• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தமிழ் - 11

Vishakini

Moderator
Staff member

கண்ணம்மா.

அத்தியாயம் 11.

இருளின் ஆதிக்கத்தில் நகரமே நிசப்தத்தைப் பூசிக்கொண்ட நள்ளிரவு வேலை.
மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.

"என்றும் நானாகவே வாழ விரும்பும் நான், எனது சுய ஒப்புதலோடு எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல், கொண்ட தீர்மானத்திலிருந்து தடம் மாறாமல்,
சுயம் சார்ந்த எண்ணங்களுக்கு முக்கியத்துவமளிக்காமல்உயிர் போகும் நிலையே வருமென்றாலும் புறமுதுகிட்டு ஓடாமல்எனது கொள்கை ஒன்றையே உயிர் மூச்சாகக் கொண்டுசெயல்படுவேன் என்றும், எனது சொல் செயல் சிந்தனை அனைத்திலும்
என் இலக்கினை மட்டுமே முன்நிறுத்துவேன் என்றும், எந்தன் எண்ணங்கள் ஈடேறும்வரையில் எதிர்மறைச் சிந்தனைகளுக்கு எச்சூழ்நிலையிலும் வாய்ப்புக் கொடேன் என்றும்,இந்தக் குழுவின் ஒருமைப்பாட்டிற்கு எப்போதும் துணைநிற்பேன் என்றும்,
குழுவின் வரையறைகளுக்குக் கட்டுப்பட்டுத், தெளிவுடன் வியூகங்களை வகுத்து அநீதியை வேரோடு வீழ்த்திடக் குழுவுடன் இணைந்து தளராமல் போராடுவேன் என்றும்,
மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு, உண்மையுடனும் உத்தமத்துடனும் எனது கடமைகளை
இக்குழுவின் அங்கமாகச் சரிவர நிறைவேற்றுவேன் என்றும், இக்குழு முன்னெடுக்கும் முடிவுகளையும், ரகசியத் திட்டங்களையும் புதையலைப்
போல் பாதுகாப்பேன் என்றும், கொண்ட கொள்கை நிறைவேறும்வரையில், அதர்மத்தை அடியோடு சாய்த்து தர்மமானது தலை நிமிர்ந்து நிற்கும்வரையில், வெற்றிக்கான தாகம்
தணிந்திடும்வரையில், நான் மேற்கொள்ளும் முயற்சிகளிலிருந்து ஒருபோதும் ஓயப்போவதில்லை என்றும், தாய்த் தமிழின்மீதும், இயற்கை அன்னையின்மீதும்
ஆணையிட்டு உறுதிகூறுகிறேன்..." எனத் தங்களது லட்சியங்களைச் சாதித்துவிடும் வேகத்தோடு கூட்டுக் காணொளி அழைப்பில் வழக்கம்போல உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் அந்தக் குழுவினர்.

அவர்களின் கம்பீரக் குரல்கள் ஒன்றிணைந்து, அந்தந்தச் சுற்றுச்சுவர்களுக்குள்
லேசான அதிர்வினைக்கூட உண்டாக்கிற்று. நொடிநேர மௌனத்திற்குப் பின்பு,

"கூடலின் சாராம்சம்?"என்று ஒருபுறத்திலிருந்து கேள்வி எழுப்பப்பட்டது.

"வியூகம் வகுக்க." எனப் பதில் மொழிந்தது ஒரு குரல்

"செல்லும் பாதை சரிதானே?"ஐயத்துடன் வினா தொடுத்தது இன்னொரு குரல்..

"கோபுரங்கள் சாய்வதில்லை."என்ற வரியே விடையானது .அழைப்பில் குழுமியிருந்த அனைவரது முகங்களும் புன்னகையில் மலர்ந்தன.

தாங்கள் நிர்ணயிக்கும் இலக்குகள் பிழைக்காமல் சரியாக முன்னேறிச் செல்வதில்
உண்டான நிறைவின் வெளிப்பாடு இந்த முகமலர்ச்சி.அதுவும் சிலகணங்களுக்குமட்டுமே. மீண்டும் பழையபடி எல்லோரினது முகங்களும் உணர்ச்சிகளைத் தொலைத்திருந்தன.

"நாம் என்ற சொல்லுக்கு உயிரளித்தமைக்கு நன்றி. நாம் என்ற வார்த்தையின் வலிமையை இன்று உணர்ந்திருக்கிறோம் அனைவரும். இந்த நாமே நமது தாரகமந்திரமாக திகழட்டும்.."என்று அழுத்தமாக மொழிந்தது அக்குழுவின் தலைமைக் குரல்.

அனைவரும் தங்களது தலைமையின் வார்த்தைகளை ஆமோதித்தனர். பின்னே எண்ணற்றத் தடைகளைத் தாண்டி ஒருவழியாகத் தாங்கள் நினைத்ததையெல்லாம் செயல்படுத்தத் துவங்கி,அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்களே!

அவர்கள் ஓய்வென்ற ஒன்றையேமறந்து பல வருடங்கள் ஆகிற்று.எத்தனையோ நாட்கள் தங்களது கொள்கையினை நிறைவேற்றிடும் வழியறியாமல் தவித்திருக்கின்றனர்.
தங்களது இலக்குகளை எவ்வாறு அடையப்போகிறார்கள் எனத் தெரியாமல் தடுமாறிநின்றத் தருணங்கள் ஏராளம்.தோல்விகளே அவர்களுக்குத் துணையாகிப் போன நேரங்களும் இருக்கின்றன.இருப்பினும் பின்வாங்கவில்லை அவர்கள். ஆறாமல் பச்சை ரனமாய் வலித்தக் காயங்கள் அவர்களைப் பின்வாங்கவிடவில்லை.வாங்கிய அடிகள் ஒவ்வொன்றும் தந்தவர்களுக்கே அதனைத் திருப்பித் தந்துவிடச் சொல்லி அவர்களை உந்தித் தள்ளியது.

அவர்களின் இயலாமையைக் கைகட்டி வேடிக்கைப் பார்த்தக் காலத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் முயற்சியில் இறங்கினர் வெகு தீவிரமாக.தாங்கள் செய்யவேண்டியவற்றை நிதானமாகத் திட்டமிடத் துவங்கினர். அச்செயல்களின் சாதக பாதகங்களை நுணுக்கமாக ஆராய்ந்தனர். தாங்கள் எடுத்துவைக்கப் போகும் ஒவ்வொரு அடியையும் நேர்த்தியாக எடுத்துவைக்கத் தீர்மானித்தனர். தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் ஒவ்வொரு நகர்விற்கும் பல திட்டங்களை யோசித்துவைத்தனர். இவையனைத்தும் பிரச்சனைகளைக் குறித்த அவர்களது பார்வையை இன்னும் விசாலமாக்கியது. அவர்களது சிந்தனைத் திறனையும் வளர்த்தது. அதுவே தாங்கள் விட்டப் பிழைகளையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டியது.

தாங்கள் மேற்கொண்டு செய்யவேண்டியவைகளைப் பற்றி அவர்களுக்குத் தெளிவான புரிதலையும் வழங்கியது. இந்த மாற்றங்களெல்லாம் வெறும் ஒருநாளிலோ இல்லை ஒரு நபராலோ மட்டும் நிகழ்ந்துவிடவில்லை. துயரங்களால் செதுக்கப்பட்ட நெஞ்சங்களின் சங்கமமே இந்த முன்னேற்றத்தின் அச்சாணியாகும்.

ஏதோ ஒருவகையில் விதியின் சூட்சமங்களால் வஞ்சிக்கப்பட்ட உள்ளங்கள் ஒவ்வொன்றும் தத்தமது எல்லைகளை விரிவாக்கித் தன்னைப் போல ஓய்ந்து கிடப்பவர்களை பெயரறியாக் குடையின்கீழ் மெல்லச் சேர்த்துக்கொண்டது அந்தப் புள்ளியில்தான்

நான், எனது சுயம், என்னைச் சார்ந்த விடயங்கள் என்பது மறைந்து நாம் என்ற புள்ளியில் ஒன்றிணைந்தது. தங்களுக்கான தேவைகளையும் தேடல்களையும் இந்த ஒற்றுமை பூர்த்தி செய்தது. தங்களுக்கு வேண்டியவற்றை எதனுடைய, யாரினுடைய துணையையும் எதிர்பார்க்காமல் தாங்களாகவே செய்து முடித்துவிடலாம் என்னும் தைரியத்தையும் அளவுக்கதிகமாகவே அவர்களுக்குள் விதைத்தது. வெற்றிக்கான தாகத்தைத் தனித்திடத் தாங்கள் மேற்கொள்ள நினைக்கும் பயணம் நிச்சயம் இலகுவானது அல்ல என்பது தெரிந்தேதான் கொள்கையினைச் சார்ந்த இந்தக் கடினப் பாதையில் தங்களது பயணத்தைத் துவங்கினர் அனைவரும்.

இந்தக் கொள்கைக்காக இவர்கள் இழந்தவைகள் அனைத்தும் விலைமதிக்கமுடியாதவை.
எண்ணற்ற இன்னல்களுக்குப் பிறகு ஒருவழியாக அவர்களது அயராத உழைப்பிற்குப் பலன் கிட்டியிருக்கிறது. என்றாலும் இது போதாது அவர்களுக்கு.

இந்தச் சிறு வெற்றியே யானைப் பசிக்குக் கிடைத்தச் சோழப்பொறிதான் அவர்களுக்கு.
எது எப்படியிருந்தாலும் தங்களது இலக்கினை எட்டும்வரையில் அவர்களது இந்தப் போராட்டம் ஓயப்போவதே இல்லை என்பதுமட்டும் தின்னம்.

இதோ அடுத்தக்கட்ட ஆலோசனைகளுக்காகவே இந்தக் கூட்டுக் காணொளி அழைப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.அழைப்பில் இணைந்திருந்த அத்தனைப் பேரின் கண்களிலும் நம்பிக்கைச் சுடர் ஒளிர்ந்தது.

"திட்டவரைவு?" என்ற கேள்வி அப்போது முன்வைக்கப்பட்டது. இம்மாதிரியான அழைப்புகள் அடிக்கடி இணைக்கப்படுவதில்லை. குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் எல்லோரும் உரையாடலில் ஒன்றிணைவர். இந்த அழைப்பில்தான்
பல ரகசியத் திட்டங்கள் தீட்டப்படும். குழுவின் அடுத்தக்கட்ட நகர்விற்கான முடிவுகளும் முன்மொழியப்படும்.

தவிர சூழ்நிலையைப் பொறுத்துப் புதிய இலக்குகள் வகுக்கப்படும்.இந்த அழைப்பில் எடுக்கப்படும் தீர்மானங்களைக் கொண்டே ஒவ்வொருவரும் தங்களுக்கெனப் பிரித்துக் கொடுக்கப்படும் வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

பிரித்துக் கொடுக்கப்பட்ட வேலைகள் சரியாக செய்து முடிக்கப்படுகிறதா? இல்லை இடையூறுகள் ஏதும் நிகழ்கின்றனவா? பணியினைச் செய்யும்போது ஏற்படும் இடர்கள் என்னென்ன? போன்றவையும் இந்த அழைப்புகளிலேயே விவாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..

"இம்முறை (உ)" எனக் கூறியது திட்டமிடல்களைச் சரிபார்த்துக் குழுவினருக்குப்
பகுத்து வழங்கும் பொறுப்பிலிருந்தக் குரல்.விடயத்தை விளங்கிக் கொண்ட
குழுவினர் மற்றத் தகவல்களுக்காகத் தங்களது காதுகளைக் கூர்மையாக்கினர்.

"ன்பகோடச், ம்க்ய்நாதவே...."என ரௌத்திரம் பொங்க வார்த்தைகளை உச்சரித்தது தலைமை குரல். அதைக் கேட்ட மற்றவர்களும் கோபத்தில் கொதித்தனர். நெடுநேர ஆலோசனைக்குப்பிறகுத் தத்தமது பணிகளைக் குறித்துக்கொண்டனர் குழுவினர். சில குழப்பங்கள் மனதை நெருடியபோதும், தலைமைக் குரல் உதிர்த்த "எண்ணிய முடிதல் வேண்டும்"என்ற சொற்களில் உத்வேகம் பெற்றனர்.

"அன்னைத் தமிழே! ஆருயிரானவளே!
என்னை நிழல்போல எப்போதும் தொடர்பவளே!
கோடை காலத்தில் குளிர்ந்த நதிநீரைப் போல்,
வாடிய என் இதயத்தில் மகிழ்வினை வார்ப்பவளே!
துன்பங்கள் சூழ்கையிலே துணையிருக்கும் தோழியும் நீ.
இன்னல்கள் கலைகின்ற என் அன்பு அன்னையும் நீ.
அறவழியில் எனை நடத்தி நெறிப்படுத்தும் ஆசான் நீ.
கலிப்பாவாய் உருமாறி, களிப்பெனக்குத் தருபவளே!
வெண்பாவாய் அவதரித்து வீரு கொண்டு எழுபவளே!
விருத்தப்பா வடிவெடுத்துக் கருத்தினிலே நிறைபவளே!
பண்பாட்டு விழுமியங்கள் பரிசாகத் தந்தவளே!
பாரெங்கும் புகழ் படைத்தப் பண்புமிக்க என் தாயே!
நிகரற்ற நின்மாட்சி நீடூடி வாழியவே.
நிகரற்ற நின்மாட்சி நீடூடி வாழியவே..."

மனதிற்கு அமைதியளிக்கும் தமிழ்த்தாயின் வாழ்த்துப் பாடலை ஒருங்கே நெஞ்சுறுகச் சொல்லிவிட்டு, நேர்மறையான எண்ணங்களை அகத்தில் நிரப்பி,அழைப்பினைத் துண்டித்தனர்.,அசைக்கமுடியாத உறுதியோடு...

'"இன்றைய முக்கியச் செய்திகள்: சுடரொளி அறக்கட்டளையின் நிறுவனரும், சுடரொளி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தாளாளருமான திரு கு. சடகோபன் திடீர் மாரடைப்பின் காரணமாக இன்று அதிகாலை நான்கரை மணியளவில் இயற்கை எய்தினார். தரமான கல்வியினை ஏழை எளிய பிள்ளைகளுக்கு இலவசமாக வழங்கிய பெருமை இவரையே சேரும்.திரு சடகோபன் அரசியல் பெரும்புள்ளி ஒருவரின் நெருங்கிய நண்பர் என்பது கவனிக்கத்தக்கது.

சடகோபனின் இறப்புச் செய்திதான் அன்றைய காலைப்பொழுதில் அனைத்துச்
செய்தித் தளங்களிலூம் பரபரப்பாகப் பேசப்பட்டது.பலருக்கு இது ஒரு பொதுவான செய்தி. அவரது சுற்றத்தாரை வருத்தத்தில் ஆழ்த்தியத் தகவல் இது. சடகோபனின் மரணம் சிலரது தலையில் இடியை இறக்கிற்று. ஆனால் அவர்களுக்கு? இது ஒரு மைல்கல் சாதனை.

இங்கிருந்துதான் அவர்களது போராட்டம் துவங்குகிறது. ஆம் அவர்கள் சடகோபன் என்னும் திறவுகோலின்மூலம் தங்களது யுத்தக் களத்தை அடைந்திருந்தனர்.சடகோபனின் மரணம் யாருக்கு எப்படியோ; ஒருவனின் அறிவிற்குமட்டும் முற்றிலும் முரணாக நின்றது.

அவனால் நடப்பவற்றையெல்லாம் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
கண்டுகொள்ளாமல் கடந்துவிடவும் முடியவில்லை. எங்காவது சென்று தலையை நன்றாக முட்டிக்கொண்டால் கூட அவனது ஆத்திரம் அடங்குமா என்பது கேள்விக்குறிதான்? காணவே அத்தனைக் கொடூரமாக இருந்தது அவனது முகம்.வெஞ்சினத்தில் அவனது
நரம்புகள் புடைத்து மேலெழும்பின.

"ஒருவேளை தனது கணிப்பு மட்டும் உண்மையாக இருந்தால்?'யோசனைகள் எங்கெங்கோ தரிக்கெட்டு ஓட, எதையும் ஏற்கமுடியாமல் கூண்டு புலியாய்த் தனது அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக அள்ளாடிக்கொண்டிருந்தவன், வீட்டையே உலுக்கும் வண்ணம் "ஆ " என்று அடித்தொண்டையிலிருந்து அலறினான்.

காலுக்குக் கீழே பூமி நழுவிச் செல்வதைப் போல் தோன்றிய உணர்வில் சற்றும் தாமதிக்காமல் காவல் நிலையத்திற்கு விரைந்த கரிகாலனின் வாகனம் அவனது கையில் சீறிப்பாய்ந்தது…அவனது யூகம் சரியே என்பதைப் போல சடகோபன் சார்ந்த பல திடுக்கிடும் உண்மைத் தகவல்கள் உரிய ஆதாரங்களுடன் காணொளிகளாகவும்,
புகைப்படங்களாகவும் சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவின.

நிகழ்ந்திடும் நிஜங்கள் கரிகாலனுக்கு எச்சரிக்கை விடுத்தன. காவல் நிலையத்தை ஒருவாறு அடைந்தவன், அங்கிருந்த யாரையும் கருத்தில் கொள்ளாமல் தனது அறைக்குச் சென்று இணையத்தில் உலவிவரும் சடகோபன் குறித்தத் தகவல்களை மீண்டும் மீண்டும் உற்றுநோக்கினான்.சந்தேகத்திற்கு இடமின்றி மிகத் தெளிவாகச் சுடரொளி அறக்கட்டளையை நிறுவியவரின் முகத்திரை நூல் நூலாகக் கிழித்தெறியப்பட்டிருந்தது.

உண்மையிலேயே அவற்றையெல்லாம் கண்டபிறகு கரிகாலனுக்குள் லேசான நடுக்கம் பிறந்தது.சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படும், போற்றப்படும்ஒரு மனிதனின் மறுபக்கம் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்குப் பாவச் செயல்களால் நிரப்பப்பட்டிருந்தது.
 
Top Bottom