கண்ணம்மா.
அத்தியாயம் 6.
அலுவலகத்தில் ஐயா கைத்தறி ஆடையகத்தின் மூலம் தாங்கள் அடுத்தடுத்து வெளியிடவிருக்கும் புடவை வகைகளைப் பற்றி ஆடை வடிவமைப்புப் பிரிவினரிடம்
தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தான் நிலவன்.
அந்த நேரம் அவனது கைப்பேசி விடாமல் அலறியது. கைப்பேசியை எடுத்துப் பார்த்தவனின் முகத்தில் குழப்பரேகைகள். அவனுக்குப் பரீட்சையமற்றப் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்த வண்ணமா இருக்க,
"ரெண்டு நிமிஷத்துல வந்துடறேன்." என்று பொதுவாக எல்லாரிடமும் அறிவித்துவிட்டுத்
தனது அறைக்கு விரைந்தான் நிலவன். மீண்டும் கைப்பேசி சினுங்கியது. அதே இலக்கத்திலிருந்துதான் அழைப்பு.
இன்னதென்று விவரிக்கமுடியாத உணர்வில் நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொண்டே அழைப்பை ஏற்று அலைபேசியைக் காதுக்குக் கொடுத்தான்.
"ஹலோ சார்; நீங்க மலரினியோட கார்டியன் மிஸ்டர் நிலவன் தானே?" எதிர்ப்புறம் கேட்கப்பட்டக் கேள்விக்கு,
"ஆமாம் நான் மலரினியோட கார்டியன் தான். நீங்க யாரு?"என்ற நிலவனின் எதிர்க் கேள்வியிலேயே தேவையான பதில் கிடைத்துவிட,
சிறிய மௌனத்திற்குப் பிறகு அந்தப் பக்கத்திலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன.
எதுவோ சரியில்லாததுபோல் இருக்கக், காதுகளைக் கூர்மையாக்கினான் நிலவன்.
அவனது மனமோ நடக்கவே கூடாத ஒன்று நடந்துவிட்டதைப் போல் அல்லாடியது.
"சார் உங்க குழந்தை பிரேக் டைம்ல வாஷ் ரூமுக்குப் போயிருக்கா. திடீர்னு அந்தச் சமயம்
அவளால சீறா மூச்சு விட முடியாம போயிருக்கு. அனேகமா அவளுக்கு அப்போ மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கணும். தனக்குள்ள நிகழறப் போராட்டங்களுக்கு எதிர்வினையாற்றத் தெரியாம குழந்தை திணறிப் போயிருக்கணும்; இருந்தும் அந்த இடத்தை விட்டு வெளிய வர நெனச்சி இருக்கா போல; ஆனா அதையும் சரியா செயல்படுத்த முடியாம கால் தடுக்கிக் கீழ விழுந்திருக்கா. இது நடந்து எவ்வளவு நேரம் ஆச்சுன்னு தெரியல. கழிப்பறைகளைச் சுத்தம் செய்யவந்த பாட்டிமாதான்
மலரினியைத் தூக்கிட்டுப் பள்ளியின் நிர்வாக அறைக்கு வந்தாங்க. நேரத்தைக் கடத்தாம நாங்களும் பிள்ளைய இங்க பக்கத்துல இருக்கிற அரசு மருத்துவமனையில் அனுமதிச்சிருக்கோம். நீங்க கொஞ்சம் சீக்கிரம் வந்தா நல்லா இருக்கும்." என்றதோடு
நிலவனுக்குக் கேள்வி கேட்கக் கூட அவகாசம் தராமல் அந்த அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
எதிர்ப்புறம் சொல்லப்பட்டத் தகவலில் விக்கித்து நின்றான் நிலவன். அவனால் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. குளிரூட்டப்பட்ட அந்த அறையிலும், வியர்த்து வழிந்தது நிலவனுக்கு. நொடியும் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு விரைந்தான் அவன். இதற்கிடையில் நிலவன் எத்தனைமுறை முயற்சித்தும் பள்ளி நிர்வாகத்தினரை மட்டும் அவனால் தொடர்புகொள்ளவே இயலவில்லை.
மருத்துவமனையை நெருங்க நெருங்க அவனது நெஞ்சம் கிடுகிடுத்தது. "பாப்புக் குட்டி:
மாமா வந்துட்டேன்டா: இதோ கிட்ட வந்துட்டேன்: எதுக்கும் பயப்படக்கூடாது: இதோ மாமா வந்துட்டேன்:" என வாய்விட்டே அரற்றினான் நிலவன். அவனது கைகளில் சீறிப்பாய்ந்த வாகனம் ஒருகணம் தடுமாறி நின்றது. எப்படியோ தன்னை மீட்டுக் கொண்டு மருத்துவமனையை அடைந்தான் நிலவன்.
அவ்வளவு நேரமும் துவண்டிருந்தவன், மருத்துவமனையின் வாயிலை மிதித்தக் கணம்
வேக எட்டுக்களை வைக்கத் துவங்கியிருந்தான். அவனது வரவை எதிர்நோக்கியிருந்ததைப் போல நடுத்தர வயதையுடைய ஒருவர் அவன் நிலவன்தான் என்பதை உறுதி செய்த பின்னர், அவனை அழைத்துக் கொண்டு தனிஅறை ஒன்றுக்குள் நுழைந்தார்.
அறையினுள் சென்ற நிலவனின் விழிகள் தனக்கு எதிரிலிருந்த படுக்கையில் குத்திட்டு நின்றது. மருத்துவ உபகரணங்கள் புடைசூழக், கசங்கிய மலராய்ப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தாள் மலரினி.
"பாப்பா" குரல் நடுங்க அழைத்துக் கொண்டே தன் மருமகளிடம் விரைந்த
நிலவனைத் தடுத்துநிறுத்தினார் மருத்துவர். "மிஸ்டர் நிலவன்
கொஞ்சம் இருங்க. சில விஷயங்களை உங்ககிட்டத் தெளிவா பேசவேண்டியிருக்கு.
சில ப்ரொசீஜர்ஸ் அண்ட் ஃபார்மாலிட்டீஸ் இருக்கு. அதுக்குப் பிறகுதான் குழந்தையோட உடலை நாங்க உங்ககிட்ட ஒப்படைக்கமுடியும். சோ ப்ளீஸ் எங்களுக்குக் கொஞ்சம் உங்களோட ஒத்துழைப்புத் தாங்க."என்றவரின் வார்த்தைகளில் ஸ்தம்பித்தான் நிலவன்.
அவனுக்கு எதுவுமே விளங்கமறுத்தது. என்ன சொல்கிறார் இவர்? தனது
பாசமிகு மருமகள் அவளது வாழ்க்கைப் பயணத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டுவிட்டாள் என்றா? அப்படியென்றால் அவனது மலர்ப் பாப்பா இப்போது உயிருடன் இல்லையா? ஆனால் ஏன்? எப்படி? எதற்காக?
தன் இரு கைகளால் தலையைத் தாங்கியவாறு கதவில் சாய்ந்து நின்ற நிலவனுக்கு ,
நிகழ்ந்துவிட்டத் துயரத்தைத் தாண்டிக் கொண்டு சந்தேகம் தலை தூக்கத் துவங்கியது. அந்தப் பெயர் தெரியாத எண்ணிலிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது தொடங்கி நிகழ்ந்தவற்றையெல்லாம் அணிவகுத்து இணைத்துப் பார்த்தான். அவை அனைத்துமே ஒன்றுக்கொன்று முரநாய் நின்றது.
அவனது மனதும் எதையுமே ஏற்காமல் முரண்டியதில் யோசனையானான் நிலவன்.
அவனது கண்களோ மலரினி இறந்து விட்டாள் என்பதை எடுத்துரைத்துக் கொண்டிருந்த அந்த மருத்துவக் கருவியை வெறித்தன.
"மிஸ்டர் நிலவன்;" என அவனது தோலைப் பிடித்து உலுக்கிய மருத்துவர்,
வலுக்கட்டாயமாக அவனைத் தன்னுடன் வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றார்.
அறைக்குள் வந்ததும் நிலவனின் கையை விட்டவர், "உட்காருங்க நிலவன்." எனத் தனக்கு முன்னிருந்த இருக்கையைச் சுட்டிக் காட்டினார். பதட்டம் போய் கோபம் வந்தது நிலவனுக்கு.
"என்ன டாக்டர் நடக்குது இங்க? சத்தியமா எனக்கு எதுவுமே புரியல? திடீர்னு மலருக்கு உடம்பு முடியலன்னு ஒரு கால் வந்தது. புள்ளைக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பதறியடிச்சுட்டு நான் இங்க வந்தா, என்ன அவகிட்டக் கூடப் போக விடமாட்டேங்கிறிங்க.
எதப் பத்தியும் ஒழுங்கா விவரிக்காம அவ இறந்துட்டாங்கிற விஷயத்தையே
போறபோக்குல சொல்லிட்டுப் போறீங்க? பக்கத்துலதான் போகமுடியலையே தூரத்தில இருந்தாவது குழந்தையைப் பார்க்கலாம்னு இருந்தா, என்னவோ மாட்டக்கட்டி இழுக்குற மாதிரி என் கையப் புடிச்சு இழுத்துட்டு இங்க வரிங்க? நான் மலரினியோட தாய்மாமா.
அவளோட கார்டியன். அவளுக்கு என்ன ஆச்சுங்கற விளக்கம் இப்போ எனக்குத் தெளிவா கிடைச்சாகணும். சொல்லுங்க: என்றான் புயலை உள்ளடக்கியக் குரலில்.
ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியிட்ட மருத்துவர் பேசத் துவங்கினார்.
"இங்கப் பாருங்க மிஸ்டர் நிலவன், உங்களோட நிலைமை எனக்குப் புரியுது. ஆனா அதுக்காகவெல்லாம் இந்தக் கேஸமட்டுமே பாத்துட்டிருக்கமுடியாது. அதுக்கு இங்க நேரமும் இல்ல. இதேபோல இன்னும் எத்தனையோ கேஸஸ நாங்க ஹேண்டில் பண்ணவேண்டியிருக்கு. ஒருமணி நேரத்துக்கு முன்னாடிதான் உங்கக் குழந்தையப்
பள்ளி நிர்வாகம் இங்கக் கொண்டுவந்தாங்க. இங்க வரும்போது மலரினியோட இதயத்துடிப்புச் சுத்தமா நின்னுபோயிருந்தது. இருந்தாலும் நாங்க எங்க பங்குக்கு முதல் உதவி சிகிச்சைகளைக் கொடுத்துப் பார்த்தோம். ஆனா அது எதையுமே மலரினியோட உடல் ஏத்துக்கல சோ மலரினியோட இறப்ப உறுதி செய்தோம்..பிரேக் டைம்லதான் மலரினிக்கே இப்படி நடந்திருக்கு. ஸ்னாக்ஸ் சாப்பிட்டதுக்குப் பிறகுதான் குழந்தை வாஷ் ரூம் போயிருக்கா. அந்தச் சமயம் உணவுப் பொருட்கள் மூச்சுக்குழாயில் சிக்கினதால
குழந்தையால சரியா சுவாசிக்க முடியாம போயிருக்கு. அதோட விளைவுதான் இந்த மூச்சுத் திணறல்.தனக்குள்ள என்ன நடக்குதுன்னு புரியாம குழந்தை பயந்திருக்கணும்; அதோட நீட்சியா அந்த இடத்தைவிட்டு வெளிய வர அவ முயற்சி செய்திருக்கா.
வெறும் அஞ்சு வயசுப் பிள்ளைதானே நிலவன்? எத்தனையதான் அவளால சமாளிக்க முடியும்? நிச்சயம் பலவீனமாகியிருப்பா. இதுயெல்லாம் சேர்ந்துதான் மலரினி கழிவரையைவிட்டு வெளியேவர முயற்சி செய்யும்போது அவள நிலைதடுமாறி விழவச்சியிருக்கு. விழுந்த வேகத்துலக் குழந்தையோடத் தலை நல்லா படியில அடிச்சிருக்கு விளைவு மலரினி அப்படியே மயக்கமடைஞ்சிருக்காங்க. கிட்டதட்ட 1/2 மணி நேரமா குழந்தை இப்படியேதான் இருந்திருக்காங்க . தினமும் கழிவறைகளைச் சுத்தம் செய்யவரும் பாட்டிமா அந்தப் பக்கம் வரும்போதுதான் மலரினியைப் பார்த்து நிர்வாகத்திற்கும் தகவல் சொல்லி இங்கு அழைச்சிட்டு வந்தாங்க.பின்னந்தலையில் ஏற்பட்டப் பலமான அடியால மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கு. இதுதான் மலரினி உயிர் பிழைக்கமுடியாமல் போனதற்குக் காரணம்." மருத்துவர் உதிர்த்த சொற்களில் உலகமே தலைகீழாகச் சுற்றுவதுபோலிருந்தது நிலவனுக்கு.
"ஓகே மிஸ்டர் நிலவன்: விஷயம் இதுதான். உங்களுக்கு எல்லாத்தையும் விளக்கமா சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். இனி ஆகவேண்டிய வேலைகளைப் பார்க்கத் தொடங்கனும்." என்றவர், "இந்த ஃபாம்ல சைன் பண்ணுங்க மிஸ்டர் நிலவன்;
உங்கக்கிட்டக் கையெழுத்து வாங்கினதற்குப் பிறகுதான் மலரினியோட உடலை
உடற்கூறாய்வு செய்வதற்கு அனுப்பிவைக்கணும். கூராய்வு அறிக்கை வந்ததும் நீங்க உடலை உங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போகலாம்."என்றவர் நிலவனைப்
படிவத்தில் கையொப்பமிடத் துரிதப்படுத்தினார்.
"இல்ல டாக்டர் நான் மலரப் பாக்கணும்.' என்றான் நிலவன் அழுத்தமாக. இன்னுமுமே அவனால் நடந்த எதையும் கிரகிக்கமுடியவில்லை. எண்ணற்றக் குழப்பங்களும் கேள்விகளும் நிலவனைப் போட்டுப் பந்தாடின.
"ப்ளீஸ் நிலவன் புரிஞ்சுக்கோங்க: உடற்கூறாய்வுக்குப் பிறகுதான் நீங்க மலரினியைப் பாக்குறத எங்களால அனுமதிக்கமுடியும். அதுவுமில்லாம இப்போ இது போலீஸ் கேஸ். மலரினியோட இறப்ப நாங்க உறுதி செய்த உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்துவிட்டோம். அவங்களுமே வந்துட்டாங்க. இப்போ பள்ளி நிர்வாகத்தோடு
பேச்சுவார்த்தை நடத்திட்டிருக்காங்க. அடுத்து உங்களையும் சந்திக்க வருவாங்க. குழந்தையோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ட வச்சுத்தான் இந்தக் கேஸ் பத்தி அவங்களால ஒரு முடிவுக்கு வரமுடியும். சைன் பண்ணிக் கொடுத்துட்டு வெளியே வெயிட் பண்ணுங்க நிலவன். எல்லா ஃபார்மாலிட்டிசையும் முடிச்சிட்டு உங்களைக் கூப்பிடுறோம்.,' எனக் கூறிக் கொண்டே இருக்கையைவிட்டு எழுந்த மருத்துவர், நிலவனிடம் படிவத்திற்காகக் கையை நீட்டினார்.
"நீங்க என்ன கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க டாக்டர். இப்பவர என்னால எதையும் ஏத்துக்க முடியாம இருக்கு. மலரோட அம்மா அப்பாக் கிட்டக் கூட இன்னும் எதையுமே சொல்லல நான். பாப்பாவப் பக்கத்துலப் போய்தான பார்க்கக் கூடாது? அட்லீஸ்ட் தூரத்திலிருந்து பார்க்கவாவது அனுமதிக்கக் கூடாதா?" எனப் பெரும் தவிப்புடன் வினவியவனின் விழிகள் கசியத் துவங்கியிருந்தது.
நிலவனின் பரிதவிப்புச் சற்றே மருத்துவரை அசைத்திருக்கவேண்டும்; சரி என்பதாய் அவனிடம் மெல்லியத் தலையசைப்பைத் தந்துவிட்டு அவ்விடத்திலிருந்து அகன்றார் அவர்.
அவர் சம்மதித்ததுதான் தாமதம்: உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மலரினி இருந்த அறைக்கு ஓடினான் நிலவன். அங்கு மலரினியின் உடலைக் கூராய்வு செய்ய
அனுப்பிவைப்பதற்கான ஆயத்தங்கள் தொடங்கப்பட்டிருந்தன. அவளைச் சுற்றிப் பொருத்தப்பட்டிருந்த உபகரணங்களும் நீக்கப்பட்டன.
கட்டிலைவிட்டுச் சற்றே தள்ளி நின்றவாறு இவற்றையெல்லாம் வேதனைப் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தான் அவளது தாய்மாமன். "பாப்புக் குட்டி என்னடா இதெல்லாம்? இவங்க நீ என்னவோ இறந்துட்டதா சொல்றாங்களேடா? உன்னைத் தொடக் கூட மாமாவை விடமாட்டேங்குறாங்களேடா? இந்தம் கைகளுக்கு உள்ளதானடா உன்னப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வளர்த்தன்; எப்படி இந்தக் கையை விட்டுட்டு நீப் போகலாம்?
ஏதாவது அதிசயம் நடந்து திரும்ப நீ என்கிட்டயே வந்துறமாட்டியா குட்டிமா? தயவுபண்ணி எழுந்து வந்துருடா தங்கம்; மாமாவும் நீயும் உடனே வீட்டுக்குப் போகலாம். வாடா பாப்பா மாமாவுக்குப் பயமா இருக்கு."
நிஜத்தை ஏற்க முடியாத இயலாமையில் நிலவனின் உள்ளம் ஊமைக்கண்ணீர் வடித்தது.
அவளைத் தனது கைகளுக்குள் மீண்டும் வந்துவிடச் சொல்லிக் கூச்சலிட்டது.
"சார் ஃபார்ம் குடுங்க"எனச் செவிலியர் ஒருவர் அவனது கைகளிலிருந்தப் படிவத்தைப் பெற்றுக்கொண்ட அந்தநொடியில் நிலவனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து, பின் கூர்மையுடன் மலரினியின் உடலை ஆராயத் துவங்கியது.