யா.

மேலும் மேலும் அவசரப்பட்டு, இருக்கிற நிலையை இன்னும் மோசமாக்கிக் கொள்வதில் உடன்பாடில்லாததால் சிசிரவும் கேட்டுக்கொண்டான். ஒரு சில முறைகள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் தொண்டையை அடைக்கும் உணர்வுடன் கடந்து போயிருக்கிறார்கள்.

அப்படியே இன்றும் போக முடியாதே! இன்று விட்டால் இனி எப்போது பார்க்கக் கிடைக்கும் என்று இருவராலும் சொல்ல முடியாது. அதனால்தான் அனந்தனை எண்ணி அவள் பயந்து நடுங்கியபோதும் பிடிவாதமாகக் கூட்டிக்கொண்டு வந்திருந்தான். கூடவே, பிரசன்டேஷன் என்பதால் முடியும் நேரம் முன்பின் அமையும் என்பதும் வசதியாகிப்போயிற்று.

அவளுக்கும் அன்று காலையில் எழுந்ததில் இருந்தே நெஞ்சை அடைக்கும் உணர்வு. அன்னையின் சத்தியம், அனந்தன் மீதான பயம் அத்தனையையும் தாண்டி உள்ளம் சிசிரவைத் தேடிற்று.

இந்தப் பல்கலை, அதனோடான அழகிய நாள்கள், மெலிதாகத் தூறும் மழை, அக்பர் பாலம், அவர்கள் நடந்து திரிந்த அந்தப் பாதை, ஒற்றைக் குடை, அதற்குள் அவர்கள் இருவர் மட்டுமான நடை எல்லாவற்றையும் நினைக்க நினைக்க அவளால் முடியவேயில்லை. மனம் தவித்துத் தள்ளாடியது. சிசிரவின் கைகளுக்குள் அடைக்கலமாகி, அவன் அணைப்புக்குள் அடங்கிவிட ஏங்கினாள்.

முடிய வேண்டுமே! இந்த ஏக்கங்களை எல்லாம் தாண்டிக்கொண்டு அனந்தன் முன்னால் வந்து நின்று அவளைப் பயமுறுத்தினான்.

கடைசியில், “நிரா! இனி உன்ன எப்ப பாக்கக் கிடைக்குமோ தெரியா. அதைவிட எனக்கு உன்னோட முக்கியமான விசயம் கதைக்கவும் வேணும். நீ அங்க போன பிறகு எப்பிடி நான் கதைக்க?” என்ற பிறகுதான் கொஞ்சமென்றாலும் அமைதியானாள்.

“என்ன எண்டு சொல்லுங்கோ. ஆனா நிறைய நேரம் நிக்க வேண்டாம் சிசிர. அண்டைக்கு மாதிரி மச்சான் கண்டு பிடிச்சிடுவார்.”

“சரி, நீ வா முதல், எங்கயாவது இருப்பம்.” என்றவன் அது விளையாட்டு அரங்கு என்பதால் சுவரோரமாய்த் தரையில் அமர்ந்து, அவளையும் தன்னருகில் அமர்த்திக்கொண்டான்.

“எக்ஸாம்ஸ் எல்லாம் வடிவாச் செய்தியா?” தான் பேச வந்ததை உடனேயே ஆரம்பிக்க முடியாமல் பரீட்சைகளைப் பற்றி விசாரித்தான்.

“ம், எப்பிடியும் போடர்லயாவது பாசாகிடுவன் எண்டு நினைக்கிறன்.” என்றவளை மெல்லிய அதிர்வுடன் பார்த்தான் சிசிர. அவள் முதல் மாணவியாக வருகிறவள் இல்லை என்றாலும் கெட்டிக்காரி. அப்படியானவளை என்ன செய்து வைத்திருக்கிறான்?

அவன் பார்வையை உணர்ந்தவளாய், “எனக்கும் கவலைதான். ஆனா, எக்ஸாம்ஸ் எழுத விடுவினமா எண்டுற பயத்திலேயே நாள் ஓடிட்டுது. பிறகும் படிச்சுப் பதிய வைக்கிற அளவுக்கு மைண்டும் ஃபிரீயா இல்ல. அடுத்த முறை இப்பிடி இருக்காது.” என்றாள் சமாதானமாக.

புரிகிறது என்பதுபோல் தலையசைத்துக் கேட்டுக்கொண்டவன் அவள் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்து, அவளுக்குத் தைரியமூட்டினான். அவனின் அந்தத் தொடுகை உடலோடு சேர்த்து உள்ளத்தையும் தொட, தானாகவே அவன் தோளில் தலை சாய்த்தாள் நிரல்யா. அவனும் அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டுத் தன்னுடன் சேர்த்து அணைக்க, “கமரா இருக்குமா?” என்று வேகமாக அவனிடமிருந்து விலகி, தம்மைச் சுற்றிப் பார்வையைச் சுழற்றினாள் நிரல்யா.

“இல்ல. அதான் அண்டைக்கும் இண்டைக்கும் உன்ன இங்க கூட்டிக்கொண்டு வந்தனான். ஆனா ஸ்டோர் ரூமுக்க இருக்கு.” மீண்டும் அவளைத் தன் தோளில் சாய்த்தபடி சொன்னான்.

அதன் பிறகுதான் இயல்பானாள். அன்று இதைப் பற்றியெல்லாம் அவள் யோசிக்கவோ, பயப்படவோ இல்லை. எதையும் யோசிக்காமல் அந்தந்த நிமிடத்தில் வாழ்ந்திருந்தாள். இனி அதெல்லாம் அமையாது. கண்ணோரங்கள் கரிக்க, அடைத்துக்கொண்டு வந்த தொண்டையை விழுங்கித் தன்னைச் சமாளிக்க முயன்றாள்.

இருவரிடமும் ஒரு அழுத்தமான மௌனம். இப்போது அவள் விரல்கள் அவனுடைய மற்றக் கரத்தின் விரல்களோடு கோர்ப்பதும் விரிப்பதுமாக இருந்தன. அவனும் தன் கையை அவளிடமே கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தான். கோர்த்த விரல்களை விடாமல் எடுத்துவந்து, அவன் புறங்கையில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தாள் அவள்.

அவன் திரும்பி அவள் முகம் பார்க்க, “இனி எப்பிடி உங்களைப் பாக்காம, உங்களோட கதைக்காம இருக்கப் போறன் எண்டு தெரியவே இல்ல சிசிர. பயமா இருக்கு. சொந்த வீட்டுக்குப் போகவே விருப்பம் இல்ல. அவேக்கும் நான் நல்ல மகளா நடக்கேல்ல எண்டு மனம் குத்துது. என்ன செய்யப் போறன், என்ன நடக்கப் போகுது எண்டு ஒண்டும் தெரியேல்ல.” என்றாள் பெரும் கலக்கத்துடன்.

அவனுக்கும் நெஞ்சு அடைக்கும் உணர்வு. இதற்கே இப்படிச் சொல்கிறவள் அவன் சொல்லப்போவதையும் கேட்டால்? மீண்டும் தன் அணைப்பை இறுக்கி, அவளுக்குத் தைரியம் கொடுக்க முயன்றபடி, “எல்லாம் சரியாகும் நிரா. நிறைய யோசிக்காத.” என்றான் இதமான குரலில்.

“சரியாகுமா? உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?” விழிகளை மாத்திரம் உயர்த்தி அவன் முகம் பார்த்து வினவினாள். அவள் மனத்தின் சஞ்சலத்தைக் கண்களில் படித்தவன், “சரியாகும். அதுக்குக் கொஞ்சக் காலம் எடுக்கும். அதுவரைக்கும் நாங்க பொறுமையா இருக்கோணும்.” என்றான் நம்பிக்கையாக.

ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுவிட்டு, “இனி நீங்க என்ன செய்யப் போறீங்க? என்னவோ கதைக்கோணும் எண்டு சொன்னீங்க.” என்று வினவினாள்.

அதைப் பேசத்தான் அழைத்து வந்தான். ஆனால்… ஒன்றும் சொல்லாமல் அவள் முகம் பார்த்தான்.

“என்ன, ஏன் என்னையே பாக்கிறீங்க?”

“அவசரப்படாம நான் சொல்லுறதப் பொறுமையாக் கேக்கோணும் நிரா.” என்றுவிட்டு, “அம்மா அப்பாவைப் பாக்கோணும், எங்களுக்கு எண்டு ஒரு வீடு சின்னதா எண்டாலும் சொந்தமாக் கட்டோணும், தங்கச்சிக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுக்கோணும் எண்டுறதெல்லாம் என்ர கடமை. அதை இஞ்ச (இங்கு) இருந்தாலும் நான் செய்வன்.” என்றதுமே அதிர்வுடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள். ‘இங்க இருந்தாலும்’ என்று அவன் சொன்னதன் பொருள் அவளுக்கு விளங்கவில்லை.

அவள் திகைப்பை உள்வாங்கியபடி, “ஆனா எங்களுக்காக, உனக்காக, நீ எனக்கு வேணும் எண்டுறதுக்காக மாஸ்டர் செய்ய லண்டனுக்குப் போவமோ எண்டு யோசிக்கிறன்.” என்றான் ஒருவிதத் தயக்கத்துடன்.

“அப்ப நான்?” விழுக்கென்று எழுந்து அமர்ந்துகொண்டு வினவியவளுக்கு மளுக்கென்று கண்ணீர் திரண்டு போயிற்று. இங்கும் அங்கும் என்று இருக்கப்போவதையே தாங்கிக்கொள்ள முடியாமல் அவள் தவித்துக்கொண்டிருக்க அவன் கடல் தாண்டிப் போகப் போகிறேன் என்கிறானே!

“நீ இங்க படி. நானும் அங்க ரெண்டு வருசம் படிச்சிட்டு, அடுத்த மூண்டு வருசம் அங்கயே வேல பாத்தா கெதியா முன்னுக்கு வந்திடலாம்.”

அவள் வேகமாக மறுத்துத் தலையசைத்தாள். “இல்ல. இங்க தனியா இருக்க என்னால ஏலாது. நீங்க சொன்ன அஞ்சு வருசத்த விட இன்னும் கூடுதலா ரெண்டு மூண்டு வருசம் எண்டாலும் நான் வெய்ட் பண்ணுறன். ஆனா நீங்க எங்கயும் போகாதீங்க. நீங்க இல்லாத நேரம் என்னை இங்க ஆருக்கும் கட்டிக் குடுத்திட்டா என்ன செய்வீங்க?” என்றாள் தவிப்புடன்.

“அப்பிடி நடக்காது நிரா. எப்பிடியும் படிப்பு முடியிற வரைக்கும் கலியாணம் பேச மாட்டினம். அதுவரைக்கும் எங்களுக்கு டைம் இருக்கு. அதுக்குப் பிறகு ஆக நெருக்கினா நீயும் மேல படிக்கப்போறன் எண்டு சொல்லு. நானும் நாட்டில இல்லை எண்டேக்க அவேக்குச் சந்தேகம் வராது.”

“அப்பிடி எப்பிடி நடக்காது எண்டு சொல்லுறீங்க? கலியாணத்தைக் கட்டிப்போட்டுப் படி எண்டு சொல்லிட்டா? உங்களால அவசரத்துக்கு வரவும் ஏலாது. அப்ப என்ர நிலைமையை யோசிச்சு பாருங்க.” அவளுக்குத் தாங்கவே முடியவில்லை. விழிகள் கலங்கின. தன்னைப் புரிந்துகொள்ள மாட்டானா என்று அவனைப் பார்த்தாள்.

“அப்பிடியெல்லாம் நடக்காது நிரா. நீயா ஏன் கண்டதையும் யோசிக்கிறாய்? நீ ஓம் எண்டு சொல்லாம வலுக்கட்டாயமாக் கட்டி வைப்பினம் எண்டு சொல்லுறியா?”

“உங்களுக்கு இன்னும் என்ர வீட்டு ஆக்களைப் பற்றித் தெரியேல்ல. இப்ப நான் இப்பிடி உங்களோட வந்து கதைச்சுக்கொண்டு இருக்கிறது தெரிய வந்தாலே என்ன நடக்கும் எண்டு சொல்லேலாது. இதில நீங்க வெளிநாட்டுக்குப் போகப்போறன் எண்டு சொல்லுறீங்க.” அவளுக்கு அவன் தன் நிலையை விளங்கிக்கொள்கிறான் இல்லையே என்பதில் மனம் சுணங்கிப் போயிற்று.

“எனக்கும் வேற என்ன செய்ய எண்டு தெரியேல்ல நிரா. உன்ர வீட்டில உன்னக் கேக்கிறதுக்கு எனக்கிருக்கிற ஒரே வழி இதுதான். நான் நல்ல நிலைக்கு வரவேணும். அப்பவும் நீதான் வேணும் எண்டு நிக்க வேணும். அப்பதான் அவேயும் உன்ன எனக்குத் தருவினம். இல்லையா நீயும் நானும் ஓடிப்போகோணும். அதுக்கு நீ வருவியா? இல்லை எல்லா? நானும் அந்த வேல பாக்க மாட்டன். முதல் ஏன் நாங்க ஓடிப் போக? அப்பிடி என்ன பிழை செய்தோம்? எல்லாத்தையும் சரியான முறையில அணுகலாம் நிரா. அதுவே எங்களில ஒரு நம்பிக்கையை வர வைக்கும். அதுக்கு நான் நல்ல நிலைக்கு வரோணும்.” என்றான் அவன் பொறுமையாக.

உண்மையைச் சொல்லப்போனால் அவன் செய்யப் போவது அவர்களின் சக்தியையும் மீறியது. முடியவே முடியாதது. ஆனால் அவன் பட்ட அவமானத்துக்கும் வாங்கிய அடிக்கும் மருந்து தேவையாய் இருந்தது. ஏதோ ஒரு வழியில் உயர்ந்து, அவர்களின் முன்னால் நிமிர்ந்து நின்று, தைரியமாக அவளைத் தரச்சொல்லிக் கேட்க வேண்டும். அதற்கு அவன் இதைச் செய்தேயாக வேண்டும்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“எல்லாம் சரி. எனக்கும் விளங்குது. அதுக்கு ஏன் வெளிநாட்டுக்குப் போக நிக்கிறீங்க. இங்க படிங்களன். நான்தான் எத்தின வருசம் எண்டாலும் வெய்ட் பண்ணுறன் எண்டு சொல்லுறேனே.” என்று கெஞ்சினாள் அவள்.

“நீ வெய்ட் பண்ணுவாய் சரி. உன்ர வீட்டிலயும் வெய்ட் பண்ணுவீனமா?”

“இல்லைதான். ஆனா எனக்குப் பயமா இருக்கே. தப்பித்தவறி என்னை ஆருக்கும் கட்டி வச்சிட்டா என்ன செய்வீங்க?” அவள் அதிலேயே நின்றாள்.

“நீ ஓம் எண்டு சொல்லாம அப்பிடி நடக்காது நிரா.”

“என்னை ஓம் எண்டு சொல்ல வச்சிட்டா? நான் விருப்பப்பட்டா சத்தியம் செய்து குடுத்தனான்? செய்ற நிலமைல என்னைக் கொண்டுவந்து நிப்பாட்டினவே. அப்பிடி ஒரு நிலைல நிப்பாட்டி ஓம் எண்டு சொல்ல வச்சிட்டா? ப்ளீஸ் சிசிர இது வேண்டாம். என்னால ஏலாது. உங்களை என்னட்ட இருந்து மொத்தமாப் பிரிச்சிடுவினமோ எண்டு பயமா இருக்கு.”

அவள் பயத்தில் இருக்கும் நியாயம் விளங்கினாலும் அவனுக்கும் வேறு வழி இருப்பதாய்த் தெரியவில்லை.

“ப்ளீஸ் மா என்னை விளங்கிக்கொள்ளு. நானும் ஆசைப்பட்டுக்கொண்டு போக நினைக்கேல்ல. உன்னப் பிரிஞ்சு இருக்க என்னாலயும் ஏலாது. வேற வழி இல்லாமத்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறன். இதுக்க நீயும் இப்பிடி அழுதா நான் என்ன செய்ய? ஒண்டு இப்பிடி ஏதாவது வெளிநாட்டுக்குப் போய்ப் படிச்சு, உழைச்சு, நல்ல நிலைக்கு வரவேணும். இல்லையா இப்பவே ஆருக்கும் சொல்லாமக் கலியாணம் செய்ய வேணும். அப்பிடி ஒண்டு நடந்தா நாங்களும் நல்லா வாழ ஏலாது. என்ர குடும்பமும் காலத்துக்கும் இப்பிடியேதான் இருக்கும். யோசிச்சுப் பாரு, என்னை நம்பிப் பெத்து வளத்த அம்மா அப்பாக்கு இதா நான் செய்றது? உன்ர குடும்பமும் மானம் மரியாதையோட வாழுற மனுசர். அவே எங்கட காதலை எதிர்த்தாலும் உன்னில் வச்சிருக்கிற பாசம் உண்மை. அதுக்கு நீ செய்யப்போற பதில் சொல்லாம கொள்ளாம கலியாணம் கட்டுறதா சொல்லு?”

“நீங்க என்ன சொன்னாலும் என்னால ஏலாது. பேசாம என்ன இப்பிடியே எங்கயாவது கூட்டிக்கொண்டு போங்க. அண்டைக்கு உங்களோட கதைச்ச பிறகு பிரிஞ்சு இருந்தாலும் பாக்க ஆசைப்பட்டா பாக்கலாம், ஒரு பிரச்சினை எண்டாலும் நீங்க வந்து நிப்பீங்க எண்டு நினைச்சன். ஆனா இப்ப பயமா இருக்கு. உண்மையா எனக்குப் பயமா இருக்கு.” என்று அழுதவளை ஒன்றும் சொல்லாமல் தன் மார்பில் சேர்த்துத் தட்டிக்கொடுத்தான்.

இவ்வளவு நேரம் சொல்லாததையா இனியும் சொல்லப் போகிறான்? அல்லது அவர்களுக்கு எது நல்லது என்று அவளுக்குத்தான் தெரியாதா? பயத்தில் இப்படி எல்லாம் சொல்கிறாள் என்று விளங்க, அவள் தன்னை நிதானப்படுத்திக்கொள்ளும் வரையிலும் தன் கையணைப்பிலேயே வைத்திருந்தான்.

“வேற வழியே இல்லையா?” அவன் நினைத்தது போலவே நிதர்சனம் அவளுக்கும் விளங்க, அடைத்த குரலில் வினவினாள்.

குனிந்து தன் கையணைப்பில் இருப்பவளைப் பார்த்தான் சிசிர. அழுத விழிகளும் சிவந்த முகமுமாக இருந்தவளைக் கண்டு அவன் உள்ளமும் கனத்துப் போயிற்று. அவள் கண்களைத் துடைத்து விட்டபடி, “இருந்தா நீயே சொல்லு. எனக்கும் போக விருப்பம் இல்ல நிரா.” என்றான் இயலாமையுடன்.

அவளுக்குத் தெரிந்த எல்லாவற்றையும்தான் சொல்லிவிட்டாளே!

“சும்மா இருந்தவளின்ர மனதைக் கலச்சு, காதலிக்க வச்சு, இப்ப தனியா விட்டுட்டுப் போகப்போறனே எண்டு தவிப்பா இருக்கு நிரா. வேற எப்பிடி நாங்க சேரலாம் எண்டு எவ்வளவு யோசிச்சாலும் எனக்கு எந்த வழியும் தெரியவே இல்ல. என்ன செய்ய நான்? ஏழையாப் பிறந்ததும் இல்லாம உங்கட வீட்டுக்குப் பிடிக்கவே பிடிக்காத இனத்தில பிறந்திட்டனே!” என்றவனின் குரலில் அப்பட்டமான கசப்பு. “எனக்கும் பயமாத்தான் இருக்கு நிரா. ஆனா ஒண்டும் நடக்காது எண்டு நம்புறன். நான் வாறவரைக்கும் எனக்காக இருப்பாய் தானே?” என்றவனின் குரல் கரகரத்துப் போயிற்று.

மனம் துடித்துவிட நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் நிரல்யா. அடர் நீல நிற விழிகள் இரண்டிலும் கண்ணீர் கோடாய்ப் படிந்திருக்க பதிலுக்காக அவளையே பார்த்திருந்தான் அவன். உருகிப்போனாள் அவள். அன்று ஒரு நாள் அவன் அடி வாங்கி அழுததே அவளுக்குப் போதும். இன்றுமா? அவன் கன்னங்கள் இரண்டையும் கைகளில் தாங்கி, அவன் விழிகளையே பார்த்து, “இஞ்ச(இங்க) என்ன நடந்தாலும் நான் சமாளிப்பன். நீங்க திரும்பி வாற வரைக்கும் உங்கட நிராவா, உங்களுக்காக வெய்ட் பண்ணிக்கொண்டு இருப்பன். நீங்க கவலைப்படாதீங்க. தைரியமாப் போயிற்று வாங்க.” என்றாள் குரல் கரகரக்க.

இமைக்காது அவளையே பார்த்தான் சிசிர. அழுகையில் துடிக்கும் இதழ்களை அடக்கி முறுவலிக்க முயன்றுகொண்டிருந்தாள் அவள். அடுத்தகணம் அவளை இழுத்து அணைத்து, முகமெங்கும் முத்தமிட்டான்.

அவன் நெஞ்சிலும் ஹோ என்று பெரும் இரைச்சல். அடர்ந்த காட்டினுள் யாருமற்று நிற்பதுபோல், இராட்சத அலையடிக்கும் கடலில் சிறு துரும்பு கூட இல்லாது தத்தளிப்பதுபோல் சொல்லத் தெரியவில்லை அவனுக்கு. உள்ளத்தை ஏதோ ஒரு பயம் போட்டு ஆட்டியது. இன்னுமின்னும் அவளை இறுக்கி அணைத்தான்.

எப்போதும் இப்படியான தருணங்களில் எல்லாம் வேகமாக விலகுகிறவள் இன்று தானும் ஒன்றினாள். அதுவே அவன் உணர்வுகளைத் திசை திருப்பிவிட்டன. அவன் உதடுகள் மெது மெதுவாய்க் கழுத்து, காது, கன்னம் என்று முன்னேறின. கன்னக் கதுப்பினுள் வந்து புதைந்தவன் அவளிடம் மறுப்பேதும் தெரிகிறதா என்று பார்த்தான். துடிக்கும் இதழ்கள் அவனிடம் வேறு சொல்லின. அதற்குமேல் அவன் தாமதிக்கவில்லை. இதழ்களோடு இதழ்களைச் சேர்த்தான். தன்னை மறந்து, வரப்போகிற பிரிவை மறந்து, விழிகளை மூடி அவள் இதழ்களில் லயித்துப்போனான்.

எவ்வளவு நேரமானதோ! அவளின் மறுப்பற்ற இசைவில் மனம் நிறைய மெல்ல அவளை விடுவித்தான். அப்போதும் அவள் விலகவில்லை. உதட்டோரம் சின்ன சிரிப்பில் துடிக்க, மீண்டும் அவள் இதழ்களில் தன் உதடுகளை அழுத்தி ஒற்றி எடுத்துவிட்டு அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். உணர்வுகள் ஒரு நிலைக்கு வரப் போராடின.

அவளும் அவனை உணர்ந்திருக்க வேண்டும். தன்னிடமிருந்து அவனை விலக்காமல் மெல்ல அவன் கேசத்துக்குள் கைகளை நுழைத்துக் கோதிக் கொடுத்தாள்.

அவளின் இணக்கமான அந்தச் செய்கை அவனை ஆற்றுப் படுத்தியது. மெல்ல அவன் விலகியபோது அவள் பார்வை சிறு சிரிப்புடன் அவனை அளவிட முயன்றது. இலேசாகச் சிவந்துவிட்ட முகத்துடன் அவளைப் பாராமல் தள்ளி அமர்ந்தான்.

அவள் உதட்டோரச் சிரிப்பு விரிந்து போயிற்று. “பரவாயில்ல. கொஞ்சம் திடமான மனது இருக்குத்தான் உங்களுக்கு!” என்றாள் அவன் நெஞ்சில் தட்டி.

முகத்தைத் திருப்பி, உதட்டைக் கடித்துச் சிரிப்பை அடக்க முயன்றபடி, கேசத்தை இரு கைகளாலும் கோதிக் கொடுத்தான் சிசிர. அவள் வேண்டுமென்றே அவன் முகத்தை நெருங்கி வந்து கூர்ந்து பார்க்கவும், “என்ன பார்வை? தந்தது போதாதா?” என்று கேட்டு, வேண்டுமென்றே அவள் முகம் பற்றித் தன்னிடம் இழுக்கப் பார்த்தான் அவன். விழுந்தடித்துக்கொண்டு தள்ளி அமர்ந்து அவனை முறைத்தாள் நிரல்யா.

சத்தமாய்ச் சிரித்தான் சிசிர. “அந்தப் பயம் இருக்கோணும். அத விட்டுட்டு வந்திட்டா சேட்டை விட்டுக்கொண்டு!” என்றவன் இப்போது முற்றிலுமாக இயல்புக்குத் திரும்பி இருந்தான்.

நேரமாகியிருந்தது. வரவிருக்கும் பிரிவை மறந்து மகிழ்ந்திருந்தது மறைய, மனத்தினுள் மீண்டும் பாரமேறிற்று. ஒருவர் மற்றவரிடம் தம் மனத்தைக் காட்டிக்கொள்ளாமல் எழுந்து புறப்படத் தயாராகினர்.

“எதிர்பாத்து இருக்காத. முடிஞ்சா போக முதல் வந்து பாத்திட்டுப் போறன்.”

“இல்ல வேண்டாம்.” என்று உடனேயே மறுத்துச் சொன்னாள் நிரல்யா. “உங்களைப் போகச் சொல்லுறதுக்கு இப்ப இருக்கிற தைரியம் திரும்ப எனக்கு வருமா தெரியாது. நீங்க வர வேண்டாம். கவனமாப் போயிற்று வாங்க. எப்ப போறீங்க, என்ன ஏது எண்டு சரண்யாட்ட சொல்லி விடுங்க. அவள் எனக்குச் சொல்லுவாள்.” அவன் பார்வையைச் சந்திக்காமல் குரல் கமரச் சொன்னாள்.

அது அவன் மனத்தைத் தொட, அவள் முகம் நிமிர்த்தி, கண்களுக்குள் பார்த்து, “இது எல்லாமே உனக்காக. நீ எனக்கு வேணும் எண்டுறதுக்காக. உனக்கு விளங்குதுதானே?” என்றான் கனிந்த குரலில்.

ஆம் என்று தலையசைத்தவளை மீண்டுமொருமுறை இறுக்கி அணைத்து விடுவித்தான். மீண்டும் உடைந்தாள் அவள். அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “திரும்ப எத்தின வருசத்துக்குப் பிறகு பாக்கப் போறமோ தெரியா. அதுவரைக்கும் கவனமா இருங்க. உங்களுக்காக ஒருத்தி காத்துக்கொண்டே இருக்கிறா எண்டுறதை மறந்துடாதீங்க. அண்டைக்குச் சொன்னதுதான். நீங்க எனக்கு வேணும்! நான் வாழுற காலம் வரைக்கும் வேணும்! எண்டைக்கும் என்னை விட்டுடாதீங்க!” என்றவள் அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்து, அவனைப் பிரிய முடியாமல் கதறித் துடிக்கும் இதயத்தைச் சற்றே ஆற்றிவிட்டு விலகினாள்.

காலம் தம்மைச் சேர்த்துவைக்கும் என்கிற நம்பிக்கையோடு.
இருவரும் அவரவர் பாதையில் பிரிந்து சென்றனர்.

தொடரும்...


இந்தக் கதை உங்களுக்கு எப்பிடி எண்டு தெரிய இல்ல. ஆனா ஒவ்வொரு எபியும் என்னை நல்லா வச்சு செய்யுது. திரும்ப வாசிக்க இல்ல. நாளைக்கு நானும் கோப்பியுமா வந்து வாசிச்சுப் பார்த்து எடிட் பண்ணுறேன். எப்பிடி இருக்கு என்று சொல்லுங்க.

லைக்கிட்டு கருத்திடும் அனைவருக்கும் நன்றி.

(இதைத்தான் போன எபில ஒரு துண்டு எழுத இல்லை எண்டு சொன்னேன். அது பாத்தா ஒரு அத்தியாயம் அளவுக்குப் பெருசா வந்து நிக்குது.)
 
Status
Not open for further replies.
Top Bottom