உலா வரும் வெண்ணிலா
அத்தியாயம் 22
அதிகாலை ஐந்து மணி. அஞ்சனா ஹாலில் வந்து அமர்ந்திருக்க, அவளருகில் அமர்ந்திருந்தான் கண்ணன்.
"தூக்கம் வரலைண்ணா!" என்றதற்கு மேல் எதுவும் பேசவில்லை அவள்.
என்னவோ கடந்த நான்கு நாட்களாக அவள் அவளாய் இல்லை என்று பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான்.
"தலைவலி எதுவும்?" என்று கண்ணன் கேட்டதற்கும் இல்லை என்று தலையாட்டல் தான் அவளிடம்.
இப்படி அமைதியாய் இருப்பவள் இல்லை. எதாவது பேசி சிரித்து இல்லை கலந்தாலோசித்து என இது தான் அவளுடைய பழக்கங்களே.
பழைய நியாபகங்கள் இல்லை என்ற போதும் அதற்கு முன்பும் என எப்போதும் அவள் பேச்சுக்களில் மட்டும் வித்தியாசம் அவ்வளவு எளிதில் தெரிந்துவிடாது மற்றவர்களுக்கு.
இப்பொழுது அந்த தலைவலி வந்த நாள் முதல் இப்படி தான் அமைதியாய் இருக்கிறாள். கேட்பதற்கு மட்டுமே பதில் என்று இருக்கிறாள்.
அலைபேசி சத்தத்தில் கண்ணன் கலைய, இந்த நேரத்தில் யார் என்று அஞ்சனாவும் அதில் கவனத்தைக் கொண்டு வந்தாள்.
"அதி?" என்று ஆச்சர்யமாய் சொல்லிவிட்ட கண்ணன் சட்டென அஞ்சனாவை திரும்பிப் பார்க்க, அவள் கண்கள் முழுதும் அலைபேசியில் தான்.
"இதோ வர்றேன் டா!" என அவளிடம் சொல்லிவிட்டே தனியே சென்று அழைப்பை ஏற்றான் கண்ணன்.
"என்ன டா இந்த நேரத்துல?" கண்ணன் பதட்டம் கொண்டு கேட்க,
"சும்மா தான் தூக்கம் வரலை!" என்ற அதிரன் பதிலில் கண்ணன் முகத்தில் முறைப்பு வந்து அமர்ந்தது.
"நீ தூங்கிட்டு இருந்தியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?" அதிரன் கேட்க,
"இப்ப தான் எழுந்தேன். அஞ்சனா எழுந்து ஹால்ல வந்து உக்காந்திருக்கா" என்ற கண்ணன் முழுதாய் முடிக்கும் முன்,
"ஏன் டா. மறுபடியும் தலைவலியா? ஹாஸ்பிடல் போனுமா?" என அதிரன் வேகமாய் கேட்க,
"அதெல்லாம் எதுவும் இல்லை அதி!" என்றான் கனிவாய் கண்ணன்.
"பின்ன?"
"தெரியல. சும்மா தான் இருக்கா. ஆனா அமைதியா இருக்கா. கேட்டா தூக்கம் வரலைன்னு சொல்றா. சரினு நானும் பக்கத்துல உக்காந்திருக்கேன்!"
"காபி எதாவது போட்டு குடுக்கலாம் இல்ல?" என்ற அதிரன் கேள்வியில் கண்ணன் சிரித்துவிட,
"டேய்!" என முறைத்தவனுக்கும் சிரி சிரிப்பு தான்.
"சும்மா பக்கத்துல இருக்குறதுக்கு காபி போட்டா என்னனு கேட்டேன்!" என்றவன் விளக்கத்தில்,
"அதெல்லாம் எனக்கு வராதே டா. அம்மா இப்ப எந்திச்சுப்பாங்க. அதுவரை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க சார்!" என்றான் கண்ணனும் கிண்டல் குரலில்.
"அப்போ இன்னைக்கும் கம்பெனி வர மாட்டாளா?" அதிரன் கேட்க,
"தெரிலயே டா. ஆனா வர்ற மாதிரி தெரியல. எப்பவும் முந்தின நாளே ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சுப்பா. நேத்து எதுவும் ப்ரிப்பார் ஆகல. அதோட இப்ப தானே கொஞ்சம் பரவால்லமா இருக்குறா. அதனால வேண்டாம்னு தான் நானும் நினைச்சேன்!" என்றான் கண்ணனும்.
"இருக்கட்டும் கண்ணா. அவசரமில்லை. ஆனா பார்க்கணும்னு இருக்கு. அதுக்காக தான் கேட்டேன்" என்றவன் குரல் ஆழத்தில் அதன் தவிப்பினை உணர முடிந்தது.
"இன்னும் எத்தனை நாளைக்கு டா!" கண்ணன் கேட்க,
"நீ தான் சொல்லணும்" என்ற அதிரன்,
"அவளை தர்றேன்னு மட்டும் சொல்லு. மீதி நான் பார்த்துக்குறேன்!" என்றான்.
விளையாட்டாய் சொல்கிறானோ என்று நினைக்கும் முன் அது விளையட்டும் இல்லை நிஜமும் இப்போ என்று அவனாலேயே யூகிக்க முடிந்தது.
"ண்ணா!" என்ற அஞ்சனா குரலில் செல்கள் எல்லாம் விழித்துக் கொள்ள, அலைபேசியை காதோடு ஒட்டிக் கொண்டான் அவள் குரலை இன்னுமாய் கேட்டிடும் ஆர்வத்தில் அதிரன்.
"அஞ்சனா!" என கண்ணன் அழைக்க,
"இந்நேரத்துல என்ன? தூங்கலையா நீங்க?" என்றவள் குரலை சுவாசத்தில் நிரப்பிக் கொண்டிருந்தான் அதிரன்.
"பிரண்ட்கிட்ட பேசிட்டு இருந்தேன் டா. நீ போய் ரெஸ்ட் எடேன்!" என்றான் தங்கையிடம்.
"தூக்கம் வரலை ண்ணா. நீங்க வர்றிங்களா?" என்றவள் மென்மையான குரலில்,
"நீ போ கண்ணா" என்றான் அதிரன் அலைபேசியில்.
"வர்றேன் டா!" என தங்கையிடம் சொல்லிய கண்ணன்,
"நீ இந்நேரத்துல கூப்பிட்டிருக்க? என்னனு சொல்லலையே அதி?" என்றான் சத்தமின்றி கண்ணன் அதிரனிடம்.
"எனக்கும் தூக்கம் வரல. அய்யா அஞ்சனா என்ன பண்றானு கேட்க தான் கூப்பிட்டேன்!" என்றவன் பதிலில் என்ன சொல்வதென்று தெரியவில்லை கண்ணனுக்கும்.
"சரி அவ தேடுறா இல்ல. நீ போ. நான் அப்புறமா பேசுறேன்!" என்று வைத்துவிட்டான் அதிரன்.
இவர்களுக்கான காலம் சீக்கிரம் வர கூடாதா என கண்ணனும் கலங்கி தான் நின்றான் இருவருக்காகவுமே.
மீண்டும் அஞ்சனா அருகே சென்று அமர, அவளும் அமைதியாய் தான் இருந்தாள் சில நிமிடங்கள்.
"இப்ப பரவால்லைன்னா வேலைக்கு போய்ட்டு வாயேன் அஞ்சனா. உனக்கும் கொஞ்சம் சேஞ்சா இருக்கும்ல?" கண்ணன் கேட்க,
"நீங்க போகணுமா இன்னைக்கு?" என கேட்டவளை கேள்வியாய் பார்த்தான் கண்ணன்.
"கண்டிப்பா போனும்னு இல்ல அஞ்சனா. உனக்கு முடியலைன்னா சொல்லு லீவ் சொல்லிடுறேன். சொல்லு. உனக்கு என்ன பண்ணுது?" என்று கேட்டு அவள் தலையில் வாஞ்சையாய் கை வைக்க, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் அவள்.
"எனக்கு எதுவும் இப்போ இல்ல. ஆனா என்னவோ மாதிரி இருக்கு ண்ணா. நான் எங்கேயும் போகல!" அஞ்சனா சொல்ல,
"சரி ரெஸ்ட் எடு. சரியானதும் பார்த்துக்கலாம். நானும் கூடவே இருக்கேன்!" என்றான் கண்ணனும்.
ஆறை தாண்டி இருந்தது நேரம். அஞ்சனா என்னென்னவோ பேசிக் கொண்டிருக்க, கண்ணன் புரியாமல் தான் அமர்ந்திருந்தான்.
"ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க?" என எழுந்து வந்தார் ராஜேஸ்வரி.
"தூக்கம் வரலை ம்மா அதான் பேசிட்டு இருந்தோம்!" என கண்ணன் சொல்ல, அஞ்சனாவைக் கண்டார் அன்னை.
"காபி குடுங்க ம்மா. அவ அப்பவே எந்திச்சு உக்காந்துட்டு இருக்கா!" என்று சொல்லவும் வேகமாய் சமையலறை சென்றார் அவர்.
நீங்க போய் கிளம்புங்க ண்ணா!" என அவளே சொல்ல,
"நான் இன்னைக்கு உன்னோடவே இருக்கேன்!" என்றான் கண்ணன். என்னவோ சரி இல்லை என்றே தோன்றியது. என்னென்னவோ பேசி மனதில் எதையோ குழப்பி என அவள் முக வாட்டத்தில் தான் கூறினான்.
"அதெல்லாம் வேண்டாம். நானே சும்மா தான் இருக்கேன். நீங்க போய்ட்டு வாங்க! நான் பக்கத்துல கோவிலுக்கு போறேன்!" என்றவள் எழுந்து கொண்டாள்.
கண்ணன் அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை அவள் சொல்வதை செய்து கிளம்பி வர, அஞ்சனாவும் கோவிலுக்கு கிளம்ப தயாராகி இருந்தாள்.
அவளை அழைத்து செல்வதாய் சொல்லி அஞ்சனாவுடன் வெளிவந்தவன் தாமஸ்ஸைக் கண்டு கையசைக்க, அஞ்சனாவை பார்த்தபடி கண்ணனிடம் பேச்சு கொடுத்த தாமஸ் தானும் தயாராகி இருந்தான் கம்பெனிக்கு செல்ல.
"தலைவலி சரியாகிடுச்சா அஞ்சனா? கம்பெனிக்கா வர்ற?" என தாமஸ் கேட்க,
"கோவிலுக்கு போகணும் சொன்னா தாமஸ். அதான் அவளை ட்ராப் பண்ணிட்டு நான் ஆபீஸ் கிளம்பலாம்னு நிக்குறேன்!" என்று கண்ணன் சொல்லியவன் அஞ்சனாவைப் பார்க்க, அத்தனை மெல்லிதாய் ஒரு புன்னகையை மட்டும் கொடுத்தாள் தாமஸ்ஸிற்கு அஞ்சனா.
"நீ தாமஸ் கூட நடந்து போறியா அஞ்சனா? உனக்கு நேரம் போனதா இருக்குமே?" என கண்ணனே கேட்க,
"ஹ்ம் வா. அப்படியே கம்பெனி நிலவரம் என்னனு பேசிட்டு போலாம்!" என்று சிரித்தான் தாமஸ்ஸும்.
"சரி டா. பார்த்து!" என்ற கண்ணன் சென்றுவிட தாமஸ்ஸுடன் நடந்தாள் அஞ்சனா.
"இன்னும் சரியாகலையா? என்னவோ மாதிரி இருக்கியே!" என தாமஸ் கேட்க,
"இல்ல. இப்ப ஓகே தான்!" என அத்தனை சாதாரணமாய் அவள் பதில் கூறினாள்.
"நீ இல்லாம மதியம் சாப்பிடவே முடியல எனக்கும் அதிரன் சார்க்கும். சீக்கிரம் வா அஞ்சனா!" என சொல்லி சிரித்தவன் கம்பெனியில் நடப்பதை பேசியபடி வர, அஞ்சனா பெரிதாய் பேசவில்லை. அவன் சொல்வதை மட்டும் கேட்டபடி வந்தாள்.
"ரொம்ப டல்லா தெரியுற. வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு!" என்றான் தாமஸ் கோவில் அருகே வரவும்.
"தேங்க்ஸ்!" என்றவள் புன்னகைக்க,
"எனக்கா? பாரேன் நல்லா ஃபார்மலா எல்லாம் பேசுறியே?" என அதற்கும் கிண்டல் செய்து அவன் கிளம்பிவிட, அஞ்சனா கோவிலில் சாமி கும்பிட்டு ஓரிடத்தில் அமர்ந்துவிட்டாள்.
என்னவோ யோசனையாய் அமர்ந்திருந்தவள் முன் யாரோ தன்னை உற்றுப் பார்க்கும் பார்வை உள்ளுக்குள் உணர்வுகள் சொல்லி கொடுக்க, நிமிர்ந்து பார்த்தாள். எழிலரசி அத்தனை ஏளனமும் கோபமுமாய் அஞ்சனாவைப் பார்த்தபடி அவள்முன் அங்கே நின்றிருந்தார்.
தாமஸ் கம்பெனிக்கு வந்தவன் உள்ளே செல்லும் நேரம் அதிரனும் வர, அவனிடம் பேசியபடி இருவருமாய் உலல் சென்றனர்.
பேச்சுவாக்கில் அஞ்சனா உடன் வந்ததையும் கோவிலுக்கு அவள் சென்றதையும் தாமஸ் கூற, சட்டென்று உதித்த யோசனையோடு,
"ஓகே நீ இங்க பார்த்துக்கோ! இதோ வர்றேன்!" என வெளியில் கிளம்பிவிட்டான் அதிரன்.
"சார்!" என தாமஸ் புன்னகைக்க,
"டேய்!" என சின்னதாய் புன்னகைத்த அதிரன்,
"ஆமா சனாவைப் பார்க்க தான் போறேன். உனக்கு என்ன இப்ப?" என்றான் சிரித்தே.
"எனக்கு என்ன? நீங்க, உங்க சனா" என்று தாமஸ் இன்னும் கிண்டலாய் சிரிக்க,
"உனக்கு இருக்கு டா" என்று சொல்லிவிட்டு தான் சென்றான் அதிரன்.
அஞ்சனாவைப் பார்க்க வேண்டும் என ஏற்கனவே தோன்றிக் கொண்டே இருந்தது தான். இப்பொழுது அவள் கோவிலில் இருபது தெரிந்ததும் பார்க்க கிளம்பிவிட்டான்.
வெறுமெனே பார்க்க என்று மட்டும் தான் அவன் கிளம்பி வந்தது. ஆனால் நிகழ்ந்தது எல்லாம் தலைகீழ்.
அன்னையை அதிரன் கோவிலில் எதிர்பார்க்கவில்லை. அன்னையைக் கண்டு அதிரும்படியும் அங்கே எதுவும் நிகழவில்லை. ஆனாலும் அதிர்ந்தான். அதிரும்படி நிகழ்ந்தது. நிகழ்த்தினாள் அஞ்சனா.
மொத்த உயிரும் உறைந்து போய் அங்கே நின்றான் அதிரன். இப்படி இறுதியாய் அவன் செயலற்று நின்றது அஞ்சனாவின் நிலையை கண்ணன் சொல்லிய தினம் தான்.
அதன்பின் அன்னை தந்தையை காண கூட பிடிக்காமல் தன் வீட்டுப் பக்கமே செல்லாமல் தனக்காக தன் அஞ்சனாவிற்காக என யோசித்து யோசித்து ஒவ்வொன்றையும் செய்து இன்று அவள் முன் அவளின் காதலை பிச்சையாய் எனினும் வாங்கிட தயாராய் நிற்க, இதோ அவன் தேவதை.
"உங்க பையனை உங்ககிட்டயே குடுத்துட்டு தானே வந்தேன்? கூட வச்சு காப்பாத்திக்க தெரியல? மறுபடியும் என்கிட்ட வந்து நிக்கிறீங்க என் பையனை குடுன்னு?" என்று எழிலரசியிடம் சண்டைக்கு எகிறிக் கொண்டு அஞ்சனா நிற்க, அருகில் வாயடைத்து நின்றிருந்தார் எழிலரசி.