கண்ணம்மா.
அத்தியாயம் 9.
காவல்துறை உயர் அதிகாரியின் உதவியுடன், மலரினியின் உடலை மறுக்கூறாய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தான் நிலவன்.
மனு தாக்கல் செய்யப்பட்ட 24 மணி நேரத்திலேயே மறு உடற்கூறாய்விற்கு
உயர் நீதிமன்றத்தால் அனுமதி அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் குற்றவியல் நடுவரின் முன்னிலையில், மருத்துவக் குழுவினரால் மறு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.
அன்று மாலையே மலரினியின் உடல் மலரில்லத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
கண்ணாடிப் பேழைக்குள் சடலமாகக் கிடக்கும் தன் அருமைப் பெண்ணை, விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா. கண்கள் விடாமல் நீரை உதிற்க்க,
அவளைப் பெற்ற வயிறு துக்கப்பந்தைச் சுமக்கமாட்டாமல் வெந்து சுருண்டது.
அவளுக்கு ஆசை ஆசையாய் அமுதூட்டிய மார்பு கனத்துக் கிடந்தது. வலி தாங்காமல் இதயம் துடித்துத் துவண்டது.கத்தி அழக் கூடத் தெம்பின்றி விம்மியவளைக்
காணக்காண மனம் விண்டு வலித்தது பெரியவர்களுக்கு.
சாவிக்கொடுத்த பொம்மையைப் போலப் பேழையின் அருகில் நடந்து சென்ற வசந்தன், பேழையின்மீது அப்படியே தலை சாய்த்தான்.மலரினியின் இறப்புச் செய்தியை அறிந்தநொடி தொடக்கம் முதல் இப்போது வரை அவன் இப்படித்தான் இருக்கிறான். யாரிடமும் ஒருவார்த்தைக் கூடப் பேசவில்லை. யாராவது எதையாவது சொன்னால் அதை அப்படியே செய்தானே தவிர, வாய்த் திறந்து பேசவில்லை. மீராவைக் காட்டிலும் வசந்தனின் நிலையே அனைவரையும் பயம் கொள்ளச் செய்தது. நண்பனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாமல் தவித்த நிலவன், அவனைப் போட்டு உலுக்கினான். உணர்வுகளை வெளிப்படுத்திவிடச் சொல்லி ஊக்கினான்.
"வசந்தா வாயைத் திறந்து ஏதாவது சொல்லுடா.
தயவுபண்ணி உன்னோடத் துக்கத்தையெல்லாம் கொட்டித் தீர்த்துடு. இந்த அமைதி எதுக்கும் தீர்வாகாதுடா மச்சான். குறைஞ்சபட்சம் உன் துக்கத்தையெல்லாம் அழுதாவுது தீர்க்க முயற்சி பண்ணு. இந்த அமைதி மட்டும் வேணாண்டா மச்சான்."என்றவன் வசந்தனை இறுக அணைத்துக் கொண்டான்.
வேறு என்ன செய்து இவனைச் சமன்படுத்துவது என்று நிலவனுக்குச் சற்றும் பிடிபடாமலிருந்தது. "ராசா வாய்த் திறந்து எதையாவது பேசுயா; இப்படி அமைதியா இருந்து இந்த ஆச்சியைப் பயம்புறுத்தாத சாமி." எனக் கூறிய தெய்வானை ஆச்சி கண்ணீருடன் தனது பேரனின் தலையைத் தடவிக் கொடுத்தார்.
'பல சிரமத்துக்கு அப்புறம் என் பேறனுக்கு ஒருவழியா நிம்மதியையும் சந்தோசத்தையும் குடுத்துட்டேன்னு நினைச்சேன். ஆனா அதையெல்லாம் கொடுக்குறமாதிரி கொடுத்து
இப்படிப் பிடுங்கிக்கிட்டியே. எப்பவுமே சிரிச்ச முகமா இருக்குறப் பிள்ளைகள இப்படிக் கல்லுமாதிரி சமைஞ்சு நிக்க வச்சுட்டியே: இப்படிச் செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது முருகா?"பதில் வராது எனத் தெரிந்தும் படைத்தவனிடம் கேள்விகளைக் கேட்டுக் கேட்டு ஓய்ந்துபோனார் தெய்வானை ஆச்சி.
மீராவின் அருகில் அமர்ந்திருந்த பர்வதம் பாட்டியும் வசந்தனைத்தான் ஏறிட்டார். இந்தநாள் வரையும் பார்த்துப் பார்த்துப் பூரித்தவர் ஆயிற்றே: மீரா, வசந்தன், மலர்ப் பாப்பா,
குட்டிப் பேரன் மகிழ் அனைவரும் ஒன்றிணைந்து குடும்பமாகச் செலவிடும் தருணங்களை மெய்மறந்து ரசித்திருக்கிறார். இருவரும் இணைந்து பிள்ளைகளைப் பாங்குடன் வளர்க்கும் அழகைக் கண்டு வியந்திருக்கிறார்.
தனது மனநிறைவிற்காக நால்வரையும் அமரவைத்து வாரத்திற்கு ஒருமுறை திருஷ்டி கழித்துவிடுவார்.ஆனால் இன்று? நினைக்கும்போதே அவரது உள்ளம் ஊமையாக அழுதது எந்நேரமும் அவரது சேலைத் தலைப்பினைப் பிடித்துக் கொண்டு, அவரின் பின்னாலேயே சுற்றித்திரியும் மலரினியை உயிரற்றச் சரீரமாகக்
கண்டப் பின்னும் இந்த உயிரைப் பிடித்துவைத்திருக்கும் இறைவனில்தான் சினம் பிறந்தது அவருக்கு.
அய்யாதுரை அமுதவல்லியும் நிதர்சனத்தை ஏற்க இயலாமல் திண்டாடினர். செந்தமிழ் மட்டும் நடப்பவற்றையெல்லாம் மரத்தில் சாய்ந்து நின்று கைகளைக் கட்டியவாறு வெறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.மெல்லமெல்ல மலரினியை அடக்கம் செய்யும் ஏற்பாடுகள் துவங்கின. இதற்கிடையில் அவள் பயின்றக் கல்வி நிறுவனத்தின் தாளாளர் மாலையுடன் வந்து மலரினியின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
மலரினியின் மரணம் இயற்கையானது என்றவொன்றுதான் அவரது பேச்சின் சாராம்சமாகத் திகழ்ந்தது. ஒருவரும் அவரது வருகைக்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. நிலவன் ஆற்றவிடவில்லை. அனைவரையும் பொறுமைக் காக்கும்படிச் சொல்லியிருந்தான்.
அடக்கம் செய்யவேண்டி மலரினியை பேழையிலிருந்து வெளியே எடுத்தனர். அந்தநொடி; சுற்றியிருந்த எல்லோரையும் விளக்கிக் கொண்டு, கைகள் பரபரக்க மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் தனது ஆசைப் புதல்வியின் சரீரத்தைத் தொட்டுப் பார்த்தான் வசந்தன். ஒரு கணம் அவனது உடல் தூக்கிப் போட்டது.
அவனது செல்வமகளை ஏதோ துணியால் சுற்றிவைத்திருந்தார்கள். குழந்தையின் முகத்தைமட்டுமே அவனால் தொட்டுப் பார்க்கமுடிந்தது. அவனது பிஞ்சு முகமோ, அதன் மென்மையைத் தொலைத்து சில்லிட்டுக் கிடந்தது.குனிந்து அவளது கன்னத்தில் முத்தமிட்டான். அவன் முத்தமிடும்போதெல்லாம் "அப்பா மீசை முடி குத்துது."
எனச் சிணுங்கி, அவனது மீசையை இழுத்து விளையாடும் பிள்ளை இன்று அசையாமலிருந்தாள்.
மலரினி ஏதாவது விழாக்களுக்குத் தன் அம்மாவின் கைவண்ணத்தில் பிரத்தியேகமாகத் தயாராகும்போதெல்லாம், முதலில் தன் தந்தையிடம்தான் ஓடிப்போவாள். "அப்பா நான் அழகா இருக்கேனான்னுப் பார்த்துச் சொல்லுங்க."என்பாள். கூடவே தான் உடுத்தியிருக்கும் உடை, அதன் நிறம், அணிந்திருக்கும் அணிகலன்கள் அனைத்தையும் விளக்கிக் கூறுவதோடு, "தொட்டுப்பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்கப்பா.'
எனச் செல்லம் கொஞ்சுவாள்.
அவனுமே மிதமிஞ்சியப் பூரிப்போடு மகளின் அலங்காரத்தைத் தொட்டுப் பார்ப்பான்.
"என் தங்கத்துக்கு என்னடா இளவரசி மாதிரி இருக்க."என்கிற அவனது ஒற்றை வரியைக் கேட்டப் பிறகுதான் அவள் மற்றவர்களிடம் செல்வாள். அப்படித் தன் சுவாசத்தோடு பிணைந்துகிடக்கும்தன் அன்புமகளுக்குத்தான் இப்போது விடைகொடுக்க வேண்டுமா?
மீரா மலரினியை வயிற்றில் கருவாகச் சுமக்கும்போது இவன் அவளை நெஞ்சில் சுமந்தானே? இத்தனைக் காலமும் தன் கைக்குளிருந்த மகள், இப்போது நிரந்தரமாக அவன் கையைவிட்டுப்ப் போகிறாள் என்ற உண்மை பெற்றவனைச் சுக்கல் சுக்கலாக உடைத்துப் போட்டது. இத்தனை நாள் அடக்கிவைத்தத் துக்கமெல்லாம் கண்ணீராகக் கரைபுரண்டு ஓடியது.
வசந்தன் உடையும் தருணத்திற்காகவே காத்திருந்த நிலவன் ஓடிச்சென்று அவனைத் தாங்கிக் கொண்டான். "டேய் நிலா என் தங்கக் குட்டி என்ன விட்டுப் போயிட்டாடா. இந்த அப்பாவத் தவிக்கவிட்டுட்டுத்திரும்பி வரவே முடியாத இடத்துக்குப் போயிட்டாடா.
அவனுங்க என் பிள்ளையை என்னவெல்லாம் பாடுபடுத்தினாங்களோ: உயிர் போற வலிய குழந்தை அனுபவிச்சிருப்பாளே டா. இந்த மிருகங்கள் கிட்ட இருந்து அப்பா நிச்சயமா நம்மளக் காப்பாத்திடுவாருன்னு நினைச்சிருப்பாதானடா. அப்பா எங்கிருந்தாலும் சீக்கிரமா வந்துருங்கன்னு மனசுக்குள்ள என்னைக் கூப்பிட்டிருந்திருப்பாதானடா. பாப்பா என்னை ரொம்பத் தேடி இருப்பா. நான் வந்து அவளைக் காப்பாத்திடுவேன்னு நம்பியிருப்பா. ஆனா அவளைக் காப்பாத்தமுடியாத பாவி ஆயிட்டான்டா அவளோட அப்பா."என வசந்தன் கதறிய கதறலைக் கடைசி மட்டும் அங்கிருந்த எவராலும் மறக்க முடியாது.
ஆகிற்று; மலரினி மீளாத் துயிலில் ஆழ்ந்து முழுதாக ஒரு மாதம் ஆகிற்று. ஒட்டுமொத்த மலர் இல்லமும் அமைதியைத் தத்தெடுத்துக் கொண்டிருந்தது. மறுவாழ்வு மையப் பெண்கள் உட்பட வீட்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் மலரினியின் கொடூர மரணம் ஆழமாகப் பாதித்திருந்தது. இயந்திரத்தனமான வாழ்வையே அங்கிருந்த ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
அன்றுதான் மலரினியின் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. தன் மருமகளின் இறப்பிற்குக் காரணமான குற்றவாளிகளை நிச்சயம் சட்டம் தண்டிக்கும் என்ற நம்பிக்கையில், தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மலரின் சமாதிக்குச் சென்று,
மலர்வளையம் வைத்த நிலவன்,
அய்யாதுரை வசந்தனுடன் நீதிமன்றத்திற்குக் கிளம்பினான். நீதிமன்ற வாயிலிலேயே அவர்களுக்காகக் காத்திருந்த அந்த உயரதிகாரி, வழக்கு அவர்களுக்குச் சாதகமாகத்தான் முடியும் என்று நம்பிக்கையளித்தார். அதுவே நிலவனைச் சற்றுத் திடம்கொள்ளச் செய்தது.
சிலமணிநேரக் காத்திருப்புக்குப் பிறகு, அவர்களது வழக்கு விசாரணைக்கு வந்தது
வழக்கின் சாரம்சத்தைப் படித்த நீதிபதி, மறு உடற்கூறாய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்கக் கூறினார். காவலதிகாரி ஒருவரால் அறிக்கை நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கையை வாசித்த நீதிபதி, மனு தாக்கல் செய்தத் தரப்பினரை விசாரிக்கத் துவங்கினார். தங்கள் தரப்புச் சந்தேகங்களை நீதிபதியிடம் விளக்கினார் நிலவன் தரப்பு வழக்கறிஞர்.
அதன்பிறகு பள்ளி நிர்வாகத்திடமும், மருத்துவமனை தரப்பிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக மலரினியின் தாய்மாமன் நிலவனையும் விசாரித்தார் நீதிபதி. நிலவனும் தன்னால் முடிந்த அளவில் மலரினியின் இறப்புத் திட்டமிட்டக் கொலையென்று அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்தான். எல்லா தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அறிக்கையின் முடிவைப் படித்தார். மலரினியின் மரணம் இயற்கையானதுதான் என்பதை அந்த மறு உடற்கூறாய்வு அறிக்கை உறுதிசெய்தது.
இதை இன்னும் வலுப்படுத்தும் விதமாக மலரினியின் மருத்துவப் பின்னணிக்கோப்புகள்
நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
மலரினிக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பதாகவும், குளிர்காலங்களில் கவனமெடுத்துப் பார்த்துக் கொள்ளாவிட்டால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவரால் குறிப்பிடப்பட்டிருந்த மருத்துவச் சான்றிதழைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டனர் எதிர்தரப்பினர். மறுப்பதற்கு ஏதுமின்றி
அறிக்கை முடிவுகள் தெளிவாக இருந்ததில், மலரின் வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பெழுதினார் நீதிபதி.
நம்பமுடியாத அதிர்ச்சியுடன் அந்தக் காவல்துறை அதிகாரியை ஏறிட்டான் நிலவன்.
அவனைப் பார்த்து ஏளனமாக உதட்டை வளைத்தார் அவர். தனக்குத் துரோகமிழைக்கப்பட்டதை அவரது எள்ளல் புன்னகை நிலவனின் நெற்றிப்போட்டில் அறைந்து உணர்த்திய தருணம் சட்டத்தையும் அதன் அதிகாரத்தையும் அறவே வெறுத்தான். இவனுக்கே இப்படி என்றால்அய்யாதுரை வசந்தனும் நொறுங்கிப் போயினர்.
மலரினியின் உடலை மறுக்கூறாய்வு செய்வதற்கு நிலவன் மனு தாக்கல் செய்த சமயத்திலிருந்தேஇந்த விடயம் பத்திரிக்கைத் துறையின் பார்வைக்கு வந்திருந்தது.
ஆகையால் அன்றிலிருந்தே மலரினியைச் சார்ந்தத் தகவல்கள் பத்திரிகைகளில் ஆங்காங்கே இடம்பெறவும் துவங்கியது. இந்தத் தகவல் ஊடகத்தையும் சென்றடைய,
சில தொலைக்காட்சிகளில் மலரினியின் வழக்குப் பேசுபொருளாகியது. அதன் காரணமாக வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதும் குடும்பத்தினரை வந்தடைந்தது.
செந்தமிழுக்குத்தான் நிலவனை நினைத்துக் கவலையாக இருந்தது. இந்த 30 நாட்களிலும் மலரினி குறித்த நிலவனின் மறுகளை அருகிலிருந்து பார்த்தவள் அவள்.
"ஒரு சின்னச் சூட்டக் கூட இனி பாப்பா தாங்கிக்கமாட்டாளே;
அவளப்போய்...எப்படி மனசுவந்தது அவனுக்கு? அந்தக் குட்டி உடம்பை எத்தனைமுறை அறுத்துட்டாங்க? ஏன் இப்படியெல்லாம் நடந்தது? இதெல்லாம் கனவாவே கரைந்து போயிடக் கூடாதா?"என மனையாலின் மடியில் படுத்துக்கொண்டு அவன் புலம்பாத நாட்களே இல்லை.நீதிமன்றத்திற்குக் கிளம்பும்போதுகூட "நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு நீயும் அதையே நம்பு."என்று அவளை அணைத்துக் கொண்டு அவன் கூறியதெல்லாம் நினைவில் எழுந்து, பெண்ணவளைப் பயம் கொள்ளச் செய்தது. ஏனோ அவளது மனமும் ஒருநிலையில் இல்லாமல் அலைபாய்ந்தது.