• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தமிழ் - 16

Vishakini

Moderator
Staff member

கண்ணம்மா.

அத்தியாயம் 16,

"கேஸ் எல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு பிறைசூடன்? கொஞ்சமாவது முன்னேற்றம் ஏதும் இருக்கா?" எனத் தனக்கெதிரில் அமர்ந்திருந்த பிறைசூடனை நோக்கிக் கேட்டான் கரிகாலன்.

"இல்ல சார். இப்பவரைக்கும் குற்றவாளிய எங்களால கண்டுபிடிக்கவே முடியல. எவ்வளவு தேடியும் அதுசார்ந்த தடயங்கள்கூட அகப்படமாட்டேங்குது. எனக்கு என்னவோ நம்ம போற பாதையே தப்புன்னு தோணுது." என மொழிந்தான் பிறைசூடன்.

"சொல்லவர்றதக் கொஞ்சம் தெளிவா சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும் பிறைசூடன்.
ஏற்கனவே சடகோபன் விஷயத்தால ஒரே தலைவலியா இருக்கு. இதுல நீங்களும் பீடிகைப் போடாதீங்க." என்றவனின் குரலில் அத்தனை அயர்ச்சி.

அப்போதுதான் கரிகாலனை ஆழ்ந்து நோக்கினான் பிறைசூடன். வழக்கத்திற்குமாறாக கரிகாலன் ஓய்ந்து காணப்பட்டான். தடித்துக் கிடந்த அவனது கண்ணிமைகள்
அவனது தூக்கமின்மையை எடுத்து இயம்புவதாய்.

"சடகோபன் கேசுக்கு என்ன சார்? அந்த ஆளுதான் திடீர் மாறடைப்பால போய்ச் சேர்ந்துட்டானே. அவனெல்லாம் பூமிக்குப் பாரமா இத்தனநாள் வாழ்ந்ததே பெருசு. ஆனா அவனோட அல்லக்கைகளையும், அவன்கூட கூட்டணி வச்சுக்கிட்டவங்களையும்
எப்படியாவது தேடிக் கண்டுபிடிச்சு உண்மையான போலீஸ் டிரீட்மென்ட்னா எப்படியிருக்கும்னு காட்டித் துடிக்கத் துடிக்கச் சாவடிக்கனும் சார்." என்றான் ஆவேசத்துடன்.

"இவன் வேற மனுஷனுடைய நிலைமை புரியாம பஞ்ச் டயலாக் பேசிக்கிட்டு." என பிறைசூடனைப் பார்த்து மனதிற்குள் அலுத்துக் கொண்டே, "அதையெல்லாம் நான் பாத்துக்குறன் பிறைசூடன். இப்ப நீங்க இந்த கேசுக்கு வாங்க." என்றான் கரிகாலன் சற்றே கண்டிப்பான குரலில்.

"அதான பார்த்தேன்; இந்த ஆளுக்கும் இவரோட கமிஷனர் அங்கிளுக்கும் நல்லது சொன்னாலே பிடிக்காதே."என நினைத்த பிறைசூடன்,

"சார் இத்தனநாளும் நாம பதிவு செய்யப்பட்ட வழக்குகளவச்சுத்தான் குற்றவாளியத் தேடிக்கிட்டு வரோம். அதன் அடிப்படையில பாக்கும்போது ,அவனால நம்ம அலுவலகத்துக்கு நேரடியா அனுப்பிவைக்கப்பட்ட அஞ்சு தாதாக்களோடச் சாம்பல் பொட்டலங்கள மையமா வச்சுத்தான் இப்போ இந்த வழக்கு இயங்குது. ஆனா ஒரு வாட்ச்மேனோட மர்மமான மரணம்தான் வழக்கின் ஆரம்பப் புள்ளி. அவரோட பேர் கூட சம்பந்தம்.அவரு ஒரு பள்ளியோடப் பாதுகாவலர். சுமார் 75 வயசு இருக்கும் அவருக்கு.
வழக்கம்போல வேலைக்குக் கிளம்பிவந்தவரு திரும்ப வீட்டுக்குப் போகல. சம்மந்தம் வயசானவர் என்கிறதாலேயே அவருக்கு நைட் டூட்டிக் குடுக்கப்படல. அவரோட வேலைநேரம் காலை ஆறுமணில இருந்து சாயங்காலம் ஆறுமணி வரைக்கும்தான். ஆனா இரவு மணி பன்னிரண்டை நெருங்கியும் கூட சம்பவம் நடந்த அன்னைக்கு சம்பந்தம் வீட்டுக்குத் திரும்ப வரல.அவரோடத் தொலைபேசியும் இயக்கத்துல இல்லாம இருந்ததுதான் நிலைமையோடத் தீவிரத்த எல்லாருக்கும் உணர்த்துச்சு. அந்தச் சமயந்தான் சம்பந்தத்தோடக் குடும்ப உறுப்பினர்களும் பள்ளித் தரப்பினரும் விடையத்த நம்ம பார்வைக்குக் கொண்டுவந்தாங்க.சம்பந்தத்தோட விடயத்த முறையா வழக்குப் பதிவு செஞ்சு நாமும் அவரக் கண்டுபிடிக்கிற வேலையில தீவிரமா இறங்கினோம்.
சரியா ரெண்டுநாள் கழிச்சு யாருமே எதிர்பாக்காத வகையில, சம்பந்தத்தோட உடைகள்மட்டும் பள்ளிக்கூடத்திற்குப் பின்னாலிருந்தப் புதர்களுக்கு மத்தியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்துல வேற ஏதும் தடயங்கள் கிடைக்குதான்னு மறுபரிசோதனை செய்ய நான் போனப்பதான் ஏன் கண்ணுக்கு அந்த அம்புக்குறித் தென்பட்டுச்சு. என்று கூறியவனின் நினைவலைகள் அந்தநாளை நோக்கிப் படையெடுத்தன.

"சார் எக்ஸாக்டா இந்தயிடத்துலதான் சம்பந்தத்தோட உடைகள் ஒரு துணியில சுத்தி வைக்கப்பட்டிருந்துச்சு. அதுதவிர இங்க வேற எதுவும் இருக்கிறமாதிரி எங்களுக்குத் தெரியல சார்." எனக் கூறிக்கொண்டே பிறைசூடனை அந்தப் புதர்கள் நிறைந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றார் ஆய்வாளர் ஒருவர். பிறைசுடனும்
ஆய்வாளர் கூறிய தகவல்களை நன்கு உள்வாங்கிக் கொண்டான். கூடவே அந்தச் சுற்றுப்புறச் சூழலையும் கூர்மையாக அவதானிக்கத் துவங்கினான்..

அச்சமயம் தவறுதலாகத் தனது கைபேசியைக் கீழே நழுவவிட்டிருந்தான் பிறைசூடன்.
அதையெடுக்க அவன் குனியும்போதுதான் அந்த அம்புக்குறி அவனது பார்வை வட்டத்தில் விழுந்தது. அந்த அம்புக்குறியின்மீது ஒருவித ஆராய்ச்சிப் பார்வையை வீசிய பிறைசூடன், சற்று முன்னேறி அதை நிதானமாக உற்றுநோக்கினான். அந்தக் குறிப்பிட்டச் சிறிய பகுதியில்மட்டும் சிறிய கோபுரத்தைப் போல மண் குவிக்கப்பட்டு, அதன் உச்சியில் மரப்பட்டையால் செய்யப்பட்ட அம்புக்குறி ஒன்று நட்டுவைக்கப்பட்டிருந்தது.

சந்தேகத்துடன் அந்த அம்புக்குறியை அகற்றிவிட்டு, அந்த மண் குவியலைக் களைத்துப் போட்டான் பிறைசூடன். வண்ணக் காகிதம் சுற்றப்பட்டச் சிறு பெட்டி ஒன்று அங்கு அவனது கண்களுக்குப் புலப்பட்டது. உடனே பிறைசூடனின் புலன்கள் அனைத்தும் விழித்துக் கொண்டன. கையுறையினை அணிந்துகொண்டு அந்தப் பெட்டியைக் கையில் எடுத்தான் பிறைசூடன்.

"மதிப்பிற்குரியக் காவல்துறை நண்பர்களுக்குச் சமர்ப்பணம்." என்ற வாசகத்தைத் தாங்கியிருந்தது அந்தப் பரிசுப் பெட்டி. தாமதிக்காமல் அதேநேரம் வெகு கவனமாக
அந்தப் பெட்டியைத் திறந்தான் பிறைசூடன். அந்தப் பெட்டிக்குளிருந்தப் பொருள் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்தது. சுருக்குப்பை ஒன்று பெட்டிக்குள் வீற்றிருந்தது.. அதைப் பிரித்துப் பார்த்த பிறைசூடன், ஒருகணம் விக்கித்துநின்றான்.

உள்ளே இருந்தப் பொருள் அனைவரது முகத்திலும் கலவையான உணர்வுகளைத் தோற்றுவித்தது. அந்தப் பரிசுப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது தனியாக அறுத்தெடுக்கப்பட்ட ஒரு ஆணுறுப்பு. நம்பமுடியாத திகைப்பில் எல்லோரும் திடுக்கிட்டுநின்றனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தன்னைச் சுதாரித்துக் கொண்ட பிறைசூடன், சற்றும் நேரத்தைக் கடத்தாமல்மருத்துவக் குழுவின் உதவியுடன்
வெட்டப்பட்ட உறுப்பைவைத்து அது சம்பந்தனுடையதுதான் என்பதை மருத்துவ அறிக்கையின்மூலம் உறுதிப்படுத்தினான். அன்றிலிருந்து இன்றுவரை காவல்துறைக்கும் கொலையாளிக்கும் இடையேயான கண்ணாம்பூச்சி ஆட்டம் தொய்வின்றித் தொடர்ந்துவருகிறது.

நிகழ்ந்தவற்றையெல்லாம் மீண்டும் ஒருமுறை கரிகாலனுக்கு நினைவூட்டிய பிறைசூடன்,

"இந்தச் சம்பவத்துக்கு அப்புறம்தான் எதிராளியோட ஆட்டம் அதிகமாச்சு. இத்தனைக் குறைகளும் நடந்துருச்சு. நடந்த ஒவ்வொன்னையும் திரும்பத் திரும்ப மனசுல
அசபோட்டுப் பார்க்கும்போது எனக்குக் கிடைச்சப் பதில் கொலையாளியோட முக்கிய இலக்கே காவல்துறை அப்படிங்கிறதுதான்." என்றான் உறுதியாக.

"இதை எப்படி அவ்வளவு உறுதியாச் சொல்றீங்க பிறைசூடன்?"என நெற்றிப் பொட்டை அழுத்திவிட்டவாறு கேட்டான் கரிகாலன்.

"இதுல யோசிக்க ஒண்ணுமே இல்ல சார். அந்தப் பரிசுப் பெட்டியில எழுதப்பட்டிருந்த "மதிப்பிற்குறிய காவல்துறை நண்பர்களுக்குச் சமர்ப்பணம்."அப்படிங்கற வாசகம் ஒன்னு போதும் நாமதான் அவங்களோட முக்கியக் குறின்னு தெரிஞ்சுக்க. உண்மையச் சொல்லனும்னா இந்த வழக்கு நம்ம கட்டுப்பாட்டிலேயே இல்ல. அவனோடத் திட்டத்தின்படிதான் வழக்கின் போக்கு நகருது. அதுல நாமளும் அடக்கம்.இப்போ இந்த விஷயத்த மனசுல வச்சுக்கிட்டு அடுத்தடுத்து நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும் ஒரே நேர்கோட்டில் இணச்சுப் பார்த்தா எல்லாம் ஒன்னோட ஒன்னு தொடர்புடையதாதானே தெரியுது? இந்த ஒரு வாரமா இந்த வழக்குச் சம்பந்தப்பட்டக் கோப்புகளத்தான் நான் ஆராஞ்சுட்டிருந்தேன். எல்லா நிகழ்வுகளையும் தெளிவா உள்வாங்குன சமயம்,எனக்குக் கிடைச்ச க்ளூ கொலை செய்யப்பட்ட எல்லோருமே குற்றவாளிகள் அப்படிங்கிறதும், குறிப்பா அவங்க அத்தனைப் பேருமே பெண்களப் பாலியல் ரீதியா அச்சுறுத்தி, அவங்களோட வாழ்க்கையச் சீறழிச்சவங்கங்கறதும்தான். எனக்கு என்னவோ இதுக்குப் பின்னாடி வேற ஏதோ ஒரு வலுவான காரணமும் நோக்கமும் அவசியம் இருக்கிறதா தோணுது. இனி இது எல்லாத்தையும் மனசுல வச்சுத்தான் அடுத்தக் கட்ட வேலைகளப் பார்க்கத் தொடங்கணும். இதக் கூடிய சீக்கிரத்துல ஒரு முடிவுக்குக் கொண்டுவர என்கிட்டேயும் சில யோசனைகள் இருக்கு. அதச் செயல்படுத்திட்டு நமக்குச் சாதகமான விடயங்களோடத் திரும்பவரேன்சார்." என மொழிந்தவன் கரிகாலனிடம் ஒரு கைக்குழுக்களோடு விடைபெற்று அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தான்.

அதேநேரம் பிறைசூடனின் வாகனத்தை இருசக்கர வாகனம் ஒன்று உரசியபடிச் சென்று மறைந்தது. அக்காட்சியைக் கண்ட பிறைசூடனின் நேத்திரங்கள் ஒளிர்ந்தன. "The countdown starts now." என நாக்கைக் கன்னத்தில் முட்டியவாரே மர்மப் புன்னகை ஒன்றைச் சிந்தியவாறு சொன்ன பிறைசூடன், தன் வாகனத்தில் ஏறி அமர்ந்தான்.வாகனத்துக் கதவின் உட்புறத்தில் ஒட்டப்பட்டிருந்த "தர்மத்தின் வாழ்வுதனைச் சூதுகவ்வும். ஆனால் மீண்டும் தர்மம் வெல்லும்." என்ற வாசகம் பிறைசூடனைச் சிந்திக்கவைத்தது. அந்த வாசகத்தைத் தன் விரல்களால் வருடிக் கொண்டே

"அதையும் பார்க்கலாமே;"எனக் கூறினான் அதரங்களை ஆட்கொண்டக்குறுஞ்சிரிப்போடு.

"அங்கிள் நாம நினைக்கிறதவிடப் பிரச்சனையோட வீரியம், ரொம்ப ரொம்ப பெருசா இருக்கு. கொஞ்சநேரத்துக்கு முன்னாடிதான் பிறைசூடன் ஆபீசுக்கு வந்துட்டுப் போனான். அவன் சொன்னதையெல்லாம் கேட்கக் கேட்கத் தலையே வெடிக்கிறமாதிரி ஆயிடுச்சு. அதோட நான் நினைக்கிறமாதிரி ஏதோ நடந்துருச்சுன்னா சிக்கல் இன்னும் பெருசாகி நமக்குத்தான் சேதாரத்தை ஏற்படுத்தும். இதப் பத்தியெல்லாம் கொஞ்சங்கூட கவலைப்படாம யாருக்கு வந்த விருந்தோங்குறமாதிரில்ல நடந்துக்கிறீங்கஉங்க மனசுல என்னதான் அங்கிள் நெனச்சிட்டிருக்கீங்க?" எனப் பொறிந்த கரிகாலனை அமைதியாகப் பார்த்த மார்த்தாண்டம்,

"எனக்கும் எல்லாம் தெரியும்டா. நேரம்வரும்போது இந்த மார்த்தாண்டத்தப் பத்தி அவன் முழுசா தெரிஞ்சுக்குவான். என்னையே சுத்தல்ல விட்றானா அவனோடத் திமிருக்கும், தெனாவட்டுக்கும் தக்க மரியாத செய்யணுமில்லையா? அதுக்காகத்தான் காத்திருக்கேன். இந்தமாதிரி பூச்சாண்டிக் காமிக்கிற அவனுக்கெல்லாம் அடங்கிப் போற ஆள் நானில்ல.." என்றவரின் விழிகள் பழிவெளியில் மினுமினுத்தன.

"லூசுமாதிரி ஒளறாதீங்க அங்கிள்; எதிராளி யாருன்னு தெரியாம இத்தனை வீர வசனம் தேவையா?" என எரிந்துவிழுந்தான் கரிகாலன். அலுவலகத்தில் கரிகாலனிடம் பிறைசூடன் பகிர்ந்துகொண்ட விடயங்கள் கரிகாலனைப் பெரிய அளவில் பாதித்திருந்தன.

பிறைசூடன் அளவிற்குக் கூட வழக்கின் போக்கை அவனால் யூகிக்கமுடியவில்லை அந்த அளவில் ஆத்திரம் அவனது கண்ணை மறைத்தது. இதைப் பற்றியெல்லாம் தீரப் பேசித் தெளிவாக ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதற்காகவே அவன் மார்த்தாண்டத்தைப் பார்க்கவந்தது. அவர் ஆனால் அவனது ரத்த அழுத்தத்தை எகிரவைத்துக் கொண்டிருந்தார்.

"ஏண்டா கோபப்படுற? அதுதான் நமக்குனே ஒரு அடிமை சிக்கிருக்கானே. அட பிறைசூடனத்தான் சொல்றேன். இப்போ அவந்தான் நம்மளோடத் துருப்புச் சீட்டு. என்னோட எண்ணம் சரிநா எதிராளித் தரப்பு இந்நேரம் பிறைசூடனக்
கண்காணிக்கத் துவங்கியிருக்கும். எப்படியும் அவன் ஒரு நியாயவாதி. அவனவச்சுக் கூடத் தனக்குச் சாதகமான விஷயங்கள இவன் முடிச்சுக்கப் பாப்பான். அது சரிவருமா இல்லையான்னு தெரிஞ்சுக்கவே பிறைசூடனக் கண்காணிக்கவும் செய்வான். இப்போ இங்கதான் நாமத் தந்திரமா செயல்படனும்."என்றவர் கரிகாலனுக்குச் சில சூட்சமங்களை விளக்கிக் கூறினார்.

அவரது வார்த்தைகளைக் கேட்ட கரிகாலனின் முகமும் இளக்கத்தைப் பூசிக்கொள்ளத் துவங்கியது. அவனது அந்த இளக்கம் சிலநிமிடங்களிலேயே துணி கொண்டு
துடைத்தெறியப்பட்டது சடகோபனின் அடியாட்களான கணேசன் உட்பட ஐவரின் தற்கொலை செய்தியால்தான்.....
 
Top Bottom