• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தகிக்காதே குளிர்நிலவே..!(28)

STN46

New member
பாரதியின் உள்ளங்கையில் இருந்த திருமாங்கல்யத்தை கண்டு திகைத்து நின்றான் வர்மன்.

“ இது எப்படி உன் கிட்ட?” என்றான்.

“நான் இங்க வந்த புதுசுல நீங்க தான் இதை என் கழுத்துல போட்டீங்க…”என்றாள்.

அவன் சந்தேகமாக அவளைப் பார்க்க ,” நிஜமா தான் சொல்லுறேன்…சந்தேகமா இருந்தா இங்க இருக்குற யாரு கிட்ட வேணாலும் கேட்டுப் பாருங்க…” என்றாள் அவசரமாக.

அதனை வாங்கிக் கொண்டவன் , "சரி அதை ஏன் இவ்வளவு நாளா கழட்டித் தராம இப்ப கழட்டி தர்ற..?"

“ அது…வந்து…இதுனால எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாதுன்னு…அதான்…” என்றாள் அவள் அவனது மூரக்கத்தனத்தை நினைத்து.

அவனோ அருண்மொழியை திருமணம் செய்து கொள்வதற்கு அவன் அணிவித்த தாலி தடையாக இருக்கின்றது என நினைத்துக் கொண்டான்.

இறுகிய முகத்துடன், “ ம்ம்…உன் கிட்ட ஒண்ணு கேட்கலாமா?” என்றான்.

“ ம்ம்..கேளுங்க..”
மெல்லிய குரலில்.

“நீ அருண்மொழியை விரும்புறியா?”என்றான்.

அவன் கூறியதை சரியாக கேட்டுக் கொள்ளாததால் , ‘ விரும்புனியா..?” என் கேட்டு விட்டது போலும்.

“ ஆமா….ஆனா..” என அவள் ஏதோ கூற வரும்‌ முன்பே இறுகிய முகத்துடன் செல் என்பது போல செய்கை செய்தான்.

பாரதிக்கு அவனது கடுமையான முகம் பயத்தை கொடுத்தது. அவன் மீதிருந்த அன்பை அப்பொழுதே அவள் வெளிபடுத்தியிருக்கலாம். ஆனால் மீண்டும் ஒரு தோல்வியை சந்திக்க அவளது மனமும் உடலும் தயாராக இல்லை.

“உங்களுக்கு உடம்பு சரியானது ரொம்ப சந்தோஷம்…இன்னும் நாலு நாள்ல நான் இங்கிருந்து இந்தியாவுக்கு கிளம்பிடுவேன்.” என்று கூறி கொண்டு இருக்கும் போதே அவளிற்கு பின்னால் இருந்த அறையின் வாசலில் யாரோ மறைந்து கொண்டிருப்பது போல நிழலாடியது.

கண்கள் சுருக்கி அவளின் பின்னால் அவன் பார்க்க, கருப்புடை அணிந்த அவ்வுருவம் கூரிய கத்தியை அவள் மீது வீசியது.

கணத்தில் சுதாரித்தவன் அவளை தன் புறமாக இழுத்து நிறுத்தினான்.

கத்தி அவனது தோளை உரசிக் கொண்டு சென்று‌ விழுந்தது.

அடுத்தடுத்த கத்திகள் இருவரின் மீதும் விழ ஆரம்பித்தது.

பாரதியை அணைத்துக் கொண்டு அருகிலிருந்த தூணிற்கு பின்னால் மறைந்து கொண்டான் வர்மன்.

அவனது திண்ணிய மார்பில் அவளது தலையை வைத்து அழுத்தியிருந்தான்.

அவனது இதயத்துடிப்பினை அவளால் துல்லியமாக உணர முடிந்தது.

சில நிமிடங்கள் அவனது அணைப்பில் மெய்மறந்திருந்தாள் பாரதி.

அவளது மனமும் உடலும் மாறவர்மனின் அருகாமையை விரும்ப ஆரம்பித்து விட்டது போலும். மெல்ல விழியுயர்த்தி அவனைப் பார்த்தாள்.

அவனோ அவளை அணைத்தபடியே தூணிற்கு பின் புறமாக எட்டியெட்டி பார்த்தபடியே இருந்தான்.

அவள் தலையை நிமிர்த்தி அவனைப் பார்க்க , ஏதோ நியாபகத்தில் மீண்டும் அவளது தலையை தன் மார்பில் சாய்த்துக் கொள்ள முற்பட்டவன் அப்போது தான் அவளது முகத்தை பார்த்தான்.

அவளது விழிகள் இரண்டும் அவனை ஏக்கத்துடன் தழுவிக் கொண்டிருந்தது.

ஒரு கணம் அதில் தடுமாறி நின்றவனின் காலருகே கத்தி ஒன்று வந்து விழ. சட்டென்று சுதாரித்துக் கொண்டு,” நீ இங்கேயே இரு..வெளிய வந்துடாத…” என்று கூறி வாசல் புறம் ஓடினான்.

அவன் தன்னருகே வருவான் என்று எதிர்பாராத அந்த உருவம் வேக படியிறங்கி ஓடத் தொடங்கியது.

நான்கே எட்டில் அவ்வுருவத்தை பிடித்து விட்டான்..

அவனது இறுகிய பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற உருவத்தின் முகமூடியை பின்னிருந்து கிழித்து எறிந்தான்‌.


தன் புறமாக உருவத்தை திருப்பி முகத்தில் ஒங்கி ஒரு குத்து விட்டான்.

“ஆஆஆ…” என மூக்கை பிடித்துக் கொண்டு அலறினார் ஆதிசேஷன். அவரது மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது.

“ மாமா….நீங்களா?” என அதிர்ந்து திகைத்தான் வர்மன்.

“உன்னைக் கொல்லாம விடமாட்டேன்..” என்றபடி அவன் மீது பாய்ந்தார் ஆதிசேஷன்.

அவன் அசந்திருந்த நேரம்‌ அவனது கழுத்தை நெறித்து அவனை கீழே தள்ளினார்.

அவன் மீது அமர்ந்து கூரிய பொருள்‌ கொண்டு அவனது கழுத்தில் குத்த முயன்றார்.

பதறியடித்து பாரதி ஓடி வந்து அவரை தடுக்க முயல அவரோ தன்‌ முழு பலங்கொண்டு ஒரு கையினால் அவளைத் தள்ளி விட்டார்.

அவளது தலை அருகிலிருந்த தூணில் பலமாக மோதி இரத்தம் பீறிட்டு வந்தது.

இருப்பினும் சமாளித்து நெற்றியைப் பிடித்துக் கொண்டு மீண்டும் மாறவர்மனின் அருகில் ஓடி வந்தவள் , “ அவரை விடுங்க ப்ளீஸ்….ஏன் இப்படி பண்ணுறீங்க?” என்று கத்தினாள்.

சத்தம் கேட்டு அனைவரும் ஒடி வந்தனர்.

பார்க்க சாதாரணமாக தெரியும் ஆதிசேஷனின் கைகளில் அத்தனை வலிமை.

முறைப்படி வர்மக்கலை மற்றும் இதர தற்காப்பு கலைகள் பயின்றவர் அவர்.

“ஆதிசேஷன்….என்ன பண்றீங்க?” என கர்ஜித்தார் வீர ராஜசிம்மர்.

அதில் அவரது கவனம் சிதற சட்டென்று அவரைப் பிடித்துக் கொண்டான் மாறவர்மன்.

அதற்குள் அருண்மொழியும் இளமாறனும் மாறவர்மனின் அருகே வந்து விட்டனர்.

மாட்டிக் கொண்டாகி விட்டது இனியும் பதுங்க அவசியமில்லை என்று நினைத்தவர் அனைவரையும் ஒரு கணம் பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

“ஆரம்பத்துல இருந்தே எங்க குடும்பம்னால உங்களுக்குயெல்லாம் ஒரு இளக்காரம் தான். சுதர்சனருக்கும், தனஞ்செயருக்கும் கொடுக்குற மரியாதையை எனக்கு குடுக்க மாட்டீங்க. வெளியிலும் அப்படி தான் …அப்பறம் மாறவர்மனும் , அருணும் மட்டுந்தான் உங்க கண்ணுக்குத் தெரிவாங்க…என் பையன் இளமாறனை ஒரு மனுஷனா கூட யாரும் மதிக்க மாட்டீங்க…கேட்டா பொம்பிளை பின்னாடி சுத்தறான்…பொறுப்பில்லன்னு ஒரு சாக்கு சொல்வீங்க…பொறுப்பையும் அதிகாரத்தையும் அவன் கையில் கொடுத்தா தானே…அவன் புத்திசாலியா….இல்லையான்னு தெரியும்…அதுக்குத்தான் ரொம்ப வருஷமாவே கூட இருந்து அருண்மொழியையும் மாறவர்மனையும் கொல்ல ட்ரை பண்ணுனேன். ஆறு வருஷத்துக்கு முன்னாடி அருண்மொழியை கொல்ல எவ்வளவோ வழியில ட்ரை பணணுனேன்.‌ஆனா…முடியல.. உங்களுக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சது…அதுக்கப்புறம் சமயம் பாத்து அருண்மொழி ஒரு தீவுக்கு போயிட்டு வர்றப்ப கூலி ஆட்களை வச்சு படகை கவிழ்த்து விட்டுட்டேன். அவனோட உடல் கூட கிடைக்கல …இறந்து போயிட்டான்னு நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருந்தேன். மாறவர்மனுக்கும் மனநிலை சரியில்லாம போயிடுச்சு…அதுல இன்னுமே எனக்கு சந்தோஷம் தான். அதான் மூணு வருஷமா அமைதியா இருந்தேன்.ஆனா இறந்ததா நினைச்ச அருண்மொழி உயிரோட வந்தான்…திரும்பவும் அவனை கொல்ல ரெண்டு தடவை ட்ரை பண்ணுனேன்….முடியில…இதோ இங்க நிக்குறானே மாறவர்மன்…இவனோட சம்சாரம் தேவியையும் நான் தான் கூலிப்படை ஏவி கொன்னேன்…முல்லைப் பந்தலுக்கு அடியில ராஜநாகத்தை விட்டதும் நான் தான்…அப்பவும் அருண்மொழி தப்பிச்சிட்டான். இன்னைக்கு இந்த பாரதி பொண்ணோட மாறவர்மன் நின்று பேசிட்டு இருந்தான். கொண்டு பேரையும் போட்டுத் தள்ள தான் வந்தேன். ஆனா இப்பவும் என் குறி தப்பிடுச்சு...இப்ப தப்பாது. தேவியை இழந்த மாதிரியே…இப்ப பாரதியையும் இழக்கப் போற…” என்று கூறி விட்டு அசுரத்தனமாக சிரித்தவர் வர்மனின் பிடியை ஒரு உதறு உதறி விட்டு தன் முழு பலத்தையும் பயன்படுத்தி அருகிலிருந்த பாரதியை இழுத்து அவளது கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டார்.

பின்னர் இடுப்பில் வைத்திருந்த சிறிய துப்பாக்கியை எடுத்து அவளது நெற்றியில் வைத்தார்.

“ பாரதி…!. மாமா... வேண்டாம்…ப்ளீஸ் அவளை விட்டுடுங்க” என்று பதறினான் அருண்மொழி.

“ உன்னோட ஃப்ரெண்ட் இந்த பாரதி மாறவர்மனோட மனைவி தான…?” என்றவர் மாறவர்மனைப் பார்த்து , "என்னப் பாக்குற…? நீ பைத்தியமா இருந்தப்ப தான் இந்த பொண்ணு பாரதியை உன் தம்பி அருண்மொழி தான் ஊர்ல இருந்து கூட்டிட்டு வந்தான். அவளைப் பார்த்தவுடனே உனக்கு உன்னோட பொண்டாட்டி நியாபகம் வந்து தேவி படத்துல தொங்கிட்டு இருந்த தாலியை எடுத்து பாரதி கழுத்துல போட்டுட்ட…பாவம் அந்தப் பொண்ணும் வேற வழியில்லாம இங்கயே தங்கிடுச்சு…” என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே தன்னை பிடிக்க முயன்ற அருண்மொழியின் காலருகே துப்பாக்கியால் சுட்டார்.

அதில் அனைவரும் பதறி விலகி நின்றனர்.

" யாரும் என்னை நெருங்கி வராதீங்க..! மீறி வந்தா இந்தப் பொண்ணோட பொணத்தை தான் பாப்பீங்க..." என வன்மமாக கூறினார்.

செய்வதறியாது திகைத்து நின்றனர் அனைவரும்

சுற்றிலும் பார்வையை சுழல விட்டபடியே பாரதியுடன் பின்னால் நகர்ந்தார்.

“ அப்பா…என்ன‌ பண்ணுறீங்க…? பைத்தியம் பிடிச்சு போச்சா உங்களுக்கு?அவங்களை விடுங்க ப்ளீஸ்…எனக்குத் தான் எந்த பொறுப்பும் அதிகாரமும் வேண்டாம் னு சொல்லிட்டேனே…ஏன் இப்படி மிருகத்தனமா நடந்துக்கிறீங்க? அவங்களை விடுங்க ….” என்று கத்தினான் இளமாறன்.

“ ஆமா…டா…பைத்தியம் தான் பிடிச்சு போச்சு…பணப் பைத்தியம், அதிகார பைத்தியம்…புகழ் பைத்தியம்…..ஹா…ஹா…வர்மா… உன் பொண்டாட்டி தேவி மேல தான உனக்குப் ப்ரியம்…இவ மேல இல்லையில்ல. அதனால இவளை கொன்னுடுறேன்…. அனாதைப் பொண்ணு…அனாதையாவே சாகட்டும்” என்றவர் அவளை இழுத்துக் கொண்டு வீட்டின் வாசலை நோக்கிச் சென்றார்.

மந்தாகினி கணவரின் புதிய அவதாரத்தை பார்த்து அதிர்ந்து நின்றார்.

ஆதிசேஷன் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் மாறவர்மனின் காதில் வந்து மோதியது.

மனதில் இனம்‌ புரியாத உணர்வு சூழ்ந்து கொண்டது வர்மனுக்கு‌

மனதில் இருந்த சில குழப்பங்களுக்கு ஆதிசேஷன் தெளிவான விளக்கம் கொடுத்திருந்தார்.

பாரதியின் முகத்தை பார்த்தான்..அதில் பயமும் இனம் புரியாத ஏக்கமும் நிறைந்திருந்தது‌.

மாறவர்மன் ஒரு அடி எடுத்து வைக்க முயல…துப்பாக்கியை அவளது கழுத்தில் வைத்து ஒரு அழுத்து அழுத்தினார்.

மாறவர்மனுக்கு சகலமும் பதறியது. அவளை காக்க வேண்டும் என மனம் துடியாய் துடித்தது..

மூன்று ஆண்களும் ஆதிசேஷனை நெருங்க முடியாது திகைத்து போய் நின்றிருந்தனர்.

வாசலை தாண்டும் போது ஏதேச்சையாக அருண்மொழியிடம் ஏதோ சந்தேகம் கேட்க வந்த நந்தினி ஆதிசேஷனையும் பாரதியையும் பார்த்து விட்டாள்.

நிலைமை சரியில்லாததைப் போலத் தோன்ற‌ வேகமாக அருகில் வந்து அவரது கையை தட்டிவிட்டாள்.

அவரது கரங்களிலிருந்து துப்பாக்கி எங்கோ போய் விழுந்தது.

அதற்குள் சுதாரித்த மாறவர்மனும் அருண்மொழியும்‌ ஓடி வந்து ஆதிசேஷனை இருபுறமும் பிடித்துக் கொண்டனர்.

பாரதி இருமியபடியே அவரை விட்டு தள்ளி வந்தாள்.

ஆதிரையும் விஜயராணியும் பாரதியினருகே வந்து அவளது நெற்றியில் வழிந்து கொண்டிருந்த குருதியை துடைத்து விட்டனர்.

மீண்டும் மீண்டும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவளை அமர வைத்து நன்றாக துடைத்து
காயத்திற்கு மருந்திட்டனர்.

“ மாறா…இவரை கொண்டு போய் ஜெயில்ல போடு…பாவமே பாக்காத…இந்த ஊர் சட்டப்படி என்ன தண்டனையா இருந்தாலும் அவர் ஏத்துக்க தான்‌ வேணும். பணத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் எவ்வளவு பண்ணிருக்காரு…வேண்டாம் இவருக்கு பாவமே பாக்காத.. பொலிசியா டி ஸ்டேட்டோக்கு(polizia d stato) கூப்ட்டு கைது பண்ணி என்ன நடவடிக்கை எடுக்கனுமோ அதை எடு. இவர் வெளியே இருந்தா எத்தனை பேரை கொல்லுவாரோ தெரியல..." என்றான் இளமாறன்.‌

ஏனோ தந்தையின் மீது அத்தனை வெறுப்பு மண்டியிருந்தது.

சிறிது நேரத்தில் காவல் துறை வாகனம் வந்துவிட அவரை கைது செய்து அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.

மந்தாகினி தான் புலம்பி புலம்பி மாய்ந்து போனார்‌.

ஜெயவீரருக்குமே ஆதிசேஷன் மீது அத்தனை கோபம்‌. அருகில் இருந்து கொண்டே மாபெரும் துரோகத்தை செய்த ஆதிசேஷனை மன்னிக்க அவர் தயாராக இல்லை.

இத்தனை வசதிகளோடு வருமானத்திற்கு தொழிலையும் வைத்துக் கொடுத்தும் ஆதிசேஷனின் இந்த கீழ்த்தரமான செயல் அவருக்கு பெரும் சினத்தை ஏற்படுத்தியது.

பத்து நாட்கள் கடந்திருந்தது.

மாறவர்மன் ஏதோ சிந்தனையுடன் கடலை வெறி்த்தவாறே பால்கனியில் அமர்ந்திருந்தான்.

பாரதி இந்தியா செல்ல அருண்மொழி விமான பயணச்சீட்டு முன் பதிவு செய்து கொடுத்திருந்தான்.

தலையில் ஏற்பட்டிருந்த காயம் ஆறாததால் அவளது பயணம் ஒரு வாரம் தள்ளிப் போயிருந்தது.

இதோ இந்தியா செல்ல தயாராகி விட்டாள்.

கிளம்ப வேண்டும்.

அனைவரிடமும் கூறிக்கொண்டு வந்தவள் இறுதியில் மாறவர்மனின் அறைக்குள் நுழைந்தாள்.

தேவியின் வரைப்படத்தருகே ஒரு கணம் தயங்கி நின்றாள். பின்னர் ஒரு பெருமூச்சுடன் அவன் அமர்ந்திருந்த பால்கனிக்கு சென்றாள்.

“ வர்மன்..”

அவனோ தீவிர சிந்தனையில் அமர்ந்திருந்தான்.

“ வர்மன்..” என அவனது தோளினைத் தொட்டாள்.

அதில் சிந்தனை தடை பட திரும்பி அவளைப் பார்த்தான்..அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவரும் ஒருவர் மனதை ஒருவர் படிக்க முயன்று கொண்டிருந்தனர்.

கூரிய பார்வையின் வீச்சினை தாளாமல் வேறு புறம் பார்வையை திருப்பிக் கொண்டாள் பாரதி.

நாற்காலியை விட்டு எழுந்தவன் அவளருகே வந்து நின்றான்.

“ நா..நா…கிளம்புறேன்..”

பதிலில்லை அவனிடம்.

நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவளை தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது பார்வை சுனாமியாக அவளை உள்ளிழுத்துக் கொண்டது.

பேச்சற்று கழிந்தன சில கணங்கள்.

“ நா …” என்றவளுக்கு அதற்கு மேல் பேச நா எழவில்லை. அவளை நெருங்கி நின்றான்.

அவளது நாடியை நிமிர்த்திவன் அவளது கயல் விழிகளை பார்த்துக் கொண்டே, “ கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான் திடீரென.

அவனது சூடான மூச்சுக் காற்று அவளது கன்னத்தில் மோதி நிலைகுலைய வைத்தது.

அமைதியாக இருந்தாள்.

அவளது செவியோரம் மெல்லக் குனிந்து,” பிடிச்சிருக்கா?” என்றான் கரகரப்பான குரலில்.

“ பதில் சொல்லு டி…”

“ தெ…தெரி…யல…ஆனா…உங்க மனசுல..தேவி…தா..தானே‌‌?” என்று கேள்வியாக நிறுத்தினாள்.

அவனது நெருக்கத்தில் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. புதிதாக தெரிந்தான். அவளது மனதில் வித்தியாசமான உணர்வுகளை தோற்றுவித்துக் கொண்டிருந்தான் ஆணவன்.

அலையலயான கேசமும் , அடர்ந்த மீசையும் , இறுகிய தாடையும் அவன் மீதிருந்து வந்த நறுமணமும் அவன் மீது மையல் கொள்ள வைத்தது.

அவனுடன் கழித்த இந்த
மூன்று வருடங்களில் அவனைப் பற்றி நன்றாகவே அறிந்து கொண்டிருந்தாள் பாரதி.

எப்போது எப்படி அவள் உள்ளத்தில் பதிந்து போனானோ‌‌..இன்று‌ தூய நேசமாக உருமாறி நிற்கின்றான்.

கண்களுக்குள் அவனை‌ முழுமையாக நிரப்பிக் கொண்டாள்.

அவளது முகத்தை இரு கரங்களால் தாங்கியவன் ," ம்ம்…தேவி ஒரு அழகான அத்தியாயம்..அது என் வாழ்க்கையில முடிஞ்சு போச்சு….ஆனா..தேவி மாதிரி உன்னையும் இழந்திடக் கூடாதுன்னு மனசு தவிக்குது. உன்னை என் கிட்டவே இதோ …இப்படி என் கைக்குள்ள வச்சிக்கணும் ஆசையா இருக்கு. இதுக்கு பேரு காதல்னா அது அப்படியே இருக்கட்டும்…எனக்குத் தேவை உன்னோட பதில்…உனக்கு என்னை பிடிக்கலன்னா நீ இப்பவே கிளம்பி போயிடு. ஆனா என் கண்ணுல படாம போயிடு…” என்று கூறி விட்டு நகர முயன்றவனின் கரத்தை பிடித்துக் கொண்டாள்.

அவன் என்னவென்பது போல பார்த்தான்.

“ உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ..”

“ சொல்லு..”

“ நான் ஏற்கனவே அருண்மொழியை ஒன்..சைடா..” அதற்கு மேல் பேச முடியாமல் தவிப்புடன் அவளைப்‌ பார்த்தாள்.

“ இப்பவும் அவனை நீ விரும்பு…” என் முடிப்பதற்குள் அவனது வாயை மூடியவள், “ இல்லை…இல்லவே இல்லை…அவன் நந்தினியை ரொம்பவே லவ் பண்ணுறான்…நான் அவனை விரும்புனா…அது ரொம்ப தப்பு…ஏற்கனவே நான்‌ பண்ணுன தப்புக்கு என்ன பிராயச்சித்தம் பண்றதுனு தெரியாம நிக்குறேன்..”என கண்கள் கலங்க அவனைப் பார்த்தாள்.

ஒரு கணம் அவளைப் பார்த்தவன் தன் வாயிலிருந்து அவளது கரத்தை விலக்கி விட்டு , அவளது கழுத்தை தன் புறமாக இழுத்து அவளது இதழை அழுந்த சிறைப் பிடித்தான்..

இதனை சற்றும் எதிர்பாராத பாரதி அதிர்ந்து விழித்தாள்.

முதலில் அதிர்ச்சியில் விரிந்த அவளது விழிகள் பிறகு இமை‌மூடி அவனது முத்தத்தை வாங்கிக் கொண்டது.

எத்தனை நிமிடங்கள் அவளது இதழ்களில் குடி கொண்டிருந்தானோ தெரியாது.

முடிவில்லாமல் நீண்டு கொண்டே சென்றது அவனது வன்மையான முத்தம்.

அணைக்க தயங்கி நின்ற அவளது கரங்களை இழுத்து தன் பரந்த முதுகோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.

அவளை முத்தமிட்டுக் கொண்டே நகர்ந்து வர, சுவற்றில் மோதி நின்றாள் பாரதி.

“டேய்…மாறா…” என்றபடி உள்ளே வந்த இளமாறன் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றான்.

“அடப்பாவிகளா….நடு வீட்டுல இப்படி ஃப்ரீ ஷோ காட்டிட்டு நிக்குறீங்களே…டா..இது அடுக்குமா..? நான் அருண்மொழி கிட்ட போய் பேசிக்குறேன்…அவன்‌ தான் யோக்கியமானவன்…” என்று முணுமுணுத்து கொண்டே அருண்மொழியின் அறைக்குச் சென்றான்.

சுவாசத்திற்கு ஏங்கிய போது தான்‌ அவளை விடுவித்தான் வர்மன்.

முகமும் இதழும் சிவக்க குனிந்து நின்றவள் முகத்தை தாங்கியவன், "இந்த பிராயச்சித்தம் போதும்னு நினைக்கிறேன்…சொல்லுடி…என்னை பிடிச்சிருக்கா..?" என்றான் அவளது நெற்றியை லேசாக முட்டியபடி.

“ ம்ம்…பிடிச்சிருக்கு…”

“ அப்ப திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கலாமா?”

“ ம்ம்..பண்ணிக்கலாமே..!”என்றாள் தலை சரித்து.

முதல் காதலை தவற விட்டவனுக்கு புரிதலுடன் கூடிய அன்பு கைக்கூடி இனிய உறவிற்கு வித்திட்டது.

அவளுக்கும் அப்படியே.

புதிய பந்தத்திற்குள் இருவரும் அடியெடுத்து வைத்தனர்.


 
Last edited:
Top Bottom