• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

சின்னா 'தி ரோமியோ' - 1

STN - 39

New member
சின்னா : 1

ஓரக்காடு காவல் நிலையம்.

ஈ மட்டுமே தினசரிக் கடமையாய் வந்து போகும் கிராமிய காவல் நிலையங்களில் அதுவும் ஒன்று.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓரிருவர் கோப்புகளுடன் ஓடித் திரிய இன்று வழக்கத்திற்கு மாறான பரபரப்புடன் காணப்பட்டது.

“சார், எங்க சின்னாவ காணோம்!

வந்து கண்டு பிடிச்சித் தாங்க!”

வாசல்புறமிருந்து ஒரு சன்னமான குரல், சற்றே பிடிவாதத்துடன் ஒலித்தது.

காற்றுவழி வந்த சின்ன குரலுக்கும் அதிலிருந்த தோரணைக்கும் சற்றும் சம்மந்தமில்லாததில் எதையோ தேடிக்கொண்டிருந்த ஏட்டு சரவணப் பெருமாள் திரும்பினார்.

மூன்றே முக்கால் அடியில் ஒரு உருவம்.

எப்போது வேண்டுமானாலும் அவிழ்ந்துவிடுவேன் என்று நின்ற ட்ரவுசரை பெல்ட் போட்டு இறுக்காமல் ஒரு கையால் இழுத்து விட்டுக்கொண்டு நின்றிருந்தது வாண்டு ஒன்று. மறு கையில் பம்பரமும் அதன் சாட்டையும்.

“டேய் என்ன ஸ்கூல் போகலையா?" அலட்சியமாய் திரும்பி மீண்டும் தன் வேலையில் மும்முரமானார் ஏட்டு சரவணப் பெருமாள்.

“அதெல்லாம் போவோம். எங்க சின்னாவ காணோம். நீங்கதான இங்கால வரச் சொன்னீங்க" அதே தோரணை மாறாத குரல்.

“டேய் சொல்லுங்கடா! உங்களுக்கு சின்னா வேணாமா?" வாண்டுதான். பின்னால் திரும்பி மிரட்ட,

“ஆமா..மா! கண்டுபிடிச்சித்தாங்க!” கோரசாய் குரல்கள்.

சரவணப்பெருமாள் தலையை நீட்டி எட்டிப் பார்க்க, வாண்டின் வயதில் ஆறேழுபேர். கையில் கிரிக்கட் மட்டை, பந்து பம்பரம் வகையறாக்கள்.

முன்னால் நின்று குரல் கொடுத்தவனைத் தவிர மற்றவர்கள் முகத்தில் சற்றே பயம் கலந்த கலவரம்.

காவல் நிலையத்தை ஏதோ பேய்கள் உலாவரும் பூத் பங்களாவைப் பார்ப்பதுபோல் பார்த்திருந்தனர்.

அவர்கள் எண்ணத்திற்கு ஏற்றார்போல் சிதிலமடைந்த மேற்கூரையும் உடைந்த கண்ணாடி ஜன்னல்களும் காரை பெயர்ந்த சுவர்களுமாய் அரசால் கைவிடப்பட்ட நிலையில்தான் இருந்தது அந்த காவல்நிலையம்.

ஆளில்லாத கடையில் டீ ஆற்ற இது போதும் என்று மேலதிகாரிகள் நினைத்துவிட்டார்கள் போலும்.

சுற்று வட்டாரத்தில் நாலைந்து கிராமங்களுக்கு சேர்த்து இருந்த ஒரே ஒரு காவல் நிலையமும் இதுவே.

“நேற்று ஒரு பேச்சுக்கு ஸ்டேஷன் வாங்கன்னா நேரா இங்கயே வந்துட்டீங்களா? ஓடுங்கடா…”

சரவணப்பெருமாளின் விரட்டலுக்கு, ட்ரவுசர் பாண்டி கிஞ்சித்தும் நகரவில்லை. அசையாமல் நின்றிருந்தான். மாறாக முறைப்பு வேறு.

“வருவீங்களா இல்லையா?” ட்ரவுசர் பாண்டியிடம் இப்போது அவசரமும், வந்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதமும்.

காவல்நிலையத்தைப் பற்றி அறியா வயசு. படத்தில் காண்பிப்பதுபோல சொன்னதும் கூடவே தேடக் கிளம்பிவிடுவார்கள் என்று நினைத்துவிட்டது வாண்டு கூட்டம்.

“சின்னான்னா யாரு உன் நாய் குட்டியா? ஸ்கூல் போகலையா எல்லாம். விடியல்லயே விளையாடிட்டு திரியறீங்க!”

வழக்கத்திற்கு மாறான பரபரப்பில் புலம்பிவிட்டு அவர் வேலையைத் தொடர, வாண்டுகளிடத்தில் வாட்டம்.

பாவம் அவர் கவலை அவருக்கு. அமைச்சர் ஞான சுப்பிரமணியம் சோளவரம் ஏரியை பார்வையிட்டு அப்படியே அவர் படித்த பள்ளியின் புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக ஓரக்காடு வருகிறார். அதற்காகவே இந்த பரபரப்பு.

“இன்னும் போகலையாடா நீங்க" திரும்பியவர் விரட்டி அடிக்க கலவரமாய் பின்வாங்கியது ட்ரவுசர் பாண்டியின் பின் நின்ற படை.

இப்போதும் தான் நின்ற இடத்தில் அசையாமல் நின்றது வாண்டு.

“நானே அமைச்சர் பந்தோ பஸ்த்துக்கு போக நேரமாச்சேன்னு அல்லாடிக்கிட்டு இருக்கேன்…
வந்துட்டான் நாய்குட்டிய காணோம்னுட்டு!

சார் வேற வர நேரமாச்சி!” என்றவர் முடிக்கவும், புல்லட் சத்தம் கேட்க அதீத பரபரப்பானார்.

“என்ன சார் எல்லாம் ரெடியா? போலாமா!" என்றபடி புல்லட்டில் வந்திறங்கினான் அரவிந்தன்.

கஞ்சிபோட்ட காக்கி உடையின் மிடுக்கு குறையாத காவலனுக்கு என்றே வார்த்தெடுத்த உடற்கட்டு, சீரான வேக நடை.

இன்ஸ்பெக்டர் அரவிந்தன். புதிதாக அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருப்பவன்.

“ரெடி சார் போலாம்” என்ற ஏட்டும் காவல்நிலையத்தின் ஓட்டை பீரோவை பூட்டி விட்டுக் கிளம்ப,

“அமைச்சர்னாதான் பார்ப்பீங்களா எங்க சின்னான்னா விரட்டுவீங்களா?” என்ற குரலில் நிமிர்ந்தான் அரவிந்தன்.

புரிந்து பேசியதோ என்னவோ ட்ரவுசர் பாண்டி வயதைத் தாண்டிய அரசியல் பேசியது.

அங்கிருந்த பாலகர் கூட்டத்தைக் கண்டதும் கேள்வியாய் உயர்ந்தது அரவிந்தனின் புருவம்.

“அது ஒன்னுமில்ல சார். பக்கத்துல சேரி பசங்…” என்று ஆரம்பித்தவர் அரவிந்தனின் கண்டிப்பான பார்வை மாற்றத்தில் "இந்தா கிளம்பிட்டேன். நாம போவோம்! டேய் பசங்களா ஓடுங்க!” என்று ஜீப் சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் ஓடினார்.

“சார்! அப்போ எங்ககூட வர மாட்டியா?”

யோசனையுடன் புருவத்தைச் சுருக்கி அரவிந்தன் அவர்களை நெருங்கும் முன்,

“அவனுங்க கிடக்குறானுங்க சார். ஏதோ நாய்குட்டிய காணோமாம்" என்றார். அலட்சியமாய் சரவணப் பெருமாள்.

"எங்க சின்னாவ நாய்னு சொல்லாத சார்” வாண்டிடமிருந்து பட்டென வந்தது பதில்.

“அடிங்… அப்போருந்து பார்க்கிறேன். என்னடா மரியாதை இல்லாம வா போன்னுட்டு…

கடுகு சைஸ்ல இருந்துட்டு பேச்ச பார்த்தீங்களா?”

மரியாதைக் குறைவான பேச்சில் அரவிந்தன் எகிறிக்கொண்டு செல்ல சற்றே பதறி பின்வாங்கினாலும் ஓடாமல் நின்றான் ட்ரவுசர் பாண்டி.

"அட விடுங்க சார்… இவ்ளோநேரம் நல்லாதான் பேசிட்டு இருந்தான். அவன் காரியம் ஆகலைங்கவும் கோவத்துல ஆயி அப்பன் பேச்சு தாண்டவமாடுது.

அவன் சார்னு சொன்னதே பெரிய மரியாதைதான். இங்கல்லாம் அப்படித்தான்சார் பேச்சு வழக்கம்” என்றபடி சரவணப்பெருமாள் ஜீப்பைக் கிளப்ப,

“மாமா சார்" என்ற குரலில் ஜீப்பை சடக்கென்று தடை(ப்ரேக்)யிட்டு நிறுதியேயிருந்தார் அவர்.

“இப்போ என்னதான்டா உன் பிரச்சனை? ஒழுங்கா கூப்பிடமாட்டியா நீ!" சரவணப் பெருமாளின் குரலில் ஏகத்துக்கும் கடுப்பு ஏறியிருந்தது.

“எங்கப்பாரு அவர் ப்ரண்டுன்னு சொல்லி உங்கள மாமான்னு கூப்பிடச் சொன்னாரு அவரு தலைமறைஞ்சதும் சாருன்னு கூப்பிடச்சொன்னீங்க!

எதுக்கு வம்பு சொல்லுங்க மாமா சார்!” என்றது வாண்டு.

சரவணப் பெருமாள் பதறிக்கொண்டு அரவிந்தனைப் பார்க்க அவர் எதிர்பார்த்தது போலவே ‘திருந்த மாட்டீங்கல்ல’ என்ற பார்வை பார்த்திருந்தான் அவன்.

“உங்க ஊர்தான கொஞ்ச வருஷம் முன்ன பேப்பர்ல வந்துச்சி! இந்த ஊருக்கு மாற்றல் வந்தப்ப கூட கவலைப்படல நான். பெருமையாதான் வந்தேன். ஆனா…” என்றவன் அத்தோடு நிறுத்திக் கொண்டான்.

“டேய் போடா… பள்ளிக்கூடம் போகாம ஊர் மேயுறன்னு உன்னப்பனுட்ட சொல்லிக்குடுக்கறேன் இரு”

‘பயபுள்ள கோர்த்துவிடறதுலயே குறியா இருக்கு’ என மனதுக்குள் நினைத்தவர் மறந்தும் அரவிந்தனின் புறம் திரும்பவில்லை.

“நாளைக்கு வருவோம். எங்க சின்னாவ…"

“சரிடா எப்பா! நாளைக்கு வா உன் சின்னாவ கண்டுபிடிச்சித் தரேன். போதுமா!"

ட்ரவுசர் பாண்டி முடிக்கும் முன் முடித்துவைத்தார் சரவணப் பெருமாள். உடனேயே வாண்டுவின் முகம் மலர்ந்துவிட்டது.

"டேய் வாங்கடா! நாளைக்கு மட்டும் சின்னாவ கண்டு பிடிச்சித் தரல இந்த போலீஸ் ஸ்டேஷன்தான்டா நம்ம ப்ளே கிரவுண்ட்” என்றபடி அந்த வாண்டு தன் பரிவாரத்துடன் வெளியேற,
சத்தமாய் சிரித்து விட்டான் அரவிந்தன்.

‘இவன்தானே அமைச்சரா, சின்னாவா என்று அரசியல் பேசியது’ புன் சிரிப்புத் தோன்றியது.

வெளியேறும் வாண்டைப் பார்த்தான். இறங்கும் ட்ரவுஷரை அவ்வப்போது இழுத்து விட்டபடி முன்னால் செல்ல மட்டைப் பந்துகளுடன் பரிவாரங்கள்.

லோக்கல் ரவுடி ஆயுதங்களுடன் ஸ்டேஷன் புகுந்து மிரட்டி விட்டுப் போவதுபோல் இருக்க, அரவிந்தனின் உதடுகள் இன்னுமே புன்னகையில் வளைந்தது.

இப்படி பல ரவுடிகளுக்கு மசியாததால் தானே ஏன் என்று கேட்க ஆளில்லா ஒதுக்குப்புறமான காவல்நிலையமாய் பார்த்து தூக்கிப் போட்டிருக்கிறார்கள்.

அமைச்சர் வருவதில் அதுவரை இருந்த பணியின் இறுக்கம் வாண்டுவின் உபயத்தால் தளர்ந்திருக்க, “இந்த ஸ்டேஷனுக்கு வந்த பெரிய கேஸ் இதுதான் போலயே பெருமாள் சார்” என்று சிரித்தவாறே வண்டியில் ஏறிக்கொண்டான்.

மிரட்டிக் கொண்டிருந்த உடைந்த கண்ணாடி ஜன்னல்களை அளந்தவன்,

“ட்ரவுஷர் பாண்டி தயவுல போலீஸ் ஸ்டெஷன சீக்கிரமே ரெனோவேஷன் (புதுப்பிப்பு) பண்ணிடுவோமா? பெருமாள் சார்!”

சிரித்துக்கொண்டே அரவிந்தன் கேட்டதில், ‘அப்பாடா மனுஷன் கூலாயிட்டார்’ என நிம்மதியடைந்தவராய் “செஞ்சாலும் செய்வானுங்க சார்" என்றார் அவரும் புன்னகைத்து.

அந்நேரம் அரவிந்தனின் அலைபேசி அழைக்க எடுத்துக் காதில் வைத்தான்.

"ஏன்டா, இங்க இருக்கும் போதுதான் வேலை வேலைன்னு என்னை கண்டுக்க மாட்ட. அதான் உனக்கு வேலையே இல்லாத இடத்துல தூக்கிப் போட்டானுங்கல்ல! அப்பகூட உனக்கு இந்த அம்மா நினைப்பு வரலைல்ல?”

எடுத்ததும் பொரிந்துத் தள்ளினார் அரவிந்தனின் தாய் கமலம்மா.

“அம்மா…”

"என்னடா நொம்மா…! போனும் நானா போட்டாத்தான் உண்டு. உன்னை பார்க்கணும்னாலும் நானா வந்தாத்தான் உண்டு.

என்னைக்காச்சும் இங்க ஒருத்தி தனியா இருக்காளேன்னு சாப்டியா? தூங்குனியான்னு கேட்டிருப்பியா?

அதெப்படி கேட்ப! இவ்ளோநாள் உனக்கே சாப்பிட தூங்க நேரமில்லாம ரவுடிங்க வால் புடிச்சிட்டு அலைஞ்ச… இதுல என்னை எப்படிப்பா கேட்ப?”

“ம்ம..ம்மா"

"இப்போதான் வேலையே இல்லாத காட்டுக்கு மாத்தியாச்சே! இப்போ என்ன கேடு உனக்கு!” குறுக்கில் பேச வந்த அரவிந்தனை கண்டுகொள்ளாமல் அவர் பேசிக்கொண்டே போக..

“ம்மா ப்ளீஸ்! அமைச்சரோட பந்தோபஸ்த்துக்கு போய்ட்டு இருக்கேன். அப்புறம் பேசுறேன்" அவர் பதில் சொல்லும் முன்பே வைத்துவிட்டான்.

விட்டால் இதே ரீதியில் அரைமணிநேரம் திட்டிவிட்டே விசயத்துக்கு வருவார் அவன் அன்னை. இப்போது அவனுக்கு பொறுமை இல்லை.

இப்போது மட்டுமா! என்னைக்கும் அவனது பொறுமைக்கு ஆயுசு சற்றுக் குறைவுதான்.

அதற்கே அன்னையிடம் பேசுவதைத் தவிர்த்து விடுவான். கூடவே வா என்றாலும் தந்தை இருந்த வீட்டை விட்டு வரமாட்டேன் என்பார். அதில் அவனுக்கும் தாயின்மீது மனத்தாங்கல்தான்.

வற்புறுத்தவும் முடியாது. இதோ பணியில் சேர்ந்து இரண்டே வருடங்களில் இது நாலாவது பணியிட மாற்றம். எங்கேவென வயதானத் தாயைக் கூட்டிக்கொண்டு வீட்டை மாற்றிக்கொண்டு அலைவது. விட்டுவிட்டான்.

பள்ளி விழா இனிதே தொடங்கியது. பலமணி நேர காத்திருப்பைக் கடந்து அமைச்சர் சோளவரம் ஏரியை பார்வையிட்டு முடித்து பூத்தூவி புகைப்படம் எடுத்து பள்ளிக்குள் நுழைந்திருந்தார்.

அவர் படித்த ஆரம்பப்பள்ளி பல புதிய கட்டிடத்துடன் மேல்நிலைப் பள்ளியாக இன்றுமுதல் பதவி உயர்வு பெறுகிறது.

முன்னாள் மாணவர் என்ற சிறப்போடு கூட அமைச்சரும் பெருந்தொகை தானமாக வழங்கி இருந்ததால் அவரே இன்றைய விழா நாயகன்.

அமைச்சரை வரவேற்கும் ஒரு நிகழ்வாக அரவிந்தன் பீறு நடையிட்டு முன்னேறி வர,

அதே நேரம் மைக்கில் ஆசிரியை ஒருவர் விழாநாயகனுக்கான ஆரம்ப புகழாரங்கள் முடிந்து, “தற்போது பள்ளியின் மாணவர் அணித் தலைவனும் என் சி சி மாணவனுமான அகரன் எங்கள் பள்ளியின் சார்பாக அமைச்சரை பூங்கொத்து கொடுத்து வரவேற்பளிப்பான்” என்று சொல்லிக் கொண்டிருக்கவே,

அநேக கைத்தட்டலுடன், குறையாத கம்பீரமும் பீறுநடையுமாய் வீரனுக்கான என் சி.சி. உடையில் அரவிந்தனுக்கு நேர் எதிரே நடந்து வந்தது வேறு யாருமல்ல சாட்சாத் அதே ட்ரவுசர் பாண்டிதான்.

அரவிந்தனால் தன் கண்ணையே நம்ப முடியவில்லை. லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் என்று இராணுவ கோப்பு மாறாமல் என் சி. சி. உடை தனி கம்பீரத்தைத் தர கைய வீசி திறமாய் நடந்து வந்தவனைப் பார்த்ததும், காலையில் இவனா இடுப்பில் நிற்காத ட்ரவுசரை பிடித்துக்கொண்டு ஸ்டேஷன் வந்தது என்றிருக்க சிரிப்பு வரப் பார்த்தது.

அதையும் மீறி கட்டுப் படுத்திக்கொண்டு இவன் நடக்க அந்த வாண்டோ காலையிலிருந்து மாறாத அதே முறைப்புடன் இவனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தது.

இருவரும் எதிரெதிர் துருவத்திலிருந்து நடந்து வந்து ஒரே நேர்க்கோட்டில் அமைச்சரை நோக்கி நடந்து சல்யூட் அடித்துத் திரும்ப வேண்டும். அதுதான் விழா ஏற்பாடு.

அரவிந்தன் சல்யூட் அடித்து முடிக்க, வாண்டு அருகிலிருந்த ஆசிரியையின் கையிலிருந்த பூங்கொத்தை அமைச்சருக்கு வழங்கி சல்யூட் வைத்து முடித்தது.

இப்போது இருவரும் திரும்பி ஒருவருக்கொருவர் சல்யூட் வைத்துத் திரும்பி நடக்க, வாண்டு முறைத்த முறைப்பில் சத்தியமாய் அரவிந்தனால் புன்னகையை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.

அவனின் அடர்ந்த மீசைக்குள் புன்னகையை ஒளிக்கப் பெரும்பாடு பட்டுப்போனான்.

அரவிந்தனும், ஏட்டு சரவணப்பெருமாளும் விழா முடிந்து ஜீப்பில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மாலை இருள் கவிழ்ந்து கொண்டிருந்தது.

“பெருமாள் சார்! நாளைக்கு அந்த நாய்க்குட்டிய என்னானு கண்டு பிடிச்சிருவோம். அந்தப் பையனை என்னானு விசாரிங்க!”

“என்ன சார்! வாண்டு ரொம்ப மிரட்டிடிச்சோ?"

வண்டி ஓட்டியபடி பெருமாள் சிரித்த சிரிப்பில் அரவிந்தனும் வெடித்துச் சிரித்தான்.

“எப்படி சார்? கீழ இருந்து பார்த்த என்னாலயே சிரிப்பை அடக்க முடியல. அமைச்சர் முன்னாடி நீங்க பாவம்தான்”

“கண்டிப்பா அவன் சொன்னதைச் செய்வான் பெருமாள் சார்! அவன் பார்வையே அதை சொல்லுது” சிரித்தபடி சற்றுப் பெருமையாகவே அரவிந்தன் சொல்லிக் கொண்டிருக்க…

அதேநேரம் ‘சலீர்’ என்ற சத்தத்துடன் ஊரில் ஒரு வீட்டின் கண்ணாடி ஜன்னல் உடைந்து விழுந்தது.

“டேய் யாருடா அது?" ஒரு பெண்ணின் குரலைத் தொடர்ந்து ஆணின் குரல்.

"அவனுங்கதான் அம்ரு! நேற்று சொல்லிட்டுப் போனானுங்க. இன்னைக்கு செஞ்சிட்டானுங்க”

வீட்டுக்குள் வந்து விழுந்த பந்தை குனிந்து எடுத்துக் கொண்டே சொல்லி முடிக்கவும்,

“அதைக் குடுங்க நிகில்! பெரிய இரவுடின்னு நினைப்பு. இவனுங்கள…" என்று வரிந்து கட்டிக் கிளம்பிய மனைவியைத் தடுத்து நிறுத்தியிருந்தான் நிகிலன்.

"ஏதோ கோவத்துல பண்றானுங்க விடு ஊர்மி”

"எல்லாம் குடுத்த இடம் அப்படி" என்றவளின் பார்வை இடதுபக்க அறைப்பக்கம் தாவி நொடியில் தளும்பிற்று.

கணவனுக்குத் தெரியாமல் அதை மறைத்தவள் திரும்பி நடக்க,

“ஏன் ஊர்மி! சின்னாவ நீ எதும்…"

தயங்கித் தயங்கி அவன் கேட்க சரேலெனத் திரும்பினாள்.

மீதி வார்த்தைகள் அவன் தொண்டைக் குழியோடு நின்று போயின.

அவள் பார்வையில் ‘நீங்களுமா’ என்ற கேள்வி தொக்கி நிற்க மறைத்த கண்ணீர் மடை உடைத்தது.

விழியால் தீயாய் எரித்துவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டாள்.

நிகிலிடம் பெருமூச்சு மட்டுமே!

கடந்த இரண்டு நாட்களாய் வீடு வீடாய் இல்லை. அதீத இருட்டாய் தோன்றியது. உயிர்காற்றில் எதோ ஒன்று குறைவதுபோல் ஒரு இறுக்கம்.

அவன் பார்வை ஏக்கத்துடன் வாசல் தீண்டியது. காலையில் ஸ்டேஷன் புகுந்து அரவிந்தனை மிரட்டிய அதே கும்பல்தான் நிகிலின் வீட்டை நொறுக்கிவிட்டு வெளி வாசலைத் தாண்டி திரும்பிச் சென்று கொண்டிருந்தது.

அந்த அரை ட்ரவுசர் கும்பலுக்கு தலைமை தாங்கி முன்னால் சென்று கொண்டிருந்த வாண்டு திரும்பி அந்த வீட்டை ஒருமுறை தன் பார்வையால் வருடியது.

நிகிலனின் பார்வையும், வெளியில் நின்றிருந்த வாண்டுவின் (அகரன்) பார்வையும் அரை நொடி ஒன்றை ஒன்றுச் சந்தித்தன.

ஒன்றில் ஏக்கமும் மற்றொன்றில் மிதமிஞ்சிய கோபத்துடன் ஒற்றைத்துளி கண்ணீரும்.

சிறுவன் அழுதுவிட்டான். நிகிலினால் அது முடியாதே!

மனைவியை வேறு சமாதனப்படுத்த வேண்டும். உள்ளே புகுந்து கொண்டான்.

கடந்த சில நாட்களாக ஏனோ தானோவென கவனிக்கப் படாத சமையலறை. பாத்திரங்களை ஒவ்வொன்றாக உருட்டினான்.

வடித்து வைத்த சாதம் அப்படியே ஒரு பாத்திரத்தில். அவனது மகளுக்கு மட்டும் கொஞ்சமாய் எடுத்து ஊட்டியிருப்பாள் போலும் மீதம் அப்படியே நீர்விட்டு வைத்திருந்தாள் அவன் மனைவி ஊர்மிளா.

மற்றொன்டில் தனியாக கெட்டி பருப்புடன் நெய்விட்டு தனியாக எடுத்து வைத்திருந்தாள். அது யாருக்கானது என்று நினைத்ததும் பெருமூச்சு அவனிடம்.

சின்னாவுக்கு பருப்பும் நெய்யும் இல்லாமல் சாதம் இறங்காது.

அனைத்தையும் மூடி வைத்துவிட்டு குளிர்சாதனப் பெட்டியிலிருந்த பாலை மட்டும் காய்ச்சி இரண்டு டம்ளர்களில் எடுத்துக் கொண்டான்.

“ஊர்மி இந்தப் பாலை மட்டும் குடிச்சிட்டு படும்மா”

அசைவில்லை அவளிடம். அவர்களது படுக்கைக்கு பக்கத்திலயே குறுங்கட்டில் ஒன்று போடப்பட்டு அதில் மகள் அன்பிலரசி உறங்கிக் கொண்டிருந்தாள்.

கொஞ்சநாளாகத்தான் அவளது படுக்கை இவர்களிடம். சின்னா இருக்குமிடமெல்லாம் இந்த குறுங்கட்டில் இழுபடும்.

“ஊர்மி ப்ளீஸ்…”

இலேசான விசும்பல் அவளிடம். தான் சமாதானப் படுத்தாமல் நிச்சயம் அவள் திரும்பிக்கூட பார்க்கப்போவதில்லை என்று புரிந்தது.

அவனும்தானே சற்று அவசரப்பட்டு வாயை விற்றுவிட்டான். பேசாமல் டம்ளர்களை அருகிலிருந்த மேஜையில் வைத்தவன் மனைவியின் அருகில் அமர்ந்தான்.

"சாரி ஊர்மி! நான் ஏதோ ஆதங்கத்துல அவசரப்பட்டு… சாரி டி” என்றான்.

“அந்த அறுந்த வாலு அகரன் மட்டுமில்ல, நம்ம அன்பாவே சின்னா காணாம போனதுக்கு நான்தான் காரணம்னு நினைக்கிறாங்க…”

முதுகுக் காட்டி படுத்திருந்தவள் கதறி அழ, வாரிச்சுருட்டி நெஞ்சத்தில் போட்டுக் கொண்டான்.

“இந்த ஊரும் அன்பாவும் சொல்றமாதிரி சின்னா காணாம போனதுக்கு நான்தான் காரணம்னு நீங்களும் நினைச்சிட்டீங்கல்ல…” அவன் நெஞ்சுக்குள் விம்மினாள்.

அவளும்தானே இரண்டுநாட்களாக அன்னம் தண்ணீர் இல்லாமல் சின்னாவை தேடிக்கொண்டிருக்கிறாள். இதில் தானும் அவசரப்பட்டு வாயைவிட்டு அவளை நோகடித்து விட்டான்.

விட்டுவிட்ட வார்த்தையை திருப்பி அள்ளவா முடியும். சமாதானம் ஏதுமின்றி மெல்ல தலையைக் கோதிக்கொடுத்தான்.

அதற்காகவே காத்திருந்ததுபோல் அவன் நெஞ்சத்திலேயே அவள் உறங்கிவிட அவனுக்குத்தான் விழி மூடுவேனா என்றது.

மெல்ல மனைவியை படுக்கவைத்துவிட்டு எழுந்து கொண்டான். காற்றில் ஆடிய ஜன்னல் திரைச்சீலையைப் போலவே அவனது மனமும் அல்லாடிக் கொண்டிருந்தது.

ஜன்னல் வழி திறந்திருந்த வெளி வாசலிலேயே அவனது பார்வை நிலைத்திருக்க அதுவரை போக்குக் காட்டிக் கொண்டிருந்த ஒற்றைத்துளி கண்ணீர் அவனது விழியோரம் கசிந்தது.

சின்னா வருவான்…
 
Top Bottom