இலங்கை மண்ணின் பாரம்பரியச் சுவை – எள்ளுப் பணியாரம்
இந்தியாவில் சில இடங்களில் கொத்துப் பலகாரம் அல்லது முந்திரிக் கொத்து என்று சொல்லும் பணியாரத்தின் ஒரு வகைதான் இது.
பொதுவில் எங்கட பக்கம் பயற்றம்பணியாரம் என்பார்கள். எள்ளு சேர்த்துச் செய்யும்போது எள்ளுப் பணியாரம் என்றும், எள்ளுடன் பேரீச்சம்பழமும் சேர்த்துச் செய்யும்போது பேரீச்சம்பழப் பணியாரம் என்றும் சொல்லலாம்.
தேவையான பொருட்கள்
பணியாரத்தின் உள்ளே வைப்பதற்கு- தோல் உடைத்த பயறு – 1 கப்
- ஃப்ரெஷ் தேங்காய்ப்பூ – 1 கப்(இது கொஞ்சம் கூடவும் போடலாம்)
- கருப்பு எள்ளு அல்லது வெள்ளை எள்ளு – 1 கப்
- சர்க்கரை – 1 முதல் 1½ கப் வரை (உங்கள் விருப்பமான இனிப்பின் அளவுக்கு ஏற்ப)
- வறுத்துத் தூளாக்கிய ஏலக்காய்த்தூள் – 1 தேக்கரண்டி
- சுடுதண்ணீர் – தேவையான அளவு
- அரிசி மா – 3 மேசைக்கரண்டி
- கோதுமை மா – 1 மேசைக்கரண்டி
- உப்பு – சிறிதளவு
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
1. பயறு வறுத்து அரைத்தல்தோல் உடைத்த பயற்றை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். ஆறியதும் கிரைண்டரில் போட்டு நன்றாக மாவாக்கி, வடிதட்டில் அரித்து எடுத்துக்கொள்ளவும்.
2. தேங்காய்ப்பூ வறுத்தல்
ஃப்ரெஷ் தேங்காய்ப்பூவை கோல்டன் பிரவுன் நிறம் வரும் வரை நன்றாக வறுத்தெடுக்கவும். சிலர் இதையும் அரைத்துச் சேர்ப்பார்கள். நான் அப்படியே சேர்ப்பதையே விரும்புகிறேன்.
3. எள்ளு வறுத்தல்
எள்ளை அளவான சூட்டில் வைத்து, நன்றாக அதன் வாசனை வெளிவரும் வரை வறுத்தெடுக்கவும். பின்னர் கிரைண்டரில் ஒருமுறை சுற்றி எடுத்துக்கொள்ளவும். எள்ளை மாவாக அரைக்க வேண்டியதில்லை.
4. சர்க்கரை தயார் செய்தல்
சர்க்கரையைத் தூளாக்கி எடுத்துக்கொள்ளவும். சிறிய சிறிய கட்டிகள் இருந்தாலும் பரவாயில்லை. சிறிய உரலில் போட்டு இடித்தும் தூளாக்கலாம். தூள் சர்க்கரை இருந்தால் அதனை அப்படியே பயன்படுத்தலாம்.
5. உருண்டைகளுக்கான கலவை
இப்போது ஒரு பாத்திரத்தில் அரைத்த பயற்றம் மா, வறுத்த தேங்காய்ப்பூ, எள்ளு, தூள்ச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பேரீச்சம்பழம் சேர்க்க விரும்பினால் அதையும் சிறிய துண்டுகளாக நறுக்கிச் சேர்த்துக்கொள்ளலாம்.
இதில் உப்பு சேர்க்க வேண்டியதில்லை. கூடவே பயற்றம் பணியாரத்துக்கு மிளகுத்தூள் சேர்ப்பார்கள். இதற்கும் விரும்பினால் நீங்கள் சேர்க்கலாம். நான் சேர்ப்பதில்லை
பின்னர் சுடுதண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து பிசையவும். தண்ணீரை அதிகமாக ஊற்றிவிடக் கூடாது. உருண்டை பிடிக்கக்கூடிய பதம் வந்தாலே போதுமானது.
உங்கள் முந்திரிக் கொத்து செய்வதற்கு உருண்டை பிடிப்பது போலவே, இந்தக் கலவையையும் சிறிய சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளவும்.
6. தோய்க்கும் மா தயாரித்தல்
ஒரு பாத்திரத்தில் 3 மேசைக்கரண்டி அரிசி மாவுடன் 1 மேசைக்கரண்டி கோதுமை மா, சிறிதளவு உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாப் பதத்தில் அல்லது அதைவிடச் சற்றுக் கெட்டியான பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
7. பொரித்தெடுத்தல்
ஒரு சட்டியில் எண்ணெயைச் சூடாக்கவும்.
ஏற்கெனவே பிடித்து வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாகத் தோய்க்கும் மாவில் நன்றாகத் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
சிறிய குறிப்புகள்
- சர்க்கரையின் அளவை உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கூட்டிக் குறைத்துக்கொள்ளலாம்.
- எள்ளுக்குப் பதிலாக அல்லது எள்ளுடன் பேரீச்சம்பழமும் சேர்த்தால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.
- உருண்டை பிடிக்கும்போது தண்ணீரை அளவாகச் சேர்ப்பது மிகவும் முக்கியம். அதிகமாகச் சேர்த்தால் உருண்டை பசைத் தன்மையாகி மொத்தச் சுவையையும் கெடுத்துவிடும். கூடவே எண்ணெய்க்குள் போடும்போது உடைந்து வெடித்து பாழாகிவிடும்.
- எண்ணெய் அதிகச் சூட்டில் இருக்கக்கூடாது. நல்ல சூட்டில் பொரித்தெடுத்தால்தான் உள்ளே வரை நன்றாக வெந்து வரும்.
Author: நிதனிபிரபு
Article Title: எள்ளுப் பணியாரம்
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: எள்ளுப் பணியாரம்
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.