• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் மன்னவன் நீ தானோ - 28

STN - 78

New member
Staff member
என் மன்னவன் நீ தானோ

அத்தியாயம் 28


தூங்குவதற்கு ஆயத்தமாகி கொண்டிருந்த சௌமிக்கு பத்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவள் அழைப்பை ஏற்றதும் பத்மா அவளிடம் பிரயாணத்தை பற்றி விசாரித்தார். அகிலன் தகவல் அளித்து விட்டான் என நினைத்த சௌமியும் அவருக்கு பதிலளித்தாள். அவர் மேலும் துருவித் துருவி விசாரித்ததில் தனக்கும் அகிலனுக்கும் இடையில் சிறு மனஸ்தாபம் என்றாள். “என்ன பிரச்சனை சௌமியம்மா..?” என நேரடியாகவே கேட்டார் பத்மா.



அகிலன் என்ன கூறியிருப்பானோ என நினைத்த சௌமி “ ............” அமைதியாக இருந்தாள்.



“என்னதான் பிரச்சினை என்றாலும் அங்க இருந்து சமாளிக்காமல் , கோவித்துக்கொண்டு வாறாதாம்மா…?” எனக்கேட்டார் ஆதங்கத்துடன்.



“எனக்கு அம்மாப்பாவை பாக்கணும் போலிருந்தது ஆண்டி…”



“அகிலனுக்கு சொன்னால் அவன் கூட்டிக்கொண்டு வருவான் தானேம்மா…”



“ம்…” என்றாள் மெதுவாக.



“நான் பின்னேரம் வந்து பாக்கிறன் சௌமி…” என்றவருக்கு இருவரிலும் மனத்தாங்கல் தான்.



“சரி ஆண்டி வாங்க..” என்றவள் தொடர்ந்து, “நான் அம்மாப்பாக்கு எங்கட பிரச்சனையை சொல்லேல்ல…” என்றாள் தயங்கியவாறு.



“அவைக்கும் எல்லாம் விளங்கும் தானே சௌமி…” எனக்கேட்டார்.



“ம்…”



“சரி நான் வைக்கிறனம்மா…”



“சரி ஆண்டி…” என்று கூறி விட்டு, அகிலன் தான் அனுப்பிய தகவலைப் பார்த்து விட்டானா என பார்த்தாள். அவன் வாசித்து விட்டான் என்று காட்டியது. அவன் பதில் போட மாட்டான் என அவளுக்கு தெரியும் என்பதால் அவள் அதை எதிர்பார்க்கவில்லை. கைபேசியை அணைத்து வைத்து விட்டு படுத்தாள்.



…………….



மாலையில் சௌமியின் வீட்டுக்குச் சென்ற பத்மாவை, சௌமியின் பெற்றோர் வரவேற்றாலும் அவர்கள் சிறு விலகல் தன்மை காட்டியதை அவர் கவனிக்கத் தவறவில்லை. அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், “சௌமி வந்திருக்கிறாள் எண்டு அகிலன் சொன்னவன் அது தான் அவளை பார்ப்பம் எண்டு வந்தனான்…” என அவர் வழமை போன்று கதைத்தார் அவர்களிடம்.



அவர்களும் சௌமி திடீரென வந்திட்டாள் எனக்கூறி, அவர் ஏதாவது சொல்வாரா… என பார்த்தனர்.



“எப்பிடி இருக்கீங்க ஆண்டி….?” என்று கேட்டவாறு பொலிவிழந்த முகத்துடன் வந்த சௌமியை பார்த்ததுமே அவர்களுக்கிடையில் ஏதோ பெரிதாக இருக்கிறது என விளங்கிக் கொண்டவர் “நான் நல்லா இருக்கிறனம்மா… நீ எப்பிடி இருக்கிறாய்…?” என அவர் பொதுவாக கதைத்தார்.



கமலா தேநீர் தயாரிப்பதற்காக எழுந்து உள்ளே சென்றதும், ‘வெளிப்பக்கம் வா சௌமி’ என அவளை வெளியே அழைத்து சென்று, என்ன பிரச்சனை என விசாரித்தார். அவள் முகத்தில் சிறு சோர்வு ஏற்பட மௌனமாக அவரைப் பார்த்தாள். அவளின் ஒரு பக்க கன்னம் சாடையாக அதைத்து இருந்ததை கண்டவருக்கு மகனில் ஆத்திரம் ஏற்பட, அவளின் கையை ஆதுரத்துடன் பிடித்துக் கொண்டு “அடிச்சவனா…?” எனக் கேட்கும்போது உள்ளம் பதறியது.



அவள் அவனைப் பார்த்தாள். “அம்மா வரமுதல் சொல்லு சௌமியம்மா…” என்றார்.



அவள் ‘ஆம்’ என்பது போல் தலையை அசைத்தாள்.



அவருக்கு தன் மகன் செய்த செயலால் உள்ளம் பதைபதைத்து, உடல் நடுங்கியது.



மகன் மீதுள்ள கோபத்தால் அவரின் சிவந்த முகத்தை கண்டவள் “என்னில தான் பிழை ஆண்டி.., ஏதோ கோபத்துல லேசா தட்டினவர்…” என அவரை சமாளிக்க பார்த்தாள்.



“என்னவெண்டாலும் ஒரு பெண்ணுக்கு கைநீட்டுறது பெரிய தப்பு…, இப்பிடி ஒரு காரியத்தை அகில் செய்வான் எண்டு நான் கொஞ்சமும் நினைக்கல்ல…” என்றவருக்கு மனம் கொதித்தது.



“கோபப்படாதீங்க ஆண்டி…” என்றவள், “கதிரையில இருப்பம் வாங்க ஆண்டி…” என அவரின் கைப்பிடித்து அழைத்து வந்து வெளியே இருந்த சாய்வு நாற்காலியில் அவரை அமர்த்தினாள்.



“உன்ர அம்மாப்பா, சகுந்தலா, அண்ணா எல்லாரும் என்ன நினைப்பினம் சொல்லு…” எனக் கவலையுடன் கேட்டார் அவர்.



“...”



“உன்ர அம்மாப்பாக்கு முகத்தில ஒரு சிரிப்பு இல்லை…, மற்றும் படி நான் வரேக்க எப்பிடி இருக்கிறவை எண்டு எனக்குத் தெரியும் தானே…, அவைக்கு அவன் அடிச்சது நல்லா விளங்கியிருக்கும், அவை கட்டாயம் வேதனைப்படுவினம்…, உன்னை கேட்டு சங்கடப்படத்தக்கூடாது எண்டு தான் கேக்கல்ல…, சகுந்தலாவும் உன்ர முகம் வாடிப்போய் இருக்கு எண்டு கவலைப்பட்டு சொன்னவள். அவளும் அகிலன் இப்பிடி செய்வான் எண்டு கனவிலும் நினைச்சிருக்க மாட்டாள். ஏன் இப்பிடி செய்தானோ…” என மனம் ஆறாமல் புலம்பினார் அவர்.



அன்று நடந்ததை சுருக்கமாக கூறினாள் சௌமி.



“அதுக்கு அடிக்கிறதா…” என கேட்டார் ஆற்றாமையுடன்.



அவர் அவ்வளவு தூரம் வேதனைப்படுவது அவளுக்கு மிகுந்த சங்கடத்தை கொடுத்தது. “நீங்கள் ஒண்டும் யோசிக்காதீங்க ஆண்டி..” என அவள், அவரை சமாதானப்படுத்தி கொண்டிருந்தபோது, கமலா தேநீருடன் வந்தவர் அவர்கள் இருவரையும் ஆராய்ச்சியுடன் பார்த்தார்.



தேநீரை பருகிய பத்மா மேலும் சற்று நேரம் இருந்து , பொதுவாக கதைத்துவிட்டு வீட்டுக்கு வந்தவர், அகிலனுக்கு அழைப்பை ஏற்படுத்தினார். அவன் அழைப்பை ஏற்றதும் “என்ன வேலை செய்திருக்கிறாய்…?, நீ இப்படி செய்வாய் எண்டு நான் கொஞ்சமும் நினைக்கல்ல…, சௌமின்ர அம்மாப்பாவை தலைநிமிர்ந்து பாக்க ஏலாத மாதிரி செய்து வைச்சிருக்கிறாய்…?” எனக்கேட்டார் மிகுந்த கடுமையுடன். எப்போதும் பெருமை மட்டும் தேடித்தந்த தனது மகனால் தற்போது சௌமியின் பெற்றோர்களின் முன் தனக்கு தலைக்குனிவு ஏற்பட்டு விட்டதாக நினைத்து மனம் பொருமினார்.



“..........”



“உன்னை நம்பி வந்த ஒரு சின்ன பிள்ளைக்கு இப்பிடியா செய்து அனுப்புவது…?” என வினாவினார் ஆயாசத்துடன்.



“..........”



“நீ தான் வேணும் எண்டு எவ்வளவு ஆசையா உன்னட்ட வந்தவள் சொல்லு…., அவளின்ர முகம் வாடி வதங்கி சோர்ந்து போய் பாக்க முறை இல்லாம இருக்கு…., அவளின்ர அம்மாப்பா எவ்வளவு கவலைப்படுவினம் எண்டு யோசிச்சியா…?” என அவனைத் திட்டினார்.



“.......” அவன் இறுகிப் போய் நின்றிருந்தான்.



“அப்படி என்ன வெறுப்பு உனக்கு அவளில…?” என கோபத்துடன் கேட்டார்.



மாலையில் வீட்டுக்கு வந்த அகிலனுக்கு, வீட்டின் அமைதி நிஜத்தை உணர்த்த, மனம் புழுங்கியது. அவள் இருந்தால் ஏதாவது பாட்டுச் சத்தம் கேட்கும், அவள் போனில் கதைப்பது கேட்கும், சமையல் செய்யும் சத்தம் கேட்கும், அவள் நடமாடுவது கண்களுக்கு தெரியும், அவன் வீட்டுக்கு வந்ததும் தேநீர் தருவாள். இவை எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை அவனுக்கு. இது எத்தனை நாளைக்கு தொடர போகுதோ என்று நினைக்கையிலே, அவளை தான் இவ்வளவு தூரத்துக்கு எதிர்பார்க்கிறேனா என எண்ணியவனுக்கு, அவனை நினைத்து ஆச்சரியம் தான். அவனது மனமும் உடலும் அவளுக்காக் ஏங்கித் தவித்து.



மனப் புழுக்கத்தை தாங்க முடியாமல் பால்கனியில் நின்று கடலலைகளை பார்த்துக்கொண்டிருந்த போது தான் பத்மா அவனுக்கு அழைப்பை ஏற்படுத்தினார். அங்கே என்ன நடந்தது என அறிய விரும்பி அவன் அழைப்பை ஏற்க, அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். சௌமி ஒரு பிரச்சனையும் இல்லாமல் பத்திரமாக போய் சேர்ந்து விட்டாள் என அறிந்து ஆறுதல் அடைந்தாலும், அவள் தனது தாயிடம் எல்லாவற்றையும் கூறி தங்களின் வாழ்க்கையை பகிரங்கப்படுத்தியது அவனுக்கு சினத்தை ஏற்படுத்தியது. அவளின் முதிர்ச்சி இன்மையை எண்ணி வருத்தப் பட்டான்.



அவனின் மௌனம் தொடர, எரிச்சலடைந்த அவனின் தாயார் “நான் இவ்வளவு சொல்லியும் நீ அமைதியாக நின்றால் என்ன அர்த்தம்..?” எனக்கேட்டார்.



“எல்லாத்தையும் சொன்னவள் ஏன் நான் அடிச்சனான் எண்டு சொல்ல இல்லையா…?” என எரிச்சலுடன் கேட்டான்.



“நான் அடிச்சதே பிழை எண்டுறன்…, நீ ஏன் அடிச்சனான் எண்டதை பற்றி கதைக்கிறாய்…?” என்றார்.



நேற்றிரவிலிருந்து ஒழுங்கான உணவு இல்லை, உறக்கம் இல்லை, இரவு முழுவதும் அவளின் பயணத்தை பற்றிய யோசனையில் ஒரு வித பதட்டத்துடனே இருந்ததில் உடலும் மனமும் சோர்வாகவும், களைப்பாகவும் இருந்தது. ஏற்கனவே சகுந்தலாவும் அவனுக்கு அழைப்பை ஏற்படுத்தி, பல அறிவுரைகளை வழங்கியிருந்தார்.

இதில் தாயும் எடுத்து, கடிந்து கொண்டிருந்ததில் அவனுக்கு, சீற்றம் வர “நான் பிறகு எடுக்கிறன்..” என்று விட்டு அவசரமாக அழைப்பை துண்டித்தான்.



வயிறு பசித்தது. சாப்பிடப் பிடிக்காததால் பகல் முழுவதும் தேநீர் தான் அவனது உணவாக இருந்தது. சமையலறைக்குச் சென்றான், நேற்று அவள் சமைத்தது குளிர்சாதனப் பெட்டியில் இருந்தது. அதை எடுத்து சூடு பண்ணி சாப்பிட்டவன், நேற்று போல் அவளின் அறையில் சென்று படுத்தான். கொந்தளித்துக் கொண்டிருந்த மனதுக்கு அது சற்று ஆறுதலை கொடுத்தது. நேற்று அவள், தன்னை உணர்ந்து, எவ்வளவு அனுசரணையாக நடந்து கொண்டாள் என எண்ணிய மாத்திரத்தில் அவன் உடலின் ஒவ்வொரு அணுவும் அவளுக்காக ஏங்கியது. படுத்திருந்து பார்க்கும் போது தெரியும் வகையில் எதிர் சுவரில் திருமணத்தன்று இருவரும் மண மேடையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை மாட்டியிருந்தாள். அதில் அவளின் வதனத்தில் அவ்வளவு குதுகலம்! அதையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மனதில் சிறு அமைதி ஏற்பட தூங்கிவிட்டான்.



காலையில் எழுந்தவனுக்கு அவனின் தனிமையை எண்ணி மீண்டும் சலிப்பு! பல்கலைக்கு செல்ல வேண்டும், அதற்கு தயாராக வேண்டும். தேநீரை தயாரித்து பருகினான். அவள் வேலைக்கு விடுமுறை எடுத்திருப்பாளாக்கும் என நினைத்தவன் எண்ணங்கள் அவளை சுற்றியே இருந்தது. அவள் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்ற நிதர்சனத்தை உணர்ந்தவன், வெள்ளி இரவு அங்கே புறப்படுவதற்கான ஆயத்தங்களை செய்ய வேண்டும் என நினைத்து கொண்டு, பல்கலைக்கு செல்ல குளித்து தயாரானான்.



............



தனது பெற்றோர் தன்னிடம் எதையும் கேட்டு, தன்னை சங்கடப்படுத்தாமல் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதை இட்டு பெருமைப்பட்டாள் சௌமி. தன்னை புரிந்து கொண்ட பெற்றோரை எண்ணி, பெருமிதம் அடைந்தாள். தானும் அதேபோல் நடந்து கொள்ள வேண்டும் என நினைத்தாள். தன்னைப்பற்றி நினைத்து, அவர்கள் தங்களுக்குள் வேதனைப்படுவார்கள் என்பது அவளுக்கு நன்கு தெரியும். அவர்களை வருத்தப்பட விடக்கூடாது என நினைத்தவள், அவர்களுடன் கழிக்கும் நாட்களை மகிழ்வுடன் செலவிட எண்ணி உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு, பெற்றோரிடமும் சகோதரனிடனும் கலகலப்பாக கதைத்து சிரித்தாள். தாயுடன் சேர்ந்து மேலும் சில உணவு வகைகளை சமைக்க பழகினாள். வேலைக்கு ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டவள் வார இறுதியில் கொழும்புக்கு செல்லத் திட்டமிட்டாள்.



அவளின் மனமும் உடலும் அகிலனின் அருகாமைக்கு ஏங்கி தவித்தது. தனது சுயமரியாதையை பாதுகாப்பதற்காக தன்னும் அவனைப் பிரிந்து தன்னால் இருப்பது சிரமமான காரியம் என்பதை உணர்ந்து கொண்டாள். அங்கிருந்து கிளம்பிய அன்று, அவன் தன்னிடம் காட்டிய அவனின் புது முகத்தை மீண்டும் மீண்டும் எண்ணி முகம் சிவந்து வெட்கப்பட்டாள். அவனின் ஒவ்வொரு அணுகுமுறையையும் நினைக்கையில் அவள் உடல் சிலிர்த்து அடங்கியது, அவன் தன்னை கொண்டாடியதில் அவள் உள்ளம் குதூகலித்தது. அவனைப் பார்க்க வேண்டும், அவனின் குரலைக் கேட்க வேண்டும், அவனது வலிமையும் வனப்பும் மிக்க கரங்களுக்குள் அடங்க வேண்டும் என உள்ளம் துடியாய் துடித்தது.



............



பத்மாவும், இவ்வளவு வயசுக்கு பிறகாவது, மகன் குடும்பமாக இருக்கிறான் என சற்று ஆறுதல் அடைந்து இருந்தவர், தற்போது அதுவும் சிக்கலாக இருப்பது அவருக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது. மகனது வாழ்க்கையில் சௌமியையும் இழுத்துவிட்டு தப்பு பண்ணிவிட்டோமோ என்ற குற்ற உணர்வும் அவருக்கு ஏற்பட்டது. மகனுக்கு உண்மையில் இந்த திருமண வாழ்க்கையில் விருப்பமில்லையோ என்று கூட அவர் நினைக்கத் தொடங்கிவிட்டார். மகன், சௌமியுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று அவர் தினமும் கோவிலுக்கு சென்று கடவுளை வேண்டினார்.



நாட்கள் நகர்ந்து வெள்ளியும் வந்துவிட்டது. மாலையில் அகிலன் தாய்க்கு அழைத்து, இரவு புறப்பட்டு, அதிகாலை அங்கு வருவதாக கூறினான். அதைக் கேட்டதும் அவர் மிகுந்த ஆறுதல் அடைந்து, எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என கடவுளைப் பிரார்த்தித்தார். தான் அங்கு வருவதை சௌமியின் வீட்டுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டான் அகிலன் அவரிடம்.



அதிகாலை ஐந்து மணி அளவில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த அகிலன், அங்கிருந்து ஓர் ஆட்டோவில் தனது வீட்டுக்கு வந்து சேர்ந்தான். நான்கு மாதத்தின் பின்னர் தாயை காண்கிறான். தாயை கட்டி அணைத்து “அம்மா… எப்பிடி இருக்கிறீங்க…?” என்று அன்புடன் விசாரித்தான்.



பத்மாவுக்கும் மகனைக்கண்டதில் அத்தனை மகிழ்ச்சி “நான் நல்லா இருக்கிறன் அகில்…, நீ நல்லா இளைச்சுப்போட்டாய்…” என்றார் அக்கறையுடன்.



“உங்கட மருமகளின்ர சாப்பாட்டில் நான் வெயிட் போட்டுட்டன் எண்டு எல்லோ நினைச்சன்…” என்றான் கேலியாக அவன்.



அவனின் கேலியில் சிரித்தவர் “என்ர மருமகளின்ர சமையலில என்ன குறை…? முந்தநாள் இஞ்ச வந்து எனக்கு சமைச்சு தந்தவள்…, நல்லாத்தான் இருந்தது… ” என்றார் சௌமியை விட்டுக்கொடுக்காமல்.



“நீங்கள் உங்கட மருமகளை விட்டுக் கொடுக்க மாட்டீங்களே..” என்றான் சிரிப்புடன்.



சௌமியைப்பற்றி கதைத்தபோது மகனின் முகத்தில் ஏற்பட்ட ஒளிர்வை அவர் கவனிக்கத் தவறவில்லை. விரைவில் நல்லது நடக்கும் என்ற எண்ணத்துடன் “முகம் கழுவிட்டு வா அகில், டீ போடுறன்…” என்றார்.



இருவரும் கதைத்து பேசியவாறு தேநீர் அருந்தினார்கள். சௌமியைப்பற்றித்தான் அதிகம் கதைத்தார்கள். அப்போது மகனின் கண்களில் தெரிந்த அவள் மீதான அன்பிலும், முகத்தில் தெரிந்த மலர்ச்சியிலும் பத்மாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி. எவ்வளவு தான் கோபம் இருந்தாலும் கட்டிய மனைவிக்கு அடிப்பது மிகப்பெரிய தவறு என்பதை அவனுக்கு எடுத்துக் கூறினார். குடும்பத்தை அனுசரித்து போகும் வழிகளை சொன்னார்.



அவனும் தாயை தங்களுடன் வரும் படி கேட்டான். அதற்கு அவர் கோவில் திருவிழா இன்னும் இரண்டு மாதத்தில் வரும் அதன்பிறகு அங்கு வருவதாக கூறினார். இருவருமாகச் சேர்ந்து காலை உணவை உண்டனர்.



உணவின் பின்னர் தாயிடம் கூறி விட்டு, சௌமியின் வீட்டுக்கு கிளம்பினான் அகிலன். அவன் அங்கே சென்ற போது, சிவநாதன், மகளைப்பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தவாறு வீட்டுக்கு முன்னால் உள்ள முற்றத்தில் நிற்கும் மரங்களுக்கு நீர் விட்டுக் கொண்டிருந்தார். அகிலன் வெளி கதவைத்திறந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்தவர், அவனைக் கண்டதும் “வாங்க தம்பி…” என வரவேற்றவர் அவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.



“எப்பிடி இருக்கிறீங்க அங்கிள்…?” என அவன் வெகு இயல்பாக கேட்கவும், அவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறு, “இருக்கிறன் தம்பி…” என்றவர் “ நீங்கள் சொல்லாமல் வந்திட்டீங்க தம்பி…” எனக்கேட்டார்.



“சௌமி வந்த அன்றே வந்திருக்க வேணும்… எனக்கு முக்கியமான அலுவல் இருந்தது...” என்றவனை பார்த்தவாறு உள்ளே அழைத்து வந்தவர் அமரச்சொன்னார். அவன் எதிரே தானும் அமர்ந்து அவனிடம் பிரயாணத்தை பற்றி விசாரித்தவாறு, “சௌமி…”என அழைத்தார் உற்சாகத்துடன்.



“வாறன் அப்பா…” என்றவாறு வெளியே வந்த சௌமிக்கு அவனைக் கண்டதும் ஆச்சரியத்தில் அவளின் அழகிய விழிகள் விரிந்தன. முகம் அன்றலர்ந்த செந்தாமரையாய் மலர “வாங்கோ…” என்றாள் மெதுவாக.



மெரூன் கலர் அரை பாவாடையும் இளஞ்சிவப்பு நிறத்தில் சட்டையும் அணிந்து, சுவாமி கும்பிட்டதன் அடையாளமாக நெற்றியில் விபூதியுடன் இருந்தவளைப்பார்த்தவன், தன்னைக் கண்டதும் அவளின் வதனத்தில் ஏற்பட்ட மலர்ச்சியில், மனதிலும் உடலிலும் உல்லாசம் ஏற்பட “ம்…” என்றான்.



சமையலறையில் இருந்த கமலா, கதைக்கும் சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்தவர் அகிலனை கண்டதும் நிம்மதியுடன் அவனைப் பார்த்தார். சௌமி வார இறுதியில் கிளம்புவதாக கூறினாலும், இவ்வளவு நாளா என்ன ஏது என்று எதுவுமே தெரியாமலும் அவரும் கணவரும் குழம்பி தவித்துக் கொண்டிருந்தனர். மகளாக அவளின் பிரச்சனையை சொல்லும் வரை அவளிடம் கேட்டு அவளை சங்கடப்படுத்த அவர்கள் விரும்பவில்லை. அவளும் எதுவும் கூறாததில் அவர்களுக்கு வருத்தம் தான். இப்போது அகிலனை கண்டதும் மிகுந்த ஆறுதல்.



சௌமியின் சகோதரனும் “ஹாய் அத்தான்…” என்றவாறு வந்தான்.



அவர்களிடமும் அக்கறையுடன் நலம் விசாரித்தான் அகிலன். விக்ரமிடம் அவனது படிப்பு, பல்கலைக்கழக தெரிவு, மேற்படிப்பு போன்றவற்றை விசாரித்து அறிந்தான். சில அறிவுரைகள் கூறினான். அவனுக்கருகில் அமர்ந்திருந்த சௌமி, அவன் சிறு முறுவலுடன் கம்பீரமாக கதிரையில் சாய்ந்து அமர்ந்தவாறு, தனது குடும்பத்துடன் கலகலப்பாக கதைப்பதை பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போதாவது இவ்வளவு இலகுவாக கதைக்கிறான் என்பதில் அவளுக்கும் திருப்தியே.



“தம்பி சாப்பிட வாங்க..” என அழைத்தார் கமலா.



“நான் இப்பத்தான் சாப்பிட்டு வந்தனான்..” என்றான் அவன்.



“டீ கொண்டு வாறன்..” என்றவாறு அவர் உள்ளே செல்ல திரும்பினார்.



“இப்ப எனக்கு ஒண்டும் வேண்டாம் ஆண்டி…”



“நான் லஞ்ச் ரெடி பண்ணுறன்…, நீங்கள் கதையுங்க..” என்று விட்டு உள்ளே வந்தவர், மதியம் தடல்புடலாக விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.



விக்ரம் தனியார் வகுப்பு இருப்பதாக கூறி சென்று விட்டான்.



சிவநாதன் “கொஞ்ச நேரம் தூங்கி எழும்புங்க தம்பி…” என அவனிடம் கூறிவிட்டு உள்ளே வந்தவர், தன்னிடம் இருந்த புது சாரத்தை மனைவியிடம் கொடுத்து, “நைட் சரியா நித்திரை கொண்டாரோ தெரியேல்ல.., அவர் கொஞ்ச நேரம் தூங்கட்டும், இதை சௌமியிடம் குடு…” என சாரத்தை கமலாவிடம் குடுத்தவர்,

“என்ன சமைக்கப் போறாய்…? நான் சிக்கன் வாங்கி கொண்டு வாறன்… வேற ஏதும் தேவையா…?” என கேட்டார்.



“ஓம்… கொஞ்ச முறுக்கும் லட்டும் செய்து கொடுத்து விடுவம்.. , நான் லிஸ்ட் எழுதி தாரேன், வாங்குங்க…” என்றவர் ஒரு தாளில் தேவையான பொருட்களை எழுதிக்கொடுக்க, அவர் கடைக்குச் சென்றார்.



அவர்களுக்கு தனிமை கொடுத்து, அனைவரும் சென்றதும் அகிலனும் சௌமியும் தான் ஹாலில் இருந்தார்கள். அகிலன் அவளைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருந்தாலும், அவள் மீதுள்ள கோபம் தணியவில்லை, எனவே அவளை பாராமல் அருகில் இருந்த சிறு மேசையில் அன்றைய நாளிதழ் இருந்தது, அதை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். அவனின் ஒதுக்கத்தை கண்டு கொண்ட சௌமியும் அவனைப் பார்த்துவிட்டு, எழுந்து உள்ளே செல்ல, தாய் அவளிடம் சாரத்தையும் துவாலையையும் எடுத்துக் கொடுத்து, அகிலனுக்கு இளநீரையும் அருந்த கொடுக்குமாறு கூறினார்.



துணிகளை தனது அறையில் வைத்துவிட்டு அவனிடம் வந்தவள் “இளநீர் குடிக்கிறீங்களா…?” என்று கேட்டாள்.



பத்திரிகையைப் பார்த்தவாறு “ம்…” என்றான்.



தந்தை ஏற்கனவே வெட்டி வைத்திருந்த அவர்கள் வீட்டு இளநீரை ஓர் கோப்பையில் ஊற்றி கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். அவன் அதை வாங்கி அருந்திவிட்டு அவளிடம் கோப்பையை நீட்டினான். அதை வாங்கியவள் “தூங்கப் போறீங்களா…?” என கேட்டாள்.



அவளை நிமிர்ந்து பார்த்தவன் “ஓம்…” என்றான். அவள், அவனை தனது அறைக்கு அழைத்துச் சென்றாள்.
 
Top Bottom