• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்களுக்குள் பள்ளி கொண்டேன் - 27

skp

Member
அத்தியாயம் – 27

கண்ணை மூடி திறப்பதற்குள் நாட்கள் நகர்ந்திருந்தது என்று பலர் சொல்லி கேள்விப்பட்டதை தன் வாழ்விலேயே அனுபவித்தாள் சக்தி.

தாரணியின் திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. இந்த இரண்டு வாரத்தில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் அவள் வாழ்வில்.

தாரணி தன் புதுமண வாழ்க்கையை சென்னையில் தொடங்கி இருந்தாள். இரண்டு முறை அவள் வீட்டுக்கு சென்று பார்த்துவிட்டும் வந்தாயிற்று.

ஜெகதீஸ்வரனின் ஆளுமையையும் உயரத்தையும் கண்கூடாக கண்டாள் பெண். பதவியில் இருந்த அமைச்சரையே ஒன்றுமில்லாத செல்லாக்காசாக மாற்றி, பதவியை பறித்து சிறையில் அடைத்து என்று ருத்ர தாண்டவம் ஆடியிருந்தான் அந்த இரண்டு வாரங்களில்.

சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஜெகதீஸ்வரன் பார்த்தும் இரண்டு வாரங்கள் கடந்து இருந்தது சக்திக்கு. ஆனால் அதன் தாக்கம் தெரியாத வண்ணம் கைபேசி அவளை காப்பாற்றியது.

கடினமான வேலைப்பளுவுக்கு நடுவிலும் அவளுக்கான நேரம் அவனிடம் இருந்தது. ஒரு நாளின் முடிவும் தொடக்கமும் அவனாக இருந்தான். அழைப்புகளோ குறுஞ்செய்திகளோ ஏதோ ஒரு வடிவில் அவளின் நிறைந்து கொண்டுதான் இருந்தான் ஜெகதீஸ்வரன்.‌

எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் இருவருக்கும் இடையே தொழில் இருந்ததே. அதனாலும் கண்களால் காண முடியாவிட்டாலும் ஓரளவு தாக்குப் பிடிக்க முடிந்தது அவளால்.

பிரச்சனைகள் முற்றிலுமாய் முடிந்திருக்க, இன்று மாலை நடக்க இருக்கும் பலராமன் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு ஜெகதீஸ்வரனும் வருவதாக இருந்ததால் சக்தியின் முகம் கூடுதலாய் ஜொலித்தது.

“கிளம்பலாமா மேடம்?” என்று கேட்டபடி ஆர்ப்பாட்டமாக சக்தியின் அறைக்குள் நுழைந்தான் சர்வேஸ்வரன்.

“ஓ கிளம்பலாமே சார்…” என்று கிண்டலாக கூறியபடி மலர்ந்த முகத்துடன் எழுந்த சக்தியைப் பார்த்த சர்வேஸ்வரனுக்குள் சுருக்கென்று ஒரு வலி காரணம் தெரியாமல் தோன்றி மறைந்தது.

“கிளம்பலாம்னு சொல்லிட்டு இங்கேயே நின்னு இருந்தா என்ன அர்த்தம் மேடம்? வாங்க வாங்க… நடைய கட்டுங்க…” என்று மனதின் எண்ணங்களை மறைத்துக் கொண்டு சக்தியோடு வம்பு வளர்த்தவன் அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.‌

“மத்த ஸ்டாஃவ்ஸ் எல்லாம் எங்க ஷர்வா?” என்று பேசியபடி அவனோடு சக்தி நடக்க,

“இந்த என்குயரி எல்லாம் இப்ப ரொம்ப அவசியமா? எல்லாருக்கும் மெயில் அனுப்புனது நீங்க தானே டைமுக்கு வந்து சேரணும்னு… டிராயிங்ல உக்காந்தா டைம் போறது தெரியாதா மேடம்.. வர்றது லேட்டு. இதுல பேச்ச பாரு… கேள்வி வேற… எல்லாரும் வேன்ல உக்காந்து அரை மணி நேரம் ஆச்சு. மேடம்காக வெயிட்டிங். இந்த கடமை தவறாத கண்ணியவியாதிய போய் இழுத்துட்டு வாங்கன்னு துரத்தி விட்டாங்க பசங்க. அதனால தான் வந்தேன்.” என்று அவளை ஏகமாக வாரியபடி உடன் நடந்தான் சர்வேஸ்வரன்.

“நியாயப்படி… தர்மப்பாடி கம்பெனிக்காக உழைக்கிற என்னை நீங்க பாராட்டணும். அதை விட்டுட்டு இப்படி திட்டுறீங்களே சார்?” சக்தி வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு கேட்க,

“நீங்க சின்சியர் சிகாமணியா இருந்தா அது உங்களோட மேடம்… உங்கள வச்சு வச்சு திட்டு வாங்குற மத்தவங்களுக்கு தான் தெரியும் அந்த கஷ்டம் என்னன்னு…” விடாமல் பதில் சொன்னான் சர்வேஸ்வரன்.

மின் தூக்கியில் ஏறி தரைத்தளத்திற்கான பட்டனை அழுத்திய பிறகு சர்வேஸ்வரனை நோக்கி திரும்பி, “அத திட்டு வாங்குறவங்க சொல்லட்டும். கம்பெனி ஓனர் நீங்க சொல்லலாமா?” கிண்டலாக கேட்டாள் சக்தி.

“எத கம்பெனி ஓனரா? கம்பெனிக்கு ஓனருங்கறதுனால எனக்கு திட்ட விழலன்றத நீ பார்த்த… போ மா அந்த பக்கம்… உன்னால அளவுக்கு அதிகமா திட்டு வாங்குற மொத ஆளு நான் தான்…” அவன் பதில் சொல்லி முடிக்கும் நேரத்தில் மின்தூக்கியின் கதவுகள் திறக்க,

“அடி பலமோ…” என்று கேட்டாள் அடக்க மாட்டாமல் சிரித்தபடி.

“ரொம்ப சிரிக்க வேணாம் ஆர்கிடெக்ட் மேடம். பல்லு சுளுக்கிக்க போகுது…” என்று பல்லை கடித்துக் கொண்டு சர்வேஸ்வரன் சொல்லவும், அவர்கள் செல்ல வேண்டிய வாகனம் நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்து சேரவும் நேரம் சரியாக இருந்தது.

சிரித்தபடி சக்தி உள்ளே ஏற அவளை பின்தொடர்ந்தான் சர்வேஸ்வரன்.

அவர்கள் இருவரின் முகத்தையும் பார்த்த பலருக்கும் அந்த முகங்களில் இருந்த சந்தோஷம் தொற்றிக் கொண்டது என்றால், சில முகங்கள் என்ன மறைக்க முயன்றும் முடியாமல் வெறுப்பை காட்டத்தான் செய்தன.

தனி தனி இருக்கைகளில் அவர்கள் இருவரும் அமர வாகனம் கிளம்பியது.

என்னதான் கைபேசியில் பேசி இருந்தாலும் குறுஞ்செய்திகள் பறந்து இருந்தாலும் நேரில் பார்ப்பது வேறு அல்லவா? இரண்டு வாரங்களுக்கு பிறகு ஜெகதீஸ்வரனை பார்க்கப் போகிறோம் என்ற எண்ணமே சக்தியில் புதுப்பொலிவை கொடுத்திருக்க, முகம் பேரழகாய் காட்டியது.

உடன் பணிபுரிபவர்களோடு பேசி சிரித்தபடி சக்தி இருக்க, “வர வர சக்திக்கு நம்ப ஆபீஸ்ல ரொம்ப இம்புர்ட்டன்ஸ் குடுக்குற மாதிரி தெரியுது. சீனியர்ஸ் நிறைய பேர் இருந்தும் எல்லா இடத்துலயும் சக்தி பேர் தான் தெரியுது…” என்று சர்வேஸ்வரனின் காதுகளில் விழுந்த வார்த்தைகள் ஒரு வாரத்திற்கு முன்பாக நடந்த நிகழ்வினை கண் முன்னே காட்டியது.

சக்திக்கு சீனியர் ஆர்க்கிடெக்ட் ஆக பதவி உயர்வு கிடைப்பதற்கு காரணமாக இருந்த 40 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தின் உரிமையாளர்கள் அதைப் பார்ப்பதற்காக வந்திருந்தனர்.

கட்டிடம் முழுமையாக எழுந்து நின்றிருந்தது. பயன்பாட்டிற்கான இறுதிக்கட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காகவே வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர்.

நடந்து கொண்டிருந்த வேலைகளை பார்த்தவர்களுக்கு மிகவும் பிடித்த போனது.

“எக்ஸாக்டா நாங்க எதிர்பார்த்ததை விட ரொம்ப நல்லா வந்திருக்கு.” என்று பாராட்ட,

உடன் வந்திருந்த வெளிநாட்டு பிரதிநிதிகளும் தலையசைத்தனர் அதை ஆமோதித்து.

“யுனிக் டிசைன்… டிசைன் பண்ணது யாரு?” ஆர்வமாக கேட்டார் ஒருவர்.

“எங்களோட சீனியர் ஆர்க்கிடெக்ட் மிஸ் சக்தி…” என்று அறிமுகம் செய்து வைத்த சர்வேஸ்வரனின் முகத்தில் அத்தனை சந்தோஷம்.

சக்தியின் அருகில் வந்த அந்த நபர், “வெல்டன் சக்தி! எக்ஸலண்ட் வொர்க்… எங்களோட அடுத்த ப்ராஜெக்ட்டுக்கும் நீங்கதான் டிசைன் பண்ணனும்.” என்று சொல்ல, சக்தியை விட சர்வேஸ்வரனுக்கு தான் சந்தோஷம் தாங்க முடியவில்லை.

“தேங்க்யூ சார். இட்ஸ் மை பிளசர்…” என்று அவள் சொல்ல, அவளுக்கு அருகில் நின்ற பலராமனின் முகத்தில் தோன்றிய உணர்வுகள் அத்தனை சரியாக தெரியவில்லை சர்வேஸ்வரனுக்கு.

அவன் உள்ளுணர்வை சரி என்று மெய்ப்பித்தது, அவர்கள் சென்றதும் தன்னை வந்து சந்தித்த பலராமனின் வார்த்தைகள்.

“சர்வேஸ்வரன் சார்… ஆல்ரெடி ஜெகதீஸ்வரன் சார் கிட்ட சொல்லிட்டேன் இப்போ உங்ககிட்டயும் சொல்றேன். சக்தி தேவையில்லாத விஷயங்கள்ல தலையிடறாங்க. அவங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை தவிர்த்து மத்தவங்களோட வேலைகளையும் செஞ்சு கொடுக்கிறாங்க. ஜூனியர் யாரும் என்கிட்ட வந்து கேட்கிறது இல்லை. எதுவா இருந்தாலும் சக்தி கிட்ட போய் நிக்கிறாங்க. சக்தியும் அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறது போல தன்னுடைய ஐடியாக்களை எல்லா ப்ராஜெக்ட்ளையும் இம்ப்ளிமென்ட் பண்றாங்க. நமக்கு வேலை மிச்சம்னு ஜூனியர்ஸ் எல்லா வேலைகளையும் அவங்க கிட்ட கொடுக்கிறாங்க.

சக்திக்கு நம்மள மாதிரி குடும்பம் கிடையாது. சோ கமிட்மெண்ட்ஸ் கிடையாது. ஃபுல் ஃபோக்கஸும் வொர்க் மேல இருக்கு. அவங்கள மாதிரி எல்லாராலையும் இருக்க முடியாது இல்லையா…

இது எதுவும் சரியா படல. ஆனா அதை நீங்க என்கரேஜ் பண்றது போலவும் இருக்கு.

ஒருத்தரோட ஐடியாஸ் மட்டுமே நம்ம கம்பெனியோட எல்லா ப்ராஜெக்ட்லயும் இருக்கிறது…. இட்ஸ் நாட் குட் ஃபார் அவர் கம்பெனிஸ் பியூச்சர்…” என்று படபடத்து விட்டு சர்வேஸ்வரனின் பதிலையும் கூட எதிர்பார்க்காமல் சென்று இருந்தார் மனிதர்.

வாகனம் நின்று இருக்க தன் நினைவுகளில் இருந்து விடுபட்டான் சர்வேஸ்வரன்.

சக்தியை பார்க்க இப்பொழுதும் அவள் முகம் மலர்ந்த தாமரையை விகசித்துக் கொண்டுதான் இருந்தது. அதைப் பார்க்க நிஜமாகவே அவன் மனதிற்குள் பயப்பந்து உருளத்தான் செய்தது.

“இப்படி அளவுக்கு அதிகமாக சிரிக்காத. அது மாதிரி நாலு மடங்கு அழ வப்பான் அந்த ஆண்டவன்…” காலையில் அலுவலகம் கிளம்புவதற்கு முன்பாக தன் வீட்டில் பணிபுரியும் விசாலம் தன் அலைபேசியில் கத்தி கொண்டு இருந்தது தேவையே இல்லாமல் சர்வேஸ்வரனுக்குள் மின்னல் அடித்துச் சென்றது இந்த நொடி.

“வர வர நீயும் ரொம்ப கிரின்ஞ்ச்சா யோசிக்க ஆரம்பிச்சுட்ட ஷர்வா…” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் தலையைக் குலுக்கிக் கொண்டு கீழே இறங்கினான்.

சென்னை மாநகரின் புகழ்பெற்ற மண்டபத்தில் தான் திருமணம் நடந்து கொண்டிருந்தது. யோசனையோடு அவன் கீழே இறங்கிய நொடி எங்கிருந்தோ ஓடி வந்தார் பலராமன்.

ஆர்வமாய் அவன் கைப்பிடித்து குலுக்கி உள்ளே அழைத்து சென்றவர், குடிப்பதற்காக பழச்சாறு ஒன்றினையும் வருவித்து அவன் கையில் கொடுத்தார். சில நிமிடங்கள் அவனோடு பேசிக் கொண்டிருந்தவரை யாரோ அழைக்க சர்வேஸ்வரனிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றார் பலராமன்.

அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்களோடு அமர்ந்து சக்தி திருமண நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருக்க அவளை ஒரு பார்வை பார்த்து திருப்திப்பட்டு கொண்டவன் கண்களும் திருமண மேடையை பார்க்க ஆரம்பித்தது.

நிமிடங்கள் கரைந்து அரை மணி நேரத்தை கடந்து இருக்க எல்லோரும் எழுந்து மேடைக்குச் சென்றனர். அவர்களோடு சக்தியும் எழுந்து சென்றாள்.

மேல்தட்டு மக்களுக்கான வைபவம் அது. ஆனாலும் ஒருமுறை பார்த்தவர்கள் மீண்டும் மறுமுறை பார்க்கும் படியாக இருந்த சக்தி, அந்த மண்டபத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தாள்.

அதிலும் அந்த வண்ண விளக்குகளுக்கு நடுவே தேவதையாகவே தெரிந்தாள் சக்தி.

அவளது அழகில் ஈர்க்கப்பட்ட பெண் ஒருவர், அவளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக பலராமனிடம் சென்றார்.

“யார் இந்த பொண்ணு?” என்று ஆர்வமாக கேட்டவரின் பார்வையை தொடர்ந்தது பலராமனின் விழிகள்.‌

தன் பெண்ணை கட்டிக் கொடுக்கும் குடும்பத்திலேயே உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு குடும்பத்தின் தலைவி அந்த பெண்மணி.

அதனாலயே அவரது பார்வையை தொடர்ந்தது பலராமனின் பார்வையும். ஆனால், அந்தப் பெண்மணியின் பார்வை முடிவு பெற்ற இடம் சக்தியாக இருக்க சட்டென்று தலைத் தூக்கியது அவருக்குள் இத்தனை நாள் அடக்கி வைக்கப்பட்டிருந்த கோபமும் பொறாமையும்.

“யாரை கேக்குறீங்க அக்கா?” என்று தெரிந்து கொண்டே பலராமன் கேட்க,

“அதோ அந்த சாண்டல் கலர் பட்டுப் புடவை கட்டி இருக்க பொண்ணு… அந்த பொண்ணோட கண்ணு கலர் கூட வித்தியாசமா இருக்குதே…” அவரை ஈர்த்த விஷயங்களை சொல்லி அந்தப் பெண்மணி கேட்க தெளிவாக விளங்கியது பலராமனுக்கு.‌

விழாவின் நாயகியாக நின்றிருந்த தன் மகளைக் காட்டிலும் பளிச்சென்று தெரிந்த சக்தி அவருக்குள் இருந்த பொறாமைத்தீக்கு திவ்யமாக நெய் வார்த்தாள்.

“என்ன விஷயம் அக்கா? எதுக்கு கேக்குறீங்க?’ அடக்கப்பட்ட கோபத்தோடு அவர் கேட்க, சக்தியின் மீது பார்வையை பதித்திருந்த அந்தப் பெண்,

“நம்ப கார்த்திக்குக்கு அந்த பொண்ண கேட்கலாம் என்று ஒரு யோசனை… கண்ணுக்கு லட்சணமா இருக்கா பொண்ணு. ஜோடி பொருத்தம் நல்லா இருக்கும் இல்ல?” என்று கேட்க, பற்களை கடித்தார் பலராமன்.

உறவுகள் சூழ்ந்து இருக்க தன் கோபத்தை கூட முழுதாக காட்ட முடியாமல் தவித்தவர், “அக்கா கொஞ்சம் அந்த பக்கம் வரீங்களா?” என்று ஓரமாக நிறுத்தியவர், “அந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வராதுக்கா.” என்றார் மெதுவான குரலில்.

“வரதட்சணைக்காக சொல்றியா? அதெல்லாம் ஒன்னும் வேணாம். அந்த பொண்ணு மட்டும் கல்யாணம் பண்ணி கொடுத்தா போதும்… சவரன் போட்டு நாங்க கல்யாணம் பண்ணிக்கிறோம். கார்த்திக்குக்கு இந்த பொண்ண விட நல்ல பொண்ணு கிடைக்காது.. என் பையன் கூட சேர்ந்து இந்த பொண்ணு நின்னா அம்சமா இருக்கும்.” என்று அவர் சொல்லிக்கொண்டே செல்ல,

“பணத்துக்காக பார்க்குற குடும்பமா நம்ப குடும்பம்? இங்க பிரச்சனை அது இல்ல.

அக்கா... அழகா இருக்குறதால மட்டும் குடும்பத்துக்குள்ள கூட்டிட்டு வர முடியாது.

பெத்தவங்க யாருன்னே தெரியாது.

எந்த ரத்தமோ...

எந்த வழியில பிறந்ததோ...

யாருக்கும் தெரியாது.

நம்ம வீட்டுக்கு அது சரிப்பட்டு வராதுக்கா.”

என்று பட்டென்று மனதின் விஷத்தை எல்லாம் வார்த்தைகளாக வடிவமாக்கி அவர் கொட்ட அத்தனை நேரம் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த பெண்மணியின் விழிகளிலும் அந்த விஷத்தின் வீரியம் பரவியிருந்தது.

“பெத்தவங்க யாருன்னு தெரியாம அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த பொண்ணா…” என்று சொல்லியவரின் வார்த்தைகளில் கூட வெறுப்பு அப்பட்டமாக தெரிந்தது.

“இது தெரியாம கார்த்திக்குக்கு ஜோடியா யோசிச்சிட்டேனே… இதை வெளியே சொல்லிடாத பாலா…” என்றவர் விருட்டென்று சென்று விட கொடூரமான புன்னகை பலராமன் முகத்தில்.

அதே புன்னகை முகத்தோடு திரும்பியவரின் கண்கள் ஒரு நொடி நிலை குத்திவிட்டது. அவருக்கு எதிராக நின்று கொண்டிருந்தாள் சக்தி.

அவள் பார்த்த பார்வை கல்நெஞ்சாக அத்தனை நேரம் விஷத்தை கொட்டிய அந்த மனிதனின் இதயத்தையும் ஒரு நொடி ஆட்டிப் பார்த்துவிட்டது.

சக்தியின் நிலையோ சொல்ல தரம் இல்லாததாக இருந்தது. கால்கள் நகரவில்லை. மூச்சு வரவில்லை. சுற்றி இருந்த சத்தங்கள் எல்லாம் தூரமாய் போனது.

"பெத்தவங்க யாருன்னு தெரியாது..." அந்த வார்த்தைகள் மட்டும் காதுக்குள் சுத்திக்கொண்டே இருந்தது.

ஒரு வார்த்தை பேசாமல் திரும்பி வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தாள் சக்தி. அவள் திரும்பி நடக்க ஆரம்பித்த பிறகே அவளுக்கு நேர் எதிரே நின்று கொண்டிருந்த ஜெகதீஸ்வரனை கவனித்தார் பலராமன்.

பலராமனின் ஒவ்வொரு வார்த்தையும் ஜெகதீஸ்வரனின் காதுகளில் தெளிவாக விழுந்து இருந்தது.

அவனது தாடை இறுகியது. கை விரல்கள் முறுக்கிக் கொண்டன. ஆனாலும் சூழ்நிலை அவனை தடுத்தது.

அவனை கண்டதும் சட்டென்று முகம் மலர்ந்து விட வேகமாக ஜெகதீஸ்வரனை நோக்கி ஓடினார் பலராமன்.

பலராமன், ஜெகதீஸ்வரனை அடையும் முன்பாக அவனை கடந்து தன் பாதையை நோக்கிச் சென்றாள் சக்தி, தன்னை சுற்றி நடக்கும் எதையும் உணராமல்.

தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த இருவரையும் மாறி மாறி பார்த்த ஜெகதீஸ்வரனுக்கு கைகள் கட்டப்பட்ட நிலை.

இந்த நேரத்தில் இப்படியே திரும்பி சக்தியோடு செல்ல துடித்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டு தன்னை அழைக்க வந்த பலராமனை நோக்கி பார்வையை திருப்பினான் ஜெகதீஸ்வரன்.

பரவசத்தோடு வந்தவர் அவன் கைப்பற்றி அழைத்துச் சென்றார். முன்னால் அமர்ந்து கைபேசியில் பேசிக் கொண்டிருந்த சர்வேஸ்வரனையும் அழைத்துக் கொண்டு மேடை ஏறிச் சென்றார்.

சம்பிரதாயங்கள் அனைத்தையும் நிமிடத்திற்குள் முடித்துக் கொண்ட ஜெகதீஸ்வரன் கீழிறங்கி அவனுக்குரிய இருக்கையில் அமரச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, பலராமனின் உறவுகளில் மிகவும் முக்கியமானவர் வந்து சேர்ந்தார்.

“சார்…” என்று அவனிடம் அனுமதி கேட்டவர், அவன் தலையசைத்ததும் நகர்ந்தார் அவர்களை நோக்கி.

தன் உடன் நின்று கொண்டிருந்த சர்வேஸ்வரனை பார்த்து, “முடிச்சுட்டு வா. நான் கிளம்புறேன்.” என்றான் கட்டளையாக.

“அண்ணா சக்தி…” என்று எதையோ சொல்ல துடித்த சர்வேஸ்வரனின் பார்வை மண்டபத்தை துழாவியது சக்தியைத் தேடி.

“அவளை நான் பார்த்துக்கிறேன். நீ இங்க பாரு.” என்று சொல்லிய மறு நொடி நிற்கவும் விருப்பம் இல்லாது தன் நீள எட்டுகளால் அந்த மண்டபத்தை கடந்து சென்று இருந்தான்.

மண்டபத்தின் வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து தனது காரினை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவனின் பார்வை சாலையை அலசியது.

அவன் தேடிய அவனது உயிரானவள் உயிரற்றவளாக சாலையின் ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தாள்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவளை அடைந்து காரை நிறுத்தி இருந்தான் அவளுக்கு முன்பாக.

என்ன நடக்கிறது என்பதை கூட உணராதவளாக திடுக்கிட்டு நின்றவளை பார்த்தவனுக்குள் பிரளயமே உண்டானது.

காரில் இருந்து இறங்கியவன் அவள் முன்பாக வந்து நின்றும் அவனை உணரும் நிலையில் அவள் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது அவளது நிலை குத்திய பார்வையில்.

பெருமூச்சு ஒன்றை விட்டு தன்னை நிதானப்படுத்திய ஜெகதீஸ்வரன் அவள் கைப்பற்றி அழைத்துச் சென்று காரின் கதவை திறந்து உள்ளே அமர வைத்தான். இத்தனை நிகழ்வும் நடக்கும் வரையிலும் கூட அவள் தன் நினைவுக்கு வரவில்லை.

அந்தப் பகுதியே அவளுக்கு மூச்சடைப்பது போல இருந்தது. அவளை உணர்ந்தவனாக காரை கிளப்பியவன், கடற்கரை சாலையை நோக்கி வாகனத்தை விரட்டினான்.

“சக்தி…”

“கண்ணம்மா…”

“குட்டிமா…”

எப்படி எப்படியோ அழைத்துப் பார்த்தும் பதில் இல்லை அவளிடம். வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து இருந்தாள் சக்தி. ஆனால் அந்த பழுப்பு நிற கண்களின் ஓரம் மெல்லிய கசிவு.

“சக்தி மா…” என்று அவளை அழைத்த நொடி காரின் ப்ளூடூத்தோடு இணைக்கப்பட்டிருந்த கைபேசிக்கு அழைப்பு வந்தது.

சர்வேஸ்வரன் தான் அழைத்துக் கொண்டிருந்தான். அவனோடு பேசும் நிலையில் இல்லை ஜெகதீஸ்வரன். அழைப்பை அவன் துண்டிக்க நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மியூசிக் சிஸ்டம் உயிர் பெற்றது.

அதுவரை அமைதியாக இருந்த இடத்தினை நிறைத்து, சக்தியை உடைத்தது அந்த பாடல் வரிகள்.

“என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே…
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே…”

சித்ராவின் குரலில் வந்த அந்த வார்த்தைகள் போதுமானதாக இருந்தது அவளின் அனைத்தையும் உடைத்து செதில் செதிலாக சிதைக்க.

பெரும் குரல் எடுத்து கத்தி அழுது தீர்த்து விட்டாள் சக்தி.

அது அன்றைய நாளில் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவு அல்ல என்பதை உணர்ந்தவனாக கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக அமர்ந்து விட்டான், காரை ஓரமாக நிறுத்திய ஜெகதீஸ்வரன்.

‘27 வருடங்களாக அவள் மனதில் தேக்கி வைத்திருந்தது. அழுதாலும் பிரண்டாலும் ஆற்றுவார் தேற்றுவர் யாரும் இன்றி அவளை அழுத்தி வைத்திருந்தது.

தன்னை சுமந்து பெற்றெடுத்தவளின் ஸ்பரிசம் கிட்டி விடாதா என்று ஏங்கிய பிள்ளையின் ஏக்கம்… தோள்களில் சுமந்து உலகத்தை காட்டாத தந்தைக் காண ஏக்கம்… ஒதுக்கப்பட்டவளின் உரிமைக்கான ஏக்கமது…’ என்று எண்ணி அமைதி காத்தான் ஜெகதீஸ்வரன்.

ஊழி கால ஆழியாய் பொங்கி வந்தது அழுகை. கட்டுப்படுத்த நினைக்கவில்லை ஜெகதீஸ்வரன். கொட்டி தீர்த்து விடட்டும். இந்த நிமிடத்தோடு எல்லாவற்றையும் கொட்டி தீர்த்து விடட்டும் என்று கைகளைக் கட்டிக் கொண்டு பற்களை கடித்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அவளையே பார்த்தபடி அமர்ந்து இருந்தான் ஜெகதீஸ்வரன்.

அழுது ஓய்வாள் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க நீண்டு கொண்டே சென்றது அவளது அழுகை, அவன் பொறுமையை சோதித்து.

பொறுத்துப் பார்த்தவன் முடியாமல் போக அவளை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொள்ள முயன்றான்.

முயல மட்டும் தான் முடிந்தது. ஆனால் முடியவில்லை.

“அம்மா அப்பா இல்லாம போனது என்னோட தப்பா?

அவங்க யாருன்னு எனக்கு தெரியாதே? யாருக்குமே தெரியாதே… அவங்க ரெண்டு பேரையும் தவிர்த்து யாருக்குமே தெரியாதே… அப்பறம் எதுக்கு தப்பான வழியில பிறந்தவன்னு சொல்றாங்க…

அப்படியே பிறந்து இருந்தாலும் அதுல என்னோட தப்பு என்னன்னு முன்ன எல்லாம் தைரியமா யோசிப்பேன்.” என்று சொல்லிக் கொண்டு வந்தவளின் முகம் இரத்தப் பசையின்றி மொத்தமாய் வெளுத்து,

“இப்போ அப்படி யோசிக்க முடியலையே…” என்றாள் பரிதாபமாக.

கண்களிலும் நாசியிலும் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, தன்னை அணைக்க முயன்ற அவனிடமிருந்து தலையை அசைத்து விலகியவள்,

“இப்போ என்னோட பிறப்பு ரொம்ப முக்கியம்னு தோணுது. என்னோட அப்பா அம்மா யாருன்னு தெரியாம என்னை எப்படி உங்க வீட்ல ஏத்துப்பாங்க?

ஆசைப்பட்ட ஆசைப்பட்டு ஆசைப்பட்ட எதுவுமே கிடைக்காம போனதுக்கு அப்புறம்… மொத்தமா மரத்துப் போயிருந்த மனசு இப்ப உங்க மேல மட்டும் தான் ஆசைப்படுது… நீங்க வேணுமே ஜெகன்… நீங்க இல்லாம என்னால எப்படி…” என்று அவள் அரற்ற துடித்து போனான் ஜெகதீஸ்வரன்.

“ஆனா அவங்க சொன்னது உண்மை தானே? தப்பான வழியில பொறந்த பொண்ண ஏத்துக்க மாட்டாங்க தானே?

27 வருஷமா யாரும் என்ன வேணாம்னு சொன்னதுக்காக நான் அழல ஜெகன்...

ஆனா...

இப்போ பயமா இருக்கு.

நீங்களும் ஒருநாள் என்ன வேணாம்னு சொல்லிடுவீங்களோன்னு பயமா இருக்கு…

உங்களுக்கு தகுதியான பொண்ணு நான் இல்லையா?

எனக்கு உங்கள நேசிக்கவும், கல்யாணம் பண்ணிக்கவும் தகுதி இல்லையா ஜெகன்?”

என்று அவன் முகம் பார்த்து கண்ணீர் சுமந்த கண்களோடு அவள் கேட்க மூச்சே நின்று போனது அவனுக்கு.

அவளது கடந்து போன 27 ஆண்டுகால பெற்றோருக்கான ஏக்கம் என்று எண்ணி அவன் அமைதி காத்திருக்க, அவளோ தன்னோடான வருங்காலத்தினை எண்ணி கலங்கி இருக்கிறாள் என்பதை அவள் வாய் வார்த்தைகளாலே உணர்ந்த நிமிடம் அவனுக்குள் அவன் உணர்ந்த உணர்வுகளை வடிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை.

அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியவனை எதுவும் செய்ய முடியாத கோபம் எரிமலையாய் பொங்க ஓங்கி அடித்தான் காரின் கண்ணாடி கதவில்.

ஓங்கி அடித்த அவனது முஷ்டி கண்ணாடியை தாக்கிய அடுத்த நொடி, சிலந்தி வலை போல விரிசல்கள் பரவி உடைந்து சிதறின.

அந்த சத்தத்தில் திடுக்கிட்டு பார்த்த சக்தியின் கண்கள் நிலைகுத்தி போயின. உடைப்பெடித்துக் கொண்டிருந்த கண்ணீர் அணை கட்டியது போல நின்று விட, மூச்சு விடவும் மறந்து போனாள் சக்தி.

நொடிகள் நிமிடங்களாய் வடிவம் பெற்று பறந்தோடி கொண்டிருக்க, ஒரு வழியாக தன்னை நிதானித்த ஜெகதீஸ்வரன், தன் கையையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து இருந்தவளை மார்போடு சேர்த்து அணைத்தான்.

கேள்விகள் சுமந்த நிராசையான கண்களோடு தன் முகத்தை ஏறிட்டு பார்த்தவளின் கண்களுக்குள் தன் விழிகளை கோர்த்து இரு கைகளாலும் அவள் முகத்தை தாங்கி,

“நீ சக்தி…

சக்தி ஜெகதீஸ்வரன்…

இந்த ஈஸ்வரனோட சக்தி நீ…

யாரோட பிறப்புக்கும் யாரும் காரணம் இல்லை. இந்த அப்பா அம்மாவுக்கு தான் பிறக்கணும்னு ஆசைப்பட்டு எந்த குழந்தையும் பிறக்கிறது இல்லை. அப்படி இருக்கும்போது பிறப்பால தான் ஒருத்தரோட தகுதி நிர்ணயிக்கப்படுதுன்னா அது குப்பைக்கு சமம்.

அப்படிப்பட்ட குப்பையை புத்திக்குள்ள ஏத்தி வச்சது இல்ல நம்ம குடும்பத்துல.

நீ யாரோட மகள்னு தெரியாது…

ஆனா…

நீ எனக்கானவள்…

என்னோட சரி பாதி… புரியுதா?

பிறப்புக்கு நாம பொறுப்பில்லை. ஆனா நம்ம வாழ்ற வாழ்க்கைக்கு நாம மட்டும் தான் பொறுப்பு. அதுல தான் தெரியும் நம்மளோட தகுதியும் தராதரமும்… அப்படி பார்த்தா உன்னோட இந்த 27 வருஷம் வாழ்க்கை தவம் போல அசாத்தியமானது கண்ணம்மா…

கண்டதையும் நினைச்சு மனச அலட்டிக்காத டா…

என் பாட்டியும் அம்மாவும் அடிக்கடி சொல்வாங்க… பொண்ணுங்களோட கண்ணீர் விலைமதிக்க முடியாததுன்னு…

அத இப்படி யாரோ ஒரு கேவலமான மனுஷன் சொன்ன வார்த்தைகளுக்காக வீணாக்காத…” என்று சொல்ல, அவன் விழிகளையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சக்தி.

உள்ளங்கைகளுக்கு இடையே வாடிப்போன மலராய் இருந்த அவளது பூமுகத்தை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்ட ஜெகதீஸ்வரனின் உள்ளத்தில், அடுத்தடுத்து செய்ய வேண்டிய செயல்கள் பட்டியலிடப்பட்டன.

சக்தியின் கண்களோ மீண்டும் கலங்கியது, ரத்தம் வடிந்து கொண்டிருந்த அவனது கரத்தைப் பார்த்து.

அவனது கையை பார்த்துவிட்டு அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல், காரில் இருந்த முதலுதவி பெட்டியை எடுத்து சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

அவளது கண்ணீர் வடிந்து அவன் காயத்தில் விழுந்தது. மற்றொரு கையால் அவளது கண்ணீரை துடைத்தவன் மீண்டும் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

மங்கையின் கண்ணீர் மன்னவனை அசைத்துப் பார்த்திருக்க, அசையாத முடிவொன்றை எடுத்தவனாக தன் இல்லம் நோக்கி சென்றவனை ஆட்டிப் பார்க்க காத்திருந்தார் வரலட்சுமி.
 

ஷமீம்

Active member
சக்தியின் பெற்றோரை கண்டுபிடிக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.. JS 💛 💜 💕 💕 💕 💕 💕
 
  • Wow
Reactions: skp

ஷமீம்

Active member
பாரம்பரியம், குலப் பெருமை பார்க்கும் பாட்டி ஒப்புக் கொள்ள வாய்ப்பில்லை..
 
  • Sad
Reactions: skp
Top Bottom