• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்களுக்குள் பள்ளி கொண்டேன் - 26

skp

Member
அத்தியாயம் 26

ஜெகதீஸ்வரனின் குறுஞ்செய்தி வந்த பிறகு கலக்கங்கள் எல்லாம் கரைந்தோடி போயிருக்க மீண்டும் மணமேடையை சந்தோஷமாக பார்த்தாள் சக்தி.

மணமேடையிலிருந்து இறங்கியபடி தாரணியின் கண்களும் அதே நேரத்தில் சக்தியை பார்த்திருக்க, சைகை செய்தாள் அறைக்கு வரும்படி.

மலர்ந்த முகத்தோடு சக்தியும் எழுந்து அறையை நோக்கி செல்ல, உள்ளே நுழைந்ததும் உடன் வந்திருந்த உறவுகளை எல்லாம் வெளியே அனுப்பி வைத்தார் அலங்காரம் செய்வதற்காக வந்திருந்த பெண்.

சக்தி அறைக்கு முன்பாக வந்து கதவினைத் தட்ட, திறந்து பார்த்த பெண்ணுக்கு பின்னால் நின்றிருந்த தாரணி அவளை உள்ளே வரச்சொன்னாள்.

உள்ளே நுழைந்த சக்தி ஆர்வமாக வந்து தாரணியை கட்டிக் கொள்ள, சில நொடி அமைதியாக இருந்த தாரணி விலக்கி நிறுத்திவிட்டு பொரிந்து தள்ள ஆரம்பித்தாள்.

“யாரைக் கேட்டு என்னை விட்டுட்டு கீழ உக்காந்த நீ… என் கூடவே இருக்கணும் தானே சொன்னேன். யார கேட்டு கீழே போன? ஓரமா ஒக்காந்து எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட்டு பாடுறியா? தொலைச்சிடுவேன் ராஸ்கல்… மரியாதையா என் கூடவே இருக்கணும். என்னை விட்டுட்டு ஒரு அடி நகர்ந்த வெளுத்துடுவேன்…” அவள் கத்திக் கொண்டிருக்க, மீண்டும் அவளை அணைத்துக் கொண்ட சக்தி,

“கல்யாண பொண்ணு டி. இன்னைக்காவது கொஞ்சம் வெட்கப்படுற மாதிரி நடி. இன்னும் பத்து நிமிஷத்துல மேடைல நிக்கலைன்னா ஆகாஷ் ப்ரோ கதவை உடச்சுக்கிட்டு உள்ள வந்துருவாரு… எங்க என் பொண்டாட்டி எங்க என் பொண்டாட்டின்னு… அநியாயமா ஒரு ஷோ காட்டாம கிளம்புற வழிய பாரு.

சிஸ்டர் நீங்க புடவை சேஞ்ச் பண்ற வேலைய பாருங்க. இவ கத்திக்கிட்டே தான் இருப்பா.” என்று தாரணியில் ஆரம்பித்து, சேலையை கையில் பிடித்தபடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் முடித்தாள் சக்தி.

“சாரி சிஸ்டர்…” என்று அந்த பெண்ணிடம் சொல்லிய தாரணி கிளம்ப ஆரம்பித்தாள்.

“சக்தி என்னை விட்டு எங்கேயும் போகாத…” தாரணி சொல்லிக் கொண்டிருக்க,

“கல்யாணம் முடிஞ்சிடுச்சு. அடுத்தடுத்து நிறைய சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு சும்மா என்னை பாத்துக்கிட்டே நிக்காத…” என்று சொல்லிக் கொண்டே வந்த சக்தி,

“நான் சாப்பிட்டுட்டு கிளம்புறேன்…” என்றும் இலகுவான குரலில் சொல்ல,

“கொன்னுடுவேன்…” வேகமாக திரும்பினாள் தாரணி.

“ஜெகன் வராங்க தரு…” மெதுவான குரலில் சக்தி சொல்ல, வாயடைத்துப் போனது தாரணிக்கு.

இதற்கு மேல் அவளை நிறுத்தி வைக்க முடியாது தானே… பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும் திருமணத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ஆகாஷோடு சேர்ந்து சுற்றியது நினைவிற்குள் வந்து செல்ல, சக்தியை போகக்கூடாது என்றும் தடுக்க முடியவில்லை அவளால்.

“நான் இங்க இருந்தேன்னா என்னை பத்தியும் யோசிச்சுகிட்டே இருப்ப. நான் முன்னாடியே சொன்னேன். நீ தான் கேட்கல. இப்போ ஜெகன் வராங்க. நான் கிளம்புறேன். நான் தனியா இல்லை. என்னை பத்தி கவலைப்படாத…

இதெல்லாம் வாழ்க்கையில ஒரே ஒரு தடவை வர்ற அழகான மொமென்ட்ஸ். மிஸ் பண்ணிடாத தரு. என்ஜாய் பண்ணு.

எல்லா விசேஷமும் முடிஞ்சிட்டு சென்னைக்கு தானே வரப்போற… அப்போ பாத்துக்கலாம்.” என்று சொல்லிய சக்தி, அறையில் இருந்த தனது பையைத் திறந்து அவளுக்காக வாங்கி வந்திருந்த பிரேஸ்லெட்டை அவள் கைகளில் போட்டு விட்டு, “புடிச்சிருக்கா?” என்றும் கேட்டாள்.

“ரொம்ப அழகா இருக்கு. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு…” முகம் மலர அவள் சொல்ல, சக்தியின் முகமும் மலர்ந்தது.

அடுத்த நொடியே முகம் வாட, “இப்பவே கிளம்புறியா?” என்று தாரணி கேட்க,

“லஞ்ச் சாப்பிட்டுட்டு தான் கிளம்புவேன். நீ கிளம்புடி. ஆகாஷ் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க… என்னவோ இதுக்கப்புறம் நீயும் நானும் பாத்துக்கவே முடியாத மாதிரி சீன் போடாத. உன் வீட்ல இருக்குற ஆளுங்கள பாக்க தான் உனக்கு கஷ்டம். ஒரு கால் பண்ணா நீயும் நானும் மீட் பண்ணிக்கலாம், அரை மணி நேரத்துக்குள்ள… இதுக்கு இவ்வளவு அக்கப்போரா? கிளம்புடி…” அலுத்துக் கொள்வது போல சக்தி சொல்ல,

“ஃபிகர் வந்ததும் பிரண்ட்ஷிப்ப கட் பண்றவ தானடி நீனு… எனக்கு நல்லது பண்றது மாதிரி நடிக்காத. இதுக்கு பேரு தான் எங்க ஊர்ல பக்கத்து இலைக்கு பாயாசம் ஊத்துறது…” என்று சொல்லி நான்கு அடிகளை சக்திக்கு பரிசளித்தவள்,

“ஓகேவா… எல்லாம் கரெக்டா இருக்கா மச்சி?” என்று கேட்டாள், இவர்களின் வாய் சண்டைக்கு நடுவே அவளுக்கு செய்யப்பட்ட அலங்காரத்தை கண்ணாடியில் பார்த்தபடி.

“அது எல்லாம் ஒன்றை இன்ச்க்கு பெயிண்ட் கரெக்ட்டா அடிச்சிருக்காங்க. பேசாம இவங்கள பெயிண்டிங் காண்ட்ராக்ட்க்கு புக் பண்ணலாமான்னு யோசிக்கிறேன். அவ்வளவு அக்யூரேட்டா இருக்கு அவங்களோட வேலை…” என்று சொல்ல பக் என்று சிரித்து விட்டாள் உதவியாக வந்திருந்த பெண்.

அவர்களை திரும்பிப் பார்த்துவிட்டு சக்தியை முறைத்த தாரணியை, “கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்…” என்று சக்தி விடாமல் அவளை வார, பெண்கள் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டனர் வந்து சிரிப்பினை அடக்க.

“இப்பயாவது வந்து தொல ஒரு போட்டோவாவது எடுத்துட்டு போகலாம்…” என்று சொல்லிய தாரணி கையோடு அவளை அழைத்துக்கொண்டு மேடை ஏற,

“ஹார்ட்டி கங்க்ராஜுலேஷன் ப்ரோ…” என்று மேடையில் நின்று கொண்டிருந்த ஆகாஷிடம் சென்று வாழ்த்தியவள், தாரணியின் கைகளில் ஒரு பெட்டியை திணித்தாள்.

“தேங்க்ஸ் டா…” சந்தோஷமாக வாழ்த்தை ஏற்றுக் கொண்ட ஆகாஷின் வலது கையைப் பற்றி தாரணியின் கைகளில் கொடுத்தாள் சக்தி.

தாரணி தன் கையில் கொடுக்கப்பட்டிருந்த நகை பெட்டியை திறந்து பார்க்க, அதில் இருந்தது அழகிய மோதிரம் ஒன்று. தாரணி - ஆகாஷ் என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த மோதிரத்தின் அழகு மேடையில் நின்ற இரு குடும்பத்தினர் கண்களையும் நிறைத்தது.

“போட்டு விடு…” என்று தாரணியிடம் சொன்னவள், “இந்த தங்கச்சியோட ஸ்மால் கிப்ட்…” என்று ஆகாஷிடமும் சொல்ல இருவரின் கண்களும் சக்தியின் மீதுதான் இருந்தது.

“இப்பதான் எனக்கு பிரேஸ்லெட் போட்டு விட்டா…” என்று தனது கையை நீட்டி காட்டி தாரணி சொல்ல,

“இவ்வளவு எதுக்குடா…” என்று கேட்டான் ஆகாஷ்.

“என்னோட சந்தோஷத்துக்காக அண்ணா…” என்று ஆகாஷிடம் சொல்லியவள், “போட்டு விடு மச்சி…” என்றும் சொல்ல, அணிவித்துவிட்டாள்.

“என் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன் அப்படி இப்படின்னு டயலாக் அடிக்க எனக்கும் ஆசை தான். ஆனா உண்மை அது கிடையாதே அண்ணா… அஞ்சு வருஷமா என்னை இவ படுத்தின பாட்டுல இருந்து காப்பாத்துற தெய்வம் நீங்க. உங்களுக்கு இதைக் கூட செய்யலன்னா என்ன தங்கச்சி நான்?” சக்தி சிரிக்காமல் சொல்ல, ஆகாஷ் அட்டகாசமாக சிரித்து வைக்க, முறைத்தாள் தாரணி.

சந்தோஷமாக மூவரும் பேசியபடி நின்று கொண்டிருந்த அந்த அழகிய நிமிடத்தை புகைப்படக்காரரின் கருவி அழகாக சேமித்துக் கொண்டது.

“சாப்பிட்டு தான் கிளம்பனும்.” கீழே இறங்க போனவளை கையைப் பிடித்து நிறுத்தி தாரணி சொல்ல, “நீ சொல்லனுமா சாப்டுட்டு தான் கிளம்புவேன். என்ஜாய் யுவர் டே… என்ஜாய் யுவர் ஹாப்பியஸ்ட் மொமெண்ட்ஸ் தரு…” என்று சொல்ல அவர்களை நோக்கி வேகமாக ஓடி வந்தார் அவளது அண்ணி.

“நீ சொன்னது போலவே எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டேன். இந்தா தாரணி…” என்று தாரணியின் கைகளில் அவர் கொடுக்க, அதை வாங்கி சக்தியின் கைகளில் திணித்தாள் தாரணி.

“என்ன மச்சி இது?” கண்களை விரித்துக் கொண்டு சக்தி கேட்க,

“என்ன கேள்வி இது? என்னோட கல்யாண பலகாரம் பக்கி… மறக்காம எடுத்துட்டு போ…” என்றவளை ஆகாஷின் உறவினர்கள் வந்ததைச் சொல்லி அழைத்தார் ஆகாஷின் அன்னை.

அவர்களிடமும் புன்னகை முகமாக தலையசைத்து விடை பெற்றவள், “ஒழுங்கா போய் நின்னு வந்தவங்கள கவனி. நான் சாப்பிட்டுட்டு கிளம்புறேன்…” என்று சொல்லிய சக்தி கையில் வைத்திருந்த கைக்குட்டையால் தாரணியின் காதோரம் வழிந்த வியர்வையை துடைத்து விட்டு விடை பெற்று மேடையில் இருந்து கீழே இறங்கினாள்.

இறங்கிய சக்தியை தாரணியின் அண்ணனும் அண்ணியும் அழைத்துச் சென்று உணவினை உண்ண வைத்தனர்.

“நான் சாப்பிட்டுக்குறேன் அண்ணா. நீங்க போய் வந்தவங்கள கவனிங்க…” என்று அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சாப்பிட்டு முடிக்கும் வரை உடன் இருந்தார் தாரணியின் அண்ணி.

அவள் சாப்பிட்டு முடிக்கவும் அலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது.

அழைப்பை ஏற்று காதில் வைத்தவள், “ஜெகன்…” என்று எப்பொழுதும் போல அழைத்து,

“முடிஞ்சது. கிளம்பிட்டேன்.” என்று இரண்டே வார்த்தைகளில் அழைப்பை துண்டித்து விட்டு, தாரணியின் அண்ணியோடு சென்று தன் உடமைகளை எடுத்துக் கொண்டு, மணமேடையில் உறவினர்களோடு நின்று கொண்டிருந்த தாரணிக்கும் ஆகாஷுக்கும் கண்களால் விடை கொடுத்து மண்டபத்தை விட்டு வெளியேறினாள் சக்தி.

மண்டபத்தின் வாயிலில் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தது ஜெகதீஸ்வரனின் வாகனம்.

புன்னகை முகமாக வந்தவளை அணு அணுவாக ஆராய்ந்து அள்ளி அணைத்துக் கொண்டது ஜெகதீஸ்வரன் உள்ளம்.

அடர் ஊதா நிற கரையிட்ட மென்மஞ்சள் பட்டுடுத்தி தன்னருகே அமர்ந்திருந்தவளை விட்டு கண்களை நகர்த்த முடியவில்லை ஜெகதீஸ்வரனால்.

அத்தனை நேரம் கொளுத்திக் கொண்டிருந்த வெயில் தட்டென்று காணாமல் போனது. உச்சி வேலை சூரியன் மேகத்திற்குள் மறைந்து கொள்ள மழை வருவதற்கான அறிகுறியைக் காட்டியது வானிலை, ஜெகதீஸ்வரனில் அவளைக் கண்டதும் ஏற்பட்ட மாற்றத்தை போல.

அவன் தனக்குள் தவித்துக் கொண்டிருக்க அந்த மாதிரியான எந்த தவிப்பும் இல்லாத சக்தி, அவன் புறமாக நன்றாக திரும்பி அமர்ந்து தாரணியின் கல்யாணத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே வந்தாள்.

இத்தனை நாட்கள் தன் மனதின் நினைவுகளை எல்லாம் யாருடனும் பகிர்ந்து அறியாத சக்திக்கு, ஜெகனிடம் எந்த தயக்கமும் இல்லாமல் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை கழுத்து வரை இருந்தது. அது அவனை கண்டதும் இயல்பாக வரவும் செய்தது.

அவர்கள் அடித்த லூட்டியை சொல்லச் சொல்ல மென்னகை தவழ ஆரம்பித்தது ஜெகதீஸ்வரனின் இதழ்களில். வாகனமும் நெருக்கமான சாலைகளில் இருந்து நெடுஞ்சாலைக்கு வந்து சேர்ந்து இருந்தது.

இடையிட்டு எதுவும் பேசாமல், அவள் பேசுவதற்கு எல்லாம் ‘ம்’ கொட்டிக்கொண்டு அவளை ரசித்தபடி கவனமாக வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான் ஜெகதீஸ்வரன்.

அங்கே நடந்தவற்றையெல்லாம் பற்றி பேசிக்கொண்டே வந்தவள் மனதின் ஏக்கங்களையும் சொல்ல ஆரம்பித்து இருந்தாள் தன்னையும் அறியாமல்.

“கல்யாணம்னா ஒரு பையனும் பெண்ணும் சேர்ந்து இருக்கிறது மட்டும் இல்லல்ல… அது ரெண்டு குடும்பங்கள் சேரது. இரண்டு குடும்பங்கள்னா அதுக்குள்ள இருக்க சொந்தங்கள் நிறைய பேர் வருவாங்கல்ல…

தாரணிக்கு செய்ய அவ்வளவு பேர் இருந்தாங்க. ஆனா எனக்கு… அப்படி யாருமே இல்லை… இதை எப்படி உங்க வீட்ல அக்சப்ட் பண்ணுவாங்க?” அவள் கேட்ட நொடி அழுத்தமாக அவளை திரும்பி பார்த்தான் ஜெகதீஸ்வரன்.

கவனம் திரும்பிய அந்த நொடியில் எங்கிருந்தோ வந்த லாரி அவர்களின் வாகனத்தின் மீது மோதுவதற்கு வந்தது.

நொடியில் சுதாரித்த ஜெகதீஸ்வரன் வண்டியை ஒடித்து திருப்ப, எதிர் வந்த லாரி வேகமாக கடந்து சென்றது அவர்களை.

கண்ணிமைக்கும் நேரத்தில் மரணத்தின் வாசல் கதவு திறந்து மூடியது போல இருந்தது சக்திக்கு. அந்த பயத்தில் மார்பில் கை வைத்து உறைந்து போயிருந்த சக்தியை இழுத்து அணைத்துக் கொண்டான் ஜெகதீஸ்வரன்.

அவன் மார்புக்குள் புதைந்து கொண்ட சக்தியின் இதயம் தடதடக்க ஆரம்பித்தது.‌

“ஒன்னும் இல்லடா…

சக்தி…

கண்ணம்மா… ஒன்னும் இல்ல. வீ ஆர் சேஃப்…” என்று அனைத்து படியே காதுக்கு அருகில் குனிந்து அவன் சொல்லிக் கொண்டிருக்க, கருக்கொண்டிருந்த வானம் உடைத்துக் கொண்டு கொட்டியது போல மழை பொழிய ஆரம்பித்தது.

எதிர் நிற்பவர் கூட தெரியாத அளவுக்கு அடித்து பெய்தது பேய் மழை.

வானத்தை இரண்டாக கிழித்தது போல வெட்டி கொண்டு வந்த மின்னலின் இடிச் சத்தத்திற்கு தூக்கிப் போட்டது, ஜெகதீஸ்வரனின் கைகளுக்குள் இருந்த சக்தியின் உடல்.

கண்களுக்கு முன்னே வந்து போன மரணமும் அடுத்தடுத்து கேட்ட இடி மின்னலும் அவளுக்குள் பயத்தை உருவாக்கி இருக்க, விட்டால் ஜெகதீஸ்வரனுக்குள் நுழைந்து கொள்வது போல இறுக கட்டிக் கொண்டாள் சக்தி.

அவன் மார்பில் முகம் புதைத்தபடி அசையாமல் இருந்தாள் சக்தி. சில நொடிகளுக்கு முன்பு கண்முன்னே வந்து போன மரணத்தின் நிழல் இன்னும் முழுவதுமாக விலகவில்லை. அவளது முதுகை மெதுவாக வருடியபடி, "ஒன்னும் இல்லடா..." என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான் ஜெகதீஸ்வரன்.

அவனது குரலின் நிதானமும், அணைப்பின் பாதுகாப்பும், இதயத்துடிப்பின் சீரான ஓசையும் மெல்ல மெல்ல அவளது பயத்தை கரைக்க ஆரம்பித்தது. இறுக மூடியிருந்த விரல்கள் தளர்ந்தன. தடுமாறிக் கொண்டிருந்த மூச்சும் சீராகியது.

ஆனால் பயம் குறைந்த இடத்தில் வேறொரு தடுமாற்றம் வந்து அமர்ந்தது. அவனுக்கு இத்தனை நெருக்கமாக இருப்பதை உணர்ந்த நொடி, காரணம் தெரியாத படபடப்பு அவள் நெஞ்சை நிரப்பியது.

அந்த நொடி சட்டென்று தனது இருக்கையை பின்னே நகர்த்தியவன் அடுத்த நொடியே அவளது இடையில் கை கொடுத்து தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

அந்த செய்கையில் திடுக்கிட்டு தலையைத் தூக்கி சக்தி பார்க்க, மூச்சுக்காற்று முத்தமிட்டு கொள்ளும் நெருக்கத்தில் தெரிந்தது அவனது முகம்.

அதிர்ந்து பார்த்த அவளது நெற்றியோடு தன் நெற்றியை முட்டி விலகிய ஜெகன், “என்ன ஆச்சு கண்ணம்மா? எதுக்கு இவ்வளவு பயம்?” என்று அவள் விழிகளை பார்த்து கேட்க, ஒன்றும் இல்லை என்பதாக இடவலமாக அசைந்தது அவளது தலை.

“அப்போ இதுக்கு பேரு என்ன?” என்று அவளது விழிகளில் இருந்து வழிந்த கண்ணீரை கைகளால் துடைத்தபடி கேட்க பதில் இல்லை அவளிடம்.

கண்மண் தெரியாமல் வானமே இரண்டாக உடைந்தது போல கொட்டிக் கொண்டிருந்த மழையோ அதை கிழித்துக்கொண்டு வந்த மின்னலோ அதை தொடர்ந்து கேட்ட இடிச்ச சத்தமோ இல்லை சில நிமிடங்களுக்கு முன்பு கண் முன் வந்து சென்ற மரணமோ எதுவும் இந்த நொடி அவள் மனதில் இல்லை.

எப்படி இருக்கும்? முகத்தில் மோதிய மூச்சுக்காற்றும் இதழ்களுக்கு நடுவே இருந்த மெல்லிய இடைவெளியும், புடவைக்கு நடுவே ஊடுருவிச் சென்று இடையை பிடித்திருக்கும் கரத்தின் வெம்மையும், தன்னை மொத்தமாய் தாங்கியிருக்கும் ஜெகனின் மடியும், ஜெகனின் இதயத்துடிப்பை உணர்ந்து கொண்டிருக்கும் அவளது மார்பும் என்று அவளை நிலை இழக்கச் செய்திருக்க, சட்டென்று தலைகுனிந்து அமர முடியாமல் நெளிந்தபடி அவன் மடியில் அமர்ந்திருந்தாள் சக்தி.

அத்தனை நேரம் புறக்காரணிக்களுக்காக பயந்து போயிருந்தவள் இந்த நொடி தன் அகத்தின் காரணங்களுக்காக பயம் கொண்டிருந்தாள். நிமிர்ந்து அவன் முகம் பார்க்க முடியவில்லை அவளால்.

அத்தனை நேரம் அவளது பயத்தை போக்க வேண்டும், அவளை தனக்குள் வைத்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது அவனுக்குள். இப்பொழுது அவளில் உண்டான தடுமாற்றத்தையும் தன் மடியில் உட்கார முடியாமல் நெளிந்து கொண்டிருப்பவளின் நிலையையும் பார்த்தவனுக்குள் அப்பொழுதுதான் அவர்களின் நிலையை புரிந்தது. அதில்
அவள் நிலையை நொடியில் உணர்ந்து கொண்ட ஜெகதீஸ்வரன் கண்களுக்குள் காதலனின் கனவுகள்.

வெளியில் மழை அடித்துப் பெய்து கொண்டிருக்க காருக்குள்ளே காதல் மழை கொட்டி தீர்க்க ஆரம்பித்தது.

காதலும் இளமையும் தனிமையும் சேரவே கூடாத கூட்டு. ஆனால் சேர்ந்து விட்டதே… அதன் வேலையை காட்டத்தானே செய்யும்?!

பெரிய பெரிய முற்றும் துறந்த முனிவர்களால் கூட முடியாத விஷயம் இளையவர்கள் இவர்களால் முடியுமா?

காதல் தேவனின் நிழலான காமதேவன் மெல்லிய மலர்களை ஒன்றை அவர்கள் இருவரையும் குறிபார்த்து எய்ய சரியாக அதுவும் இலக்கைச் சென்று அடைந்தது.

அதுவரை பாதுகாப்பிற்காக அவளை அணைத்து பிடித்து இருந்த கைகள் இப்பொழுது அவள் தேகத்தின் மென்மையை உணர ஆரம்பித்தது. மூச்சு காற்றின் வெப்பம் கூட கூட, அந்த அனலில் உருகியது பெண் மெழுகு சிலை.

சற்றே இறுக்கமாக அவள் இடையை அவன் கரம் பற்றிட அந்த வேகத்தில் நிமிர்ந்தது அவள் முகம். விழிகள் நான்கும் சந்தித்த நொடி, இடையைப் பற்றி இன்னும் தன்னோடு இறுக்கி அணைத்தான் ஜெகதீஸ்வரன்.

அதில் அவள் விழிகள் இன்னும் அகலமாய் விரிய, ஜெகதீஸ்வரனின் இதழ்கள் அழுத்தமாய் பதிந்தது, அவனைப் பார்த்த நொடி முதல் காந்தமாய் கட்டி இழுக்கும் அந்த பழுப்பு நிற விழிகளின் மீது.

இமை கதவுகள் தானாய் மூடி அவன் முத்தத்தை சத்தம் இன்றி வரவேற்க, அந்த ஏசியின் குளுமையிலும் வியர்த்து காதோரம் வழிந்தது ஒற்றை வியர்வை துளி.

மனமே இன்றி கண்களில் இருந்து பிரிந்த இதழ்கள் கன்னத்தில் பதிய மூடி இருந்த இமைகள் சட்டென்று திறந்து பட்டாம்பூச்சியாய் படபடத்தன.

கன்னத்தில் பதிந்த இதழ்கள் வழுக்கிக் கொண்டு அதன் இணையான இதழ்களைத்தானே சென்று சேர வேண்டும்? ஆனால் இங்கோ அவள் செவி மடலை நோக்கி சென்றது.

மூச்சுக்காற்றின் வெப்பத்திலேயே சிவந்து போயிருந்த செவி மடல், அழுத்தமான இதழின் ஒற்றலில் ரத்த நிறம் கொள்ள, “ஷால் ஐ…” என்று வந்த கரகரப்பான குரலில் உடலின் மொத்த ரத்தமும் செவியில் பாய்ந்தது போல சிவந்து போனது.

மீண்டும் அவள் நெற்றி மீது தன் நெற்றியை வைத்து, கண்களோடு கண் பார்த்து‌ அனுமதி கேட்க, கண் மூடினாள் சம்மதமாய்.

முதல் இதழ் முத்தம். அழகாய் ஆழமாய் ஆத்மார்த்தமாய்… இருவருக்கும் இடையே முத்தத்தால் ஒரு யுத்தம். நொடிகள் கரைந்து நிமிடங்களாய் காணாமல் போக அவனால் தொடங்கப்பட்டு அவளால் நீடித்த முத்தம் நிறைவும் பெற்றது இருவராலும்.

அவள் இதழ்களில் இருந்து தன் இதழ்களைப் பிரித்துக் கொண்டவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து ஆசுவாசம்கொள்ள, அவன் மூச்சுக்காற்றில் வெப்பத்தில் குத்திட்டு நின்றன அவளது கழுத்தோரம் இருந்த பூனைமுடிகள்.

சில நிமிட ஆசுவாசத்திற்கு பிறகு தன் முகம் தாங்கிய அவளது கழுத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தவன் நிமிர்ந்து அவள் முகம் பார்க்க சிவந்து சிவந்து சோர்ந்து போயிருந்தது அவள் முகம்.

மீண்டும் அவள் இடைப்பற்றி தன்னோடு இறுக அணைத்தவன் நெற்றியில் முத்தம் பதிக்க, நிறைந்து போனது அவள் மனது.

அதன் பிறகு வந்த நிமிடங்கள் எல்லாம் மடியில் அமர்ந்தபடி அவன் தோளில் சாய்ந்து கரைந்தது சக்திக்கு.

அவளை இறுக அணைத்து கடந்து போன நிமிடங்களின் நினைவுகளில் சிலிர்த்தபடி, மௌனமாய் கரைந்தது ஜெகதீஸ்வரனுக்கு.

நெடுநேரம் நீண்டது போல் இருந்த அவர்களது இனிமையை கலைத்தது கைபேசியின் மெல்லிய சத்தம்.

எடுத்துப் பார்த்தான் ஜெகதீஸ்வரன்.

“Private number calling…” என்று ஒளிர்ந்தது அவனது அலைபேசியின் திறை.

நெற்றியை சுருக்கியபடி அழைப்பை ஏற்றவன் காதில் வைத்த அடுத்த நொடி, “ஜஸ்ட் மிஸ்… மிஸ்ஸுன்னு கூட சொல்ல முடியாது… இது ஒரு சின்ன டெமோ… யார் மேல கை வைக்கிறதுன்னு யோசிச்சு பண்ணனும்டா. எவ்வளவு தைரியம் இருந்தா எவிடன்ஸ் கலெக்ட் பண்ணி மீடியாவுக்கு அனுப்புவ?” கடுமையாக வந்தன வார்த்தைகள்.

அதில் உடல் சட்டென்று நிமிர்ந்து அமர, கேள்வியாய் பார்த்தாள் சக்தி.

கண்களால் அவளை அமைதி படுத்தியவன் மௌனமாய் இருக்க, “எனக்கு எதிராவா வேல பாக்குற? என்னோட மினிஸ்டர் போஸ்டிங் காலி ஆகுறதுக்குள்ள ஈஸ்வர் பில்டர்ஸ் மொத்தத்தையும் செங்கல் செங்கலா பிரிக்கல என் பேரு குருமூர்த்தி இல்லடா…” என்று கத்த,

“முடிஞ்சா செய்…” நிதானமான குரலில் ஜெகதீஸ்வரன் சொல்ல,

“செய்றேன் டா… செஞ்சு காட்டுறேன்.” என்று காட்டு கத்தலாக கத்திவிட்டு அழைப்பை துண்டித்து இருந்தான் குருமூர்த்தி.

அடுத்த நொடியே சர்வேஸ்வரனுக்கு பறந்தது அழைப்பு.

அவன் சொல்லிய விஷயங்களை கேட்டுக் கொண்டிருந்த சக்தியின் கண்கள் பல பாவங்களை காட்டியது.

அடுத்தடுத்து ஜெகதீஸ்வரன் செய்த அழைப்புகளிலும் அதில் அவன் சொல்லிய விஷயங்களிலும் சக்திக்கு விஷயம் புரிந்தது.

சில நிமிடங்களுக்கு முன்பு வரை தன்னிடம் குழைந்து தன் கழுத்தில் முகம் புதைத்து ஆசுவாசம் பெற்றவனா இவன் என்று மனதிற்குள் தோன்றிய ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் சக்தி.

இருந்த இடத்தில் இருந்தே காரியங்கள் அனைத்தையும் கனகச்சிதமாக திட்டமிட்டு செய்து கொண்டிருந்தவனை தொந்தரவு செய்யாமல் பிரமிப்போடு அவள் பார்த்துக் கொண்டிருக்க,

சரியாக ஒரு மணி நேரத்தில் குருமூர்த்தி கைது செய்யப்பட்டான் என்ற செய்தி வந்து சேரவும், மழை நின்று இருக்கவும், சக்தியை அவள் இருக்கையில் அமர வைத்து ஜெகதீஸ்வரன் வாகனத்தை கிளப்பவும் சரியாக இருந்தது.

“எவ்வளவு விஷயங்களை இவ்ளோ ஈஸியா செய்றீங்க அதுவும் இருந்த இடத்திலேயே…” பிரச்சனைகள் ஓய்ந்து அவன் முகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு மெல்லிய குரலில் சக்தி கேட்க,

“இதுக்கு அப்புறமும் நம்ம கல்யாணம் எப்படி நடக்கும்னு உனக்கு சந்தேகம் இருக்கா கண்ணம்மா?” அவளைப் பார்த்து கண்களை சிமிட்டி அவன் கேட்க, இல்லை என்பதாக அசைந்தது அவள் தலை அவளையும் அறியாமல்.

“தட்ஸ் மை கேர்ள்…” என்று அவன் அவளைப் பார்த்து புன்னகைக்க, கலக்கங்கள் கரைந்து ஓடி போக அவன் கை சேர்ந்தாள் பெண் பாவை.
 
Top Bottom