• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு - 6

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-6


மகளை ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த கவிக்கு மனம் கொதித்துக்கொண்டிருந்தது. என்ன பேச்சுப் பேசிவிட்டான். அதுவும் அவளைப் பார்த்து! அதுவும் அவன்! அவளைப் பற்றிக் கேவலமாகக் கதைக்க அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஆத்திரம் அடங்க மறுத்தது அவளுக்கு.

பன்னிரண்டு வருடங்களுக்கு முதலில் பட்ட காயம் ஆறவே மாட்டேன் என்று வடுவாகிப்போனாலும், பெரும் முயற்சி செய்து அதை ஒதுக்கி, மகள் மட்டுமே எதிர்காலம் என்று முடிவெடுத்து, தன்னைத் தானே செதுக்கி கிட்டத்தட்ட ஒரு இரும்பு மனுசியாய் வாழ்ந்துகொண்டு இருப்பவளைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டான்!?

என்றும் போல் அன்றும் மனதின் குமுறல்களைச் சொல்ல யாருமற்ற தனிமை, மகளிடம் எதையும் காட்டிக்கொள்ள முடியாத வெறுமை, அவளை முற்றிலுமாக உலுக்கியது.

வீடு வந்ததும், "கண்மணியின் வீட்டுக்கு போய் வரவா அம்மா...?" என்று பாவை கேட்கவும், அப்போதைய நிலையில் தனிமையை விரும்பியவள், "போய்வா கவி. ஆனால் மாலைக்குள் வந்துவிடு. சைக்கிளில் செல்வது கவனம்.." என்று மகளை அனுப்பி வைத்தாள்.

வீட்டின் உள்ளே சென்றவளுக்கு, உடையை மாற்றும் அளவுக்குக் கூட மனதிலும் உடலிலும் தெம்பில்லாமல், கட்டிலில் விழுந்தவளின் கண்களோ கண்ணீரைச் சொரிந்தது.

நடந்தவைகளை ஒதுக்கி, யார் மேலும் குற்றம் சுமத்தாது, விதியின் மேல் பழியைப் போட்டுவிட்டு, வாழ்வின் மிகுதியை வாழும் வழியைப் பார்த்தவளை பார்த்து எப்படி பேசிவிட்டான் அந்த ரவி.

மனதின் ஆழத்தில் அமிழ்ந்து கிடந்த நினைவுகள் தறிகெட்டு ஓடியது கவிக்கு.........


மலையகம், இலங்கையின் அழகு கொஞ்சும் மலைப்பகுதி. தேயிலை பயிரிடுவதை பிரதானமாக கொண்ட, எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று மின்னும் பசுமை நகரம்.

மெல்லிய குளிருக்கு ஏதுவாக, வெள்ளைச் சீருடைக்கு மேலாக பச்சை நிற கோர்ட் ஒன்றை அணிந்து, பள்ளி செல்லத் தயாராகி, "அம்மா, நான் பள்ளிக்கூடம் போய்வருகிறேன்...." என்று, வெளியே நின்று கத்தினாள் பதினைந்து வயதுக் கவிநயா.

"எதற்கடி கத்தி ஊரைக் கூட்டுகிறாய்? இன்றாவது யாருடனும் சண்டை பிடிக்காமல் பள்ளி முடிந்ததும் வீடு வந்துசேர்..." சற்றே சினத்துசன் சொன்னார், கவியின் தாய் மரகதம்.

பாசம் என்பது மருந்துக்கும் இல்லை அந்தக் குரலில். பின்னே, அவள் வெளியே சென்றாலே வம்புடன் தான் வீடு வருவாள் என்பதால், கவியிடம் பேசும்போது மரகதத்தின் குரலில் எப்போதும் ஒரு கடுப்பு குடியிருக்கும்.

"யாரும் என்னுடன் வம்பு இழுக்காதவரை நானும் யாருடனும் சண்டை பிடிக்க மாட்டேன். யாராவது சண்டைக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை...." என்றவள், அதற்கு மேல் நிற்காது பள்ளி ‘பாக்’கை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினாள்.

அவளுக்குத் தெரியும், அதற்கு மேலும் நின்றால் அம்மாவின் வசவை வாங்க வேண்டும் என்று. தினமும் காலைப்பொழுதில் தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் இந்தப் போராட்டம் அந்த ஊரே அறிந்த ஒன்றுதான்.

கவி பள்ளி முடிந்து வீடு வரமுதலே, அவள் வீதியில் செய்த வாய்ச்சண்டை யார் மூலமாவது மரகதத்தின் காதுக்கு எட்டிவிடும். பிறகு என்ன, அடுப்பு எரிக்க வைத்திருக்கும் விறகுக் கட்டையால் மகளை மொத்துவதும், இரவு முழுக்க அழும் கவி அடுத்தநாள் வழமை போல் யாருடனாவது வம்பு வளர்ப்பதும் அந்த வீட்டில் வழமையான விடயம்.

"உன்னை திருத்தவே முடியாது. ஆனால், இன்றும் ஏதாவது என் காதில் உன்னை பற்றி விழட்டும், உன் காலை ஓடித்துவிடுகிறேன்.." என்று மகளை திட்டியபடியே தன் சமையல் வேலையைத் தொடங்கினார் மரகதம்.

மரகதம் வேலை செய்த தேயிலைத் தோட்டத்துக்கு, கண்காணியாக வந்த சுப்பையாவை நல்லவன் என்று நம்பி, மனதை மட்டுமல்லாமல் உடலையும் சேர்த்து அவனிடம் பறிகொடுத்ததில், மரகதத்தின் வயிற்றில் கவி உண்டானாள்.

பெற்றவர்களை சிறு வயதிலேயே இழந்து, கிடைக்கும் வீட்டு வாசல்களில் தூங்கி, பழைய உணவையும் பழுதான சோற்றையும் உண்டு வளர்ந்த மரகதத்துக்கு, ஆர்வமுடன் ஒருவன் தன்னை பார்த்ததிலேயே மகிழ்ந்துபோனார்.

காதலுக்கும் காமத்துக்கும் வேற்றுமை தெரியா வயதில், காதல் என்று நம்பி கற்பைப் பறிகொடுத்த பிறகே, அவனின் சுயரூபம் தெரிந்தது அவருக்கு.

சங்கடமும் சந்தோசமும் நிறைந்த மனநிலையோடு, தான் தாயாகி இருப்பதை சுப்பையாவிடம் தெரிவித்தபோது தான், அவர் ஏற்கனவே திருமணமாவர் என்பதே மரகதத்துக்குக் தெரியவந்தது.

ஒரு வாய் சோற்றைக் கூட அது பழையதாக இருந்தாலும் உழைத்துத் தின்ற மறத்தி அல்லவா மரகதம், அவனின் முகத்துக்கு நேரேயே காறி உமிழ்ந்தவர், தன்னால் உழைத்து தன்னையும், தன் வயிற்றில் வளரும் சிசுவையும் காக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையுடன், அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி இப்போது இருக்கும் கிராமத்துக்குக் குடிவந்தார்.

சுப்பையாவுக்கோ விட்டது தொல்லை என்கிற எண்ணம். அவன் பிறகு மரகதத்தை சந்திக்க முயலவில்லை.

வயிற்றில் குழந்தையும், தான் பெற்றுக்கொண்ட அனுபவமும், மறுபடியும் தேயிலைத் தோட்டத்துக்கு வேலைக்குச் செல்வதற்கு அவரை அனுமதிக்க மறுத்தது.

வாழ்வாதாரத்துக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தவருக்கு, தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கான உணவை சமைத்து விற்கலாம் என்கிற எண்ணம் உண்டானது.

அன்றிலிருந்து சிறுகச்சிறுக தன் தொழிலை மேம்படுத்தியவர், ஓகோ என்று வாழாவிட்டாலும் தேவையான அளவு உழைப்போடு நிம்மதியாகவே வாழ்ந்தார்.

ஆனாலும், உடலாலும் உள்ளத்தாலும் மிகவும் நொந்திருந்தார் மரகதம். சொந்தம் என்று யாருமில்லாத நிலையும், சுயநலமற்ற அன்புக்கு ஏங்கிய தான் ஒருவனின் உடல் தேவைக்கு இரையானதும், அவரைப் பெரிதும் பாதித்தது.

அதனாலேயே, மகளைக் கவனமாக வளர்க்கவேண்டும் என்கிற எண்ணத்தில், அவளுக்கான அடக்குமுறைகளை மிகவும் கடுமையாகக் கையாண்டார். பிறப்பிலேயே வாயாடியாகப் பிறந்த கவிநயா, தாயின் புத்திமதிகளைக் கேட்டுக்கொண்ட போதிலும், ஒரு அளவுக்கு மேல் வாயை அடக்க முடிந்ததில்லை அவளால்.

அதனாலேயே தாயிடம் தினமும் திட்டும் அடியும் வாங்கியே அவளின் நாட்கள் நகர்ந்தது.

வீட்டிலிருந்து பள்ளிக்கு அந்த மலைப்பாதையில் நடந்துகொண்டிருந்தாள் கவி. மலையின் கீழே பள்ளி இருப்பதால், இறக்கமான பாதையில் வேக வேகமாக நடந்தவளை, "அடியே குண்டுப் பூசணி. மெதுவாக நட. நிலம் நடுங்குகிறது பார்...." என்றொரு குரல் அவளைச் சீண்டியது.

இன்றாவது யாருடனும் சண்டை பிடிக்கக்கூடாது என்று நினைத்தவளின் பொறுமை பறக்க, "அடேய் விருமாண்டி! கையில் கிடைத்தாய் என்றால் உன்னை வெறும் ஆண்டி ஆக்கிவிடுவேன். மரியாதையாக வாயை மூடிக்கொண்டு ஓடிவிடு..." என்றாள் கோபத்துடன்.

யார் என்று தெரிந்தபோதும் அந்தக் குரலுக்குரியவன் எங்கிருக்கிறான் என்று தன்னுடைய பெரிய கண்களை நாலாபக்கமும் சுழற்றினாள் கவி.

"ஏய் கறுப்பி, உன் கண் என்ன காத்தாடியா? இந்த சுழற்றுச் சுழற்றுகிறாய்..."

இப்போதும் உருவம் இல்லாது குரல் மட்டும் வந்தது.

கறுப்பி என்கிற அழைப்பு அவளிடம் கொஞ்சமாக இருந்த நிதானத்தையும் இழக்க வைத்தது.

"அடேய் தைரியம் கெட்டவனே. வெளியே வாடா. உன்னை என்ன செய்கிறேன் பார்....." கோபம் தலைக்கேற, நிலத்தில் கிடந்த கல்லொன்றை எடுத்து, பேச்சுக்குரல் வந்த திசைப்பக்காமாக குறி பார்த்தாள் கவி.

"ஐயோ கவி எறிந்துவிடாதே. நானும் இருக்கிறேன்." என்றபடி, மரத்தின் பின்னால் ரவியின் கைப்பிடியில் மாட்டியிருந்த வசந்தராஜ், ரவியை உதறிவிட்டு வெளியே வந்தான்.

"ராஜண்ணா, அந்த எருமையை வெளியே வரச்சொல்லுங்கள். இன்று அவன் மண்டையை உடைக்காமல் நான் போகமாட்டேன்.." என்றவளின் உதடுகளும் கண்களும் கோபத்தில் துடித்தது.

அவளின் பெரிய கண்கள் ஆடும் கரகாட்டத்தைப் பார்த்துச் சிரித்தவாறே, மரத்தின் மறைவில் இருந்து வெளியே வந்தான் ரவி. "என்னடி செய்வாய்? எங்கே உடை பார்ப்போம் என் மண்டையை. குண்டுக் கத்தரிக்காய். நீ நிலத்தில் உருள்வதற்குத்தான் சரியடி..." மறுபடியும் அவளைச் சீண்டினான்.

"அடேய் கொக்கத்தடி. உன்னை ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் அந்த லைட் போஸ்ட்டில் அடித்து தொங்க விடுகிறேனா இல்லையா பார்...." உதடு துடிக்க வார்த்தையாடியவளை, "கவி!!" என்ற ராஜின் குரல் அடக்கியது.

"என்னை மட்டும் அடக்குங்கள் அண்ணா. அவனை ஒன்றும் சொல்லாதீர்கள்...." ராஜிடமும் கோபத்துடன் கத்தியவளிடம், "உங்கள் இருவருக்கும் தான் சொல்கிறேன். யாராவது என் பேச்சைக் கேட்கிறீர்களா?" என்றான் சிறு சலிப்புடன் ராஜ்.

"என்னைக் கறுப்பி என்று சொல்லவேண்டாம் என்று அவனிடம் சொல்லுங்கள் ராஜண்ணா..." என்று கவி முறையிடவும்,

"உனக்கும் எனக்கும் ஒரே வயதுதான். ஆனாலும் உன்னை அண்ணா என்று கூப்பிடுபவள் என்னை மட்டும் ஏன் அவன் இவன் என்று சொல்ல வேண்டும். முதலில் என்னையும் அண்ணா என்று கூப்பிடச்சொல் அவளை...." என்று தானும் முறையிட்டான் ரவிவர்மன்.

"என்னது? உன்னை நான் அண்ணா என்று கூப்பிடுவதா? ஆடு மாட்டை எல்லாம் நான் அண்ணா என்று சொல்வதில்லை..." நக்கலாக சொன்னவளைப் பார்த்து முறைத்த ரவி, "போடி! நீ பெரிய மகாராணி. நீ அண்ணா என்று கூப்பிடவில்லை என்றுதான் நான் இங்கே ஏங்குகிறேன். அடி குண்டுப் பூசணி நீ ஒரு மண்டுப் பூசணி...." என்றான் அவனும் விடாது.

"அடேய் எருமை மாடு. என்னைக் குண்டு என்று சொல்வாயா?" என்று கேட்டபடி, கையில் இருந்த கல்லோடு அவனைத் துரத்தியவளின் கையில் அகப்படாமல் பாய்ந்து ஓடினான் ரவி.

"கவி, நில். கவி.. சொல்கிறேன் இல்லையா. நீங்கள் இருவருமே திருந்தப்போவது இல்லை. கவி...நில்!! பள்ளிக்கு நேரமாகிறது. அவனைத் துரத்துவதை விட்டுவிட்டு பள்ளிக்குச் செல்...." என்ற ராஜின் குரலுக்கு, மனமே இல்லாமல் நின்றவளுக்கு, ரவியை த் துரத்திக்கொண்டு ஓடியதில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

"அவன் மட்டும் என் கையில் கிடைத்தான் சாம்பல் ஆக்கிவிடுவேன். சொல்லி வையுங்கள் அவனிடம்..." என்று, அப்போதும் மூச்சு வாங்கியபடி,ரவியைக் கைநீட்டி எச்சரித்துவிட்டு பள்ளிக்கு நடையை கட்டினாள் கவி.


‘என் கையில் மாட்டுடா. உனக்கு சங்குதான். வரவர உன் ஆட்டம் அதிகமாகிறது. என்னைக் குண்டு என்று சொன்ன உன் வாயிலேயே ஒரு குத்து விடுகிறேன்...’ என்று அவனைத் திட்டியபடி பள்ளி சென்றவள், அங்கே தோழிகளுடன் கூடியவுடன் வரும் வழியில் நடந்தவைகளை தற்காலிகமாக மறந்துபோனாள்.
 

Vishakini

Moderator
Staff member
பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தாள் கவி. அவளின் தோழிகளுடன் சலசலத்துக்கொண்டு வந்தவளைப் பார்த்து, நண்பர்கள் கூட்டத்துடன் சைக்கிளில் வந்துகொண்டிருந்த ரவி, "எந்தக் கடையில நீ அரிசி வாங்குற?" என்று பாட்டுப் பாடினான்.

"ரவி, சும்மா சும்மா அவளையே கிண்டல் செய்யாதே..." என்ற ராஜின் பேச்சைக் கேட்காது, அவள் இவனை முறைப்பதைப் பார்த்து, "என்னடி என்னையே பார்க்கிறாய். நான் என்ன அவ்வளவு அழகா?" என்றான் சீண்டலாக.

பொறுமையை எருமையில் ஏற்றி அனுப்பியவள், "அடேய் குரங்கு. எங்கேயாவது குரங்கு அழகாக இருந்து பாத்திருக்கிறாயா? கரிமுண்டம்! உனக்கும் ஒரு நினைப்பு இருக்கோ நீ பெரிய அழகன் என்று. வெளியே யாரிடமும் சொல்லிவிடாதே, கேட்பவர்கள் தூக்கில் தொங்கிவிடுவார்கள். நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்குமாம். அப்படி இருக்கிறது உன் பேச்சு...." குண்டுக்கண்கள் கோபத்தில் சுழன்றடிக்க, அவளின் உதடுகள் ஆடிய ஆட்டத்தில் தன்னை மறந்து, "நீ மட்டும் பெரிய அழகியோ? குறைந்தது நூறு கிலோ இருப்பாயா. நான் குரங்கு என்றால் நீ யானைகுட்டியடி. போடி குண்டு..." என்றான் ரவி, அவளை மறுபடியும் சீண்டும் எண்ணத்துடன்.

"அவன் வேண்டுமென்றே உன்னுடன் வம்பிழுக்கிறான். பேசாமல் வாடி..." என்று கவியின் தோழி அருந்ததி சொன்னதைக் காதில் விழுத்தாமல், "அடேய் வருமா. நீ ஒரு குருமா. பெயரைப்பார் பெயரை ரவிவர்மனாம். விருமாண்டி தான்டா உனக்குப் பொருத்தமான பெயர். மின்னல் தாக்கிய வாழைமரம் மாதிரி கருகிப்போய் இருக்கிறாய் கரிமுண்டம். போடா லூசா....." என்றாள் கோபம் நிறைந்த முகத்துடன்.

“நீதான்டி லூசி. போடி விசரி..." என்றான் ரவி..

"போடா விசரா..."

"போடி குண்டுப் பூசணி..."

"போடா விருமாண்டி..."

"போடி குட்டச்சி..."

"போடா நெட்டைக் கொக்கு..."

கவியின் வீடு செல்லும் பாதைக்கான திருப்பம் வரவும், இதுவரை கையில் மறைவாக வைத்திருந்த கல்லை எடுத்து, அவன் தலையை நோக்கி மின்னலெனக் குறிபார்த்து எறிந்துவிட்டு, சிட்டாகப் பறந்தாள் கவி.

இதைச் சற்றும் எதிர்பாராத ரவி, கல் தன்னை நோக்கி வருவதை உணர்ந்து சைக்கிளை விட்டு இறங்க முதலே, அவன் நெற்றியை அழகாகப் பதம் பார்த்தது கவி எறிந்த கல்.

"ஸ்ஸ்...அம்மா....." என்றவனின் அலறலில், ஓட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தியவள், "இனியும் என்னைக் குண்டு என்று ஏதாவது சொன்னாய் என்று வை. என் கல் உன் தலையில் படாது. அதற்குள் இருக்கும் மூளைக்குள்ளேயே செருகிவிடுவேன் கல்லை...." என்றவள் நிற்காது ஓடிவிட்டாள்.

நெற்றியில் வழிந்த இரத்தத்தை, கைக்குட்டையால் பொத்திப்பிடித்தவன் வலியில் துடிக்கவும், நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து தண்ணீரால் காயம்பட்ட இடத்தைக் கழுவி ஒரு கட்டைப் போட்டுவிட்டனர்.

காயம் பெரிதில்லை என்றாலும் வலித்தது ரவிக்கு. முகம் வாடி வந்தவனைப் பார்த்த ராஜ், "ஏன்டா அவளோடு வம்பு இழுக்கிறாய். சின்னப் பெண்ணடா அவள். பார், இப்போது விளையாட்டு வினையாகிவிட்டது...." என்று சலித்துக்கொண்டான்.

அந்த வலியிலும் அவளின் கோபம் நிறைந்த முகமும், கோபத்தில் அந்த பெரிய கண்கள் கூறிய வாளாக மாறி அவனை முறைப்பதும், உதடுகள் துடிக்க அவள் உதிர்க்கும் கோப வார்த்தைகளும் ரவிக்குச் சிரிப்பையே உண்டு பண்ணியது.

சிறு சிரிப்புடன், "இனிமேல் அவளைக் கேலி செய்யகூடாது என்றுதான் தினமும் நினைப்பேன்டா. ஆனால், அவளையும் அவள் என்னைக் கண்டவுடனேயே முறைப்பதையும் பார்த்தவுடன் என்னை மீறியே கேலி செய்துவிடுகிறேன்......" என்றான் ரவி.

"ஏன்டா ரவி, நீ அவளைக் காதல் கீதல் ஏதும் பண்ணுகிறாயா ?” என்றான் நண்பர்களில் ஒருவனான கண்ணன்.

அதைக் கேட்ட ரவி, "அவளையா....? நானா?" என்றபடி வாய் விட்டு சிரித்தான்.

அவர்கள் இருவரையும் முறைத்த ராஜ், "நமக்கு இப்போதுதான் பதினெட்டு வயது. இது காதலிக்கும் வயதாடா கண்ணா? உளறாதே!" என்றான் கோபத்துடன்.

"இப்போது காதலிக்க ஆரம்பித்தால் தானேடா இருபத்திமூன்று அல்லது இருபத்திநான்கு வயதில் திருமணத்தை முடிக்கலாம்..." என்றான் அப்போதும் விளையாட்டாகக் கண்ணன்.

"சிறுபிள்ளைத்தனமாகப் பேசாதே கண்ணா..." என்று அதட்டிய ராஜ், "இந்த பேச்சை விட்டுவிட்டு வாருங்கள் வீட்டுக்கு போகலாம். ரவி நீ வா, வைத்தியரிடம் உன் நெற்றியைக் காட்டிவிட்டே போகலாம்..." என்று மற்றவர்களை அவர்கள் வீடுகளுக்கு செல்லுமாறு கூறிவிட்டு, ரவியை அழைத்துக்கொண்டு சென்றான் ராஜ்.

"அவர்களின் பேச்சைக் காதில் வாங்காதே ரவி...." என்ற ராஜ் சொன்னதற்கு, ஒரு மெல்லிய சிரிப்பையே பரிசாகக் கொடுத்தான் ரவி.

பதினெட்டு வயதில் காலெடி எடுத்துவைத்து, காதல் என்பதன் அறிமுகம் கிடைத்திருந்த ரவியின் மனதை, கண்ணனின் பேச்சு பெரிதும் சலனப்படுத்தி இருந்தது.


இதற்கு அடுத்த மலைகிராமத்தைச் சேர்ந்த, மகாதேவன் சகுந்தலா தம்பதியரின் ஒரே ஒரு தவப்புதல்வன் ரவிவர்மன். அவர்களின் தேயிலைத் தோட்டத்தின், தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலையின் ஒரே வாரிசு.

ரவிக்கு எட்டு வயதாக இருந்தபோது, ஏதோ ஒரு விசக்காய்ச்சலினால் மகாதேவன் இறந்துவிட, சகுந்தலாவின் மொத்த வாழ்க்கையுமே ரவி என்றானது.

ராஜும் கவியும் இருப்பது ஒரே கிராமத்தில். செல்வத்துக்கு குறை இல்லாத ரவிக்கு ராஜ் நெருங்கிய நண்பன். அவனைத் தேடி ராஜின் கிராமத்துக்கு வருகையிலேயே, முதன்முதலில் கவியைப் பார்த்தான்.

பதினைந்து வயதில் கறுப்பாக, குறைந்தது அறுபது கிலோ எடையுடன், உருண்டை முகத்தில் நடமாடும் பெரிய கண்களுடன், தோழியுடன் சிரித்துப் பேசியபடி வந்தவளைப் பார்க்கப்பார்க்க அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

ராஜை எதிர்பார்த்து வீதியோரத்தில் சைக்கிளில் சாய்ந்தபடி நின்றவனின் கண்கள் சுவாரசியமாக தன்னைப் பார்ப்பதும், அவன் உதடுகளில் வழிந்த சிறு புன்னகையும் கவிக்குக் கோபத்தைக் கிளப்ப, "என்னடா பார்வை..?" என்று அதட்டிக் கேட்டாள்.

ஒரு சிறு பெண் தன்னை அதட்டுவாள், அதுவும் 'டா' போட்டு அதட்டுவாள் என்று எதிர்பாராத ரவி ஒரு நிமிடம் திகைத்துத்தான் போனான். உதடுகள் அழுந்த, அந்தப் பெரிய கண்கள் முழுதும் கோபம் நிறைந்து வழிய, அவனை முறைத்தவளின் குழந்தை முகம் அவன் மனதை அள்ளவே, வாய் விட்டுச் சிரித்தான்.

அவனின் சிரிப்பில் இன்னுமே கடுப்பான பாவை, "அடேய்...." என்று பல்லைக் கடித்தாள்.

அவன் தொடர்ந்து சிரிக்கவும், ஒரு கையை நீட்டி, "இனியும் சிரித்தாய் என்றால், சிரிக்கும் வாய்க்குள் பற்கள் ஒன்றும் இருக்காது. அடித்துப் பல்லைக் கழட்டிவிடுவேன்..." என்றாள் பெரும் கோபத்துடன்.

அப்போதும் சிரிப்பை அடக்க முடியாமல் வாயை இரு கைகளாலும் பொத்தியவன், இனிச் சிரிக்கமாட்டேன் என்பதாக தலையை இடமும் வலமுமாக ஆட்டினான்.

“அது!” என்கிற தொனியில், மிதப்பான ஒரு பார்வையைப் பார்த்துவிட்டு நடந்தாள்.

அவள் செல்வதையே பாத்திருந்தவனின் கண்கள் சிரித்தபடியே இருந்தது. சிறிது நேரத்தில் ராஜ் வந்துவிடவே, அவனுடன் சேர்ந்து சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவனின் கண்களில் முன்னால் நடந்து சென்றுகொண்டிருந்த கவி மறுபடியும் பட்டாள்.

எவ்வளவோ முயற்சி செய்தும், தனது வாயை அடக்க முடியாமல், "ஏய் குண்டுத்தாரா, உன் அழகின் ரகசியம் என்ன?" என்றான் சிரிப்புடன்.

"சும்மா இரு ரவி. அவள் திட்டப் போகிறாள்...." என்று ராஜ் சொல்லி வாயை மூட முதலே,

‘யாரடா அது புதுக்குரலாக இருக்கிறதே....’ என்று கோபத்துடன் திரும்பியவளின் பார்வையில், ராஜுடன் வந்த ரவி படவும், இவன்தானே சற்று முன் தன்னை பார்த்துச் சிரித்தான் என்று நினைத்தவள், "அடேய் குரங்கு வாயா. வாயை மூடிக்கொண்டு போ. இல்லையென்றால் உன்னை மண்டையை உடைத்துவிடுவேன்!” என்றவளின் கோபம் இன்னுமே அவளைச் சீண்ட, அவனைத் தூண்டியது.

"போடி போடி புண்ணாக்கு. நீ போடாத தப்புக்கணக்கு..." என்று பாடினான்.

"நீதான்டா புண்ணாக்கு..." என்றவள், குனிந்து கல்லை எடுக்கவும், சைக்கிளை வேகமாக மிதித்தான் ரவி.

அவன் வேகமாக ஓடுவதைப் பார்த்தவள், கோபத்துடன் கல்லை நிலத்தில் எறிந்துவிட்டு, "பயந்த கோழி ஓடுகிறான். என் கையில் கிடைத்தாய், தொலைந்தாய்....." என்றவளின் பேச்சு அவன் மறையும் மட்டும் தொடர்ந்தது.

அவளின் அருகில் வந்த ராஜ், "அவன் என் நண்பன் கவி. மிகவும் நல்லவன், உன்னிடம் சும்மா வம்பிழுக்கிறான். நீ கோபிக்காதே..." என்றான்.

அவனை முறைத்த கவி, "ராஜண்ணா, அவனிடம் சொல்லி வையுங்கள். வாயை மூடிக்கொண்டு இருக்கச் சொல்லி. இல்லையானால் அவன் மண்டையை கல்லால் உடைத்துவிடுவேன்....." என்று ஆத்திரத்தில் மூச்சுவாங்கச் சொன்னாள்.

"அவனிடமும் சொல்கிறேன். நீயும் கொஞ்சம் கோபத்தைக் குறைக்கப் பழகு..." என்றான் ராஜ், சற்றே அதட்டலான குரலில்.

"ம்...ம்...." என்ற அவளின் இழுவையே நான் கேட்க மாட்டேன் என்றது.

"சரிம்மா. விரைவாக நட. பள்ளி தொடங்கப்போகிறது." என்றவன், நண்பனைப் பிடிக்க வேகமாக சைக்கிளை மிதித்தான்.

அன்றிலிருந்து கவியும் ரவியும் சந்திக்கும் தினங்கள் அத்தனையும் அவர்களின் சண்டை நாட்களாகவே முடிந்தது. ஒருவரை ஒருவர் முறைப்பதும், வம்புக்கு இழுப்பதும் என்று இருவருமே ராஜின் பேச்சைக் காதில் விழுத்துவதே இல்லை.

முதல்நாள் மண்டையை கல்லால் உடைப்பேன் என்று சொன்னவள், சொன்னது போலவே தன் மண்டையை உடைத்துவிட்டாள் என்று நினைத்த ரவிக்குச் சிரிப்பு வந்தது.

அவனின் சிரிப்பை பார்த்த ராஜ், "என்னடா சிரிக்கிறாய்...?" என்று கேட்டான்.

"இல்லையடா. சொன்னது போலவே என் மண்டையை உடைத்துவிட்டாள் உன் தங்கை..." என்றான் ரவி.

இதுவரை 'அந்தக் குண்டு...', 'பூசணி....' என்று கவியைச் சொல்பவன், இன்று 'உன் தங்கை...' என்று சொன்னதன் அர்த்தத்தை ராஜ் யோசிக்கவில்லை.

ஏன், ரவியே அதை அப்போது உணர்ந்துகொள்ளவில்லை.......
 
Top Bottom