கண்ணம்மா.
அத்தியாயம் 8.
வீட்டு முற்றத்தில் கூடியிருந்த குடும்பத்தினரைக் கண்ட நிலவன்அப்படியே உறைந்துநின்றான். அவனது அன்பு தங்கை அமர்ந்திருந்தக் கோலம் அவனைப் பெரிதும் அசைத்துப் பார்த்தது. கண்கள் விடாமல் கண்ணீர் பொழிய, இலக்கில்லாமல் அவளது கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன.
"இருக்காது: அப்படியெல்லாம் இருக்காது. என்னோடப் பாப்பா ஒண்ணும் என்னை விட்டுப் போயிருக்கமாட்டா. நான் இல்லாம அவ இருக்கவேமாட்டாளே: அப்படி இருக்க அவளா என்னை விட்டுட்டுப் போயிருப்பா? இல்ல; நிச்சயமா இல்ல: இதெல்லாம் பொய்:
இதெல்லாம் பொய்..."தன்னைப் போலப் பேசிக் கொண்டே சென்றவளின் பார்வை வட்டத்தில் விழுந்தான் நிலவன்.
நிலவனைக் கண்ட மாத்திரத்தில் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பெனப், பெரும் கேவலுடன் ஓடிச் சென்று, தமையனின் கையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு கதறித் தீர்த்தாள் மீரா. தங்கையின் கதறல் தமையனைக் கற்பாறையாக்கியது.
தங்கையை ஆற்றுப்படுத்தக் கூட முயலாமல் இளக்கம் தொலைத்து இரும்பென நின்றான் நிலவன்.அவனது கையிலிருந்து முகத்தை நிமிர்த்தி, விழிகளில் எதிர்பார்ப்பும்
அச்சமும் சரிவிகிதத்தில் போட்டிப் போட, "அண்ணா பாப்பாவுக்கு ஒன்னுமில்லதானே?
அவ நல்லாயிருக்காதானே இவங்க சொல்றது எல்லாம் உண்மை இல்லதானே?
முதல்ல பாப்பா எங்க? இன்னும் என்னத் தேடிவராமல் என்ன செய்றா அவ? எனக் கேட்டுக் கொண்டே பெரும் பரிதவிப்புடன் மகளை விழிகளால் துழாவினாள் மீரா.
"என்ன அண்ணா பேசவே மாட்டேங்கிறீங்க? அவ எங்க அண்ணா நானே பாக்குறேன் இருங்க." எனக் கூறிக் கொண்டே நகரப் போனவளைக் கைப்பிடித்து நிறுத்திய நிலவன்,
" மலரினி நம்மகிட்ட இனி வரமாட்டா மீரா."என்றான் வெற்றுக் குரலில்.தன்னிடம் கொஞ்சநஞ்சம் இருந்த அற்ப்ப ஆசையும் தூள் தூளாக நொறுங்கிவிட்ட
எதார்த்தத்தை தாளமாட்டாமல் மடங்கி அமர்ந்து விம்மினாள் பெண்.
"அப்போ என் குழந்தை இனி என்ன அம்மானு கூப்பிடமாட்டாளா? நாங்க யாருக்கு என்ன செஞ்சோம்னு இப்படி ஒரு தண்டனை எங்களுக்கு? அப்படியே ஏதாவது பாவம் பண்ணியிருந்தாலும் அதற்கான பலன் எனக்குக் கிடைத்திருக்கலாமே? அதவிட்டுட்டு
என் பாப்பாவோட உயிரை பறிச்சுக்கிட்டியே முருகா? உனக்குக் கொஞ்சங்கூட மனசாட்சியே இல்லையா? அதுசரி மனசாட்சின்னு ஒன்னு இருந்திருந்தா நீ இதையெல்லாம் எங்களுக்குச் செஞ்சிருக்கவேமாட்டியே;"மீராவின் அரற்றல் நிலவனைத் துணுக்குறச் செய்தது.
'இதற்கே இப்படித் துடிக்கிறவள்அவளது பெண்ணரசிக்கு நிகழ்ந்த அவலங்களைச் சொன்னால் தாங்குவாளா? இவளாவது தனது உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கிறாள்; ஆனால் வசந்தன் சின்னதொரு அசைவுகூட இல்லாமல், கதவு நிலையில் வேறற்றமரமாய்ச் சாய்ந்திருக்கிறான். அவனை எப்படி இயல்பாக்குவது? என்ன சொல்லித் தேற்றுவதுஎன நிலவன் தடுமாறுகையில்,
காவல்துறை ஆய்வாளர் நேரிலேயே வந்து, அவனது கையில் காகித உரை ஒன்றைத் திணித்தார்.
என்னவென்று நிலவன் அவரைக் கேள்வியாகப் பார்க்க, "போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தாச்சு மிஸ்டர் நிலவன்.அத உங்க கையில ஒப்படைச்சிட்டுக், கூடவே உங்களையும் கையோடு அழைச்சிட்டுப்போயி மீதி ப்ரொசீஜர்ஸ் பார்த்து கேச க்ளோஸ் பண்ணலாம்னு வந்தேன். சோ நீங்க வாங்க நான் ஜீப்ல வெயிட் பண்றேன்."என்றவர் சொன்ன வேகத்திலேயே வாகனத்தில் சென்று அமர்ந்துகொண்டார்.
'பொய்மைக்கும் புரட்டுக்கும் மட்டும் தேவைகள் ஒவ்வொன்றும் எத்தனைத் துரிதமாக நிறைவேற்றப்படுகின்றன;"என எண்ணியவன், தன் கையிலிருந்த அந்த மருத்துவ அறிக்கையை பிரித்துப் படித்தமாத்திரத்தில் பிரவாகமாக ஊற்றெடுக்கும் கோபாக்கினியைத் தணிக்கவியலாமல், ஓங்கித் தன் கையைச் சுவற்றில் குத்தினான்.
நிலவனின் செய்கையே அறிக்கையின் சாராம்சத்தை விளக்கிவிட, வெற்றுச் சிரிப்பு ஒன்று செந்தமிழின் இதழ்களில் நெளிந்தது.
கணவன் மனைவி இருவரும் எதிர்பார்த்ததைப் போலவே அறிக்கையில்,மலரினிக்கு ஏற்பட்டத் திடீர் மூச்சுத்திணறலே அவளது இறப்பிற்கு முக்கியக் காரணியென்றும்,
அவள் நிலைதடுமாறிக் கீழே விழுந்தபோது பின்னந்தலையில் ஏற்பட்ட பலத்த அடியால், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுக் குழந்தை இறந்துவிட்டதாகக்குறிப்பிடப்பட்டிருந்தது.
மலரினியின் கழுத்தில் தென்பட்டக் கருநிறத் திட்டுக்கள்,மூச்சுத் திணறல் ஏற்பட்டச் சமயம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாகவோ, மரணத்திற்குப் பிறகு உடலில் ஏற்படும் ரத்தத்தேக்கம் Postmortem Lividity ஆகவோ இருக்கலாம் எனப் பதிவுசெய்யப்பட்டிருந்தது.
மலரினியின் இடது கையில் உள்ள கீறல்கள் குழந்தை கீழே விழுந்தபோது ஏற்பட்டச் சிராய்ப்புகள் என்று குறிக்கப்பட்டிருந்தது. ஒட்டுமொத்தத்தில் இது ஒரு இயற்கை மரணம் என்று மருத்துவர்களால் உறுதிச்சான்றளிக்கப்படுவதாக விளக்கம் தந்து அறிக்கை முற்றுப்பெற்றிருந்தது.
பற்களை அழுந்தக் கடித்து முயன்று தன்னைச் சீர்படுத்திக் கொண்டவன், அய்யாதுரையையும் வசந்தனையும் உடன் அழைத்துக் கொண்டு, காவல்துறை வாகனத்தைப் பின்தொடர்ந்தான். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே தந்தையிடமும் தோழனிடமும் நிகழ்ந்த ஒவ்வொன்றையும் பக்குவமாக விவரித்தான் நிலவன்..
அவன் சொல்லச் சொல்ல இந்த உலகவாழ்வையே முழுவதுமாக வெறுத்திருந்தார் அய்யாதுரை. எதையும் கிரகித்துக் கொள்ளும் திறனற்றுக் கண்ணீர் உதிர்த்தார் மனிதர்..
வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை அவருக்கு. எண்ணற்றத் தோல்விகளுக்குப் பிறகுதான் இந்த உயரத்தை அவர் அடைந்தார். அவர் வளர்த்துவைத்திருந்தச் செடியைப், பக்குவமாகப் பாதுகாத்து, உரமிட்டுத், தண்ணீர் பார்த்துப் பெரும் விருட்சமாக அது தழைத்தோங்கிநிற்பதற்கு அவரின் பிள்ளைகள் வழிவகை செய்தபோது அகம் மகிழ்ந்துபோனார்.
அதையும் தாண்டி பிள்ளைகள் தங்களுக்கான இணையைத் தாங்களே தெரிவு செய்து, நல்லதோர் இல்லறத்தைச் சுகிப்பதைப் பார்த்து அவரது உள்ளம் குளிர்ந்துபோயிற்று.
அவரது உவகையைப் பேரப்பிள்ளைகளின் வரவு இரட்டிப்பாக்கியிருந்தது. அவசியத் தேவைகளைத் தாண்டி அலுவலகத்திற்குச் செல்வதைக் குறைத்துக் கொண்டு,
அவர்களோடு நாட்களை இனிமையாகச் செலவழித்தார்.அவர்களது குறும்பு செயல்களும்,
கிள்ளைமொழிப் பேச்சும். அவரது வயதையும் மீறி அவர்களுக்குச் சரிசமமாக அவரை இயங்கவைத்தது.
இன்னும் மூன்றுமாதத்தில்தங்களது வீட்டை அலங்கரிக்கவிருக்கும் நிலவன் செந்தமிழின் குழந்தைகளின் வரவிர்க்காகக் குடும்பமே பெரும் ஆவலுடன் காத்திருந்தது.
இவையனைத்துமே சிறுவயதிலிருந்து தான் கடந்துவந்திருந்தக் கடினப் பாதைகளுக்கு,
விதி வழங்கியப் பெரும் விளைச்சல் என்றுதானே நினைத்துக் கொண்டிருந்தார்?
ஒற்றை நாளில் தரைமட்டமாக இடிந்து விழவா இந்த இன்பங்களையெல்லாம் விதி அவர்களுக்கு வாரி வழங்கியது?எண்ணங்களின் ஆதிக்கத்தில் வெகுவாகக் கலங்கிப் போனார் அய்யாதுரை.அய்யாதுரையின் மறுகலைக் கண்டு நிலவனுக்கு வருத்தமாக இருந்தபோதும், அவரை அவரின் போக்கிலேயே விட்டுவிட்டான். என்ன இருந்தாலும் நிதர்சனத்தை ஏற்றுதானே ஆகவேண்டும்? அதற்கு அவரது இந்தக் கண்ணீர்
அவசியமான ஒன்று என்பதில் அவரது கையை மட்டும் ஆதரவாகப் பற்றிக் கொண்டான்.
நிலவனின் பார்வை தனக்கு அருகில் அமர்ந்திருந்த வசந்தனையே முற்றுகையிட்டது.
அவனது பேச்சற்ற அமைதி நிலவனுக்குள் மெல்லிய அச்சத்தைப் பரப்பியது.
வசந்தனுக்கு இயல்பிலேயே அமைதியான குணம் என்றாலும் அவன் இத்தனை அமைதியாக இருந்து இதுவரை நிலவன் பார்த்ததே இல்லை. வசந்தனின் மனவோட்டத்தையும் நிலவனால் அவதானிக்கமுடியவில்லை. அவனது வாய்ப்பூட்டை அவிழ்க்கவைக்கும் அவகாசமும் தற்போது தனக்கு இல்லை என்பதை நன்கு உணர்ந்திருந்த நிலவன், சிறு ஆறுதலாக இருக்கட்டும் என்று வசந்தனைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.
உற்றத் தோழன் தந்த அணைப்பு வசந்தனை மெல்லமெல்ல நிகழ்காலத்திற்கு மீட்டுவரத் துவங்கியது. இதேசமயம் நடந்தவற்றையெல்லாம் செந்தமிழும் வீட்டுப் பெண்களிடம் சொல்லியிருந்தாள். கடந்த மூன்றுநாட்களில் அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சிகளைத் தாங்கித் தாங்கி அனைவரது இதயமும் மரத்துப் போயிற்று. அழுவதைத் தவிர அவர்களும் இதில் என்னதான் செய்ய இருக்கிறது? தமிழும் அவர்களை அழவிட்டாள். அழுகை பலநேரங்களில் மனதின் குமைச்சலை ஆற்றும் ஆகச் சிறந்த மருந்து.எனவே அவள் யாரையும் தடுக்கவில்லை. அதேசமயம் தன்னால் முடிந்த அளவிற்கு யாரினது வயிறையும் வாடவிடாமல் பார்த்துக் கொண்டாள்.
இதில் மீராவின் நிலைதான் மிகவும் மோசமாக இருந்தது. நிகழ்ந்தவற்றைக் கேட்டப்பின் அடிக்கடி மயங்கிச் சறிந்துகொண்டிருந்தாள். எவ்வளவு முயன்றும் ஒரு அளவிற்குமேல்
தமிழால் மீராவுக்கு உணவு தரவும் இயலவில்லை. தன் இளைய மகனான மகிழினியனைக் கூட மீரா கவனிக்கத் தவறியிருந்தாள். நித்தமும் அழும் தாயைக் கண்டு
பயந்த மகிழினியனை அரவணைத்துக் கொண்டாள் செந்தமிழ்.
அய்யாதுரையையும் வசந்தனையும் மருத்துவமனையில் விட்டுவிட்டு, இந்த வழக்கில் தனக்கு உதவுவதாகச் சொல்லியிருந்தக் காவல்துறை உயரதிகாரியைச் சந்திக்கச் சென்றான் நிலவன். மலரினியின் உடற்கூறாய்வு அறிக்கையினை அவரிடம்
காண்பித்தவன்,
"சார் இந்த அறிக்கை நிச்சயமா உண்மைக் கிடையாது. பாப்பாவோடச் சீருடைல இருக்குற மை கரையக்கூட என்னால இயல்பா எடுத்துக்கமுடியல. என்னவோ நடந்திருக்கு.
அத இந்தப் பள்ளி நிர்வாகமும், மருத்துவமனைத் தரப்பும் மறைக்கப் பாக்குது. இவங்களோட இந்த ஈனச் செயலுக்குக் காவல்துறையும் உடந்தையா இருக்கிறதுதான்
வேதனையத் தருது. எனக்குன்னு இருக்கிறக் கடைசி நம்பிக்கை நீங்கதான்.
நீங்களாவது இந்த அநீதியையெல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவீங்கன்னு நம்புறேன்.தயவு பண்ணி அந்த நம்பிக்கையைக் கெடுக்கிறமாதிரி எதுவும் பண்ணிடாதீங்க."என்றான் வலுவிழந்தக் குரலில்.
"நிச்சயமா நீங்க என்ன நம்பலாம் நிலவன்:
இந்த வழக்குலப் புதைந்திருக்கிற உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டியது என்னோடப் பொறுப்பு. "எனக்கூறிய அந்த உயரதிகாரி, "நான் கேட்டமாதிரி மலரினியோட மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துட்டீங்களா நிலவன்?" என வினவினார்.
அவரது கேள்விக்கு ஆமாம் என்பதாகத் தலையசைத்தவன், மலரினியின் மருத்துவக் கோப்புகளை அவரிடம் ஒப்படைத்தான்..
"குட்! பர்தரா என்ன செய்யலாம்னு உங்களுக்கு ஏதும் யோசனை இருக்கா நிலவன்?"
எனக் கேட்டார் அவர். "இருக்கு சார்; சட்டத்தோடக் கட்டுப்பாட்டிலிருக்கிற மருத்துவமனையில் மலரினியோட உடலை மறுக்கூறாய்வு செய்ய விண்ணப்பிக்கணும் சார். அதுக்கு உங்களால உதவமுடியுமான்னுதான் கேட்டுட்டுப் போகவந்தேன்.'
என்றான் ஒருவிதத் தீவிரத்துடன்.
"நானுமே இதைத்தான் செய்ய நினைச்சேன் நிலவன். உங்களுக்கும் இதே எண்ணம் இருக்கும்போது வி கன் ப்ரோசீட் இட்."என்றவர், அவனுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில்
சில ஆலோசனைகளைத் தந்துவிட்டு, நிலவனுக்கு விடைகொடுத்து அனுப்பிவைத்தார்.