• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தகிக்காதே குளிர்நிலவே..!(18)

STN46

New member
அத்தியாயம் -18

வேகமாக வீட்டினுள் நுழைந்தவனுக்கு அத்தனை கோபம்.

மேசையின் மீதிருந்த பொருட்களையெல்லாம் ஆத்திரத்துடன் தள்ளிவிட்டான்.

உண்மையாகவே அவள் தன்னை விரும்பவில்லை என்றால் கூட அவனுக்கு இத்தனை கோபம் வந்திருக்காது.

அவள் தன்னை விரும்புவதாக கூறுவதற்காக தான் வரச் சொல்லியிருக்கின்றாள் என்பதை அவளது அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவுடனே உறுதிபடுத்திக் கொண்டான்..

அவளது பிறந்தநாளிற்கு தான் பரிசளித்த புடவையை அணிந்து கொண்டிருந்தவளை பார்த்ததும் மனம் சிறகில்லாமல் வானத்தில் பறந்தது.

ஆனால் அதற்கு நேர்மாறாக அவள் பேசியதும் நடந்து கொண்டதும் அவனுக்கு ஆத்திரத்தை வரவழைத்தது.

இனியும் அவளிடம் வலிய சென்று தனது காதலை ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்ச அவனது தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
இடையில் பாரதி வந்து அவளிடம் பேசியதை அறியாத அருண்மொழி, 'ஒரு வேளை வேண்டுமென்றே தன்னை சீண்டி அவமானப் படுத்துகின்றாளோ..'என்ற எண்ணம் வலுக்க ஆரம்பித்தது. நீண்ட நேர யோசனைக்குப் பிறகு அப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவனாக ஒரு முடிவுக்கு வந்தான்.

கையை வேறு அசைக்க முடியவில்லை.

பெருமூச்சுடன் விழிகளை மூடி சாய்ந்து அமரந்தவனுக்கு நந்தினியின் அழகிய மதிவதனம் தான் கண்முன்னே தோன்றி இம்சித்தது.

“ம்ம்ச்” என சலிப்புடன் எழுந்தவன் தனது வேலைகளை செய்ய ஆரம்பித்தான்.

இரண்டு மாதங்கள் கடந்திருந்நது.

அவனது காயங்கள் எல்லாம் முழுவதுமாக ஆறியிருந்தது

அலுவலகத்திற்கு வரும் அருண்மொழி தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தான்.

நந்தினியின் பக்கம் திரும்பவே இல்லை.

“ஏய்…அருண்..? வாடா காஃபி சாப்பிட போகலாம்” என்றாள் பாரதி.

“ ம்ம்ச்…நீ போ பாரதி. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு.” என்றான் சோர்வுடன்.

பாரதியும் அவனைப்
பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றாள்.

அன்றைய நிகழ்விற்கு பிறகு அருண்மொழியின் குறும்பு, துடுக்குத்தனம், முகம் கொள்ளா புன்னகை என அனைத்தும் குறைந்து தான் போயிருந்தது.

அவளுக்குமே குற்றவுணர்ச்சியாகத் தான் இருந்தது.

தெரிந்தே தவறு செய்வது அவளது மனதை கூரிய வாள் கொண்டு அறுத்துக் கொண்டு தான் இருந்தது
.
“அருண் இப்பெல்லாம் நீ சரியா பேசுறது கூட இல்ல…என்னாச்சு டா உனக்கு?” என்றபடி அவனருகே அமர்ந்தாள்

அவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவன் , “ ஐ யம் வெரி சாரி பாரதி. என்னால நந்தினியை மறக்க முடியல. இந்த ஜென்மத்துல எனக்கு அவ மட்டும் தான் . அன்னைக்கு நீ வந்து லவ் சொன்னப்ப உன் பின்னாடி தான் நந்தினி நின்னுட்டு இருந்தா. அவளை வெறுப்பேத்துறதுக்காக உன்னோட லவ்வை அக்சப்ட் பண்ணிகிட்ட மாதிரி நடிச்சேன். அது ஓரளவு சரி வந்தது. நந்தினியும் ‌என்னை விரும்புறா தான். அதை சொல்ல தான் கொஞ்ச நாள் முன்னாடி என்னை ஆஃபிஸ்க்கு வரச் சொன்னா. ஆனா கூப்பிட்டு வழக்கம் போல என்‌ பின்னாடி வராதீங்க அது இதுன்னு சொல்லி சமாளிச்சுட்டா.. ஏன்‌ அவ அப்படி மாத்தி பேசினான்னு தெரியல.ஆனா நிச்சயமா அவ என்ன விரும்புறா. என்னை மன்னிச்சிடு பாரதி . நான் பண்ணுனது ரொம்ப பெரிய தப்பு தான். எனக்குப் புரியது. உன்னோட மனசுல ஆசையை வளர்த்துட்டு இப்ப வந்து என் மனசுல நந்தினி தான் இருக்கான்னு சொல்றது உனக்கு ஹர்ட் ஆகும் தான் .என் வாழ்க்கையில நான் செஞ்ச மிகப் பெரிய தப்பு உனக்கு நான் தெரிஞ்சே கொடுத்த இந்த கஷ்டம். இதை செல்றதுக்கு எனக்கு ஒரு மாதிரி தான் இருக்கு. ஆனாலும் சொல்லாம இருக்கு முடியல. ப்ளீஸ்…பாரதி என்னை மறந்துடு. என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது. திரும்பவும் சொல்றேன்‌ நந்தினி இருக்குற மனசுல வேற யாருக்கும் இடமில்லை.” என்று கூறி விட்டு அவளது முகத்தை பார்த்தான்.

கண்கள் சிவந்து கலங்கிக் கொண்டிருந்தது அவளுக்கு.

துக்கம் ஒருபுறம் தொண்டையை அடைக்க மறுபுறம் குற்றவுணர்வு மேலோங்கி அவளை தவிக்க வைத்தது.

உணர்வுகளின் குவியலாக அமர்ந்திருந்த பாரதியின் விழிகளில் இருந்து கண்ணீர் கன்னம் தொட்டது.

அதைப் பார்த்தவனின் மனம் கனத்து தான்‌ போனது.

“ ப்ளீஸ் பாரதி…! அழாத மா. எனக்குப் புரியுது. ஆனா..என்னால உன்னை காதலிக்க முடியாது..” என்றான் தவிப்பாக.

கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள், “ அவ…ம்ம்கூம்…அவங்க உன்னை நிஜமாவே விரும்புறாங்கன்னு நீ…எப்படி.. அவ்வளவு உறுதியாக சொல்ற அருண். மே பீ உன்னோட அசெம்ஷனா கூட இருக்கலாம் இல்லையா..?” என கடைசியாக அவன் மனது தன் புறம் திரும்பாதோ என்ற நப்பாசையில் கேட்டாள்.

“பிறந்தநாளுக்கு நான் கொடுத்த புடவையை அன்னைக்கு கட்டிட்டு வந்திருந்தா‌ . என்னைக்கு அவ அதை கட்டிட்டு வராளோ அன்னைக்கு அவ என்னை விரும்புறான்னு அர்த்தம்னு ஏற்கனவே சொல்லிருந்தேன். அவளை பத்தி உனக்கு தெரியாது பாரதி. அவ லேசுல எந்த விஷயத்தையும் அக்சப்ட் பண்ணிக்க மாட்டா. கட்டாயப்படுத்தி எந்த ஒரு விஷயத்தையும் செய்ய வைக்க முடியாது. அவளா முடிவெடுத்தா தான் ஒரு விஷயத்தை விரும்பிச் செய்வா. அது மாதிரி இதுவும். அவளா விரும்பி தான் அந்த புடவையை கட்டிட்டு வந்தா. அவ கண்ணுல ஏதோ ஒரு தவிப்பு, ஏக்கத்தை நான் பார்த்தேன் பாரதி.” என்றவனுக்கு அவளை முத்தமிட்ட போது அலைபாய்ந்த அவளது நீண்ட‌ நயனங்கள் காட்சியாக தோன்றியது.

அவனது உடல் மொழியுடன் பேச்சினை கேட்ட பாரதிக்கு ஒன்று மட்டும் நன்றாகவே புரிந்தது.

அருண்மொழியின் ஒவ்வொரு அணுவிலும் நந்தினி தான் நிறைந்திருக்கின்றாள் .

அவனது மனம் நிச்சயமாக தன்னை ஏற்றுக் கொள்ளாது என ஆணித்தரமாக நம்பியவளுக்கு இதயத்தினோரம் வலி தோன்றி மறைந்தது.

மேலும் அவனிடம் பேசி நந்தினியின் புராணத்தை கேட்க விரும்பவில்லை.

சோர்வுடன் எழுந்தவள் அவனை ஒருமுறை கண்களில் நிரப்பிக் கொண்டு தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தாள்.

சிறிது நேரத்தில் அலுவலகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

நந்தினியின் தந்தை விஜயேந்திரன் வந்து கொண்டிருந்தார்.

அலுவலக ஊழியர்கள் அனைவரும் அவருக்கு வணக்கம் வைத்து எழுந்து நின்றனர்.

அவர்களது வணக்கத்தை ஏற்றுக் கொண்டவர் அனைவரையும் அமரச் செய்தார்.

நந்தினியும் தந்தையை வரவேற்க வந்து நின்றிருந்தாள்.

அனைவரையும் ஒரு கணம் பார்த்தவர், “ ஹலோ..கைஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க? வெர்க் எல்லாம் எப்படி போகுது? உங்களோட உழைப்புனால தான் நமக்கு புதுபுதுப் ப்ராஜெக்ட் கிடைச்சிட்டு இருக்கு. பார்க்கவே சந்தோஷமா இருக்கு. இந்த சமயத்துல உங்களுக்கு ரெண்டு சந்தோஷமான விஷயத்தை சொல்லாம் போறேன்…” என்று கூறி விட்டு அனைவரையும் பார்த்து மீட்டிங் ஹாலிற்கு வரச் சொன்னார்.

மீட்டிங் ஹாலில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை தான் பார்த்துக் கொண்டிருந்தனர் .

சின்னச் சிரிப்புடன் நந்தினியை பார்த்தவர், “ இது கொஞ்சம் அகலக் கால் தான். இருந்தாலும்‌ கொஞ்சம் ரிஸ்க் எடுத்து இந்த விஷயத்தை செய்றேன். இதுவரைக்கும் நாம ஐ.டி செக்டாரை மட்டுந்தான் ஃபோகஸ் பண்ணிட்டு இருந்தோம். இனி நம்ம ஸ்டீல் அண்ட் மெஷினெரி இன்டஸ்ட்டீரீஸ்லயும் நம்ப கம்பெனியை விரிவு படுத்த போறோம். இதுல நானூறு கோடி ரூபாய் இன்வெஸ்ட்மென்ட் பண்ணிருக்கேன். கூடிய சீக்கிரம் வேலை ஆரம்பிச்சிடும் .அதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சாச்சு. சோ இது நம்ம நிறுவனத்தின் வளர்ச்சியோட அடுத்த மைல் கல். இதை சொல்லிக்கறதுல ரொம்பவே பெருமைப்படுறேன். அடுத்த சந்தோஷமான செய்தி என்னன்னா என்‌ பொண்ணு நந்தினிக்கும் தி க்ரேட் பிசினஸ்மேன் விக்ராந்தோட பையன் விஷ்ணுவுக்கும் மேரேஜ் பிக்ஸ் பண்ணிருக்கோம். கூடிய சீக்கிரம் என்கேஜ்மெண்ட் நடக்கப் போகுது. அதுக்கு உங்க எல்லாரையும் இன்வைட் பண்ணத்தான் வந்துருக்கேன்…” என்று கூறியவர் அதிர்ந்த முகத்துடன் நிற்கும் நந்தினியை பார்த்து, “ சாரி…மை டியர்…இது உனக்கான ப்ளஸண்ட் சர்ப்ரைஸ்..” என்று கூறி விட்டு சிரிந்தார்.

அவரது பேச்சில் திடுக்கிட்டவள் தந்தையின் சிரிப்பினை காண சகியாது அருண்மொழியின் புறம் திரும்பினாள்.

அவனோ இருகைகளையும் கட்டிக்கொண்டு அமைதியாக அவளைத்தான் ‌பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது பார்வையில் என்ன இருந்தது என அவளால் ஊகிக்கவே முடியவில்லை.

ஏதோ நினைத்தவள் அதிர்ந்த முகத்தை சீர்படுத்தி கொண்டு வலுக்கட்டாயமாக தந்தையைப் பார்த்து சிரித்தாள்.

பாரதிக்குமே இது அதிர்ச்சியான தகவலாக தான் இருந்தது. இருவரது முகப்பாவத்தையும் கூர்ந்து கவனித்து கொண்டிருந்தாள்.

மூவரின் கண்ணாமூச்சி ஆட்டமும் முடிவுக்கு வருவது எப்போதோ?

பார்வையை சிறிதும் விலக்கிக் கொள்ளாமல் நின்றிருந்தான் அருண்மொழி.

புன்னகை முகத்துடன் இருப்பதற்கு முகமும் மனமும் கடினப்பட்டு தான் போனது.

அன்று மாலை மூவரும் வெவ்வேறு விதமான மனநிலையில் வீட்டிற்கு கிளம்பினர்.

தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள் பாரதி.

ஏதேதோ சிந்தனைகள் அவளை ஆட்டிப் படைக்க சுற்றுப்புறம் உரைக்காமல் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு இடப்புறமாக திரும்ப முயன்ற வந்த லாரியை கவனியாமல் வேகமாக இடப்புறமாக திரும்பியதில் அவளை முந்திச் செல்ல நினைத்த‌ வாகனம் அவளது இருசக்கர வாகனத்தில் பலமாக மோதியதில் தூக்கி வீசப்ப்ட்டாள் பாரதி.

மூன்றாண்டுகள் முழுவதுமாக கடந்திருந்தது.

அந்த சொகுசுக் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தாள் நந்தினி.

கண்மூடி அமர்ந்திருந்தவளுக்கு ஆயாசமாக இருந்தது.

இந்த மூன்று ஆண்டுகளில் எத்தனையெத்தனை மாற்றங்கள் ?

அவளது வாழ்க்கையே தலைகீழாக மாறித்தான் போனது.

விஜயேந்திரன் நானூறு கோடியில் ஆரம்பித்த எஃகு மற்றும் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் ஆலை மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது.

நானூறு கோடியை முழுவதுமாக நஷ்டமானது.

மிகப்பெரிய தொகையை கடனாக வாங்கியவருக்கு இந்த நஷ்டம் முடக்கிப் போட்டுவிட்டது.

எதிர்பாராத விதமாக பங்குச்சந்தையில் அவரது நிறுவனங்களின் பங்கு வீழ்ச்சி, அடுத்தடுத்த நிறுவனங்களில் நஷ்டம் என ஆரம்பித்து அவரது நிறுவனங்களை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நந்தினியின் நிறுவனத்தையும் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஒன்றை விற்று மற்றொன்றை காப்பாற்ற நினைத்தாலும் அனைத்தும் கடலுக்குள் கரைத்த பெருங்காயம் போல தான் இருந்தது.

அனைத்தும் கைவிட்டு சென்று விட்டது.

இப்போது அவள் செல்வது இத்தாலியில் உள்ள ஒரு தீவிலிருக்கும் ஒரு நிறுவனத்தின் பணியாற்ற தான்.

சில மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கான பதவிக்கு விண்ணப்பித்திருந்தாள்.

காணொளி மூலம் நேர்முகத் தேர்வு நடந்தது.

நான்கு நாட்களுக்கு முன்பு தான் உடனடியாக வந்து பணியில் சேர்ந்து கொள்ளுமாறு நியமனக் கடிதம் வந்தது.

சொந்தமாக நிறுவனத்தை நடத்தி வந்தவளுக்கு அடுத்தவரிடம் சென்று பணிபுரிவது என்பது எரிச்சலாக தான் இருந்தது.

தனக்கு கீழே இருநூறு பேரை வைத்து வேலை வாங்கியவளுக்கு இன்று தானே பிறர் முன்னிலையில் கைக்கட்டி நின்று வேலை செய்ய போகும் நிலையை எண்ணி மனம் கசந்தது.

தந்தையின் கவலைக்கிடமான உடல்நிலை. வீட்டின்‌ மீதிருந்த கடன், நிறுவனங்களை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் என சூழ்நிலை அனைத்தும் அவளுக்கெதிராக இருந்தது.

அனைத்தையும் அசைப்போட்டுக் கொண்டே அந்தத் தீவிற்கு வந்திறங்கினாள்.

துறைமுகத்தை விட்டு சற்று வெளியே வந்து நின்றவளின் பார்வை அத்துறைமுகத்தை அளவெடுத்தது.

தனியாரின் துறைமுகம் என்ற பார்த்தவுடனேயே தெரிந்தது.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் தனி வாகனம் வந்து நிற்க அதில் ஏறிக் கொண்டாள்.

அவள் ஏறியிருந்த வாகனம் 'சிம்ம விலாஸ்’ என்ற பிரம்மாண்டமான அரண்மனையை நோக்கி சீறிப் பாய்ந்தது.
 
Top Bottom