• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்களுக்குள் பள்ளி கொண்டேன் -30 ( இறுதி அத்தியாயம் )

skp

Member
அத்தியாயம் 30

பம்பரமாய் சுற்றி சுழன்று கொண்டிருந்தனர் தாரணியும் மகாலட்சுமியும்.

உறவுகள் ஆயிரம் பேர் இருந்தாலும் உடமைப்பட்டவர்களாக பெண்கள் இருவரும் வந்தவர்களை கவனித்துக் கொண்டிருக்க, அவர்களை மேற்பார்வையிட்டபடி அமர்ந்திருந்தார் வரலட்சுமி.

“ரெண்டு பேரும் எந்த ஓட்டம் ஓடுறீங்க? எல்லாரையும் பார்த்துக்க தான் ஆள் இருக்கு இல்ல… நீங்க ஏன் ஓடிட்டு இருக்கீங்க?” சின்ன குரலில் கேட்டபடி பெண்கள் இருவரின் கையையும் பிடித்து இழுத்து வந்து நாற்காலியில் அமர வைத்த புவனேஸ்வரி அவர்கள் குடிக்க பழச்சாறுகளைக் கொடுத்தார்.

“இல்லம்மா…” ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்க,

“மூச்! சத்தம் வரக்கூடாது. முழுசா குடிச்சு முடிச்சிட்டு தான் எந்திரிக்கணும். நீங்க கவனிச்ச வரைக்கும் போதும். நான் பார்த்துக்கிறேன். நீங்க உங்க வயிற்றில இருக்குற பிள்ளைகளை மட்டும் பார்த்தா போதும்.

ஒரு கண்ணு மாதிரி ஒரு கண்ணு இருக்காது. புரியுதா? போய் அமைதியா உட்காருங்க…” என்று புவனேஸ்வரி கடிந்துக் கொள்ள, அழகாய் மலர்ந்தது பெண்கள் இருவரின் முகமும்.

இரு பெண்களின் கன்னங்களையும் வழித்து நெட்டி முறித்தவர், “சொன்ன கேளுங்க புள்ளைங்களா…” என்று அவர்களிடம் சொன்னவர் அவர்களை கடந்து சென்ற சர்வேஸ்வரனை இழுத்துப் பிடித்து நிறுத்தினார்.

“என்னம்மா?” சர்வேஸ்வரன் கேட்க,

“எங்கடா போற?”

“அண்ணா கூப்பிட்டாங்க…”

“எதுக்கு கூப்பிட்டானாம்?”

“பிரண்ட்ஸ் வந்து இருக்காங்க அம்மா. அவங்கள பார்க்கறதுக்கு…”

“அத ஆண்ட்ரூ பார்த்துப்பான். நீ இவங்க ரெண்டு பேரையும் என்னனு கவனி. ஒரு இடத்தில உட்கார மாட்டேங்கிறாங்க…. சுத்திகிட்டே இருக்காங்க…” என்று பெண்கள் இருவரையும் கைகாட்டி சொல்ல,

“என்னம்மா பண்ண சொல்றீங்க? அதுக்குன்னு ரூமுக்குள்ள போட்டு கதவை மூடியா வைக்க முடியும்? எல்லாரும் இருக்காங்களே…” என்று சர்வேஸ்வரன் கேட்க,

“அவங்க எல்லாரையும் பாக்குறதுக்கு தான் இத்தனை பேர் இருக்காங்களே…

இவங்க ரெண்டு பேரும் தான் ஓடணுமா? நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது. அடுத்து ராத்திரிக்கு தான் இந்த புள்ளைங்க ரெண்டு பேரும் வெளிய வரணும். நிச்சயதார்த்தம், கல்யாணம், ரிசப்ஷன்னு மூணு நாளா ரெண்டு பேரும் கால்ல சக்கரத்தை கட்டிட்டு சுத்துறாங்க. நேரத்துக்கு சாப்பிடுறது கூட கிடையாது. பாட்டி என்னை சொல்றாங்க…” என்று புவனேஸ்வரி சொல்ல,

“சாப்பிடலையா?” என்று தாயிடம் கேட்டவன் பார்வை அமர்ந்திருந்த பெண்கள் இருவரிடமும் திரும்ப,

“ஐயோ! அண்ணா… அதெல்லாம் கிடையாது‌ நீ தானே என்னை சாப்பிட வச்ச?” அலறினாள் மகாலட்சுமி.

“ப்ரோ நான் சாப்பிடாம இருந்தா என் புருஷன் கண்ணுல தண்ணி வச்சுடுவாரு. அதுக்காகவே நான் ஒழுங்காக சாப்டுட்டு தான் இருக்கேன். அம்மா அநியாயத்துக்கு சொல்றாங்க. நம்பாதீங்க…” என்று படபடத்தாள் தாரணி.

“உங்க ரெண்டு பேர் நல்லதுக்காக சொன்னா வாய் பேசுறீங்களா? போதும் நீங்க பார்த்த வரைக்கும். போய் சமத்தா உட்காருங்க.” என்றார் புவனேஸ்வரி அவர்கள் இருவரின் பதில்களையும் சிரிப்போடு கேட்டபடி.

“அப்ப நான் சக்தி கிட்ட போகவா?” வேகமாக கேட்ட தாரணியை செல்லமாக முறைத்தார் புவனேஸ்வரி.

“அங்க பாரு …அவ கிட்ட போய் என்ன பண்ண போற நீ?” என்று கேட்டு அவள் முகத்தை சக்தி இருந்த புறமாக திருப்பி காட்ட, அத்தனை சந்தோஷம் தாரணியின் முகத்தில்.

ஜெகதீஸ்வரனின் சரிபாதியாக சர்வ அலங்கார பூசிதையாக நின்று, வந்திருந்த யாரோ உறவினர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த சக்தியின் முகத்தில் எப்பொழுதும் இருக்கும் அமைதியோடு நெஞ்சம் நிறைந்த சந்தோஷமும் போட்டி போட்டுக் கொண்டிருந்தது.

இருக்காதா பின்னே… வரலட்சுமி பாட்டியின் சம்மதத்தை பெற்று ஈஸ்வர் இல்லத்தின் மூத்த மருமகளாக உள்ளே நுழைந்திருக்கிறாள் அல்லவா?!

வரலட்சுமி பாட்டியின் சம்மதத்தை மட்டுமா? மகாலட்சுமி புகுந்த வீட்டினரின் மனதையும் கொள்ளை கொண்டு அல்லவா அந்த இல்லத்தில் தன் பாதத்தை பதித்திருந்தாள் பெண்…

விட்டால் சக்தியை அவர்களின் பெண்ணாக தத்தெடுத்த தயாராக இருந்தனர், மகாலட்சுமியின் புகுந்த வீட்டினரான குமரன் குடும்பத்தினர்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

மற்ற அனைத்தையும் மாற்றக்கூடிய காலம் சக்தி, வரலட்சுமி பாட்டியை சந்தித்து விட்டு வந்த இந்த ஆறு மாதங்களில் அப்படியான அழகிய மாற்றங்கள் பலவற்றை அவர்களின் வாழ்வில் நிகழ்த்தியிருந்தது.

அதில் ஒன்றுதான் மகாலட்சுமியின் திருமணம்.

தென்னிந்தியாவின் புகழ் பெற்ற பட்டு மஹாலின் உரிமையாளர்கள் குமரன் குடும்பத்தினர். ஈஸ்வர் குடும்பத்தைப் போலவே பாரம்பரியம் மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

அவர்களின் வாரிசான பாலகுமரன் தான் சக்தி - ஜெகதீஸ்வரனை சந்திக்க காரணமாக இருந்த 40 அடுக்குமாடி குடியிருப்பினை கட்ட சொல்லியிருந்த வாடிக்கையாளர்.

பட்டு அவர்களின் குடும்பத் தொழிலாக இருந்தாலும் அவர்கள் கால் பதிக்காத துறையே இல்லை என்பது போல, ஒவ்வொருவரும் ஒரு கிளை தொழிலை வைத்திருந்தனர். அப்படியாக பாலகுமாரனின் ஆர்வம் தான் அந்த குடியிருப்பு.

அந்த தொழில்துறையில் ஏற்பட்ட பழக்கம்… பாலகுமாரனின் திருமண பேச்சில் கிடைத்த மகாலட்சுமியின் ஜாதகத்தினால் உறவாக மாறி இருந்தது.

ஈஸ்வர் இல்லத்தின் இளவரசியாக இருந்த மகாலட்சுமி, குமரன் இல்லத்தின் ராணியாக மாறி நான்கு மாதங்கள் கடந்து இருந்தது.

மூன்று மாத இரட்டை கருக்களை சூள் கொண்டு இருந்தாள் மகாலட்சுமி.

வரலட்சுமிக்கு சக்தியை பிடித்திருந்த போதிலும் எதோ ஒன்று நெருடிக் கொண்டுதான் இருந்தது. சக்தியும் ஜெகதீஸ்வரன் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் தங்கள் வேலைகளில் மும்மரமாக இருக்க, அதை மொத்தமாய் உடைத்து இருந்தான் பாலகுமாரன்.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பாக, மகாலட்சுமி பிறந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்க அவளை அழைத்துக் கொண்டு வந்த பாலகுமாரன் அவளை பெற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களின் உபசாரத்தை ஏற்றுக் கொண்டு கிளம்பினான்.

வாசல் வரை சென்றவன் திரும்பி வந்தான்.

வரவேற்பறையில் உட்கார்திருந்த வரலட்சுமி முன்பாக சென்று அமர்ந்தவன், “இன்னும் என்ன யோசனை பாட்டி?” என்று கேட்டான், நேரடியாக.

“எதைப் பத்தி கேட்கிற பாலா?” அவரும் நேரடியாகவே கேட்டு வைத்தார்.

“ஜெகன் மச்சான் - சக்தி கல்யாணத்த பத்தி தான்.” சாதாரணமாக அவன் கேட்க கண்கள் கூர்மையானது வரலட்சுமிக்கு.

“பாலா…” என்று அவர் பேச்சை ஆரம்பிக்க,

“எது தடுக்குது பாட்டி உங்களை? சக்தியோட பிறப்பா இல்ல மகா - சர்வாவோட வாழ்க்கையா?” சுற்றி வளைக்கும் பழக்கம் இல்லாத பாலகுமாரன் நெற்றிப்பொட்டில் அடித்தது போல கேள்வி கேட்க அமைதியாகி போனார் வரலட்சுமி.

“நம்ம குடும்பத்தை பத்தி எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சக்தியோட பிறப்பு உங்களுக்கு பிரச்சனை கிடையாது. அப்போ உங்களோட யோசனை மகா - சர்வா இவங்கள பத்தினது தானே?” என்று அவன் கேட்க, அழுத்தமாய் பார்த்தார் வரலட்சுமி.

“அப்ப சரி… அதுதான் உங்க பிரச்சனைன்னா சக்தியை எங்க வீட்ல தத்து எடுக்குறதுக்கு ரெடியா இருக்காங்க… அந்த அளவுக்கு சக்தியை எங்க குடும்பத்துல எல்லாருக்கும் பிடிக்கும். அதுனால மகா பிரச்சனை சால்வ்ட்.

சக்தியோட பிறப்ப பத்தி கேள்வி கேட்கிற மாதிரி ஒரு குடும்பத்துல தான் ஷர்வாவுக்கு பொண்ணு பாக்க போறீங்களா பாட்டி?” என்று கேட்க ஒரு நொடி திடுக்கிட்டு தான் போனார் வரலட்சுமி.

அவரின் அதிர்வை உணர்ந்தவனாக, “ஏதோ சொல்லணும்னு தோணுச்சு. சொல்லிட்டேன். பெரியவங்க உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்ல. ஜெகன் - சக்திய யாராலும் பிரிக்க முடியாதுன்னு உங்களுக்கே தெரியும். நீங்க சம்மதம் சொல்லாத வரைக்கும் அவங்க ரெண்டு பேரும் இத பத்தி உங்ககிட்ட பேச மாட்டாங்க… அதுவும் உங்களுக்கு தெரியும். அப்படி இருந்தும் நீங்க யோசிக்கிறீங்கன்னா காரணம் இருக்கும். யோசிச்சு பார்த்து செய்யுங்க.” என்று விட்டு கைகூப்பி விடை பெற்றவன் நான்கு எட்டுக்களில் அவர் கண்களில் இருந்து மறைந்து போயிருந்தான்.

அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவரை ஆழமாக தாக்கியது என்று சொன்னால் மிகையாகாது.

பழமையில் தள்ளாடிக் கொண்டிருந்த அந்த முதிய பெண்மணியை, சக்தி ஜெகதீஸ்வரனின் காத்திருப்பும் பாலகுமாரனின் புரிதலும் மொத்தமாய் அசைத்துப் பார்த்தது.

மறுநாளே அவர் தலை சம்மதமாக அசைய, முப்பதே நாட்களில் லோகேஸ்வரன் - புவனேஸ்வரி தம்பதியினர்.

பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்திருக்க, அவர்களின் இல்லத்தில் ஜெகதீஸ்வரனின் மனைவியாக முழு உரிமையோடு நின்று கொண்டிருந்தாள் சக்தி.

பெற்றவர்கள் இல்லாமல் போனாலும் அவளை தங்கமாக தாங்கிக் கொள்ள அத்தனை உயிர்கள் இருந்தன.

தாரணி ஆகாஷ் ஒருபுறம் அவளின் பிறந்த வீடாக வந்து நிற்க, குமரன் குடும்பம் மற்றொருபுறம் வந்து நின்றது.

உற்சாகமாக கழிந்த மாலை நேரம் மயங்கி திருமண நாளின் இரவும் வந்து சேர்ந்தது.

மூன்று நாட்களாக குழுமி இருந்த பெரும்பான்மையான சொந்தங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு நிறைவான மனதோடு கிளம்பி இருக்க நெருங்கிய உறவுகள் உறங்கச் சென்று இருந்தனர்.

தாரணி தங்குவதற்காக கொடுக்கப்பட்டிருந்த அறையில் மட்டும் சிரிப்பு சத்தம் கதவை தாண்டியும் கேட்டுக் கொண்டிருந்தது.

சரிக்கு சரி பேசிக்கொண்டு இருந்த தாரணியையும் மகாலட்சுமியையும் புன்னகையோடு பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சக்தி.

“அங்க பாரு என்ன ஒரு ஆனந்தம் இந்த கரடிக்குனு பாத்துட்டு இருக்கா ஒருத்தி..” தன்னோடு வம்பளந்து கொண்டிருந்த மகாலட்சுமியின் பார்வையை மீது திருப்பினாள் தாரணி.

“கரடியா?! உங்களுக்கு கண்ணு தெரியாதா? தேவதை மாதிரி இருக்காங்க எங்க அண்ணி. அவங்கள போய் கரடின்னு சொல்றீங்க… நல்ல டாக்டரா பார்த்து செக் பண்ண சொல்லணும் ஆகாஷ் அண்ணா கிட்ட.” என்று அவள் பேச,

“தேவதையா…” என்று சக்தியின் முகத்தை பார்த்தவள்,

“எல்லாம் நேரம்… தேவதையா இல்லையான்னு உங்க அண்ணன் சொன்னா பரவால்ல… நீ ஏன்டிம்மா சொல்லிக்கிட்டு இருக்கா?”

“அதெல்லாம் எங்க அண்ணா சொல்லுவாரு. ஏன்னா எங்க அண்ணனுக்கு கண்ணு நல்லா தெரியும்.” சிலிர்த்துக்கொண்டு மகாலட்சுமி வர,

“அட புள்ளைங்களா! எவ்வளவு சத்தம் ராத்திரி நேரத்துல? அமைதியா இருக்க மாட்டீங்களா?” என்று கேட்டபடி வந்த புவனேஸ்வரி மருமகளின் முகத்தை பார்த்து நெட்டி முறித்தார்.

“வாய் பேசாம ஆகுற வேலைய பாருங்க ரெண்டு பேரும்.” என்றவர் சக்தியின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்து விட்டு வெளியேறி சென்றார்.

“இப்ப என்ன மணமகளே மணமகளே வா வான்னு பாட்டு பாடிட்டே உங்க அண்ணிய உங்க அண்ணன் ரூம்ல கொண்டு போய் விடணுமா?” தாரணி கிண்டல் செய்ய செங்கொழுந்தாய் சிவந்தது சக்தியின் முகம்.

ஓர கண்களால் அதை பார்த்தபடியே, “மக்கு தாரணி அண்ணி… அது சக்தி அண்ணி கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தப்போ பாட வேண்டிய பாட்டு இப்ப பாட வேண்டிய பாட்டு வேற…” என்று மகாலட்சுமி சொல்ல,

“அது என்ன பாட்டு எனக்கு தெரியாம?” என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து விட்டாள் தாரணி.

“இப்படியே நீங்க நின்னு யோசிச்சுகிட்டு இருந்தீங்கன்னா அடுத்து பாட்டி வந்துடுவாங்க பரவாயில்லையா?” மகாலட்சுமி சிரிப்பை அடக்கியபடி கேட்க,

“எப்படி கோர்த்து விடுது பார் குட்டி பிசாசு… பாலா அண்ணன் நெஜமாவே கிரேட்! எப்படித்தான் வச்சு குப்பை கொட்டுறாங்களோ…” என்று கேட்டபடி, சக்தியின் கையைப் பிடித்து எழுப்பி நிறுத்தி வைக்க மென் புன்னகை தான் பெண்ணின் இதழ்களில்.

சக்தியின் இருபுறமும் வந்து நின்ற பெண்கள் இருவரின் தோரணையில் முவருக்குமே சிரிப்பு வந்தது. சத்தமாய் சிரித்து விட, “மகா…” என்று எங்கிருந்தோ கேட்டது வரலட்சுமி பாட்டியின் குரல்.

பொங்கி வந்த சிரிப்பை கைகொண்டு அடக்கிய பெண்கள் மூவரும் அறையை விட்டு கிளம்பி ஜெகதீஸ்வரன் அறை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.

ஜெகதீஸ்வரன் அறைக்கு முன்பாக சென்று நின்ற தாரணியும் மகாலட்சுமியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்ள கலவரமானது சக்தியின் முகம்.

அவள் எண்ணியது போலவே மகாலட்சுமி தன் கைபேசியில் இருந்து,

“தனியாக காண வருவார்
இவள் தளிர் போலே தாவி அணைவாள்
கண் போலே சேர்ந்து மகிழ்வாள்
இரு கண்மூடி மார்பில் துயில்வாள்
எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ…

மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ”

என்று காலத்தால் அழியாத கண்ணதாசனின் வரிகளை ஒலிக்க விட அந்த வார்த்தைகளின் அர்த்தம் விளங்கிய சக்தியின் உடல் மொத்தமும் சிவந்து போனது.

அதற்கு மேலும் அவளை சோதிக்காமல் அங்கேயே விட்டுவிட்டு பெண்கள் இருவரும் விலகிச் செல்ல கதவு திறந்தது.

ஜெகதீஸ்வரனின் முகத்தில் இருந்த சிரிப்பு, அவன் பாடலை கேட்டு விட்டான் என்பதை அவளுக்கு உணர்த்த பாத விரல்களை அழுத்தமாய் நிலத்தில் ஊன்றி தன் முகத்தின் சிவப்பை மறைக்க பெரும்பாடு பட்டாள் பெண்.

அவள் படும் பாட்டை கண்டு மென்புன்னகை சிந்திய ஜெகதீஸ்வரன் கைநீட்ட அவன் கரம் பற்றி உள்ளே நுழைந்தாள் சக்தி.

சில நொடி தடுமாற்றத்திற்கு பிறகு நிமிர்ந்து பார்த்த அவளின் கண்கள் அகலமாய் விரிந்தது.

அந்த இல்லமே கலைக் கூடம் என்றால் அவனது அந்த அறை பொக்கிஷம் போல தெரிந்தது அவளுக்கு.

வேலைப்பாடுகள் நிறைந்த செம்மரத்தால் ஆன கட்டிலும், ஒரு பக்க சுவரை நிறைத்திருந்த சந்தன மரத்தால் ஆன அலமாரி கதவுகளும், பழமையான தேக்கு மரத்தால் செய்யப்பட்ட ஜன்னல்களும் மேற்கூறையின் தாங்கிகளும் அவளை ஈர்த்தது.

அவள் அறையை ரசித்துக் கொண்டிருக்க அவளை ரசித்துக்கொண்டிருந்தான் ஜெகதீஸ்வரன்.

கட்டிலின் அருகே சென்று அதன் கைப்பிடியில் கை வைத்தபடி சுவரின் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த ஜெகதீஸ்வரன் புகைப்படத்தையும் அன்று காலை எடுக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரும் இணைந்து இருந்த திருமண புகைப்படத்தையும் மாறி மாறி அவள் பார்த்துக் கொண்டிருக்க பின்னிருந்து அணைத்தான் ஜெகதீஸ்வரன்.

மெல்லிடையில் அவனது வலிய கரத்தின் வெம்மை படர சிலிர்த்த அடங்கிய பெண் அவளின் தேகம் ஜெகனுக்குள் மோகத்தை விதைத்தது.

“ஜெகன்…” இதழ்கள் அசைய,

“சொல்லு கண்ணம்மா…” பின்னிருந்து அணைத்து ஆடை மறைக்காத கழுத்து வளைவில் முகம் வைத்து அவன் கேட்க, பதில் இல்லை அவளிடம்.

அவளின் அமைதியில் இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டவன், அவள் பின் கழுத்தில் இதழ் பதித்து “பேசணுமா?” என்று கேட்க, தேகம் கூசி சிலிர்த்தது.

ஆனாலும் அவன் கேட்ட கேள்விக்கு ஆம் என்பதாக அவள் தலை அசைய,

“இத்தனை நாள் பேசுனது பத்தாதா? அப்படியே பேசினாலும் இன்னும் காலம் நிறைய கிடக்கு… அப்போ பேசலாம். இப்போ… ம்ஹூம்…” என்று கழுத்தில் இதழ் பதித்தபடியே பதில் பேசியவன் நொடிகளில் தன்னை நோக்கி திருப்பி அவள் இதழ்களில் தன் இதழ்களை இணைத்தான்.

கண்ணதாசனின் வரிகள் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் கொடுத்து செங்கொழுந்தாக சிவக்க செய்தவன், தன்னைக் கொடுத்து அவளை எடுத்துக் கொண்டான்.

அவளுக்குள் நிறைந்து தனக்குள் அவளை நிறைத்துக் கொண்டு அவளிலிருந்து விலகிப் படுத்தவன் அவளை அள்ளி தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவள் சேலையால் தன்னையும் சேர்த்து போர்த்திக் கொண்டான்.

அவன் செயலில் புன்னகைத்த சக்தி, “என்ன இது?” என்று சொல்லி அவன் முகத்தில் இருந்து புடவையை விளக்க முயல, விடாமல் தடுத்தவன் விழிகளை மட்டும் அவள் மீது படரவிட்டான்.

சூடி இருந்த மல்லிகை சரம் உதிர்ந்து இருக்க, நெற்றியின் திலகம் லேசாய் கலைந்திருக்க கூடலால் விளைந்த களைப்பிற்கு நடுவிலும் செந்தாமரையாய் மலர்ந்திருந்த சக்தியின் முகத்தை பார்த்தபடி,

“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு….
கண்டு கொண்டேன்…” என்று சன்னமான குரலில் பாடியவன் மீண்டும் புடவையின் வாசத்தை தன் சுவாசத்தில் நிறைத்து கொண்டு,

“கண்களுக்குள் பள்ளி கொண்டேன்…” என்று அவள் விழிகளை பார்த்தபடியே பாடியவன் காதலோடும் வெட்கத்தோடும் தன்னை பார்த்துக் கொண்டிருந்த பழுப்பு நிற விழிகளின் மீது முத்தம் வைத்து தன்னோடு சேர்த்து தனக்குள் புதைத்துக் கொள்வது போல அணைத்துக்கொள்ள ஆனந்தமாய் தானும் அணைத்துக் கொண்டாள் சக்தி.

ஐந்து வருடங்கள் கழித்து…

சக்தி சொல்லியது போலவே தனது கடமையின் முதல் படியில் கால் எடுத்து வைத்திருந்தாள்.

“ஸ்வீட் ஹோம்…” என்ற பெயரில் அவள் ஆரம்பித்து இருந்த இல்லத்தின் திறப்பு விழாவினை ஆடம்பரம் ஏதுமின்றி அழகாய் நடத்தி முடித்த சந்தோஷத்தோடு இல்லம் வந்து சேர்ந்திருந்தது ஈஸ்வர் குடும்பம்.

காலை முதல் இரவு வரை மொத்த குடும்பமும் அங்கேயே இருந்து விட்டு இரவு உணவையும் முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது ஈஸ்வரன் இல்லத்தில்.

பின்னே இருக்காதா?

சக்தி - ஜெகதீஸ்வரனின் பிள்ளைகளான பிரகதீஸ்வரன், வரமகாலட்சுமியும்

சர்வேஸ்வரன் - பிரதன்யாவின் பிள்ளைகளான மகேஸ்வரன், விஜயலட்சுமியும்

பாலகுமரன் - மகாலட்சுமியின் இரட்டையர்களான செந்தில் குமரன் சரவணகுமரனோடு வித்யாலட்சுமியுமாக குழந்தைகளின் சந்தோஷ கூச்சல் அந்த வீட்டை நிறைத்திருந்தது.

வரவேற்பறையில் தன் இருக்கையில் அமர்ந்து தன்னைச் சுற்றி இருந்த மொத்த குடும்பத்தையும் வஞ்சையாய் பார்த்த வரலட்சுமியின் கண்கள், மகாவின் மகள் வித்யாவை மார்போடு சேர்த்து அனைத்து தட்டிக் கொடுத்த படி பாலகுமாரன் மற்றும் சர்வேஸ்வரனின் மனைவியான பிரதன்யாவோடு பேசிக்கொண்டிருந்த சக்தியின் மீது நிலைத்தது.

குடும்பத்தோடு இயைந்து ஒன்றி போயிருந்தாலும் சொல்லிய சொல்லில் நிலைத்து நின்று தன் கடமை என்று சொல்லியதை நிறைவேற்றி இருந்த சக்தியின் மீது பேரன்போடு பெருமதிப்பும் கூடியிருந்தது அவருக்கு.

மனதிற்குள் எடுத்த முடிவினை செயல்படுத்துபவராக, “சக்தி…” என்று அழைக்க,

மொத்த குடும்பமும் திரும்பிப் பார்த்தது.

“வந்துட்டேன் பாட்டி…” என்று அழைத்ததும் பதில் சொல்லியபடி வந்த சக்தியை கை நீட்டி அழைத்து தன் இருக்கைக்கு அருகில் இருந்த இருக்கையில் உட்கார வைத்தவர், தன் மடியில் வைத்திருந்த மர பேழை ஒன்றை எடுத்து பிள்ளையை மார்போடு அணைத்து அவள் அமர்ந்திருந்ததால்
அவள் மடியில் வைத்தார்.

அந்த வீட்டில் பிறந்தவர்களுக்கு அது என்ன என்பது தெரிந்து போயிருக்க, அது தெரியாமல் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தனர் பிரதன்யாவும் பாலகுமரனும்.

“என்ன பாட்டி?” ஒன்றும் புரியாமல் சக்தி கேட்க,

“இது என்னோட நகை சக்தி. நம்ம குடும்பத்தோட பாரம்பரிய நகை கிடையாது. என் மாமியார் எனக்கு கொடுத்தது கிடையாது. எங்க அம்மா எனக்கு போட்ட நகை.” என்று சொல்ல அப்பொழுதும் புரியாமல் விழித்தாள் சக்தி.

“சரி பாட்டி….” என்று அவள் நிறுத்திய போதிலும்,

‘அதை எதுக்கு என்கிட்ட கொடுக்குறீங்க?’ என்ற கேள்வி அவளது பார்வையிலும் சொல்லிய வார்த்தைகளிலும் தொக்கி நின்றதை அங்கே இருந்த அனைவரும் கவனிக்கவே செய்தனர்.

“உன்ன மொத மொத பார்த்தபோது நான் உன்கிட்ட ஒன்னு கேட்டேன் ஞாபகம் இருக்கா?” என்று பேச்சினை ஆரம்பித்த வரலட்சுமி தன் குடும்பத்தினர் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“உன்னோட லட்சியம் என்னென்னு கேட்டேன்… நீ பதில் சொன்ன… அந்த பதில் ஒரு நிமிஷம் என்னை புரட்டி போட்டுடுச்சு…

இத்தனை நாள்ல உனக்கு தெரிஞ்சிருக்கும் நம்ம குடும்பம் கடவுளுக்கான கோயில்களை கட்டின குடும்பம்னு…

காலம் மாற மாற கோவில்கள் கட்டுறது நின்னு போய் மனுஷங்களுக்கான கட்டிடங்கள் கட்ட ஆரம்பிச்சுட்டோம்.

காரணம் இல்லாம காரியம் இருக்காதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க…

நாலு தலைமுறைகளுக்கு முன்னாடி செஞ்சுட்டு இருந்த தெய்வ கைங்கரியம் உன்னால திரும்பவும் இந்த குடும்பத்துக்கு கிடைக்கணும்றதுகாகத்தான் ஜெகா வாழ்க்கைக்குள்ள நீ வந்திருக்கின்றது இந்த அஞ்சு வருஷத்துல புரிய வச்சிட்ட…

உன்னோட தெய்வ கைங்கரியத்துக்கு என்னோட பங்கு இது… நீ சொன்னது போலவே உன்னோட முயற்சினாலே நீ செய்வ… ஆனாலும் இது என்னோட பங்கா இருக்கணும்னு நினைக்கிறேன்…” என்று சொல்லி அவளை கன்னத்தில் லேசாக தட்ட கண்களில் கண்ணீர் கரு கொண்டது.

எத்தனை பெரிய ஆசீர்வாதம் அவள் மீது மழையாக பொழிந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவளால் வாய் திறந்து ஒரு வார்த்தை பேச முடியவில்லை.

நீ எத்தனை பெரிய நம்பிக்கை… நான்காவது தலைமுறையை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் நம்பிக்கையை பெற்று இருக்கிறாள் சக்தி!

அவர் நினைத்திருந்தால் தான் பெற்ற பிள்ளையிடமோ அல்லது அவருக்கு பிறந்த பிள்ளைகளிடமோ கொடுத்திருக்கலாம் இந்த திருப்பணியை. ஆனால் தான் சொன்ன வார்த்தைகளை நம்பி தன்னை நம்பி அவர் ஒப்படைத்திருக்க, திக்கு முக்காடி போயிருந்தாள் பெண்.

அவள் கண்களில் இருந்து கண்ணீர் கரை உடைக்க, மொத்த குடும்பமும் அவர்கள் இருவரையும் சுற்றி சூழ்த்தது.

அவளது கண்ணீர் அவள் மார்பின் கதகதப்பில் உறங்கிக் கொண்டிருந்த வித்யாவின் கன்னத்தில் பற்றி தெரிக்க அழுகைக்கு தயாரானது குழந்தை.

வேகமாக கண்ணீரை அவள் துடைத்துக்கொண்ட போதிலும் நிற்காமல் கொட்டியது. அவள் அருகில் வந்த ஜெகதீஸ்வரன் குழந்தையை தன் கையில் வாங்கிக் கொள்ள எழுந்தவள், அந்தப் பேழையை கையில் எடுத்து பார்க்க அதன் மீதும் அவளது கண்ணீர் சொட்டியது.

புன்னகையோடு நிமிர்ந்தவள் அருகில் நின்றிருந்த பிரதன்யாவின் கையில் அந்த பெட்டியை கொடுத்துவிட்டு வரலட்சுமியின் பாதம் பணிய மனதார ஆசிர்வதித்தவர் அவளை தூக்கி நிறுத்தி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

அனைவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் நிறைந்திருக்க பேச்சற்று அந்த காட்சியை பார்த்துக் கொண்டு நின்றனர்.

பிறப்பு என் கைகளில் இல்லை. ஆனால், என் வாழ்க்கை என் கைகளில் மட்டும் தான் என்பதை உணர்ந்து தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட பெண்ணை காலம் சோதித்தது போதும் என்று எண்ணி சரியான கைகளை சேர்ப்பித்து இருந்தது.

வலிகளோடு மட்டுமலல வழிகளையும் நிறைத்தே ஒவ்வொரு உயிரையும் இந்த உலகத்தில் ஜெனிக்க வைக்கிறது இறை.

வலிகளுக்கு அஞ்சி வழிகளை கண்டு கொள்ளாமல் போகிறவர்களை வாழ்க்கையும் கண்டு கொள்வதில்லை.

வலிகளை கண்டு அஞ்சாமல் எதிர்த்து நிற்பவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வழிகளை காட்டாமல் இருக்கவும் தவறுவதில்லை இந்த வாழ்க்கை.

சக்தியின் வாழ்க்கையில் சிவப்பு கம்பளம் விரித்த வழியில் அவளோடு சேர்ந்து அவள் குடும்பமும் துணை நிற்க போகிறது இனி வரும் காலம் முழுவதும்.

தன்னில் இருந்து சக்தியை பிரித்து நிறுத்திய வரலட்சுமி அவள் நெற்றியில் முத்தம் பதிக்க, அவளை நெருங்கி தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் ஜெகதீஸ்வரன்.

தன் நதிமூலம் ரிஷிமூலம் ஆராயாமல் தன்னை மட்டுமே நேசித்து, தானே விலகிச் செல்ல முயன்ற நேரத்திலும் விலகவிடாமல் தடுத்து, தன் வாழ்க்கைக்கு அழகிய அர்த்தத்தையும் அசைக்க முடியாத அடையாளத்தையும் கொடுத்து… இதோ ஆனந்தத்தில் கலங்கிய நேரத்திலும் தனித்து விடாமல் தன்னோடு சேர்த்துக் கொண்ட ஜெகதீஸ்வரனை விழிகளில் காதல் பொங்க சக்தி பார்க்க, அதற்கு சற்றும் குறையாமல் அவளைப் பார்த்தான் ஜெகதீஸ்வரன்.

சர்வேஸ்வரன் அந்த அழகிய தருணத்தை காற்றில் கரைந்து விடாமல் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்படி தன் கைபேசியில் நிழற்படமாய் சேகரிக்க, சந்தன காற்று அவர்கள் ஜன்னல் வீச நிம்மதியும் மன நிறைவும் அவர்களின் வாழ்வில் இன்று போல் என்றென்றும் நிலைத்திருக்க வாழ்த்தி நாமும் விடை பெறுவோமாக…

நன்றி! வணக்கம்!
 

ஷமீம்

Active member
சொல்ல வார்த்தைகள் இல்லை.. அழகான அருமையான மனதுக்குள் இதம் பரப்பிய கதை.. ஆரம்பம் முதல் இறுதி வரை நேர்த்தியான நடை.. சக்தியின் தன்னம்பிக்கை நிமிர்வு 👍🏻, தாரணி-சக்தி நட்பு🧡, சக்தி-சர்வா நட்பு💙👌🏻 👌🏻..

சக்திக்கு வரனாக வந்து நண்பனான பரத் கதை ஓட்டத்தில் இல்லை.. ஆனால் அங்கும் ஒரு அழகான நட்பு முகிழ்த்தது..💚

வரலட்சுமி பாட்டி பாரம்பரியம், குலப்பெருமை என்று இருந்தாலும் சக்தியின் குணநலன்கள், லட்சியம் பற்றி புரிந்து முழுமனதுடன் ஏற்றுக் கொண்டது சிறப்பு..🤍

JS காதல் அழகு💛💜 💞💞💞💞💞.

சிறந்த feel good படைப்பு.. கதையின் ஓட்டம், எழுத்து நடை, எழுத்துப்பிழைகள் எதுவும் இல்லாமல் சிறப்பாக இருந்தது.. வெற்றி பெற வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐
 
  • Love
Reactions: skp

EswariSasikumar

Active member
அருமையான கதை 💞 💞.. நிறைவான முடிவு 💞 💞 💕 தெளிவான மற்றும் தீர்க்கமான எழுத்து நடை... வாழ்த்துக்கள் மா 💞...எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍 👍 👍 👏 👏
 
  • Love
Reactions: skp

skp

Member
சொல்ல வார்த்தைகள் இல்லை.. அழகான அருமையான மனதுக்குள் இதம் பரப்பிய கதை.. ஆரம்பம் முதல் இறுதி வரை நேர்த்தியான நடை.. சக்தியின் தன்னம்பிக்கை நிமிர்வு 👍🏻, தாரணி-சக்தி நட்பு🧡, சக்தி-சர்வா நட்பு💙👌🏻 👌🏻..

சக்திக்கு வரனாக வந்து நண்பனான பரத் கதை ஓட்டத்தில் இல்லை.. ஆனால் அங்கும் ஒரு அழகான நட்பு முகிழ்த்தது..💚

வரலட்சுமி பாட்டி பாரம்பரியம், குலப்பெருமை என்று இருந்தாலும் சக்தியின் குணநலன்கள், லட்சியம் பற்றி புரிந்து முழுமனதுடன் ஏற்றுக் கொண்டது சிறப்பு..🤍

JS காதல் அழகு💛💜 💞💞💞💞💞.

சிறந்த feel good படைப்பு.. கதையின் ஓட்டம், எழுத்து நடை, எழுத்துப்பிழைகள் எதுவும் இல்லாமல் சிறப்பாக இருந்தது.. வெற்றி பெற வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐
நன்றி மா ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤
 

skp

Member
அருமையான கதை 💞 💞.. நிறைவான முடிவு 💞 💞 💕 தெளிவான மற்றும் தீர்க்கமான எழுத்து நடை... வாழ்த்துக்கள் மா 💞...எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍 👍 👍 👏 👏
நன்றி மா ❤ ❤ ❤ ❤ ❤ ❤
 
Top Bottom