• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தமிழ் - 27

நிதனிபிரபு

Administrator
Staff member
செந்தமிழ்

பதிவு எண்: STN89.
கண்ணம்மா.

அத்தியாயம் 27.
இரவுவேலை நெருங்கியும் செந்தமிழ் இல்லத்திற்குத் திரும்பாததால் ஒட்டுமொத்த இல்லமும் பயத்தில் உறைந்தது.
செந்தமிழ் வேலை பார்த்துவரும்
அலுவலகத்திடமும் அவள் அன்று அங்கு வரவில்லை என்ற தகவலே கிட்டியது. என்ன செய்வது என்று தெரியாமல்
நிர்வாகிகள் கையைப் பிசைந்துகொண்டிருந்த வேளையில்தான்
செந்தமிழ் குறித்தத் தகவல்கள்
துணை ஆய்வாளர் பிறைசூடனால் அவள் வளர்ந்த இல்லத்திற்குப் பகிரப்பட்டன . செந்தமிழைப் பற்றி
பிறைசூடனால் பகிரப்பட்டத் தகவல்கள் ஒவ்வொன்றும்
அங்கிருந்தவர்களின் தலையில் இடியை இறக்கிற்று . சற்றும் தாமதிக்காமல் இல்லப் பொறுப்பாளர்கள் அனைவரும்
பிறைசூடன் குறிப்பிட்டிருந்த இடத்திற்குச் சென்று சேர்ந்தனர்.
படுக்கையில் காய்ந்த மலராய்க்
கிடக்கும் தங்களது வளர்ப்புமகளைக் கண்டு பரிதவித்தனர் இல்லத்தினர். இப்படியான அசம்பாவிதங்கள் இதுவரை அவர்களது இல்லத்தில் நிகழ்ந்ததில்லை என்பதால் பேசும் திறனற்று
கண்ணீருடன் நின்றனர்.
பெற்றோரின் முகங்களைப் பார்க்கக் கூட கொடுப்பனையற்ற
இந்த சிசுக்கள் தங்களைதானே நம்பி வாழ்கின்றன? தங்களது வழிகாட்டுதலின் பேரில்தானே
வாழ்வியலின் சூட்சமங்களைச் சமாளித்துச் செல்கின்றனர்?
பதினைந்து வயது நிரம்பிய பிள்ளைகளைத்
தாங்கள் வேலைக்குப் போகச் சொல்வதுகூட யாரையும் சாராமல் தாமாகவே தங்களது ஓட்டத்தைத் தனி ஒரு ஆளாக மேற்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தானே?
அதுவும் கூட பாதுகாப்பிற்குக் குறைவின்றிதானே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது?
தங்களிடம் வளரும் பிள்ளைகளைச் சூழலுக்கேற்பப் பக்குவப்படுத்தி
வெகு சிறப்பாகவே வளர்க்கிறோம். என்று உவகை கொண்டிருப்பவர்களை
உடைத்துப் போட்டது இந்நிகழ்வு.
செந்தமிழ் உறக்கம் கரைந்து
விழிகளைத் திறக்கையில்,
கலங்கியக் கண்களுடன் அமர்ந்திருந்தார் அவளது இல்லப் பொறுப்பாளர். " அக்கா எப்ப வந்தீங்க?" எனக் கேட்டுப்
புன்னகைத்தவளின் கைகளைப் பற்றிக் கொண்டு "எங்கள மன்னிச்சிடுடா செந்தமிழ்.
மன்னிப்புங்குற வார்த்தைக்குள்ள நிச்சயம் உன்னோடத் துன்பங்கள அடக்கிடமுடியாதுன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் இதத்தான் இப்ப என்னால உங்கிட்டக் கேட்கமுடியும். எல்லாத்தையும் பாதுகாப்பாத்தான ஒழுங்கு செஞ்சிருக்கோம்னு அலட்சியமா இருந்துட்டோமோன்னு தோணுது." என்றார் தொண்டையடைக்க. "நடக்கிற எதுவும் நம்ம கையில இல்லையே அக்கா.
அப்படியிருக்க இந்த மன்னிப்பு எல்லாம் எதுக்கு?' என்று கேட்ட
செந்தமிழின் குரலில் அத்தனை நிதானம்.
மருத்துவரின் கண்காணிப்பில் முறையான சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்ட செந்தமிழ் மூன்றுநாட்களுக்குப் பிறகு
இல்லத்திற்குக் கிளம்ப ஆயத்தமானாள்.
"என்ன தமிழ் இல்லத்துக்குக் கிளம்பத் தயாராயிட்டீங்கபோல?" என்று கேட்டுக் கொண்டே அவளிருந்த அறைக்குள் நுழைந்தான் நிலவன். "ஆமாம் இப்போ எல்லாமே ஓகே. அதுதான் கிளம்புறேன்." என்று பதில் தந்தாள் புன்முறுவலோடு.
"கிட்டத்தட்ட ரெண்டுநாளா உங்கக் கூட பேசிட்டிருக்கேன்.
அப்பப்ப வந்து பாத்துட்டுப் போறேன். ஒருவார்த்தை என்னோட பேர் என்னன்னு கேக்கமாட்டீங்களா?" என அலுப்புடன் வினவினான் நிலவன்.
"ஏன் கேட்கணும்? எனக்குத்தான் உங்க பேரு தெரியுமே சார்."
என்ற அவளின் பதிலில்
நிலவனின் மனம் காரணமேயின்றி குத்தாட்டம் போட்டது.
"ஓ பரவாயில்லையே!"
என இழுத்தவன், "அப்ப இந்த ஸாரு மோரு எல்லாத்தையும் விட்டுட்டு ஒழுங்கா என்னப் பேர் சொல்லிக் கூப்பிடுங்க." என்றான் மென்மையாக.
அவனைப் பெயர் சொல்லி அழைப்பதில் செந்தமிழுக்கு
மறுப்புகள் ஏதுமில்லை என்பதில்
"சரிங்க நிலவன்." என்றாள் முகமலர்ச்சியோடு. செந்தமிழின் குணநலன்கள் நிலவனைப் பெரிதும் ஈர்த்தன. அலட்டல்கள் ஏதுமின்றி இயல்பாகவே
சூழலுடன் பொருந்திப் போகும்
அவளது மனப்பாங்கு அவனை
வியப்பிற்குள்ளாக்கியது.
"உங்க இடத்துக்குப் போனதும்
என்னல்லாம் மறந்துடாதீங்க தமிழ். நான் உங்கள அங்கு வந்து அடிக்கடிப் பார்க்கலாம்னு நினைக்கிறேன். இதுல உங்களுக்கு ஏதும் சங்கடம் இருக்கா?" என்று அவளைப் பார்த்துக் கேட்டான் நிலவன்.
"எனக்கு என்ன சங்கடம் இருக்கப் போகுது? நீங்க என்னோட ஒரு நல்ல ஃப்ரெண்ட்.."
எனக்கூறி நிலவனின் எண்ணத்திற்குப் பச்சைக் கொடி காட்டினாள் செந்தமிழ்.
அப்போது அங்குவந்த இல்லப் பொறுப்பாளர் நிலவனைக் கனிவுடன் ஏறிட்டு "ரொம்ப ரொம்ப நன்றி தம்பி.
நீங்க என்னைக்கும் நல்லாருப்பீங்க. நல்லாயிருக்கணும்.
நீங்கமட்டும் அந்தப் பக்கம் வந்துருக்காட்டி தமிழ் அவளோட நிலைமை என்ன ஆகியிருக்கும்னு நெனச்சாலே உள்ளமெல்லாம் பதறுது பா. இனி நாங்களும் இந்தமாதிரியான விஷயங்கள்ல கூடுதல் கவனமெடுக்கணும்."
என்றவர் ஒரு சிறு தலையசைப்புடன் செந்தமிழைய் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். அண்நொடி தொடங்கி செந்தமிழின் உள்ளம் நிலவனுக்கு ஓயாமல் நன்றி நவிழ்ந்துகொண்டே இருந்தது.
அதற்குப் பின்னான நாட்களில்
செந்தமிழ் தனது அரசு பொதுத் தேர்வுகளுக்காகத் தீவிரத்துடன் தயாராகத் துவங்கினாள்.
அதற்கிடையில் ஓரிருமுறை
இல்லத்திற்குவந்து நிலவன் செந்தமிழைச் சந்தித்திருந்தான்.
தனக்கென உறவு வட்டங்களை
அதிகம் சேர்த்துக் கொள்ளவிரும்பாத செந்தமிழின் வட்டத்திற்குள் ஒருவனாக நீக்கமற நிறைந்து நின்று ஆட்சிபுரியத் துவங்கினான் நிலவன்.
பிறைசூடனும், தான் நிலவனுக்குக் கொடுத்த வாக்குறுதியின்பொருட்டு
செந்தமிழைப் பாலியல் வன்முறைக்குட்படுத்திய
அந்தப் பாதகனை வலைவீசித் தேடத் துவங்கியிருந்தான்.
எந்தவிதச் சலனங்களுமின்றி வாழ்க்கையானது நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கிய தருனமது. தனது பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில்
சிறப்பான மதிப்பெண்களைப் பெற்ற செந்தமிழ், தனது விருப்பத்தின்படி
தமிழ் இலக்கியப் பிரிவில் தனது இளங்கலைப் பட்டப் படிப்பினை மேற்கொள்ள, நிலவனின் உதவியுடன் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கத் துவங்கினாள்.
செந்தமிழுக்கு வாழ்வியலைக் குறித்த அவளது கண்ணோட்டத்தை இன்னுமே விசாலமாக்க வேண்டியிருந்ததால்,
இல்ல நிர்வாகத்தின் அனுமதியுடன் வெளியூரில் சென்று தனது கல்லூரிப்
படிப்பினைப் பயில முடிவு செய்தாள்.
செந்தமிழ் எதிர்பார்த்ததைப் போலவே ஊட்டி மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்றக் கல்லூரியொன்றில் அவளுக்கு இடம் கிடைத்தது. தான் இங்கிருந்து கிளம்புவதற்குமுன் நிலவனை ஒருமுறைச் சந்திக்க எண்ணிய செந்தமிழ், அவனை அழைப்பில் தொடர்புகொள்ள நிர்வாக அரை நோக்கி விரைந்தாள்.
இந்தச் சிலமாதங்களில்
நிலவன் செந்தமிழின் வாழ்வில்
அசைக்கமுடியாத அங்கமாகிப்போனான். நிதம் அவள் இனிமை காணும் தனிமையிலும்
நிலவனின் நினைவுகளே
வளம்வந்தன.
தனது சிந்தனைகளில் உழன்றபடி
நடந்தவள் எதன்மீதோ மோதிநின்றாள். எதன்மீதோ என்ன எதன்மீதோ? அவளது உற்றத் தோழன் நிலவனின்மீதுதான் மோதிநின்றாள்.
பார்க்கக் கேட்க அவசியமின்றி
அவனது நறுமணமே அது அவந்தான் என்று பெண்ணவளுக்கு அறுதியிட்டுக் கூறியது.
"நிலவன்! நீங்க எங்க இங்க?"
என வியப்பு மேலிட விழிகளை விரித்துக் கேட்டாள் பாவை.
"எனக்கு செந்தமிழ்னு ஒரு தோழி இருக்காங்க.
நான் அவங்களப் பாக்கத்தான் வந்தேன். உங்களுக்கு என்ன வேணும்?" எனத் தோரணையாகக்
கேட்டவனைப் பார்த்து விழிகளை உருட்டினாள் செந்தமிழ். "சரிசரி வாங்க நாம கொஞ்சதூரம் அப்படியே காத்தாட நடந்துட்டு வருவோம்."
எனக் கூறியவாறே செந்தமிழைத் தன்னுடன் அழைத்துக்கொண்டான் நிலவன்.
அங்கு சுற்றி இங்கு சுற்றி
கடைசியில் கடற்கரைக்கு வந்துசேர்ந்தனர் இருவரும்.
பெரிதாக ஒருவர் மற்றவரிடம் பேசிக் கொள்ளவில்லை.
மௌனத்துடன் கைகளைக் கோர்த்தவாறு கடற்கரை மணலில் கால்கள் புதைய நடந்தனர். இருவருமே அந்த இனிய பொழுதைப் பத்திறமாகத் தங்களது இதயப்பேழைக்குள் பூட்டி வைத்துக்கொண்டனர்.
"உங்கக்கிட்ட ரொம்பநாளா ஒரு விஷயத்தக் கேட்கணும்னு நினைச்சுகிட்டிருக்கேன்." எனக் கூறினான் நிலவன்.
"அப்படி எதக் கேட்க யோசிச்சீங்க?"
எனப் பதில் கேள்வி கேட்டாள் பெண். அவளுடன் சென்று கால்களை நீட்டி மணலில் அமர்ந்துகொண்டவன் பேசத் துவங்கினான். "அன்னைக்கு உங்க இடத்துல வேற யாரும் இருந்திருந்தா இந்த அளவுக்குத் திடமா இருந்திருப்பாங்களாங்கறது கேள்விக்குறிதான்.
நிச்சயமா உடைஞ்சு போயிருப்பாங்க.
ஏன் தமிழ் அதப் பத்தி உங்க மனசுக்குள்ள என்னதான் ஓடுது?
அவனக் கண்டுபிடிக்கலாம்னு நான் அவ்வளவு சொல்லும்போதும் நீங்க அதப் பத்தி ஏன் கொஞ்சங்கூட கண்டுக்கமாட்றீங்க ?
நான் உங்களக் காயப்படுத்த இதக் கேக்கல . இன்னும் தெளிவா சொல்லனும்னா பெண்கள்
தங்களோட இக்கட்டான சூழ்நிலைகள்ல உங்களமாதிரி
எல்லாத்தையும் வைராக்கியத்தோட எதிர்கொள்ளனும்னுதான் நான் சொல்றேன்.
இருந்தாலும் இது சார்ந்த உங்களுடைய நிலைப்பாட்ட என்னால யூகிக்கவேமுடியல.
அதுக்காகத்தான் கேட்டேன்."
எனக் கூறினான் தனது என்ன ஓட்டங்களை விவரிக்கிறவனாக.
"எல்லாமே நடந்துமுடிஞ்ச பிறகு
கோபப்படுறதாலையோ, ஆத்திரப்படுறதாலையோ,
அழுது புலம்புரதாலையோ
நடந்ததெல்லாம் இல்லனாகிடுமா யென்ன? நடந்த எதையும் நம்மளால மாத்தவேமுடியாதுங்குறபோது ஏன் தேவையில்லாம வருத்தப்படணும்?
நடந்ததுக்கு நா பொறுப்பில்ல.
என்னோட மனசுல துளியேனும்
அழுக்குப்பிடிச்ச எண்ணங்கள் இல்ல.
அப்படியிருக்க என்கிட்ட இருந்த எதையும் நான் இழக்கல.
இப்பவரைக்கும் நான் நானாதான் இருக்கேன்.
நியாயப்படி பார்த்தா
ஒரு பொண்ணச் சீரழிச்சதுக்கு அவந்தான் வெக்கப்படனும்.
தன்னோட உணர்வுகளக் கட்டுக்குள்ள வச்சுக்கத் தெரியாததற்கு அவந்தான் அசிங்கப்படணும் .
இப்படி ஒரு கேவலமான பிறப்பெடுத்ததற்கு அவந்தான் தலை குனியனும்.
தனக்கு இழைக்கப்படுற அநீதிகளால ஒரு பெண்
அவளோட சுயத்தையே இழக்குறான்னா அங்கதான் எதிராளி வெற்றிபெறுறான்.
அப்படியில்லாம
என்னோட உடன்பாடு இல்லாம நடந்தேறிய எதுக்கும் நா பொறுப்புக் கிடையாதுன்னு
திடமா நம்பி அத்தனை எதிர்மறை எண்ணங்களையும் ஊதித் தள்ளிட்டு அவளுக்கான பாதையில
வைராக்கியத்தோட பயணிச்சான்னா அதுதான்
அவன அடியோடு விழ்த்துற மிகச்சிறந்த ஆயுதம்னு நான் சொல்றேன்." என்றாள் திடமாக. காணும் ஒவ்வொருமுறையும் தன்னை வியப்பில் ஆழ்த்தும் தையலையே
நிலவனின் பார்வை
கனிவு பொங்கத் தழுவிநின்றது.
"அதுக்காக இந்த விஷயத்துல எனக்கு வருத்தமே இல்லன்னு
நினைக்காதீங்க.
வருத்தங்களத் தாண்டி
நிறைய நிறைய கோபமிருக்கு.
அவன நேர்ல பாக்குற வாய்ப்புக் கிடைச்சா துண்டுதுண்டா வெட்டிப் போடுற வேட்கையும் இருக்கு.
அதேசமயம் இந்த ஒரு புள்ளியிலேயே தேங்கிநின்னு என்ன நானே குறுக்கிக்க விரும்பல.
நான் வெளியூருக்குப் போய்ப் படிக்க நினைச்சதும் இதுக்காகத்தான்.
என்னவிட அதிக பாதிப்புகளச்
சந்திச்சவங்கக்கிட்டப் பேசிப் பழகணும். அப்பதான்
நம்ம சந்திச்சப் பிரச்சனைகளோட அளவு மிகக் குறைவா தோணும்.
இது என்னோட வாழ்க்கைய இன்னும் பண்படுத்தும்னு நம்புறேன்." என்றாள் தெளிவாக.
செந்தமிழின் பேச்சில், அதில் தெரித்த நிமிர்வில் அசந்துபோனான் நிலவன். அவளின்மீதான அவனது மதிப்பு உயர்ந்துகொண்டே செல்வதைப்
பரிபூரணமாக உணர்ந்தான் நிலவன்.
நிலவனின்மூலமாக செந்தமிழுக்கு வசந்தனின் அறிமுகம் கிட்டியது. தமிழ்மொழியின்மீது அதீத பற்றுடைய
இருவருக்கிடையிலும்
நல்லதொரு சகோதரத்துவ உறவு மலர்ந்தது.
விடுதிப் பொறுப்பாளருடன் இணைந்து நிலவன், பிறைசூடன் மற்றும் வசந்தன் ஆகியோரும்
ஊட்டிக்குச் சென்று செந்தமிழைக்
கல்லூரியில் சேர்த்துவிட்டு வந்தனர். அங்குதான்
இளவஞ்சி மற்றும் மதுராவின்
அறிமுகம் செந்தமிழுக்குக் கிடைத்தது. .
 
Top Bottom