• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழல் யாசிக்கும் புயலே - 25 ( இறுதி அத்தியாயம் )

Vishakini

Moderator
Staff member
புயல் 25


மௌலி இல்லத்தின் கூடத்தை மட்டும், வீட்டு வேலை செய்பவர்களுடன் சேர்ந்து அனு, வினையா, ருத்திக் மூவரும் அலங்காரம் செய்தனர்; பிரணவி, வித்யூ இருவர் மட்டும் அதில் கலந்துகொள்ளவில்லை.

அன்று மௌலியிடம், "பிருத்வி மறக்க நினைக்கிற பக்கங்கள்னு சொல்றீங்களே? அப்படி என்னதான் நடந்துச்சு மாமா?" எனக் கேட்டாள் ஆர்யா. அவரும் 'சொல்லலாமா வேண்டாமா?' என்று தயங்கிய நேரத்தில் தான், லண்டனிலிருந்து ருத்திக் நாடு திரும்பி வீட்டிற்குள் நுழைந்தான்.

"பெரியப்பா" என அழைத்துக் கொண்டே ஓடிவந்து அவரைக் கட்டி அணைத்தான். அவரும் அவனை ஆரத்தழுவிக் கொண்டார்.

அவன் வந்ததும் அனைவரும் அங்கே கூட, ராஜேஸ்வரியும் அவனை அணைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டார். செல்வராணி கண்ணீருடன் மகனை அணைத்து விடுத்தார். அவனது வருகை அனைவருக்கும் மகிழ்ச்சியையே தந்தது.
ஆர்யாவைக் கண்டதுமே அவள் அருகே வந்து, "ஹாய் அண்ணி! நான் ருத்திக்" என்று தன்னை அறிமுகம் செய்தான். "ஹாய் ருத்திக், நான் ஆர்யாங்க! எப்படி இருக்கீங்க நீங்க?"
"நான் நல்லா இருக்கேன் அண்ணி" என்று அடுத்துப் பேச வந்தவனை, "ருத்திக்..." என்று செல்வராணி தன் கோபத்தை மறைத்தபடி அழைக்க, "அப்புறம் பேசலாம் அண்ணி" என்று அங்கிருந்து சென்றான். அவன் வருகையால் மௌலி சொல்ல வந்ததைக் கேட்க மறந்தவள், பிருத்வியின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

அவன் இந்தியா வரும் நாள் அவனது பிறந்தநாள் என்பதால், அவனுக்காகத்தான் இந்த அலங்காரம். செல்வராணிக்கும் பிரணவிக்கும் அங்கு 'என்ன நடக்கிறது?' என்று புரியவில்லை; எதற்கு இந்த அலங்காரம் என்றும் தெரியவில்லை. கேட்டாலும் யாரும் சொல்லவில்லை. அதனால் அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.

பிருத்வி வரும் நேரத்தில் சிறியவர்கள் அனைவரும் தயாராக இருந்தனர். உள்ளே அவன் நுழைந்த நொடியில் பாப்பர்ஸ் வெடிக்க, "ஹாப்பி பர்த்டே அண்ணா!" என்று சத்தமாகக் கத்தினர். அவர்களுடன் ஆதித்யாவும் வாசுகியும் இணைந்திருந்தனர்.

இதை எதிர்பாராத செல்வராணியும் பிரணவியும் அதிர்ந்து போனார்கள். சிறுவர்களுடன் பெரியவர்களும் இணைந்து நின்றனர்.

"பிருத்வி" என அவனருகே வந்தாள் ஆர்யா. அவனோ இந்த அதிர்ச்சியில் சிலையாக நின்றான்.

அவன் கையைப் பற்றி, "போங்க, போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க" என்றாள்.
அறைக்குள் சென்று குளித்து, அவள் எடுத்துக் கொடுத்த உடையைப் போட்டுக்கொண்டு கீழே வந்தான். அவன் முன்னே கேக் வைக்கப்பட்டிருந்தது.

கத்தியைக் கொடுத்து வெட்டச் சொன்னார்கள். அவனது கண்கள் கலங்கியிருந்தன. கடைசியாக அவன் எப்போது குடும்பத்துடன் இணைந்து சந்தோஷமாக இருந்தான் என்று அவனுக்கே தெரியாது.

அவன் கண்கள் கலங்கி நிற்பதைக் கண்டு ராஜேஸ்வரி, அமிர்தா, மேகன், பார்வதி என அனைவரும் கலங்கிப் போனார்கள். மௌலியோ, 'மருமகள் வந்த நேரம் அனைத்தும் மாறிவிட்டது' என்று எண்ணினார்.

கத்தியை வைத்துக் கேக்கை வெட்டியவன், முதலில் மௌலிக்கு ஊட்டினான். பிறகு யாருக்கு என்று ஆர்யாவைப் பார்க்க, ராஜேஸ்வரியைக் காண்பித்தாள் ஆர்யா. தயக்கத்தோடு அவர் அருகே சென்றான் பிருத்வி. அவருக்கோ அவனைப் பார்க்கத் துணிவில்லை... கேக்கை அவன் வாயருகே கொண்டு செல்ல, அவரோ அதை பாதியாகப் பிய்த்து அவனுக்கு ஊட்டிவிட்டார். அவன், தனக்கு ஊட்டியதை வாங்கிக்கொண்ட தாயையே வெறித்தான். கண்களை மூடித் தன்னைச் சமன் செய்துகொண்டான்.

பின் அமிர்தா, மேகன், பார்வதி, கடைசியாக செல்வராணிக்குக் கொடுக்க, அவர் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டார். பின் மனைவிக்கு ஊட்டிவிட்டு, அடுத்துச் சிறியவர்களுக்கும் ஊட்டினான். பிரணவி அருகே செல்ல, அவள் கோபமாக முகத்தைத் திருப்பிக்கொள்ள, இவனும் நகர்ந்துவிட்டான்.

நண்பனைக் கட்டி அணைத்துக்கொண்டான் ஆதித்யா! அவனுக்கும் கண்கள் கலங்கின.

"இந்த அழகான தருணத்துல உன் பாட்டு இருக்கணும், பாடுமா" என்றார் மௌலி!
அவளும் பாட ஆரம்பித்தாள்:

"என்ன தவம் செய்தனை யசோதா! என்ன தவம் செய்தனை யசோதா!
எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க, என்ன தவம் செய்தனை..."
என்று பாட, அவ்வளவுதான், ராஜேஸ்வரியின் அடிவயிறு சிலிர்த்தது. அதில் வரும் ஒவ்வொரு வரிகளையும் பிருத்வியையும் ராஜேஸ்வரியையும் பார்த்து அவள் பாட, அவருக்கும் தன் முதல் குழந்தையைக் கையில் ஏந்திய தருணமும், அதனுடன் விளையாடி, சோறு ஊட்டி, சேட்டைகளைக் கண்டித்துக் கொஞ்சிய நாட்களும் நினைவுக்கு வந்து போயின. அழுதுகொண்டே அவர் அவ்விடத்தை விட்டுச் செல்ல, அனைவரும் ஒரு கணம் அமைதியாகிவிட்டனர்.

ஆர்யா பயம்கொள்ள, "உன் பாட்டால அவளுக்குப் பழைய ஞாபகம் வந்திருக்கும், வேற ஒன்னுமில்லை" என்ற மௌலி, மகனை ஆதரவாகப் பார்க்க, "அப்பா!" என்றான் பிருத்வி. "உன் பழைய அம்மா உனக்காகத் திரும்பி வருவா" என்றார் மௌலி.

பிரணவியால் இதைக் கேட்க முடியவில்லை. அவனை குடும்பத்தை விட்டு மொத்தமாக விலக்கி வைக்க நினைக்க, வந்தவளோ சேர்க்க நினைக்கிறாளே என்ற ஆதங்கம்! இதுநாள் வரை தாயையும் மகனையும் பிரிக்கும் எண்ணத்தில் குறியாக இருந்தவள், வித்யூவின் மேல் கொண்ட காதல் மயக்கத்தில் இதைக் கவனிக்கத் தவறினாள். ஆர்யாவின் வருகையும் செயலும் இருவரையும் மீண்டும் அவர்கள் இருவரும் நெருக்கமாவதாக உணர்ந்தாள்.

இப்போது தெளிந்த பிரணவி, மீண்டும் திட்டம் போட ஆரம்பித்தாள். ராஜேஸ்வரி, ஆர்யா இருவரையும் பிருத்வியிடமிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப் பெரிய திட்டமாக இருக்கப்போகிறது அது.

அறையிலிருந்து கண்ணீர் வடித்தபடி அமர்ந்திருந்தார் ராஜேஸ்வரி. மௌலி உள்ளே நுழைந்து அவர் அருகே அமர்ந்தார்.

"நா... நா... தப்பு பண்ணிட்டேனாங்க?! என்... என் மகனை இழந்துட்டேனா? அவனைத் தப்பா நினைச்சிட்டேனா?"

"ஆமா ராஜி! உண்மை சொல்லணும்னா நீ அவனைத் தப்பா நினைச்சிட்ட. உன் மேல அவன் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பானா? பெத்த அம்மா மேல புகார் கொடுக்கிற அளவுக்கா உன் மேல அவன் பாசம் வச்சிருந்தான்? உனக்காக உயிரையே கொடுக்கிற அளவுக்கு அன்பு வச்சிருந்தான். அப்பான்னு என்னைத் தேடுறதை விட, அம்மான்னு உன்னைத் தேடினதுதான் அதிகம். குறையோடு பிறந்த குழந்தையும் தாய்க்குப் பிள்ளைதானே, அதைச் சதைப்பிண்டமாக நினைப்பாளா?" எனக் கேட்டார். அது அவர் நெஞ்சில் ஈட்டி இறக்கியது போல இருந்தது.

"உன் ஈகோவிலிருந்து இறங்கி வந்து பிருத்வி, ஆர்யாவிடம் அன்பான அம்மாவா, மாமியாரா நடந்துக்கோ ராஜி! அவங்க ரெண்டு பேரும் உன்கிட்ட எதிர்பார்க்கிறது அது மட்டும்தான்" என்று கூறிவிட்டுச் சென்றுவிட, கண்களை மூடித் தன்னைத் தேற்றத் தொடங்கினார் ராஜேஸ்வரி.

இங்கோ அறைக்குள் அங்குமிங்கும் நடந்தான் பிருத்வி. அவனால் இந்தச் சந்தோஷத்தை ஜீரணிக்க முடியவில்லை... அதே நேரம் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவனைச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆர்யா!

"ஆர்யா! நான் கனவு எதுவும் காணலையே?" என்றான். "இல்லை" என்றாள் பத்தாவது முறையாக.

"அப்போ இது உண்மையா? அம்மா நான் ஊட்டினதைச் சாப்பிட்டாங்களே, அது நிஜம்தானா? எல்லாரும் எனக்கு வாழ்த்துச் சொன்னது நிஜம்தானா?"

"பிருத்வி, இங்க வந்து உட்காருங்க" என்று இருக்கையைக் காட்ட, அவனோ அவள் காலுக்கடியில் அமர்ந்தான்.

அவன் முகத்தைக் கைகளில் ஏந்தி, நெற்றியில் இதழ் பதித்தாள் ஆர்யா. ஆச்சரியமாகப் பார்த்தான் பிருத்வி.

"இப்ப நம்புங்க, இது கனவு இல்லை நிஜம்தான்... இனி உங்க குடும்பத்துல யாரும் உங்களை அவமானமா பார்க்கவே மாட்டாங்க! முக்கியமா அத்தை உங்ககூடப் பழையபடி பேசத்தான் போறாங்க! எல்லாரும் ஒண்ணா இருக்கப்போறோம்" என்று நெற்றி முட்டினாள்.

இருவரின் முகமும் அருகே அருகே இருக்க, அவளது உதடுகளைப் பார்த்தவன், மெல்ல முத்தமிட நெருங்கினான். அவளுக்குள் அதிர்ச்சி என்றாலும் தடுக்கவில்லை, கண்களை மூடிக்கொண்டாள்... இன்ச் இடைவெளியில் இதழ்கள் நெருங்கியிருந்த வேளையில், என்ன நினைத்தானோ சட்டென்று விலகி, வேகமாக பால்கனிக்குச் சென்றுவிட்டான். இன்னும் முத்தமிடாமலிருக்க கண்களைத் திறந்தாள் ஆர்யா. அவனோ அங்கில்லை. தேடியவளுக்கு அவன் பால்கனியில் இருப்பது தெரியவர, வேகமாகச் சென்று அவனது தோளைத் தொட்டாள்.

"என்னாச்சு பிருத்வி?" என்றாள். "ஒன்னுமில்ல ஆர்யா!"

"பிருத்வி, நான்..." என ஆரம்பிக்க, "ஆர்யா! ஃபேக்டரில எல்லா வொர்க்கர்ஸுக்கும் ஸ்வீட் கொடுக்கணும்னு ஆதி சொன்னான். நான் போயிட்டு வர்றேன், நீ பத்திரமா இரு" என்று விலகி நடக்க, "நானும் வர்றேன்" என்பவளை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு அவன் செல்ல, இவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. அவன் பழையபடி அவளைப் பார்த்துக்கொண்டாலும், ஒரு சிறு விலகல் அவனிடத்தில் இருப்பதை உணர்ந்தவள் துடித்துப் போனாள். காரணம் புரியாமல் தவித்தாள்; அவனிடம் வெளிப்படையாகக் கேட்கவும் முடியவில்லை.

ஒன்பதாம் தொடங்கியது என்பதால் அமிர்தா பிருத்வியிடம் ஆர்யாவிற்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்பதை ஞாபகப்படுத்த, அவன் தந்தையிடம் பேசி வீட்டிலேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

செல்வராணி பிரணவியிடம் வந்து, "நாம போட்ட திட்டமெல்லாம் ஒன்னுமில்லாம போகப்போகுது பிரணவி! அந்த பிருத்வி குடும்பத்தோட முழுசா சேரப்போறான். அதுக்கு இந்த வளைகாப்பை அவன் பயன்படுத்திக்கப்போறான் பிரணவி" என்றார்.

"இல்லை சித்தி! இந்த வளைகாப்பைப் பயன்படுத்திக்கப்போறது அவன் இல்லை, நாமதான்!"

"என்ன சொல்ற?"

"எப்படியும் அம்மா தான் இதை முன்னின்று நடத்துவாங்க! அவளுக்கு ஊட்டப்போற சாப்பாட்டுல மட்டும் இந்த விஷத்தைக் கலந்தா போதும்! அதைச் சாப்பிட்டு ஆர்யா இறந்து போவா! அம்மா ஜெயிலுக்குப் போவாங்க, பிருத்வி வீட்டை விட்டே போவான். இனி இது நம்ம ராஜ்ஜியம்தான்" என்று வில்லத்தனமாகச் சிரிக்க, அவளோடு சேர்ந்து கொண்டார் செல்வராணி.

வளைகாப்பு நாளும் வந்தது. அழகிய தங்க நிறப் பட்டுப்புடவை அணிந்து, மிதமான ஒப்பனையோடு அழகாகத் தயாராகி நின்றவளைக் கண் கொட்டாமல் பார்த்து நின்றான் பிருத்வி.

"எப்படி இருக்கேன் பிருத்வி?"

"எப்பவும் நீ எனக்குத் தேவதைதான்..." என்று நெற்றி முட்டி இதழ் பதிக்க நெருங்கியவன், பின் விலகி, "வா" என்று நடக்க, அவன் உதடுகள் தீண்டாததால் ஏமாற்றம் கொண்டவள் அவனுடன் செல்லாமல் அங்கே நின்றாள். திரும்பி அவளை என்னவென்று பார்த்தான்.

"ஏன் என்னை விட்டு விலகிப் போறீங்க பிருத்வி?! நா... நான் என்ன பண்ணினேன்? உங்க விலகல் என்னை பாதிக்குது பிருத்வி" என்றாள்.

"ஏய் ஆர்யா! அப்படிலாம் இல்லை. நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்" என்று பொய்யுரைக்க, அவனது பதிலிலுள்ள தடுமாற்றம் அவளுக்கு நன்றாகவே தெரிந்தது.

"அப்படியா? இப்போ பாருங்க" என்றவள், "உங்க அப்பா பொய் சொல்றார்லப்பா" என்று தன் வயிற்றுப் பிள்ளையிடம் பேச, 'ஆமாம்' என்பது போலக் குழந்தை உதைக்க, அவனோ அவளைக் காணத் தடுமாறினான்.

"ஆர்யா அது..." எனும்போதே, "வாவ் அண்ணி! அழகா இருக்கீங்க!" என்று அங்கு வந்த அனு, "உங்களைக் கீழே கூப்பிட்டாங்க, வாங்க" என்றழைத்தாள். "இதோ வர்றோம்" என்று அதைச் சாக்காக வைத்து, அவளை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினான் பிருத்வி.

அவளை மணவறையில் அமர்த்தி மாலையிட்டதோடு, அவளது பக்கத்தில் பிருத்வியையும் அமரச் சொன்னார்கள். பூரிப்புடன் அமர்ந்திருந்தவள் காதலோடு கணவனைக் கண்டாள். அவனால்தானே இந்தக் குடும்பமும் இந்தச் சந்தோஷமும்! காதலித்தவன் கைவிட்ட நிலையில், ஆண் தேவதையாக வந்து அவள் எதிர்பார்த்த குடும்பத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தவன் அல்லவா! அவனைக் கண்டு கண் சிமிட்டிச் சிரித்தாள்.

வழக்கம்போல ஊரே கூடவில்லை என்றாலும், வீட்டில் உள்ளவர்களோடு, நெருங்கிய நட்பான ஆதித்யா குடும்பத்தை மட்டுமே அழைத்து மிக எளிமையாகத்தான் செய்தார்கள்.
வீட்டுப் பெண்கள் சடங்குகளை ஆரம்பித்தனர். ராஜேஸ்வரிதான் முதலில் செய்ய வேண்டும் என்று மௌலி சொல்ல, தயக்கமில்லாமல் முன்னே வந்து மகன், மருமகளுக்குச் சடங்கு செய்தார். தொடர்ந்து பெண்கள் செய்ய, கடைசியாகப் பிருத்வி செய்ய, ஆசையாய் மனதில் நிறைந்த காதலோடு அவனைக் கண்டாள் ஆர்யா. அவனோ சற்று தடுமாற்றத்துடன்தான் செய்தான். தூரமாக நின்ற வித்யூ வலியுடன் இதைப் பார்த்தான். இப்போதுதான் அவனுக்குப் புரிந்தது, தான் ஒரு பொக்கிஷத்தை இழந்திருக்கிறோம் என்று.

அங்கிருக்க முடியாமல் வெளியே பின்பக்கமாக வந்தவனுக்குச் சமையலறையில் பேச்சுச் சத்தம் கேட்டது. லேசாக எட்டிப் பார்த்தவன் அதிர்ந்து போனான். பிரணவிதான் ஆர்யாவிற்குத் கொடுக்க வேண்டிய கலவை சாதத்தில் எதையோ கலந்தாள். பின் அந்த மருந்துப் பாட்டிலை வெளியே தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து சென்றாள். அது என்னவென்று, எறியப்பட்ட பாட்டிலை எடுத்து வித்யூ தன் அலைபேசியில் ஆய்வு செய்தான். அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது, அது விஷம்! மீண்டும் சமையலறைப் பக்கம் பார்க்க, அமிர்தா அந்த உணவை எடுத்துச் செல்ல, வேகமாக உள்ளே வந்தான். அமிர்தாவின் கையிலிருந்து தட்டு ராஜேஸ்வரியிடம் மாறி, அவர் ஒரு வாய் ஊட்டச் செல்ல, அதைத் தட்டிவிட்டான் வித்யூ!
 

Vishakini

Moderator
Staff member
"வித்யூ!" என ராஜேஸ்வரி கோபத்தில் கத்த, அனைவரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.

"அத்தை, அதுல விஷம் கலந்திருக்கு!"

"விஷமா?!" என அனைவரும் அதிர, அவனது சட்டையைப் பற்றிய பிருத்வி,

"என்னடா சொல்ற?" எனப் பதறினான்.

"உண்மைதான்டா! பிரணவிதான் விஷம் கலந்து இந்தப் பாட்டிலைத் தூக்கிப் போட்டா, நான் என் கண்ணால பார்த்தேன்" என்று பாட்டிலைக் காட்ட, அதை வாங்கிப் பார்த்த அமிர்தா இது விஷம்தான் என்று உறுதி செய்தார்.

மாட்டிக்கொண்டதை நினைத்துக் கைகளை பிசைந்து நின்ற பிரணவி அருகே வந்த பிருத்வி, அவளை ஓங்கி அறைந்தான். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

"ஏய்" என அவள் சீற, வாயில் விரல் வைத்தவன் "ஸ்ஸ்..." என்றபடி மீண்டும் அறைந்தான். கன்னத்தைப் பொத்திக்கொண்டு நின்றாள் பிரணவி.

"இதுவரைக்கும் நீ செஞ்சதுக்கெல்லாம் தங்கச்சினு நான் விட்டுக்கொடுத்துப் போயிருக்கேன். நீதான் இதையெல்லாம் செஞ்சேன்னு தெரிஞ்சும் அமைதியாக இருந்து, இந்துக் குடும்பத்தை விட்டுத் தள்ளியே இருந்தேன். அதுவும் உனக்காகத்தான். ஆனா, இப்ப நீ செஞ்சதுக்கு நான் அமைதியா இருந்தா நான் மனுஷனே இல்லை! உனக்கு என்ன தான்பிரச்சனை? என்னையும் என் அம்மாவையும் பிரிச்ச! என்கிட்ட இருந்து இந்துக் குடும்பத்தைப் பிரிச்ச! இப்போ என் பொண்டாட்டியை என்கிட்ட இருந்து பிரிக்கணும்னு நினைக்கிற! நான் அனாதையா இருக்கணும்ன்றதுதான் உன் ஆசையா?"

"ஆமா!" என வீடே அதிரக் கத்தினாள் பிரணவி.

"எனக்கு நீ அனாதையா இருக்கணும்னுதான் ஆசை! எல்லாரும் உன்னைத் தூக்கி வச்சிக் கொண்டாடுறதைப் பார்க்க எனக்குச் சகிக்கலை! பெரிய வீட்டுக்கு மூத்த பிள்ளையா உன்னை இளவரசியா பார்த்தாங்க, கொண்டாடினாங்க. நீ சொல்றதுதான் வேதம், சட்டம் எல்லாமே நடந்துச்சு. எனக்கு அது பிடிக்கலை! வித்யூ கூடக் காதல் மயக்கத்துல உன் பின்னாடிதான் சுத்தினான். அம்மாவிலிருந்து எல்லாரும் உன்னை மகாலட்சுமியா கொண்டாடினாங்க! எனக்கு அது சுத்தமா பிடிக்கலை! உன்னை வெறுத்தேன், உன்னை எல்லாரோடையும் பிரிக்கணும்னு நினைச்சேன். அப்போ கிடைச்ச சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணிக்கிட்டேன்!

உனக்குள்ள ஏற்பட்ட மாற்றம்... நீ பிறப்பால் பெண்ணாக இருந்தாலும் உணர்வால் ஆணாக உன்னை உணர்ந்த அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிட்டேன். நீ முழுசா ஆணா மாறப்போறேன்னு அம்மாகிட்ட சொல்ல, அவங்க மறுத்தாங்க. நீயும் அவங்களும் வாக்குவாதம் செய்யும்போது, 'போலீஸுக்குப் போவேன்'னு நீ சொன்னதை வச்சு, போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இந்தக் குடும்பத்தை அரெஸ்ட் பண்ண வச்சதும் நான் தான்!

நான் ஆசைப்பட்டது போலவே இந்தக் குடும்பம் உன்னை வெறுத்துச்சு! நான் நினைச்சது போல நடந்துச்சு. அம்மாவிலிருந்து உன்னை எல்லாரும் வெறுத்தாங்க... நான் இந்த வீட்டு இளவரசியானேன், எல்லாரோட பாசமும் எனக்கு மட்டுமே கிடைச்சது. வித்யூ எனக்கே கிடைக்க ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.

ஆனா இவ... இவ வந்தா! எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா மாத்தி, உன்னை இந்தக் குடும்பத்தோட சேர்க்க ஆரம்பிச்சா! இதோ, உன்னையும் அவளையும் ஏத்துக்கிட்டுக் குடும்பம் இவளுக்கு வளைகாப்பு போடுற அளவுக்கு ஒண்ணு சேரக் காரணம் இவதான்... அதான் இவளைக் கொன்னுட்டு, அந்தப் பழியை அம்மா மேல போட்டு, உங்க ரெண்டு பேரையும் நிரந்தரமா பிரிக்கத் திட்டம் போட்டேன்..." என்று சொல்லி முடிக்க, அவளை அறைய ஆரம்பித்தார் ராஜேஸ்வரி.

"ச்சீ... நீயெல்லாம் ஒரு பொண்ணா?! உன்னையும் பிருத்வியையும் ஒண்ணாத்தான்டி பார்த்தோம். உனக்கு ஏன்டி இப்படி ஒரு வஞ்சக எண்ணம்? உனக்கு முன்னாடி ஆறு வருஷத்துக்கு முன்னாடி பிறந்த மூத்த பிள்ளைன்றதால அவன் மேல கொஞ்சம் பாசம் வச்சோம். ஒரே வாரிசாக இருந்த காரணத்துக்காக எல்லாரும் செல்லமாக வளர்த்தாங்க. அப்புறம் நீ பிறந்தாய், உன்னை அவ தங்கச்சியாவா பார்த்தான்? பெத்த மகளாட்டம் பார்த்தான், விட்டுக்கொடுத்தான்! எல்லாம் உனக்காக, உனக்குப்பிடிச்சது போலத்தான் நடத்தினான்! ஏன்டி அவனைக் பிடிக்கலை உனக்கு? ஐயோ, உன் வஞ்சகத்தால என் பிள்ளையை இத்தனை நாளா பிரிச்சு ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேனே! இப்பவும் ஒரேடியா பிரிக்க நினைக்கிறியே பாவி!" என மகளைப் போட்டு அடித்தார்.

மௌலி அவள் அருகே வந்து, "இந்த அளவுக்கு உன் மனசுல வன்மத்தை விதைச்சது யாரு? நிச்சயம் நாங்க இல்லை. இந்த வீட்டுப் புள்ளைங்க எல்லாரையும் ஒண்ணாதான் பார்த்தோம், பார்க்கிறோம்... ஒரு கொலை பண்ற அளவுக்கு உன்னைத் தூண்டினது யாரு?" என்று கேட்டார்.

"பெரியப்பா, வேற யாரும் இல்லை, இதோ நிக்கிறாங்களே இவங்கதான்" என்று ருத்திக், செல்வராணியைக் காட்டிக் சொல்ல, அவரோ கைகளைக் பிசைந்து கொண்டு நின்றார். அனைவரும் அதிர்ந்தனர். ரவி அவரை கேவலமாகப் பார்த்தார்.

"என் மனசுலயும் அம்மா, பிருத்வி அண்ணாவைத் தவறாதான் நினைக்க வச்சாங்க! நான் பிரணவிகூடச் சேர்ந்து அண்ணாவை ரொம்பக் கிண்டல் பண்ணியிருக்கேன். 'உன்னை அண்ணான்னு கூப்பிடணுமா இல்ல அக்கான்னு கூப்பிடணுமா?'ன்னு கேட்டிருக்கேன். ஆனா, நான் லண்டன்ல இருந்தப்போ, யாரோ பண்ண தப்புக்கு என்னை மாட்டிவிட்டுட்டுப் போயிட்டான் ஒருத்தன். என்னைக் காப்பாத்த யாருமில்லாம தனியா தவிச்சப்போ, அண்ணன்தான் லண்டன் வந்து என்னைக் காப்பாத்தினார். அப்போ உணர்ந்தேன், அக்கா, அண்ணனாக மாறினாலும் அந்தப் பாசம் மாறலைன்னு! பிரணவி கல்யாணம் பண்ணிட்டுப் போயிடுவா, அண்ணனைத் துரத்திட்டா இந்தச் சொத்து எனக்கு வரணும்னு நினைச்சு பிரணவியோட சேர்ந்து அம்மா இப்படிப் பண்ணிட்டாங்க பெரியப்பா" என்று உண்மையைப் போட்டு உடைக்க, செல்வராணியின் கன்னம் பழுக்கும்படி அடி விழுந்தது. ரவிதான் அறைந்திருந்தார்.

"உன்னை என் தங்கச்சியாதானே பார்த்தேன்... என் குடும்பத்தையே பிரிச்சுட்டியே" என்னும்போது, "என்னை மன்னிச்சிடுங்க அக்கா" என்று கதறினார் செல்வராணி.

ராஜேஸ்வரி தன் மகனை நிமிர்ந்து பார்க்கக் கூட முடியாமல் அவன் அருகே வந்து, அவனது கன்னத்தைத் தொட்டு, "என்னை மன்னிச்சிடு கண்ணா" என்றார்.

"உங்களை மன்னிக்க நான் யாருமா?" என்றான் பிருத்வி. "கண்ணா!" என அவர் அதிர, விரக்தியில் சிரித்தவன், சற்று விலகி, "எப்பவும் யார் என்ன கேட்டாலும் கொடுத்துப் பழகிட்டேன்மா! பிரணவியும் சித்தியும் ஆசைப்பட்ட சொத்து அவங்களுக்கே கிடைக்கட்டும். நான் இனி இங்க இருக்கப்போறதும் இல்லை, எனக்கு இந்தச் சொத்துல எந்தப் பங்கும் வேண்டாம். நான் இங்கிருந்து போயிடுறேன்" என்றான்.

"பிருத்வி!" என்று மௌலியும் ராஜேஸ்வரியும் அலறினார்கள்.

"ப்ளீஸ் என்னை தடுக்காதீங்க! நான் இங்க செத்துப் போய் பல வருஷங்கள் ஆச்சு! இந்துக் குடும்பம் என்னை எப்பவோ கொன்னுடுச்சு" என்ற அவனது வார்த்தைகளில் துடித்துப் போனார் ராஜேஸ்வரி.

"போறதுக்கு முன்னாடி இன்னொரு விஷயம்..." என்றவன், தன்னை அதிர்ச்சியோடு பார்த்து நிற்கும் ஆர்யாவைக் கண்டான். நெஞ்சில் வலி உண்டானாலும் அதை விழுங்கிக்கொண்டு, "எனக்கும் ஆர்யாவுக்கும் கல்யாணம் நடக்கலை! ஆர்யா என் பொண்டாட்டி இல்லை! பிரணவி, வித்யூ கல்யாணத்தை நிறுத்த நாங்க போட்ட டிராமா இது" என்று அனைத்தையும் சொல்லி முடித்தான்.

"வித்யூ, ஆர்யாவைச் சேர்த்து வைங்க! அவங்க ரெண்டு பேரும்தான் காதலிக்கிறாங்க" என்று சொல்லி முடிக்க, மீண்டும் அனைவரும் அதிர்ந்தனர்.
பார்வதி முன்னே வந்து, "அப்போ இவ வயித்துல வளர்றது வித்யூவோட குழந்தையா? இவளை ஏமாத்திட்டுப் பிரணவியைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டானா?" எனக் கேட்க, பிருத்வி 'ஆமாம்' என்றான்.

"என்ன வித்யூ இதெல்லாம்?" எனக் கேட்க, அவன் தலைகுனிந்து நின்றான். அவனைச் சரமாரியாக அடித்தார் பார்வதி.

"நான் உன்னை அப்படியாடா வளர்த்தேன்? ஒரு பொண்ணோட பாவத்தைச் சம்பாதிச்சு வச்சிருக்கியே! என் வளர்ப்பைப் பொய்யாக்கிட்டியே! நீயெல்லாம் ஒரு மனுஷனா?" என அடித்தார்.

"அம்மா! ப்ளீஸ், நான் தப்பு பண்ணினதுதான். இந்தச் சொத்து மேல உள்ள ஆசையிலும் அப்பா, அத்தை மேல இருக்கிற பயத்துலயும் இப்படிப் பண்ணிட்டேன். நான் சொத்துக்கு ஆசைப்பட்டு ஒரு வைரத்தை இழந்துட்டேன்... அந்த வைரம் இப்போ எனக்குச் சொந்தமில்லை" என்றதும் பிருத்வி அவனை கேள்வியாகப் பார்த்தான்.

வித்யூ பிருத்வியை நோக்கி, "அவ என்னை விரும்பலை, உன்னைத்தான் விரும்புறா! பிள்ளைக்கு அப்பான்ற முறையில எனக்கு அவளைக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்... ஆனா அவ மனசுல நீ இருக்கும்போது, எனக்குக் கட்டி வச்சு என்ன பண்ணப்போறீங்க?" என்றான்.

"ஆர்யா... உன்னை..." என பிருத்வி தடுமாற, "முட்டாள்! அவ உன்னைத்தான் விரும்புறா! அவ ஆசைப்பட்ட அன்பு, பாசம், அரவணைப்பு எல்லாம் கொடுத்துட்டு, அவ மனசைக் கலைச்சிட்டு, இப்போ எனக்குக் கட்டிக்கச் சொல்றியே, அறிவு இல்லையா உனக்கு?" எனப் பல்லைக் கடித்தான் வித்யூ.

ஏதோ நினைத்தவனாக அவன் ஆர்யாவைத் பார்க்க, அவளோ அவனைக் கோபமாகப் பார்த்தாள். வேகமாக மாடியேற எத்தனிக்கும்போதே அவளுக்கு வயிற்றில் சுளிரென வலி வர, "அம்மா!" என அலறி வயிற்றைப் பிடித்தாள். வேகமாக வந்த பிருத்வி அவளைத் தூக்கிக்கொண்டு ஓடினான்.

ராஜேஸ்வரியும் மௌலியும் பின்னே செல்ல, அந்த உரிமையில் கூடக் கலந்துகொள்ள முடியாமல் தவித்து நின்றான் வித்யூ!

"ஒரு நல்ல பொண்ணை இழந்துட்டு நிக்கிறியேடா" எனப் பார்வதி இயலாமையோடு சொல்ல, மேகன் கோபமாக நின்றிருந்தார். வித்யூவோ பிரணவியைப் பார்க்க, அவன் அருகே வந்தவள், "அப்போ நீ என்னை காதலிக்கவே இல்லையா மாமா?! உனக்குக் கூட என்னைப் பிடிக்காதுல" என விரக்தியாகக் கேட்டாள்.

"என்னை மன்னிச்சிடு பிரணவி! உன் உண்மையான அன்பைப் புரிஞ்சுக்காததால்தான் எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை. ப்ளீஸ், என்னை மறந்து ஒரு நல்ல பையனா பார்த்துப் கல்யாணம் பண்ணிக்கோ" என்றவன் அங்கிருந்து சென்றான்.

வலியில் துடித்துக் கொண்டிருந்த நிலையிலும் பிருத்வியின் மடியில் கிடந்தவள், "என்னை நீங்க தப்பா நினைக்கிறீங்கதானே! பணத்துக்காகத்தான் இவ என்னைக் காதலிக்கிறான்னு நினைக்கிறீங்களா பிருத்வி? நிஜமா என்னோட காதல் உங்களுக்குப் புரியவே இல்லையா? உங்க கைப்பிடிச்சு நடக்குறேன், உங்க தோள்ல சாய்ஞ்சுக்குறேன், வயித்துல இருக்கிற குழந்தையை உணர, கொஞ்ச அனுமதி கொடுத்திருக்கேன்... அப்பவும் என் காதல் உங்களுக்குப் புரியலையா?" என்றாள் ஆர்யா.

"எல்லாம் உண்மை தெரிஞ்சும் என்னை நேசிப்பியாடி?"

"ஏன் என்கிட்ட இந்த விஷயத்தை முன்னாடியே சொல்லலை?"

"முதல்ல எதுக்குச் சொல்லணும்னு நினைச்சேன்... அப்புறம் சொன்னா நீயும் என்னை விட்டுப் போயிடுவியோன்ற பயத்துல சொல்லாம விட்டுட்டேன்... ஐ ஆம் சாரி ஆர்யா."

"ஆ... அம்மா..." என வலியில் அலறினாள். "ஆர்யா, கொஞ்சம் பொறுத்துக்கடி, இதோ ஹாஸ்பிட்டல் வந்தாச்சு!"

"நீங்க... நீங்க எப்படி இருந்தாலும், ஐ... லவ்... யூ பிருத்வி" என்றாள். அவனது கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டியது... அவளது நெற்றியில் முத்தம் வைத்தான். மருத்துவமனை வந்ததும் வேகமாக உள்ளே அழைத்துச் சென்று மருத்துவர்கள் அவளுக்குப் பிரசவம் பார்க்க, வெளியே கண்ணீரோடு நின்றிருந்தான் பிருத்வி. அங்கே அவனது குடும்பமே வந்தது.

ஓரமாக அமர்ந்த பிருத்விக்குக் கடந்த காலம்தான் நினைவிற்கு வந்தது.
பிறக்கும்போதே மௌலி வீட்டின் இளவரசியாகப் பிறந்தவள் பிருத்விகா! அவளுக்கு அடுத்து ஒரு மாதம் கழித்துப் பிறந்தான் வித்யூ. இருவரும் கை பிடித்து நடப்பதில் தொடங்கி, கல்லூரி நாட்கள் வரையிலும் ஒன்றாகத்தான் வளர்ந்தனர். வித்யூவிற்கு அவள் மீது காதல் பத்தாம் வகுப்பிலேயே வந்துவிட்டது. ஆனால் அவளோ, சிறு வயதிலிருந்தே தன்னை ஆணாகக் காட்டிக்கொள்ளத்தான் முனைந்தாள். ஆண்கள் அணியும் உடையைத் தான் அணிந்தாள்; பெண்கள் உடை அவளுக்குப் பிடிக்கவில்லை. பெரியவர்களும் ஒன்றும் சொல்லவில்லை. முடியைக் கூட அவ்வாறு வெட்டிக்கொள்ள ராஜேஸ்வரி கண்டித்ததாலும், மௌலி சமாதானம் செய்வார். பின் வளர்க்க வேண்டும் என்ற கட்டாயத்தில் பிடிக்காமல் முடியை நீளமாக வளர்த்தாள். அவளைப் 'பிருத்வி' என்றுதான் அழைக்கச் சொல்வாள், 'விகா' என்று சேர்த்து அழைத்தால் பிடிக்காது. அடாவடியாக ஆண்களுக்குப் பிடிக்கும் பொருட்களை வாங்கிக்குவிப்பாள். ஆதித்யா, வித்யூ இருவரும் அவளுக்கு ஆண் நண்பர்களாக இருக்க, அதனால்தான் அவ்வாறு நடந்துகொள்கிறாள் என்று அனைவரும் எண்ணினார்கள்.

பின் வயதுக்கு வந்த நொடியிலும், அவளுக்குள் ஏற்பட்ட மாற்றம் தேவதையாக இருந்தாலும், அவளுக்கே அவளைப் பிடிக்கவில்லை; அசௌகரியமாக உணர்ந்தாள். கண்ணாடியில் தன்னைத் பார்க்கவே வெறுத்தாள். மார்பகங்கள் வளர, அதற்கு ஏற்றது போல உடையை வீட்டில் கட்டாயப்படுத்தி அணியச் சொல்ல, தன்னை வேறொரு ஆளாக நினைக்கத் தோன்றியது அவளுக்கு.

இதற்கிடையே வித்யூ தன் காதலைச் சொல்ல, முதலில் கோபத்தில் அடித்தவள், பின் தனக்குள் நடக்கும் மாற்றத்தைச் சொல்லி அழுதாள். அவனோ மௌலியிடம் சொல்ல, விஷயம் வேறு மாதிரி சென்றது. மனநல ஆலோசகரிடம் செல்ல, அவரோ அவள் மனதிலிருப்பதைக்கண்டுபிடித்து மௌலியிடம், "இவள் பிறப்பால் பெண் என்றாலும், ஒரு ஆணாகத் தன்னை உணர்கிறாள். இவள் ஒரு திருநம்பி "என்று அனைத்தையும் எடுத்துச் சொல்ல, அதிர்ச்சியோடு இல்லம் வந்து சேர்ந்தார் மௌலி.
 

Vishakini

Moderator
Staff member
அதன்பின் ராஜேஸ்வரியிடம் சொல்ல, அவரோ நம்பவில்லை; அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளைப் பெண்கள் உடையை அணியச் சொல்லவும், பெண்களைப் போல நடந்துகொள்ளச் சொல்லவும் வற்புறுத்தினர். ஆனால் பிருத்விகாவால் அப்படி வாழ முடியவில்லை, தற்கொலை முயற்சி வரை சென்றுவிட்டாள். இதற்கு மேல் பொறுக்க முடியாத மௌலி, தன் பிள்ளையின் மனதை அறிந்து அவளை ஆணாக மாற்ற முயல, அதற்குத் தடையாக இருந்தார் ராஜேஸ்வரி. எவ்வளவு சொல்லியும் அவர் பிடிவாதமாக இருக்க, கோபம்கொண்ட பிருத்விகா, வாய்வார்த்தையாக,

"தன்னை ஆணாக மாற்றிக்கொள்ள விடவில்லை என்றால் போலீஸுக்குப் போவேன்" என்று கோபத்தில்தான் சொன்னாள்.

ஆனால், மறுநாள் காவலர்கள் ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்து, குடும்பத்திலிருந்த அனைவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 'தன்னைத் தன் விருப்பப்படி ஆணாக மாற அனுமதி தராமல், தன்னை மனரீதியாகக் கொடுமை செய்கின்றனர்' என்று புகார் எழுதி, பிருத்வியின் கையெழுத்தைப் போலப் போலி கையெழுத்திட்டு, இன்னொருவரை வைத்து அந்தப் புகாரைக் கொடுக்கச் செய்திருந்தாள் பிரணவி. காவல் அதிகாரி பிருத்வியின் பெற்றோரையும் குடும்பத்தினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி அனுப்பியதால் வந்த ஆத்திரத்தில், ராஜேஸ்வரியும் குடும்பத்தாரும் அவனை வெறுக்க ஆரம்பித்தனர். மௌலியைத் தவிர யாரும் அவனை நம்பவில்லை.

மௌலியின் உதவியோடு வெளிநாட்டிற்குச் சென்று, மன ஆலோசகரின் உதவியுடன், மன தைரியத்தோடு பல கட்ட சிகிச்சைகள் செய்து, முழுமையாகப் பாலின மாற்று அறுவை சிகிச்சை (Gender Affirming Surgery) செய்துகொண்டு ஆணாகத் தன்னை மாற்றிக்கொண்டு வந்தான். தந்தையின் உதவியோடு பல கஷ்டங்களுக்குப் பின் மீண்டு வந்தாலும், வீட்டில் அனைவரும் அவனை ஆதரிக்கவில்லை; வெறுக்கத்தான் செய்தனர். சிறியவர்கள் கேலி கிண்டல் செய்து மகிழ்ந்தனர். சில நேரங்களில் துவண்டு போவான். மௌலி மற்றும் ஆதித்யாவின் உதவியுடன் மீண்டும் எழுந்து, புதிதாகத் தொழில் தொடங்கி, பல இன்னல்களைச் சந்தித்து அதில் வெற்றியும் கண்டான்...

அவனுக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக்கொள்ள அவன் நினைத்ததே இல்லை. ஆனால், கடவுளாக அவனுக்கென்று அனுப்பி வைத்த தேவதைதான் ஆர்யா. அதுவும் அவள் தன்னைத் காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் அவன் அவனாக இல்லை. சந்தோஷம் ஒரு பக்கம் என்றால், தன்னால் ஒரு கணவனாக முழுமையான உடல் ரீதியான திருப்தியையோ, சொந்தக் குழந்தையையோ கொடுக்க முடியாத சூழ்நிலையில், எப்படி அவளைத் தன்னோடு வைத்துக்கொள்வது என அவளுக்காக யோசித்தான்.
அவளது அலறல் சத்தம் அடங்கி, குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. பெண் குழந்தை பிறந்திருக்க, கையில் ஏந்திக்கொண்டு வெளியே வந்தார் செவிலியர்.

"பெண் குழந்தை பிறந்திருக்கு" என்று நீட்ட, கை நடுக்கத்துடன் வாங்கிக்கொண்டு அவளது நெற்றியில் முட்டினான்.

"அப்பா! நான் அப்பாவாகிட்டேன்..." என்று சிலாகித்துச் சொன்ன மகனை அணைத்துக்கொண்டார் மௌலி. கடந்த காலக் கசப்புகளை மறந்து, தன் பேத்தியை வாங்கிக்கொண்டு கொஞ்சினார் ராஜேஸ்வரி. பார்வதியும் கண்ணீருடன் பேத்தியைத் தூக்கிக் கொஞ்சினார்.

பின், பிருத்வி தன் மகளைத் தூக்கியபடியே ஆர்யாவைக் காண உள்ளே வந்தான்...

மெதுவாகக் கண்ணைத் திறந்தாள் ஆர்யா. அவளது நெற்றியில் முத்தம் வைத்தவன், "ஆர் யூ ஓகே?" எனக் கேட்டான். கண்களை மூடித்திறந்தாள். குழந்தையைப் பக்கத்தில் படுக்க வைத்தான். கன்னத்தைக் கிள்ளி குழந்தையை ரசித்தாள் ஆர்யா...

"ஆர்யா..." என அழைத்தான்.

"ம்ம்..."

"என் மேல கோபமா உனக்கு?"

"ம்ம்... கோபம்தான்" என்றாள்.

"ஏன்?"

"எப்படி நான் வித்யூவைத்தான் காதலிக்கிறேன்னு என்னைக்கேட்காம எல்லார் முன்னாடியும் சொல்லப் போச்சு? என்கிட்ட கலந்து பேசிக்காம எப்படி நீங்களா முடிவெடுத்தீங்க? யார் சொன்னா நான் அவனை காதலிக்கிறேன்னு?"

"ஆர்யா! ஐ ஆம் சாரி" என்றவன் நடந்ததைச் சொல்ல, அவள் பார்த்த பார்வையில் தலைகுனிந்தான்.

"அரைகுறையா கவனிச்சு நீங்களா ஒரு முடிவுக்கு வந்துட்டீங்க, என்கிட்ட கேட்காமலே! இல்லையா?"

"தப்புதான் ஆர்யா! உன்கிட்ட கேட்காமலே முடிவெடுத்தது தப்புதான். ஆனா..."

"ஆனா என்ன?"

"நான் ஒரு திருநம்பிடி (Transman). என்னால உனக்கு ஒரு சாதாரண ஆணைப் போல முழுமையான வாழ்க்கையைக் கொடுக்க முடியாது. என்னோட வாழ்ந்தால் உனக்குச் சலிச்சுப் போயிடும்! உனக்கு வயசிருக்கு, ஒரு நல்ல பையனா... இல்ல வித்யூ..." என்று சொல்ல வந்தவனின் வாயைக் கப்சிப் என்று மூடினான்.

"என்னைப்பார்த்தால் அப்படித் தெரியுதா? ஒரு ஆம்பளை ஒரு பொண்ணுக்கு இது மட்டும்தான் கொடுக்கணுமா? அப்போ நான் வித்யூ கேட்டதுமே அவன் சொன்ன படி அவனோடு போயிருப்பேனே, ஏன் போகலை?! எனக்குத் தேவை அன்பு, அரவணைப்பு, பாசம், உரிமை, குடும்பம்தான். அதைக்கொடுத்தது நீங்க மட்டும்தான் பிருத்வி! வித்யூவோட துரோகத்திலிருந்து என்னை மீட்டு அன்பு, அரவணைப்பு, பாசம், உரிமை கொடுத்தது நீங்கதான். காதல், கல்யாணமே வேண்டாம்னு வெறுத்த எனக்குள்ள காதலை வரவச்சது நீங்கதான். எவ்வளவு கட்டுப்படுத்த நினைச்சாலும் உங்க மீது உண்டான காதலை என்னால எனக்குள்ள வச்சுக்க முடியலை! உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னா சொல்லுங்க! ஏற்கனவே பேசி வச்சபடி நானும் என் குழந்தையும் எங்கேயாவது போய்க்கிறோம். அவளை நான் வளர்த்துக்கிறேன். உங்களுக்குத் தொந்தரவா, பாரமா..." என்று முடிக்கும் முன்னே அவளது இதழ்களைச் சிறை செய்திருந்தான் பிருத்வி. கண்களை விரித்து அதிர, அவனோ அவளது தலையைத் தூக்கி முத்தமிட்டான். அவளும் அவனது கூந்தலில் விரல்களை நுழைத்து மெல்ல அணைத்தாள். இருவரும் சேர்ந்ததைக் கண்டு அவர்களது குடும்பம் நிம்மதியுடன் விடைபெற்றது.

மறுநாள் வித்யூ மூணார் செல்ல பெட்டியுடன் வந்து நின்றான். அவனை யாருமே தடுக்கவில்லை. அவன் செய்த பாவத்திற்காக அவன் அங்கே செல்லட்டும் என்று பார்வதியும் மேகனும் விறைப்பாக நின்றனர். அவனுடன் சேர்ந்து பிரணவியும் பெட்டியுடன் வர, ராஜேஸ்வரி அதிர்ந்து அவளைத் தடுத்தார்.

"எங்க போற பிரணவி?!"

"வித்யூ மாமாகூடச் சேர்ந்து மூணார் போகப்போறேன். அவர் எங்க இருக்காரோ நானும் அங்கதான் இருப்பேன். என்னை யாரும் தடுக்காதீங்க!" என்று வீம்பு பிடித்தாள்.

"இதுவரைக்கும் நீ எங்க பேச்சைக் கேட்டதே இல்லை. நீ பண்ணினதெல்லாம் போதும். தயவுசெய்து இனியாவது என் பேச்சைக் கேள்! அவன் உனக்கு வேண்டாம். ஒரு பொண்ணை ஏமாத்தினவன் உனக்கு வேண்டாம். அம்மா உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்துப் கல்யாணம் பண்ணி வைக்கிறேன், வித்யூ உனக்கு வேண்டாம் பிரணவி" என அவளிடம் கெஞ்சினார்.

"நானும் தான் இந்தக் குடும்பத்துக்குத் துரோகம் பண்ணினேன்மா. நான் இந்த வீட்ல இருக்க எனக்குத் தகுதி இல்லை... அவரைப் போக அனுமதிக்கிற மாதிரி என்னையும் அனுமதியுங்க."

"பிரணவி..."

"யாரு என்ன சொன்னாலும் எனக்கு வித்யூதான் வேணும். அவன் எங்கிருப்பானோ அங்கதான் நானும் இருப்பேன்... அவன் என்னை ஏத்துக்கிட்டா அப்புறம் சொல்றேன், எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைங்க. இல்லையா, எத்தனை வருஷம் ஆனாலும் நான் மாமாவுக்காக, அவரோட பதிலுக்காகக் காத்துட்டு இருப்பேன் அவர் பக்கத்துலேயே" என்றாள்.
"ஆனா நவி! நான் உனக்குச் சரியானவன் இல்லைம்மா. உனக்கு நான் துரோகம் பண்ணியிருக்கேன், உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு எனக்குத் தகுதி இல்லை நவி!" என்றான் வித்யூ.

"அப்படிப் பார்த்தா நானும் தான் இந்தக் குடும்பத்துக்கு நிறைய துரோகம் பண்ணியிருக்கேன். என்னை ஒரு நாள் மன்னிச்சு ஏத்துப்பாங்கன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு... அதே போல உன்னையும் நான் மன்னிச்சு ஏத்துப்பேன் வித்யூ. உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நான் வற்புறுத்தலை. இப்போ எனக்கும் நீ செஞ்சதை ஏத்துக்கக் கஷ்டமாதான் இருக்கு. உனக்கும் எனக்கும் டைம் வேணும். அதுவரைக்கும் ஒண்ணா இருக்கலாம், ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கலாம். எப்போ கல்யாணம் பண்ணத் தோணுதோ அப்போ பண்ணிக்கலாம். ஆனா, நான் உன்னோடதான் வருவேன். இங்க இருக்க என்னால முடியலை, ப்ளீஸ் அழைச்சிட்டுப் போ!" என்று குற்றவுணர்வுடனும் கண்களில் நீருடனும் அவள் கேட்க, அவளது நிலமையைப் புரிந்துகொண்ட வித்யூ அவளை அழைத்துக் கொண்டு போய்விட்டான். ராஜேஸ்வரி மகளின் முடிவில் நொந்து போனார்.

"எவ்வளவு சொத்து இருந்தும் நம்ம ரெண்டு பசங்க வாழ்க்கையும் சரியில்லையேங்க! எங்கங்க தடுமாறி போனோம் நாம?! ஏன் ரெண்டு பேரோட வாழ்க்கை இப்படியாச்சு?" எனக் கண்ணீர் விட்டார்.

"ராஜி! விதி, பணம் காசு பார்க்குமா? என்ன நடக்கணும்னு இருக்கோ அதுதான் நடக்கும். நம்ம பசங்க வாழ்க்கை இப்ப சரியில்லைனாலும், அவங்களாவே சரியாக்கிடுவாங்க! அவங்களால முடியும் ராஜி! பிருத்வி வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமா சரியானது போல, பிரணவி வாழ்க்கையும் சரியாகிடும்... நிச்சயமா அவ ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கும்... நீ கவலைப்படாதே! அவங்களுக்கு நாம துணையாக இருந்தாலே போதும்மா" என்று கூறி அவளைத் தேற்ற, ராஜேஸ்வரி அவரது தோளில் சாய்ந்து கொண்டார்.

ஒரு வருடத்திற்குப் பிறகு...

மௌலியின் இல்லம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அரண்மனை முழுக்க ஆட்கள் பரபரப்பாக நடமாடிக்கொண்டிருந்தனர். அந்த வீட்டு இளவரசி யாதவியின் முதல் வருட பிறந்தநாளைக் கொண்டாடத்தான் இந்த ஏற்பாடுகள் எல்லாம்.

பெரிய கேக்கை அந்த வட்ட மேசையின் நடுவில் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தனர். குடும்பமே ஒன்று கூடி மகிழ்ந்திருந்தது. பிருத்வி, ஆர்யா தம்பதியராக நின்று கொண்டிருக்க, பிருத்வி யாதவியை ஏந்திக்கொண்டு, அந்தப் பிஞ்சு விரல்களில் கத்தியைப் பிடிக்க வைத்து, மெழுகுவர்த்தியை அணைத்துக் கேக்கை வெட்டினான்.

இருவரும் சேர்ந்து மகளுக்கு ஊட்டினார்கள். இருவரும் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட, அழகாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு கேக் ஊட்டிப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அந்தச் சந்தோஷமான தருணத்தில் வீட்டிற்குள் நுழைந்தது வித்யூ - பிரணவி ஜோடி. பிருத்வியின் கையிலிருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டாள் பிரணவி. பிருத்வியும் சிரித்துக்கொண்டே கொடுத்தான். அதிகம் பேச்சுவார்த்தை இல்லையென்றாலும், இப்போது பேசிக்கொள்கிறார்கள் இருவரும். குழந்தைக்குச் செயின் அணிவித்து, கன்னத்தில் முத்தமிட்டாள் பிரணவி! வித்யூ விளையாட்டுப் பொருளைக் கொடுத்து, நெற்றியில் முத்தமிட்டான். இருவரையும் தடுக்கவில்லை பிருத்வி - ஆர்யா தம்பதியினர்.

"அம்மா!" என்று ராஜேஸ்வரியை அணைத்துக்கொண்ட பிரணவி, "நானும் வித்யூவும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்" என்று சந்தோஷமான விஷயத்தைப் பகிர, பெரியவர்கள் அவர்கள் முடிவைச் சந்தோஷமாகவே ஏற்றுக்கொண்டனர். ஆர்யா பிருத்வியைக் கண்டு கண் சிமிட்டிச் சிரித்தாள்.
இரவில், தோளில் உறங்கி வழிந்த குழந்தையைத் தொட்டிலில் கிடத்திவிட்டு, பால்கனியில் நின்று கணவருக்காகக் காத்துக்கொண்டிருந்தாள் ஆர்யா. புன்னகையுடன் வந்தவன், அவள் முகத்தை ஏந்தி இதழில் முத்தமிட, இவளும் அவனுக்கு இசைந்து முத்தமிட்டாள். மூச்சு வாங்க அவனது மார்பில் சாய்ந்து கொண்டவள், "ரொம்ப நிறைவா இருக்கேன் பிருத்வி உங்களால" என்று நிமிர்ந்தாள்.

"நானும் தான்டி. எப்போ நான் ஒரு ஆணா மாறினேனோ, அப்பவே இந்துக் குடும்ப வாழ்க்கையெல்லாம் வெறும் கனவும் கானலும் தான் நினைச்சேன். ஆனா கடவுள் எனக்கு இப்படி ஸ்கெட்ச் போட்டு, குடும்ப வாழ்க்கையில மாட்டிவிடுவார்னு நினைக்கலை" என குறும்பாகச் சொல்ல, ஆர்யா நிமிர்ந்து பார்த்து அவனை முறைத்தாள்.

"என்னமோ சாருக்கு விருப்பம் இல்லாம மாட்டிக்கிட்டது போல கடவுளை ஏசுறீங்க! பிடிச்சுத்தானே மாட்டிக்கிட்டீங்க?" என இதழைச் சுளிக்க, அதைத் தன் விரல்களால் வருடி ரசித்தவன், "ரொம்பப் பிடிச்சுத்தான் மாட்டிக்கிட்டேன். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த வாழ்க்கையிலிருந்து வெளியவே வர மாட்டேன்" என்று அவளைத் தூக்கிக்கொண்டான். அவளது இதழ்களில் முத்தமிட்டவாறே உள்ளே வந்தவன், மெத்தையில் கிடத்தி, நெற்றியில் முத்தமிட்டதோடு அவளுக்குள் தானும் ஒன்றாகும் காதலில் இறங்கினான்.
நடு இரவில் சிணுங்கிய மகளை வலது மார்பிலும், மனைவியை இடது மார்பிலும் தாங்கி, இருவரையும் அணைத்துக்கொண்டு நிறைவாக, நிம்மதியாக உறங்கினான் அந்தத் 'தாயுமானவன்'.

முற்றும்
 
Top Bottom