என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 1
வீட்டில் உள்ள கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்த சௌமிகாவிற்கு அவளின் தாய் கமலா அழைப்பது கேட்கவும் “அம்மா என்ன…? ஏன் கூப்பிட்டீங்க…? ” என்று வினவியவாறு அவளின் அறையில் இருந்து வெளியே வந்தாள்.
“ஏழு மணிக்கு ஆட்டோ வந்திடும், ரெடி ஆயிட்டியா?” எனக் கேட்டவர் “இதில இன்னும் கொஞ்சம் வடகமும் மோர் மிளகாயும் இருக்கு…, இதையும் எடுத்துக் கொண்டு போய் பாக்கில வை” என்றவாறு சிறிய பார்சல் ஒன்றை அவளிடம் கொடுத்தார் கமலா.
“அம்மா… இதெல்லாம் ஏற்கனவே வச்சாச்சு தானே…, பாக்கிலயும் இடம் இல்லை” என்றாள் சிறு அலுப்புடன்.
“கோவில் திருவிழா வருகுது, அக்கா வீட்டில் சைவமா தான் சாப்பிடுவினம், அத்தானுக்கு வடகம், மோர் மிளகாய் என்றால் விரும்பி சாப்பிடுவார். பத்மா அக்காவுக்கும் கொடுக்கலாம், அதுதான் அனுவின்ர அம்மாட்ட கேட்டனான். அவா இப்பத்தான் கொடுத்து அனுப்பி இருக்கிறா. இதையும் கொண்டு போய் பாக்கில வை சௌமி...” என்றார். அந்தப் பார்சலையும் வாங்கி ஏற்கனவே நிரம்பி இருந்த பயணப் பையில் அடைத்து கொண்டாள் சௌமி.
“அக்கா... ரெடியா? ஆட்டோ வந்திட்டுது” என்றவாறு அவளுடைய செல்லத் தம்பி விக்ரம் வந்தான்.
“ஓம்.... நான் ரெடி” என அவள் கூறவும் தந்தை சிவநாதனும் விக்ரமும் பயணப் பைகளை ஆட்டோவில் ஏற்றி வைத்தனர். தாயிடமும் தம்பியிடமும் கட்டியணைத்து விடைபெற்ற சௌமிகா ஆட்டோவில் ஏறினாள். சிவநாதன், மனைவியிடமும் மகனிடமும் கவனமாக இருக்கும்படி கூறிவிட்டு ஆட்டோவில் ஏற, அது கிளம்பியது.
சௌமிகாவின் தாயும் தந்தையும் பிறந்தது வளர்ந்தது எல்லாமே யாழ்ப்பாணத்தில் உள்ள தாவடி என்னும் சிறு கிராமத்தில் தான். அங்கே ஓர் பாடசாலையில் சிவநாதன் ஆசிரியராக தொழில் பார்க்கிறார். கமலா வீட்டுத் தலைவி. சௌமிகாவிற்கு வயது பத்தொன்பது, அவள் யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் படித்து, உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவிற்க்கு தேர்வாகி உள்ளாள். அதற்காகத்தான் இப்போது அவள் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருக்கிறாள். தம்பி விக்ரம் 9 ஆம் ஆண்டில் கல்வி கற்கின்றான். தன்னை விட ஐந்து வயது குறைவான தம்பி மீது சௌமிகாவிற்கு கொள்ளை பிரியம். அது போலத் தான் விக்ரமிற்கும் தமக்கை மீது அளவு கடந்த அன்பு, மரியாதை எல்லாம் உள்ளது. இருவரது பாடசாலைகளும் அருகருகே இருப்பதால், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து, தத்தமது துவிச்சக்கர வண்டியில் அங்கு போய் வந்தனர். இருவரும் ஒன்றாக விளையாடுவார்கள், சௌமிகா அவனுக்குப் புரியும் விதமாக பாடங்கள் சொல்லிக் கொடுப்பாள். அவர்கள் இருவரின் ஒற்றுமையைப் பார்த்து அவர்களைப் பெற்றவர்கள் பெருமை அடைவார்கள்.
கமலாவின் அக்கா சகுந்தலாவும் கணவர் ரவீந்திரனும் கொழும்பில் வசிக்கின்றார்கள். ரவீந்திரன் அங்கு உள்ள ஓர் கம்பெனியில் வேலை செய்கிறார். அவர்கள் கொழும்பு வெள்ளவத்தையில் ஐபிசி தெருவில் உள்ள இரண்டு பெரிய அறைகள், விசாலமான ஹால், சகல வசதிகளுடன் கூடிய குளியல் அறை கொண்ட ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாம் மாடியில் வசிக்கின்றார்கள். அவர்களுக்கு பிள்ளைப் பாக்கியம் அமையாததால், சௌமிகாவையும் விக்ரமையும் தங்கள் சொந்த குழந்தைகளாக எண்ணி அன்பு செலுத்துகிறார்கள். ஒவ்வொரு பாடசாலை விடுமுறை நாட்களிலும் இவர்கள் பெரியம்மாவின் வீட்டுக்கு சென்று அவர்களுடன் தான் அவர்களின் விடுமுறையை கழிப்பார்கள். ஊரில் நடைபெறும் கோவில் திருவிழா, நெருங்கிய உறவினர்களின் வீட்டு விசேஷம் போன்றவற்றில் கலந்து கொள்வதற்காக சகுந்தலாவும் ரவீந்திரனும் யாழ்ப்பாணத்துக்கு அடிக்கடி வருவார்கள்.
சௌமிகா, கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டதும், தனது பெற்றோரையும் தம்பியையும் பிரிந்து சிறிது காலம் தங்க வேண்டும் என்று கவலை இருந்தாலும், தனது அன்பு பெரியம்மா, பெரியப்பாவுடன் சில வருடங்கள் வசிப்பதில் அவளுக்கு மகிழ்ச்சி தான். அவள் கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு தெரிவானதில் அவளின் பெரியம்மா, பெரியப்பாவும் பெரும் ஆனந்தம் அடைந்தனர்.
அதிகாலையில் சௌமிகாவும் அவளின் தந்தையும் கொழும்பை வந்தடைந்தனர். அவர்களை அழைத்துப் போக ரவீந்திரன் வந்திருந்தார். சௌமிகாவும் சிவநாதனும் பஸ்ஸிலிருந்து இறங்குவதைக் கண்ட அவர், அவர்களிடம் நெருங்கி வந்து, “வாங்கோ… எப்படி இருக்கிறீங்கள்…? பயணம் எப்பிடி இருந்தது?...” என்றவாறு அவர்களை வரவேற்றார்.
“நாங்கள் நல்லா இருக்கிறம் அண்ணா, நீங்கள் சுகமா இருக்கிறீங்களா?” என விசாரித்தார் சிவநாதன்.
“ம்… நான் நல்லா இருக்கிறன்” என்றவர்
“சௌமி உனக்குக்கு கொழும்பு கம்பஸ் கிடைச்சிருக்கு என்று நீ சொன்னதும் எங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?” என்றார் ரவீந்திரன், சௌமியிடம்.
“நீங்கள் சந்தோசப்படுவீங்கள் எண்டு எனக்குத் தெரியும் தானே பெரியப்பா...., வீடு பக்கத்துல தானே இருக்கு, நாங்கள் ஆட்டோவில வந்திருப்பம் தானே நீங்கள் ஏன் தூக்கத்தை கெடுத்துக் கொண்டு இந்த நேரத்தில இஞ்ச வந்தனீங்கள்” என அன்பாக கடிந்து கொண்டாள் அவள்.
“நீங்கள் இஞ்ச வரும் போது எனக்குத் தூக்கம் வருமா… அப்பிடி வந்தாலும் உன்ர பெரியம்மா என்னைத் தூங்க தான் விடுவாரா?” என அவளுக்கு பதிலளித்தவாறு அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் சிவநாதன்.
தன் வீட்டுக்கு வந்த சிவநாதனையும் சௌமியையும் மிகுந்த மகிழ்வுடன் வரவேற்ற சகுந்தலா, அவர்கள் பயணக் களை தீர குளித்து உடை மாற்றி வந்ததும் அவர்களுக்கு தேநீர் பரிமாறினார். அவர்கள் அதை அருந்தியபடி பலதையும் பேசி சிரித்தனர்.
சிறிது நேரத்தில் “நான் கொஞ்ச நேரம் படுத்து விட்டு, வெளியில கடைக்குப் போக வேணும், விக்ரம் தனக்கு சில பொருட்கள் வாங்கிக் கொண்டு வரச் சொன்னவன்” என்றார் சிவநாதன்.
“சரி…, பின்னேரம் கடைக்குப் போகலாம்” என்றார் சகுந்தலா.
“கடை பத்து மணிக்குப் பிறகு தானே திறப்பினம், இரண்டு மணித்தியாலம் படுத்தாக் காணும். நான் இண்டைக்கு இரவே கிளம்ப வேணும்” என்றார் அவர்.
“என்ன அவசரம்? இரண்டு நாள் தங்கி விட்டு போகலாம் தானே அத்தான்” என்றார் சகுந்தலா.
“அங்க கமலாவும் விக்ரமும் தனியா இருக்கினம். அதோட இரவுக்கு வெளிக்கிட்டால் நாளைக்கு வேலைக்கும் போகலாம். நான் கொஞ்ச நேரம் படுத்து எழும்புறன்” என்றவாறு அவர் எழுந்து உள்ளே சென்றார்.
மதிய உணவை முடித்துக் கொண்டு அவர்கள் எல்லோரும் கடைக்குச் சென்றார்கள். சௌமிகா தனக்குத் தேவையான உடைகள், புத்தகப்பை, செருப்பு போன்றவற்றை வாங்கினாள், விக்ரமிற்கும் அவன் சொன்னவாறு சில பொருட்களை வாங்கினார்கள்.
அன்றிரவே மகளுக்கு பல அறிவுரைகளை கூறி விட்டு சிவநாதன் கிளம்பிச் சென்றார்.
சௌமிகாவிற்கு வருகின்ற கிழமையில் இருந்து கம்பஸ் ஆரம்பமாகும். எனவே அடுத்த நாள் காலையில் கம்பஸுக்கு போவதற்கான பஸ் இலக்கம், பாதை என்பவற்றை காண்பித்து அங்கு அவளை அழைத்துச் சென்று பல்கலையும் அதனை அண்மித்த பகுதிகளையும் சுற்றிக் காட்டினார் ரவீந்திரன்.
அன்று மாலை சகுந்தலாவின் நெருங்கிய தோழி பத்மாவதி அவர்களின் வீட்டுக்கு வரவும், அவரைக் கண்ட சௌமி மலர்ந்த முகத்துடன் “வாங்க பத்மா ஆண்டி” என வரவேற்றாள்.
உள்ளே வந்த அவர் “சௌமிகா எப்பிடி இருக்கிறாய்…? நல்லா வளந்திட்டாய்...” என்று கூறியவாறு, அழகாக வளர்ந்து வயதுக்கு ஏற்ற செழுமையுடனும், பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மகிழ்வுடனும் முகம் நிறைய புன்னகையுடன் நின்ற அவளைப் பார்த்தவாறு அவர் போபாவில் அமரவும் “நான் நல்லா இருக்கிறன் ஆண்டி, நீங்கள் நல்லா இருக்கீங்களா?” என விசாரித்தாள் அவள்.
“நான் நல்லா இருக்கிறனம்மா…, முறுக்குச் செய்தனான், அதைக் கொண்டு வந்தனான்” என்றவாறு சௌமிகாவிடம் முறுக்குப் பார்சலைக் கொடுத்தார் அவர்.
“தாங்க்ஸ்” என்றாள் அவள் அதை வாங்கியவாறு.
“அப்பா எங்க......? அம்மா, தம்பி எல்லாரும் சுகமா இருக்கினமா?” எனக் கேட்டார் பத்மா.
சமையலறையில் அலுவலாக இருந்த சகுந்தலா அவர்களின் பேச்சுக் குரல் கேட்டு வெளியே வந்தவர் “அங்க கமலாவும் விக்ரமும் தனிய என்று அத்தான் நேற்றே வெளிக்கிட்டார்” என்றவாறு அவர்களின் அருகே அமர்ந்தார்.
“நான் முறுக்குச் செய்தனான், அதையும் தந்திட்டு சௌமியையும் பார்ப்பம் என்று வந்தனான், அவளைப் பார்த்து இரண்டு வருசத்துக்கு மேல இருக்கும்” என்றார் அவர்.
“ஓம் ஆண்டி நான் ஏ எல்(உயர்தரம்) படிக்கத் தொடங்கிய பின் இஞ்ச அடிக்கடி வாற இல்ல. கடைசியாக நான் இஞ்ச வந்த போது நீங்கள் சிங்கப்பூரில் எண்டு பெரியம்மா சொன்னவா” என்றாள் சௌமிகா.
“ஓம்… இரண்டு வருடத்துக்கு முன்னர் அகிலன் சிங்கப்பூர் போன போது என்னையும் கூட்டிக்கொண்டு போனவன்” என்றார் அவர்.
“ஓ…” என்றாள் அவள்.
“அகிலன் வந்திட்டானா…?” எனக் கேட்டார் சகுந்தலா.
“ஓம், கம்பஸிலிருந்து வந்துட்டு வேற ஏதோ அலுவலாக வெளியில போட்டான்”
“அவன் வீட்டில கொஞ்ச நேரமும் இராமல் எந்த நேரமும் ஓடிக் கொண்டே இருக்கிறான், அவனுக்கு ஓர் கால்கட்டு போட்டால் தான் சரியாக இருக்கும். அவனுக்கும் முப்பது வயது ஆகப்போகுது, இனியும் அவன் சொல்லுறதைக் கேட்டுக்கொண்டு இருக்கேலாது பத்மா” என்றார் சகுந்தலா.
“ஓம் நானும் இதைப் பற்றி யோசிச்சனான் தான். அவனிட்ட கேட்டால், கொஞ்ச நாள் போகட்டும் எண்டு சொல்லிக் கொண்டிருக்கிறான், இனியும் தாமதிக்க ஏலாது. அவனிட்ட சொல்லிப் போட்டு, நல்ல தரகரிட்டை பெண் பார்க்க சொல்ல வேணும். நீயும் யாராவது படித்த, அழகான, குணமான பிள்ளை இருந்தால் சொல்லு” என்றார் பத்மா.
சகுந்தலாவும் பத்மாவதியும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள், சம வயதினர், ஒன்றாக ஒரே பாடசாலையில் படித்தவர்கள். பத்மாவின் கணவர் கொழும்பில் அரச திணைக்கழகத்தில் பணி புரிந்ததால், அவர்களுக்கு திருமணம் முடிந்த உடனேயே பத்மா கணவருடன் வாழ கொழும்புக்கு வந்துவிட்டார். சகுந்தலாவும் ரவீந்திரனைத் திருமணம் செய்து, இருவரும் யாழ்ப்பாணத்தில் வசித்தனர். சில ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஓர் கம்பெனியில் வேலை பார்த்த ரவீந்திரன் பதவி உயர்வு பெற்று கொழும்புக்கு இடம் மாறிச் செல்லும் போது அவர் தன்னுடன் சகுந்தலாவையும் அழைத்துச் சென்றார்.
இரு தோழிகளின் கணவர்களின் பணி நிமித்தம் அவர்கள் கொழும்புக்கு வாழ வந்ததும் இருவரும் ஆரம்பத்தில் வாடகை குடியிருப்பில் வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்த போதும் அவர்களின் நட்பு தொடர்ந்தது. பின்னர் அவர்கள் இருவரும் அருகருகே வசிக்க விரும்பியதால் ஐபிசி தெருவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில், அது கட்டிக்கொண்டிருக்கும் போதே வெவ்வேறு தளங்களில் தங்களுக்கான வீட்டினை வாங்கி இருந்தனர்.
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் பத்மாவின் கணவர் திடீரென மாரடைப்பால் இறந்த போது, சகுந்தலாவும் ரவீந்திரனும் அவர்களுக்கு உற்ற துணையாக நின்று அப்பெருந்தயரத்தின் போது மிகவும் பக்க பலமாக இருந்தனர்.
அருகில் உள்ள சந்தைக்கு இருவரும் ஒன்றாகச் சென்று மரக்கறிகள் வாங்குவார்கள். வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவிலுக்குச் செல்வார்கள். அவர்கள் சமைக்கும் உணவு வகைகளை பகிர்ந்து கொள்வார்கள். மாலை நேரங்களில் யாராவது ஒரு வீட்டில் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள்.
பத்மாவின் ஒரே மகன் அகிலன், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்ட விரிவுரையாளராக இருக்கிறான். இளம் வயதிலேயே, அவனுக்கு கூர்மையான சட்ட அறிவும் அதை மாணவர்களிடம் திறம்பட கொண்டு போய் சேர்க்கும் திறனும் இருப்பதால், மாணவர்களால் அதிகம் விரும்பப்படுகின்ற விரிவுரையாளராக இருக்கிறான். அத்துடன் பண பலம் குறைந்த பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவச சட்ட உதவிகளைச் செய்து வருகிறான், மனித உரிமைகள் சம்மந்தமாக பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி வருகிறான்.

Author: Vishakini
Article Title: என் மன்னவன் நீதானோ - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.