என் மன்னவன் நீதானோ - 9

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,569
6,512
113

என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 9
நாட்கள்… அது தன் பாட்டுக்கு உருண்டோடி கொண்டிருந்தன. அகிலனுக்கும் சௌமிக்கும் இடையில் அன்றைக்குப் பிறகு சிறு இடைவெளி ஏற்பட்டு விட்டது. அன்றைய சம்பவத்தின் பின்னர், அவள், அவனிடம் அதிகப்படியான உரிமை எடுத்துக் கொண்டது போல அவனுக்குத் தோன்றியதையோ அல்லது சற்று அதிகப்படியாக கதைத்தது போல் தோன்றியதையோ, அவன் விரும்பாததால் அந்த இடைவெளியை அகிலன் வேண்டுமென்றே ஏற்படுத்திக் கொண்டான். அவன், அவளைத் தவிர்க்கும் நோக்குடன் பல்கலைக்கு நேரத்துக்கே சென்று விடுவான், அவள் வீட்டுக்கு வரும் நேரங்களில் அவன் தனது அறையை விட்டு வெளியே வருவதில்லை, அவள் தொலைபேசியில் அழைத்தால் எடுப்பதில்லை. சில நேரம் அவள் தொடர்ச்சியாக அழைத்தால், எடுத்து என்ன விஷயம் என்று கேட்டு விட்டு ‘நான் முக்கியமான வேலையாக இருக்கிறன், பிறகு எடுக்கிறேன்’ என்று விட்டு வைத்து விடுவான். அவன் தன்னைத் தவிர்க்கத்தான் அப்பிடி சொல்கிறான் என்று அவளுக்குத் தெரிந்து வேதனைப்பட்டாள். .

ஆரம்பத்தில் அவன் தவிர்ப்பதை இலகுவாக எடுத்துக் கொண்டவளுக்கு, நாட்கள் செல்லச் செல்ல அவன் தன்னை அவமதிப்பது போலவும் அவன் தன்னை விட்டு விலகுவது போலவும் உணர்ந்தாள். அத்துடன் இரண்டு மாதங்களுக்கு மேலாக அவனைப் பாராமல் இருப்பது அவளுக்கு எதையோ இழந்தது மாதிரி இருந்தது, அது மட்டுமல்லாமல் ‘நான் அப்பிடி என்ன தப்பாக கேட்டுட்டேன்’ என்று அவனிடம் கேட்க வேணும் போல அவளுக்கு இருந்தது. அவனுடன் கதைக்காமல் அவளால் முழுமையாக தனது படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே அந்த வார இறுதியில் எப்பிடியாவது அவனைச் சந்தித்து விட வேண்டும் என்ற முடிவில் இருந்தாள்.

அன்று சனிக்கிழமை. வார இறுதி நாட்களில் மாலை வேளைகளில் பத்மா கீழே உள்ள பூங்காவிற்கு செல்வது சௌமிக்கு தெரியும். ஆதலால் அன்று மாலை ஐந்து மணியளவில் சௌமி கிளம்பி தயாராகி, பூங்காவிற்கு சென்றாள். அங்கே அவள், பத்மா அந்த குடியிருப்பில் வசிக்கும் சிலருடன் பேசிக் கொண்டிருப்பதை கண்டாள். அதைக் கண்டதும் அவள் மற்றப் பக்கத்தில் உள்ள வாகனத்தரிப்பிடத்துக்கு அவசரஅவசரமாக சென்றவள் அங்கே அகிலனின் கார் நிற்பதை கண்டாள். அவன் வீட்டில் தான் இருக்கிறான் என்பதை அறிந்தவள், லிஃப்டில் ஏறி அவனது தளத்திற்குச் சென்று, அவனது வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினாள். அந்தச் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்த அகிலன் அவளைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

கதவைத் திறந்தவனை ரசனையுடன் வைத்த கண் வாங்காமல் பார்த்தவளிடம் “அம்மா கீழ பார்க்குக்கு போயிட்டா” என்றான் அவளையே பார்த்தவாறு.

“ம்…, அது எனக்குத் தெரியும்...” என்றாள் அவள், அவனைப் பார்த்தவாறே. அவன் தனது வீட்டு கதவடியிலும் அவள் கதவுக்கு வெளியேயும் நின்று கொண்டிருந்தனர்.

“ம்...” என்றான் அவன் தனது நாடியைத் தடவியவாறு. அவள் அவ்வளவு விரைவாக தன்னிடம் வந்து நிற்பாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“நான் உங்களோட கதைக்கத் தான் வந்தனான்… ” என்றாள் அவள்.

அம்மா இல்லாத நேரம் பார்த்து வந்திருக்கிறாள் என்பதை அறிந்து, அவளை ஓர் கணம் பார்த்தவன், அவளின் கண்களில் தெரிந்த நிதானத்தை பார்த்துவிட்டு உள்ளே சென்று சோபாவில் அமர, அவளும் உள்ளே சென்று அவனுக்கு முன்னால் உள்ள சோபாவில் அமர்ந்தாள்.

“இப்ப உங்களை காண முடியுறது இல்லையே… ஏன்…?” என நேரடியாகவே விசாரித்தாள் அவள்.

அவளின் அவசரத்தை உணர்ந்தவாறு “நான் ஒரு புத்தகம் எழுதற விசயம் உமக்குத் தெரியும் தானே… அதை விரைவாக வெளியிட விரும்புறன்… அதால கொஞ்சம் பிஸி” என்றான் அவன் தன்மையாக.

“நான் போன் பண்ணினால் கூட நீங்க கதைக்கிற இல்ல… அவ்வளவு பிஸியா…?” என்றாள் குறையாக.

“நீர் எடுக்கேக்க ஏதும் பிஸியாக இருந்திருப்பன்… பிறகு மறந்திருப்பன்...” என்றவனுக்கு அவள் குறுக்கு விசாரணை செய்வது போல் கேட்கவும் எரிச்சலாக இருந்தது.

அவள் தலையை சரித்து அவனைப் பார்த்தவாறு “ம்… உண்மையாவா?” என்றாள் நம்பாமல்.

“ம்...” என்றவாறு அவனும் சோபாவின் கைப்பிடியில் தனது வலது முழங்கையை ஊன்றி, கைவிரல்களால் நாடியைத் தடவியவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளின் அதிகப்படியான தன் மீதான ஆதிக்கம் அவ்வளவு ரசிக்கும் படியாக இருக்கவில்லை.

“நீங்கள் என்னை வேணுமென்றே தவிர்ப்பதாக தான் எனக்குத் தோணுது” என்றாள் அவள்.

“அப்பிடி இல்ல...” என்றான் அவன் பொறுமையை இழுத்து பிடித்தபடி.

“ அண்டைக்கு நான் அப்பிடி கேட்டது உங்களுக்கு பிடிக்கேல்ல என்று எனக்கு நல்லா விளங்குது… ஆனால் நீங்கள் ஒரு பிள்ளையைப் பற்றி வெளிப்படையாக புகழ்ந்து கதைச்சது எனக்குப் பிடிக்கேல்ல…, அதோட… வேற ஏதோ மனக் குழப்பம், அது தான் எதையும் யோசிக்காமல் பட்டென்று கேட்டுட்டேன்” என்றாள் அவனுக்கு விளக்கும் முகமாக.

“ம்...” என்றவாறு அவன், அவளையே பார்த்தவாறு இருந்தான். அவளாலும் அவனிடம் இருந்து தனது கண்களை விலக்க முடியவில்லை. அவளது கண்களில் ஏதோ ஒரு ஆர்வத்தை உணர்ந்தான், அவை ஏதோ சொல்வது போல அவனுக்குத் தோன்றியது. அந்தக் கண்களை பார்க்கப் பார்க்க, தனது இதயத்தில் ஏதோ ஓர் இனம் புரியாத இதம் ஏற்படுவதை உணர்ந்தவன் அவளிடம் இருந்து தனது கண்களை விலக்கி, அருகில் உள்ள பூச்சாடியை பார்த்து தன்னை சமன்படுத்தி கொண்டவன் “வேற என்ன…?” எனக் கேட்டான்.

இதுவரை காலமும் அவன் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பது அவளுக்குத் தெரியாது, தன் மீது அவனுக்கு அன்பு, அக்கறை இருக்கும் என்பது அவளுக்குத் தெரிந்தாலும் அது எந்த விதமான அன்பு என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு நாளும் அவன், அவள் மீது எந்த விதமான உரிமையையும் வெளிப்படுத்தியதில்லை, உணர்வுகளையும் வெளிப்படுத்தியதில்லை. அவனது பார்வையில் கூட அவளால் ஓர் வித்தியாசத்தை உணர முடியவில்லை. அவன் அவளுக்காக செய்வது எல்லாம் நட்பைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை என்பது போலத்தான் இருக்கும். அவனிடமிருந்து எதையும் அறிந்து கொள்ள முடியாததால் அவள் மனதில் ஓர் தவிப்பு எப்போதும் அழுத்திக் கொண்டே இருக்கும். இதனால் அவன் யாரும் பெண்களைப் பற்றி கதைத்தாலோ அல்லது யாரும் பெண்களோடு கதைத்தாலும் அவள் மிகவும் தவித்துப் போவாள்.

தன் மீதான அவனின் அழுத்தமான பார்வையை உள் வாங்கிக் கொண்டவள் “ம்…, என்ன செய்து கொண்டு இருந்தனீங்க?” எனக் கேட்டாள்.

“ஒரு கட்டுரை வாசித்துக் கொண்டிருந்தனான்” என்றான் மெதுவாக.

“இண்டைக்கு வெளியில போக இல்லையா?”
“இல்லை...” ஒரு வார்த்தையில் பதிலளித்தான். தான் ஏதும் கதைத்து, அவள் ஏதும் தவறுதலாக விளங்கிக் கொள்வதில் அவனுக்கு விருப்பம் இல்லை.

அவனைப் பார்க்க வேண்டும், அவனுடன் கதைக்க வேண்டும் என்று வந்தவளுக்கும் மேற்கொண்டு என்ன கதைப்பது என்று தெரியவில்லை, அவனும் தான் கேட்பதற்கு பதில் சொல்கிறேனே தவிர, அவனாக எதுவும் கதைப்பதாக தெரியவில்லை. அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று அவள் மனம் சொல்லியதால், சற்று நேரம் அவனையே இமைக்க மறந்து பார்த்தவாறு சோபாவில் நன்கு சாய்ந்து சற்று நேரம் அமர்ந்திருந்தாள். அவன் முன்னால் உள்ள காபி டேபிளில் உள்ள நாளிதழை எடுத்துப் புரட்டினான். அவனின் உடல் மொழியில் தெரிந்த அசௌகரியத்தை அவதானித்தவள், தொடர்ந்து அங்கே இருந்தால், அவன் அதற்கும் கோபப்படக் கூடும் என உணர்ந்து, சோபாவில் இருந்து எழுந்தவாறு, “நான் கிளம்புறன்” என அவனிடம் கூறினாள்.

அவளுக்கு படிப்பு முடியும் வரை தனது விருப்பத்தை அவனிடம் தெரிவிப்பதில் உடன்பாடில்லை. ஏனென்றால் அவன், அவளின் விருப்பத்தை பற்றி பெரியம்மா, பெரியப்பாவிடம் தெரிவித்தால், படிப்பு முடிய முன்னர் தேவையில்லாத சங்கடங்கள் ஏற்படும் என்பதுடன் அவனும் ஏகப்பட்ட அறிவுரைகளையும் வழங்கி தன்னுடன் கதைப்பதையோ சந்திப்பதையோ நிறுத்தி விடக்கூடும் என எண்ணினாள்.

அவனும் தொண்டையைச் செருமியவாறு “ம்...” என்றான் அவளைப் பார்த்தவாறு.

அவள் கிளம்பியதும் அவன் கதிரையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

அன்று ஒருத்தனை காதலிக்கிறன் என்று சொன்னாள்! ஆனால் இப்போது அவள் என்னைப் பார்க்கும் பார்வையே சரியில்லையே…! அதை வைத்துப் பார்க்கும்போது நட்பையும் தாண்டி ஏதோ ஒன்று இருப்பது போலத் தோன்றுகிறதே.... நான் தான் அவளால் காதலிக்கப்படும் நபரா…?, நான் ஏதாவது வித்தியாசமான முறையில், ஓர் நல்ல நண்பன் என்பதை தாண்டி அவளுடன் பழகி இருக்கிறேனா...., அவளுக்கு ஏதேனும் நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் கதைத்திருக்கிறேனா…, அவளுடன் அதிகப்படியான உரிமை ஏதும் எடுத்திருக்கிறேனா…? எனப் பலவாறு அவன் எண்ணி குழம்பினான்.

ஒரு சிறு கணம் தனது இதயத்தில் ஓர் வித இதம் ஏற்பட்டதை எண்ணியவனுக்கு தன் மீதே வெறுப்பு ஏற்பட்டது.

தான் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்பதையும், தன் மீது அவளுக்கு ஏதேனும் ஓர் ஈர்ப்பு இருப்பதை அறிந்தால் அதை ஆரம்பத்திலேயே தடுத்து விட வேண்டும் என்பதையும் மனதில் குறித்துக் கொண்டான். தன்னை மிகவும் நம்பி அவளைத் தன்னுடன் பழக விட்டவர்களுக்கு நம்பிக்கை துரோகத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்பதுடன், அவள் மிக மிக அழகானவளாகவும் , திறமையானவளாகவும் இருந்தாலும் அவனுக்கும் அவள் மீது அந்த மாதிரியான ஓர் ஈர்ப்பு இருப்பதாக அவன் நினைக்கவில்லை. அவளின் அழகை ஓர் ரசிகனாக ரசிப்பான், திறமையை ஓர் ஆசிரியனாகப் பாராட்டுவான். அவளின் குணத்தை வயதில் மூத்தவனாக மெச்சுவான், நட்பை நண்பனாக கொண்டாடுவான். அவளை சிறு வயதில் இருந்தே தெரியும் என்பதால், அவள் மீது உண்மையான அன்பும் அக்கறையும் அவனுக்கு நிறையவே இருந்தது.

“என்ன தம்பி இருட்டில இருந்து என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?” என்றவாறு உள்ளே வந்த பத்மா விளக்கைப் போட்டார்.

“ஒண்டும் இல்லையம்மா… சும்மா தான் இருக்கிறன்” என்றவாறு அவரிடம் சற்று நேரம் கதைத்தான்.

..............

வீட்டுக்கு வந்த சௌமியும் அவனைச் சந்தித்து பேசியதில் ஏற்பட்ட உற்சாகத்துடன் தனது படிப்பில் தீவிரமாக கவனத்தை செலுத்த தொடங்கினாள்.

 

Author: Vishakini
Article Title: என் மன்னவன் நீதானோ - 9
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
ஓ நோ.... அகிக்கு அப்படி ஒரு எண்ணமே இல்ல...
இந்த பிள்ளையா இப்படி ஆசையை வளர்த்துட்டு வருது....என்ன ஆகுமோ
 
  • Like
Reactions: STN - 78

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online