தீஞ்சுவை மலர் -13
இப்போது ஆரிவ் தன்னுடைய அன்னைக்கு முட்டியில் ஆபரேஷன் செய்ய வேண்டி பெங்களூர் சென்றிருந்தான். அப்படி என்றால் மலர்? அதற்கு தான் துணைக்கு எங்கே கதிர் இருக்கிறான். அது எப்படி? ஆமாம்! கதிர் இப்போது மலர்வீட்டின் எதிர் வீட்டில் தான் இருக்கிறான். அதாவது மலர்வீடு அதற்கு எதிர் வீடு பிறகு நடுவில் மாடிப்படி . அது தாண்டி இதே போல எதிர் எது எது வீடுகள் 4 வீடுகள் தான் ஒரு ஃப்ளோரில் . நிறைய பேர் லிவிங் கூட இருக்கிறார்கள். எங்களுக்கு பிரச்சனை இல்லை என்றால் சரிதான் என்று யோசிப்பவர்களுக்கு ஏற்ற அடுக்ககம். நிறைய வயதானவர்களும் இருக்கிறார்கள். பிள்ளைகள் வெளி நாடுகளில் இருப்பார்கள். அவரவர் வேலைகளை செய்துக் கொள்ள முடியும். தேவையானது ஒரு பாதுகாப்பான இடம் . அப்படிப்பட்டவர்களுக்கு இது தோதான இடம் தான். எல்லா வீடுகளும் இருப்பு கேட் போட்டு பூட்டி தான் இருக்கும். நீண்ட வராண்டா. நல்லக் காற்று, வெளிச்சம் கோலம் போடாத வாசல்கள் ஏன் நான் இல்லையா என்று குறைபட்டுக் கொள்ளும் கோல ஸ்டிக்கர்கள் என்று அந்த இடம் ஒரு மாதிரி புதுமையாகத் தான் இருந்தது. பெரிய அடுக்ககம்தான் இங்கே யாரும் யாருடைய விஷயத்திலும் தலையிடுவதில்லை. அவரவர் தங்களுடைய வேலைகளை பார்த்துக்கொண்டு பூட்டிய கதவை திறக்கக் கூட மாட்டார்கள்.
அன்றைய தினம் மருத்துவமனையில் தன்னுடைய முன்னாள் மனைவியை பார்த்துவிட்டு வந்த கதிர் மீண்டும் அவளை பார்க்கக்கூடாது என்று தானே நினைத்துக் கொண்டிருந்தான் இது நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ஆனால் நமக்கு தெரியாத விஷயம் மீண்டும் மீண்டும் அவர்கள் சந்திக்க வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்ததுதான்.
ஒரு முறை தீபக்கைக் காண மலர் மருத்துவமனைக்கு சென்று இருந்த சமயம் செல்வியின் குழந்தைக்கு உடல் நலமில்லை என்று கதிர் தான் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தான். இருவருமே வேறு வேறு மருத்துவர்களை பார்த்திருந்தாலும் சந்தித்துக் கொண்டது என்னவோ மருந்தகம் வாயிலில்தான்.
"பார்மசி வாசல்ல நான் வெயிட் பண்றேன். நீங்க வந்துடறீங்களா ? என்று போனில் தீபக்கிடம் கேட்டுக்கொண்டே அங்கே போடப் பட்டிருந்த சேரில் வந்து அமர்ந்து கொண்டாள் மலர். அப்போது குழந்தைக்கு பார்த்துவிட்டு மருந்து வாங்க வந்து கொண்டு இருந்தார்கள் கதிரும் செல்வியும் .கதிர் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அங்கே அமர்ந்து கொள்ள செல்விதான் குழந்தைக்கு தேவையான மருந்தை வாங்கி கொண்டிருந்தாள். மலர் கதிரை கவனிக்கவில்லை. அவள் ஏதோ போனில் பார்த்துக் கொண்டிருந்தாள். அருகில் அமர்ந்து யாரோ தன்னை குறுகுறு என்று பார்ப்பது தெரிந்து தலை நிமிர்ந்து பார்த்தபோது அங்கே இருந்தது கதிர் தான். மனதிற்குள் சிறு அதிர்வு ஏற்பட்டாலும் இவள் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள் மலர். அவளுக்கு நெஞ்சு படபடப்பதற்குள் தீபக்கும் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு வந்து விட்டான்.
"என்ன சீக்கிரம் வந்துட்டேனா ? கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பும் கையில் டாக்டர் கோர்ட்டும் வைத்துக் கொண்டு மனிதன் பார்ப்பதற்கு அட்டகாசமாகத் தான் இருந்தான்.
"பரவாயில்ல. சொன்ன மாதிரியே சீக்கிரம் வந்துடீங்க " என்று அவர்கள் பேசிக் கொண்டே
அவர்கள் இருவருமே அந்த இடத்தை கடந்து கார் பார்க்கிங்குக்கு சென்று விட்டார்கள். அவர்கள் இருவரையும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர். அவன் மலருடன் இருந்த காலத்தில் எப்போதுமே இது போல சேர்ந்து எல்லாம் வெளியில் சென்றதில்லை. அப்படி செல்ல வேண்டும் என்று யாரும் சொன்னதும் இல்லை. இவனுக்கும் தோன்றியதில்லை.
வெற்றி, செல்வி வாழ்க்கையைப் பார்த்து தான் அவன் பல விஷ்யங்களையும் கற்றுக் கொண்டான். கற்று மட்டும் என்ன? இப்போது தான் மனைவி இல்லாமல் தனியாக சுற்றுகிறான்.
கார் இவர்கள் இருந்த இடம் அருகே வந்து சுற்றி தான் வாயிலுக்கு செல்ல வேண்டும் .தன்னுடைய மனைவி இப்போது வேறு ஒருவருடன் அமர்ந்து கொண்டு சிரித்துக்கொண்டு சென்று கொண்டிருக்கிறாள். அமைதியாக விழிவிரித்து பார்த்துக் கொண்டிருந்தான் கதிர் மலரும் இவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் காரின் கண்ணாடி கதவு வழியாக. முன்பு இருந்த அந்த திமிரான தோற்றம் இப்போது கதிருக்கு இல்லை ஏதோ ஒரு வித்தியாசம் அவனிடம் உணர முடிந்தது மலரால் .
அன்றும் சரி இன்றும் சரி மலருக்கு அவனின் பார்வையில் இருக்கும் ஏதோ ஒன்று கண் வழியாக இதயத்தை சென்று தாக்கியது. ஏன் என்னை பார்க்கும் பொழுது கண்ணில் இத்தனை பரிதவிப்பு? என்ன ஆயிற்று? என்று அவளுக்கும் ஏதோ மனதிற்குள் சொல்ல முடியாத ஒரு தவிப்பு, ஏதோ ஒரு உணர்வு. அவளை அசிங்கப் படுத்தியவன் தான் . கொடுமைகள் செய்தவன்தான். இருந்தாலும் மலரின் மென்மையான மனம் அவனை பழிக்கவில்லை .அமைதியாக தீபக்குடன் தன் வீட்டிற்கு வந்து வந்து சேர்ந்தவள் மனம் முழுவதும் கணவன் தான் இருந்தான். அதாவது கதிர்.
அவன் மலரைப் பார்க்க வந்த நாட்களில் க்ளீன் ஷேவ் செய்துக் கொண்டு தான் வருவான். இன்று கொஞ்சம் வளர்ந்த தாடி, வெட்டப் படாத முடி கண்ணை சுற்றி கருவளையம் கசங்கிய சட்டை என்று ஒரு மாதிரி பார்க்க பரிதாபமாகத் தான் இருந்தான்.
"அண்ணா இப்படி எல்லாம் வரக் கூடாது." செல்வியாவது சற்று கண்டித்திருக்கலாம்.
'ஆமா எண்ணத்தை நான் டிரஸ் பண்ணி எண்ணத்தை வெளில போகணும்" கன்னம் கிள்ள கொஞ்ச தலை முடி கலைக்க என்று மனைவியா இருக்கா. போகப் போற தெரு முனை டீ கடைக்கும் திங்கப்போற பன்னுக்கும் இது போதும் என்ற எண்ணத்தில் தான் அவன் சுற்றிக் கொண்டிருக்கிறான். இன்று மலரைப் பார்ப்பான் என்றது தெரிந்திருந்தால் அவன் நிச்சயம் இப்படி இருந்திருக்க மாட்டான். இந்த தோற்றம் நிச்சயம் அவளுக்குப் பிடிக்காது. மனதிற்குள் தானே நொந்துக் கொண்டிருந்தவன் கவனத்தை செல்வியின் குரல் தான் அழைத்தது .
இங்கு மருத்துவமனையில் தீபக்குடன் மலரைப் பார்த்த செல்வி வழக்கம்போல தனது தேள் கொடுக்கு வார்த்தைகளை கொட்டினாள் .
"பார்த்தியா அண்ணா. உன்னை விட்டதும் இப்ப வேறு பணக்கார ஆளப் பிடிச்சுட்டா . உன் வாழ்க்கை விட்டு அவ போனதே ரொம்ப நல்லது . சரியான பொருக்கிணா அவ. அங்க ஒரு டான்ஸ் க்ளப்புல சேர்த்து கூத்தடிக்கறாளாம் . அவரு தங்கச்சி இவளை பத்தி கதை கதையா சொல்லறா ."
நாத்தனார் நல்ல விதமாக அவர் சொன்னதையும் இங்கே தன் அண்ணாவிடம் தப்பாகத் தான் சொல்லிக் கொண்டிருந்தாள் செல்வி.
செல்வி ஏதேதோ மலரைப் பற்றிக் குறைக் கூறிக் கொண்டு வந்தாள் . இப்போதும் அவள் அப்படிப்பட்டவள் இல்லை என்று ஏனோ கதிருக்கு வாயில் வரவில்லை. மலர் அப்படி ஆணின் தேவைக்கு அலைபவளா? ஒரு மனைவி கணவனிடம் தானே வந்து உறவுப் பற்றி பேசினால் தப்பு., சரி அவள் அவனிடம் கேட்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? அப்படி அவள் கேட்டதாலேயே அவள் உடலுக்கும் காம சுகத்துக்கும் அலைபவள் என்று சொல்லி விட முடியுமா? இருந்த இரண்டு வருடங்களில் விபத்து போல எப்போதாவது அந்த சம்பவம் நடக்கும். அதற்கும் கதிருக்கு அத்தனை குற்ற உணர்வு. அப்படி இருக்கும்போது இள வயதுப் பெண் எப்படி தன்னுடைய உணர்வுகளை அடக்கி கொண்டு கணவன் அருகில் படுக்க முடியும் ? அது மட்டுமா ?
ஆணும் பெண்ணும் பேசினால் கூட தப்பு என்று வளர்ந்தவனுக்கு மலரை பற்றி புரிந்துக் கொள்ள முடியவில்லை. செல்வியும் அப்படித்தான்.
கணவனின் நண்பர்கள் வந்தால் கூட வெளியில் வந்து விட மாட்டாள் செல்வி. எல்லாமே மாமியார் தான். அப்படி தன்னுடைய கற்பை புருஷனுக்காக பொத்தி பொத்தி வைத்துக் கொண்டிருப்பவள். அதனால் தானோ என்னவோ அவளும் தீபக்கும் மலரும் பேசிக் கொண்டு சென்றதை தவறாகப் புரிந்துக் கொண்டாள். அது மட்டுமா காரணம்? மலர் எது செய்தாலும் குற்றமே.
அமைதியாக தங்கையின் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு தன் வீடு வந்து சேர்ந்தான் கதிர் . மலர் முகத்தில் இருந்த உணர்வு தான் என்ன? அன்று ஆரிவ். இன்று வேறு ஒரு ஆண். மலர் தப்பனாவளா? கேள்வி மண்டையைக் குடைந்தாலும் அவனுக்கு தோன்றியது., இல்லை மலர் தப்பனானவள் இல்லை என்று தான் அவன் மனம் அடித்துச் சொன்னது.
மீண்டும் மீண்டும் அந்த எண்ணமே அவன் மூளையைக் குடையவும் டீக் கடைக்கு சென்று விட்டு வந்தான்.
அங்கே கடையில் யாரோப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"நமக்கு சொந்தமில்லன்னு தெரிஞ்சாலும் யாரு விடறா ?"
அப்போது தன இவனுக்கும் மூளையில் உரைத்தது. அவள் இப்போது எனக்கு சொந்தம் இல்லை. வேறு ஒருவர் மனைவி. நான் அவளை பற்றி யோசிப்பது கூடாது. பிறகு வழக்கம் போல வேலை, வீடு, தனிமை, மனைவியின் முகம் மனதில் நிழலாட கண்ணீர். துடைக்க தோன்றாத நேரங்கள்... இப்படித்தான் அவன் வாழக்கை போய் கொண்டிருந்தது.
அப்போது தான் எதிர்பாராத விதமாக பாட்டியின் பேரனிடமிருந்து இவனுக்கு அழைப்பு வந்தது. அந்த வீட்டில் மர வேலைகள் செய்ய வேண்டும் என்று பில்டிங் காண்ட்ராக்டர் உங்க நம்பர் தந்தாங்க என்று ஆரம்பித்தவன் இவனிடம் பேசி விட்டு வந்து பார்க்க சொன்னான். வாட்ச்மேனிடம் இருந்து சாவி வாங்கிக் கொண்டவன் என்ன வேலைகள் எல்லாம் போனிலேயே பேசி முடித்துக் கொண்டார்கள். பாட்டியும் தாத்தாவும் இப்போது பேரனோடுவெளியூருக்கு சென்று விட்டார்கள். பேரனின் பிடிவாதம் ஒரு புறம் என்றாலும், பாட்டியின் பயம் தான் முக்கிய காரணம்.
"இங்க பாருயா . நாளைக்கே எனக்கு ஒன்னு ஆச்சுன்னா உங்க தாங்கிப் பிடிக்க ஆளு வேண்டாமாயா ? அவர் கண்களில் நீர் வழிய சொன்ன மனவியியைக் கட்டிக் கொண்ட கணவன் சரி என்று சம்மதித்து விட்டார். மனதின் அத்தனை வார்த்தைகளையும் சொல்ல வார்த்தைகள் வேண்டியது இல்லை. கிழவி சொல்வது தனக்கும் சேர்த்து தான். தனக்கு ஒன்று நேர்ந்து விட்டால் அவள் செய்வாள் பாவம். முழு சம்மதம் இல்லையென்றாலும் முழு மனதாக மாற்றிக் கொண்டு மனைவிக்காக பேரன் வீட்டுக்கு சென்று விட்டார்கள்.
இப்போது அங்கு தான் கதிர் வேலைகளை பார்த்துக் கொண்டு அங்கேயேத் தங்கி இருக்கிறான்.
கதிருக்கு இப்போது இருக்க இடம் இல்லை. வீட்டில் இவன் இல்லாத நேரம் மின்கசிவு ஏற்பட்டு கிட்டத்தட்ட முழுக்க எரிந்து போனது வீடு. வீட்டுல எல்லா வயரிங்கும் ஒரு தடவை பார்த்துடலாங்க. ஸ்பார்க் வருது எத்தனை தடவை மலர் சொல்லி இருக்கிறாள். முரட்டு பிடிவாதம். எல்லாம் எனக்குத் தெரியும் என்ற திமிர். இவனின் துணி, வேண்டாம் என்று வெற்றி தூக்கிப் போட்டு விட்டுச் சென்ற சாமான்கள் தவிர எதுவும் மிச்சம் இல்லை. பால் பாத்திரம் கூட மோசமாகி விட்டது. இவன் தனிமையில் இருந்த போது கூட வீட்டை அவன் சுத்தமாக பார்த்துக் கொள்ளவில்லை. ஒரு பேச்சிலர் வீட்டின் அத்தனை அடையாளங்களும் உடன் சேர்ந்த சிவகாமியின் குப்பை சேர்க்கும் குணமும் வீடு மோசமாகத் தான் இருந்தது. அவனுக்கு ஹோல்டிங் பிஹேவியர் எனப்படும் எந்த குப்பை, அல்லது தேவையில்லாத பொருட்களை தூக்கிப் போட மனமில்லாமல் சேர்த்து வைத்துக் கொள்ளும் பழக்கம் தான் அது. நிச்சயம் அது கதிரின் தந்தை, அன்னை இருவருக்குமே அந்த பழக்கம் இருந்திருக்கும்.
"டாய்லட் பாக்கெட் ரொம்ப மோசமா இருக்கு. வேற மாத்தலாம்." மலர் சொன்ன போது
"முடியாது!"என்று தான் பதில் வரும்.
":கிழிஞ்சு போன துணிகள் நிறைய இருக்கு. டிஸ்போஸ் பண்ணலாம். இப்படி இருந்தா எல்லாம் தரித்திரம் "
"கூடாது."
"எதுக்கு இத்தனை பாத்திரம். தேவையானது வச்சுக்கிட்டா போதும்." சிவகாமியின் பேயாட்டம் வேற லெவல்.
"வீட் டுல இப்படி உடைஞ்ச பொம்மைங்க, கிழிஞ்ச சாமி படங்க இருக்க கூடாது. கொஞ்சமா வச்சுக்கிட்டு ஒழுங்கா சுத்த பத்தமா இருந்தாலே போதும். ஏற்கனவே இங்க செல்வி இருக்கா. இப்ப நானும் இருக்கேன். அடுத்து வெற்றிக்கு கல்யாணம் ஆகும். எப்படி பொண்ணுங்க தீட்டு நாளில் இருக்க முடியும். இல்ல புருஷன் பொண்டாட்டி இருக்கற இடத்துல சாமி படங்கள் வைக்கக் கூடாது . வீட்டுக்கு ஆகாதுங்க. சொன்ன மலருக்கு அடி . அடி அடிதான். சாமி பற்றி பேசுனா இப்படி பேய் பிடிக்குமா? அழுது அழுது எழும்ப முடியாமல் கிடந்தாள் மலர். அவளுக்கு அந்த சாமி கண் திறக்க முடியாது. வைத்திருந்த அத்தனை சாமி படங்களும் முழுக்க தூசிதான். ஐந்து பத்து படங்கள் என்றல் சரி. வரும் விபூதி குங்குமம் கவர் கூட எடுத்து வைத்துக் கொண்டு கும்பிட்டுக் கொண்டிருந்தால் ?
சிவகாமியின் அந்த பழக்கம் தான் கதிருக்கு வந்தது. செல்விக்கும் உண்டு தான் மாமியார் வீட்டுக்குப் போனதும் மாமியாரின் சுத்தம் இவளை எல்லாம் சேர்த்து வைத்துக் கொள்ள அனுமதிக்கவில்லை .
வீடு எரிந்துப் போனது. எல்லாவற்றையும் எந்த நிலையில் இருக்கிறது என்று பிரித்துப் பார்த்து குப்பை அள்ளுபவரை அழைத்து எடுக்க சொன்னால் ,
"இங்க பாருங்க சார். இவ்ளோ சாமான் இருக்கு. சும்மா வண்டில போட முடியாது. லாரி தான் கொண்டு வரணும்.
அத்தனை குப்பைகளையும் வண்டியில் ஏற்றி விட்டுப் பார்த்த போது அந்த எரிந்திருந்த வீடுதான் மிச்சம். அவன் உயிராய் வைத்துக் கொண்டிருந்த பழைய பாக்கெட் மக்கு இருந்தது. சில பாத்திரங்கள் .
"இங்க வந்து ரெண்டு நாளைக்கு இருந்துட்டு போப்பா" அழைத்தது செல்வியின் மாமனார்தான். வெற்றி என்ன என்று கேட்க கூட இல்லை.
பெரியம்மா ஓ அப்படி ஒரு சொந்தம் இருப்பது மறந்து கூடப் போய் விட்டது. இவனே வெற்றிக்கு அழைத்தான்.
விஷயத்தை சொன்னான்.
"ஓ அப்படியா. என்னோடது ஏதாவது இருந்தா தூக்கிப் போட்டுட்டுங்க . என்னோட தேவையில்லாத சாமான் தான் அங்க இருக்கறது எல்லாம் "
"ஓ கண்டா முண்டா சாமான் வைக்கும் இடம்தான் தன் வீடா?"
செல்வி வீட்டுக்குப் போகவில்லை. அந்த வீட்டில்தான் இவன் இருந்தான்.
வேறு எங்கும் செல்ல முடியாது. இருக்க வேறு இடமும் இல்லை. தன்னை அழைப்பவர்களும் இல்லை . விரக்தியில் படுத்துக் கொண்டிருந்தவன் ஒரு நேரத்தில் தானே தலையைப் பிடித்துக் கொண்டு ஓ வென்று கத்தினான். மலரின் கண்ணீரை சுமந்துக் கொண்ட அந்த பழைய வீடு இப்போது இவனைத் தாங்க முடியாமல் நிற்கின்றது பரிதாபமாக. பிறகுதான் பாட்டியின் பேரன் அழைத்தது எல்லாம்.
அவரிடமே கேட்டு இப்போது அவன் அதே வீட்டில் தான் இருக்கிறான்.
வேலை முடிந்தப் பிறகு?
நான் ஒரு ஆளுதான். வேற ஆள் வர வரைக்கும் இங்கேயே இருக்கவா? கேட்டான்.
"சரி ! ஆனா ரெண்டு பெட் ரூம் க்ளோஸ் பண்ணிடுங்க. நீங்க ஹால் கிட்சன் மட்டும் யூஸ் பண்ணிக்கோங்க." வாடகை குறைத்துக் கொண்டார். இவனுக்கும் நல்லதாகப் போனது.
அவன் இன்னும் மலரைப் பார்க்கவில்லை. மலர் இங்கு தான் இருக்கிறாள் என்பதும் அவனுக்குத் தெரியாது. ஆரிவ் ஊருக்கு சென்றான் சரி. மலர் எங்கே?
தொடரும்...