• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தீஞ்சுவை மலர் -24

STN20

Member
Staff member
தீஞ்சுவை மலர் -24





நான் கொஞ்ச நாளைக்கு வெளில தங்கலான்னு
பாக்கறேன் அன்று சொன்ன மாதிரியே இப்போது ஒரு இல்லத்தில் வந்து தங்கி இருக்கிறாள். எத்தனை பேர் வந்தாலும் அங்கு வேலைகள் இருக்கும். சிலர் படுக்கையில், சிலருக்கு தொண்டையில் கேன்சர், சிலருக்கு வயிற்றில், வாயில் என்று பார்க்கக் கூட கொடுமையாக இருக்கும். முதலில் பயந்தவளுக்கு பிறகு பாவமாகத் தான் இருந்தது. அது இரு சேரிடப்பிள் டிரஸ்ட். பலர் செய்யும் உதவியுடன் தான் நடக்கிறது. பெரிய மருத்துவமனையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர் வேலையை விட்டு விட்டு இங்கு வந்து இவர்களை பார்த்துக் கொள்கிறார். அவர் மனைவியும் இங்கு வந்து உதவிகளை செய்வார். அந்த இரண்டு நல்ல உள்ளங்கள் தான் பலருக்கும் வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது.

நடுவில் சில நாட்கள் மலரின் அன்னைக்கு உடல் நலமில்லை என்று மருத்துவமனையில் தங்கிப் பார்த்துக் கொண்டாள் . அவரிடமும் ஒரு வார்த்தைக் கூட அவள் பேசவில்லை. தந்தையிடமும்தான். அதை எளிதாக ஏற்றுக் கொண்ட தந்தை போல அம்மாவால் இருக்க முடியவில்லையே. அம்மா அம்மா என்று அழுத குழந்தைக்கு பாலூட்டியவள் இன்று பெற்ற மகளே ஒற்றை வார்த்தை தன்னைப் பார்த்து அம்மா என்று அழைக்க மாட்டாளா என்று ஏங்கினாள்.

செத்தாலும் நீ உன் புருஷன் வீட்டுல தான் சாகனும். விவாகரத்து வரைக்கும் எப்ப போய்ட்டியோ இனி எங்க மக உசுரோட இல்ல என்று கணவன் சொன்னபோதெல்லாம் இந்த மகளைப் பற்றிய கவலையே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது மட்டும் என்ன?

"அம்மா என்னால அடி தாங்க முடியலம்மா. ரொம்ப அடிக்கறாரும்மா. ரொம்ப பயமா இருக்கும்மா" என்று எத்தனை நாட்கள் அவள் கதறியிருக்கிறாள். செத்துப் போ என்று சொன்ன போது கூட உடளவில் அவள் உயிருடன் இருந்திருந்தாலும் அவள்கண்களின் வலி, அவளுக்குள் இருந்த உயிர்ப்பு செத்துப் போனதை காட்டியபோதாவது இதே அன்னை பார்த்திருக்கலாம்.

"ஏண்டி அம்மானு ஒரு தடவை என்னை கூப்பிட மாட்டியா?"

"விவாகரத்து வரைக்கும் எப்ப போய்ட்டியோ இனி உங்க மக உசுரோட இல்லன்னு சொன்னது நீங்கதானே. நான் செத்து ரெண்டு வருஷம் ஆச்சு. "

பெற்ற மகளுக்கு சொல்லக் கூடாத வார்த்தைகளை சொன்னவர்கள், இப்போது நடைப்பிணமாக இருக்கும் அவள் அதே வார்த்தைகளை சொன்னதை விட வேறு என்ன தண்டனை கிடைத்துவிடப் போகிறது.

"இந்த வார்த்தையை நான் கேட்கவா இன்னும் உயிரோடு இருக்கிறேன்" என்று அன்னை முகத்திலடித்துக் கொண்டு அழுதார். அதைப் பார்க்க பிடிக்காத மலர் அமைதியாக கேன்டீன் சென்றுவிட்டாள் .மாமியாரை பார்க்க கதிர் வந்தான். அவன் முகத்தை பார்த்தவள் அமைதியாக வெளியில் சென்று அமர்ந்துக் கொண்டாள் . முன்பு போல ஏனோ மலரின் அன்னையால் கதிரிடம் இயல்பாக பேச முடியவில்லை. அம்மா அவரு என்னை ரொம்ப அடிக்கறாரும்மா வலி தாங்க முடியல. பயமா இருக்குமா என்ற வார்த்தைகளே இப்போது காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. எங்க மாப்பிளை மாதிரி நல்ல மனசு எங்கையும் பாக்க முடியாது சொல்லி பெருமிதம் கொண்டவளுக்கு இப்போது அதே மாப்பிளையிடம் பேசக் கூட வாயில் வார்த்தைகள் வரவில்லை.

"மலர் இந்தா" கையில் சில இனிப்பு பொட்டலங்கள்.

"இது அங்க நீ வேலை பாக்கறவங்களுக்கு கொடு. என்னால இது தான் முடிஞ்சது. "

கணவனின் கண்களில் எதையோ அவள் தேடினாள் . அது கிடைத்து விட்டாதா?"

நடனம் கல்லூரி வாழ்க்கை உடற்பயிற்சி கூடம் என்று தன்னுடைய மன நிலையை கஷ்டப்பட்டு மாற்றியிருந்தவளுக்கு இந்த புதிய சூழல் ஏதோ ஒரு மாற்றத்தை கொடுக்க முயற்சி செய்தாலும் மனம் மட்டும் வெறுமையாகவேத் தான் இருந்தது. அது என்ன என்பது அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. தனக்கென்று ஒரு குடும்பம் என்று அவள் மனமும் எங்க ஆரம்பித்து விட்டாதா ?

அக்காவுக்கு குழந்தைப் பிறந்தபோது குழந்தையைத் தூக்கியவளுக்கு அத்தனை மகிழ்ச்சி. ஏதோ ஒரு சொல்ல முடியாத உணர்ச்சி. உடன் இருக்கும் இத்தனை பேர் எத்தனை சொல்லியும் கேட்காத மனதை அந்த பிஞ்சின் ஸ்பரிசம் மாற்றி விடுமா?

இப்போதெல்லாம் கதிரின் குரல் அடிக்கடி அவள் காதில் எதிரொலிக்கிறது.

"செல்வி புள்ளைய கைல வாங்கினப்போ எவ்ளோ சந்தோஷமா இருந்துச்சுத் தெரியுமா? வெற்றி புள்ளையத் தூக்கினப்போ நமக்கும் ஒரு பிள்ளைங்க இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்னு தோணிச்சு. காசு செலவுக்கு பயந்துகிட்டு இப்ப வேணாம் அப்ப வேணம்னு நினைச்சது எவ்ளோ பெரிய தப்புனு தெரிஞ்சது. உன்ன மாதிரியே வெள்ளையா அழகா. ஆம்பிளை புள்ளையோ பொம்பளை பிள்ளையோ நான் எவ்ளோ கஷ்டப்பட்டாலும் சரி அவங்களை படிக்க வச்சு பெரிய ஆளா கொண்டு வரணும் மலரு . கண்கள் மின்ன சொன்னவனின் முகம் என் இப்போதெல்லாம் நிழலாடுகிறது. அவன் முகத்தில் தான் எத்தனை ஏக்கம் !

வாயிலில் போட்டிருக்கும் கோலம் அவன் வந்து நின்று குட் மார்னிங் சொன்னதை சொல்லிக் காட்டியது. அவசரத்தில் காபி குடித்தாலும் அவன் சியர்ஸ் சொல்வது என்று ஒவ்வொரு விஷயத்திலும் அவன் தன்னையே சுற்றி வந்த நினைவுகள் அவள் மனதை அலைக்கழிக்கத் தொடங்கின .

ஒரு நாள் இடி மின்னலுடன் மழை வந்தது. அவன் அடித்து துரத்திய நினைவுகளுக்கு பதிலாக அவன் தனக்கு மாத்திரை கொடுத்ததும், உணவு ஊட்டியது , பொம்மையை நகர்த்தி விட்டு தன்னை கட்டிக் கொள்ள வைத்தது எல்லாம் நினைவுக்கு வந்தது. இப்போது அவளுக்கு மழையைப் பார்த்து அவளுக்கு பயம் இல்லை. கண்களில் அத்தனை வலியுடன் அவளை அணைத்த கணவனின் நினைவுதான் பாடாய் படுத்தி எடுக்கிறது.

மழை வந்ததும் ஆரிவ் கால் செய்தான்.

"மலர் மழை வருதே. நான் வரட்டுமா? "

டேய் மழையை என்ஜாய் பன்னு. போய் பொண்டாட்டிக்கு இதமா கதகதப்பா இருக்கற வழிய பாரு. கிண்டல் செய்து போனை வைத்து விட்டாள் . உமாவுக்கு கல்லூரியில் ஆரம்பித்து விட்டாதாம். உபரி செய்தி.

மீண்டும் கதிர் அவள் வாழ்வில் வந்தபோது அவன் எனக்கு வேண்டாம் என்று அவள் சொன்ன காரணங்கள் இப்போதும் இருக்கின்றன. அன்று இதே மலர் அவனிடம் கேட்டதுபோல கதிர் வந்து இவளிடம் என்னை காதலிக்கவே இல்லையா என்றுக் கேட்டால் இவள் என்ன பதில் சொல்வாள்.இவளால் இல்லை என்று கூற முடியுமா ? இல்லை காதலிக்கறேன் என்றும் சொல்லிவிட முடியுமா?

எந்த வேலை செய்தாலும் மனதில் முணுமுணுவென்று அவன் நினைவுகள் அவனின் குரல் அவனின் உருவம். தன்னைப் பார்த்து பைத்தியம் என்று அவன் சொன்னான். அவனே பின்னாளில் வாழ்க்கையை, காதலை உண்மையான அன்பை அனுபவிக்காத தெரியாத பைத்தியம் நான் என்று சொல்லிக் கொண்டான். அவனுக்கு கையில் அடிபட்ட போது இவள்தான் அவனுக்கு உதவி செய்தாள் . தோசை செய்தால் அருகில் வந்து நின்றுக் கொள்வான். என்ன என்று இவள் பார்த்தால், "இல்ல நீ சூடற தோசை அப்படியே நிலா மாதிரி ரௌண்டா அழகா இருக்கு" சொல்லிக் கொண்டே இவள் வாயில் சிறு விள்ளல் வைத்த ஞாபகம் .அவள் எங்கே சென்றாலும் பின்னோடே வருவான்.

"எதுக்கு இப்படி பண்ணறீங்க?"இவள் பார்வைதான் பார்ப்பாள்.

"இல்ல பொண்டாட்டி பின்னாடி போகறதுன்னா என்னன்னு தெரிஞ்சுக்கத்தான்." லேசாக பின் தலை சொரிந்து அசடு வழிந்த நினைவுகள் வரும்போது தானாகவே லேசாக சிரித்துக் கொள்வாள் .

"மலர் எனக்கு டீ வேணும் "நேரடியாக சொல்ல மாட்டான். "பத்து ரூபா கொடேன். டீ குடிக்கணும். கைல காசு இல்ல."பாவமாக இருக்கும் இவளே டீ போட்டுக் கொடுப்பாள்.

"என்ன தான் இருந்தாலும் நீ போடற டீ மாதிரி எங்கையும் குடிக்கறேதே இல்ல மலர்". சூடான டீயை கையில் வைத்துக் கொண்டு இவளுக்கு ஐஸ் வைப்பான்.

இவள் வீட்டுக்குள் அவன் வர நேர்ந்த போதெல்லாம் அவளின் அந்த பெரிய போட்டவை தடவி தடவிப் பார்த்துக் கொண்டிருப்பான்.

"மலர் இப்பல்லாம் நான் ரொம்ப டீ காபி குடிக்கறது இல்ல தெரியுமா. சீக்கிரம் தலை நரைத்து விடும்னு நீ சொல்லுவ இல்ல. அதான்" கன்னம் கிள்ளி கொஞ்ச வேண்டும் போல இப்போது தோன்றியது .

"மலர் எனக்கு சப்பாத்தி செய்து தரியா ?"

அருகில் நின்று அவளுடன் சேர்ந்து மாவு பிசைய ஆசை வந்தாலும் சற்று தள்ளி நின்று அமைதியாக அவள் முகம் பார்த்துக் கொண்டே மாவு எல்லாம் பச்சையாகவே காலி செய்து விடுவான். கத்திரிக்காய் வதக்கல் அவனுக்குப் பிடிக்கும். வெங்காய துவையல் அவனுக்குப் பிடிக்கும் எதைப் பார்த்தாலும் அவன் நினைவுகள் தான் .அவள் மனம் குழம்பித்தான் கிடக்கிறது.

யாரோ ஒரு மொட்டை அடித்த பாட்டியுடன், சிரித்துப் பேசுவதை சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தான். சிரிக்க மறந்தவர்களை இவள் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள். அவளின் சிரிப்பில் அவனும் சிரித்தான். எதேச்சையாக திரும்பியவள் அவன் முகம் பார்த்தாள் . புரிந்துக் கொண்டவன் ஓடி வந்து பாட்டியை தூக்கி வீல் சேரில் அமர வைத்தான்.

கண்ணசைவைக் கூட புரிந்துக் கொள்ளும் கணவன் கிடைத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்.

ஒரு நாள் இவள் எண்ணுக்கு கதிர் அழைத்தான். செல்வியின் மகள் இவளை பார்க்க வேண்டும். அவ அங்க வர வேண்டாம். பயந்துருவா. நீ கொஞ்சம் கேட் கிட்ட வாயேன். மறுக்காமல் சென்றவளிடம் ஒரு சாக்கலேட் பையை நீட்டினாள் குழந்தை .

"என்ன இது?"

"எனக்கு நாளை மறுநாள் பிறந்த நாள் . நீங்க கட்டாயம் வரணும். இல்லன்னா பாப்பா கேக் கட் பண்ணவே மாட்டா. ஈவினீங்க பைவ் ஓ க்ளோக் . இதை உங்க பிரண்ட்ஸுக்கு கொடுங்க "

"சரிடீ பெரிய மனுஷி. தேங்க்ஸ் " என்று கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்தாள் . பிள்ளையும் அதே போல இவளுக்கு கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்தாள் .

செல்வியின் கணவர் அன்னிக்கு நடந்த விஷயத்துக்கு கையெடுத்து கும்பிட்டு மன்னிப்புக் கேட்டார்.

இவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றவளிடம் வரோம் என்று கூறிவிட்டு அவரும் கிளம்பினார். அதற்கு மேல் வேறு என்ன சொல்வது என்று அவருக்கும் தெரியவில்லை.

கதிரின் எண்ணில் இருந்து பிறந்த நாள் விழா அழைப்பு வந்தது.

இவள் செல்வதாக இல்லை. ஆனால் குழந்தை காலை முதலே நீங்க எப்ப வருவீங்க என்று கேட்டுக் கொண்டே இருந்தாள்.

இருவருக்கும் பழக்கமே இல்லை. ஆனால் ஏதோ ஒரு பிணைப்பு. ஒருவேளை செல்வி வயிற்றில் குழந்தை இருந்தபோது ஊட்டி வளர்த்த பாசமோ ! குழந்தையின் அழைப்புக்காக வேறு வழியில்லாமல் சென்றாள் . அங்கே இருப்பவர்களை எப்படி எதிர்கொள்ள போகிறேன் என்ற தயக்கமும் பயமும் இருந்துக் கொண்டே தான் இருந்தது.

அங்கே அவளுக்கு கிடைக்கப் போகும் வரவேற்பு எப்படி இருக்கப் போகிறது? அங்கே ஏதாவது பிரச்சனை வந்தால் இவளுக்காக என்று வந்து நிற்கப் போவது யார்? கதிரா, ஆரிவா இல்லை தீபக்கா ?



தொடரும்...
 
Last edited:

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom