• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு காதல் கனா காண்போம் - 3

STN - 91

New member
நெடிய நாளை உழைத்தே கழித்து, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தொழிற்சாலையில் இருந்து அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தனர்.

காலையிலிருந்து இதோடு எத்தனையாவது முறை நண்பன் அடி
வாங்கியதை நினைத்து புலம்புகிறானோ தெரியவில்லை.

தற்போதும், “குனிஞ்சு நின்னிருந்தா இந்த வலி தேவையா? ஆத்தா இத பாத்தா எவ்வளவு வருத்தப்படும்?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் அழகுவேல்.

“உங்க எல்லாருக்கும் அவன் என்ன அடிச்சது மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது. ஆனா எனக்கு என்ன தெரிஞ்சது தெரியுமா?

எதிர்க்க தைரியம் இல்லாத கூட்டத்திலிருந்து ஒருத்தன் நிமிர்ந்து நேருக்கு நேரா கண்ணை பார்த்ததுக்கே அவன் கிட்ட அத்தனை பயம் தெரிஞ்சது.

ஒருத்தன்… நான் ஒரே‌ ஒருத்தன் அவன் பேச்ச கேட்காததுக்கே அவனுக்குள்ள இத்தனை பயம் ஆத்திரம் வருதுனா, நம்ம மொத்த பேரும் இவங்களுக்கு எதிரில திரும்பினா?

ஏத்துக்க முடியாம அடிப்பானுங்க. கொல்லுவாங்க. ஆனா எத்தனை பேரை கொல்ல முடியும்?

நம்ம மண்ண சுரண்ட நம்ம மக்கள் அவங்களுக்கு வேணும் தானே?

இன்னைக்கு ஒருத்தன் கண்ணுல தெரிஞ்ச அந்த பயம், நாளைக்கு ஒட்டுமொத்த அரசாங்கத்து கிட்டையும் தெரியனும்.

ஒட்டு மொத்த நாடும் அவங்களுக்கு எதிரா மாறினா, இவனுங்க அத்தனையும் விட்டுட்டு போய் தான ஆகனும்?

நம்ம மௌனம் தான் அவங்களுக்கு பலம். ஒரு தடவை அத தள்ளி வைச்சு குரல் கொடுத்து பார்த்தா தான் தெரியும் என்ன மாதிரி மாற்றம் வரும்னு.” என்றான் இளங்கோவன்.

“நீ சொல்றத கேட்க நல்லா தான் இருக்கு மாப்ள. எனக்கு மட்டும் இல்ல. இங்க இருக்க நிறைய பேர் மனசுல உனக்கு இருக்க அதே கேள்விகளும் எண்ணமும் இருக்க தான் செய்யுது.

ஆனா இங்கே நம்ம மட்டும் எதிர்த்து நின்னா, கானா பிணமா தான் போவோம்.” என கூறினான் அழகுவேல்.

“ஒரு நாள் வரும். நம்மள அடிமையாக்கி வச்சிருக்க இவனுங்க பயப்படுற ஒரு நாள் வரும்.

அன்னைக்கு நம்ம மட்டும் இல்ல. ஒட்டுமொத்த நாடும் எதிர்த்து நின்னு கேள்வி கேட்கும். நமக்கான நீதியும் சுதந்திரமும் கிடைக்கும்.” என்று கண்களில் மின்னிய கனவுகளுடன் கூறினான் இளங்கோவன்.

பேசியபடியே இருவரும் காலையில் கடந்து சென்ற அதே பள்ளிக்கூடத்தை அடைந்தனர்.

இதுவரை ஒருவித இறுக்கத்தை தத்தெடுத்திருந்த இளங்கோவனின் முகம், அந்த இடத்தை வந்தடைந்ததும் மீண்டும் ஒரு தேடுதலை தத்தெடுத்துக் கொண்டது.

அழகுவேல் இதை கவனிக்காமல் ஏதோ பேசிக்கொண்டே முன்னே செல்ல, இளங்கோவன் அந்த பழைய அரச மரத்தின் கீழ் இருக்கும் பள்ளிக்கூட கட்டிடத்தையே சுற்றி சுற்றி பார்த்தபடி நின்றிருந்தான்.

ஒரு கட்டத்திற்கு மேல், பல அடி தூரங்கள் தள்ளி சென்ற பின் தான், ‘தன்னுடன் வந்தவன் எங்கே?’ என்று திரும்பிப் பார்த்த அழகுவேல், இளங்கோவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்டான்.

அந்நேரம் ‘ஜல் ஜல்’ என்ற சலங்கை ஒலி, அத்தனை பேச்சு சத்தத்திலும் இறைச்சல்களுக்கு மத்தியிலும் இளங்கோவனின் செவிகளை அடைந்து விட, அவன் கண்கள் இன்னும் அதிவேகமாக தன் தேடலை தொடர்ந்தது.

காதில் கேட்கும் சத்தத்தை மூளைக்கு ஏற்றி, நரம்புகள் வாயிலாக கண்கள் அதன் திசையை தேடியது. இறுதியில் கண்டுபிடித்து விட்டான்.

ஒரு மரத்திற்கு பின்னால் மறைந்து நிற்கும் அந்த உருவம், கால்களை அசைத்து முன்னே வந்து இவனை எட்டிப் பார்ப்பதையும், அவன் அறியும் முன் மறைந்து கொள்வதையும் அறிந்து கொண்டவனின் இதழ்கள் தாராளமாக விரிந்தது.

தன்னிடம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் அந்த உருவத்தை நோக்கி அவன் கால்கள் தன்னிச்சையாக செல்லும் நேரம், மீண்டும் நந்தியை போல் குறுக்கே வந்தான் அழகுவேல்.

“டேய். எங்க நின்னு என்ன வேலை பாக்குறேன்னு தெரியுதா? எவனாவது பார்த்தானுங்க, கொன்னு பொதச்சிட்டு தான் மறு வேலை பாப்பாங்க. வா டா.” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தான்.

‘நகர்வேனா பார்’ என்பதை போல் உறுதியாக நின்று இருந்த இளங்கோவனும், நண்பனை புறந்தள்ளிவிட்டு அந்த மரத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“போதும் வாடா.” என்று ஒரே மூச்சாய் அவனை இழுத்து செல்லும் முன், “இன்னைக்கு ராத்திரி காயல் கிட்ட காத்துகிட்டு இருப்பேன். எவ்வளவு நேரம் ஆனாலும் காத்துகிட்டு இருப்பேன். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். வந்துரு டா அழகு. மறக்காம வந்துரு.” என்று சத்தமாக சொல்லிவிட்டு தான் நகர்ந்தான்.

“உங்க தோசைக்கு என்ன ஏன் டா சட்னி அரைக்கிறிங்க?” என்று அழகுவேல் தான் அவனை இழுத்து சென்றான்.

அவன் அங்கிருந்து சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட பின் தான், மரத்தின் பின்னே இருந்த உருவம் வெளியில் வந்தது.

உடல் முழுவதையும் மறைத்து நின்றிருந்த அந்த உருவம், தூரத்தில் செல்லும் இளங்கோவனை கண்டு, புன்னகைப்பது அந்த இமைகளின் சுருக்கத்திலேயே தெரிந்தது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கடல் அலைகள், கரையை வந்து அணைத்துக் கொள்வதும் மீண்டும் கடலை நோக்கி செல்வதுமாக இருந்தது.

ஒருவேளை இப்படி அலைகள் கரையை வந்து ஒட்டி, மீண்டும் பிரிந்து செல்வதால் தான், சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலத்தை காத்திருப்பையும் பிரிவையும் பறைசாற்றும் நிலமாக கொண்டிருந்தனரோ என்னவோ.

நெய்தல் மண்ணில் நம் தலைவன் அவனும் ஊசி போன்று குத்தும் அந்த குளிர் காற்றிலும் காத்திருந்தான், அவன் தேவதைக்காக.

நாள் முழுவதும் உழைக்கும் மக்கள் இரவில் உண்டு உறங்கிவிட, அந்த நெடுவயல் கிராமம் மொத்தமும் இருளில், ஆங்காங்கு ராந்தல் விளக்குகளின் ஒளியை மட்டும் கொண்டு நிசப்தமாக இருந்தது.

வெகு நேரம் மணல் மேட்டின் மேல், ஒரு படகடியில் அமர்ந்திருந்த இளங்கோவன், கண்களை கடல் அலைகளில் நிலைக்க விட்டிருக்க, மனமோ அவளிடத்தில் தானே.

மணி நேரங்கள் கடந்து, இளங்கோவன் செவிகளை தீண்டியது அந்த மெல்லிய சலங்கை ஒலி.

அதை இனம் கண்டு கொண்டவனின் இதழ்கள் முறுவலிக்க, கண்கள் மட்டும் திரும்பவில்லையே.

தூரத்தில் கேட்ட சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக தன் அருகில் வந்ததும் நின்றுவிட, அப்போதும் கல்நெஞ்சக்காரன் கல்லாய் தானே அமர்ந்திருந்தான்.

‘அவன் திரும்புவான்’ என்று எதிர்பார்த்து இருந்தவள் ஏமாற்றமாய் அவன் அருகில் வந்து பொத்தென அமர்ந்தாள்.

மாலையைப் போல் இப்போதும் உடல் முழுவதையும் மறைத்து, அவள் காந்த விழி கண்களுக்கு மட்டும் திரையிடாது வந்திருந்தாள் அவள்.

அவள் அவன் அருகில் இருந்தும், அவன் கண்கள் கடல் அலைகளையே ஏதோ புதிதாகக் காண்பது போல் பிரம்மிப்பாய் கண்டிருப்பதை கண்டு, திருட்டுத்தனமாக வந்திருந்த அவளுக்கு கோபம் தான் வந்தது.

பொறுமை காற்றோடு போக “இப்படி என்ன வர சொல்லிட்டு அலைய ரசிச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்?” அதிகாலை நேரம் கேட்கும் குயிலின் குரலை ஒத்திருந்த குரலாய் வெளி வந்தது அவள் குரல்.

“காலையில என்ன தேட வைச்சு ஏமாத்தினதுல கோபம்னு அர்த்தம்.” என்றான் இளங்கோவனும் சலிக்காது.

“அதுக்கு தான் இந்த கோவமா? இன்னைக்கு நேரம் ஆயிடுச்சுங்க.” என்றாள் கெஞ்சல் மொழியில்.

தற்போது அவளை நோக்கி திரும்பியவன், தன்னிடம் இறைஞ்சும் அந்த மைவிழிகளை கண்டான்.

வில்லாய் வளைந்த புருவங்கள். காந்த சக்தியை மொத்தமும் உறிந்து வைத்திருக்கும் விழிகளுக்கு மேலும் அழகு சேர்க்கவே மைதீட்டி இருந்தாள்.

அவள் விழிகளில் விரும்பியே தன்னை தொலைய விட்டவன், அவள் முகத்தில் திரையிட்டிருக்கும் அந்த துணியை விலக்கினான். அவளும் அனுமதித்தாள்.

வானில் ஒளிரும் பௌர்ணமி நிலவின் ஒளியை விட அவள் முகம் அத்தனை பொழுவு.

பிறை நெற்றி, அஞ்சனம் தீட்டி அவனையே நோக்கும் காந்த விழிகள், முந்திரியை போல் நாசி, சிவந்த அதரங்களை கொண்ட பேரழகியவள்,
யாஸ்மின்.

அவள் மொத்த முகத்திலும் அந்த விழிகள் தான் இளங்கோவனுக்கு மிகவும் பிடித்தது. பின்னே முகம் பார்க்காமல், அவள் விழிகளை கண்டு மட்டுமே காதல் கொண்டவனாகிற்றே.

“கோவமா இருக்கிங்கல்ல? எதுக்காக இப்படி என்னையே பாக்கறீங்க? போங்க போய் அந்த அலையவே ரசிச்சு பாருங்க.” என்று கோபம் கொண்டவள் முகம், உடனே ஆங்காங்கு சிவக்க தொடங்கிவிட்டது.

அந்த ஆழ்ந்த காரிருளிலும், அவள் பிரகாசமான முகமும், அதில் தோன்றும் அவனுக்கே உண்டான பிரத்தியேக பாவனைகளும் நன்றாகவே இளங்கோவனுக்கு தெரிந்தது.

“யாஸ்மின்!” உயிரை உருக்கி காதலை தேக்கி வைத்த அழைப்பல்ல. அமைதியான, பொறுமையான, எதையோ அவன் மனதிலிருந்து அவளுக்கு உணர்த்தி விட துணிந்த அழைப்பு அது.

மெதுவாக அவன் புறம் திரும்பினாள்.

“என்னோட ஒட்டுமொத்த நாளும் தினமும் காலையில உன்னோட இந்த கண்களை பார்த்துட்டு போனதுக்கு அப்புறம் தான் தொடங்கும்.

பிடிக்காம, நம்ம மண்ணிலேயே அடிமையா வாழுறத வெறுக்கிற என் வாழ்க்கையோட ஒரே ஒரு அர்த்தம், உன்னுடைய இந்த பார்வை. இந்த கண்ணில எனக்காக தெரியிற காதல்.

உனக்கு தெரியாது யாஸ்மின். உன்னோட கண்ணு எனக்கு சொல்ற விஷயங்கள், உன் கிட்ட இருந்து எனக்கு கடத்துற அமைதி, இது மட்டும் தான் என்ன நிக்காம ஓட வைக்கிது.” என்றவனை அவளும் முகம் கனிந்து ஆசையாக ஏறிட்டாள்.

சமயங்கள் வேறு. நம்பிக்கைகள் வேறு. ஆனால் காதல் இருவரையும் வேறுபடுத்தவில்லை.

இமை தீண்டலுக்காக, சிறு சிறு பேச்சு வார்த்தைகளுக்காக, தூர விழி பார்வைக்காக ஏங்கும் கண்ணியமான காதல் இவர்களது.

“இன்னைக்கு நிஜமாவே ரொம்ப நேரம் ஆயிடுச்சு. தங்கச்சிய கிளப்பி கூட்டிட்டு அவசர அவசரமா வரேன், அதுக்குள்ள மணி அடிச்சு நீங்க உள்ள போயிட்டிங்க. ரொம்ப நேரம் உங்களுக்காக அங்கேயே நின்னேன் தெரியுமா?” என்று அவன் தோள் சாய்ந்தாள் யாஸ்மின்.

அவள் அருகில் அவன் மனதும் உடலும் இலகுவாக இருக்க, யாஸ்மின் சாய்ந்த அவன் புஜங்களில் இருந்த வலியும் கூட அப்போது தான் அவனுக்கு உரைத்தது.

“ஸ்ஸ்” என்று அவள் அறிந்து விடக்கூடாது என்று அவன் லேசாக வலியில் முனக, வேகமாக அவனிடமிருந்து விலகியவள், “என்னங்க? என்னாச்சு?”என்று கேட்டாள்.

“ஒன்னும் இல்ல.” என்று முகம் திருப்பியவனின் தாடையைப் பற்றி தன் புறம் திருப்பியவள், அவன் மார்புப்புற சட்டையை லேசாக விலக்கினாள். அங்கு சிவந்து கன்றி போய் இருந்தது டேவிட்டால் ஏற்பட்ட காயங்கள்.

அதைக் கண்டவள் விழிகள் சட்டென பணித்து, முகம் பதற்றமாக மாறி, “என்னது இது? எப்படி இவ்ளோ பெரிய காயம் ஆச்சு?” என்று விசும்பலுடன் கேட்டாள்.

தன்னவள் சிறு சிறு காயங்களுக்கும் ரத்தத்திற்கும் அதிகம் அச்சம் கொள்பவள் என்பதை அறிந்த இளங்கோவன், “இன்னைக்கு வேலை இடத்துல அடிச்சுட்டானுங்க.” என்று இயல்பாக கூறினான் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு.

ஆனால் யாஸ்மினால் தான் அதனை எளிதாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. அவன் காயங்கள் அவளை அவ்வளவு எளிதாய் எடுத்துக்கொள்ள விடவில்லை.

காயத்தை பார்த்தால் தெரியாதா, அது எவ்வளவு வலியை கொடுக்கும் என்று.

“ஏங்க இப்படி அடிச்சிருக்காங்க?” என்றவளுக்கு, ‘தன்னவன் அப்போது எத்தனை வலியை அனுபவித்தானோ?’ என்று நினைக்கும் போதே கண்கள் மேலும் கண்ணீரை தான் தந்தது.

அவளும் அறிந்தவள் தானே வெள்ளையர்களின் அடி என்றால் அது எப்படி இருக்கும் என்று.

அவள் கண்ணீரை பார்க்க முடியாமல் வேகமாக அவள் வலது கரத்தை பற்றி அவன் காயம் பட்ட இடது மார்பின் மேல் வைத்துக்கொண்டான் இளங்கோவன்.

அமைதியற்று ஓடும் கடல் அலைகளைப் போல் அவன் அமைதியற்ற உள்ளம் துடிக்கும் ஓசை அவள் உள்ளங்கையால் உணர்ந்தாள்.

தன் கரத்தை அவன் நெஞ்சோடு அனைத்து பிடித்திருந்த இளங்கோவனையே பார்த்திருந்தாள் யாஸ்மின்.

அவள் விழியிலிருந்து கசியும் உவர் நீரை தன் விரல்களை கொண்டு துடைத்தவன், “இந்த கண்ணுல எப்பவும் கண்ணீர் வரவே கூடாது யாஸ்மின்.

அதுவும் எனக்காக வரவே கூடாது. இதுவே நான் நாளைக்கு சுதந்திரத்துக்காக போராட போனேன்னா, இதைவிட எனக்கு காயங்கள் ஏற்படும். ஏன் உயிர் போக கூட வாய்ப்பு இருக்கு…” என்று அவன் கூற கூறவே இடையில் அவன் வாய் மீது தன் கரத்தை வைத்து தடுத்தாள் யாஸ்மின்.

அவன் கூறுவதை அவளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

அவள் கரத்தை நீக்கியவன், “வாய்ப்பிருக்கு. அப்படி ஒரு சூழ்நிலை வந்தாலும், எனக்காக நான் பார்த்து ரசிச்ச என்னுடைய யாஸ்மினோட இந்த கண்ணுல இருந்து ஒரு சொட்டு தண்ணி வந்தாலும் அதை நான் ஏத்துக்க மாட்டேன். என் உயிர் இந்த மண்ணிலிருந்து பிரிகிற கடைசி நேரமும் என்னோட கடைசி பார்வை உன்னுடைய இந்த கண்களா மட்டும் தான் இருக்கணும்.” என்றான்.

அவளுக்கு முன்னரே தங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் இந்த சமய வேறுபாட்டால், ‘தங்கள் காதல் உறவாக மாறுமா?’ என்ற பெரும் அச்சம் காதலில் விழுந்த நாள் முதலே மனதை கரையானை அரித்துக் கொண்டுள்ளது.

வெகு நாட்கள் பிடித்திருந்தாலும், அவனை அந்நிய பார்வை பார்த்து தவிர்த்து வந்ததும் இந்த காரணத்தினால் தான்.

இதில் இவன் வேறு போராட்டம், சுதந்திரம் என்று ஏதேதோ கூற, அவளின் அச்சமும் பன்மடங்கு அதிகரித்தது.

அவள் மனதை அடைத்துக் கொண்டிருக்கும் அந்த கேள்வியை இன்று அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்து விட்டாள்.

அவனை கசங்கிய முகத்துடன் ஏறிட்டு “நமக்கு இடையில நிறைய வித்தியாசங்கள் இருக்கு. உங்க குடும்பமும் என் குடும்பமும் நம்ம ரெண்டு பேரும் சேர சம்மதிப்பாங்களான்னு தெரியல.

அப்படியே சம்மதிச்சாலும் நம்ம உறவ இந்த சமூகம் ஏத்துக்குமா? நம்மள நிம்மதியா வாழ விடுவாங்களா?

நம்ம காதல் இப்படி வெறும் கனவாகவே போயிடுமா?” என்று பெண்ணவள் கேட்க, இளங்கோவன் அவளை தீர்க்கமாக பார்த்தான்.

“நம்ம நினைக்கிறத விட, நம்ம கனவுகளுக்கு அதிகமான சக்தி இருக்கு யாஸ்மின். நம்ம ஒன்னை வேணும்னு ஆழமா கனவு காணும் போது, இந்த பிரபஞ்சமுமே நமக்கான வழிய உருவாக்கி கொடுக்கும்.

அதேபோல நம்ம காணும், நம்மளோட காதல் கனவும் நிச்சயம் நடக்கும். நம்ம ரெண்டு பேரு மனசுலயும் இருக்க இந்த ஆத்மார்த்தமான காதல், எவ்வளவு தடைகள் வந்தாலும் கடைசில உன்னை என் கிட்ட கொண்டு வந்து சேர்த்திரும்னு நான் நம்புறேன்.” என்றிட யாஸ்மினுக்கும் அவன் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுத்தது.

இருப்பினும் அவள் மனதின் ஓரம் நெருஞ்சிமுள்ளாய் ஒரு பயம் குத்திக் கொண்டே தான் இருந்தது.

அதிலும் இப்போது இளங்கோவன் போராட செல்வேன் என்று கூறியதில் புதிதாக ஒருவித நெருடலும் சேர்ந்து கொண்டது.

அவன் இந்த நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்டு அவர்கள் கீழே வாழ்வதை வெறுப்பவன், அதை எதிர்ப்பவன் என்று அவளுக்கும் நன்றாக தெரியும்.

இருப்பினும் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை சரிக்க வேண்டும் என்றால் அதில் உயிர் சேதங்களும் இழப்புகளும் நேரத்தானே செய்யும்.

காதல் கொண்ட மனம் தன்னவனுக்கு எந்தத் தீங்கும் வந்து விடக்கூடாது என்று மானசீகமாக வேண்டிக்கொண்டது.

அவள் அவனை தடுக்க வேண்டும் என்றோ அல்லது அவள் காதல் மட்டும் நிறைவேறினால் போதும் என்றோ நினைக்கவில்லை.

மாறாக அவனை அவன் விரும்பியதை செய்ய விட்டு அவன் நலனை நினைத்து கவலை கொண்டது அந்த பெண் மனம்.

இதுதான் அவள் குணமும்.

-கனா 🤎
 
Top Bottom