• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உலா வரும் வெண்ணிலா - 21

Vishakini

Moderator
Staff member

உலா வரும் வெண்ணிலா

அத்தியாயம் 21

அத்தனை அத்தனை ஆத்திரம் அதிரன் பெற்றவர்கள் மேல். அவமரியாதையை பொறுக்க முடியாமல் அதிரனை விட்டுக் கொடுத்து வந்துவிட்டவளுக்கு அவ்வளவு எளிதில் அவனை விட முடியும் என்று நினைக்க கூட முடியவில்லை.

காதலுக்கும் குடும்பத்திற்கும் இடையில் மனம் தள்ளாட, பலபல சிந்தனைகளுக்கு பிறகு தான் அதிரனுக்கு அழைத்தாள்.

அவனிடம் சென்று சரணடைவதை போல தான் தோன்றியது. ஆனாலும் அவனன்றி யாரிடம் செல்ல என்று கூட அந்த நிலையில் தோன்றவில்லை.

இதோ நான்கு தொடர் அழைப்புகள் அனைத்தும் அவன் கவனத்துக்கு அப்பால் விழ, மனம் துவண்டு கண்ணீர் வடிய அந்த பூங்காவில் அமர்ந்திருந்தாள் அஞ்சனா.

அவனின் புன்னகை முகமும் எதையும் எளிதாய் எண்ணி எதற்கும் பெரிதாய் முகபாவம் காட்டி இராத தன்மையும் என தன்னிடம் காதலை கேட்டு நின்றவனை அத்தனை தேடியது அவள் மனம்.

இனி அடுத்து என்ன? அவன் வந்து என்ன செய்வான்? பெற்றோரை சாடுவானா இல்லை ஏன் என்னிடம் கூறாமல் வீட்டிற்கு சென்றாய் என தன்னிடம் சண்டை இடுவானா இல்லை பெற்றோர் சொல் கேட்டு அவனுமே தன்னை வேண்டாம் என விட்டுவிடுவானா என எண்ணங்கள் முழுதும் அதிரனிடம் இருக்க, துவண்டு போன முகத்துடன் எழுந்து வெளி வந்தாள்.

ஒரு மணி நேரம் சென்றதே தெரியவில்லை. இடையில் கண்ணன் அத்தனை முறை அழைத்தாலும் அவன் அழைப்பை அஞ்சனா ஏற்கவே இல்லை.

பெற்றவளையும் சகோதரனையும் தான் தானே அந்த நிலையில் நிற்க வைத்து விட்டோம் எனும் கவலை, கூடவே யாருக்காக சென்றாளோ அவனை வேண்டாம் என்றுவிட்ட மனதின் கலக்கம், அடுத்து அதிரனின் முடிவு என்னவாய் இருக்கும் என ஒருவித பயம் என ஒருநிலையில் முழுதாய் இல்லை அவள்.

நீண்ட நேரமாய் தங்கைக்கு அழைத்துப் பார்த்து காணாமல் தேடி வந்துவிட்டான் கண்ணன்.

பூங்காவை விட்டு வெளியே வந்தவளை கண்டுவிட்ட கண்ணன் நிம்மதி பெருமூச்சைவிட, அடுத்த நொடிக்கெல்லாம் சாலையை கடந்தவளை லாரி இடித்து தள்ளி வெகுதூரத்தில் தூக்கி வீசப்பட்டிருந்தாள் அஞ்சனா.

சில நொடிகள் மொத்தமாய் மூளையும் இதயமும் தன் வேலையை நிறுத்தி இருந்தது கண்ணனுக்கு.

அதிர்ச்சியில் நின்றுவிட்ட மூச்சு சில நொடிகளில் விடுபட, "அஞ்சனா!" என்ற பெருங்குரலோடு ஓடி வந்தான் தங்கையிடம்.

ரத்தவெள்ளத்தில் கிடந்தவள் பிழைக்கும் வாய்ப்பு கூட இல்லை என்பது தான் அங்கிருந்தவர்களின் பேச்சு சத்தமும் கூக்குரலுமாய் இருந்தது.

அவளைக் கட்டிக் கொண்டு தலையில் அடித்து அழுதவன் கோலம் கண்டவர்கள் காட்சியில் இருந்து இமியளவும் மறப்பதற்கு இல்லை.

ஆம்புலன்ஸ் வந்து அஞ்சனாவை ஏற்றி செல்ல, கண்ணன் உடன் செல்ல, ஒரு மணி நேரம் கழித்தே ராஜேஸ்வரிக்கு தகவல் சென்றது.

தலையில் பலத்த அடி. கைகால்களில் எல்லாம் வடிந்தோடும் ரத்தம்.

திரும்பி தங்களிடம் வருவாளா எனும் வேண்டுதலோடு பசி தண்ணீர் தூக்கம் மறந்து நான்கு நாட்கள் அவர்கள் பட்ட கஷ்டம் எல்லாம் எந்த ஒரு மனிதனும் அனுபவிக்க கூடாதது தான்.

அந்த நான்கு நாட்களுக்கு பின் தான் அவளால் உயிர் வாழ முடியம் என்ற நிலையில் தலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

வேண்டாத கடவுள் இல்லை. கடவுளின் ஜெபத்தை தவிர வேறு எந்த வார்த்தையும் இல்லை என ராஜேஸ்வரி மகளுக்காக அவள் இருக்கும் அறையின் வெளியிலேயே தவமாய் தவமிருந்தார்.

அறுவை சிகிச்சை முடிந்துமே நாற்பத்து எட்டு மணி நேர கெடு கொடுத்து அப்பொழுதும் அவள் எழாமல் அஞ்சனா ஒரு பக்கம் இருக்க, உயிரோடு செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தது என்னவோ கண்ணனும் ராஜேஸ்வரியும் தான்.

அத்தனை போராட்டங்களையும் தான் மீண்டு வந்தவள் தான் அதிரன் என்றவனோடு தன் கடந்த காலத்தை மறந்து எதுவும் அறியா பிள்ளையாய் பூமியில் கண் விழித்திருந்தாள்.

எந்த ஒரு விதத்திலும் அவளுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது. அவளை தனியே விட கூடாது. அதிக நேரம் சிந்திக்க கூடாது என பலவித கண்டிப்புகள்.

அவள் பிழைத்ததே போதும் என்பதாய் தான் நினைத்துக் கொள்ள வேண்டிய நிலை. ராஜேஸ்வரி சொல்படி ஊரை விட்டு அனைத்தையும் விட்டு அங்கிருந்து குடிபெயர்ந்து இப்பொழுது இருக்கும் இடம் வந்து சேர்ந்திருந்தனர்.

மூன்று மாதங்கள் முழுதாய் ஆகியிருந்தது குடும்பத்திற்கு ஓரளவு மீண்டு ஆசுவாசம் அடைவதற்கு.

அஞ்சனாவிற்கு விபத்து நடந்த ஐந்தாம் நாள் காலை தான் அதிரன் மும்பையில் இருந்து வீடு திரும்பி இருந்தார்.

அங்கிருந்த நாட்களில் கொஞ்சமும் நேரம் கிடைக்காத அளவுக்கு வேலைகளும் சுங்கவரி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையும் என இரவு மட்டுமே அவனுக்கான நேரங்களாய் அமைந்தது.

அதுவும் அத்தனை வெயிலில் அலைந்து திரிந்து என சோர்வாய் வருபவன் அன்னை தந்தைக்கு கூட அழைத்து பேசியதில்லை. இங்கிருக்கும் நிலையை அவன் அலுவலகத்திற்கு அழைத்து சொல்லிவிடுபவன் மறக்காமல் அஞ்சனாவிற்கு அழைப்பு கொடுக்க தான் செய்தான்.

பூங்காவில் இருந்து அஞ்சனா அத்தனை முறை அழைப்பு கொடுத்திருக்க, தொடர்ந்து வந்திருந்த அவளின் அத்தனை அழைப்புகளை புருவங்கள் சுருங்கப் பார்த்து மீண்டும் மீண்டும் அழைத்து பார்த்திருந்தான்.

தொடர்பு கிடைக்கவே இல்லை. கண்ணனுக்கு அழைத்தால் முழு அழைப்பும் சென்று நின்றுவிடும். அதையும் பெரிதாய் எடுத்துக் கொள்ளாத அதிரன் அங்கிருந்த வேலையை முடித்து கொடுத்து கிளம்பி வந்து முதலில் சென்றது அஞ்சனாவைக் காண தான்.

பூட்டிய வீடு வரவேற்க, எங்கும் யாரிடமும் சரியான பதில் இல்லை. அது அஞ்சனா மருத்துவமனையில் இருந்த தருணங்கள். அது கூட அவன் செவிகளுக்கு வந்திருக்கவில்லை.

கண்ணன் நினைத்தால் அதிரனிடம் பேசியிருக்க முடியும். ஆனால் பேசவில்லை. பேச முடியவில்லை. அஞ்சனாவை காப்பற்றும் போராட்டத்தில் அவன் இருக்க, நடந்த எதையும் தெளிவுப்படுத்தி அவனிடம் புரிய வைக்க தெம்பும் தைரியமும் இல்லை.

எதுவும் புரியாமல் அதிரன் தான் குழம்பி தேடித் தவித்தான். முழுதாய் பதினைந்து நாட்கள் மருத்துவவாசம் முடிந்து அஞ்சனாவோடு வீடு திரும்பிய கண்ணன் குடும்பம் அடுத்த ஒரு வாரத்தில் எல்லாம் வீட்டையே காலி செய்திருந்தனர்.

அதிரனுடன் பேசிவிடவே கூடாது எனும் எண்ணத்தில் தான் கண்ணன் அவனிடம் பேசாமல் இருக்க, அதிரனால் அப்படி இருக்க முடியாதே. அவனுக்கு நண்பன் வேண்டும். அஞ்சனா தான் அவனின் உலகம்.

தேடி அலைந்து திரும்பத் திரும்ப அழைத்து என கண்ணனை தொடர்பு கொள்ளவே அதிரனுக்கு ஆறு மாதங்கள் ஓடி இருந்தது.

அத்தனை கோபம் கண்ணன் மேலும் தன்னை இப்படி தவிக்க விட்டு சொல்லாமல் ஊரைவிட்டு சென்ற தன் உயிரான அஞ்சனா மேலும்.

தான் என்ன தவறு செய்துவிட்டேன் என தெரிந்து கொள்ளவே மீண்டும் மீண்டும் முயன்று கண்ணனை கண்டுபிடித்திருந்தான்.

அவனிடம் பேசி உண்மையை தெரிந்து கொண்டபின் மொத்த உயிரும் உறைந்து தான் போனது அதிரனுக்கு.

தன்னால் தான் அவளுக்கு இந்த நிலை என்ற செய்தியை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

"ஏன் டா இப்படி பண்ணின? வேண்டாம் வேண்டாம்னு சொன்னேனே! என்ன ஆச்சுன்னு பார்த்தியா? உன்கிட்ட பேசவே கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனாலும் முடியல டா அதி. ஆனா திரும்ப மட்டும் எங்க வாழ்க்கைகுள்ள வந்துடாத. அதுவும் உன் அம்மா அப்பா பேசின பேச்சுக்கு...." என்றவன் முகம் ஆத்திரத்தில் சிவந்தது.

"அஞ்சனா நீ வேண்டாம்னு சொன்னது சொன்னதாவே இருக்கட்டும். இத்தோட இதை விட்டுடு. உன் அம்மா அப்பா சொல்றதை கேட்டு அவங்களோட இருந்துக்கோ!" என அறிவுரைகளை கண்ணன் வழங்கி இருக்க, எதுவும் அதிரன் கவனத்தை அடையவே இல்லை.

நடந்த அனைத்தையுமே சொல்லி இருந்தான். அஞ்சனாவின் நிலை முதற்கொண்டு.

அடுத்த ஆறு மாதங்கள் முழுதாய் அவனுக்கு தேவைப்பட்டது தான் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய.

நிச்சயம் அன்னை தந்தையோடான வாழ்க்கையை அவன் தேர்ந்தெடுக்கவே இல்லை. அவர்களையும் சுற்றலில் தான் விட்டிருந்தான்.

அடுத்து தான் அஞ்சனா வேலை தேடி சென்றது. ஒரு வருடம் முடிந்து அடுத்த மூன்று மாதங்களில் அஞ்சனா இங்கே வேலைக்கு சேர்ந்திருந்தாள்.

அதன்பின் தான் அதிரன் அதை விலைக்கு வாங்கியதும் இங்கே அவனின் இருப்பு மாறியதும் என அவனின் மொத்தமும் அஞ்சனாவாகி அவளிடமே வந்து சேர்ந்திருந்தான்.

எத்தனையோ முறை அவளை பார்த்து மனம் துடித்தடங்கி தவித்து போய் நின்றிருக்க, கொஞ்சமும் தன்னை அடையாளம் தெரியாதவளை என்னவென்று சொல்ல அவனும்?.

நேரமும் காலமும் வரட்டுமே என அவனும் பொறுமையாய் கையாண்டு கொண்டிருக்க, ஹரிச்சந்திரன் வருகையும் தொடர்ந்து தாய் எழிலரசியின் வருகையும்.

இதில் தாமஸ் மட்டும் அஞ்சனா அதிரன் என யாரும் எதிர்பாராமல் எந்தவித எதிர்பார்ப்பின்றி கிடைத்த ஒரு நல்ல உள்ளம்.

அவன் மூலமே இப்பொழுது அஞ்சனா குழப்பத்திற்கு சென்று தலைவலி கொண்டு என மருத்துவமனை வரை வந்து என காலம் அதன் வேகத்தை கூட்டியிருந்தது.

அதிரன் பழைய நினைவுகளில் தன் வீட்டின் ஹாலில் வெறும் தரையில் வெறித்த பார்வையுடன் படுத்திருக்க, தாமஸிடம் இருந்து அழைப்பு.

"சொல்லு தாமஸ்!" என சோர்வாய் அழைப்பை ஏற்றான் அதிரன்.

"சார் அஞ்சனாவைப் பார்த்திங்களா?" என தாமஸ் கேட்க,

"ஹ்ம்! பார்த்தேன்!" என்றான் நினைவுகளை கண்களில் ஏந்தி.

"நான் இப்ப தான் சார் பார்த்தேன். என்கிட்ட பேசவே இல்லை. எப்படி இருக்கனு கேட்டதுக்கு சும்மா தலையை மட்டும் தான் ஆட்டினா. என்னவோ ரொம்ப டல்லா தெரிஞ்சா!" தாமஸ் சொல்ல,

"ஓவர் ஸ்ட்ரெஸ் எடுத்துகிட்டா போல தாமஸ். என்னை கூட ஏன் ஹாஸ்பிடல் வந்திங்கனு கேட்பானு நினைச்சேன். ஆனா கேட்கல. என்னவோ ஒரு பார்வை. சொல்ல தெரியல. ஆனா உயிரை உருக்கிடுச்சு அந்த லுக்!" என்றான் கண்களில் வலியுடனே.

"ஹ்ம் என்கிட்ட கூட பேசுவான்னு பார்த்துட்டு இருந்தேன். பேசவே இல்லை!" என்றான் தாமஸ்ஸும்.

"சரியாகிடும் தாமஸ். மெடிசின்ஸ் குடுத்திருக்காங்க. கம்பெனிக்கு கூட இப்ப வர வேண்டாம் ரெஸ்ட் எடுக்கட்டும்னு சொல்லி இருக்கேன்!" அதிரன் சொல்ல,

"பாவம் சார் நீங்களும் அஞ்சனாவும். அஞ்சனாவாச்சும் எல்லாத்தையும் மறந்துட்டு ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கா. ஆனா நீங்க..." என்றவன் அதிரனை எண்ணி வருந்த,

சில நொடிகள் தான் அதற்கு அதிரனிடம் மௌனம். "நீ ஏன் டா இவ்வளவு யோசிக்குற?" என சின்ன புன்னகை கொடுத்தவன்,

"ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம் தாமஸ். என்னை விட அஞ்சனா ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. எல்லாத்தையும் மறக்குறது என்ன அவ்வளவு ஈஸியா? அவ வலி அவளுக்கு தானே தெரியும்? இதை கடந்துட்டா எங்களுக்கான காலம் கிடைச்சிடும்னு ஒரு நம்பிக்கை" என்ற அதிரனுக்கு அதை இப்பொழுதே அனுபவித்தாக வேண்டுமாய் ஒரு தேடல்.


 
Top Bottom