கண்ணம்மா.
அத்தியாயம் 14.
கூடத்தில் அமர்ந்திருந்த மலர் இல்லத்து உறுப்பினர்கள் தொலைக்காட்சியில் கவனமாக இருந்தனர். சடகோபநாற்றியக் குற்றச் செயல்கள் ஒவ்வொன்றாக வெளிவர வெளிவர நெஞ்சு காந்தியது அவர்களுக்கு. ஒருவருக்கும் உணவு உள்ளே இறங்கமறுத்தது.
தங்கள் வீட்டு காமாட்சியையும் இத்தகைய குணம் கெட்ட வல்லூறுகள் அல்லவோ வதைத்தன?இதற்கெல்லாம் விடிவுகாலம் பிறப்பது எப்போது?
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய்ச் செய்தித்தளங்களை முற்றுகையிடும் இப்படியான கொடூர நிகழ்வுகள்,எல்லோரினது மனதிலும் ஆதங்கத்தைத் தாண்டிய ஆயாசத்தைத் தோற்றுவித்தது.
சடகோபனால் சீரழிக்கப்பட்ட மாணவியரின் புகைப்படங்களைப் பார்க்கப் பார்க்க
உள்ளம் எரிதனலைச் சுமந்தது. தொலைக்காட்சியிலேயே நிலைத்திருந்த மீராவின் பார்வை, சட்டெனத் தன் பெறாமகளைத் தழுவக், கீழே அமர்ந்து வீட்டுப் பாடங்களை
எழுதிக் கொண்டிருந்த நற்றமிழை, நொடியும் தாமதிக்காமல் வாரியணைத்துக் கொண்டு
தன் அறைக்குள் சென்று மறைந்தாள். பார்த்திருந்த அனைவராலும் மீராவின் எண்ண ஓட்டத்தைக் கணிக்கமுடிந்தது.
"முருகா நிதம் உன்னையே நினைச்சுகிட்டிருக்கிற எங்களக் கொஞ்சம் கண்கொண்டுதான் பாரேன். அந்தப் பிள்ளைங்க என்ன தப்புச் செஞ்சுச்சுங்க? நல்லா படிச்சு முன்னேறி வரணும்னு ஆசைப்பட்டதுக்கா இவ்வளவு பெரியத் தண்டனை! பொட்டப் புள்ளைங்களப் பெத்தவங்க எந்நேரமும் வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டுத்தான் சுத்தணுமா? தப்புச் செஞ்சவன் இங்கக் கொஞ்சங்கூட ஈன மானமே இல்லாம தலைநிமிர்ந்து ஒலாத்துவாங்கல்ல? என்னப்பா உன்னோட நியாயம்? ஆனா ஒன்னு. இதுவர எங்களுக்கு நீ செஞ்சதே போதும் அதுவே ஆயுசுக்கும் எங்களப் போட்டு வாட்டும். இனியும் எங்களுக்கு ஏதாவது கஷ்டத்தத் தந்துடாத அதத் தாங்கிக்கிற சக்தி எங்க யாருக்குமே இல்ல."
எனத் தன்னைப் போலக் கூறிய பர்வதம் பாட்டி அறைக்குச் செல்லக் கூடத் தெம்பற்றவராகக் கூடத்து மூலையிலேயே சுருண்டுகொண்டார்.
மீரா அறைக்குள் சென்ற மறுகனமே மகிழினியனும் நவிலனும் அங்கு விரைந்திருந்தனர்.
நற்றமிழை நெஞ்சோடு அணைத்துப் பிடித்த மீராவின் விழிகள் குளமாகின. நடுக்கம் கொண்டக் கைகள் இரண்டும் பெண்ணவளின் மனத்துயரை விளக்குவதாய்.
"என்ன மீரா? இப்ப நீ எதுக்கு அழற? எனத் தன்னைக் குழப்பத்தோடு ஏறிட்டு வினவிய
நற்றமிழைக் கட்டிக்கொண்டு அழுகையில் கரைந்தாள் மீரா.மீரா அழுவதைப் பார்த்துக் குழந்தைகள் மூவரும் மெல்ல அழுகைக்குத் தாவினர்.
"எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காம போய்ப் படுத்துத் தூங்குங்க எல்லோரும்.
மீராவையும் குழந்தைகளையும் நான் பார்த்துக்கிறேன்." எனக் கூறி பெரியவர்களை உறங்க அனுப்பிவைத்துவிட்டுத் தங்களின் அறைக்கு வந்தான் வசந்தன். அவன் எண்ணியதைப் போலவே மீரா அங்கு அழுதுக் கொண்டிருந்தாள். குழந்தைகளும் சினுங்கத் துவங்கியிருந்தனர்.
"அப்பா அம்மாவ அழ வேண்டாம்னு சொல்லுங்க."எனத் தேம்பியவாறு தாவிச்சென்று வசந்தனின் கால்களைக் கட்டிக்கொண்டான் மகிழினியன்.
"ஒன்னுமில்ல கண்ணா அம்மா சரியாயிடுவா."
என்றவாறு அவனைத் தூக்கிக் கொண்டு மீராவினருகில் சென்றான் வசந்தன்.
"செல்லம்மா என்னடி இது?முதல்ல கன்னத் தொட நீ. குழந்தைங்க எல்லாம் எப்படிப் பயந்துபோயிருக்காங்க பாரு?" எனச்சற்றுக்காட்டமாகவே வசந்தனின் வார்த்தைகள் வெளிவந்தன.
அதற்குச் சற்றும் ஒப்பாமல் கணவனின் கைகள் மனையாளைத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டன.
"என்னால முடியலங்க." என விம்மலுடன் மொழிந்தவளைத் தட்டிக் கொடுத்தான் வசந்தன்.
வெகுநேரம் அழுததாலோ, கூடிப்போன மன அழுத்தங்களாலோ இல்லை கணவனின் கையணைப்புத் தந்தக் கதகதப்பாலோஅல்லது இவை அனைத்துமே ஒருங்கே சேர்ந்ததாலோ என்னவோ சற்றுநேரத்திற்கெல்லாம் வசந்தனின் மார்பிலேயே தூங்கியிருந்தாள் மீரா. அவள் விழித்துவிடாதவண்ணம் மெதுவாக அவளைப் படுக்கையில் நேராகக் கிடத்திவிட்டுப், பிள்ளைகளையும் சமாதானம் செய்து தூங்கவைத்த வசந்தனின் நித்திரை எங்கோ தொலைந்துபோனது.
இந்த ஐந்து வருடங்களில் மீரா நிறையவே மாறியிருந்தாள். அவளது இயல்பை மொத்தமாகத் தொலைத்திருந்தாள். சுருங்கச் சொல்லவேண்டும்மெனில் மீரா மீராவாகவே இல்லை. ஆம் வசந்தனை மொத்தமாகத் தனக்குள் வாரிச்சுருட்டிக் கொண்டச் சூறாவளி இவளில்லை. அவளது அகராதியில் அமைதியென்ற சொல்லுக்கு இடமே கிடையாது. ஓயாமல் சலசலக்கும் அருவி அவள். குறும்பு சேட்டைகளின் களஞ்சியம் அவள். மற்றவர்களின்மீதான அவளது பாசத்தைக் கூட அதிரடியாகத்தான் வெளிப்படுத்துவாள்.
அப்படியானவள் இன்று தேவையைத் தாண்டி அதிகம் பேசுவதே இல்லை. அவள் ஒற்றைப் புன்னகை உதிர்ப்பதே அபூர்வமாகிப் போனது. மலரினியின் இறப்பால் விளைந்தப் பாதிப்பு இதுவென்றாலும், முற்றும் முழுவதுமாக சுயத்தினைத் தொலைப்பது
வருத்தத்திற்குரிய விடயமாகிற்றே? எத்தனை முயன்றாலும் வசந்தனால் பழைய மீராவை மட்டும் வெளிக்கொனரவே முடியவில்லை.
அவனுக்கு நத்தையாக ஓட்டுக்குள் சுருங்கிக்கொள்ளும் இந்த மீரா வேண்டாம்.
யோசித்துப் பார்க்கையில் அவளுக்கு அதீத அழுத்தங்களேதும் தராமல் எல்லாவற்றிலுமிருந்து பொறுமையாகத் தன்னைத்தானே மீட்டுக் கொள்ளட்டும் என்று நினைத்து அவளை அவள் போக்குக்கு தான் விட்டது தவறு என்பதை வசந்தன் உணர்ந்து கொண்டான்.,
ஆமாம் மீண்டுவரவேண்டும்; நிகழ்ந்தேறிய அத்தனை அனர்த்தங்களில் இருந்தும்
மீண்டு நிச்சயம் எழுந்து நிற்கத்தான் வேண்டும்.மழலையெனத் தவழ்வதும்,
பின் தத்தித் தத்தி நடப்பதும், இலக்கினை நோக்கி ஓய்வின்றி ஓடுவதும், காலிடறிக் கீழே விழுவதும், சூழ்ச்சிகளால் வீழ்த்தப்படுவதும், தோல்வியை வென்றிட வீறுகொண்டெழுவதும், பின் முதலிலிருந்து தவழத் துவங்கிப் படிப்படியாக
முன்னேற்றம் பெறும் சுழற்சிதானே வாழ்க்கை? இதில் வசந்தனுக்கும் மீராவுக்கும் மட்டும் என்ன விதிவிலக்கு இருந்துவிடப் போகிறது?
இவற்றையெல்லாம் நினைத்தமாத்திரத்திலேயே தொண்டையைக் கவ்விப் பிடித்தக்
கடும் வலியை உமிழ்நீரோடு சேர்த்து விழுங்கினான் வசந்தன்.அவனது நினைவுகளெல்லாம் ஓயாமல் மீராவையே வட்டமிட்டன. அவனுக்கு அவனது மீரா; வசந்தனை முழுமைப் பெற்ற மனிதனாக உருமாற்றிய அந்த மீரா வேண்டும்.
காரணமேயில்லாமல் தான் அவளது வாயில் அவலாக அரைபடவேண்டும்; அவள் தரும் எண்ணற்ற அடிகளைச் சலித்துக் கொண்டே வாங்கவேண்டும். எதற்கெடுத்தாலும் அவளுடன் தர்க்கம் புரியவேண்டும்; அவன் எதிர்பாராத சமயம் அவள் அவனது மண்டையில் வலிக்கவைக்கும் குட்டுகளை வேறுவகையில் அவளுக்குத் திருப்பித் தரவேண்டும்; அவள் அவனைக் கிள்ளும் சமயம் வேண்டுமென்றே வலிப்பதுபோல் பாவனை செய்து,பர்வதம் பாட்டியிடம் பேச்சு வாங்கவைத்து, அதில் தான் குளிர் காயவேண்டும். எல்லாவற்றிற்கும்மேலாக அவள் அவனை வாய் நிறைய வாத்தி என்று அழைக்கவேண்டும். என்றெல்லாம் அவனது இதயம் ஏங்கித் தவித்தது.
வாழ்க்கையை இப்படியும் வாழலாம் எனக் கற்றுத் தந்துவிட்டு, அவனுக்கு இல்லறத்தின் அழகியலைக் காண்பித்த அவளின் இயல்பு இந்தச் சில வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து, ஒன்றுமில்லாமல் மறைந்தே போயிற்று. மீரா அவளுக்கெனத் தற்போது போட்டுக் கொண்டிருக்கும் வேலிகளையெல்லாம் அடியோடு தகர்த்தெறியவேண்டும் என்ற குறிக்கோளுடன் புலர்ந்தும் புலராத அந்தக் காலைப் பொழுதில் மனதை ஒருநிலைப் படுத்தவேண்டி, மலரில்லத்தைச் சுற்றி நடக்கத் துவங்கினான் வசந்தன்.
எந்தவொரு மாற்றமுமின்றி இந்தச் சில வருடங்களைப் போலவே மூன்று நாட்கள் கடந்திருந்தன. இன்று மீராவிடம் எல்லாவற்றையும் பேசிவிடுவது என்ற தீர்மானத்துடன்
தங்களது அறைக்கு வந்த வசந்தன், ஜன்னல் கம்பிகளைப் பற்றியவாறு மாலைநேர வானத்தில் பார்வைப் பதித்திருந்த மீராவைப் பின்னாலிருந்தவாக்கில் அணைத்துக் கொண்டான்.
கணவனின் திடீர் செய்கையில் சற்றே அதிர்ந்தபோதும் அவனோடு இசைந்து நின்றாள் பெண். இதுவே பழைய மீராயென்றால் வசந்தன் இப்படி அவளைப் பின்னிருந்து அணைக்கையிலெல்லாம், தாமதிக்காமல் அவனது இடுப்பைப் பிடித்துக் கிள்ளிவைப்பாள். வலியில் அவன் முகம் சுருக்கினால் சற்றும் குறையாத வேகத்தோடு
அனங்கவளின் குளிர்ந்த உதடுகள் ஆடவனின் நாசியை மென் தூவலாய்த் தீண்டும்.
இதற்கிடையில் அவளது பேச்சுமட்டும் ஓயவே ஓயாது. கடைசியில் அவன்தான் அவளுக்கு வாய்ப்பூட்டுப் போடவேண்டியிருக்கும் தன் வாயால்.
நினைவுகளின் ஆதிக்கத்தில் வசந்தனின் நேத்திரங்கள் ததும்பின. அவனது எண்ண வீச்சு அவளையும் தீண்டியிருக்கவேண்டும்.
"என்ன?" என்று வினவினாள் அவனை நோக்கித் திரும்பாமலேயே.
மீராவின் ஒற்றைச் சொல் கேள்வியில் பெருமூச்செறிந்தவன்,
"இன்னைக்கு என்ன நாளுன்னு ஞாபகம் இருக்கா செல்லம்மா?"எனக்கேட்டான் மென்மையாக.
"ம்" என்றாள் பதிலளிக்கும் விதமாக
சட்டென அவளது தோளில் தன் தலையைச் சாய்த்தான் வசந்தன்.. பெயர் தெரியாத உணர்வொன்று அவனது இதயத்தை அழுத்திப் பிடித்தது.
"போதும் செல்லம்மா; அளவுக்கதிகமாவே உன்ன நீயே வருத்திக்கிட்ட. நீ நீயாவே இல்ல செல்லமா அது உனக்குப் புரியுதா? இப்படி உனக்கான வட்டத்தை நீ சுருக்கிக்கிறதாலையோ, எதிர்மறை சிந்தனைகளிலேயே உழல்றதாலையோ உன்னால நம்மளோடப் பாப்பாவத் திரும்பக் கொண்டு வந்துறமுடியுமா? ஒருவேள முடியும்னா சொல்லு நானும் உன்னப் போலவே இருந்துடுறேன்ன்.எனக்கும் என்னோடக் குட்டிமா திரும்ப வேணுமே;" என்றவனின் குரல் நடுங்கியது. இருந்தும் விடாமல் பேச்சைத் தொடர்ந்தான்.
"நம்ம பாப்பாவோட இறப்புக்குக் காரணமானவர்களச் சட்டம் தண்டிக்குதோ இல்லையோ
தர்மம் நிச்சயம் தண்டிக்கும்.அந்த நம்பிக்கையில்தான் நானும் வாழ்க்கைய ஓட்டிகிட்ட்டிருக்கேன். இதத் தவிர வேற வழியில்ல நமக்கு. இப்படியே தங்களைச் சூழும் துன்பங்களைத் தாங்கமுடியாமல் ஒவ்வொருத்தரும் நொடிஞ்சுபோகத் தொடங்கினா கடைசில இந்த உலகத்துல மனுஷங்களே இருக்கமாட்டாங்க செல்லம்மா. அதனால எல்லாத்துலயிஇருந்தும் மெல்லமெல்ல வெளிய வா. அதுதான் உனக்கும் நல்லது நம்மளோடக் குழந்தைகளுக்கும் நல்லது. இப்போ உன்னோடப் பொறுப்புல மூணு குழந்தைங்க வளர்றாங்க. உன்னச் சார்ந்த எல்லாமே நம்ம பிள்ளைகளையும் பாதிக்கும். அத நினைவிலவச்சுச் செயல்படு."என்று மொழிந்தவன்,
"கூடவே எனக்கும்எல்லாமே நீதான் செல்லம்மா.இந்த மீராதான் வசந்தனோட உயிர்நாடியே. மீராவத் தாண்டி வசந்தனுக்கு எதுவுமே தெரியாது செல்லம்மா.
மீராங்குற ஒருத்தி இல்லனா இந்த வசந்தன் வெறும் சதைப் பிண்டந்தான். அதையும் நினைவில வச்சுக்கோ..உன்கிட்ட நான் யாசகமாக் கேக்கிறேன் செல்லம்மா தயவுபண்ணி என்னோட மீராவ ஏங்கிட்டயே குடுத்துடு. அவளால என்னோட அரவணைப்புஇல்லாம இருக்கமுடியாது.அவளுக்கு என்னோட சண்டை போடாமயும் இருக்கத் தெரியாது. அதைவிட ஒருநாள்ல அவளோட வாயிலிருந்து ஓயாம வெளிவரக்கூடிய ஒரே வார்த்த
"வாத்தி." அவளுக்கு அவளோட வாத்தி வேண்டாமான்னு கேட்டுச் சொல்லு.' எனக் கூறியவனின் நேத்திரங்கள் உடைப்பெடுத்தன.
தன் தோளில் ஈரத்தை உணர்ந்த மீரா, பதறிப்போய் வசந்தனின் புறம் திரும்பினாள்.
கலைந்தத் தழையும் சிவந்த முகமுமாய் விழிகளில் நீர் பொங்கத் தன்னையே தன்னிடம்
யாசித்துநிற்கும் கணவன்பால் மனம் கசிய,
"அச்சோ என்ன இது? இதெல்லாம் சுத்தமா நல்லாவே இல்ல.சின்ன நொள்ளனு நினைப்பா உங்களுக்கு? இப்படிக் கண்ணுல தண்ணி வச்சுட்டிருக்கீங்க?"என மெளிதாக அதட்டியவள் அவனது கண்களைத் துடைத்துவிட்டாள்.
மீராவின் அந்த அதட்டல் வசந்தனின் நெஞ்சத்தில் தேனை வார்த்தது. எப்படியும் அவளை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் அவளைத் தனக்குள் இன்னும் இறுக்கியபடி
பேச்சைத் தொடர்ந்தான் வசந்தன்….