• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்களுக்குள் பள்ளி கொண்டேன் -18

skp

New member
ஜெகதீஸ்வரன் தன் கைகளுக்குள் சக்தியை சிறை எடுத்து, அவளது கடந்த காலத்து மனக்குளிருக்கெல்லாம் அவன் மார்புச் சூட்டில் குளிர் காய்ந்து, அவள் நெற்றியில் இதழ் பதித்து தனக்கும் அவளுக்கும் இடையே ஆன உறவை உறுதி செய்து நாட்கள் பதிமூன்று கடந்திருந்தது.

விபத்து நடந்த பொழுது எரிமலையாய் சீறி சினந்தவன், அதன் பிறகு முற்றும் முழுதாய் அமைதியாகி போனான். செல்லும்பொழுது அதிகமாய் தெரிந்த தூரம் திரும்பும் பொழுது மிகச் சொற்பமாகி போனது.

காரில் இருந்த அழுத்தமான அமைதியை கலைக்க நாயகனும் நாயகியும் முயலவில்லை. அவரவர் அவரவர் எண்ணங்களில் சுழன்று கொண்டிருக்க, காற்றைக் கிழித்துக்கொண்டு சென்ற வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் விடுதியை வந்தடைந்ததாக இருவருக்கும் தோன்றியது.

அவளைக் கொண்டு வந்து விடுதியில் விட்டுவிட்டு மௌனமாக அவளது விழிகளோடு விழிகள் கோர்த்து மெதுவாய் தலையசைத்து விடை பெற்று சென்றான்.

தாரணி அறையில் இல்லாமல் போனதால் நடந்த விஷயங்கள் எதுவும் அவளுக்கு தெரியாமலேயே போனது.

உள்ளுக்குள் என்னென்னவோ எண்ணங்கள் தோன்றி அவளை பந்தாடிக் கொண்டிருந்த போதும் ஆழ்கடலாய் அனைத்தையும் மனதுக்குள் புதைத்துக் கொண்டவள் எப்பொழுதும் போல கிளம்பி அலுவலகம் சென்றாள் மறுநாள்.

நொடிக்கு ஒரு முறை அவனது அறையை தொட்டு மீண்ட அவளது கண்கள் அன்றைய நாளின் முடிவில் சோர்ந்து போயின. என்னவென்று சொல்ல முடியாத உணர்வுகள் அவளை அலைக்கழிக்க அந்த பழுப்பு விழிகள் கண்ணீரில் மிதக்க ஆரம்பித்தன.

முதல் நாள் கிடைத்த ஏமாற்றத்தில் சோர்ந்து போய் அலுவலகம் வந்து சேர்ந்தவள், இரண்டாம் நாள் ஆர்ப்பரிப்போடு உள்ளே வந்த சர்வேஸ்வரனை கண்டாள்.‌

அவளது கண்கள் அவனுக்கு பின்னால் எதையோ தேடி கிடைக்காமல் சோர்ந்து, பின் மீண்டு நண்பனை கண்டதில் அமைதி அடைந்தது. சிறு புன்னகையோடு அவள் தலையசைத்து அவனை வரவேற்க, அவள் முகத்தையே ஆராய்ச்சியாக பார்த்து வைத்தான் சர்வேஸ்வரன்.

“என்ன ஆர்க்கி மேடம் முகம் எல்லாம் வாடி இருக்கு?” என்று கேட்டவன் அவளிடம் பதிலை எதிர்பார்க்காமல்,

“ஒரு நாள் ஐயாவ பாக்கலன்னா இப்படியா முகம் வாடி போறது?” என்றும் சேர்த்து கேட்க சோபையான புன்னகை பெண்ணின் முகத்தில்.

“இந்த மோனலிசா ஸ்மைல் மட்டும் என்கிட்ட பண்ணாத பார்க்க முடியல… என்ன பிரச்சனை?” என்று அவன் கேட்க,

“கேள்வி கேட்டா பதில் சொல்ல டைம் கொடு. அதை விட்டுட்டு அடுத்தடுத்து கேள்வி கேட்டு நீயே பதில் சொல்லி… அதி புத்திசாலிக்கு ஆப்போசிட் மாதிரி ஏதாவது பேசாத ஷர்வா… எனக்கு என்ன? ஒரு பிரச்சனையும் கிடையாது. நல்லதா இருக்கேன். இன்னும் சொல்லப்போனா நேத்து நீ வராம ரொம்ப சந்தோஷமா வேலையை பார்த்தேன்… சோ உன் கண்ண கொண்டு போய் நல்ல டாக்டர் கிட்ட காட்டு…” தான் சரியாகத்தான் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக சக்தி வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக் கொட்டி கிளறி மூட, தோழியையே ஆழ்ந்து பார்த்தான் சர்வேஸ்வரன்.

“இப்போ கன்ஃபார்ம். என்னவோ இருக்கு. நீயா சொல்ல மாட்ட. கண்டுபிடிக்கிறேன்…” என்று மிக தீவிரமான குரலில் சொல்ல, தன் பதற்றத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அவளும் அவனைப் பார்த்து வைத்தாள்.

அப்பொழுது அவனது கைபேசி அதிர எடுத்துப் பார்த்தவன் தலையில் தட்டிக் கொண்டான்.

“15 டேஸ்… நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தேன்… விடமாட்டாங்களே… மெசேஜ்ல வேலை சொல்றாங்க…” என்று கைபேசியை பார்த்துக்கொண்டே அவன் சொல்ல,

ஏதோ மனதிற்குள் உந்த, “என்ன… என்ன 15 டேஸ்?” என்று தன்னையும் மீறி கேட்டு வைத்தாள் சக்தி.

“உனக்கு தெரியாதா? உன்கிட்ட சொல்லலையா!” ஆச்சரியமாய் சர்வேஸ்வரன் கேட்க,

“என்ன ஷர்வா சொல்ற? எனக்கு எதுவுமே தெரியாதே. யார் என்கிட்ட சொல்லணும்? என்ன சொல்லணும்?” அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டாள் சக்தி.

“எத்தனை கேள்வி? மூச்சு விடு.” என்று சொன்னவன்,

“யூஎஸ்ல இருக்கிற ஒரு லீடிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி கூட பார்ட்னர்ஷிப் அண்ணா ட்ரை பண்ணிட்டு இருந்தாங்க. அந்த பார்ட்னர்ஷிப் கன்ஃபார்ம் ஆயிடுச்சு. நேத்து நைட்டே கிளம்பிட்டாங்க. துபாய் போய் அங்க இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் ரீச் ஆகிட்டாங்க.

மினிமம் 15 டேஸ் ஆகும் ரிட்டன் வரதுக்கு…” என்றவன்,

“அண்ணா உன் கிட்ட சொல்லி இருப்பாருன்னு நினைச்சேனே… சொல்லலையா?” என்று கேட்டுவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல்,

“அதனாலதான் ரொம்ப ஜாலியா இருக்கலாம்னு நெனச்சேன். விடுவாரா மனுஷன்? இந்தா அனுப்பிட்டாரு மெசேஜ்… எந்தெந்த நேரம் எந்தெந்த வேலை பார்க்கணும்னு டைம் டேபிள் போட்டு ஸ்கூல் பசங்களுக்கு அனுப்புறது போல அனுப்பி வச்சிருக்காரு… இவர வச்சுக்கிட்டு…” என்று புலம்பியவன் அடுத்து ஒலித்த மணி சத்தத்தில் அலைபேசி எடுத்துப் பார்த்தவன்,

“ஐ திங்க் ஹி இஸ் வாட்சிங் அஸ்… நோ… வாட்சிங் மீ…” என்று அழாத குறையாக சொல்லிவிட்டு தன் அறையை நோக்கி சென்றான்.

அறைக் கதவில் கையை வைத்து மீண்டும் திரும்பி சக்தியை பார்த்ததையோ, அவள் நின்றிருந்த கோலம் கண்டு கண்களைச் சுருக்கி பார்த்தவனுக்கு ஏதோ விளங்கியது போல மென் புன்னகை சிந்தி விட்டுச் சென்றதையோ அறியவில்லை பெண்.

ஆணி அடித்தது போல் அசைவில்லாமல் நின்று கொண்டிருந்தாள் சக்தி.

“ஒரு நாள் தான் முடிஞ்சிருக்கா? இன்னும் 14 நாள் இருக்கா அவர் திரும்பி வர?” மங்கையின் மனம் கணக்கு வைக்க ஆரம்பித்துவிட்டது.

எண்ணம் தோன்றிய நொடி மொத்த ஜீவ சக்தியும் கரைந்து காணாமல் போனது போல ஓய்ந்து போனாள் சக்தி.

ஜீவனே இல்லாமல் தன் இருக்கைக்கு சென்றவள், சற்று நேரம் கண்களை மூடி அமர்ந்து விட்டாள், எதுவும் செய்ய முடியாதவளாக.

சில பல நிமிடங்களை விழுங்கிக் கொண்ட அவள் தனிமை துயரத்தை, கையில் இருந்த கைபேசி அதிர்ந்து துடைத்துவிட்டது.

மின்னஞ்சல் வந்ததற்கான அறிவிப்பு கைபேசியில் தெரிய, சோர்வாக திறந்து பார்த்தாள்.

அடுத்து செய்ய வேண்டிய செயல் திட்டத்திற்கான தகவல்களை தாங்கி வந்திருந்தது அந்த மின்னஞ்சல்.

அந்த மின்னஞ்சலை அனுப்பியது யார் என்பதிலேயே நிலைத்திருந்தது அவளது கண்கள்.

“இத மட்டும் அனுப்ப முடியும்…” தன்னையும் அறியாமல் இதழ்கள் முணுமுணுக்க, தன் எண்ணம் போகும் போக்கை அறிந்தவள் ஒரு நொடி அதிர்ந்து தான் போனாள்.

பின் இதழ் கடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டவள், முயன்று வேலையில் கவனம் செலுத்தினாள்.

எப்பொழுதும் போல வேலை அவளை தனக்குள் மொத்தமாய் இழுத்துக் கொள்ள அலுவலக நேரம் அமைதியாகத்தான் போனது.‌ என்ன அவ்வப்போது அவனது அறையின் கதவை தொட்டு மீண்ட விழிகளைத் தான் அவளால் தடுக்க முடியவில்லை.‌ ஆனாலும் இரவு நேரம் தான் அதிகமாய் தவிக்க வைத்தது.

ஏனோ அப்படித்தான் அவன் இல்லாத அன்றைய நாள் மனம் அதிகமாய் அவனை தேடியது.
கலந்து ஆலோசிக்கும் அறையில் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

பலராமன் சர்வேஸ்வரனுடன் சேர்ந்து வெளியே சென்று இருக்க, அவள் தலைமையில் நடந்து கொண்டிருந்தது அந்தக் கூட்டம்.

ஜூனியர் ஆர்கிடெக்ட் நகுலன் அவனது செயல் திட்டத்தை காட்டி விளக்கிக் கொண்டிருந்தான்.

கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்த சக்தியின் கண்கள், ஒரு இடத்தில் நிலைத்து நின்றது.‌

“இது கஸ்டமர் கேட்ட ரெக்கொயர்மென்ட் கிடையாது. இந்த எலிவேஷன் பேலன்ஸ் ஆகல…” என்றவள்,

“சார் இதையெல்லாம் அலோ பண்ண மாட்டாங்க. டீடைல்ஸ் மிஸ் பண்ணாதீங்க நகுல்…” என்று சொல்லி விட அறையில் இருந்த அனைவரின் பார்வையும் அவள் மேல் நிலைத்தது.

அதை கவனிக்காதவள், “அதுக்கு பதிலா இந்த எலிவேஷன் 45 டிகிரி ஸ்லாண்டிங்கா வந்ததுன்னா கரெக்டா இருக்குன்னு தோணுது. செக் பண்ணி பாருங்க உங்களுக்கு ஓகேன்னா ஆட் பண்ணுங்க…” என்று எப்பொழுதும் போல அவர்களுக்கு உதவக்கூடிய விஷயங்களையும் சொல்லிக் கொடுக்க, இன்னும் அதிகமாய் அவளை மொய்த்தன அங்கிருந்த கண்கள்.

ஒன்றும் புரியாமல் பார்த்தவள், மேலே செல்லும்படி செய்கை செய்ய, அவள் செய்கையில் கண்கள் விரிந்தாலும் அவள் சொன்னதை செய்தான் நகுலன்.

சில நிமிடங்களில் கூட்டம் முடிந்து வெளியேறி சென்றனர் தங்களுக்குள் பேசியபடி.

“நிஜமாவே ஜெகதீஸ்வரன் சார் பெரிய ரோல் மாடல் தான். அவர் கூட பேசிட்டு வந்தா ரெண்டு செகண்ட்ல நம்மளையும் அறியாம இன்ஃப்ளூன்ஸ் ஆகியிருப்போம். ஆனா சக்தி மேம் வேற லெவல்… அவங்க சொன்ன வார்த்தையாகட்டும், பாய்ண்ட் பண்ண விதமாகட்டும்… யூ கன்டினியூ அப்படின்னு சைகையில சொன்னாதா இருக்கட்டும் அப்படியே ஜெகதீஷ்வரன் சார்… ஜெகதீஸ்வரன் சாரோட லேடி வெர்ஷன் பார்த்த மாதிரி இருந்தது.” ஒருவன் சொல்ல,

“அதுக்கு பேரு தான் காப்பி அடிக்கிறது…” என்றாள் ஒரு பெண், அலட்சியமாக இதழ்களை சுளித்த படி.

“நேத்து சக்தி மேம் மாதிரி பேச ட்ரை பண்ண பாத்தியா அதுக்கு பேருதான் காப்பி… அதைவிட அவங்க ஐஸ் போல லென்ஸ் வச்சுட்டு வந்த பாத்தியா அதுக்கு பேரு தான் அட்டு காப்பி…

இப்போ நடந்தது வேற…

ஏன் மோஸ்ட் ஆப் த டைம் பசங்க சேர்ந்து பேசும்போது ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லி இருக்கோம். நீ சர்வா சார் போல பேசுற, ஜெகதீஸ்வரன் சார் போல பார்க்க ட்ரை பண்றன்னு… அதெல்லாம் தானா நடக்கிறது. அடுத்தவங்க சொல்ற வரைக்கும் இப்படி பண்ணோமா அப்படின்னு அவங்களுக்கே தெரியாது…

இப்போ நடந்தது அதுபோல ஒன்னு. அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது. போ… நீ போய் இன்னைக்கு மேம் போட்டுருக்க குர்த்தி எங்க கிடைக்கும்? ஜீன்ஸ் எந்த பிராண்ட்னு சர்ச் பண்ணு போ…” என்று அந்தப் பெண்ணை வாய் திறக்க முடியாத அளவு பதிலடி கொடுத்துக்கொண்டே சென்றான் மற்றொருவன்.

சக்தி அறையில் இருப்பாள் என்ற எண்ணத்தில் அவர்கள் மெதுவான குரலில் பேசிக்கொண்டு சென்றாலும் நிசப்தமான அந்த அலுவலகத்தில் அவர்கள் பேசியது அட்சர சுத்தமாக விழுந்தது சக்தியின் காதுகளில்.

சில நொடிகள் கால்களை கூட அசைக்க முடியாமல் போனது சக்தியால். தன்னை பற்றி இப்படியான கருத்துக்கள் அலுவலகத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறது என்பதை அறிந்த போதிலும் ‘தன்னுள்ளே அவன் - ஜெகதீஸ்வரன் சாரோட லேடி வெர்ஷன்…’ என்ற எண்ணம் போதுமானதாக இருந்தது அவற்றையெல்லாம் ஓரம் கட்ட.

தேகமெல்லாம் சிலிர்த்துப் போக அவனைத் தேடியது மனம் அதிகமாய். ஆனாலும் வேலைகள் அதற்கு இடம் கொடுக்காமல் போகவே மீண்டும் தன்னை அதற்குள் புகுத்திக் கொண்டவள் வேகமாக அவற்றையெல்லாம் முடித்துவிட்டு விடுதி வந்து சேர்ந்தாள்.

தாரணி அன்று ஆகாஷ் உடன் வெளியே சென்று இருக்க தனிமை கொடுமையாகி போனது.

பேச வேண்டும் போல் இருந்தது… மனம் விட்டு பேச வேண்டும் போல் இருந்தது சக்திக்கு.

கைபேசியை எடுத்தவள் விரல்கள் சேமித்து வைத்திருந்த பெயர்களை மேலும் கீழுமாக நகர்த்திக் கொண்டிருந்தது.

அம்மா முதலாய் வந்து நின்றது. ஆழ்ந்து பார்த்தவள், மேலே தள்ளிவிட்டாள். தாரணி பல பேர்களுக்கு அடுத்து வந்து சேர்ந்தது. அதையும் நகர்த்தினாள்…

எத்தனையோ பெயர்கள்… அத்தனையையும் எளிதாய் நகர்த்திய அவளால், ஜெகதீஸ்வரன் என்ற பெயரை மட்டும் நகர்த்த முடியவில்லை.

சில நொடிகள் ஆழ்ந்து பார்த்தவள் விரல்களால் மெதுவாக தீண்டினாள்.

அதைக் கடந்து மேலும் செல்ல முடியவில்லை. கீழும் நகர்த்த முடியவில்லை விரல்களை. பசை போட்டு ஒட்டியது போல வேலை நிறுத்தம் செய்தது விரல்களும் கண்களும்.

அதே நேரம்…

லாஸ் ஏஞ்சல்ஸ்…

காலை 7:30

தனது ஹோட்டல் அறையின் பால்கனியில் நின்றபடி தன் கையில் வைத்திருந்த கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான் ஜெகதீஸ்வரன்.

சக்தியை போல தேட எல்லாம் இல்லை அவன். அவன் விரல்கள் தேடி எடுத்து இருந்தது அவளது பெயரை.

‘சக்தி…’ அவன் கைபேசியில் இருந்த ஒரே தமிழ் பெயர் அதுதான்.

“ஃபீல் பண்ணுங்க சார்…” கண்கள் மின்ன சொன்ன சக்தி…

தன் மார்புக்குள் இருந்து முகம் நிமிர்த்தி பார்த்த சக்தி…

தான் இதழ் ஒற்றியதில் அதிர்ந்து போய் நின்ற சக்தி…

“நீங்க இருக்கீங்களே…” விழியோடு விழி கலக்க சொன்ன சக்தி…

“உங்களுக்கு எதுவும் அடி இல்லையே…” பதறிப் பாதாதி கேசம் பார்வையால் வருடிய சக்தி…

தலையில் ஏதேனும் அடிபட்டு இருக்கிறதா என்று கை விரல் கொண்டு தன் தலையை சோதித்த சக்தி…

எங்கும் சக்தி… எதிலும் சக்தி என்பது போல் அவன் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்து இருந்தாள் ஈஸ்வரனின் சக்தி.

கண்கள் அவள் பெயரில் நிலை பெற்றிருக்க, நினைவுகள் மொத்தமும் அவள். ஆனாலும் அழைக்கவில்லை.

இன்று நேற்று அல்ல… என்று அமெரிக்கா வந்து சேர்ந்தானோ அன்று முதல் நடக்கும் நிகழ்வு தான் இது.

பேச நினைத்து, என்ன பேசுவது என்று யோசித்து யோசித்து பேசாமலேயே கடந்து கொண்டிருந்தது அவனது நாட்கள், அவளைப் போலவே.

அதற்கு அடுத்த நாள் அலுவலகம் வந்து சேர்ந்த சக்தியின் மனதிற்குள் இன்னும் இரண்டு நாள் என்ற கணக்கு தன்னையும் அறியாமல் முதலாய் வந்து நின்றது.

ஆனாலும் தன் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே செல்லும் முன் ஒரு நொடி நின்று மூடி இருந்த அவன் அரை கதவை பார்க்காமல் நகர முடியவில்லை அவளால்.

சொல்லாத ஏக்கங்கள் பெருமூச்சாய் வர தன் இருக்கையில் அமர்ந்தவள் கண்கள் விரிந்தது.

அவளது மேஜையின் மீது இருந்தது பிரவுன் நிற கவர் போட்ட பார்சல் ஒன்று.

“என்ன இது?” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள் அதை கைகளில் எடுக்க மேல்புறம் அவளது முகவரி எழுதப்பட்டிருந்தது.‌

அனுப்பியவர் முகவரி இல்லாமல் போக நிதானமாக அந்த காகிதத்தை பிரித்தாள்.

உள்ளே ஒரு புத்தகம் இருந்தது.

“The Eyes of the Skin: Architecture and the Senses.”
Author — Juhani Pallasmaa

அவள் இமைகள் மெதுவாக விரிந்தது. படிக்கும் காலம் தொட்டு அவள் தேடி கிடைக்காத புத்தகம் அது. மிகவும் அரிதான பதிப்பு அது.

எடுத்து மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டவள், புத்தகத்தின் அட்டைப் பக்கத்தை மெதுவாக வருடி கொடுத்தாள்.

கண்களில் ஆர்வம் பொங்க அதன் முதல் பக்கத்தை திறந்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் ஆழியாய் விரிந்தது.

“For the architect who sees life inside walls.”
-
J.
(கட்டிடங்களின் சுவர்களுக்குள் உயிரின் துடிப்பைக் காணும் கலைஞருக்காக…) என்று எழுதி இருந்தது.

அந்தப் புத்தகத்தைப் பார்த்த நேரத்தில் உண்டான மகிழ்ச்சியை ஆயிரம் மடங்காக மாற்றி இருந்தது அந்த ஒற்றை எழுத்து. சக்தியின் இதயச் சுவர்களும் மலர ஆரம்பித்தது.

அவனைக் காணாமல் தவித்தவளுக்கு இந்த பரிசு இதமாய் இருந்தது.

“For the architect who sees life inside walls.”

அந்த வரி… பரிசுகளின் மீது எழுதப்படும் சாதாரண வார்த்தைகள் இல்லை.

அவளை புரிந்து கொண்டு எழுதப்பட்ட வார்த்தைகள். அவளுக்குள் இருந்த ஒரு பகுதியை பார்த்து எழுதப்பட்ட வரி. அது அவளை அதிகமாக அசைத்தது.

புத்தகத்திலேயே தன்னை எத்தனை நேரம் தொலைத்திருந்தாளோ…

“மேம்…” என்று அழைத்தபடி உள்ளே நுழைந்த ராகுலின் குரல் நினைவு உலகுக்கு கொண்டு வந்து சேர்த்தது. புத்தகத்தை மூடி தனது பைக்குள் பத்திரமாக வைத்தவள் அவனை திரும்பி பார்த்தாள்.

“சர்வா சார் கேட்ட ட்ராயிங் ரெடி…”

“ம்…சென்ட் பண்ணுங்க”

தன் கேள்விக்கான பதிலை பெற்றுக் கொண்டவன் சென்ற பிறகும் சில நொடிகள் அந்த புத்தகத்தை மோடி மூடி வந்திருந்த காகிதத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்றைய மாலை...

கோடை மழை கொட்டி தீர்த்திருக்க அலுவலகத்தின் மொட்டை வாடி முழுவதும் மழை நீரின் வாசம்.

எல்லா குழந்தைகளும் முதன் முதலில் வரையும் படத்தில் இருப்பதைப் போல இரண்டு பெரும் குன்றுகளுக்கு நடுவே காம்பஸ் வைத்து வரைந்த வட்ட வடிவ சூரியனை போல, கோடை மழையில் முகில்களுக்கு நடுவே மறைந்திருந்த சூரியன் மீண்டும் மேற்கே தலைகாட்டினான் முழுமையான வட்ட வடிவில். மற்ற நேரங்களில் கண் கூச வைத்தவன் இப்பொழுது முழுதாய் அழகாய் ஆரஞ்சாய் காட்சி தந்தான்.

கதிரவனது ஆரஞ்சு நிறக் கதிர்கள் இயற்கையோ செயற்கையோ… எந்த படைப்பின் மீது படும்பொழுது மட்டும் எப்படி தங்க நிறமாக மாறுகிறது என்பது என்றுமே விந்தைதான்.

வெள்ளையில் அடர் ஊதா நிற பூக்கள் அள்ளி தெளிக்கப்பட்டது போல இருந்த அனார்கலி சுடிதார் அணிந்து மொட்டை மாடியின் கை பிடிச்சுவரில் சாய்ந்த படி கையில் வைத்திருந்த கோப்பையில் இருந்து மிடறு மிடறாக காபியை குடித்தபடி மறையும் சூரியனை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் சக்தி.

இயற்கையின் அழகில் மெய் மறந்திருந்தவளை கலைத்தது கதவை திறக்கும் சத்தம்.

மெதுவாய் திரும்பி பார்த்தவள் கண்கள் வட்டமாய் விரிந்தது.

அவளுக்கு முன்பாக வந்து நின்றான் ஜெகதீஸ்வரன்.

இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவள் முன் வந்து நின்றிருந்தான் ஜெகதீஸ்வரன்.

கருப்பு நிற முழுக்கை சட்டை. எப்பொழுதும் போல முழுக்கை முழங்கை வரை மடிக்கப்பட்டு இருந்தது. கருப்பு நிற கால் சராய் அணிந்திருந்தவனின் இடைப்பட்டி காலணி என்ற அனைத்தும் கருப்பு நிறத்தில் இருந்தது.

கூர்மையான அவனது கண்களில் தெரிந்த பயணக் களைப்பையும் மீறி அட்டகாசமாய் தெரிந்தான் அவள் கண்களுக்கு. ஆறடி உயரத்தில் காந்தமாய் அவளை ஈர்த்தான்.

உச்சி முதல் பாதம் வரை அவள்
அவனை ரசிக்க, பாதாதி கேசம் பார்த்து வைத்தான் அவன் அவளை.

ஒரு வார்த்தை பேசவில்லை இருவரும்…

“கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.”

வள்ளுவனின் வாக்கிற்கு உயிர் சாட்சியாய் நின்றனர் இருவரும்.
 
Top Bottom