• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு - 10

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-10


"அம்மா......" வீட்டிற்குள் வரும்போதே தாயை அழைத்தபடி வந்தாள் ஓவியப்பாவை.

நினைவுலகில் தேங்கிவிட்ட கவிக்கு பாவை அழைத்தது கேட்கவில்லை.

"அம்மா! அம்மா..? எங்கே இருக்கிறீர்கள்? அம்மா...??" அந்த வீட்டின் சிறிய விறாந்தையில் தாயைக் காணாது, சமையல் அறைக்குள் பார்த்தவள் அங்கும் இல்லை என்றவுடன், "அம்மா....." என்றபடி படுக்கை அறைக்குள் எட்டி பார்த்தாள்.

தாய் கட்டிலில் படுத்திருப்பதைப் பார்த்ததும் பாவையின் முகத்தில் கலவரம். இருட்டும் மாலை வேளையில் தாயை இப்படி அவள் பார்த்தது இல்லை.

"என்னம்மா? உடம்புக்கு ஏதுமா?" என்று பதட்டத்துடன் கேட்டவளின் பூக்கரங்களோ தாயின் நெற்றியை பரிசோதித்தது.

மகளின் ஸ்பரிசத்தில் உணர்வுக்கு வந்த கவி, "என்னது?? என்ன?" என்று விழுந்தடித்துக்கொண்டு எழுந்தாள்.

"என்னது என்னம்மா...? என்ன நடந்தது? எதற்கு அழுகிறீர்கள்..?" இப்போது பாவையின் குரலிலும் கலக்கம். விட்டால் அழுதுவிடுவாள் போலிருந்தாள்.

"அழுகிறேனா...?" சிறு வியப்புடன் கன்னங்களைத் தொட்டுப் பார்த்த கவிக்கு, தன்னுடைய இயலாமை கண்ணீராக வெளிவந்ததை நினைத்து வெறுப்பாக இருந்தது.

"நான் எதற்காக அழவேண்டும்.... என் செல்லக்குட்டி பாவை இருக்கையில்...ம்?" என்று, தன் மனதை மறைத்து மகளிடம் செல்லம் கொஞ்சினாள் அந்தத் தாய்.

"அதைத் தான் நானும் கேட்கிறேன். எதற்காக அழுதீர்கள்?"

மகளின் புத்திசாலித்தனமும் பிடிவாதமும் அறிந்தவள், "இல்லைடா. நான் அழவில்லை. இன்று வெயிலில் அலைந்ததில் தலை வலிப்பது போல் இருந்ததா.. அதனால் படுத்துவிட்டேன். கண்ணும் எரிந்தது. அது கண்ணீராக வந்திருக்கிறது போலும்..." என்றவள் மகள் தொடர்ந்து எதுவோ கேட்க வரவும்,

"அதைவிடு! உடை எல்லாம் அழுக்காக தெரிகிறதே மண்ணில் உருண்டு பிரண்டீர்களா....ம்?" என்று சிறு அதட்டலுடன் கேட்டாள்.

"அதம்மா.. அது.. ஓடிப்பிடித்து விளையாடினோமா.. மணி என்னைப் பிடித்து இழுத்தாளா.. நான் மண்ணில் விழுந்துவிட்டேன். அதனால் இப்படி ஆகிவிட்டது..." குனிந்து தன் சட்டையைப் பார்த்தபடி, தயக்கத்தோடு சொன்னாள்.

"என் வளர்ந்த செல்லம் இன்னும் குழந்தையாகவே இருக்கிறாளே..” என்று கவி சொன்னதுதான் தாமதம்,

"அம்மா...! நான் ஒன்றும் குழந்தை இல்லை.... வளர்ந்து விட்டேனாக்கும்...." என்று ரோசப்பட்டாள் அவள் பெண்!

பாசத்தோடு மகளின் தலையை வருடி, "ஆமாம், என் மகள் வளர்ந்துவிட்டாள். எனக்கு வேறு என்ன வேண்டும்?” என்ற கவி, அதை யாருக்குச் சொன்னாள்? அவளுக்கேவா அல்லது மகளுக்கா?

“சரிம்மா. நீ போய்க் குளித்துவிட்டு வா. பார் ஒரே அழுக்காக இருக்கிறாய்...." என்று கவி தொடர்ந்து சொல்லவும், பாவை குளிப்பதற்குச் சென்றாள்.

மகளைத் திசை திருப்பி அனுப்பிய கவிக்கு பெருமூச்சொன்று வெளியேறியது.

வேதனையில் வெந்து, அதை வெளியே காட்டாது மறைப்பதில் மனதாலேயே நொந்து, ஒருவழியாக அனைத்தையும் ஒதுக்கி, நிஜத்தை உணர்ந்து மகளுக்காக என்று வாழ ஆரம்பித்து மகிழ்ச்சியாக என்று இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழ்ந்து வந்தவளின் நிறைவை, மறுபடியும் அவள் முன்னால் வந்து நின்று ஒரே நிமிடத்தில் குலைத்துவிட்டானே...

தாலி என்கிற பெயரில் ஒன்றைக் கட்டி, சுழற்றிய பந்தை அலட்சியமாகத் தூக்கி எறிவது போல், என் வாழ்வை நாசம் செய்து என்னை நாதியற்றவள் ஆக்கி நடுவீதியில் கைவிட்டானே.. அவன் வெறி இன்னுமே அடங்கவில்லையா?

நான் செய்த பாவம் என்ன? அறியா வயதில் துடுக்காகப் பேசியதா? அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா...? சிட்டுக்குருவியாய் சுற்றித் திரிந்தவளை சுட்டுப் பொசுக்கியவனை கடவுள் தண்டிக்கவே மாட்டாரா?

சோதனைகளையும் வேதனைகளையும் தங்குவதற்கு ஒரு அளவு வேண்டாமா? ஓட ஓட விரட்டுகிறானே! ஒதுங்க ஒதுங்கக் கலைக்கிறானே. என் வாழ்வில் வசந்தம் என்பதே கிடையாதா....?

கழிவிரக்கம் தன்னையே தாக்கியதில், நெஞ்சே வெடித்துவிடும்போல் வலித்தது கவிக்கு. கண்களில் கண்ணீர் வழிய வலித்த நெஞ்சைத் தானே தடவியவள், நினைக்கக் கூடாது! நடந்துமுடிந்தவைகளை இனி நினைக்கவே கூடாது! என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

மகள் குளித்து முடித்தற்கான சத்தம் கேட்கவே கண்களை அழுத்தித் துடைத்துக்கொண்டாள். ஒதுக்கிய மனதின் குப்பைகள் ஒதுக்கியதாகவே இருக்கட்டும் என்று முடிவெடுத்து, தானும் முகம் கழுவச் சென்றாள் கவி.


தோட்டத்தில் இருந்து வீட்டினுள் சென்ற ரவி, "தலை வலிக்கிறது அம்மா. நான் கொஞ்சம் ஓய்வாகப் படுக்கப்போகிறேன். நந்தனின் அறைக்கு போகவா ஆன்ட்டி..." என்று தாயிடம் ஆரம்பித்து காஞ்சனாவிடம் கேட்டான்.

"இதை எல்லாமா கேட்பாய்? போ… போய் நன்றாகத் தூங்கு..." என்று அதட்டினார் காஞ்சனா.

"இரவில் முழித்திருந்து வேலை பார்க்காதே என்றால் கேட்டுவிடாதே. இப்போது தலைவலிக்கிறது என்கிறாய்..." என்று மகனை கடிந்த சகுந்தலா,
"தலைவலி மாத்திரை எதுவும் தரவா ரவி...?" என்று பரிவுடன் கேட்டார்.

"இல்லைமா. கொஞ்சம் கண் மூடிச் சாய்ந்திருந்தாலே போதும்."

"தேநீர் கொஞ்சம் குடித்து பார்க்கிறீர்களா ரவி? சுகமாக இருக்கும்...." இவர்களின் பேச்சைக் கேட்டவாறே வந்த தாரிகா கேட்டாள்.

அவளைப் பார்த்து இதமாகப் புன்னகைத்தவன், "எதுவும் வேண்டாம் தாரிகா. நான் கொஞ்சம் படுத்திருந்துவிட்டு வருகிறேன்..." என்று சொல்லிவிட்டு, நந்தனின் அறைக்குள் புகுந்துகொண்ட ரவி கூண்டுப்புலியாக நடைபோட்டான்.

அவன் போவதையே பாத்திருந்த சகுந்தலா, "இன்றே கல்யாண உடைகளை எடுத்துவிட்டால் மிகுதி வேலைகள் இலகுவாக இருக்கும் என்று பார்த்தால், இவன் தலை வலி என்று சொல்கிறானே...." என்றார்.

"எதற்கு சலித்துக்கொள்கிறாய் சக்கு. அவன் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வரட்டும். பிறகு போகலாம்..." என்று அவரைச் சமாதானப்படுத்தினார் காஞ்சனா.

"ம்.. சரிதான்..." என்றார் சகுந்தலா.

அறைக்குள் வந்த ரவிக்கு, மனதில் இருந்த புழுக்கம் தாங்கமுடியாது இருக்கவே, அணிந்திருந்த ஷர்ட்டின் கழுத்து பட்டன்களை கழட்டி ஷர்ட்டை பின்பக்கமாக இழுத்துவிட்டான். ஜன்னல் வழியே சில்லென்று வீசிய மாலை நேரக் காற்றுக் கூட அவனின் மனவெப்பத்தைப் போக்க முடியாமல் தோற்றுப்போனது!

இதுவரை வெளியே காட்டிய அமைதிவேஷம் கலைய அவனின் கண்கள் கோபத்தில் சிவந்தது. அந்தச் சிறுவயதில், புத்தி இல்லாமல் செய்த தவறை மனதிலிருந்து முற்றிலுமாக தூக்கிபோட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறான் அவன். அவளானாள் ஊருக்கு ஒரு பொய்க்கதையை சொல்லிவிட்டு, குடும்பம் குழந்தை என்று வாழ்கிறாளே.... இவளெல்லாம் ஒரு பெண்? சை!

ஆனால் ஒன்று! இதுவரை அவன் மனதில் இருந்த ஒருவித குற்ற உணர்வு குறைந்திருப்பதை உணரமுடிந்தது. இனியாவது அம்மா சொல்வது போல் தாரிகாவை மணமுடித்து நன்றாக வாழவேண்டும். அதுவும் அந்தக் கறுப்பிக்கு முன்னால் குடும்பம் குழந்தை என்று வாழ்ந்து காட்டவேண்டும். காட்டுகிறேன்! வாழ்ந்து காட்டுகிறேன்டி..! நீயே பொறாமைப் படும் அளவுக்கு வாழ்ந்து காட்டுகிறேன் என்று கருவியது அவன் மனது!

என்னதான் திட்டம் போட்டாலும் தான் எதிலேயோ தோற்றுவிட்டதாக தவிக்கும் மனதின் குமுறலை அடக்கமுடியவில்லை அவனால். அதற்கான காரணமும் பிடிபட மறுத்தது.

'என்ன வாழ்க்கையடா இது....' என்று சலித்தவனின் அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் நந்தன்.

வந்தவனின் பார்வையோ இவனையே கூர்ந்தது. அவன் கேட்க நினைப்பது புர்ந்தபோதும், "என்ன நந்தா...?” என்று கேட்டான் ரவி.

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, "சாந்தியும் தாரிகாவும் வவுனியா டவுனுக்கு உடைகள் எடுக்க போகபோகிறார்களாம், என்னையும் உன்னையும் வர சொன்னார்கள். வருகிறாயா?" என்று கேட்டவனின் குரலில், நீ வரவேண்டும் என்கிற கண்டிப்பு இருந்தது.

புரிந்தபோதும், "ச்சு, நான் வரவி......" என்று ஆரம்பித்தவனுக்கு, தனக்காக நிச்சயிக்கப்பட்டவளை எத்தனை நாளைக்கு தவிர்க்கமுடியும் என்கிற கேள்வி எழுந்தது. அதோடு சற்று முன் வாழ்ந்துகாட்டவேண்டும் என்று எடுத்த முடிவும் உந்த, "வருகிறேன்டா. தயாராகச்சொல்லி தாரிகாவிடம் சொல்லு. நான் குளித்துவிட்டு வருகிறேன்..." என்றான்.

ஏதோ ஒருவித பிடிவாதம் கலந்திருந்தது அவன் குரலில்.

மலர்ந்த முகத்துடன், "நான் சொல்லிவிடுகிறேன்.நீ விரைவாக வா....." என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினான் நந்தன்.

நந்தனும் சாந்தியும் கை கோர்த்துச் சிரித்துக் கதைத்தபடி முற்றத்தில் நிற்க, தாரிகா சோபாவில் அமர்ந்திருக்க, தயாராகி வெளியே வந்தான் ரவி.

அவனைக் கண்டதும் முகம் மலர ஓடிவந்து அவன் கையேடு தன் கையைக் கோர்த்துக்கொண்டாள் தாரிகா. கொஞ்சம் தடுமாறியபோதும், அவளிடம் மெல்லிய சிரிப்பொன்றைச் சிந்திவிட்டு தானும் அவள் கையை பிடித்துக்கொண்டான்.

அவர்கள் வருவதைக் கண்டதும், "போவோமா...." என்று நந்தன் கேட்க, "போகலாமே..." என்றாள் தாரிகா ராகமாக.

சாந்தியும் தாரிகாவும் நந்தனைப் பார்த்துக் கலகலத்துச் சிரிக்க,

"நக்கல்??" நக்கலாக நந்தன் கேட்க,

"இல்லை விக்கல்..!" என்றது சாந்தினி.

ரவி அமைதியாக வந்தாலும் இவர்களின் சீண்டல்களை ரசித்தபடியே வந்தான். தாரிகாவின் கலகலப்பு அவனுக்குப் பிடித்திருந்தது.

காரைப் பார்க் பண்ணிவிட்டு நால்வரும் மங்கையர் ஆடையகத்துக்குள் நுழைந்தனர்.

சாந்தியும் தாரிகாவும் ஆடைகளுக்குள் புதைந்துவிட, "இனிக் குண்டு விழுந்தால் கூட அசையமாட்டார்கள் ரவி...." என்ற நந்தன், "எடுத்து முடித்ததும் எங்களை கூப்பிடுங்கள்.வெளியே நிற்கிறோம்..." என்று பெண்களிடம் சொல்லிவிட்டு, ரவியோடு கடைக்கு வெளியே சென்றான்.

எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு அவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்துத்தான் ரவி வந்தான். ஆனால் அவனால் முடியவில்லை! இந்த இயலாமைக்கான காரணமும் புரியவில்லை!

செல்லரிப்பது போல் மனதின் ஓரத்தில் வலியொன்று முணுக் முணுக் என்று வலித்துக்கொண்டே இருந்தது.

பெண்களுடன் கலகலத்துக்கொண்டு வந்தாலும், ரவியை கவனித்துக்கொண்டுதான் இருந்தான் நந்தன்.

"உனக்கு என்னடா பிரச்சினை...?"

கடையின் வெளியே வந்ததும் எந்தவிதமான சுற்றி வளைப்பும் இன்றி நேரடியாகவே கேட்டான் நந்தன். எதிர்பார்த்த கேள்விதான். ஆனாலும் பதில் சொல்ல முடியவில்லை அவனால்..

நந்தனின் முகத்தைத் திரும்பிப் பார்த்தவன், எதுவும் பேசாமல் மறுபடியும் வீதியில் பார்வையைப் பதித்தான்.

"வாயைத் திறந்து சொல்லு ரவி! உனக்கு என்ன பிரச்சினை? இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லையா...? அப்படியும் தெரியவில்லையே...." என்றான் நந்தன்.

தானும் தாரிகாவும் கைகளைக் கோர்த்தபடி வந்ததைச் சொல்கிறான் என்று புரிந்தது. ஆனாலும் பேசாமலே நின்றான் ரவி.

"உனக்கு வேறு ஏதோ பிரச்சினை என்று நினைக்கிறேன்... வசந்தனை உனக்கு முதலே தெரியுமா...? அல்லது கவியைத் தெரியுமா...?" விடாமல் கேட்டான் நந்தன்.

பிரச்சினையின் ஆரம்பப் புள்ளியைத் தொட்டுவிட்ட நண்பனைத் திரும்பிப் பார்த்தவன் மெல்லிய சிரிப்பொன்றை மெச்சுதலோடு சிந்தினான்.

"பல்லைக் காட்டாமல் பதிலைச் சொல்லு....!" கடுப்புடன் நந்தன் கேட்கவும்,

"நான் எங்கேடா பல்லைக் காட்டினேன்? பல்லுத் தெரியாமல் தானே சிரித்தேன்..." என்றான் அகன்ற சிரிப்புடன் ரவி.

"இந்த விளக்கம் இப்போது எனக்கு ரொம்ப முக்கியம்!! பேச்சை மாற்றாமல் பதிலைச் சொல்லு ரவி..." என்றவனின் பொறுமை பறந்துகொண்டிருந்தது.

"ப்ச், எதை என்று சொல்லடா...." என்று ரவி ஆரம்பிக்கவும் நந்தனின் கைபேசி சத்தம் போடவும் சரியாக இருந்தது.

ரவியை முறைத்தபடியே அழைப்பை எடுத்து, "சொல்லுடா..." என்றான் நந்தன்.

"நந்தா, நீ செக்குகளில் கையெழுத்துப் போடவில்லை. ஆனால் இன்று வங்கியில் செக்குகள் போடவேண்டும். இன்று ஆபீசுக்கு வருவாயா...?" என்றான் அந்தப் பக்கத்திலிருந்து வசந்தராஜ்.
 

Vishakini

Moderator
Staff member
"ஓ.. சாரிடா! வேலைகளில் மறந்துவிட்டேன்! ம்… இப்போது என்ன செய்யலாம்? நீ எங்கே நிற்கிறாய்? வீட்டிலா? ஆபீசிலா? நான் இங்கே டவுனில் பெண்கள் ஆடையகத்தில் நிற்கிறேன்...."

"நீயும் இங்குதான் நிற்கிறாயா? நல்லதாகப் போய்விட்டது. நானும் இங்கே தான் கொஞ்சம் தள்ளி நிற்கிறேன் நந்தா. இன்னும் ஐந்து நிமிடத்தில் அங்கே வருகிறேன்..."

"சரிடா...வா..." என்று கைபேசியை அணைத்தான் நந்தன்.

யார் என்று கேள்வியாகப் பார்த்த ரவியிடம், "அது வசந்தன்டா...." என்று விளக்கத்தை சுருக்கமாக முடித்தவன்,

"நீ சொல்லு...?" என்று, ரவியின் விசயத்துக்கு மீண்டும் வந்தான்.

வசந்தனின் பெயரை கேட்டதும் ரவியின் முகம் கல்லாக இறுகியது. எதுவும் பேசாது கோப மூச்சுக்களை விட்டவனை பார்த்த நந்தன், "உனக்கும் வசந்தனுக்கும் என்னடா பிரச்சினை....?" என்று கேட்டான்.

"ப்ச்..."

"இந்த உச்சு கொட்டும் வேலையை விட்டுவிட்டு நடந்ததை சொல்லித் தொலை!"

"எதைச் சொல்லச் சொல்கிறாய்? ஒரு காலத்தில் நானும் அவனும் உயிர் நண்பர்கள். இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் அப்போதெல்லாம் உன்னை விடவுமே அவன்தான் எனக்கு நெருக்கமானவன். ஆனால் இன்றோ நான் வெறுக்கும் மனிதர்களில் அவனும் ஒருவன்!" கோபத்தோடு பொரிந்து தள்ளினான் ரவி.

சில நொடிகள் அங்கே அமைதி நிலவியது.

"அப்படி என்றால்...."

நந்தனின் அருகே ராஜ் தன்னுடைய நான்கு சக்கர வாகனத்தைக் கொண்டுவந்து நிறுத்தினான்.

"ஹாய்டா..." சிரித்துக்கொண்டு இறங்கியவன், நந்தனோடு ரவியும் நிற்பதைக் கண்டதும் முகம் இறுக, அதற்கு மேல் எதுவும் பேசாது செக்குகளை எடுத்து நந்தனிடம் நீட்டினான்.

"சாரிடா.. இதோ போட்டுத் தருகிறேன்..” என்ற நந்தன், நின்றபடி கையெழுத்து இடுவது கடினம் என்பதால் கடையின் உள்ளே சென்றான். எதிர் எதிரே நின்ற ரவியும் ராஜும் ஒருவரை ஒருவர் முறைத்துவிட்டு, எதிர் எதிர் பக்கம் தங்கள் பார்வைகளைத் திருப்பிக் கொண்டனர்.

"அப்பா.. நானும்... நானும் இற..ங்கி வடட்..டா....."மழலைக் குரல் ஒன்று கேட்கவே, தன்னை மறந்து திரும்பினான் ரவி.

"இல்லைடா குட்டி. அப்பா இந்தா.. இப்போது வந்துவிடுவேன். செல்லம் அம்மாவிடமே இருக்கவேண்டும். சரிதானா...." முகம் பூவாய் மலர, பதில் சொல்லியபடி மகளருகில் சென்றான் ராஜ்.

"அப்பா.. ம்ம்ம்...தூக்கு… தூக்கு..ங்க அப்பா..." செல்லமாய்ச் சிணுங்கிய அந்த முல்லையின் வேண்டுகோளை உடனேயே நிறைவேற்றினான் ராஜ்.

பின்னே, நான்கு வருடங்கள் போக்குக் காட்டிவிட்டு பிறந்த அவன் வீட்டு ராணி அவள்! மூன்று வயதேயான அழகு ரதீசா!

அப்பாவின் கைகளுக்குள் வந்துவிட்ட சந்தோசத்தில் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தகப்பனின் வயிற்றிலேயே மரம் ஏறினாள் மகள்!

"பாருங்களேன். உங்களிடம் வந்தவுடன் அவளின் சந்தோசத்தை..." காருக்குள்ளே இருந்து பூரிப்புடன் சொன்னாள் ராஜின் மனைவி நிரஞ்சினி.

இதையெல்லாம் பாத்திருந்த ரவிக்கோ பெரும் திகைப்பாக இருந்தது. இவர்கள் இவன் மனைவி பிள்ளைகள் என்றால் கவியும் பாவையும்?? அதிர்ச்சியில் அவன் கண்கள் அவர்களையே வெறித்தது.

"நீங்க யாரோட செல்லம்?அப்பா செல்லமா? அம்மா செல்லமா.. ம்..? சொல்லுங்க...சொல்லுங்க..."

"ரதிமா அப்பா தெல்..லம். அவ அப்பாட தெல்..லம்....." தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தந்தையின் தோள் வளைவுக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டது அந்தப் புத்திசாலிக் குழந்தை.

"கள்ளி...! அப்பாவைக் கண்டவுடன் அம்மாவை விட்டுவிட்டாள்..." வார்த்தைகளில் இருந்த கோபம் நிரஞ்சியின் முகத்தில் மருந்துக்கும் இல்லை.

கிளுக்கிச் சிரித்த மகளை மேலே போட்டுப் பிடித்தபடி, இந்த உலகத்தையே மறந்து மகளிடமே லயித்துவிட்டவனை, தன்னை மறந்து வியப்புடன் பாத்திருந்தான் ரவி.

ராஜின் தந்தை என்கிற இன்னொரு பரிமாணம், ரவிக்குப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை. எவ்வளவு அழகாக மகளைக் கொஞ்சுகிறான். கொடுத்துவைத்தவன்!

ராஜும் அவன் மகளும் அவர்களுக்கே சொந்தமான உலகில் லயித்துவிட, ரவிக்கோ தன் இழப்பின் அளவு இன்னுமே பெரிதாகத் தோன்றியது. அவன் வாழ்வும் மற்றவர்களைப் போல் அமைந்திருக்க இப்படி ஓர் அழகுக் குழந்தைக்கு அவனும் அல்லவா அப்பாவாக இருப்பான்!

பச்சரிசிப்பற்கள் தெரிய முகம் நிறைந்த சிரிப்புடன் விளையாடிய மகளை அகம் நிறையப் பார்த்தவன், "அம்மாவிடம் போறீங்களா செல்லம்... அப்பா மாமாவிடம் செக்குகளை வாங்கிக்கொண்டு வருகிறேன்...." என்று கேட்டான்.

அனுமதி கேட்டவனை இறுக்கிக்கட்டிக்கொண்டு தன் மறுப்பைக் காட்டினாள் அவன் பெற்ற மகவு!

"மாட்டிங்களா? நீங்க பொல்லாத குட்டியா..."

"ஹேய் வசந்த்! உன் மகளாடா? இதுவரை இந்த அழகுச் செல்லத்தை கண்ணிலேயே காட்டவில்லையேடா நீ. ஹாய் குட்டிச் செல்லம். இந்த சின்னக்குட்டியின் பெயர் என்ன? மாமாவிடம் வாரீங்களா...? மாமா பிள்ளைக்கு சொக்கா(இனிப்புக்கள்) வேண்டி தருகிறேன். வாங்க வாங்க..." என்று, அங்கு வந்த நந்தன் ரதீசாவைக் கண்டதும் ஆசையோடு அழைத்தான்.

ரதீசா சிரித்துக்கொண்டே அவனிடம் தாவவும், "ஹே அச்சாக் குட்டி. வாங்கவாங்க..." செக்குகளை ராஜிடம் நீட்டிவிட்டுக் குழந்தையை ஆசையுடன் வாங்கிக்கொண்டான்.

"உன் மகள் உன்னை மாதிரி இல்லை வசந்த். அவள் எல்லோரிடமும் பழகுகிறாள்..." ரதீசாவுடம் விளையாடிக்கொண்டே சொன்னான் நந்தன்.

"நீங்கள் இனிப்பு வாங்கித் தருவதாக சொன்னபடியால் உங்களிடம் தாவிவிட்டாள் அண்ணா. மிகவும் புத்திசாலி...." மகளைப் புகழ்ந்தபடி வாகனத்தில் இருந்து இறங்கினாள் நிரஞ்சினி.

"இவள் என் மனைவி.." என்று அவளை நந்தனுக்கு, நந்தனுக்கு மட்டுமே அறிமுகப் படுத்தினான் ராஜ்.

"என்னடா, இன்று ஒரே அதிசயமாக நடக்கிறது. ஒருநாளும் மனைவி பிள்ளைகளை அழைத்து வரமாட்டாய். இன்று என்னடா நடந்தது உனக்கு?” என்று, ராஜிடம் ஆச்சர்யமாகக் கேட்டவன், “எப்படி இருக்கிறாய்.. சாரி இருக்கிறீர்கள்?” என்று நிரஞ்சியைப் பார்த்து விசாரித்தான்.

அழகாய்ப் புன்னகைத்து, "நான் நன்றாக இருக்கிறேன் அண்ணா. நீங்கள் என்னை வா போ என்றே அழைக்கலாம். அவருக்கு நேரம் இல்லை. அதனால் தான் எங்களை அழைத்து வரவில்லை. ஆனால் நீங்களும் இதுவரை எங்கள் வீட்டுக்கு வந்தது இல்லையே நந்தன் அண்ணா..." என்றாள் நிரஞ்சினி கணவனை விட்டு கொடுக்காது.

வாய்விட்டுச் சிரித்த நந்தன், "சரிம்மா. உன் கணவனை நான் ஒன்றும் சொல்லவில்லை. சரிதானா.... என்னுடன் சண்டைக்கு வந்துவிடாதே..." எனவும்,

"அந்தப் பயம் இருக்கட்டும்...!" என்று பொய்யாக மிரட்டினாள் நிரஞ்சினி.

"இனி வாயைத் திறக்கவே மாட்டேன்! ஆனால் நான் உன் கணவன் மாதிரி நண்பர்கள் வீட்டுக்குப் போகவே கூடாது என்கிற கொள்கை உடையவன் இல்லைமா. அவன் வரவில்லை. அதனால் நானும் வரவில்லை..." என்றான் சிரிப்புடன்.

"அதை விடுங்கள் அண்ணா. ஆனால் நீங்கள் கட்டாயம் சாந்தி அக்காவையும் அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வரவேண்டும்...!" என்றாள் அன்புக்கட்டளையாக.

"வந்துவிட்டால் போகிறது. நிச்சயம் ஒரு நாள் வருகிறோம். இங்கே கடைக்குள்தான் சாந்தியும் தாரிகா...." என்று ஆரம்பித்தவன், அப்போதுதான் ரவியும் அருகில் இருப்பதை உணர்ந்து,

"உனக்கு ரவியைத் தெரியும்தானே வசந்த்? வெகுவிரைவில் இவனுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. ரவியின் வருங்கால மனைவி தாரிகாவும் உள்ளே இருக்கிறாள்..." என்று சொன்னான் நந்தன்.

ரவி சொன்னதை வைத்து, ரவிக்கும் ராஜுக்கும் இடையிலான நட்புக்குள் ஏதோ பிரச்சினை என்றுதான் நந்தன் நினைத்தான். அதனாலேயே ரவியை அவர்கள் பேச்சுக்குள் இழுத்தான்.

ராஜிற்கு இது புதுச் செய்தி.

"என்னது? திருமணமா...?இவனுக்கா..?" என்ற ராஜின் முகம் கோபத்தில் பயங்கரமாக மாறியது. ரவியை முறைத்தவனின் முகத்தில் அப்பட்டமான வெறுப்பு.

"அவர்.. அவர் ரவிவர்மன் அண்ணா தானே..." அதிர்ந்த குரலில் நிரஞ்சி கேட்க, ஆமாம் என்பதாகத் தலையை அசைத்தான் நந்தன்.

“ஆனால் அவருக்குத்தான் ஏற்கனவே…” என்று அதிர்ச்சியோடு சொன்ன நிரஞ்சியின் பேச்சு, ராஜின் ஒரு பார்வையில் நின்றது.

ரவியின் அதிர்ந்த பேச்சற்ற நிலை, ராஜின் முகத்தில் தெரிந்த கடுங்கோபம், நிரஞ்சியின் அதிர்ந்த முகம் என்று பார்க்கையில் நந்தனுக்கு மீண்டும் குழப்பமாக இருந்தது.

மகளை நந்தனிடம் இருந்து வாங்கிய ராஜ், "நிரு உள்ளே ஏறு. நாங்கள் வருகிறோம் நந்தா..." என்று இறுகிய குரலில் சொல்லிவிட்டு வாகனத்தில் ஏறப் போனான்.

"அதற்குள் என்னடா அவசரம். நான் இன்னும் குழந்தைக்கு சொக்கி கூட வாங்கிக் கொடுக்கவில்லை..” என்றான் நந்தன்.

"அடுத்தமுறை பார்க்கும் போது வாங்கிக்கொடு...." என்றவனை முறைத்துவிட்டு,

"போடா விசரா! குழந்தையை ஏமாற்றக்கூடாது. கொஞ்சம் பொறு இதோ வருகிறேன்.." என்றவன் அருகில் இருந்த கடைக்கு இனிப்பு வாங்க ஓடினான்.

"இவன் வேறு..." சலிப்புடன் ஸ்டேரிங்கில் கையால் குத்திவிட்டு பல்லை கடித்தபடி இருந்தான் ராஜ்.

சில இனிப்புக்களை வாங்கி வந்த நந்தன் ரதீசாவிடம் கொடுத்துவிட்டு, "குட்டிம்மாக்கு மாமா பிறகு நிறைய சொக்கா வாங்கி தருகிறேன், இப்போ பாய் செல்லம்...." என்று குழந்தையிடமும் "போய்வாருங்கள்....." என்று நிரஞ்சியிடமும் சொன்ன நந்தன் ராஜை முறைத்தான்.

அதை பொருட்படுத்தாது "வருகிறேன் நந்தா..." என்றபடி வாகனத்தை கிளப்பினான் ராஜ்.

ரவியோ நடப்பவைகளைப் பார்த்தபடி அப்படியே நின்றான்.

"என்னதான்டா நடக்கிறது? வசந்த் உன்னைக் கண்டாலே ஏதோ எதிரியைப் பார்ப்பது போல் பாக்கிறான், நீயானால் அவனும் உன் நண்பன் என்றாயே... உங்களுக்குள் ஏதாவது கருத்து வேறுபாடா ரவி?"

நந்தனின் கேள்விக்குப் பதிலைச் சொல்லாமல், "நந்தா, நான் இப்போது கிளம்புகிறேன். சாரிடா.... எனக்கு அவசர வேலை ஒன்று இருக்கிறது." என்ற ரவி, அங்கே வந்த ஆட்டோவை மறித்தான்.

"அடேய்!!" என்று பல்லைக் கடித்த நந்தன், "தாரிகாவும் நிற்கிறாள். அவளை கூட்டிக்கொண்டு வந்துவிட்டு, நீ இடையில் போகிறாயே. அவள் என்ன நினைப்பாள்..?" என்றான் கோபத்துடன்.

"நந்தா, எதையாவது சொல்லி சமாளி. ப்ளீஸ்டா! புரிந்துகொள்! நான் இப்போது கிளம்புகிறேன். எப்படியாவது அவளைச் சமாளி. எல்லாவற்றையும் பிறகு சொல்கிறேன்டா..." என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாது ஆட்டோவில் ஏறிச் சென்றே விட்டான்.

"உன்னையெல்லாம்...." என்று பல்லைக் கடித்தவன்...., "என்னிடம் மாட்டாமலா போவாய். அப்போது இருக்குடா உனக்கு...!" என்று உதட்டுக்குள் முணுமுணுத்தான் நந்தன்.


"பூங்காவுக்கு விடுங்கள்...." ஓட்டுனரிடம் சொல்லிவிட்டு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த ரவிக்கு சிந்திக்கத் தனிமை தேவை பட்டது.

அந்த சிறு குடும்பத்துக்குள் இருந்த புரிதல், மகளுடன் பேசும்போதே கரைந்துபோன ராஜ், கணவனோடு கண்களாலேயே காதல் பேசிய அவன் மனைவி, பார்வையிலேயே மனைவியிடம் அன்பைக் காட்டிய ராஜ் என்று அவர்களுக்குள் இருந்த அந்த நெருக்கமே, ராஜைப் பற்றிய அவன் கணிப்பைப் பொய் என்று அடித்துச் சொன்னது. ஊர் மறைவில் இன்னொரு குடும்பம் வைத்திருப்பவனின் செயல் அல்ல அது!

அன்றும் நந்தன் வீட்டிலும், யாருக்கும் பயப்படாது கவியையும் பாவையையும் கைபிடித்து அழைத்துச் சென்றானே, தவறு செய்பவனின் செயலாக அல்லாமல் ஒரு பாதுகாவலனின் செயலாகத்தான் அது இருந்தது என்று இப்போது தெரிந்தது!

பூங்காவை ஆட்டோ வந்தடையவும் பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றவன், யாரின் தொந்தரவும் இல்லாத ஒரு இடமாகப் பார்த்து அமர்ந்துகொண்டான்.

கவி, ராஜைத் திருமணம் முடித்து வாழ்ந்துகொண்டு இருப்பாள் என்றுதான் அவன் நினைத்திருந்தான். அவர்கள் இருவரையும் சேர்த்துப் பார்த்தபோது, அவனின் எண்ணம் உறுதியானது. இன்றானால்......

அப்படியானால் பாவை?

அவளின் அப்பா யார்..? கவி சொன்னது போல் உண்மையிலேயே இறந்துவிட்டார் தானா? தெரியாமல் வார்த்தைகளை விட்டுவிட்டோமோ....

அன்று சிறுவயதில் என்னால் பாதிக்கப்பட்டவள் இன்று கணவனையும் இழந்து நிற்கிறாளே. மனதின் குற்ற உணர்ச்சி அவனை மீண்டும் மீண்டும் வாட்டியது.

அன்று கோவிலில் வைத்து நான் தாலியைக் கட்டியதும் எவ்வளவு அழுதாள்.....

மனதின் உச்சக்கட்ட அழுத்தத்தை தாங்காது கண்களை இறுக மூடி ஆழ்ந்த மூச்சுக்களை இழுத்து விட்டான் ரவி.
 
Top Bottom