கண்ணம்மா.
அத்தியாயம் 17
செந்நிலா முற்றத்துப் பின் கட்டில் அமைக்கப்பட்டிருந்தச் சிறிய தோட்டத்தின் நடுவே
அந்த வானத்தையே வில்லாக வளைத்துத் தனது கீற்றொளியினில் ஆட்சி புரியும் நிலவு மகளின் ஆர்ப்பாட்டமற்ற அழகினை, மர ஊஞ்சலில் படுத்தவாறு ரசித்துக்கொண்டிருந்தாள் செந்தமிழ்.
நிலவனின் கையடக்கப் புகைப்படம் ஒன்று பெண்ணவளின் நெஞ்சத்தில் தஞ்சம் கொண்டிருந்தது.இப்படியான பொழுதுகள் செந்தமிழின் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. தனிமையும் அமைதியுமே செந்தமிழின் உற்றத் தோழிகளாவர்.
பெண்ணவள் இவர்களின்மூலந்தான் தன் வாழ்க்கைக்கான தேவையையும் தேடலையும்
கண்டறிந்தாள் என்றால் அது மிகையல்ல. இவர்களிடந்தான் அவள் அவளாக இருப்பதும்.
எச்சூழ்நிலையென்றாலும் தாயினை நாடும் சேயாய் இவர்களைத் தேடிவந்துவிடுவாள் செந்தமிழ்.
தீர்ப்புகள் ஏதுமில்லாத இந்த அழகிய நட்பு அவளை மென்மேலும் பக்குவப்படுத்தியது. இன்றளவும் இத்தனைக்குப் பிறகும் தூனாய் நின்று பாவையைத் தாங்கிப் பிடிப்பது இவைதான். ஆனால் திடீரென்று அவளது எல்லா வரையறைகளையும் உடைத்துக் கொண்டு, அவளின் வாழ்வில் அத்துமீறி நுழைந்தான் ஒருவன்.
அந்த ஒருவனால் அவளே அவளுக்குப் புதிதாகத் தெரிந்தாள் புதிராகிப்போனாள்.
அவனது பெயரே அவளின் தாரகமந்திரமானது. செந்தமிழின் மொத்த உலகமே நிலவன் என்ற ஒற்றைப் பெயருக்குள் அடங்கிப்போயிற்று. அவளது தவிப்புகள் அத்தனைக்குமான ஒரே இளைப்பாறுதல் நிலவன் என்னும் ஒற்றைச் சொல்மட்டுமே.அந்த ஒரு சொல் தத்தைக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள் ஏராளம்.
இன்றும் அப்படித்தான்!;குழம்பிய குட்டையாய் மனம் கிடந்து அல்லாட, விடைதேடிக் கணவனிடமே சரணடைந்தாள். இதோ இந்த ஊஞ்சலில் கணவனும் மனைவியுமாக
இணைந்து செலவிட்டத் தருணங்கள் கணக்கிலடங்காதவை.மாலைநேரங்களில்
கணவனின் தோளில் சாய்ந்துகொண்டு, அவனது கைப் பக்குவத்தில் தயாரிக்கப்படும்
தேநீரை, அவனுடன் சேர்ந்து ஒரே கோப்பையில் ருசித்தக் கணங்கள் ஒவ்வொன்றும் அழகியக் கவிதையாய் செந்தமிழின் அகக்கண்ணில் மின்னிமறைந்தது.
இரவுநேரங்களில் நிலவொளியில், இயற்கையின் லாலிதத்தில் நிலவனின்மீது ஜம்மென்று படுத்துக்கொண்டு அவனதுமார்பில் பெண்ணவள் தலைவைத்து,
ஆணவனின் இதயத்துடிப்பைக் கேட்டுக்கொண்டே மெல்லக் கண்ணயர்ந்த நாட்களும்,சமயத்தில் கொண்டவனின் கைகளுக்குள் பாகாகக் கரைந்த நிமிடங்களும்,
மங்கையைச் சிளிர்க்கவைப்பதாய். நீண்ட நாட்களுக்குப் பிறகு கணவனின் அறுகாமைக்காய் செந்தமிழின் மனது பெரிதும் ஏக்கம் கொண்டது. அந்த ஒப்பற்றச் சிறகுகளுக்குள் அடைக்கலமாகிவிடச் சொல்லி கெஞ்சிப் பரிதவித்தது.
"நிலவன்;" மன்னவனின் பெயரை உச்சரித்த மங்கையின் உதடுகள் நடுங்கின.நிலவனின் புகைப்படத்தை நெஞ்சோடு அழுத்திக்கொண்டு அவனது பெயரை மீண்டும் மீண்டும் உச்சரித்தாள். அந்த அழைப்புகளின்மூலமாகவே அவள் அவனிடம் தன் மனதைத் திறந்திருந்தாள் செந்தமிழ். சற்றுநேரத்திலேயே இயல்பிற்கு மீண்டிருந்தாள் செந்தமிழ்.
நிலவன் என்னும் மந்திரக்கோல் அவளை இயல்பாக்கியிருந்தது.,பெண்ணை நிதானமாகச் செயல்படவும் அறிவுறுத்தியது.எப்போதும்போலத் தங்களது இந்தப் பிணைப்பினை எண்ணி வியந்தப் பாவையின் கன்னத்தில் மழைத்துளி ஒன்று பட்டுத் தெறிக்கத்,தன்னை மறந்து முத்துமுரல்கள் மின்னப் புன்னகைத்தாள் தத்தை. குளிர்ந்த காற்றும், பெண்ணவளின் நாசியை நிறைத்த முல்லைப் பந்தலின் நறுமணமும் அந்த ஊஞ்சலைப் போலவே செந்தமிழின் இதயத்தைநிலவனூடான இனிய நினைவுகளில் அசைந்தாடச் செய்தது. அய்யாதுரை குடும்பத்தின் பெயர் சூட்டு விழா நடைபெற்ற அந்தநாளை செந்தமிழின் நினைவலைகள் சுற்றிவளைத்தன...
"தமிழு வா வா வந்து நீயும் தம்பி பாப்பாவோடக் காதுலப் பேரச் சொல்லு." எனக் கூறியவாறு செந்தமிழின் தாவணியைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தாள் மலரினி.
"இல்லடா நான் அப்புறம் வரேன்."என்று மலரினிக்குப் பதில் தந்த செந்தமிழ், பலாமரத்தடிக்குச் செல்லத் திரும்பிநாள்.ஏனோ அவளால் அந்த இடத்தில் இயல்பாகப் பொறுந்திப் போகமுடியவில்லை. ஒருவிதச் சங்கட உணர்வு பெண்ணை ஆட்கொள்ளத் துவங்கிய்யிருந்தது.
சற்றுமுன்பு நிலவனுக்கும் அவளுக்கும் இடையே நடந்த விடையங்கள் செந்தமிழைப் போட்டு அலைக்கழித்தன. நிம்மதிக்கும் பயத்திற்கும் இடையில் தத்தளித்தாள் அவள்.
"என்ன நடக்குது இங்க?"! எனச் சிரிப்புடன் வினவியவாறு வந்தான் நிலவன்.: அவனது குரலில் செந்தமிழின் கால்கள் இயங்கமறுத்து அங்கேயே பசைபோட்டு ஒட்டிக்கொண்டன.
"மாமா பாருங்க இந்த தமிழை; தம்பியோடக் காதுலப் பேர் சொல்லச் சொல்லிக் கூப்டா வரமாட்டேங்குறா." என்றாள் மலரினி முகத்தைச் சுருக்கி.
"அடடே இதுதான் விஷயமா? சரி மாமா அத்தையக் கூட்டிட்டுவரேன் நீங்க அப்பா அம்மா தம்பிக் கூடப் போய் நில்லுங்க. எல்லாரும் வந்த உடனே நாம ஒரு குரூப் போட்டோ எடுத்துக்கலாம்." எனக் கூறியவனைக் கண்டு
"உண்மையாவா மாமா?" என்று விழிகளை உருட்டிக் கேட்டாள் குழந்தை.
"ஆமாண்டி தங்கம்; நீ ஓடிப்போய் அம்மா அப்பாவத் தயார்படுத்து. நான் அத்தையையும் மத்தவங்களையும் கூட்டிட்டு வந்துடறேன் ஓகேவா?என்றவன் மலரினியின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டான். குழந்தையும் மாமன் சொல்லைத் தட்டாமல் வசந்தன் மீராவை நோக்கி ஓடினாள்.
"செந்து உன்னோட எண்ண ஓட்டம் எப்படி இருக்கும்னு எனக்குப் புரியுது.. ரொம்பப் போட்டு எதையும் யோசிக்காதமா. என்னமட்டுமே முழுசா நம்பி இந்தக் கையப் பிடிச்சிட்டல்ல?இனி எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். அதோட இங்கே எதுவுமே தப்பா நடக்கப் போறதுமில்ல. அதால பயம் வேண்டாம்." என்றவன் அவளதுத் தோளைச்சுற்றிக் கையைப்போட்டான். அதில் திகைத்துப் போய் நிலவனை ஏறிட்டாள் செந்தமிழ்.
"கையையே பிடிச்சாச்சாம். இனி தோள்லக் கைப் போடுறதுக்கு என்ன?"எனப் புன்னகையுடன் வினவியவன், அவளை அனைத்தவாறே மேடையை நோக்கி முன்னேறினான்.
மேடைக்குச் சென்றவுடன் குழந்தையின் காதில் அவனுக்குச் சூட்டப்பட்டிருந்த மகிழினியன் என்னும் பெயரை மூன்றுமுறை சொன்னாள் செந்தமிழ்.
நிலவன் தன் மருமகனுக்கென்று வாங்கிய கைச் சங்கிலியை மகிழினியனின் கையில் அணிவிக்கும்போதும் சரி, குடும்பப் புகைப்படம் எடுக்கப்படும்போதும் சரி நிலவன் தன்னுடனேயே செந்தமிழைய் வைத்துக்கொண்டான். அவளைத் தன் கையணைப்பிற்குள்ளேயே வைத்திருந்தான். அமுதவல்லியைத் தவிர குடும்பத்தினர் அனைவருமே மனதளவில் செந்தமிழைத் தங்களது மருமகளாக, நிலவனின் மனைவியாக ஏற்றுக்கொண்டனர். அமுதவல்லிக்குமட்டும் உள்ளுக்குள் சிறு நெருடல் இருந்துகொண்டேயிருந்தது.
மகனின் விருப்பத்திற்கு மறுப்புச் சொல்லவும் முடியாமல், அதனை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தடுமாறினார். செந்தமிழின் பின்புறமே அமுதவல்லியின்
இப்படியான மனநிலைக்கு முக்கியக் காரணம்.
செந்தமிழும் பார்வைக் குறைபாடுள்ள பெண். அவளுக்கு முழுமையான பார்வையிழப்பு இல்லையென்றாலும், அவளது உலகம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் மங்கலான நிழல்களால்மட்டுமே நிரம்பியது. அமுதவல்லி வசந்தன் மீரா விடயத்திலும் இதற்காகத்தான் தயங்கினார். இருப்பினும் மகளின் விருப்பத்திற்குமுன்னால் தன் அபிப்பிராயங்கள் தான் பெரிது என அவரால் எதையும் தூக்கிப்பிடித்துக் கொண்டு நிற்கமுடியவில்லை.
சிலதினங்களிலேயே மகள் வாழ்க்கையின்மீதான அமுதவல்லியின் பயம் பனியாய்க் கரைந்துபோயிற்று. வசந்தன் அவரது கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவனாக இருந்தான்.அவரது மகளைக் கையில் வைத்துத் தாங்கினான். இன்றளவும்
மீராவின் உற்றத் துணையாக எல்லா வேலைகளிலும் அவளோடு நிற்கிறான். இருப்பினும் நிலவனின் விடயத்தைமட்டும் அவரால் அப்படியே விட்டுவிடமுடியவில்லை. அதற்காக இவள் உனக்கு வேண்டாமென்று சொல்லி நிலவனின் நிம்மதியைத் தனது மன சஞ்சலங்களுக்கு இரையாக்கவும் அவர் விளையவில்லை.
தாயுள்ளமானது தன் பிள்ளைகளைக் காயப்படுத்த நினைக்குமாய்யென்ன? எனவே தனது தனிப்பட்டக் கருத்துக்களை ஒத்திவைத்துவிட்டுத், தன்னால் இயன்றவரை செந்தமிழுடன் இயல்பாகப் பழகமுயன்றார்
வசந்தனின் மாணவி என்றவகையில் செந்தமிழை முன்பே எல்லோருக்கும் தெரியும்.
தமிழ் இலக்கியத்தில் தனது முதுகலைப் பட்டப்படிப்பைச் சென்ற கல்வியாண்டில்தான் நிறைவு செய்திருந்தாள் செந்தமிழ்.
தாய்மொழியான தமிழின்மீது செந்தமிழுக்கு அதீத பற்று உண்டு. என்பதையும் தாண்டித் தனிப்பெரும் பக்தி இருந்தது அவளுக்கு. இயல்பிலேயே கடவுள் நம்பிக்கையில்லாத செந்தமிழுக்குத் தமிழன்னைதான் கடவுள். இலக்கியங்கள்தான் மனிதனைப் பண்படுத்தும் வேதங்கள். தாய்மொழிதான் அவளின் வழிகாட்டி, ஆசான், பாதுகாவலர் எல்லாமே. தனது பெயரில் இணைந்திருந்த தமிழ், அவளது உயிர்மூச்சிலும் இரண்டறக் கலந்தே கிடந்தது.
ஏதோவொரு பட்டம் வாங்கவேண்டும் என்பதற்காகக் கடனே என்று கல்லூரிக்கு வந்துசெல்லும் மாணவர்களுக்கிடையில்,ஆத்மார்த்தமாகக் கல்வியினை ரசித்து ருசித்துப் பயிலும் மாணவர்கள்தானே வசந்தன் போன்ற பேராசிரியர்களுக்குத் தேவை?
பிறமொழி கலப்பால் உதாசீனம் செய்யப்படும் தமிழ்மொழியானது, முற்றும் முழுதாகத் தனது சுயத்தைத் தொலைத்துவிடுமோ என்று அச்சம் கொள்ளும் தமிழ் ஆர்வலர்களில் வசந்தனும் ஒருவன் என்கையில், தாய்மொழி சார்ந்த செந்தமிழின் பற்றினையும் பக்தியையும் உவமையுடன் வரவேற்றதோடு, அவள் மேற்கொள்ள ஆசைப்பட்டச் சிறு சிறு நூல் ஆய்வுகளுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வந்தான் வசந்தன்.
விடுமுறை நாட்களில் செந்தமிழைத் தனது வீட்டிற்கு அழைத்து அவளுக்கு இருக்கும் சந்தேகங்களைத் தீர்த்து,அது சார்ந்த தெளிவான விளக்கங்களையும் கொடுத்திருக்கிறான்.
இந்தமுறையில்தான் செந்தமிழ் எல்லோருக்கும் பரிச்சயம். தவிர தேர்வுச் சமயங்களில்
நிலவன் செந்தமிழுக்காக உதவி செய்வதும் வாடிக்கையாகிப் போனது. அதுவே செந்தமிழின் நிலவனையும் நட்பு என்னும் புள்ளியில் இணைத்தது.
இதோ இரண்டுவாரங்களுக்கு முன்புதான் எல்லோரும் வீட்டிலிருந்தச் சமயத்தில் "எனக்கு செந்தமிழைப் பிடிச்சிருக்கு. அவளைக் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படுறேன்.
இதப்பத்தி நான் இன்னும் அவக்கிட்டக் கூடப் பேசல.நேரத்தக் கடத்தாம இதப்பத்தி உங்ககிட்டச் சொல்லிடனும்னு தோணுச்சு அதான் சொல்லிட்டேன். ஆடம்பரங்கள் ஏதுமில்லாமல் ரொம்ப இயல்பா எங்களோடக் கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்படறேன்.
செந்தமிழும் அதைத்தான் விரும்புவா. அதுக்குமட்டும் நீங்க எல்லாரும் அனுமதி தரணும்."
என்றவன், அவர்களிடம் இன்னும் சிலவற்றைக் கூறினான். எண்ணற்ற விவாதங்களுக்கும், கலந்துரையாடல்களுக்கும் பின்பு நிலவனின் விருப்பத்திற்கு அனைவரும் இசைந்தனர்.
அமுதவல்லிக்குத்தான் எதிலும் மனம் ஒன்றவில்லை. எல்லாவற்றையும் எண்ணிப் பார்த்தவர் பெருமூச்செறிந்தார். "எது எப்புடியோ. அவங்க நல்லாயிருந்தா சரி." எனத் தனக்குள் சொல்லிக் கொண்டு
வேலைகளில் கவனமானார்.
பெயர் சூட்டு விழா நிகழ்ந்துமுடிந்தக் கையோடு,வீட்டின் நடுப்புறத்தில், குடும்பத்தாரின் முன்னிலையில், செந்தமிழின் கைகளைப் பற்றிய நிலவன், "இந்த நிலவனை உன்னோட வாழ்க்கைத் துணையா ஏற்றுக்கொள்வதில் உனக்குப் பூரணச் சம்மதம்தானே?"
எனக்கேட்டான் குறும்பு புன்னகை மேலிட. அசையக் கூட மறந்தவளாக நடப்பவற்றில் சிலையாக நின்றிருந்தவளின் தலை பெயர் தெரியாத உணர்வு ஒன்று தரைநோக்கித் தாழ்ந்தது.
"ஓய் என்னப் பாரு செந்துமா."என மொழிந்தவாறு அவளது முகத்தை நிமிர்த்திய நிலவன்,
"நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா தன்னையே சசியென்று சரணமேதினேன்." என்றான் ஆழ்ந்தக் குரலில்.
நிலவனின் வார்த்தைகளில் தன்னையும்மீறி செந்தமிழின் வதனத்தில் நாணப் பூக்கள் பூத்துக் குலுங்கின.பெரியவர்கள் வாழ்த்தரிசித் தூவ, செந்தமிழின் சங்கு கழுத்தில் பொன் சங்கிலியிட்டு, அவளைத் தன்னவளாக வரித்துக் கொண்டான் நிலவன். அந்நொடி நிதர்சனத்தின்கனம் தாளாமல் செந்தமிழின் கயல்விழிகள், மெலிதாய்க் கலங்கத் துவங்கின.