• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதே - 17

STN - 71

Member
Staff member
அத்தியாயம் - 17


"ஒரு மின்சாரம் பார்வையின்



வேகம் வேகம் உன்னோடு



நான் கண்டுகொண்டேன்



ஒரு பெண்ணோடு



தோன்றிடும் தாபம் தாபம்



என்னோடு நான் கண்டுகொண்டேன்



என்னை மறந்துவிட்டேன்..



இந்த உலகத்தில் நானில்லை நானில்லை



உன்னை இழந்துவிட்டால்..



எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை



இது கனவா இல்லை நினைவா



என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்



உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்



கண்ணாளனே



எனது கண்ணை நேற்றோடு காணவில்லை



என் கண்களை பறித்துக்கொண்டு



ஏனின்னும் பேசவில்லை



ஆளான ஒரு சேதி அறியாமலே



அலைபாயும் சிறு பேதை நானோ



உன் பேரும் என் பேரும் தொியாமலே



உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ



வாய் பேசவே வாய்ப்பில்லையே



வலி தீர வழி என்னவோ"



அவள் பாடத் தொடங்கிய முதல் வரியிலிருந்தே கௌதமிற்குள் ஆச்சரியம் ஆரம்பமாகிவிட்டது. போகப் போக அவளது குரலின் இனிமையிலும் ராகத்திலும் அவன் முற்றிலும் மலைத்துப் போனான். பவித்ராவின் குரலில் இவ்வளவு நளினமும், வசீகரமும் இருக்கும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. பாட்டின் ஒவ்வொரு வரியும் அந்த அறையின் அமைதியைக் கலைத்து, அவனது மனதிற்குள் ஏதோ ஒரு மாயாஜாலத்தைச் செய்தது. 'கண்ணாளனே...' என்று அவள் உருகிப் பாடிய தருணத்தில், கௌதம் அவளது குரலில் மொத்தமாகக் கிறங்கி, மயங்கியே போய்விட்டவன், அவள் பாடி முடித்ததும், தன்னை மறந்து அத்தனை உற்சாகத்தோடு கை தட்டினான்.



"சான்ஸே இல்லை பவித்ரா! செம வாய்ஸ்... நீ பேசாம ஒரு ப்ரொஃபெஷனல் சிங்கர் ஆகிடலாம்!" என்று அவன் மனதாரப் பாராட்டிட, அவனது அந்தப் பாராட்டில் பவித்ராவின் கன்னங்கள் வெட்கத்தால் மேலும் சிவந்தன. போர்வைக்குள் தன் முகத்தைச் சற்றே சுருக்கிக் கொண்டவள், "ரொம்பப் புகழாதீங்க! அடுத்து உங்க டர்ன் நீங்கதான் பாடணும்," என்றாள் தன் கள்ளப் புன்னகையை மறைத்தபடி.



"எனக்கு பாடத் தெரியாதே, ஸோ, நீயே இன்னோரு ஒரு பாட்டு பாடு," என்று அவளது தேன் குரலை மீண்டும் கேட்கும் ஆவலில் கௌதம் கூறிட, "அதெல்லாம் முடியாதுங்க... நான் பாடிட்டேன்ல? இப்போ நீங்கதான் கண்டிப்பா பாடணும்," என்று அவள் செல்லமாய் அடம் பிடிக்க, அவளது அந்த அன்பான கட்டாயத்தை அவனால் மீற முடியவில்லை. "சரி சரி இரு," என்றவன், படுக்கையில் சற்றே நேராக அமர்ந்து, தனக்குத் தெரிந்த பாடல்களைப் பற்றித் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டவன், தன் கரகரப்பான கம்பீரக் குரலில், அவளது விழிகளை நேருக்கு நேராகப் பார்த்து,..

"வார்த்தை தேவையில்லை


வாழும் காலம் வரை


பாவை பார்வை மொழி


பேசுமே


நேற்று தேவை இல்லை


நாளை தேவையில்லை


இன்று இந்த நொடி போதுமே


வேரின்றி விதையின்றி


விண் தூவும் மழை இன்றி


இது என்ன இவன் தோட்டம்


பூப்பூக்குதே


வாள் இன்றி போர் இன்றி


வலிக்கின்ற யுத்தம் இன்றி


இது என்ன இவனுக்குள்


என்னை வெல்லுதே


இதயம் முழுதும் இருக்கும்


இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்


இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்


அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்


பூந்தளிரே.."


அவன் பாடி முடிக்க, பவித்ராவிற்கு வியப்பில் வார்த்தைகளே வரவில்லை. அவனுக்குள் இப்படி ஒரு அழகான குரலா? எப்போதுமே கம்பீரமாக இருக்கும் அவனது குரலில், இவ்வளவு மென்மையும் காதலும் குழைந்து வரும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனது பாடும் திறனைக் கண்டு அவள் அப்படியே மலைத்துப் போய் அமர்ந்திருந்தாள்.


"என்னாச்சு பவித்ரா? எப்படி இருந்தது?" என்று அவன் மென்னகையுடன் வினவ,.. "ரொம்ப நல்லா இருந்ததுங்க! நீங்களும் பேசாம ஒரு சிங்கர் ஆகிடலாம்," என்று அவன் தனக்கு கூறிய புகழ்ச்சியையே அவளும் அவனுக்குத் திருப்பிக் கூறினாள்..


"ம்ம்... அப்போ ரெண்டு பேரும் சேர்ந்தே ஒரு டூயட் சிங்கர்ஸ் ஆகிடலாமா?" என்று அவன் விளையாட்டாகக் கேட்க, அவளும் அவனது விளையாட்டைப் புரிந்து கொண்டு உதட்டோரம் அரும்பிய புன்னகையுடன் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.


சற்று நேரம் அங்கு நிலவிய அந்த மெல்லிய சிரிப்பொலிக்குப் பிறகு, கௌதமின் முகம் சட்டென்று ஒரு ஆழமான அமைதிக்கு மாறிட.. "ஓகே... விளையாட்டெல்லாம் போதும். இப்போ நம்மள பத்தி பேசலாமா?" என்று வினவ,.. 'இப்போது நம்மைப் பற்றி என்ன பேசப் போகிறார்?' என்ற ஒரு சிறு தவிப்பும் படபடப்பும் தொற்றிக் கொண்டாலும்,.. தன் நெஞ்சுக்குள் எழுந்த நடுக்கத்தை மறைத்து, "ம்ம்..." என்று மெல்லத் தலையசைக்க, அவளது பதட்டத்தைப் போக்க நினைத்தவன் போல, அவளது மென்மையான கரத்தைத் தன் கைகளுக்குள் மெல்லப் பற்றிக் கொண்டவன்..


"இதுவரை நான் உன்கிட்ட இதைக் கேட்டதே இல்லை பவித்ரா... ஆனா, இப்போ கேட்கணும்னு தோணுது," என்றவன், அவளது விழிகளுக்குள் தன் விழிகளை ஆழப் பதித்து, "என்னை உனக்கு பிடிச்சிருக்கா பவித்ரா?" என்றான் தன் காந்தக் குரலில்.


அவனது அந்த ஆழமான பார்வையும், அந்த வினாவில் இருந்த உரிமையும் அவளுக்குள் லேசான வெட்கத்தைத் தூவ,.. அதற்கு மேல் அவனது கண்களைப் பார்க்க முடியாமல், "ம்ம்..." என்றாள் தன் தலையைக் குனிந்து கொண்டு.


"ம்ம் னா?" என்று அவன் வேண்டுமென்றே அவளது வாயால் கேட்கும் ஆசையில் மீண்டும் வினவ,.. அவளும் அவனது பிடிவாதத்திற்குத் தோற்று, "பிடிச்சிருக்கு..." என்றாள் மிக மெல்லிய குரலில்.


அவளது ஒப்புதல் அவனுக்குள் ஒரு பேரானந்தத்தைத் தர, தன் அடுத்த எல்லையைத் தொட அனுமதி கேட்பது போல, "ஸோ... ஷால் ஐ கிவ் யூ அ கிஸ்? " என்று அவன் கேட்க, அவளது முகத்திலோ வெட்கம் இன்னும் அலைமோதி தலை இன்னும் இன்னும் குனிந்து கொண்டது. அவள் வாயை திறந்து எதுவும் பேசவில்லை என்றாலும், அவளது அந்த மெளனமும், அவனிடமிருந்து தன் கையை விலக்கிக் கொள்ளாத தன்மையுமே அவனுக்கு முழு சம்மதத்தையும் வழங்கி இருந்தது.


அவளது சம்மதத்தை உணர்ந்த பின்னரும் அவன், அவசரப்பட்டு அவளது இதழ்களுக்கு செல்லவில்லை. தன் கைகளுக்குள் சிறைப்பட்டிருந்த அவளது அழகிய புறங்கையில், தன் இதழ்களைப் பதித்து மிக மென்மையாக முத்தமிட, அவனது மீசை முடிகள் அவளது மென்மையான தோலில் குத்திக் குறுகுறுக்க, அவன் தன் கரத்தில் கொடுத்த அந்த முத்தமே அவளுக்குள் ஒரு பிரம்மாண்ட சிலிர்ப்பை ஏற்படுத்தியது. வெட்கத்தின் உச்சத்திற்க்கே சென்றவள், அப்படியே தரைக்குள் புதைந்து விடலாம் என்று தோன்றும் அளவிற்குத் தடுமாறிப் போக, அதற்கு மேலும் அவன் முகத்தை பார்க்க முடியாமல், சட்டென்று பற்றியிருந்த அவனது பிடியிலிருந்து தனது கையை வேகமாக உருவிக் கொண்டவள், முகம் முழுக்கப் போர்வையால் நன்றாகப் போர்த்திக் கொண்டு, அவனுக்கு மறுபுறமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டாள். போர்வைக்குள்ளேயே அவளது இதயம் இப்போது நூறு கிலோமீட்டர் வேகத்தில் அடித்துக் கொண்டிருந்தது.


அவளது வெட்கம் அவனுக்கும் புரிய, அவளை அதற்கு மேல் அவன் தொந்தரவு செய்யவும் இல்லை. தனது தீண்டல் அவளுக்குப் பிடித்திருக்கிறது, அவளது கடந்த காலக் காயங்கள் மறைந்து இந்த மாற்றத்தை அவள் மனதார ரசிக்கிறாள், உள்வாங்கிக் கொள்கிறாள் என்ற எண்ணமே அவனுக்குள் அளவில்லா மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுத்திருந்தது. அவளது சம்மதம் கலந்த அந்த விலகலை ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொண்டவனும், மெல்லப் படுத்துக் கொண்டான்.


இருவரும் அதன் பிறகு எதுவும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும், அந்த தருணம் அவர்களுக்குள் ஒரு மௌனக் கவிதையைப் பாடிக்கொண்டிருந்தது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு பேரன்பும், காதலின் வெதுவெதுப்பும் அந்த அறையின் காற்றெங்கும் நிரம்பியிருந்தது. வெளியே கொடைக்கானலின் பனிக்காற்று ஜன்னல் கதவுகளை முட்டி மோதிக் கொண்டிருந்த வேளையில், உள்ளே இரு இதயங்களும் ஒன்றையொன்று முழுமையாகப் புரிந்து கொண்ட திருப்தியில், அந்த அழகான இரவின் அமைதியில் மெல்ல உறங்கிப் போயின.


அடுத்த நாள் காலை, கொடைக்கானலின் இதமான சூரிய வெளிச்சம் பனிமூட்டத்தை மெல்ல விலக்கியிருந்த நேரத்தில், பவித்ராவை ஒரு புகழ்பெற்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் கௌதம். அதுதான் கொடைக்கானலின் இதயப் பகுதியாக விளங்கும், கொடைக்கானல் லேக் மற்றும் அதை ஒட்டியிருக்கும் பசுமை நிறைந்த பிரையண்ட் பூங்கா..


நட்சத்திர வடிவில், மனிதர்களால் உருவாக்கப்பட்ட அந்தப் பிரம்மாண்ட ஏரியைச் சுற்றி, மரங்கள் சூழ்ந்த பாதையில் இருவரும் கைகோர்த்தபடி மெல்ல நடைபோட்டனர். ஏரியின் நீல நிற நீரில் சூரிய ஒளி பட்டுத் தெறிப்பதும், ஆங்காங்கே வண்ண வண்ணப் படகுகள் மிதந்து செல்வதும் பவித்ராவின் கண்களுக்குக் கொள்ளை அழகாகத் தெரிந்தன. பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கிய நூற்றுக்கணக்கான மலர்களைப் பார்த்ததும், அவளது முகம் மலர்ச்சியை வாரியிறைத்தது. கௌதம் தன் மொபைலை எடுத்து, அந்தப் பூக்களின் பின்னணியில் அவளை விதவிதமாகப் படம் பிடித்தான். ஆரம்பத்தில் கேமராவுக்கு முன்னால் கூச்சப்பட்டவள், பிறகு அவனோடு சேர்ந்து பல அழகான செல்ஃபிக்களையும், புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டாள்.


அவளது முகத்தில் தெரிந்த அந்த ஏகாந்த சந்தோஷம் கௌதமிற்குள் பெரும் நிம்மதியைத் தந்தது. வழியெங்கும் சுடச்சுட அவித்த சோளக்கதிர், மிளகாய்த்தூள் தூவிய மாங்காய் வில்லைகள், மற்றும் அன்னாசிப் பழத் துண்டுகள் என அவள் ஆசையாகக் கேட்ட அனைத்தையும் புன்னகையோடு வாங்கித் தந்தான் அவன்.


காலையில் பன்னிரெண்டு மணிக்கு ஆரம்பித்த அவர்களின் இந்த சுற்றல், மதிய உணவிற்காக ஒரு நல்ல ஹோட்டலில் சிறிது நேரம் நின்றதைத் தவிர, மாலை ஐந்து மணி வரை இடைவிடாமல் தொடர்ந்தது. பவித்ராவின் கலகலப்பான பேச்சிலும், அவளது கள்ளமில்லாச் சிரிப்பிலும் மயங்கியிருந்த கௌதமிற்கு, அந்த நாளை விடுத்து அறைக்குத் திரும்பவே மனமில்லை.


மாலை நேரம் நெருங்க நெருங்க, பனிக்காற்று மீண்டும் உடலைத் தீண்டத் தொடங்கியது. அப்போது, தூரத்தில் தர்பூசணி விற்கும் கடையை பார்த்த பவித்ரா, "எனக்கு தர்பூசணி வேணும்" என்று ஆசையாகக் கேட்க,.. "சரி, நீ உட்கார்ந்திரு. நான் போய் வாங்கிட்டு வந்திடறேன்," என்று அவளை மட்டும் ஒரு பாதுகாப்பான இடத்தில் அமர வைத்துவிட்டு, கௌதம் தர்பூசணி வாங்க சென்றான்.


அவள் ஆசைப்பட்டபடியே தர்பூசணித் துண்டுகளை வாங்கிக் கொண்டு, சில நிமிடங்களில் திரும்பி வந்தவன், தூரத்திலிருந்து அவளைப் பார்த்தபோதே அவனது நெற்றி சுருங்கியது. கைகளில் இருந்த தர்பூசணித் தட்டு அப்படியே நின்றது. சில நிமிடங்களுக்கு முன்னால் மழலை மாறாமல் சிரித்துக் கொண்டிருந்த பவித்ராவின் முகத்தில், இப்போது ஒருவித பயமும் விவரிக்க முடியாத கலவரமும் அப்பட்டமாகத் தெரிந்தன. அவளது உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருப்பது தூரத்திலிருந்தே அவனுக்குத் தெரிந்தது.


சட்டென்று அவளருகே வந்தவன்,.. "பவித்ரா!" என்று பதற்றத்துடன் அழைக்க, அந்தக் குரல் கேட்ட அடுத்த கணம், எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பவித்ரா, திடுக்கிட்டுத் திரும்பி, பாய்ந்து வந்து கௌதமின் புஜத்தை தன் இரு கரங்களாலும் இறுகக் கட்டிக் கொண்டாள்.


அவளது இந்தத் திடீர் மனநிலை அவனுக்கு கொஞ்சமும் புரியவில்லை. நெஞ்சில் பயம் கலந்த படபடப்புடன், "பவித்ரா... என்னாச்சு?" என்று வினவ,
அவள் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவளது கண்கள் கலங்கி, கண்ணீர் முட்ட, 'அங்கே' என்பது போல ஏரியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நோக்கித் தன் விரலைக் காட்டினாள். கௌதம் அவள் காட்டிய திசையை உற்றுப் பார்க்க,. அங்கே சில சுற்றுலாப் பயணிகள் சாதாரணமாக வந்து போய்க் கொண்டிருந்தார்களே தவிர, பயப்படும்படியாக அவனுக்கு விசித்திரமாக எதுவும் தெரியவில்லை.


"அங்கே என்ன பவித்ரா? யாராவது உன்கிட்ட வம்பு பண்ணாங்களா? என்ன விஷயம்னு சொல்லு," என்று அவன் குரலை உயர்த்தி வினவிட,
அவளோ அதற்கு பதில் கூறாமல் அவனது சட்டையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, "ரூமுக்கு போலாம்... ப்ளீஸ்..." என்று அழுகை முட்டிய குரலில் கெஞ்சினாள்.


அவளது இந்தத் திடீர் நடத்தையின் காரணம் புரியாமல் குழம்பிப் போனவன், அவளது தற்போதைய நிலைக்கு அவளிடம் மேலும் கேட்டு வற்புறுத்துவது சரியாக இருக்காது என்று எண்ணி, தர்பூசணியை அங்கேயே போட்டுவிட்டு, அவளைத் தன்பக்கமாய் அணைத்தபடி காரை நோக்கி அழைத்துச் சென்றான்.


வரும்போது காரில் பாட்டுப் பாடிக்கொண்டும், கௌதமைக் கிண்டல் செய்து கொண்டும் கலகலப்பாக வந்தவளோ, இப்போது காரின் ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்தபடி மௌனமாக வந்தாள். அவளது முகத்தில் இருந்த பூரிப்பு மறைந்து, ஒருவித ஆழமான பயமும் பதற்றமும் மட்டுமே எஞ்சியிருந்தன.


காரை ஓட்டிக் கொண்டே அவளது முகத்தையே கவனித்தபடி வந்த கௌதம், "என்னாச்சு பவித்ரா? அங்கே யாரைப் பார்த்த? ஏன் இப்படி அமைதியா இருக்க? என்கிட்ட சொல்லு," என்று திரும்பத் திரும்பக் கேட்டுப் பார்த்தான்.


ஆனால், அவளது உதடுகளிலிருந்து, "ரூமுக்கு போலாம்..." என்ற ஒற்றை வாக்கியம் மட்டும்தான் பலவீனமாக வெளிவந்தது. அவளது பிடிவாதத்தையும், உள்ளுக்குள் இருக்கும் தவிப்பையும் உணர்ந்த கௌதம், 'சரி, ரூமுக்கு போய் நிதானமாகப் பேசிக் கொள்ளலாம்' என்று முடிவெடுத்து, காரின் வேகத்தை அதிகரித்து ரிசார்ட்டை நோக்கித் திருப்பினான்...

 
Top Bottom