• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு - 7

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-7


நெற்றியில் கட்டுடன் வந்தவனைப் பார்த்துப் பதறி, "என்ன நடந்தது ரவி? சைக்கிளால் விழுந்தாயா?" என்று கேட்ட சகுந்தலாவிடம், "ஆ..மா..ம் அம்மா....." என்றான் ரவி தடுமாற்றத்துடன், தாயின் முகம் பாராது.

பின்னே, முதன் முதலாகத் தாயிடம் பொய் சொல்கிறான் அல்லவா. அவனில் உயிரையே வைத்திருக்கும், அவனுக்காகவே வாழும் அம்மாவிடம் ஒரு பொய்யைச் சொன்னதில் மனம் தடுமாறியது. அதற்காக நடந்ததைச் சொல்லவும் விரும்பவில்லை அவன். என்னதான் மகனில் பாசமாக இருந்தாலும், வசதியற்றவர்களுடன், அதுவும் கூலிக்கு வேலை செய்து பிழைப்பவர்களிடம் அவன் பழகுவதில் சகுந்தலாவுக்கு உடன்பாடு இல்லை.

ராஜின் தந்தையும் தாயும் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறிப்பவர்கள் என்பதால், அவனுடன் ரவி பழகுவதையே விரும்பாதவர் சகுந்தலா. ஆனால் மகனின் உயிர் நண்பன் ராஜ் என்பதால் பொறுத்துக் கொள்பவர், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவனின் நட்பை விடசொல்லி சொல்வதையும் தவறவிடுவதில்லை.

அப்படியானவரிடம், சமையல் வேலை செய்பவளின் மகள் தன் மண்டையை உடைத்தாள் என்று சொன்னால், என்ன சொல்வாரோ என்கிற பயமும், கவியைக் காட்டிக்கொடுக்க மனது விரும்பாததிலும், தாய் 'சைக்கிளால் விழுந்தாயா' என்று கேட்கவும் ஆம் என்றுவிட்டான் அவன்.

"கவனமாக ஓட்டக்கூடாதா ரவி? சின்னக் காயம் என்றபடியால் பரவாயில்லை. இதுவே பெரிதாக ஏதும் நடந்திருந்தால்..."என்று, பரிதவிப்புடன் கண்கலங்கச் சொன்னவரின் கைகளோ ஆதுரத்துடன் மகனின் நெற்றிக்காயத்தை தடவிக்கொடுத்தது.

குற்ற உணர்ச்சியால் மனம் சுட்ட போதும், தாயின் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் பொத்திக்கொண்டவன், "அம்மா, சின்னக் காயம்தானே. இனிப் பார்த்து ஒட்டுகிறேன்....!" என்றான் ரவி.

"வா. எதற்கும் ஒரு முறை வைத்தியரிடம் காட்டிவிடலாம். அப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கும்!" என்று அழைத்தவரிடம், "அம்மா, ராஜுடன் சென்று வைத்தியரை பார்த்து மருந்து கட்டிக்கொண்டுதான் வருகிறேன்..." என்றான் ஆறுதலாக.

அவனை முறைத்தவர், "அவனைப் பார்க்கப்போய்த்தான் விழுந்திருக்கிறாய் இல்லையா...! முதலில் அவனுடன் பழகுவதை நிறுத்து! இங்கிருந்து தினமும் அந்த மலைக்குச் சைக்கிளை மிதிக்கிறாயே, உனக்கு என்ன வேண்டுதலா?" என்றார் கோபத்துடன்.

"அம்மா, அவன் என் நண்பன்! தயவு செய்து இந்தப் பேச்சை விடுங்கள்! எனக்கு தலை வலிக்கிறது. நான் கொஞ்சம் தூங்கபோகிறேன்..." என்றான் சோர்வுடன்.

மகனின் முகம் வாடவும், "சரிசரி. அவனைப் பற்றி நான் எதுவும் கதைக்கவில்லை. நீ சாப்பிட்டு விட்டுத் தூங்கு." என்றவர், அவனுக்கு உணவை எடுத்து வைத்தார். இரவு உணவினை முடித்துக்கொண்டு கட்டிலில் விழுந்தவனின் மனம் எழுத்தில் வடிக்கமுடியா பரவசத்தில் மிதந்தது.

இதுவரை அறியாத ஒரு உணர்வு, தேகம் முழுதும் பஞ்சாய்ப் பறப்பது போல் இருந்தது ரவிக்கு. பட்ட காயத்தால் தலை வலித்தபோதும், அதுகூடச் சுகமாக இருந்தது அவனுக்கு! பாடவேண்டும் போல் தோன்றியது. ஆனால் பாட்டு வரவில்லை. துள்ளிகுதித்து ஆடவேண்டும் போலிருந்தது. தலைவலி ஆடவிட மறுத்தது. இதழ்களில் ஒரு புன்னகை. கண்களோ முகட்டில் தெரிந்த ஏதோ ஒன்றைத் தன்னை மறந்து ரசித்தது. இத்தனைக்கும் காரணம், இன்று மாலை கண்ணனால் அவனுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட 'காதல்' என்கிற ஒரு சொல்லே!

தூக்கம் வரமாட்டேன் என்று அடம்பிடித்தாலும், கண்ணை மூடிப் படுத்திருந்தவனின் மனமோ முழித்துக் கிடந்தது. உணர்வுகளின் பரபரப்பில் தூக்கம் இன்றியே அன்றைய இரவை கழித்தவன், அடுத்த நாள் காலை உற்சாகமாக பள்ளிக்குத் தயாராகிச் சென்றான்.

அதுவரை ராஜை மட்டுமே பார்க்கச் சென்ற ரவி, இன்று இனம் புரியா ஒரு தேடலையும் சுமந்துகொண்டு ராஜின் கிராமத்துக்கு சைக்கிளை மிதித்தான்.

எதை எதிர்பார்க்கிறோம் என்றே தெரியாத ஒரு எதிர்பார்ப்பு, எதற்கு இந்த பரபரப்பு என்றே தெரியாத ஒரு தடுமாற்றம் அவனைச் சூழ்ந்திருந்தது.

அந்தப் பாதையையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த ரவியின் கண்கள் தூரத்தில் வந்துகொண்டிருந்த கவியைக் கண்டுகொண்டது. பளிச்சிடலுடன் கண்கள் விரிய, சிறு சிரிப்புடன் அவளையே பாத்திருந்தவனை முறைத்தவாறே நடந்து வந்தாள் கவிநயா.

அவனின் பார்வை அவளின் முகத்தை விட்டு அகலாமல் தொடரவே, "என்னடா எலும்புக்கூடு. நேற்று வாங்கியது போதாதா?" என்றவளின் கண்களோ, ஏளனமாக அவனின் நெற்றியைத் தொட்டு மீண்டது. அவன் மண்டையை உடைத்துவிட்டாளாம்!

அப்போதும் சிரிப்பு மாறாது, ரசனையான பார்வையால் அவளை அளந்துகொண்டே, "என் மண்டையை உடைத்தும் உன் கோபம் போகவில்லையா...?" என்று சிறு நகை கலந்த குரலில் கேட்டான்.

அவனின் கோபம் இல்லா குரலில், ஏன் சீண்டல் கூட இல்லாமல் வந்த சாதாரண குரலில் திகைத்து நின்றாள் கவிநயா.

என்னதான் தைரியமாக காட்டிக்கொண்டாலும், அவனின் மண்டையை உடைத்ததை நினைக்கையில் அவளுக்குள் சிறு பயம் இருந்தது உண்மை. அவனுக்கு கோபம் வந்திருக்குமோ, இன்று என்னைக் கண்டவுடன் அடித்து விடுவானோ அல்லது பயங்கரமாக மிரட்டுவானோ என்று பயந்துகொண்டே தான் அவள் பள்ளிக்கு நடந்துவந்தது.

பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் அலட்சியம் காட்டி நடந்துவந்தவள், அவனின் மனநிலையை அறியவே தைரியமாக பேசுவது போல் பேச்சை ஆரம்பித்ததும். அவன் மிக இலகுவாகக் கதைத்ததில், ‘இவனுக்கு மண்டையில் அடி பட்டதில் ஏதும் நடந்துவிட்டதோ...’ என்று குழம்பியவள், அவனை உற்றுப் பார்த்துவிட்டு விறு விறுவென நடந்து சென்றாள்.

பின்னே, கோபம் எதுவும் இல்லாமல் இருப்பவனிடம் வம்பை வளர்த்து அவன் அடித்துவிட்டால் என்ன செய்வது? எனவே நல்ல பிள்ளையாக எட்டி நடந்தாள். அவள் போவதையே பாத்திருந்தவனின் உள்ளத்தில் ஏனோ ஒரு துள்ளல்!

ரவிக்கு மனம் இதமாக சுகமாக இசை பாடியது. காரணம் இல்லா இந்த சுகத்துக்கான காரணத்தைத் தேடாது, உதட்டில் வற்றாத புன்னகையுடன், அவள் தன் பார்வையில் இருந்து மறையும்வரை அவளையே பாத்திருந்தவன், சைக்கிளில் அமர்ந்து அதை மிதித்தான்.

எதிரே ராஜ் வரவும், "ஹாய்டா...." என்றான் மலர்ந்த சிரிப்போடு.

அவனைக் குறுகுறு என்று பார்த்த ராஜ், "என்னடா.... இவ்வளவு சந்தோசமாக இருக்கிறாய்? என்ன விஷயம்? நேற்று மண்டை உடைந்ததில் எதுவும் பிசகிவிட்டதா?" என்றான், தலையைக் கையினால் தொட்டுக்காட்டி.

சத்தமாகச் சிரித்த ரவி, "அப்படி எதுவும் இல்லைடா மச்சான். ஒரு மனிதன் சிரிப்பது ஒரு குற்றமா? இல்லை, சந்தோசமாக இருப்பது குற்றமா? மனம் விட்டுச் சிரிப்பவனை உங்கள் ஊரில் லூசு என்று சொல்வீர்களா?" என்றான் சிரிப்போடு.

ரவியைக் கையெடுத்துக் கும்பிட்ட ராஜ், "என்னை விட்டுடு ராசா! மச்சான் என்று உறவு வேறு கொண்டாடுகிறாய். உனக்கு என்னவோ ஆகிவிட்டது! அது மட்டும் மிக நன்றாக விளங்குகிறது எனக்கு! மலிந்தால் சந்தைக்கு வரும்தானே… அப்போது கேட்கிறேன்...!" என்றவனின் செயலில், மறுபடியும் வாய்விட்டுச் சிரித்தான் ரவி.

கரிய முகத்தில், அரும்பிய மீசையுடன் கம்பீரமாக வெண்பற்கள் தெரியச் சிரித்தவனை பார்த்த ராஜின் முகத்திலும் மெல்லிய சிரிப்பொன்று ஓடியது.

"விட்டால் இன்று முழுதும் நீ சிரித்துக்கொண்டே இருப்பாய்! பள்ளிக்கு நேரமாகிவிட்டது. வா போகலாம்..." என்றபடி ராஜ் சைக்கிளை மிதிக்கவும், ரவியும் அவனோடு சென்றான்.

"இன்று நீ வருவதற்கு நேரம் பிந்திவிட்டதே, ஏன் ராஜ்?" சைக்கிளை மிதித்தபடி கேட்டான் ரவி.

"ப்ச்! மறுபடியும் அப்பாவுக்கு முடியாமல் போய்விட்டது ரவி. வேலைக்கு போகவேண்டாம் என்று சொன்னால், சாப்பாட்டுக்கு வழி என்ன என்று கேட்கிறார். அம்மா மட்டும் வேலை செய்தால் வீட்டுச் செலவுக்கும் போதாது. பேசாமல் படிப்பைத் தூக்கி மூலையில் போட்டுவிட்டு வேலையைப் பார்க்கலாமா என்றும் தோன்றுகிறது. அதுதான் இன்று அப்பாவை வீட்டில் மறித்துவிட்டு வேலைக்கு நான் போகலாம் என்று நினைத்தேன். அவரோ, தான் வேலைக்கு போவதாகச் சொல்லி என்னைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டார். அதுதான் வருவதற்கு கொஞ்சம் பிந்திவிட்டது." என்றவனின் குரலில் சோர்வு நிரம்பி வழிந்தது.

ஏழ்மை, மனிதனின் தன்னம்பிக்கையை அடியோடு அழிக்கும் மிகப் பயங்கரமான ஆயுதம். அது இன்று ராஜின் மனதைப் போட்டு வாட்டியத்தில், அவன் குரல் சுரத்தில்லாமல் வந்தது.

நண்பனின் நிலையை அறிந்தவன், "நான் பணம் தரவா ராஜ். என்னிடம் உனக்கு என்னடா கவுரவம் பார்க்கவேண்டி இருக்கிறது. எப்போது கேட்டாலும் வேண்டாம் என்று மறுக்கிறாய். உனக்குச் செய்வதில் எனக்கு என்னடா வர இருக்கிறது? இப்படி உன் அப்பாவையும் வருத்தி உன்னையும் வருத்த வேண்டுமாடா. நான் உன் நண்பன் தானே ராஜ்? நான் உதவி செய்தால் அதை ஏற்க மாட்டாயா?" என்று கேட்ட ரவியின் குரலில், ஆதங்கம் நிறைந்திருந்தது. நண்பனின் கஷ்டத்தைப் போக்க தன்னிடம் வழி இருந்தும் அதை ஏற்க மறுக்கிறானே என்கிற கோபமும் கலந்திருந்தது.

"ஹேய் ரவி. எந்த உறவையும் கெடுக்கும் முதல் எதிரி இந்தப் பணம் தான்டா! அது நமக்குள் வரவேண்டாம்! அத்தோடு என் சொத்தாக இருப்பது இந்தச் சுயகவுரவம் ஒன்றுதான்! அதை எந்த இடத்திலும் இழக்க நான் விரும்பவில்லை ரவி!" என்றவன் தொடர்ந்து, "நீ என் நண்பன்டா....! நட்பு என்பது எதையும் எதிர்பார்க்காமல் வரும் உன்னத உறவு! இன்று நீ பணம் தந்தால், மறுபடியும் ஒரு கஷ்டம் என்று வருகையில் உன் உதவியை எதிர்பார்க்கும் என் மனம். அப்படி ஒரு எதிர்பார்ப்புடன் உன்னுடன் நட்பாகப் பழக எனக்கு விருப்பம் இல்லை. தயவு செய்து என்னைப் புரிந்துகொள் ரவி!" என்றான் ராஜ்.

எப்போது இதைப் பற்றிப் பேசினாலும் ராஜின் பதில் இதுவாகவே இருப்பதால் உண்டான சலிப்பில், "போடா! நீயும் உன் தத்துவமும்! வசதி இருந்தும், நீ கஷ்டபடுகிறாய் என்று தெரிந்தும் ஒரு உதவியும் செய்ய முடியவில்லையே என்று என் மனம் கஷ்டபடுகிறது. அது புரியவில்லை உனக்கு! ஆனால் என்றாவது உனக்கு எந்த உதவி தேவை என்றாலும் உன் நண்பன் நான் இருக்கிறேன் என்பதை மறவாதே!" என்றான் ரவி.

"நிச்சயமாக ரவி. யாரினதும் உதவி எனக்கு வேண்டும் என்கிற நிலை வந்தால், நான் உன்னிடம் தான் முதன் முதலில் வருவேன்..." என்றான் ராஜும் முகம் மலர. அதற்கு மேல் அதைப் பற்றிப் பேசாது, வேறு பேசி ராஜின் மனதை மாற்றினான் ரவி.

மாலையில் பள்ளி முடிந்து ராஜுடன் வந்த ரவியின் கண்களில், அருந்ததியுடன் பேசியபடி வந்த கவி பட்டாள். மனதை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த ஒருவித மயக்க மலைச்சாரலில் நனைந்துகொண்டிருந்தவனின் கண்கள் அவளைக் கண்டதும் குறும்பில் மின்னியது. "எங்கே போய்விட்டு வருகிறாய் கறுப்பி?" என்றான், அவளின் வாயைக் கிளரும் ஆசையில்.

வெள்ளைச் சீருடையில் பள்ளி ‘பாக்’கைச் சுமந்தபடி வருபவள், எங்கே போய்வருவாள் என்று பார்ப்பவருக்குப் புரியாதா என்ன! அவன் தன்னைச் சீண்டவே அப்படிக் கேட்கிறான் என்பதை உணர்ந்தவள், "அதுவா.., உன் சமாதிக்குப் பூ வைத்துவிட்டு வருகிறேன்..." என்றாள் அவனை முறைத்தபடி!

"உண்மையாகவா கவிநாய்? என்ன நிறப்பூ வைத்தாய்? உன்னைப்போல இருக்கும் கறுப்பு பூ வைத்தாயா கவிநாய்....?" என்று அவன் அவளை 'நாய்' என்று சீண்டவும், அடித்துவிட்டோமே என்று கொஞ்சமே கொஞ்சம் மிஞ்சி இருந்த தயக்கத்தையும் தூக்கி எறிந்துவிட்டு,

"அடி வாங்கியும் அடங்கவில்லையாடா நீ? அடேய் பிசாசு, இனி என் கையில் அகப்பட்டாய்.. கல்லால் எறியமாட்டேன். உன் மண்டையை அப்படியே பிடுங்கி, உரலில் போட்டு இடித்து, ரசம் வைத்துக் குடித்துவிடுவேன்..." என்று, ஆள்காட்டி விரலை நீட்டித் திட்டியவளின் கண்களில் கொலை வெறியே தாண்டவமாடியது.

காளியாக மாறி அவனைக் காலியாக்கக் காத்திருந்தவளின் உருவத்தைப் பார்த்துப் பெரிதாக வாய்விட்டு நகைத்தான் ரவி. தான் என்ன சொன்னாலும் இருவரும் காதில் விழுத்தப் போவதில்லை என்பதை உணர்ந்து, எதுவும் சொல்லாது இருவரையும் முறைத்தபடி நின்றான் ராஜ்.
 

Vishakini

Moderator
Staff member
"என் கோபம் உனக்கு சிரிப்பாக இருக்கிறதாடா?" என்று கோபத்துடன் கேட்டவள், கல் ஏதும் கிடக்கிறதா என்று தரையை ஆராயவும், "தாயே! என்னை விட்டுவிடு! உன்னிடம் அடிவாங்கி அம்மாவிடம் திரும்பவும் பொய் சொல்ல என்னால் முடியாது...!" என்று சிரிப்புடன் சொன்னவன், ராஜின் பக்கம் திரும்பி, "உன் தங்கை என்னை ஒரு வழி செய்யாமல் விடமாட்டாள் போல. நான் கிளம்புகிறேனடா....." என்றுவிட்டு, விரைவாக சைக்கிளைத் தன் வீடு செல்லும் பாதையில் விட்டான் ரவி.

"நாளை என்னிடம் மாட்டாமலா போவாய். அப்போது இருக்கிறது உனக்கு!" என்று, அவன் சென்ற பக்கம் பார்த்துக் கத்தியவளை முறைத்தான் ராஜ்.

"கவி, நீ கொஞ்சம் கோபத்தைக் குறைக்கப் பழகு! இல்லையானால் நானே மரகதம் மாமியிடம் சொல்லிக்கொடுத்து விடுவேன். உனக்கு அடி விழுமே என்று யோசிக்கிறேன். இல்லையானால் கட்டாயம் சொல்லுவேன்!" என்றான் அதட்டலாக.

அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்று ராஜ் சொன்னதில், பயந்துபோய் அவனைப் பார்த்தவள், இதுவரை அவன் அப்படிச் செய்ததில்லை என்று உணர்ந்து பயம் தெளிந்தாள்.

ஆனாலும் இயல்பான துடுக்குத்தனம் தலை நீட்ட, "அவனிடமும் சொல்லிவையுங்கள்....." என்றவளை மேலே பேசவிடாது, "கவி, போதும் நிறுத்து! என்ன இருந்தாலும் அவன் உன்னை விட வயதில் பெரியவன்! வயதிற்காவது மரியாதை கொடுக்க பழகு!" என்றவன், அவளுக்கு முகம் கொடுக்காது வீட்டுக்கு விரைந்தான்.

ராஜ் என்றுமில்லாது இன்று அதிகப்படியாக அதட்டியது அவளின் மனதை வருத்தியது. அந்த வருத்தமும் ரவியின் மீது கோபமாகத் திரும்பியது. பின்னே, அவளின் உடன்பிறவா அண்ணனிடம் திட்டு வாங்க வைத்துவிட்டானே!

ரவியின் மீது மிகுந்த கோபத்துடன் வீட்டுக்குச் சென்றவளை அதைவிட கோபத்துடன் எதிர்கொண்டார் மரகதம்.

அவர்களின் சிறிய ஒலைகுடிசைக்குள் நுழைந்தவளை, "நேற்று வீதியில் என்ன நடந்தது?" கோபத்துடன் கேட்டவரிடம், "ம்ம்ம்… ஆடு நடந்தது! மாடு நடந்தது! கோழி நடந்தது!" என்றாள் கடுப்புடன். ரவி மீது இருந்த கோபமும், வீட்டுக்குள் வந்தவுடனேயே தாய் கேட்டதும் அவளுக்கு சினத்தைக் கொடுத்தது. அந்தச் சினமே கடுப்பாக மாறி, தாயிடம் சிடுசிடுக்க வைத்தது.

மரகதத்துக்கோ, அவள் பதில் சொன்னவிதம் இன்னும் கோபத்தை உண்டாக்கியது.

இன்று, தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மதிய உணவினை சமைத்து எடுத்து சென்றவரிடம், "என்ன மரகதம், உன் மகள் நேற்று யாரோ ஒரு பெடியனுக்கு(பையனுக்கு) கல்லால் எறிந்தாளாமே. இது என்ன பழக்கம்? ஒரு பெண்பிள்ளை செய்யும் வேலையா இது? என் மகள் நேற்றுப் பள்ளி முடிந்து வருகையில் கண்டிருக்கிறாள்." என்று, சாப்பிட வந்த பெண் செல்வி சொல்லவே உள்ளே சுறு சுறு என்று ஏறியது மரகதத்துக்கு!

"சும்மா போகும் ஒருவனுக்கு யாராவது கல்லால் எறிவார்களா செல்வி? அவன் எதுவோ செய்திருக்க வேண்டும். அதனால்தான் கவி அப்படி செய்திருப்பாள்...." என்றார் மரகதம் கோபத்தை வெளியே காட்டாத குரலில். கோபம் மனதில் இருந்தாலும் மகளை அடுத்தவரிடம் விட்டுக்கொடுக்க மனம் வரவில்லை அவருக்கு. தாயுள்ளம் அல்லவா!

"அவன் ஆண்பிள்ளை! பெண்பிள்ளைகளைப் பார்த்தால் கேலி கிண்டல் செய்வது இயல்பு. அதற்காகக் கல்லால் அடிக்கலாமா உன் மகள்? என் மகளிடம் சொல்லிவிட்டேன், இனிக் கவியுடன் சேர வேண்டாம் என்று. இல்லாவிட்டால் உன் மகளுடன் சேர்ந்து என் மகளும் இந்தக் கேடு கெட்ட பழக்கங்களைப் பழகிவிடுவாள். " என்றவளின் பேச்சில் செல்வியை முறைத்தார் மரகதம்.

"உன் மகளுடன் பழகாமல் இருப்பது என் மகளுக்கும் நல்லதுதான். உன் மகள் வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தைகளை தான் பேசுவாள். என் மகள் வாயாடியாக இருந்தாலும், கூடாத சொற்களைப் பேசமாட்டாள். அதனால் நீ செய்ததுதான் சரி!" என்று செல்வியின் வாயை அடைத்தார் மரகதம்.

சட்டென்று வாயை மூடிக்கொண்டார் செல்வி. பின்னே மகளைப் பற்றிய உண்மையை சொல்லிவிட்டாரே மரகதம். எதுவுமே பேசாது, அவர் சொன்னது காதில் விழாததுபோல் உணவினை செல்வி சாப்பிடவும், மரகதத்தின் மனமோ ஆத்திரத்தில் துடித்தது.

அதே கோபத்துடன் காத்திருந்து வீடு வந்த மகளிடம் கேட்டால், அவள் எடுத்தெறிந்து பதில் சொல்லவும், "செய்வதை எல்லாம் செய்துவிட்டு எடுத்தெரிந்தா பேசுகிறாய்? ஏதாவது ஒன்று நடந்தால், என்ன என்று கேட்பதற்கு நாதியற்றவர்கள் நாம். அந்த அறிவு கொஞ்சமாவது இருக்கிறதா உனக்கு!" என்று கேட்டவர் அடுப்பு எரிக்க எடுத்துவைத்திருந்த விறகுக்கட்டையால் கவிக்கு சாத்து சாத்தென்று சாத்திவிட்டார்.

"ஐயோ அம்மா! அடிக்காதிங்க. அம்மா வலிக்கிறது. அம்மா! அம்மா! வேண்டாம்..." என்று கதறியவளின் குரலைக் கொஞ்சமும் சட்டை செய்யாது, "இனிமேல் எவனுடனாவது வம்பு இழுப்பாயா? கல் எடுத்து எறிவாயா? இனி யாருடனும் சண்டை பிடிப்பாயா?" என்று வாய் கேட்டாலும், துள்ளி வெளியே ஓடப்பார்த்த மகளின் கையை எட்டி பிடித்தவர், அவளின் முழங்காலுக்கு கீழே அடிப்பதை நிறுத்தவே இல்லை.

கண்கள் கண்ணீரைக் கொட்ட, "இல்லம்மா. இனி அப்படிச் செய்யமாட்டேன். அம்மா அடிக்காதீர்கள். இல்லை… இனிக் கல் எடுத்து எறியமாட்டேன்..... ஐயோ அம்மா வலிக்குது… விடுங்கம்மா..." என்று கதறியவளின் கதறலைக் கேட்காது அடித்து நொறுக்கி விட்டார் மரகதம்.

தனக்குக் கை வலித்தபோதே அடிப்பதை நிறுத்தினார். தன் வாழ்வில் நடந்ததே தன் மகளுக்கும் நடந்துவிடுமோ என்கிற பயத்தில், பாசத்தைக் காட்டப் பயந்து கோபத்தைக் காட்டியதில், புண்ணாகி போனது கவியின் பூமலர் மேனி.

"என் காதில் நீ எவனுடனாவது சண்டை பிடித்தாய், வாய் காட்டினாய் என்று கேள்விப்பட்டேன் என்று வை, இனி அடிக்க மாட்டேன், நெருப்பால் வாயையும் காலையும் சுட்டுவிடுவேன் சொல்லிவிட்டேன்!" என்று சுட்டுவிரல் நீட்டிக் கடுமையாகச் சொன்னவர், அடிவாங்கிக் களைத்துக் கண்ணீர் விட்டபடி தரையில் கிடந்து விக்கி விக்கி அழுதவளைக் கவனிக்காமல் வெளியே சென்றார்.

தன் வேலைகளை முடித்து மரகதம் வீட்டுக்கு வந்தபோது, போகும்போது எப்படிக் கிடந்தாளோ அப்படியே கிடந்தபடி தூங்கிப்போய் இருந்தாள் கவி.

கால்களில் விறகுக் கட்டை கீறியதில், இரத்தம் ஆங்காங்கே வழிந்திருக்க, அடி பட்ட இடங்கள் தடித்து சிவந்திருக்க, அழுதழுது வீங்கிய முகத்துடன் தூங்குபவளைப் பார்த்த மரகதம், அவளின் காலடியில் அமர்ந்து அழுதார்.

பெற்ற தாய் அல்லவா! கோபம் வந்ததில் தன்னை மறந்து அடித்தவருக்கு, கோபம் போனதும் மகள் மேனியில் இருந்த காயங்கள் அவரைச் சுட்டது!

"என் செல்வமே, உன் அப்பன் என்னை எமாற்றிய போதும் எனக்கு நீ இருக்கிறாய் என்று நம்பித்தானே நான் உயிர் வாழ்ந்தேன். நீ இப்படி நடக்கலாமா கவி. அப்பன் இல்லாமல் வளர்ந்த பிள்ளை இப்படித்தான் ஆவாள் என்று யாரும் சொல்லக்கூடாது என்று கண்டிப்பு காட்டினேனே. உனக்கும், எனக்கு நடந்தது போல் நடந்துவிட்டால் என்னால் தாங்கவே முடியாதும்மா! நீயாவது கணவன் குழந்தை என்று நல்லபடியாக வாழவேண்டும். நீ சந்தோசமாக வாழ்வதை என் கண்களால் பார்க்கவேண்டும் கவி. அப்போதுதான் என் கட்டை வேகும்...!" என்று அழுதவர், மகளின் கால்களை உழைத்துக் காய்த்திருந்த கைகளால் மெல்லத் தடவினார்.

அவரின் அந்த மெல்லிய தொடுகையே வலித்தது கவிக்கு. சட்டென்று காலை இழுத்தவளுக்கு முழிப்பும் வந்துவிடவே, கண் விழித்துத் தாயைப் பார்த்தவளின் விழிகள், கலங்கிய போதும், 'அடித்துவிட்டாயே...' என்று குற்றம் சாட்டியது!

"வலிக்கிறதா கவி? அம்மா மேல் கோபமாடா...?" கண்கள் கலங்கக் கேட்டவரை முறைத்தவள், எதுவும் பேசாது எழுந்தாள். எழவே கஷ்டப்பட்டவளைப் பார்க்க மனம் வலித்தது மரகதத்துக்கு. கோபத்தில் நிதானத்தை இழந்துவிட்டோமே என்று தன்னைத் தானே நொந்தவர், தானும் வேகமாக எழுந்து மகளுக்கு எழுவதற்குக் கை கொடுக்க, அதை உதறியவளுக்கு வலியில் உயிர் போனது. அடி விழுந்த இடம் அத்தனையும் புண்ணாக வலிக்க, மறுபடியும் கண்கள் கண்ணீரைக் கொட்ட, நடக்க முடியாமல் நொண்டி நொண்டி உள் அறைக்குள் சென்றாள் கவி.

"சாப்பாடு போடவா கவி...?" என்று கேட்ட மரகதத்துக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் உடையை மாற்றி, முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தவள், அறைக்குள் சென்று பாய் விரித்துப் படுத்துக்கொண்டாள்.

"கவி, சாப்பிடு...." என்றபடி உணவுத்தட்டினை எடுத்து வந்தவரைப் பார்க்காமல் கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள் கவி.

"நீ பிழை செய்தபடியால் தானே அம்மா அடித்தேன். நமக்கு யார் இருக்கிறார்கள் சொல்? என்ன நடந்தாலும் நம்மைப் பார்க்கவோ அல்லது ஏதாவது உதவி செய்யவோ நமக்கு யாரும் இல்லை கவி. அப்படி இருக்கையில் நாம் தான் நம்மைப் பார்த்துக்கொள்ள வேண்டும். நீயானால் தினமும் யாருடனாவது சண்டை பிடித்துக்கொண்டு வருகிறாய். உனக்கு ஏதாவது நடந்துவிட்டால் அம்மாவால் என்ன செய்ய முடியும் சொல்லு?" கண்கள் கலங்கத் தங்கள் இயலாமையை சொல்லியவரின் பேச்சைக் கேட்ட கவிக்கு அழுகை வந்தது.

தட்டில் இருந்த சோற்றைக் கறியுடன் சேர்த்துக் குழைத்தபடி, "நீ இன்னும் சின்னக் குழந்தை இல்லை கவி. பதினைந்து வயதாகிறது. கொஞ்சம் பொறுமையாக, பார்த்து நடக்கப் பழகவேண்டும். அப்பன் இல்லாப் பிள்ளை தப்பாகப் போய்விட்டால் என்று யாரும் சொல்லக்கூடாது கவிம்மா... தப்பித்தவறி அம்மாவுக்கு எதுவும் நடந்துவிட்டது என்று வை, உன்னை பார்த்துக்கொள்ள யார் இருக்கிறார்கள்? அதனால் எப்போதும் பொறுப்பாக நடக்கபழக வேண்டும் செல்லம்...." என்றவர், ஒரு பிடி சோற்றை மகளின் வாயருகே கொண்டு செல்லவும், தாயின் பேச்சில் மனம் இளகிக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தவள், தன் கோபத்தை மறந்து வாயை ஆவென்று காட்டி சோற்றை உள் வாங்கினாள்.

முகம் மலர மகளுக்கு உணவை ஊட்டிய மரகதத்துக்கு, அவள் சோற்றை வாங்கிய வேகமே அவள் எவ்வளவு பசியோடு இருக்கிறாள் என்பதை உணர்த்தியது. பசியோடு வந்தவளை அடித்துவிட்டேனே என்று இன்னும் மனம் நோக, கண்களில் கண்ணீரும் உதட்டில் புன்னகையுமாக மகளுக்கு உணவை ஊட்டி முடித்தார். அவள் வாயையும் ஈரக்கையால் துடைத்துவிட்டவர், "இனித்தூங்கு..." என்று மகளின் தலையை அன்போடு தடவிக்கொடுத்தார்.

அடிவாங்கிய உடலின் வலி அவளை உடனேயே கண்ணயர வைத்தது.

'என்றும் நீ நன்றாக இருக்கவேண்டும் கவி. அம்மாவுக்கு உன் மேல் பாசம் இல்லை என்று நினைத்தாயா. என் உயிரே நீதானேம்மா! எனக்கென்று இருக்கும் ஒரே சொந்தம் நீ. எனக்கு நடந்த எதுவும் உன் வாழ்வில் நடந்துவிடக்கூடாதுடா. அதனால் தான் அம்மா உன் மீது கண்டிப்புக் காட்டுகிறேன்...' என்று நினைத்தவரின் கண்களோ கண்ணீரைப் பொலபொலவென்று கொட்டியது.

மகள் உறங்கியதும், அவளை அடித்துவிட்டோமே என்கிற கழிவிரக்கத்தில் உணவை மறந்து மகளின் அருகாமையிலேயே அவளை அணைத்தபடி தானும் துயில் கொண்டார் மரகதம்!

மகளின் அருகாமை மனதின் வலிக்கு மருந்தாக இருந்தது போலும் அந்த தாய்க்கு!
 
Top Bottom