கண்ணம்மா.
அத்தியாயம் 22.
வாஞ்சிநாதனின் சடலத்தை ஒருவிதத் திருப்தியுடன் பார்த்தான் பிறைசூடன் டிசிபி. விஷச் செடியொன்றை வேரோடுப் பிடுங்கி எறிந்துவிட்ட நிம்மதி அவனது முகத்தைப் பிரகாசமாக்கியது, இருப்பினும் வாஞ்சிநாதனின் பிரேத உடலைப் பார்க்கப் பார்க்க
பிறைசூடனால் பொங்கியெழும் ஆத்திரத்தைமட்டும் அடக்கவேமுடியவில்லை. இவன் ஒருவனின் பணத்தாசைக்குப் பலியான உயிர்கள் எத்தனை எத்தனை? என்னதான் பிறைசூடன் வாஞ்சிநாதனுக்கு மரணத்தின் கோறமுகத்தைக் காட்டியிருந்தாலும், அது
அவனுக்கான வினைப்பயனே தவிர, பறிக்கப்பட்ட உயிர்களின்பக்கந்தானே தராசு தாழ்ந்திருக்கின்றது?என்ன செய்தாலும் இவர்களைத் திரும்பவும் உயிரோடு மீட்டுக் கொண்டுவரமுடியாதே?இயலாமையால் எழுந்தக் கோபத்தில் வாஞ்சிநாதனின் உடலைத் தனது ஆத்திரம் மட்டுப்படும்வரையில் சகட்டுமேனிக்கு உதைத்துத் தள்ளினான் பிறைசூடன்.ஒருகட்டத்தில் அங்கு கிடந்த நாற்காலியொன்றில் ஓய்ந்துபோய்
அமர்ந்தவன், தன் முகத்தைக் கைகளில் புதைத்துக்கொண்டான்.
ஒரு காவல்துறை அதிகாரியாகவேண்டும் என்கிற அவனது கனவைச், சிறுவயதிலிருந்தே
தன் உயிரினும் மேலாகக் கருதித் தன் இதயப் பேழைக்குள் பொத்திவைத்துச் சேவித்தவன் அவன். கடின உழைப்பிற்குக் கைமேல் கிடைத்தப் பலனாக பிறைசூடன் அனைத்துப் படிநிலைகளிலும் வெற்றிபெற்றுக் காவல்துறையில் சேர்ந்தான்.
எண்ணற்ற லட்சியங்களுடனும், மக்களுக்குச் சேவை செய்யும் தாகத்துடனும் பணியில் இணைந்த அவனைப் பார்த்துப் பல்லைக் காட்டியது நிர்வாகம்.அவன் எதை எதிர்பார்த்து இந்த வேலைக்கு வந்தானோ அதுவே கேள்விக்குறியானது? அறத்திற்கு அறனாய் நிற்கவேண்டியக் காவல்துறையே அநீதிக்குக் கொடிபிடித்தது. அங்கு இவன்போன்ற நேர்மைவாதிகளின் குரல் நசுக்கப்பட்டது,அவர்களது வாதங்கள் அலட்சியப்படுத்தப்பட்டன. அவர்தம் கைகளும் ஆதிக்கத்தின்பிடியில் சிக்குண்டது. இவையனைத்தையும் மீறி யாரேனும் வாய்மையை நிலைநாட்ட முயன்றால் அவர்களது அடையாளம் இல்லாமலே போனது.
இவற்றையெல்லாம் கண்டு வாய்மையைப் பின்தொடர்ந்து தாங்கள் காணப்போவது என்ன?என்ற மனப்பான்மையுடன் பலர் பொய்மையின்பக்கம் சாய்ந்தனர். இன்னும் சிலர் எதையும் கண்டுகொள்ளாமல் தங்களது வேலையைமட்டும் கவனித்துவந்தனர். அது எத்தகையதாக இருந்தாலும் சரி.என்னமுயன்றும் ஒரு நேர்மைவாதியாக பிறைசூடனால் அவனது லட்சியங்களுக்கு உயிர் கொடுக்கமுடியவில்லை. காக்கி உடையின் மதிப்புத் தெரியாத குள்ளநரிக் கூட்டங்கள் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் ஆட்டிப்படைத்தன ஒருநாள் விதிவசத்தால் அவனும் தன் பாதையை மாற்றினான்..
முள்ளை முள்ளாலேயே அகற்றுவதுபோல அதர்மத்தை அதன்வழியிலேயே சென்று வேரோடு வீழ்த்த முடிவெடுத்தான். அவனுக்குள் நிறைந்திருந்த வடுக்கள் அவனை அந்தப் பாதையில் இயங்கவைத்தன.. இதோ நீண்டநாள் காத்திருப்புக்குக் கிடைத்தப் பரிசாக
அவனுக்கான வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. அதனை அரும்பாடுபட்டு அவனே உருவாக்கியிருக்கிறான் என்கையில் தாமதிப்பானா என்ன? தனது அத்தனைநாள் பொறுமைக்குக் கயமையை உணவாக்கத் துவங்கினான்.
அதன் ஒரு துரும்புதான் இந்த வாஞ்சிநாதன்.குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பினை அவனது கைபேசி ஒலியெழுப்பி உணர்த்தத்,தனது எண்ணங்களிலிருந்து மீண்ட பிறைசூடன், வந்திருந்தக் குறுஞ்செய்திக்குப் பதில் அனுப்பிவிட்டுத் தனது உதவியாளர்களுடன் அந்த நள்ளிரவுவேலையில் வாஞ்சிநாதனின் சரீரத்தை ஊரின் ஒதுக்குப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்மயானத்துக்கு எடுத்துச் சென்றான்.
அவனிடம் கொடுக்கப்பட்டவாஞ்சிநாதனின் சாம்பலை ஆசைத் தீர நோக்கிய பிறைசூடன்,
வரும்வழியில் தென்பட்டச் சாக்கடையில் அதனைத் தூக்கி எறிந்துவிட்டுத்
தனக்கு வழங்கப்பட்டத் தகவலின்பேரில் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்தான்.
ஆளரவமில்லாத பகுதியொன்றில் அமைந்திருந்தது அந்த ஓலைக் குடில். சற்று முன்னதாகவே தனது இருசக்கரவாகனத்தை நிறுத்திய பிறைசூடன் அந்தக் குடிலுக்குள் நுழைந்தான். அங்கே அவனுக்காகக் காத்திருந்தது ஒரு உருவம்.
சிறு தலையசைப்புடன் இருவரும் மற்றவருக்கு முகமன் கூறினர். அந்த உருவம் பிறைசூடனிடம் ஒரு பையை ஒப்படைத்தது. அதனைப் பிரித்துப் பார்த்த பிறைசூடன்
அந்த உருவத்தை நோக்கி மெல்லியப் புன்னகையை வீசினான்.. பின் தனக்கெதிரில் நின்றுகொண்டிருக்கும் உருவத்தின் விழிகளை நேர்கோட்டில் சந்தித்தவன்,
"இதுல சில வெடிமருந்துகள் இருக்கு. தேவையைத் தாண்டிப் பயன்படுத்த வேண்டாம்." என மொழிந்தான் கட்டளையிடும் தொணியில். அந்த உருவமும் பிறைசூடனின் கூற்றைத்
தலையசைத்து ஏற்றுக்கொண்டது.
"சந்திப்பு?"எனக் கேட்டான் பிறைசூடன்.
"நண்பகல்." என்று பதிலுரைத்தது உருவம்.
அந்த இடத்தில் கண்ணுக்குப் புலப்படாத மெல்லிய இறுக்கம் படர்ந்திருந்தது. இதோ இன்னும் கொஞ்சம் தூரந்தான் இறுதிக்கட்டத் திட்டங்களைமட்டும் பிழையில்லாமல் இவர்கள் செயல்படுத்திவிட்டால் வெற்றிக்கணியைச் சுவைத்துவிடுவார்கள். இருப்பினும்
இந்தச் சமயத்தில்தான் அவர்கள் எதற்கும் தயாராக இருக்கவேண்டும். தங்களது தீர்மானத்தின்படி சிலமணிநேரங்களுக்கு முன்புதான் இவர்கள் சார்ந்தத் தடயத்தைக் காவல்துறைக்கு வெளிப்படுத்தியிருந்தார்கள்.
அனைத்தும் சரியாக நடைபெறும்வரையில் கத்திமுனைப் பயணந்தான் இது. தங்களது இறுதி இலக்கினை அடைவதற்குள் என்னமாற்றங்கள் வேண்டுமானாலும் நிகழலாம்.
யாருக்கும் என்னவும் நேரிடலாம். அதைப் பற்றிக் கவலைப்பட ஒருவரும் தயாரில்லை. இது இவர்களே இவர்களுக்காக உருவாக்கியப் பாதை.எதுவாகினும் இந்த எழுச்சிமிகுந்த அயராதப் போராட்டத்திற்கான இறுதித் தீர்ப்பினைத் தாங்களே எழுதவேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோள்.
ஆகவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிக்கல்களை நுட்பமாகக் கையாண்டு, தங்களது முகமூடிக்குப் பின்னால் புரையோடிப் போய்ச் சீழ்பிடித்துக் கிடக்கும் பெரும் காயங்களால் உண்டாகும் வலி வேதனைகளுக்கெல்லாம் காரணமாக இருந்தவர்களின் வெளிவேடத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, மர்மமுடிச்சுக்களை அக்கக்காகஅவிழ்த்தெறிய
ஒருமித்த மனதுடன் ஒன்றுதிரண்டு, கயமைக்கும் வாய்மைக்குமான கடைசிகட்ட யுத்தத்தில் களமிறங்கினர்...
பிறைசூடனும் அவனுக்கு எதிரில் நின்ற உருவமும் விழிகளால் விடைபெற்று அவ்விடத்தைவிட்டு முன்னேறத் துவங்கினர். எதையோ சிந்தித்த பிறைசூடன்,
ஒருகணம் சுற்றுச்சூழலைத் தீர அவதானித்துவிட்டுச், சட்டெனத் தன் நடையை நிறுத்தினான். சற்றே தயங்கியபோதும் அந்த உருவத்தைப் பெயர் சொல்லி அழைத்தான்.
"மதுரா!" என்றவனின் அழைப்பில் மெல்லியத் திகைப்புடன் அவனை ஏறிட்டது அந்த உருவம்.
"ஒருநிமிஷம் உள்ளவாங்க.நான் உங்கக்கிட்டக் கொஞ்சம் பேசணும்." என்றான் உறுதியாக. விருப்பமே இல்லையென்றாலும் பிறைசூடனின்
பார்வையிலிருந்த வேண்டுதல் மதுராவை மீண்டும் குடிலுக்குள் செல்லவைத்தது...
"இதுக்கு அப்புறம் சூழல் எப்படி இருக்கும்னு தெரியாது. நம்ம நிலை என்ன என்கிறதும் புதிர்தான்.. அதனாலதான் பேசநினைச்சேன்." எனக் கூறியவன் தொடர்ந்தான். "நீங்க அவசியம் கரிகாலனக் கல்யாணம் செஞ்சுதான் ஆகணுமா? இதத் தவிர மாற்று வழின்னு எதுவுமே இல்லையா? எனக்கு என்னவோ ஆபத்தான சுழலுக்குள உங்கள நீங்களே சிக்கவச்சிக்கிறீங்களோனு தோணுது.அவனோடக் குணத்தப் பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்ல.ஸோ எதுவொன்னையும் ரொம்பக் கவனமாக் கையாளுங்க ஒரு குழுத் தோழனா இத உங்கக்கிட்டச் சொல்லணும்னு நினைச்சேன் அவ்வளவுதான்."எனக் கூறினான் பிறைசூடன்.
"எதுக்காகவும் என்னோட முடிவுலயிருந்து நான் பின்வாங்குறதா இல்ல பிறைசூடன். கரிகாலனுக்கு முடிவு கட்டணும்னா இந்தக் கல்யாணம் ரொம்ப அவசியம். அதுல எந்தவித மாற்றுக்கருத்தும் இல்ல. அதேபோல என்னப் பத்தியெல்லாம் யோசிக்கிற நிலையில நான் இல்ல. நம்மளோடக் குறிக்கோள் ஒன்னுமட்டுந்தான் இப்போ என் கண்ணுமுன்னாடி நிக்குது. நானும் வாங்கின அடிக்கெல்லாம் பதில் தரணுமே பிறைசூடன்!" என்று பதிலுரைத்தாள் சீற்றங்கலந்தப் பிடிவாதத்துடன்.
தனது முடிவுகள் இத்தனை உறுதியாக இருப்பவளிடம் பிறைசூடனாலும் வேறு என்னதான் பேசமுடியும்?
"ஓகே. தென் டேக் கேர்; எல்லாத்தையும் கனகச்சிதமாச் செஞ்சுமுடிச்சிடுங்க. நானும் அடுத்தடுத்த வேலைகளப் போய்ப் பார்க்கிறேன்." என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.
தூரத்தில் புள்ளியாகத் தெரிந்த பிறைசூடனின் வாகனத்தையே பார்த்திருந்த மதுரா, விழிகளில் குடியேறிய வெஞ்சினத்துடன் கரிகாலனுடனான தனது திருமணத்திற்கு ஆயத்தமாகும்பொருட்டு வீடுதிரும்பினாள்.
சடகோபனின் சூழ்ச்சிவலையில் சிக்குண்டு செய்வதறியாது தன்னைத்தானே மாய்த்துக்கொண்ட அபரஞ்சியின் வகுப்புத் தோழிதான் மதுரா. மார்த்தாண்டந்தான் அவளைச் சுடரொளிப் பள்ளியில் சேர்த்துவிட்டார். இயல்பிலேயே தனது ஆணாதிக்கத்தனத்தால் தாயைத் தினந்தினம் சித்திரவதைக்கு உள்ளாக்கும்
தந்தையை, அவரது குணநலன்களை அறவே வெறுத்த மதுரா, தாயின் கெஞ்சலையும் மீறி தனது பள்ளிப் படிப்பை விடுதியிலேயே தங்கி மேற்கொண்டுவந்தாள்.
மதுராவுக்குத் தந்தையின் அராஜகச் செயல்களுக்கெல்லாம் அடங்கிப்போகும் தன் அம்மாவின்மீதும் பெரும் வருத்தம் இருந்தது. அவள் இதுகுறித்து வேலுநாச்சியிடம் எத்தனை வாதித்தும் வேலுநாச்சி அவரது எண்ண ஓட்டத்தைத்தான் முன்வைத்தார்.
"மதுரா இதெல்லாம் பேசுறதுக்கு மட்டுந்தான்டா நல்லாயிருக்கும். எல்லாத்தையும் மீறி அவ்வளவு சுலபத்துல நீ சொல்ற விஷயங்களச் செயல்படுத்திட முடியாது. அதோட உன்னோட அம்மாவுக்கு அவ்வளவு தைரியமும் கிடையாதுடா. ஏதோ சமயத்துல உங்க அப்பாவ எதுத்து ரெண்டு வார்த்தப் பேசுவேன். மத்தபடி இந்தச் சமூகத்தையும் அதனுடையக் கோட்பாடுகளையும் சார்ந்தே நான் வளர்க்கப்பட்டுட்டேன். அதனால அது அத்தனையும் எனக்குள்ள ஆழமா ஊறிப் போச்சு.நானும் சமுதாயத்துக்குக் கட்டுப்பட்டே வாழப் பழகிட்டேன். என்னமாதிரியான வாழ்வியலக் கொண்டப் பெண்களுக்கு வெளியே சொல்லமுடியாத நிறையச் சிக்கல்கள் இருக்குடா. ஒரு பொண்ணுக்குக் கல்யாணம்னு ஒன்னு ஆனதுக்கு அப்புறம், அத்தனைநாள்அவ உலகமா இருந்த அவளோட வீடு, வேற ஒருத்தனோட மனைவியாகிட்டா அப்படிங்கிற ஒரே காரணத்துக்காகத் தன்னோட
வட்டத்தவிட்டுத் தள்ளிவெச்சிடும். இது என்னோட வீடுனு அதுவரைக்கும் பெருமையாச் சொல்லிட்டுத் திரிஞ்சவளுக்கு அந்தநொடி அது அவளோடப் பிறந்தவீடா மாறி அவளை அந்நியப்படுத்தும். அந்த வலியைத் தனக்குள்ளேயே விழுங்கிக்கிட்டுக் கட்டுனவன மட்டுமே சகலமுமா நம்பி அவனோடக் கையப் பிடிச்சுக்கிட்டு அவங்கூட; இல்லயில்ல
அவனப் பின்தொடர்ந்து அவனோட வீட்டுக்குள்ளக் காலடியெடுத்துவச்சு, அவனோடச் சேர்த்து அவனோடக் குடும்பத்தையும் அனுசரிச்சு, அவனோட உடன்பிறப்புகள எந்தவொரு குறையும் இல்லாமப் பார்த்துப் பார்த்துக் கவனிச்சு, அவனோட அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்திச் செஞ்சு, எத்தனைப் பிரச்சனை வந்தாலும் அது அத்தனையையும் நெளிவு சுழிவோட நேர்த்தியாக் கையாண்டு, முழுக்க முழுக்க அவனுக்காகவும், அவனோடக் குடும்பத்துக்காகவும் ஓடாத் தேஞ்சு வேல பாத்தாலும்
அது அவளோடப் புகுந்தவீடுதானே தவிர ஒருபோதும் அவளோட வீடா, அவளுக்கான வீடா அது இருக்காது.ஏதாவது ஒரு பிரச்சனைன்னா, மனவருத்தம்னா போகக் கூடப் போக்கெடமத்ததுதான் பொம்பளப் பொறப்பு. சும்மா கூட ஒரு மூணுநாள் சேர்ந்தாப்புல ஒரு பொண்ணால அவளோடப் பொறந்தவீட்டுல இருக்கமுடியாது. ஏன்னா அது அவளோடப் பொறந்தவீடு.என்னதான் ஒரு குடும்பத்தப் பக்குவமாக் கட்டிக் காத்தாலும்,
எந்தவொரு பெரிய முடிவையும் அவளால எடுக்கமுடியாது. ஏன்னா அது அவளோடப் புகுந்தவீடு. என்னதான் மாடா ஒழைச்சாலும் யாரோ ஒருத்தர அண்டித்தான் இந்த வாழ்க்கைய ஓட்டவேண்டியிருக்கு. இது எங்களுக்குச் சந்தோஷத்தத் தரும்னு நெனைக்கிறியா மதுரா? இல்ல நீ அப்படி நெனைக்கமாட்ட.ஆனா நாங்களா வேணும்னு விரும்பி இதெல்லாத்தையும் சுமக்குறோம்னு நெனைப்ப. இந்தச் சுழலுக்குள இருந்து வெளியே வர நாங்க முயற்சி பண்ணமாட்டோம்னு ஆதங்கப்படுவ. ஏன்னா உனக்கு அமஞ்சிருக்கிற வாழ்க்கைச் சூழல் அப்படி. சில விஷயங்கள மட்டும் நம்மால என்ன செஞ்சும் மாத்தமுடியாது. இது இப்படித்தான்ன்னா இது இப்படித்தான். அத ஒண்ணுமே செய்யமுடியாது. என்னோட வாழ்க்கையும் அதேமாதிரிதான். இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம் மதுரா. ஆனா அது எதையும் உன்னாலப் புரிஞ்சுக்கமுடியாது.
இதுக்குமேல விளக்கமாப் பேச உன்னோட அம்மாவுக்குத் தெரியாதுடா. என்னவோ ஒன்னு! நீ உன் அம்மாமாதிரி கோழையாயில்லாம உனக்கு வேண்டியது என்னன்னு தேடிக் கண்டுபிடி. அதுக்காகப் போராடு. உனக்கான முடிவுகள எடுக்கிற உரிமை என்னைக்குமே
உனக்கானதாமட்டுமே இருக்கட்டும். நீ நீயா வாழுறதப் பாக்குறதுமட்டுந்தான் இப்ப அம்மாவுக்கு இருக்கிற ஒரே சந்தோஷம். அதுக்காகத்தான் எனக்குள்ள எவ்வளவு வருத்தங்கள் இருந்தாலும் உன் விருப்பத்துக்கு உன்ன ஹாஸ்டலுக்குப் படிக்க அனுப்பினேன். இனியும் உன்னோட விருப்பங்கள் சரியானதா இருந்தா நியாயத்துக்குப் புறம்பானதா இல்லாம இருந்தா அம்மா அதுக்கு ஒருநாளும் தட சொல்லமாட்டேன்டா."
எனக் கூறியவர், ஏதோ கொஞ்சமே கொஞ்சம் தனது உள்ளக் கிடங்கை மகளிடம் வெளிப்படுத்திவிட்ட நிம்மதியில் கசிந்தக் கண்களைக்கூடத் துடைக்க மனமின்றித்
தன் வேலைகளில் மூழ்கிப்போனார்.
வேலுநாச்சியின் மனநிலைக்கு மாறாக மதுராவின் நெஞ்சம் பாறாங்கல்லாகக் கனக்கத் துவங்கியது….