• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தழலை அணைக்கும் அமுதகமே - 08

STN - 77

New member
அத்தியாயம் 08

அவரின் சத்தமான அழைப்பில் சாஹரன் மட்டுமல்ல வெளியே விளையாடிக் கொண்டிருந்த சரண் மற்றும் சரத் கூட அவசரமாக வீட்டிற்குள் வந்திருந்தனர். தன் தந்தையின் அழைப்பில் இருக்கும் வித்தியாசத்தை கண்டுகொண்ட சாஹரனும் அவசரமாக முன்னறைக்குள் வந்திருந்தான்…

“என்னப்பா ஏன் கூப்பிட்டிங்க?” என அவர் முன் வந்து அவன் யோசனையாக கேட்க, அவரோ “ஆத்யா எதோ சொல்றா, அது உண்மையா சாஹரா?” என பிடிகையாக அவனிடம் கேட்டிருந்தார்…

அவனோ புருவம் சுருக்கி தன் தாயின் அருகில் கீழே குனிந்துப்படி நின்றிருந்த ஆத்யா ஷாலினியை ஒரு கணம் பார்த்தவன் “என்ன சொன்னா?” என யோசனையாக கேட்டான், தன் தந்தை என்ன கேட்கிறார் என்று அவனுக்கு சுத்தமாக புரியவில்லை, ஒரு வேலை தான் அவளை திட்டியதை தான் வந்து இவர்களிடம் கூறி இருப்பாளோ என்கிற யோசனை அவனுக்கு. ஆனால் அவளோ அதைவிட பெரிய குண்டலவா போட்டிருந்தாள்…

“நீ ரோட்ல வச்சு யாரோ ஒரு பொண்ணுக்கு முத்தம் குடுத்தியாமே? உண்மையா அது?” என நேரடியாக விஷயத்திற்கே வந்தார்…

அவனுக்கு யோசனையில் புருவங்கள் சுருங்கியது, முதலில் தன் தந்தை கேட்டது அவனுக்கு புரியவே இல்லை, ‘என்ன சொல்கிறார் இவர்’ என்று யோசனையாக தான் அவரைப் பார்த்தான்…

“என்னப்பா சொல்றீங்க, எனக்கு புரியல?” என அவன் புரியாமல் தன் தந்தையிடம் கேட்க, அவரோ “ஒரு மாசத்துக்கு முன்னாடி இவங்க ஸ்கூல் இருக்க ரோட்ல வைச்சு நீ ஒரு பொண்ணுக்கு முத்தம் குடுத்தியாமே?” என விஷ்வநாதன் விளக்கமாக கூறினார்…

அவர் கூறியதைக் கேட்டவனுக்கு அப்போது தான் அந்த நினைவே வந்தது, அது நினைவுக்கு வந்த அடுத்த நொடி சட்டென திரும்பி ஆத்யா ஷாலினியை அழுத்தமாக பார்த்திருந்தான். அவளோ பயத்தில் மகாலட்சுமியின் பின்னால் தன்னை மறைத்துக் கொள்ள, அவன் கண்களோ அவளில் தான் நிலைத்திருந்தது…

“இப்ப எதுக்கு அவள பாக்குற? நீ இப்படி எல்லாம் பண்ணி இருக்க மாட்டேனு எங்களுக்கு தெரியும், அதே நேரம் ஆத்யாவும் பொய் சொல்ல மாட்டா, அன்னைக்கு என்ன தான் ஆச்சு?”என அவர் பொறுமையாக அவனிடம் கேட்டார். ஆனால் இங்கு விஷ்வசாஹரனுக்கோ பொறுமை எல்லை கடந்து விட்டது தன் தந்தையை திரும்பி அழுத்தமாக பார்த்தான்…

இப்போதுதான் அங்கு நின்று இருந்த சரணுக்கும் என்ன விடயம் என்று புரிய, அவனோ ஆத்யாவை திரும்பி கோபமாக முறைத்து பார்த்திருந்தான். அவன் படித்து படித்து சொன்னானே சொல்ல வேண்டாம் என்று ஆனால் அவளோ சொல்லிவிட்டாள் அல்லவா, அந்த கோபம் அவனுக்கு, சரண் நன்கு அறிவான் தன் தமையன் இவ்வாறு செய்யக்கூடியவன் அல்ல என்று…

அவனோ நேராக ஆத்யாவின் முன் வந்து நின்றவன் “வீட்ல யாருக்கும் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்ல, எதுக்காக சொன்ன?” என கோபமாக தன் தோழியை பார்த்து கேட்க, அவளோ எந்த பதிலும் கூறாது கீழே குனிந்தப்படி நின்றுக் கொண்டிருந்தாள், கோபத்தில் கூறிவிட்டாள் ஆனால் இப்போதுதான் தான் செய்தது தவறு என்று புரிந்தது. ஆனால் என்ன செய்து விட முடியும் அதுதான் எல்லாம் கரை கடந்து விட்டதே…

“அப்போ உனக்கும் தெரியுமா சரண்? தெரிஞ்சும் எல்லாத்தையும் எங்ககிட்ட இருந்து மறைச்சு இருக்கியா? என்னதான் நடக்குது இங்க? சாஹரா சரணும் ஆத்யாவும் சொல்றது உண்மையா? நீ அப்படி பண்ணியா? என ஆதங்கமாக அவனை பார்த்து கேட்டார் அவன் தாய் மகாலட்சுமி…

விஷ்வசாஹரனோ இவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாது ஒரே வரியில் “நான் அப்படி பண்ணி இருப்பேனு நினைக்கிறீங்களா?” என அழுத்தமாக அவர்களைப் பார்த்து கேட்டான்…

“அப்படி இல்ல சாஹரா நீ பண்ணி இருக்க மாட்டனு எல்லாருக்கும் நல்லாவே தெரியும், ஆனா ஆத்யாவும் அதே நேரம் பொய் சொல்ல மாட்டா, உன் தம்பி கூட சொன்னானே அது தான் கேக்குறோம், என்ன ஆச்சுனு சொல்லு?” என விஷ்வநாதன் அவனைப் பார்த்து கேட்டார்…

சாஹரனோ இப்போது தன் தம்பி சரணின் பக்கம் திரும்பியவன் “சரண் நீ என்ன நினைக்குற?” என கேள்வியாக வினாவ, சரணோ ஒரு கணம் ஆழ்ந்து யோசித்தவன் “அது நீயா இருக்க வாய்ப்பில்லை ண்ணா, நாங்க தான் வேற யாரையோ பாத்துட்டு நீனு நினைச்சிட்டோம்…” என்று கூறி இருந்தான்…

அவன் கூறியதை கேட்டு இப்போது ஆத்யா ஷாலினி அவனை அதிர்ந்து திரும்பி பார்த்திருந்தாள்…

அவளுக்கு நன்றாக தெரியும் அது விஷ்வசாஹரன் தான் என்று எதற்காக இவன் இப்படி பொய் சொல்கிறான் என்கிற அதிர்ச்சி பெண்ணவளுக்கு, “சரண் எதுக்கு இப்படி சொல்ற? அது இவரு தான், நம்ம நல்லாத்தானே பார்த்தோம்…” என இவள் அவனைப் பார்த்து பதட்டமாக கேட்டாள்…

ஆனால் ஆத்யா ஷானியின் மேல் இருந்த கோபத்தில் சரணோ “இல்ல ஆத்யா நான் அப்பவே சொன்னேனு தானே, இது அண்ணாவா இருக்காதுனு, நீ தான் தப்பா பாத்துட்டு உளருன இப்போ பாரு உன்னால தேவையில்லாத பிரச்சினை…” என்று கோபத்தில் அவளை பார்த்து பொய் கூறினான்…

“இப்ப நம்புறீங்களா? என தன் தந்தை, தாய் மற்றும் தாத்தாவைப் பார்த்து அவன் கேட்க, அவன் தாய் மகாலட்சுமியோ “இல்ல சாஹரா அது வந்து…” என இழுக்க, அதற்குள் விஷ்வநாதன் “ஆத்யா பொய் சொல்ல மாட்டா ப்பா…” என அவரும் அவளுக்கு ஆதரவாக பேசி இருந்தார். இப்போது அதை கேட்டு ஆத்திரம் தலைக்கேறியது என்னவோ விஷ்வசாஹரனுக்கு தான்…

அவனுக்கோ ஈகோ அதிகம் தன் தாய், தந்தை தன்னை விட இன்னொருத்தியை நம்புவதை அவனால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அந்த நொடி அவனுக்குள் இருந்த கொஞ்ச நெஞ்ச நல்ல குணங்களும் துடைத்தெறியப்பட, ஆத்யா ஷாலினியை ஒரு கணம் அழுத்தமாக திரும்பி உறுத்து விழித்திருந்தான்…

அவளோ அவன் பார்வையில் முழுதாக பயந்துவிட்டாள், வயிற்றிற்குள் ஏதோ பந்து உருண்டு ஓடுவது போல் இருந்தது, பெண்ணவளோ ஏதோ செய்யப் போய், ஏதோ ஆகிவிட்டது என்கிற பதட்டத்தில் இருந்தாள்…

“பெத்த புள்ள மேல இல்லாத நம்பிக்கை ஒரு அனாதை மேல உங்க எல்லாருக்கும் வந்துருச்சா?” என கோபத்தில் வார்த்தைகளை விட்டு விட, அங்கிருந்த அனைவருக்கும் சங்கடமாகிவிட்டது.

சரண் உட்பட, அவன்கூட தன் அண்ணனிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தைகளை எதிர்பார்த்து இருக்கவில்லை. யாரும் அவளை அப்படி ஒருநாளும் நினைத்ததும் இல்லை, அவளிடம் அப்படி பேசியதும் இல்லை, அவன் சட்டென விட்ட வார்த்தையில் ஆத்யாவின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் வடிய ஆரம்பித்திருக்க, “என்னை எல்லாரும் மன்னிச்சிருங்க, தெரியாம கோவத்துல சொல்லிட்டேன். அது அவரு இல்ல…” என அங்கு நின்ற அனைவரிடமும் பொதுவாக சொல்லிவிட்டு அங்கிருந்து தன் சித்தி வீட்டிற்கு குடுகுடுவென ஓடி சென்றிருந்தாள்…

இது அனைத்தையும் பார்த்திருந்த விஷ்வேஸ்வரனோ ஒரு வார்த்தை கூட பேசாது அனைத்தையும் கவனித்தபடி இருந்தார்…

“என்ன சாஹரா நீ, இப்படியா பேசுவ? சின்ன பொண்ணு கிட்ட என்னடா பேசுற? பாவம் இல்லையா எவ்ளோ மனசு கஷ்டப்பட்டு இருக்கும்…” என அவனை சத்தம் போட்டு திட்டியிருந்தார்…

விஷ்வசாஹரனோ அதற்கு எந்த பதிலும் கூறாது அமைதியாகவே நின்று இருந்தான். அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று அங்கிருந்த யாராலும் கணிக்க முடியவில்லை…

சரணை தவிர்த்து மற்றைய யாருக்குமே யாரை நம்புவது என்றே தெரியவில்லை, பெரிய சங்கடமான சூழ்நிலையாகிவிட்டிருக்க, ஆண்மகனவனோ அங்கு நின்ற தன் தந்தையும், தாயையும் ஒரு கணம் அழுத்தமாக பார்த்தவன், சட்டென தனதறைகுள் சென்று அறை கதவை அடித்து சாத்தியிருந்தான்…

இந்த சம்பவத்திற்கு பிறகு மனதளவில் பாதிப்படைந்த ஆத்யா ஷாலினியும் அதற்குப் பிறகு அந்த வீட்டுப் பக்கம் செல்லவே இல்லை. அவர்களும் நாளை வருவாள், அடுத்த நாள் வருவாள் என காத்திருந்து, காத்திருந்து ஒரு கட்டத்தில் முடியாமல் மகாலட்சுமி நேராக சித்ரா வீட்டிற்கே சென்று ஆத்யா ஷாலினியை தங்கள் வீட்டுக்கு வர சொல்லி அழைத்திருந்தார்…

ஆனால் அவளோ “இல்ல லக்ஷ்மி மா நான் வரல…” என ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட, அவரும் அவள் மனம் காயப்பட்டு இருப்பதை உணர்ந்து, அதற்கு மேல் அவளை வற்புறுத்த விரும்பாது திரும்பி வீட்டிற்கே வந்துவிட்டார்…

ஒரு பக்கம் ஆத்யா ஷாலினி இப்படி இருக்க, இன்னொரு பக்கமோ சரியாக ஒரு மாதத்தில் பெட்டியும் கையுமாக நடுக்கூடத்தில் வந்து நின்றான் விஷ்வசாஹரன். அவனை அனைவரும் புரியாமல் பார்க்க, சாஹரனோ யாரையும் பார்த்து எதுவும் கூறாது விஷ்வேஸ்வரனை மட்டும் திரும்பி பார்த்தான்…

அவரோ இவனை கேள்வியாக நோக்க, அவனோ “நான் ஹயர் ஸ்டடிஸ் பண்ண போறேன் அப்படியே பாட்டி ஊர்ல இருக்க அப்பாவோட பழைய ஆபிஸ எடுத்து நடத்த போறேன். சோ நான் இன்னைக்கே கிளம்புறேன்…” என அனுமதி கூட கேட்காது ஒரு அறிவித்தலாக மட்டும் கூறினான்…

“என்ன சாஹரா நீ, எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்க? அங்க போய் நீ எனன பண்ண போற தனியா?” என விஷ்வநாதன் ஆதங்கமாக கேட்டார். ஆனால் சாஹரனோ அதற்கு எந்த பதிலும் கூறவில்லை, “எனக்கு பண்ணனும்னு தோன்றத என்னை பண்ண விடுங்க…” என ஒற்றை வரியில் அவரின் வாயை அடைத்திருந்தான்…

“என்னப்பா இவன், ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கான்?” என விஷ்வநாதனும் தன் தந்தையை பார்த்து ஆதங்கமாக கேட்க, அதற்கு விஸ்வேஸ்வரனோ எதுவும் கூடாது “அவன் செய்றேன் னு சொல்றத செய்ய விடு…” என்று அவனுக்கு துணையாகவே பேசி இருந்தார்…

சொன்னது போல் சாஹரன் கிளம்பி விட தங்கள் மூத்த மகனை தனியே விட விரும்பாதவர்களும், ஒரே வாரத்தில் மொத்த குடும்பமாக, அதாவது மகாலட்சுமி, விஷ்வநாதன், சரண், சரத் என அனைவரும் அங்கேயே சென்று விட்டனர். ஆனால் தன்னுடைய பாரம்பரிய வீட்டை விட்டுட்டு வர மறுத்த விஷ்வேஸ்வரனோ இங்கேயே இருந்து விட்டார்…

அவர்கள் அனைவரும் கிளம்பி சென்று விடயத்தை கேள்விப்பட்ட பிறகுதான் ஆத்யா ஷாலினி மீண்டும் அந்த வீட்டிற்கே வந்திருந்தாள். அதற்குப் பிறகு அங்கே விஷ்வேஸ்வரனை பார்ப்பதற்காக அடிக்கடி சென்று விட்டு வருவாள்…

லீவு நாட்களில் கூட சாஹரன் இங்கு வர மறுக்க, அவனை விட்டு வர விருப்பம் இல்லாத மற்றவர்களும் இங்கே வருவது இல்லை. அதனால் மாதத்திற்கு ஒரு தடவை விஷ்வேஸ்வரன் தான் அங்கு சென்று இவர்கள் அனைவரையும் பார்த்துவிட்டு வருவார்…

ஆத்யா ஷாலியின் மனம் முழுதும் குற்ற உணர்வே நிறைந்து இருந்தது. தன்னால் தான் விஷ்வேஸ்வரன் தனித்து விடப்பட்டார் என்கிற குற்ற உணர்வு அது. அன்று அவள் மட்டும் எதுவும் கூறாத இருந்திருந்தால், இவ்வளவு பெரிய பிரச்சனை வந்திருக்காது என்பது அவளுடைய எண்ணம். ஆனால் இதற்குப் பின் பல காரணங்கள் இருந்ததை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை…

இச் சம்பவத்திற்கு பிறகு விஷ்வசாஹரனோ மனதளவில் முழுதாக இறுகிவிட்டான். யாருடனும் அவ்வளவு பெரிதாக பேசிக் கொள்வது இல்லை. இன்னொரு பக்கம் ஆத்யா ஷாலினியும் தேவை தவிர்த்து யாரிடமும் பெரிதாக பேச மாட்டாள். எக்காரணம் கொண்டும் யாருடைய விடயங்களிலும் தலையிட மாட்டாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என இருக்க பழகிக் கொண்டாள்…

அப்படி இருக்க ஆத்யாவிற்கு ஒரு கம்பெனியில் ஐடி படித்து கொண்டே வேலை செய்வதற்கான ஒரு வாய்ப்பு அமைந்தது, அது தான் விஷ்வசாஹரனின் கம்பெனி. ஆனால் அது அவனுடைய கம்பெனி என்றே தெரியாமல் போய் பரீட்சையும் செய்து அதில் தேர்வும் ஆகி இருந்தாள் பெண்ணவள்…

பணம் கேட்டு யாரையும் கஷ்டப்படுத்த கூடாது என்ற நோக்கத்துடன் விஷ்வேஸ்வரன் உட்பட அனைவரிடமும் பொய்யும் கூறிவிட்டு இங்கு வந்து சேர்ந்திருந்தாள்…

விஷ்வநாதன் முதலில் ஆத்யா ஷாலினியுடன் அலைபேசியில் பேசிய போது அவளை அடையாளம் கண்டு கொள்ளவில்லை, ஆனால் ஆத்யா ஷாலினி என்கிற பெயர் அவருக்கு அவளை நினைவுபடுத்த, ஒருவேளை அவளாக இருக்குமோ என்கிற எண்ணத்தோடு அவளின் விபரக்கோப்பை எடுத்துப் பார்த்திருந்தார்…

ஆம் அவர் நினைத்தது போலவே அவள் தான். உடனே இந்த விடயத்தை விஷ்வசாஹரனை தவிர்த்து அனைவரிடமும் கூறியிருந்தார்…

அவள் ஹாஸ்டல் கேட்டது அவர் மனதை கஷ்டப்படுத்த என்ன செய்வது என்று தெரியாது விஷ்வசாஹரனிடம் யாரோ ஒருவருக்கு கேட்பது போல் அவளின் பெயரை சொல்லி கேட்க, அவனா அவளின் பெயரை மறக்க கூடியவன், வேறு யாரும் கேட்டிருந்தால் கூட ஹாஸ்டல் கொடுத்திருப்பான் போல, அவளின் பெயரை கேட்ட அடுத்த நொடி ஹாஸ்டல் ரூம் கொடுக்கவே கூடாது என்று தந்தையிடம் அழுத்தமாக கூறிவிட்டான்…

விஷ்வநாதனை முதலில் சந்தித்தபோது அவளினால் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அவள் அவரை பார்த்த நேரம் கருகரு முடியோடு, மீசை தாடி எதுவும் இல்லாது பார்க்க இளமையாக இருந்தார்…

ஆனால் இப்போது தாடி, மீசை, தலை முடி என அனைத்தும் நரைத்து பார்பதற்கு வித்தியாசமான தோற்றத்தில் இருந்ததால், சட்டென அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை…

எப்போது அவள் சாஹரனை பார்த்தாளோ அப்போதே கண்டு கொண்டாள் அவர் யார் என்று…

அவனின் முகம் அவளுக்கு மறக்கக் கூடியதா என்ன?


தொடரும்…
 
Top Bottom