• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்ணாமூச்சி 18( final )

STN - 35

Member
கண்ணாமூச்சி 18:

வாழ்க்கையில் இதுவரை இழந்த சந்தோசத்தை எல்லாம் ஈடுகட்டுவது போல் அமைந்தது திருமணத்திற்கு பிறகான பிரணிதாவின் வாழ்வு. எந்தவித தடங்கலும் இல்லாமல், ஒரே சீராக அவள் வாழ்வு சென்று கொண்டிருந்தது.

பூர்வாவை பார்க்கும் நேரமெல்லாம் பிரணியின் மனம் தடுமாறாமல் இல்லை. இருந்தும் அவரை நெருங்குவதற்கு அவளை எதுவோ தடுத்தது. அந்த உணர்வு முற்றிலும் உடைவதற்தாக தான் காத்துக் கொண்டிருக்கிறாள்.

அவளாக நெருங்கவில்லையே தவிர, பூர்வா அவளை நெருங்கும் நேரமெல்லாம் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வாள், அடிக்கடி அவளிற்கு பிடித்த உணவுகளை, பூர்வா செய்துவர அதை உண்பவள், மறுநாள் இவள் சமைத்ததை நிரஞ்சன் மூலம் அங்கே கொடுத்தனுப்புவாள்.

பிரணியின் தவறு அவளிற்கு தெரியாமல் இல்லை, இருந்தும் பூர்வா அன்று அடித்தது அந்த சிறுவயதில் அவள் மனதில் ஆழப் பதிந்து விட்டதை என்ன சொல்ல? அதற்காக அதையே பிடித்துக் கொண்டு, இன்றும் பூர்வாவை விலக்கி வைக்க அவளிற்கு விருப்பமில்லை.

அன்று, பிரணிதாவின் டீமிற்கு வழங்கப்பட்டிருந்த ப்ரோஜெட்டின் கடைசி தினம். கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக இழுத்தடித்துக் கொண்டிருந்த ப்ரோஜொக்ட்டை வெற்றிக்கரமாக இன்று முடித்திருந்தனர்.

இதனை முடிக்கும் வரையிலும், மற்ற எதிலுமே, அவ்வளவு கவனம் செல்லவில்லை அவளிற்கு. இதனால் ராகவன் கூட சண்டையிட்டிருந்தானே! அவனை பார்க்கவில்லை என.

இந்த ப்ரோஜெக்ட் ஆரம்பித்த ஒருவாரத்திலே முகத்தை சுழித்து தனது அதிதிருப்தியை காட்டியிருந்தவனை, இவள் தான் கெஞ்சி, கொஞ்சி மலையிறக்கி வைத்திருந்தாள்.

ஆனாலும், அவளது கவனம் முழுவதும் ப்ரோஜெக்ட் பற்றிய சிந்தனையிலயே இருந்தது. இருவருக்குமான தனிமையில் வாய் தவறி, அவள் ப்ரோஜெக்ட்டை பற்றி பேசிவிட, அவ்ளோதான் வெடித்திருந்தான்.

அத்தனை பேச்சு, அத்தனை சண்டை அவளிடம், அதன் சாராம்சம் முழுவதும் அவனிற்கான நேரத்தை ஒதுக்கவில்லை, என்பதே.

பதிலுக்கு இவளும் ஒரு கோபத்தில் சண்டை பிடித்திருக்க, முறைப்புடன் திரும்பி கொண்டவன், இரண்டு நாட்களாய் அவளிடம் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டு சென்றதில், அவளிற்கு சிரிப்பு தான் வந்தது.

பேசதான் இல்லையை தவிர, மற்றப்படி அவளிற்கு தேவையானதை செய்வதில் குறை வைக்கவில்லை. இதோ இன்று காலையில் பதட்டத்துடன் கிளம்பியவளை, மாணிக்கத்திடம் பேசவைத்து நிதானமாக்கியவன், அவனே அழைத்து வந்திருந்தான் அலுவலகத்திற்கு.

அவள் இறங்கும் சமயம், அவள் போனிற்கு,
“பதட்டமில்லாம இரு, நல்லாவே பண்ணுவ. ஆல் த பெஸ்ட்”என குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்பி வைத்திருக்க, அதனை வாசித்தவள்,

“தேங்கஸ் ராகவா!” என அவன் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு, இறங்கி ஓடியிருந்தாள்.

நொடிநேர தாக்குதலிலும், அவள் அழைப்பிலும் மயங்கியவன்,
“அன்னைக்கு மூணாறுல சொல்ல சொன்னதுல இருந்து, பேரை சொல்லி கவுக்குறதுயே வழக்கமா வச்சிருக்கா இப்போ எல்லாம். வெக்ககெட்ட மனசும், அவ பேரை சொல்லிட்டா மயங்கி போயிடுது, த்தூ! மானங்கெட்ட மனசு.” என திட்டியவன்,

“கொடுத்தது தான் கொடுத்தா, அதையாச்சும் உருப்படியா கொடுத்தாளா? கன்னத்துக்கும், லிப்ஸ்க்கும் இடையில ரொம்ப பெரிய கேப்பு இருக்குற மாதிரி தான்.” என நொடித்தபடியே, அவள் இதழ் பட்ட இடத்தை கிள்ளி, தனது இதழ்களில் வைத்துக் கொண்டவனை கண்டு, அவன் மனசாட்சி கத்தி எடுத்து குத்தாது குறைதான்.

கடைசி கட்ட வேலைகளை எல்லாம் முடித்துக் கொடுக்க, இரவாகி விட்டது. வேலை முடிந்ததும், அவனே அழைத்து செல்ல வருவதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.

அதனால் அவனிற்காக காத்திருந்தவள், அவனிற்கு இரண்டு விசயங்களையும் கூற வைத்திருந்தாள்.

ஒன்று அவனிற்கு இஷ்டமில்லாதது! இன்னொன்று…..?

சிந்தனையில் இருந்தவளின் அருகே காரை நிறுத்தியிருந்தான் ராகவன்.
அவள் ஏறிக் கொள்ள, வண்டி புறப்பட்டது.

“சாப்பிட்டியா?” அவள் சோர்ந்த தோற்றம் கண்டு கேட்டிட,

“ம்ம்ம் ஆபிஸ்ல டின்னர் கொடுத்தாங்க.”

“சரி.”

சிறிது நேரம் அமைதியாக வந்தவள், அவளது ஆயுதத்தை கையிலெடுத்தாள்.

“ராகவா!” என்றழைத்திட,

‘நான் மயங்க மாட்டேனே!’ உள்ளுக்குள் சிலுப்பி கொண்டவன், அவள் புறம் திரும்பாது இருந்திட,

“ம்ம் ராகவா” சிணுங்கலுடன் ராகமிழுத்து அழைத்தவளை கண்டு அவன் எடுத்த சபதம் தவிடுபொடியாகிட,

“ராகவா!” ஹஸ்கி வாய்ஸில் அவள் அழைத்து நொடி, வண்டியை ஓரங்கட்டியவன்,

“இங்க பாருடி, சும்மா, சும்மா அந்த பேரை சொல்லி என்னை மயக்க பார்க்காதா புரியுதா? நான் மயங்க மாட்டேன். மூணாறுல உன்கிட்ட சொன்னது தப்பா போச்சு.” என எகிறிக் கொண்டு அவன் சண்டைக்கு வர,

அவன் கழுத்தோடு இறுக்கி தனக்கு நெருமாக்கியவள், அவன் முகத்தோடு மோதி, “ராகவா!” என கிசுகிசுப்பாக அழைத்ததில், எகிறி கொண்டிருந்தவன் முற்றிலும் மயக்கம் கொண்டான்,

“என்னடி?” என்றபடி அவள் இதழ்களில் புதைய முயன்றிட, அதற்கு தடைவிதித்து தனது முகம் பார்க்க வைத்தவள்,

“உனக்கு ஒரு சர்ப்ரைஸ்!” என்றபடி அவளது பேக்கிலிருந்து, ஒரு கடிதத்தை எடுத்து அவளிடம் நீட்டிட, ஆவலாய் வாங்கியவனின் முகம், அடுத்த நிமிடம் சுருங்கி போயிருந்தது.

அவளது மூன்று மாதக் காலம் இன்றோடு முடிவடைந்து, மீண்டும் அவளை மதுரை கிளைக்கு ட்ரான்ஸ்பர் செய்திருப்பதாக அக்கடிதத்தில் இருந்ததை கண்டு பல்லைக் கடித்து அவளை முறைத்தவன்,

“இது சர்ப்ரைசாடி எனக்கு?” என,

“அப்போ இல்லையா? உனக்கு ஹாப்பியா இருக்கும்னு நான் நினைச்சேன்.” என முகத்தை அப்பாவியாய் வைத்து பேசியவளின், விழிகளில் அத்தனை குறும்பு.

“அவ்வளவுக்கு ஏத்தமாகிப் போச்சுல உனக்கு?” என கடுகடுத்தப்படி, அவன் காரை ஓட்ட,

“அச்சோ! அப்போ உனக்கு இது சந்தோசமா இல்லையா? சரி, அப்போ இதை பாரு.

இதை பார்த்தாவது ஹாப்பி ஆகுறியான்னு பாக்கலாம்.” என மீண்டும் பேக்கிலிருந்து ஒரு பொருளை எடுத்து, அவள் உள்ளங்கையில் வைத்து அவனிற்கு காட்டிட,

மீண்டும் தன்னை கடுப்பாக்குவது போல், எதையோ வைத்திருக்கிறாள் என நினைத்தபடி, அவளை முறைத்து வைத்தவன், அவள் காட்டிய பொருளை கண்டதும், கார் அவன் கைகளில் தடுமாறிட, சுதாரித்து ஓரங்கட்டியவன், மீண்டும் அதனை காண, அவள் கைகளில் வீற்றிருந்தது, இரண்டு கோடுகள் கொண்ட ப்ரெக்னன்ஷி கிட்.

அதனைக் கண்டவன், வேகமாய் அவளை நிமிர்ந்து பார்த்திட, விழிகளிலும், இதழ்களில் குறும்பு சிரிப்பு மின்ன, இருந்த மனையாளை கண்டவன்,

“ஆனா, மனுஷியே இல்லைடி நீயெல்லாம். என்னை கடுப்பேத்தனும்னே இதையெல்லாம் ரூம் போட்டு யோசிப்பியோ.” என எறிந்து விழுந்தவன், அவள் கைகளில் இருந்ததை பொக்கிஷமாய் தனது கைகளில் எடுத்து பார்த்தவனின், உள்ளம் அளவுக்கதிகமான சந்தோசத்தில் மிதந்தது.

“நிஜமா யுகா!” அட்டையை பார்த்தபடியே அவன் கேட்டிட,

“ஏன் அதுல இருக்கிறது தெரியலையா சாருக்கு? அச்சோ, அப்போ கிட்டப்பார்வை பிரச்சனை இருக்கா உங்களுக்கு?” என சீரியசாய் முகத்தை வைத்துக் கொண்டு அவள் பேசியதில், கடுப்புற்றவன்,

“அடியே! கொழுப்பெடுத்தவளே, உன்னை..!” என்றபடி அவளை இழுத்து பேசிய வாய்க்கு தண்டனை தர ஆரம்பித்திருந்தான்.

வழக்கமான அழுத்தான அவனது கழுத்துப்பிடி, இன்று பூவை விட மென்மையாய் இருந்ததில் அவன் நிலையுணர்ந்து, அவனிற்கு வாகாய் தன்னை கொடுத்திருந்தாள்.

“எப்போ யுகா டெஸ்ட் பண்ண? என்கிட்ட ஏன் சொல்லல நீ?” என முகத்தை தூக்க,

“இப்போதான் கொஞ்ச நேரம் முன்ன ஆபிஸ்ல டெஸ்ட் பண்ணேன். எனக்கு கொஞ்சம் லேட் ப்ரீயட்ஸ்தானே அதனாலே அசால்ட்டா விட்டுடேன்.

சரி எதுக்கும் செக் பண்ணுவோம்னு, பண்ணி பார்த்தேன். ஆனா, சீரியஸ்ஸா நானே இதை எதிர்பார்க்கலை.” என்றபடி, அவன் நெஞ்சினில் முகத்தை புதைத்துக் கொள்ள, மெல்லிய சிரிப்புடன் அவள் தலைகோதியவன், ஹாஸ்பிட்டலிற்கு சென்றிருந்தவன்.

கர்ப்பத்தை உறுதி செய்துக் கொண்டு வீடு திரும்பியிருந்தனர். அந்த இரவுவேளையே அனைவருக்கும் விசயம் சொல்லப்பட்டதில், கொண்டாடி தீர்த்தனர் பிரணிதாவை.


அதுவும் மாணிக்கத்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, மானசீகமாய் அவரது உள்ளம் பூவரசனைதான் நினைத்துக் கொண்டது. மதுரைக்கு தகவல் தரப்பட,
விடிந்தும் விடியாத வேளையில், வந்திருந்தனர்.

அதன்பின் கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்? பகல் நேரம் முழுவதும் பிரணிதாவை நெருங்க முடியவில்லை ராகவனால். இரவுகளில் மட்டுமே அருகே இருப்பவளிடம்,

“ஒரு வாரம் கழிச்சு சொல்லிருக்கனும் எல்லாருக்கும். என்னையவே கிட்டக்க விட மாட்டுறாங்க, எனக்கு என் பிள்ளைய கொஞ்சனும்னு ஆசை இருக்காதா?” என புலம்பி தள்ளியவனை, சரி கட்டுவதற்குள், பல முறை வெட்கத்தில் சிவந்துப் போனாள்.

***************

மதுரைக்கு செல்ல விருப்பமில்லை என தெரிவித்து மீண்டும் கோவை கிளையிலயே சேர்ந்திருந்தாள் பிரணிதா.

இதனை தெரிந்துக் கொண்டு, ராகவனுடன் சண்டைப் பிடித்த ஆகாஷை, குழந்தை பிறந்த பின் அங்கே வந்து இருப்பதாக கூறி தாஜா செய்ய, அதைக் கண்டு கொலைவெறியுடன் முறைத்துப் பார்த்த கணவனை, இரவினில் சமாதானம் செய்திருந்தாள்.

நான்காம் மாதத்திலே வயிறு குட்டியாய் உப்பியிருந்தது. ஆறு மாதம் வரை மட்டுமே அலுவலகம் செல்வதாக ஏற்பாடு, அதன்பின் ஓர்க் ஃப்ரம் வாங்கியிருந்தாள்.

அத்தனை கவனம் பிரணிதாவிடம், பிள்ளைக்காக ஒன்றொன்றையும் பார்த்து பார்த்து செய்தாள். சில நேரங்களில் குழந்தையின் அசைவை, உணரும் போதெல்லாம் உவகையில் துள்ளும் அவள் உள்ளம்.

ஆணா? பெண்ணா? என தெரியாத பிள்ளைக்காக உயிரை கூட, தர தயராக இருந்தாள், தாய்மையின் உணர்வே தனி தானோ? அத்தனை சிலிர்ப்பு குழந்தையை உணரும் போதெல்லாம் அவளிடம்.

இரவினில் கணவனும், மனைவியுமாக குழந்தையின் அசைவை ரசித்துப் பார்க்கும் நிமிடங்கள் எல்லாம், அவர்களின் ரகசியமாய் பாதுகாக்கப்பட்டது.

பூர்வாவையும், மாணிக்கத்தையும் கையில் பிடிக்க முடியவில்லை. தினம் தினம் மகளுக்காக, பூர்வா சமைத்து கொண்டு வர, மாணிக்கம் அவள் ஆசைப்பட்டு அனைத்தையும் செய்ய ஆரம்பித்திருந்தார்.

பிரணியின் ஆசையை நிறைவேற்றுவதில் மாமனுக்கும் மருமகனுக்கும் அடிக்கடி முட்டிக் கொண்டது. இவர்களுக்கு இடையே பிரணிதா தான் சிக்கிக் கொள்ளுவாள்.

ஏழாம் மாதத்திலே, வளைகாப்பு போட முடிவு செய்திருந்தனர். வளைகாப்பு முடிந்து, பிரணிதா பிறந்த வீடான மாணிக்கம் இருக்கும் வீட்டிற்கு தான் செல்ல இருக்கிறாள்.

***********

இப்போதெல்லாம் ஒருவித குற்றவுணர்வு பிரணிதாவினுள் வர ஆரம்பித்திருந்தது. அவள் தாய்மையடைந்த தினத்திலிருந்து, எத்தனை கவனமாக குழந்தையை கையாளுகிறாள். தூக்கத்தில் கூட வேகமாய் திரும்பி படுத்து விட்டாள், குழந்தைக்கு வலிக்குமே? என எத்தனை தவிப்பு அவளிடம்.

இதே தவிப்பும், கவனமும் தானே பல வருடங்களுக்கு முன் பூர்வாவிற்கு இருந்தது. இரண்டாம் முறை என்றாலும், அதுவும் பிள்ளை தானே, இரட்டைபிள்ளை வேறு!

எத்தனை ஆசையாய் இருந்திருப்பார்? அதையும் விட, மாணிக்கத்திற்கும், பூர்வாவிற்குமான காதல் சாட்சி. எத்தனை மகிழ்ந்திருப்பார்கள்?

தன்னை போல தானே, அம்மாவும் நொடிக்கொரு முறை கருவில் இருக்கும் பிள்ளையை தொட்டு ரசித்திருப்பார்.

அன்று, அறிவிழந்து இவள் செய்த செயல் எத்தனை கொடுரமானது? இரு பிள்ளைகளை கொல்லுமளவிற்கா, இவளது வெறி இருந்தது. நினைக்கையிலே உடல் நடுங்கியது.

அன்று, இவள் அடித்த அடியில், அசாம்பாவிதமாக எதுவும் ஆகியிருந்தாள்? அய்யோ? நினைக்க கூட மனதில் தெம்பில்லையே! இவள் செய்ததற்கு இவளை அடியோடு மட்டும் விட்டிருக்க கூடாது, என அவள் மனமே அவளை எதிர்த்து வாதாடுகிறது.

உண்மைதானே? தெரியாமல் லேசாய் கணவனே தூக்கத்தில் கைபோட்டு விட்டாள், அத்தனை கோபம் கொள்ளுவான் அவனிடம்.

அப்படியிருக்கையில் இவள் வயிற்றிலே அடித்திருக்கிறாளே? அதற்கு கொஞ்சவா செய்வார்கள்? பூர்வா அவளை அடித்ததில் தவறில்லை என மனபூர்வமாய் உணர்ந்திருந்தாள்.

அவளை பூர்வாவிடம் நெருங்க முடியாமல் தடுத்த உணர்வு முற்றிலுமாய் உடைந்துப் போயிருந்தது.

*********
இன்றுதான் பிரணிதாவிற்கு வளைகாப்பு ஊரே களைகட்டியது. பார்லரில் இருந்து ஆட்கள் வந்திருந்தனர், பிரணிதாவை அலங்கரிப்பதற்கு.

பம்பரமாய் சுற்றினர் வீட்டினர். கீழே செல்லும் முன்னே, கணவனை காண வேண்டும் என பிடிவாதம் பிடித்திட, கீழே வேலையாய் இருந்தவனை வரவழைத்திருந்தனர். அவர்களுக்கு தனிமை கொடுத்து மற்றவர்கள் கிளம்பிட,

“என்னடி பிடிவாதம் பண்ற? கீழ அத்தனை வேலை இருக்கு.” எகிறிக் கொண்டு வந்தவனை, அடுத்த நிமிடம்

“ராகவா!” என்றழைத்து, அடக்கியிருந்தாள். நெஞ்சில் சாய்ந்திருந்த மனைவியை அணைத்தவன்,

“என்னடா யுகா?”

“ஒண்ணுமில்லை, சும்மா சாஞ்சுக்க தோணுச்சு.”

தாய்மையின் பூரிப்பில் உப்பியிருந்த கன்னங்களில் அழுந்த முத்தமிட்டு, இதழ்களில் இளைப்பாறியவன்,

“ரொம்ப யோசிக்காம, இந்த மொமண்ட்ட என்ஜாய் பண்ணு. இன்னைக்கு நைட்டு மட்டும் தான் வர மாட்டேன். நாளைக்கு நீ முழிக்கும் போது,உன்கிட்ட இருப்பேன்.” என அவளிடம் கூறியவன், அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.

நல்லநேரம் தொடங்கியதும் மனையில் அமர வைத்து, வளையல் இட ஆரம்பிக்க,

“எனக்கு அம்மாதான் முதல்ல வளையல் போடனும்.” என சபையில் பூர்வாவிற்கான அங்கீகாரத்தை கொடுத்தவள்,

“அம்மா, வாங்க” என்றழைத்து கைகளை நீட்ட, உடைந்துப் போனார் பூர்வா.

அத்தனை கண்ணீர் மகிழச்சியில் அவருக்கு. எத்தனை வருடங்களுக்கு பிறகான அழைப்பு! கண்ணில் நிரம்பிய நீருடன் பிரணியின் அருகே சென்றவர்,

“பிரணி!” என,

“போடுங்கம்மா!” என, அதன் பின்னும் அமைதியாய் இருப்பாரா அவர்.

மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் மகளை வாழ்த்தி, வளையல்களை இட்டவர், அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட, அந்த காட்சியை புகைப்படமாக்கினான் ராகவன்.

நிச்சயம் மனைவியின் இந்த செயலை எதிர்பார்க்கவில்லை அவன். அத்தனை நிறைவாய் இருந்தது தாயையும், மகளையும் காண்கையில்.

அதன்பின், பிரணிதாவிற்கு சம்பிரதாயமாக உணவை ஊட்டிவிட்டு அழைத்து சென்று, அறையில் வைத்து மீதி உணவை உண்ண வைத்தனர்.

விழா முடிந்து, நல்ல நேரத்திலே பிரணிதாவை அழைத்துக் கொண்டு சென்றனர். வீட்டிற்கு சென்றதும் நல்ல உறக்கம் அவளிற்கு. பூர்வா வந்து எழுப்பும் வரையிலும்.

“பிரணி, எந்திரிடா. பால் குடிப்பியாம்.” பூர்வா எழுப்பிட, தாயை கண்டு அழகிய புன்னகையை சிந்தியவள்,

“ப்ரெஷ்ஷாகிட்டு வரேன்ம்மா.” என்றபடி சென்றவள், தயாராகி வர, தோட்டத்திற்கு சென்றனர்.

மாணிக்கத்திற்கும், பூர்வாவிற்கும் நடுவில் அவள் வர, அவளுடன் பேச்சுக் கொடுத்தவாறே, மெல்ல நடந்தனர் இருவரும்.

“ம்மா!” என்றழைத்து பூர்வா முகத்தை பார்த்தவள்,

“சாரிம்மா!” என்றிட, திகைத்துப் போன பூர்வா.

“என்னாச்சு பிரணி? ஏன்?”

“நான் ரொம்ப கெட்டப் பொண்ணு தானேம்மா? அன்னைக்கு அப்புடி அடிச்சிருக்க கூடாதுல உங்களை.” லேசாய் தேம்பியபடி, அவள் தவறை உணர்ந்ததையும், இன்றுவரை குற்றவுணர்வை அனுபவிப்பதையும் கூற, பதறி போனது பெற்றவர் இருவருக்கும்.

“இல்லடா பிரணி, அம்மா மேலயும் தப்பிருக்கு. உன்னை அடிச்சது…” என்றவளை இடைமறித்தவள்,

“என்னை அடிச்சதுல எந்த தப்பும் இல்லைம்மா. அதை நினைச்சு நீங்க கவலைப்படாதீங்க.”

“இல்லடா, அம்மா அடிச்சிருந்தாலும் அடுத்து உன்னை விட்டுருக்க கூடாது தானே. நீ பிடிவாதம் பிடிச்சாலும், அம்மா உன்னை விட்ருக்க கூடாது பிரணி. அம்மாவும் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்.

நீ சின்ன பொண்ணு பிரணி அப்போ, ஆனா, நான் அப்புடி இல்லையே. உன்னை விட்டு தப்பு பண்ணிட்டேன் தானே பிரணி. அம்மாவ மன்னிச்சிடுடா.” என, அவரை அணைத்துக் கொண்டவள்,

“இல்லைம்மா நான்தான் தப்பு, என்னை மன்னிச்சிடும்மா. அன்னைக்கு அடிச்சதுல ஏதும் தப்பாகிருந்தா என்னம்மா பண்ணிருப்பேன்? காலம் முழுக்க குற்றவுணர்ச்சிலே செத்திருப்பேன் தானே.”

“பிரணிக்குட்டி!” என பதறிய மாணிக்கம்,

“இப்புடி எல்லாம் பேசாதடா, இந்த மாதிரி நேரத்துல நீ சந்தோசமா நிம்மதியா இருக்கனும். அப்போதான் பிள்ளைக்கும் ஆரோக்கியம். பழசை எல்லாம் விட்டுரு பிரணி. இப்போ இருக்குறது தான் நிஜம்.” என,

“ஆமாடா, அப்பா சொல்றது தான் சரி. இனி என்ன ஆனாலும் உன்னை நாங்க விடமாட்டோம்டா.” என, விழிகளில் பெருகிய நீருடன், இருவர் தோள் சாய்ந்து நின்றவள், புகைப்படமாக்கப்பட்டாள், வீட்டின் வாயிலில் நின்றிருந்த ராகவனால்.
வேலைகளை முடித்து வந்தவன், கண்டது இந்த அழகிய காட்சிகளை தான்.

இரவு உணவை மாணிக்கம் ஊட்டி விட, உண்டவள் தூங்க சென்றிருந்தாள்.

சொன்னதும் போல், இடையில் விழிப்பு தட்ட எழுந்தவள் கண்டது, அவளை அணைத்து உறங்கி கொண்டிருந்த ராகவனை தான்.

நேரத்தை பார்க்க மணி அதிகாலை ஒன்று. பன்னிரெண்டு மணி வரை பொறுத்து நேற்றைய நாள் முடிவதற்காக காத்திருந்து, வந்திருப்பவனை கண்டு சிரிப்பு வர,

“என் செல்ல ராகவா!” என அவனை முத்தி கொஞ்சி, அவன் உறக்கத்தை கலைத்தவளை, அடுத்து உறங்க விடவில்லை ராகவன்.

“ராகவா!” என்ற வார்த்தையை ரீபீட் மோடில், அவளை சொல்ல வைத்து, இவன் போதையேறி, மீண்டும், மீண்டும் அவளுள் ஆழப் புதைந்து போனவனை அழகாய் தன்னுள் தாங்கி கொண்டாள்.

பூர்வாவிடம் பேசியதை பற்றி அவனும் கேட்டுக் கொள்ளவில்லை. இவளும் விளக்கம் தரவில்லை. இயல்பாய் நடந்ததை அனைவரும் ஏற்றுக் கொண்டு அவளை கேள்விகளால் திணற வைக்கவில்லை.

அவள் குடும்பம் உணரவைத்து இயல்பாய் அதில் அவளை பொருந்தி போக செய்திருந்தனர்.

******************

பிரசவ வார்டின் வெளியே
ராகவனை விட அதிக பதட்டத்துடன் நடந்து கொண்டிருந்தார் மாணிக்கம்.

“மாமா ஏன் இவ்ளோ டென்ஷன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க.” என்ற ராகவனிடம்,

“நீயெல்லாம் ஒரு புருசனாடா? உள்ள என் பொண்ணு வலில கத்திட்டு இருக்கா, உனக்கு கொஞ்சமாச்சும் பதறுதா? இதுல என்னை வேற அமைதியா இருக்க சொல்ற.” என எகிறிக் கொண்டு அவனிடம் சண்டைக்கு செல்ல,

அவரை முறைத்தவன்,
“தேவைதான் எனக்கு, பாவம் ரொம்ப டென்ஷனா இருக்கீங்களேன்னு பேசுனன்ல, எனக்கு தேவைதான். எனக்கு பயம், பதட்டமில்லைன்னு தெரியுமா உங்களுக்கு?” என பதிலுக்கு எகிறியவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

‘என் பொண்டாட்டி சொன்னதுக்காக பயத்தை வெளிய காட்டாம நின்னா, நம்மளை கல்நெஞ்சுக்காரன்னு சொல்லிடுவாங்க போலயே.’ என மனதினுள் அலறியவனுக்கு, மனைவி மீது தான் கடுப்பு வந்தது.

“ராகவா கண்டிப்பா எனக்கு பூவப்பா தான் வருவாரு. அதனால அவரு வரும்போது, பயம் இல்லாமல் பதட்டப்படாமா நீ அவரை வாங்கணும் சரியா? என்னை பூ அப்பா வலிக்க வைக்க மாட்டாரு.” என அவன் மனையாள் பேசியதை கேட்டு, அவன் பயத்தை வெளியேக் காட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தான்.

ஆகாஷ் அவனையே பார்க்க,
“உனக்கு என்னடா?” என்க,

“குழந்தை பிறந்ததும், பிரணிதாவ கூட்டிட்டு நாங்க மதுரைக்கு போய்டுவோம்.” என அவன் வந்த தினத்தில் இருந்து, இதை கூறி கடுப்பேத்துவன், இன்றும் அதையே கூறிட,

அதில் ராகவன் உக்கிரமாய் அவனை முறைத்துப் பார்க்க, அசால்ட்டாய் அதை புறம் தள்ளினான் ஆகாஷ்.

“மொதல்ல, என் பொண்டாட்டி குழந்தை பெத்துட்டு வரட்டும் டா, அப்புறம் பேசிக்கிறேன் உங்களை எல்லாம்.” என கடிந்தவன், ஊர் தெய்வங்களை எல்லாம், வேண்டிக் கொள்ள, பிரணிதா கூறியது போல் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்திருந்தாள்.

அத்தனை மகிழ்ச்சி அனைவருக்கும். ஹாஸ்பிட்டலே அலறி விட்டது மாமான், மருமகன் அலப்பறையில். முதலில் பிள்ளையை மாணிக்கம் தான் கையில் ஏந்தினார், பூவரசனே மீண்டும் உயிர்த்து வந்துவிட்ட உணர்வு அவருக்கு.

“என் பிள்ளைய கண்ணுலயாச்சும் காட்டுங்கடா.” என ராகவனை அலறவிட்டே, கடைசியாய் கையில் கொடுத்துவிட்டு அனைவரும் வெளியேறி விட்டனர்.

“நான் சொன்னேன்ல ராகவா! பூவப்பா தான் வருவாருன்னு.”

“ஆமா யுகா, பூ மாமாவே தான் வந்திருக்காரு.” என மனைவியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டவனின் முகத்தில் அத்தனை பூரிப்பு, உலக்கையை வென்று விட்ட உணர்வு. கையில் இருந்த மகன், தன் குட்டி கண்களை திறந்து, தாய் தகப்பனை கண்ட நொடி, இருவருக்கும் விழிகளில் நீர் படர்ந்தது.


***************

தன்னை முறைத்து கொண்டு வந்த ஆகாஷை இம்மியளவும் சட்டை செய்யாது தன் மகனை கொஞ்சியவாறு அமர்ந்திருந்தான் ராகவன். கார் மதுரையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

சொன்னதுபோல், ஆகாஷ் பிரணிதாவிடம் வீம்பு செய்து, அழுது, புரண்டு மதுரைக்கு அழைத்து செல்ல, கூடவே வந்துவிட்டான் ராகவன்.

பிள்ளையை ஆகாஷிடம் தராமல் அவனே வைத்திருக்க, அதில் கடுப்பாகிதான் முறைத்துக் கொண்டு வருகிறான்.

பின், பிரணிதா தான் அதட்டி குழந்தையை ஆகாஷிடம் கொடுக்க வைத்திருந்தாள்.

மதுரைக்கு சென்றபின் அங்கு இருந்த ஒரு வார காலமும் பிரணிதா, ஆகாஷிக்கும் கணவனுக்கும் இடையே பஞ்சாயத்து செய்தே ஓய்ந்து போயிருந்தாள்.

கிணத்துக்கடவில் மாணிக்கம், ராகவனிடம் மாட்டினாள் என்றால், இங்கே ஆகாஷிக்கும் கணவனுக்கும் இடையே மாட்டிக் கொள்கிறாள்.

ஆகாஷ் சிறு பிள்ளை என, பல நேரம் ராகவனைத்தான் விட்டுக் கொடுக்குமாறு அதட்டி அமைதியாக்குவாள். அதில் கடுப்பாகி போகும் கணவனை, “ராகவா!” என்றழைத்தே கவுத்து விடுவாள்.

ஒருவாரம் முடிந்து, இதோ இன்று கிணத்துக்கடவு திரும்பியிருந்தனர்.
பூர்வா ஆரத்தி எடுக்க, பிறந்த வீட்டில் பிள்ளை மற்றும் கணவனோடு நுழைந்தவளின் விழிகள் வழக்கம் போல், சுவற்றை பார்க்க, பூவரசனின் படம் அருகே புதிதாய் வீற்றிருந்து இரண்டு படங்கள்.

ஒன்று அவள் திருமணத்தின் போது, மாணிக்கத்தின் தோள் சாய்ந்தது, இன்னொன்று, அன்று தோட்டத்தில் எடுக்கப்பட்ட போட்டோ. தான் மீண்டும் குழந்தையுடன் இந்த வீட்டிற்கு வரும்போது அந்த புகைப்படங்கள் இருக்க வேண்டும் என கணவனிடம் கட்டளை இட்டிருந்தது யுகபிரணிதாவே தான்.

மனைவியின் கட்டளையை நிறைவேற்றாமல் இருப்பானா ராகவன்?

அந்த புகைப்படங்களை கண்டவளின் மனதில் அத்தனை உவகை, அவளது மணிப்பாவிற்கும், பூர்வா அம்மாவிற்கும் கொடுக்கப்பட்ட அங்கீகாரம் அது.

பிள்ளையை பெரியவர்கள் வாங்கி கொள்ள, அவளை தங்கள் வீட்டிற்கு, தங்களின் அறைக்கு அழைத்துச் சென்றவன், அங்கிருந்த புகைப்படத்தை காட்டிட, லேசான விம்மலுடன் கணவன் நெஞ்சம் சேர்ந்தாள் அவள்.

ஏஐயின் (Ai) உதவியுடன் பூவரசனிற்கும் மாணிக்கத்திற்கும் இடையே பிரணிதா நிற்பது போல் ஒரு போட்டோவை மாற்றி வைத்திருந்தான் ராகவன். மனைவியின் சந்தோசத்தை அதிகப்படுத்த அவன் கொடுத்த பரிசு இது.

“பிடிச்சிருக்கா யுகா!” ஜிமிக்கியில் முத்தமிட்டு அவன் கேட்டிட,

“ம்ம்ம் ரொம்ப.” என்றவாறு உணர்ச்சி பெருக்கில் கணவனை அணைத்துக் கொண்டு, அவன் முகம் எங்கும் சிறு சிறு முத்தங்களை இட்டவள், அவன் இதழ் சேர, அதன் பின் முத்தமிடுவது அவன் வேலையானது.

மூச்சு வாங்க, கணவனிடமிருந்து பிரிந்து அவன் நெஞ்சில் முகத்தை அழுந்த புதைத்துக் கொண்டவளுக்கும் சரி,

அவள் உச்சந்தலையில், முகத்தை புதைத்துக் கொண்டவனுக்கும் சரி இந்த வாழ்வு வரமாக தான் தெரிந்தது. இனியும் வரமாகவே தொடரும் என்பதில் ஐயமில்லை.

அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்கப் போவதில்லை, அவளும் வீம்பு பிடிக்காமல் இருக்கப் போவதில்லை. அவளின் வீம்பிற்கு, அவன் தலையாட்டவும் போவதில்லை.

ஆண்டுகள் கடந்தாலும்,

“ராகவா!” என்றழைப்பதை அவள் தொடரத்தான் போகிறாள். அந்த அழைப்பில் இவன் மயங்கி, போதையேறி, அவளையும் மயங்க வைக்கத்தான் போகிறான்.

மாணிக்கம் என்ற மனிதரின் பாசம், காலம் முழுக்க பிரணிதாவிற்கு தொடரத்தான் போகிறது. மாமன், மருமகன் சண்டையும்
வரத்தான் செய்யும்.

ஆகாஷிடம் வம்பு வளர்க்காமல் ராகவன் இருக்கப் போவதில்லை.

பிரணிதாவை சுற்றிய அனைத்து ஆண் தேவதைகளுக்கும் நடுவில், அவள் சிக்கி திணறத்தாள் போகிறாள் அவர்களது அன்பினில்.

இவையனைத்தும் அவர்கள் வாழ்வில், நீடிக்க இறைவனிடம் வேண்டிக் கொண்டு அவர்களிடம் இருந்து விடை பெறுவோம்.

முற்றும்…….!
 
Last edited:
Top Bottom