• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு - 1

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 1


"பளார்" என்று கன்னத்தில் விழுந்த அறையில் அதிர்ந்து நின்றான் அந்த இளையவன். கிட்டத்தட்ட அவனுக்கு 15 வயது இருக்கலாம். கன்றிச் சிவந்த கன்னமும், கலங்கிய கண்களும் அவனுக்கு விழுந்த அறையின் வேகம் பலம் என்பதை காட்டியது.

தன்னருகில் இருந்த தோழியை இழுத்து, "இவள் வயதுக்கு வந்துவிட்டாளா என்பதை அறிந்து என்ன செய்யப்போகிறாய் நீ?" என்று கோபமாகக் கேட்ட ஓவியப்பாவையின் முகத்தைப் பார்க்கவே அவனுக்குப் பயமாக இருந்தது.

கறுப்பு நிற ரோஜா அவள். பன்னிரண்டே வயது நிரம்பிய நடமாடும் பூந்தோட்டம். இன்றோ புயலாக நின்றாள். அவளைப் பார்க்க அவளின் தோழி கண்மணிக்கே பயமாக இருந்தது.

"பாவை, வாடி போகலாம்..." என்றாள் ஓவியப்பாவையின் கைகளைப் பிடித்தபடி நடுங்கிய குரலில்.

கண்மணியைத் திரும்பிப் பார்த்து முறைத்தவள், அவனின் புறம் திரும்பினாள். அந்த இளையவனுக்கோ நண்பர்கள் முன் இப்படி அடித்துவிட்டாளே என்று அசிங்கமாக இருந்தது. போதாக்குறைக்கு பன்னிரண்டே வயதான சிறுமி தன்னை அடிப்பதா, தான் அவளைப் பார்த்துப் பயப்படுவதா என்று கொதித்தவன், அறை விழுந்ததில் கலங்கிய கண்களை விரித்து அவளை முறைத்து, "உன்னிடமா கேட்டேன். அவளிடம் தானே கேட்டேன்..." என்றான் கோபத்துடன்.

"ஓ… என்னிடமும் கேட்பாயா? கேட்டுப்பார்! அப்போது தெரியும். அவளிடம் கேட்டதனால் ஒரு அறையோடு விட்டேன். இதுவே என்னிடம் கேட்டிருக்க இன்றிலிருந்து நீ ஊமையாகி இருப்பாய்..." என்றாள் குறையாத கோபத்துடன்.

"போடி கறுப்பி கிழிப்பாய்! நீ என் நாக்கை அறுக்கும் வரை நான் பார்த்துக்கொண்டா இருப்பேன்..." நக்கலாகக் கேட்டவனிடம் அதைவிட நக்கலாக, "இப்போது உன்னை அறைந்தேனே, நீ என்ன கிழித்தாய் எருமை?" என்றாள் பாவை.

மலையகத்திலிருந்து வவுனியாவுக்கு வந்த பஸ்ஸிலிருந்து இறங்கிய ரவிவர்மனின் காதுகளில் இந்த "கறுப்பி" மற்றும் "எருமை" என்கிற சொற்கள் விழுந்தது. அதைக் கேட்டவன் முகம் கல்லாக இறுகியது. இறுகிய முகத்துடன் இவர்களின் புறமாக முகத்தைத் திருப்பியவனின் கண்களில் முகம் முழுக்கக் கோபத்துடன் திட்டிக் கொண்டிருந்த ஓவியப்பாவை விழுந்தாள்.

காரணம் இன்றியே அவனுக்கு அவளைப் பிடிக்காமல் போனது. என்ன பிள்ளைகள் இவர்கள். இந்தச் சின்ன வயதிலேயே இப்படி வாயடிக்கிறாள். வளர்ந்தால் எவ்வளவு வாயடிப்பாள். இப்போதே ஆண்களை மதிக்கக் காணோம். பிறகு? ச்சே… ச்சே… பெண்களா இதுகள். என்று அவன் சிந்தனை, ஒரு சிறு பெண்ணைப் பற்றி இப்படி நினைக்கிறோமே என்கிற எண்ணமின்றி, அவனை மீறிச் சென்றது. ஆனாலும் அந்த மாணவர்கள் நின்ற இடத்துக்கு அருகிலேயே சென்று நின்றுகொண்டான்.

அவன் பிறந்து வளர்ந்தது எல்லாமே இலங்கையின் அழகு கொஞ்சும் மலையகத்தில். இதுதான் முதன் முதலாக வவுனியா வருகிறான். அவன் அன்னைக்கு மலையக வாசம், தனிமை என்று சலிப்புத் தட்டவே வவுனியாவுக்கு குடி வரலாமா என்கிற எண்ணம் தோன்றியது.

மலையகத்தில் படிக்க முடிந்தாலும் வேலை வாய்ப்பு என்பது மற்றைய நகரங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவே. அதனால் அங்குப் படித்தாலும் வேலை என்று வருகையில் பலர் ஊர் மாறிவிடுவர். அப்படி மாறிய சிலர் வவுனியாவில் இருப்பதில், ஊர் மாறலாம் என்கிற எண்ணம் வந்தவுடன் தாய்க்கும் மகனுக்கும் நினைவில் தோன்றிய இடம் வவுனியாவே. இதற்கு, அவன் தாயின் தோழி காஞ்சனாவின் தூண்டுதலும் அதிகம். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வவுனியாவுக்கு வந்துவிடும்படி அழைத்துக்கொண்டே இருந்தார் அவர்.

வவுனியா அவர்களுக்குப் பொருந்துமா என்று பார்க்கவே, முதலில் தனியாக ரவிவர்மன் அங்கு வந்திருக்கிறான். அம்மாவின் நெருங்கிய தோழி காஞ்சனா குடும்பத்துடன் வவுனியாவில் வசிக்கிறார். அவரின் மகன் நந்தன் ரவிவர்மனின் நண்பனும் கூட.

மொத்தமாக இடம் மாறுவதற்கு முதலில், வீடு முதல் அடிப்படைத் தேவைகளை கவனிப்பதற்காக பஸ்ஸில் வந்து, வவுனியா பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, அங்கு நின்ற பள்ளி மாணவர்களின் இந்தப் பேச்சையே ரவிவர்மன் முதலில் கேட்டான். கேட்டவனுக்கோ கோபம் வந்தது. ஆனாலும் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு அமைதியாக நின்றான்.

பள்ளி முடிந்து பஸ்ஸில் செல்லும் பல பள்ளி மாணவர்கள் அங்குக் கூடுவதும் அவர்களுக்குள் எப்போதும் சிறு சிறு சலசலப்பு வருவதும் வழமை. ஆனால் இன்று அந்த மாணவர்களில் ஒருவனின் பேச்சு சற்று அதிக்கபடியாக மாறியதில் அவனை அறைந்துவிட்டாள் ஓவியப்பாவை. அதற்காக அவள் மரியாதை அற்ற பெண்குழந்தை அல்ல!



அவளுடன் நட்பாக, பாசமாகப் பழகுபவர்களுக்கு மிகவும் அருமையான சிறு பெண் அவள். பிழை என்று கண்டுவிட்டால் பயப்படாமல் தட்டியும் கேட்பாள். இன்றும் அதுவே நடந்தது. ஆனால் நடந்த விடயம் முழுதும் தெரியாத ரவிவர்மனுக்கு ஆண் பிள்ளைகளுடன் வாயடிக்கும் ஒரு பெண்ணாகவே அவள் தெரிந்தாள்.

பள்ளிப் பருவத்தில் இவை எல்லாம் சாதாரணம் என்பதை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு புத்தியற்றவன் அல்ல அவன். ஆனாலும் மனதின் சில நினைவுகள் அதனைச் சிந்திக்க விட மறுத்தது.

தன்னைப் பற்றி ஒருவர் தவறாகக் கணிப்பிடுவது தெரியாத அந்த அழகிய சிறுமலர், "என்னை முறைத்தது போதும், உங்கள் பஸ் வரும் இடத்துக்கு மரியாதையாகச் செல்லுங்கள்.." என்று அந்த மாணவர்களைப் பார்த்து அதட்டலாகவே சொன்னாள்.

அவளின் அறையிலும் அதட்டலிலும் கோபம் கொண்ட அந்த மாணவன் இவளை நோக்கி நகரவே, கையில் வட்டாரியை பிடித்துக்கொண்டாள் ஓவியப்பாவை. கிட்ட வந்தால் அவன் கையில் குத்திவிடும் எண்ணத்துடன். அப்போதுபார்த்து அந்த மாணவனின் பள்ளி ஆசிரியை ஒருவர் வர, மற்ற மாணவர்கள் அவனை "வாடா, மிஸ் வருகிறார்..." என்றபடி இழுத்துச்சென்றனர்.

"அடியே கறுப்பி உனக்கு நாளைக்கு இருக்கடி..." அந்த மாணவன் கோபத்தில் சொல்லவும், "போடா குரங்கு, நாளை விஷயத்தை நாளைக்குப் பார்ப்போம்.." என்றாள் ஓவியப்பாவையும்.

இதைக் கேட்ட ரவிவர்மனுக்குப் பொறுமை பறந்தது.

"என்ன பெண்பிள்ளை நீ? அறிவில்லை? அவனுடன் சரிக்குச் சமமாகச் சண்டை பிடிக்கிறாயே. கொஞ்சம் வாயடக்கத்தையும் கற்றுக்கொள்! நாளை அவன் உன்னை ஏதாவது செய்தால் என்ன செய்வாய்?" மெல்லிய குரலில் வார்த்தைகளைக் கடினமாகக் கோர்த்து அதட்டினான்.

திகைத்துப்போனாள் பாவை. சம்மந்தமே இல்லாமல் அருகில் நின்ற ஒருவர் தன்னைத் திட்டவும் அதிர்ந்தவள், "அவன் என்ன சொன்னான் என்று தெரியாமல் பேசாதீர்கள் அண்… அங்..." என்று திடமாக ஆரம்பித்தவளுக்கு, அவனை அண்ணா என்று கூப்பிடுவதா அல்லது அங்கிள் என்று கூப்பிடுவதா என்கிற சந்தேகம் வந்தது.

"அவன் என்ன சொன்னாலும் முதலில் நீ பெண்பிள்ளையாக அடக்க ஒடுக்கமாக இருக்கப் பழகு!" என்றவனின் பேச்சில், ஓவியப்பாவைக்கு கண்கள் கலங்கி அழுகை வந்துவிடும்போல் இருந்தது.

இவனைப் போன்ற வயதில் பெரியவர்கள் இதுவரை அவளைத் திட்டியது கிடையாது. ஏன் கடிந்துகொண்டது கூட இல்லை. சக மாணவ மாணவியருக்கு அவள் வாயாடியாக இருந்தாலும், பெரியவர்களுக்கு மரியாதை தெரிந்த அன்பான சிறு குழந்தையே.

இயல்பிலேயே மனத்திடம் உள்ளவள் என்பதால், அழுகையை அடக்கி, "நான் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்! என்னுடைய அம்மா என்னை நன்றாகத்தான் வளர்த்திருக்கிறார். நீங்கள் ஒன்றும் சொல்லத்தேவை இல்லை." என்றாள் அழுகுரலை திடமாகக் காட்டமுயன்றபடி.

"உன் அம்மாவின் வளர்ப்பின் திறத்தைத்தான் சற்று முன் பார்த்தேனே." என்றான் ஏளனமாக ரவிவர்மன்.

பாவைக்கு மனம் கொதித்தது. அவளுக்காகவே வாழும் அவளில் உயிரையே வைத்திருக்கும் அவளுடைய தாயை ஒருவர் குறையாகச் சொல்வதா?

வயதில் பெரியவன் என்பதால் கோபத்தை கட்டுப்படுத்தி, "அங்கிள்!" என்றாள் அழுத்தமான குரலில் அதட்டலாக.

அந்த அதட்டலான அங்கிள் என்கிற அழைப்பு, இத்தோடு நிறுத்து, என் அம்மாவைக் குறை சொல்லாதே என்கிற பல விடயங்களை அடக்கி வெளி வந்தது.

அவன் வேறு என்னவோ சொல்ல வரவும், இவர்களின் பஸ் வரவும் சரியாக இருந்தது. அதுவரை பயந்து நடுங்கிக்கொண்டு இருந்த கண்மணி, தங்கள் இருவரினதும் பள்ளி பாகைத் தானே சுமந்தபடி, " வாடி பாவை. பஸ் வந்துவிட்டது." என்று சொல்லி ஓவியப்பாவையை இழுத்துக்கொண்டு சென்றாள்.

அவளின் இழுவைக்கு இசைந்தபடி கண்மணியுடன் நடந்தாலும், பாவையின் கண்கள் ரவிவர்மனை முறைத்தது. ரவிவர்மனுக்கும் கோபம் வந்தது. ‘பார்வையை பார். வயதில் பெரியவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்றே தெரியாதவள்’ என்று மனதிலேயே புகைந்தான்.

நல்லதற்கு ஒன்று சொன்னால் கேட்கும் பழக்கம் இந்தப் பெண்களுக்கே இல்லை என்று புகைந்துகொண்டிருந்தவனின் அருகில், தனது காரைக் கொண்டுவந்து நிறுத்தினான் நந்தன்.

"வாடா ரவி. வருவதற்கு கொஞ்சம் பிந்திவிட்டதடா..." மன்னிப்புகுரலில் சொன்னவாறே இறங்கிய நந்தனை முறைத்த ரவிவர்மன், "எப்போதாவது நீ சொன்ன நேரத்திற்கு வந்திருக்கிறாயா? பிறகு எதற்குக் காரணம் சொல்கிறாய். காரை எடு!" என்றபடி உள்ளே ஏறினான்.

இவனின் இந்தச் சிடுசிடுப்பு பழகிய நந்தனும், "சிடு சிடுக்காவிட்டால் நீ ரவி இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, என் பழக்கத்தை மாற்றிக்கொண்டால் நான் நந்தன் இல்லை என்பதும்.." என்றவாறே காரை வீடு நோக்கிச் செலுத்தினான்.


பஸ்ஸில் சென்றுகொண்டிருந்த ஓவியப்பாவையின் மனது கலங்கி இருந்தது. அவளை அவன் சொன்னவை எல்லாம் மறந்துபோக, அவன் தன் தாயைக் குறையாகச் சொல்லிவிட்டானே என்று அந்தச் சின்ன இதயம் தவித்தது. அவளின் சகலதும் அவள் தாய். இன்றுவரை இறந்த தந்தையின் நினைவுகள் வராமல், அப்பா இல்லையே என்கிற குறை தெரியாமல் தன்னை வளர்ப்பவரைப் பற்றி ஒருவர் குறையாகச் சொல்லிவிட்டாரே என்று வருந்தினாள்.

பள்ளியால் வீட்டுக்கு வந்த மகளின் முகம் வாடி இருந்ததைப் பார்த்த கவிநயாவின் நெற்றி சுருங்கியது. எப்போதும் சிரிப்பும் நிமிர்வும் தவழும் முகம் அவள் மகளினது. சிறுவயதில், அழுதால் கூட அழகாய்த் தோன்றும் அவள் கண்ணின் மணியின் முகம் சோர்ந்து இருந்ததில் மனம் தவித்தபோதும் அதை வெளியே காட்டாது, "என்ன நடந்தது பாவை. முகம் சோர்ந்து தெரிகிறதே. உடம்பு சரியில்லையா உனக்கு?" என்று மென்மையாக இருந்தாலும் கம்பீரமாக வந்தது கவிநயாவின் குரல்.

தாயின் பரிவில் அழுகை வரவும், பள்ளி பாகை கீழே போட்டவள், தாயின் இடையை கட்டிப்பிடித்தபடி, "அம்மா, உங்களை ஒரு அங்கிள் பிழையாகச் சொல்லிவிட்டார். எனக்கு அவர் மீது நிறையக் கோபம். திட்டுவதற்குள் பஸ் வந்துவிட்டது. அவர் எப்படி என் அம்மாவைக் குற்றம் சாட்டலாம்." என்றவளின் அழுகை நிறைந்த ஆதங்கக் குரலில், கவிநயாவின் இதயம் ஒரு தடவை நின்று துடித்தது.

என்னைப் பற்றி இங்கு ஒருவருக்குதானே தெரியும். அவர் அப்படி எதுவும் பிழையாகச் சொல்லமாட்டாரே. பின்னே யார் என்னைப் பற்றித் தவறாகச் சொன்னது, எதைச் சொல்லி என் குழந்தையின் மனதை யார் வருத்தியது என்று மனதால் மருகியவள், அதைக் காட்டாது, "பாவை, இங்கே பார். முதலில் அழுகையை நிறுத்து, அம்மாக்கு அழுவது பிடிக்காது என்று உனக்குத் தெரியும் தானே! பிறகு என்ன அழுகை. எந்த விசயத்துக்கும் அழுகை தீர்வல்ல என்று உனக்குச் சொல்லியிருக்கிறேன் தானே. அழுவதை நிறுத்திவிட்டு முதலில் நடந்ததை சொல்லு!" என்று அதட்டினாள்.
 

Vishakini

Moderator
Staff member
தாயின் அதட்டலில் அழுகையை நிறுத்திக் கண்ணைத் துடைத்தவள், "எனக்கும் அழுவது பிடிக்காது. என் அம்மாவை யாரும் குற்றம் சொன்னால் எனக்கு அழுகை வரும்." என்று சலுகைக் குரலில் கூறியவள், பேருந்துத் தரிப்பிடத்தில் நடந்ததை சொன்னாள்.

அதைக் கேட்ட கவிநயாவுக்கு, ஒன்றுமில்லாததற்கு எதை எல்லாம் நினைத்துப் பயந்துவிட்டோம் என்று நினைத்ததும் ஒரு நொடி சிரிப்பு வந்துவிட்டது. ஆனாலும், மகளின் கலங்கிய முகம் செய்ய வேண்டியதை உணர்த்த, "உன் நல்லதற்கு தானே சொன்னார் பாவை அந்த அங்கிள். கொஞ்சம் கோபமாகச் சொல்லி இருக்கிறார். அவ்வளவுதானே! யார் நல்லது சொன்னாலும் நாம் அதைக் கேட்க வேண்டும் கண்ணம்மா." என்றாள்.

"அவர் எப்படி உங்களைப் பிழையாகச் சொல்லலாம்." என்று அப்போதும் சிணுங்கியவளை ஒரு வழியாகத் தேற்றி முடிப்பதற்குள் கவிநயாவுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

சமாதனாமாகி வீட்டின் உள்ளே சென்ற மகளைப் பார்த்த கவிக்கு, மகள் தன்மேல் உயிரையே வைத்திருக்கிறாளே என்று சந்தோசப்படுவதா அல்லது இப்படி சின்ன விசயத்துக்கே மனம் தடுமாறுகிறாளே என்று கவலைப்படுவதா என்றே தெரியாமல் இருந்தது. வளர வளரச் சரியாகிவிடுவாள் என்று மனதைத் தேற்றியவள் தன் வேலைகளைப் பார்க்கச் சென்றாள்.


*****


"வா வா! வாப்பா ரவி. எப்படி இருக்கிறாய்? சகுந்தலா நன்றாக இருக்கிறாளா?" ரவியை பார்த்த மகிழ்ச்சியுடன், அன்போடு வரவேற்ற காஞ்சனாவிடம், "நாங்கள் நன்றாக இருக்கிறோம் ஆண்ட்டி. நீங்களும் நலமா?" என்று விசாரித்தான் ரவி அன்போடு.

"எனக்கு என்ன ரவி, உன் மாமா, போதும் போதும் என்கிற அளவுக்குக் காசைச் சப்பாதிக்கிறார். நந்தா இருக்கிறான் ஊரைச் சுற்ற, வேலைக்கு ஆட்கள் இருக்கிறார்கள். எல்லாமே நன்றாக இருக்கிறது. ஆனால் பொழுதுதான் போவதில்லை, இனி அந்தக் குறையும் இல்லை. நீங்கள் இங்கு வந்துவிட்டால் எனக்கும் சகுந்தலாவுக்கும் நன்றாகப் பொழுது ஓடிவிடும். சகுந்தலா இங்கு வரப்போவதாகச் சொன்னவுடன் எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா? நான் உங்களுக்கு வீடே பார்த்துவிட்டேன். உனக்குப் பிடித்திருந்தால் வேண்டுவதுதான் வேலை." மகிழ்ச்சியில் அவரின் பேச்சு நிற்காமல் சென்றுகொண்டே இருந்தது.

சிறுவயது நட்பு, சொல்லில் வடிக்கமுடியா அற்புதம்! அது அடுத்த தலைமுறைக்கும் அமைவது என்பது வரம்! மலையகத்தில் முதலாம் வகுப்பில் ஆரம்பித்த நட்பு காஞ்சனாவினதும் சகுந்தலாவினதும். வவுனியாவை பிறப்பிடமாகக்கொண்ட கனகேந்திரத்துடன் காஞ்சனாவுக்கு திருமணம் நடந்தபோதும் நட்பை விடாது பற்றியவர்கள் இவர்கள் இருவரும். தோழிகளின் குழந்தைகளாக இணைந்த ரவியும் நந்தனுமே தோழர்களாகிப்போனது வரமல்லவா!

“அப்போ இன்றே வீட்டைப் பாத்துவிடலாமா ஆண்ட்டி?" ஆர்வத்துடன் கேட்டவனிடம், "பார்க்கலாம் ரவி, ஆனால் இப்போதேவா, உனக்குக் களைப்பாக இல்லையா?" என்று கேட்டார் காஞ்சனா.

"டேய்… என்னடா அவசரம்? கடமை கண்ணியம் என்று அலையாதே, நாளைக்கு வீடு பார்க்கலாம். அம்மா, முதலில் எனக்கும் அவனுக்கும் குடிப்பதற்கு எதையாவது கண்ணில் காட்டுங்கள்." என்றான் நந்தன், தாயிடம் சிறு கேலியுடன்.

"அட ஆமாம் நந்தா. எனக்கு ரவியைப் பார்த்த சந்தோசத்தில் எல்லாம் மறந்துவிட்டது, பொறு தேநீர் கொண்டு வருகிறேன்" என்றவர், மகனைச் செல்லமாக முறைத்து, "ரவிக்கு மட்டும்தான், உனக்கு இல்லை." என்றபடி சமையலறைக்குள் புகுந்தார்.

ரவியின் கேலிப்பார்வையில், பொய்யாக முறைத்தவன், "பெற்ற பிள்ளை எனக்கு இல்லை, அவனுக்கு மட்டுமா... பார்ப்போம் எப்படி அவன் குடிக்கிறான் என்று..." என்று தாயிடம் செல்லச் சண்டை இட்டவன், "அப்படி என்னதான்டா என் அம்மாவுக்கு மந்திரித்துவிட்டாய்....? நந்தா நந்தா என்று என் மேல் பாசமாக இருக்கும் அம்மா, உன்னைக் கண்டால் என்னை மறந்துவிடுவார்..." என்றான் பொய்யான பொறாமையுடன்.

ஏன் காஞ்சனா தன் மேல் பாசமாக இருக்கிறார் என்பதை நினைத்தவனின் முகம் மறுபடியும் இறுகியது. அப்போது நந்தன் கொழும்பில் தங்கி படித்துக்கொண்டிருந்தான். அதனால் அவனுக்கு எதுவுமே தெரியாது.

கனகேந்திரம் வேலை விசயமாக லண்டனுக்குச் சென்றுவிடவே, நந்தனும் அருகில் இல்லாததால், அப்போது காஞ்சனா மலையகத்துக்குச் சென்று சகுந்தலாவுடன் தங்கி இருந்தார். நந்தனிடம் எதையும் மறைக்கும் எண்ணம் ரவிக்கு இல்லை. ஆனால் அதை அவனிடம் சொல்வதற்கு என்றுகூட, நடந்ததை நினைப்பதற்கு அவன் விரும்பவில்லை.

இன்று அவன் மனதில், ஒரு மூலைக்குச் சென்றுவிட்ட விடயம்தான். ஆனாலும், ஏதாவது ஒரு நிகழ்வாவது, நடந்தவற்றின் சாயலை நினைவுபடுத்தத் தவறுவதில்லை அவனுக்கு. அப்படியான சம்பவமே இன்று மதியம் பஸ் தரிப்பிடத்திலும் நடந்தது.

என்றோ நடந்த தவறுகளை நினைப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை என்று பழைய நினைவுகளை ஒதுக்கியவன், நெடு நாட்களுக்குப் பிறகு சந்தித்த நண்பன் நந்தனுடன், அன்றைய பொழுதைச் சந்தோசமாகவே ஓட்டினான்.


அடுத்த நாள் காலைஎழுந்த பாவை, நேற்றைய மனதின் சஞ்சலங்களை மறந்தவளாக, எப்போதும் போலத் தாயின் சமையலுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துகொண்டிருந்தாள்.

சமையல் செய்வது கவிநயாவின் தொழில். இளம் வயதிலேயே, கணவன் இன்றித் தன் கையே தனக்குதவி என்பது போல், தான் செய்யும் சமையலையே தொழிலாக மாற்றி மகளைப் படிக்கவைத்தவர், கவியின் தாய் மரகதம். இன்று அதே தொழிலைத் தன் தொழிலாக மாற்றி, தன்னுடைய மகளைக் காப்பாற்றுகிறாள் கவிநயா.

ஆனால் கொஞ்சம் பெரிதாகச் செய்கிறாள். சிறுவர்பள்ளி முதல், வவுனியாவில் தங்கிப்படிக்கும் மாணவர்களுக்கு, சில விழாக்களுக்கென்று எப்படியான விசேசமாக இருந்தாலும், சுவையோடு சுத்தத்தையும் கலந்து அவள் சமைப்பதால், இருவர் மட்டுமேயான அந்தச் சிறிய குடும்பத்துக்குத் தேவையான அளவுக்கு மேலேயே சம்பாதிக்கிறாள் கவிநயா.

நான் கஷ்டபட்டாலும் என் பிள்ளை கஷ்டப்படக் கூடாது என்கிற எண்ணம் இல்லாமல், மகளுக்கும் முடிந்தவரை வேலைகளைப் பழக்கிவிட்டாள் கவிநயா. ஒரு காலத்தில் வாழ என்ன வழி என்று தவித்தபோது அவளுக்குச் சோறு போட்ட தொழில் அது. அதை மகளும் கற்றுக்கொள்வதில் சந்தோசமே அவளுக்கு.

பெண்ணாகப் பிறந்துவிட்டால், படித்திருந்தாலும் படிக்காவிட்டாலும் வாழ்வின் சோதனைக்கு ஏதோ ஒரு காலத்தில் உட்பட்டே ஆக வேண்டும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்துகொண்டவள் கவிநயா. அதனால் என்றாவது தன்னைப் போல என்ன செய்து பிழைக்கலாம் என்கிற நிலை, தன் மகளுக்கு வந்துவிடக் கூடாது என்பது அவளின் எண்ணம்.

மகள் நன்றாக வாழ வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும், நினைப்பவை எல்லாம் நடந்தா விடுகிறது. கவிக்கு இப்படியான நிலை வரும் என்று அவளின் அம்மா நினைத்துப் பார்த்திருப்பாரா என்று நினைத்தவள், மகளுக்குத் தன்னைப் போன்ற ஒரு நிலை வந்தால், அவள் வாழ்வதற்கு இந்தச் சமையல் வேலையாவது கைகொடுக்க வேண்டும் என்கிற எண்ணமே கவிநயாவுக்கு.

பன்னிரண்டு வயதிலேயே பக்குவமாக உதவி செய்யும் மகளின் பொறுப்பான குணம் எப்போதும் போல இப்போதும் மனதைக் குளிர்விக்க, பாசத்துடன் ஓவியப்பாவையைப் பார்த்திருந்தாள் கவிநயா.

சிறிது பொறுத்து, "போதும் பாவை, இனி நீ பள்ளிக்கு ஆயத்தமாகு, பிறகு பஸ்க்கு நேரமாகிவிடப்போகிறது.." என்ற கவிநயாவின் குரலில், மருந்துக்கும் பாசத்தின் சாரல் இல்லை. சிறிது கம்பீரமே இருந்தது. தன்னுடைய பாசமே மகளைப் பலவீனப்படுத்தக் கூடாது என்பது அவளின் எண்ணம். எந்த இடத்திலும் தன் மகள் நிமிர்ந்து நிற்க வேண்டும், துவண்டுவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பாள் அவள்.

அன்பைக் கூடக் கம்பீரமாகவே காட்டுவாள். அதை ஓவியப்பாவையுமே அறிவாள். அதனால்தான் அவளிடமும் ஒருவித கம்பீரம் எப்போதும் இருக்கும். தாய் சொன்னதும் பள்ளிக்குத் தயாரானவள், கண்மணியும் வரவே, "அம்மா, நான் பள்ளிக்குப் போய்வருகிறேன்..." என்று கூறிக் கிளம்பினாள்.

"போய்வருகிறோம் கவி ஆண்ட்டி..." என்றாள் கண்மணியும்.

"கவனமாகப் போய்வர வேண்டும் இருவரும். என்ற கவியின் சொல்லுக்கு, சம்மதமாகத் தலையை அசைத்தவர்கள் பஸ் வந்து நிற்கும் இடத்துக்குச் சென்றார்கள்.

"பயமாக இருக்கிறது பாவை. நேற்று அப்படிப் பேசியவன் இன்றும் ஏதும் செய்வானோ தெரியவில்லை.." என்ற கண்மணியை முறைத்தவள், "அவன் என்னடி செய்வான்? முதலில் இப்படிப் பயந்து நடுங்குவதை நிறுத்து மணி! என்னிடம் யாராவது இப்படிப் பேசுவார்களா? பேசினால் திருப்பிகொடுத்துவிடுவேன் என்று தெரியும். அதுவே நீ எல்லாவற்றிற்கும் பயப்படுவதால்தான் எல்லோரும் உன்னைக் கேலி செய்கிறார்கள். முதலில் உன் பயத்தைத் தூக்கி ஏதாவது குப்பைக் கூடையில் போடு!" என்றாள் பாவை.

"நான் எங்கேயடி பயப்படுகிறேன். அது தானாக வந்து என்னைப் பயப்படுத்துகிறது..." என்ற மணியை என்ன செய்யலாம் என்று முறைத்தவள், "உன்னைத் திருத்தமுடியாது போ..." என்றாள் சலிப்புடன்.

"ஆனாலும் நீ பயப்படாதே, அவன் எதுவும் செய்யமாட்டான். அப்படி இன்று ஏதாவது கதைத்தால் அவன் பள்ளி ஆசியரிடம் சொல்லலாம். அதனால் இந்தப் பேச்சை விடு மணி..." என்றவள், பள்ளியில் இன்று படிக்கவேண்டியவைகளைப் பேசி மணியின் மனதை மாற்றினாள்.

அவர்களின் பஸ் வரவும் அதில் ஏறியவர்கள், வவுனியா பேருந்து நிலையத்தில் இறங்கினார்கள். மணியின் கண்கள், நேற்று மிரட்டிய அந்த மாணவன் நிற்கிறானா என்று பயத்துடன் அந்த இடத்தையே அலசியது. அதைப் பார்த்த பாவை, அவளை முறைத்துவிட்டு, "இந்த இடத்தை வீடியோ எடுத்தது போதும், இப்போது நட..." என்று அவள் கையைப் பிடித்து இழுத்தபடி, மற்றைய அவர்களின் பள்ளித் தோழிகளுடன் இணைந்துகொண்டார்கள்.

எதையோ தோழிகளிடம் பேசியபடி வந்த ஓவியப்பாவையின் கண்களில், நேற்று அவளைத் திட்டிய அந்த அங்கிள் ஒரு காரில் அமர்ந்து இருப்பதும், அவரின் மிக மெல்லிய சிரிப்பும் கண்ணில் பட்டது.

அவனைப் பார்த்ததும் மனதில் சிறு அங்கலாய்ப்பு வந்தபோதும், தாய் சொன்னதுபோல, பொது இடத்தில்வைத்து ஒரு ஆண்பிள்ளையை அவள் திட்டியது தவறு என்பதால்தான், அவனும் கோபம் கொண்டு பேசினான் என்று இன்று புரிந்ததால், அவன் மீதான கோபம் அவளுக்குப் பெரிதும் குறைந்து இருந்தது. ஆமாம், குறைந்துதான் இருந்ததே தவிர முற்றாக மறைந்திருக்கவில்லை. என்ன இருந்தாலும் அவனின் பேச்சு சற்று அதிகமே என்கிற எண்ணம் அந்தச் சிறு பெண்ணுக்குத் தோன்றியது.

கோபத்தை பிடித்துவைக்கும் பழக்கம் இல்லாதவள் என்பதால், அவனை நன்றாகப் பார்த்தவளுக்கு மனதில் சொல்லமுடியாத ஒரு உணர்வு. அதைப் புரிந்துகொள்ளும் விதம் அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் தனக்கான ஏதோ ஒன்று அவனிடம் இருப்பதாகத் தோன்றியது. அவனின் முகம் அவளின் மனதில் அச்சுப்பிரதியாகப் பதிந்தது. பார்வைக்கு மறையும்வரை அவனைப் பார்த்தவளுக்கு, அவன் முகம் மறைந்ததும், 'அந்த அங்கிளை மறுபடியும் எப்போது பார்ப்போம்' என்று தோன்றியது.
 

Ananthi.C

Well-known member
வாவ் 😍😍😍😍😍😍... உங்கள் நாவல்களில் நான் வாசித்த முதல் நாவல்... அதுவும் புத்தகமாக கையில் வைத்து ஒரே மூச்சில் படித்து முடித்த கதை....
இன்றும் மறக்காமல் நெஞ்சில் நிறைந்த கதை...
மீண்டும் படிக்கும் சந்தர்ப்பத்தை தந்ததற்கு நன்றி நிதாம்மா 🥰🥰🥰
 
Top Bottom