• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தூரத்து வெண்ணிலா தாகம் தீர்க்குதே 21

STN - 62

New member
அத்தியாயம் 21

கருங்கொடிதீவு போலீஸ் நிலையம் . அங்கு இருந்த போலீஸ் அதிகாரிகளிடம் போராடிக் கொண்டிருந்தான் சுதாகரன்.

"சேர் ப்ளீஸ் ஒரே ஒருக்கா என்ட ஃபிரண்ட பாக்க விடுங்க..." என்று பல தடவை கேட்டு விட்டான்.

அவரோ "உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாது.. கஞ்சா கேஸ்ல அவன பிடிச்சு அடச்சி இருக்கம்.. அவனுட்ட இருந்து ஒரு கிலோ கஞ்சா எடுத்து இருக்கம்.. விசாரிச்சுட்டு இருக்காங்க, அப்டி நீ நினைச்ச நேரத்துக்கெல்லாம் பாக்க ஏலாது.. வாய மூடிட்டு இரு இல்ல கூட சுத்துன நீயும் கூட்டுனு உன்னையும் விசாரிக்க வேண்டி வரும்..." என்று அதிகார தொனியில் மிரட்ட

"அப்டியாவது என்ன உள்ள விடுங்க சேர்.. எனக்கு அவன பாக்கணும்..." என்றவன் அமைதியானான். அவனும் உள்ளே சென்றால் உயிர் நண்பனை வெளியே எடுப்பது யார்.

சுதாகரன் வெளியே வந்து தனக்கு தெரிந்த வக்கீலிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவன், நிரஞ்சனின் கார் போலீஸ் நிலையம் முன்பு வந்து நின்றதையும் அதிலிருந்து நிரஞ்சனும் நிராளினியும் இறங்கி சேர்ந்து வருவதையும் அதிர்ச்சியாக பார்த்தான்.

தனக்கு முன்பு விடயம் தெரிந்தவர்கள் இப்போதுதான் வருகின்றார்கள் என்க ஏதோ ஒரு நெருடல். அதிலும் இறுகி இருந்த நிராளினியின் முகமும், எதையோ சாதித்ததை போன்று இருந்த நிரஞ்சனின் முகமும் எதையோ உணர்த்திற்று.

சுதாகரனை கண்டு கொள்ளாமல் அண்ணன் தங்கை இருவரும் உள்ளே செல்ல, சுதாகரனும் அமைதியாக உள்ளே சென்று நிற்க,

அங்கே இருந்த போலீஸ் அதிகாரி "வாங்க நிரஞ்சன்.. உங்க பக்கம் எல்லாம் சரியா?..." என்று கேட்க

"ம்ம்.. மொத்தமா முடிச்சு விடுங்க சேர்..." என்று நிரஞ்சனும் தோரணையாக சொல்ல

அங்கே இருந்த மற்றொரு அதிகாரியிடம் "அவன கூட்டிட்டு வாங்க..." என்று சொல்ல

அவரும் உள்ளே சென்று வாகீஷனை அழைத்து வந்தார். இல்லை இல்லை அணைத்து தூக்கி வந்தார். ராஜ தோரணையாக நடந்து வரும் நிலையில் இருக்கவில்லை அவன்.

நடக்க முடியாமல் இரத்த காயத்துடன் வந்த நண்பனை கண்ட நொடி "வாகீ!..." அலறியே விட்டான் சுதாகரன்.

ஓடி சென்று தோழனை தோள்தாங்கியவன் "ஐயோ!.. என்னடா இது..." என்று வாகீஷனை கால் முதல் தலைவரை பார்த்து கண் கலங்கியவன்

"எதுக்கு சேர் மாட்ட அடிக்கிற மாதிரி அடிச்சு வச்சிருக்கீங்க.. கேட்க பாக்க ஆள் இல்லனு நினைச்சிங்களா?..." என்று போலீஸ் அதிகாரியிடம் கத்த

தூக்க முடியாத கையை தூக்கி சுதாகரன் தோள் தொட்ட வாகீஷன் "அமைதியா இருடா..."என்றான்.

பேசக்கூட முடியவில்லை உதடு கிழிந்து ரத்தம் வர, கண்ணின் கீழ் ரத்தம் காய்ந்து இருக்க, இரு கன்னத்திலும் அறைந்த கைவிரல் அடையாளம் கண்றி போய் இருக்க, அவன் போட்டு இருந்த ஷர்ட்டின் மேல் இரு பட்டன்கள் இல்லை, தெறித்து விழுந்து இருக்க வேண்டும். சட்டை மறைக்காத நெஞ்சில் சிவப்பு அடையாளம் வீங்கி இருந்தது. கால்கள் இரண்டிலும் பலத்த அடி ஆனால் வெளியே தெரியவில்லை.

நண்பர்கள் இருவரின் அன்பு போராட்டத்தில், தன்னவனை காணக் கூடாத நிலையில் கண்டு, உயிரை உருவி எடுத்த வலியில் துடித்து, எழுந்து அவனிடம் ஓட முயன்ற நிராளினியையோ

அவளை இழுத்து அடக்கி அமர வைத்து, கண்களினாலே இதுக்கு மேலயும் நடக்கும் என்று மிரட்டிய நிரஞ்சனையோ இரு நண்பர்களும் கண்டிருக்கவில்லை .

வாகீஷனோ "இங்க என்ன நடந்தாலும் நீ வாய திறக்க கூடாது.. இது என்ட மேல சத்தியம்..." என்று சொல்ல

"என்னடா!..." இயலாமையுடன் சுதாகரன் கேட்க

வாகீஷனுக்கு நன்கு விளங்கியது அடுத்து என்ன நடக்கும் என்று. தனக்காக பேசப் போய் சுதாகரன் எதிலும் சிக்கி விடக்கூடாது என்பதால் நண்பனை தள்ளி நிற்கச் சொன்னான்.

சுதாகரன் சரி என்று அந்த மேலதிகாரி முன்பு அவனை நிற்க வைத்து விட்டு விலக,

வாகீஷனின் கண்மணி அவன் கண்ணில் விழுந்தாள். அந்த ரண வேதனையிலும் தன் உயிரானவளை பார்த்து ஒளிர்ந்தன அவன் விழிகள்.

"நிரா!..." அவன் அழைப்பிற்கு அவள் விழி இமை முடி கூட அசையவில்லை. உள்ளுக்குள் பேரலையாய் கொதிக்கும் உணர்வுகளை கட்டுப்படுத்த மிகவும் தவித்தவள் தலையை குனிந்தே இருந்தாள்.

எப்போதும் புன்னகையுடன் இருக்கும் அவள் கட்டழகனின் கசங்கிய முகத்தை நிமிர்ந்து பார்க்கும் திராணி இல்லை. அவன் கைக்குள் சிறையாகி, மார்பில் தஞ்சம் புக துடிக்கும் மனதை அடக்கி வைக்க கதிரையின் இரு முனைகளையும் இறுகப்பற்றிக் கொண்டு குனிந்தே இருந்தாள்.

நிரஞ்சனுமே இந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லை. போலீஸ் அதிகாரிகளோ வாங்கிய பணத்திற்கு அதிகப்படியாகவே விசுவாசமாக இருந்து விட்டனர்.

வாகீஷனின் வாகனத்தை தடுத்து நிறுத்தி, அதில் நிரஞ்சனால் ஏவப்பட்ட ஆள் வைத்த கஞ்சாவை எடுத்ததில் இருந்து, அவனை போலீஸ் நிலையம் அழைத்து வந்த மறு நொடியில் இருந்து நிராளினியை விட்டு விலகச் சொல்லி தான் அடித்தார்கள். போதைப்பொருள் கேஸை பற்றி எதுவும் பேசவில்லை.

உயிரே போனாலும் தன் சொந்தமான பூங்கொடியை விட்டு விடுவானா என்ன.

முடியவே முடியாது என்று அடிகளை அம்மனை நினைத்து பூக்குழி இறங்கும் பக்தன் போல், அவனவளை நினைத்து வாங்கிக் கொண்டான்.

நிரஞ்சனோ கண்களாலே வாகீஷனை காட்டி "என்ன சேர் இது..." என்று கேட்க

"எவ்ளவோ சொல்லிட்டோம் நிரஞ்சன்.. சைன் போட மாட்டேன்னு கல்லு மாதிரி இருக்கான்.. இவன்ட மேல என்ன கேஸ், என்னலாம் நடக்கும் எல்லாம் சொல்லி மிரட்டியாச்சு.. அசரவே இல்ல, அதான் அடிச்சு சைன் போட சொன்னோம்.. இதுவரைக்கும் போடல..." என்று சொல்ல

நிரஞ்சன் திரும்பி அவனைத்தான் ஆழ்ந்து பார்த்தான்.

ஆனால் வாகீஷனின் பார்வை அவன் பாவையில் தான் இருந்தது. அதில் கடுப்பானவன் "இங்க பாரு.. நிராளி எல்லாம் சொல்லிட்டாள்.. நீ கடத்திட்டு போனதால தான் உன்னோட இருந்தாள்.. இறக்கப்பட்டு உன்ன காப்பாத்த வேற வழி இல்லாம கல்யாணம் பண்ணிட்டாள்.. இப்ப தெளிவா இருக்காள்.. உன்னோட வாழ இவளுக்கு விருப்பமில்ல.. சந்தர்ப்பத்துக்கு நடந்த கல்யாணம் செல்லுபடியும் ஆகாது.. ரொம்ப சீன் போடாம என்ட தங்கச்சிக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு எழுதி தந்துட்டு பொழச்சி போ..." என்று நிரஞ்சன் கராராக சொல்ல

"உன்ட தங்கச்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு எழுதி தரலாம்..ஆனா என்ட பொண்டாட்டிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு எழுதி தர ஏலாது.. முதல்ல நீ என்ன மன்னிக்கணும், நீங்க பாத்து முடிவு பண்ணின கல்யாணத்த நிறுத்தி என்ட நிராவ கடத்துனது தப்புதான்.. அதுக்காகத்தான் இந்த அடியெல்லாம் வாங்கிட்டு அமைதியா இருந்தேன்..

...தப்பு பண்ணுனா தண்டன அனுபவிக்கணும் இல்ல.. ஆனா இதே போல இனியும் அமைதியா இருப்பேன்னு நினைக்காதே.. என்ட நிராக்காக என்னவும் செய்வேன்.. நீ ஆள் வெச்சு என்ட வேன்ல வச்ச கஞ்சாவ விட உன்ட அரிசி மில்ல ஐஸ் மருந்த வைக்க ஏலும்..." என்றவன்

"ஏன்டா மச்சான் வைக்க ஏலாதா?..." என்று சுதாகரனிடம் கேட்க

"சரின்னு சொல்லுடா செஞ்சிடலாம்..." என்று அவனும் அமர்த்தலாக சொல்ல

"என்னங்கடா எங்க இருந்துட்டு.. என்ன கதைச்சிட்டு இருக்கீங்க..." என்று போலீஸ் அதிகாரி குரல் உயர்த்த

"விடுங்க சேர்.. புது பணக்காரங்க இல்ல அப்டித்தான் சொல்லுவானுங்க..." என்று நிரஞ்சன் சொல்ல

"பணமா!.. ஒரு ரூவா காசு இல்லனாளும் என்ட நிராவ கூட்டிட்டு போக ஏலும்..." என்று வாகீஷன் சொல்ல

"அவ வந்தா தானே..." என்ற நிரஞ்சன் தங்கையிடம் "நிராளி நீயே சொல்லு.. இந்த மடையனுட்ட இவன் காதலனு உன்ன எமோஷனலா டார்ச்சர் பண்ணுனது புரிஞ்சுடுச்சுன்னு சொல்லு.. இவன் உனக்கு வேண்டவே வேண்டாம்னு சொல்லு..." என்று சொல்ல

வாகீஷன் நிராளினியை பார்த்தான். என்ன சொல்வாளோ என்று அவன் கையளவு இதயமும் அதனுள் அடங்காத கடலளவு காதலும் பரிதவித்து நின்றது.

பெண்ணவள் தான் வாய்மொழி அறியா மடந்தையாக தவித்து போனாள். இருந்தும் இனியும் கணவன் படும் துயர் போதும் என்று நினைத்தவள் "ந.. நடந்த கல்யாணத்துல எனக்கு விருப்பமில்ல.. எனக்கு இவர் கூட வாழ ஏலாது.. எங்க சைன் பண்ணனும்னு சொல்லுங்க..." என்று குனிந்த படியே ஒப்பித்து முடித்தாள்.

உயிரில் அடிவாங்கி உறைந்து நின்றான் ஆண் மகன். எட்டு வருடங்கள் அவன் உயிரை உருக்கி, காதல் தீயை ஏற்றி, வளர்த்த யாகம் அணைந்து போனதா.

ஆண் பிள்ளை என்பதால் அழக்கூட முடியாதே. நிலை குத்திய விழிகள் நெஞ்சம் நிறைந்தவள் மீதே இருந்தது.

சுதாகரனுக்குமே அதிர்ச்சி தான். திருமணமான பின்னர் இப்படி சொல்வாள் என்று அவனுமே எதிர்பார்க்கவில்லை.

போலீஸ் அதிகாரி ஏற்கனவே எழுதி வைத்திருந்த காகிதத்தை நீட்ட, அதை வாங்கி சற்றும் தயங்காமல் தன் கையெழுத்தை போட்டாள்.

அவளுக்கோ அங்கு இருக்கவே முடியவில்லை. உணர்வுகளை அடக்கி மூச்சு முட்டி செத்து விடுவோமோ என்று தோன்றியதால் அந்த வேகம்.

"ம்ம்.. நீயும் சைன் பண்ணு..." என்று வாகீஷனை சொல்ல

"நிரா நான் உனக்கு வேணாமா டா.. என்ட நேசம் உண்மையாவே உனக்கு புரியலையா!..." என்ற வாகீஷனின் வார்த்தைகளில் இருந்த காதலுடனான கெஞ்சல் ஒரு ஆணான சுதாகரனையே உடைத்துப் போட்டது.

ஆனால் காரிகையோ கரையவில்லை. "நிரா.. எதையும் யோசிக்காத டா.. எதுக்கும் பயப்படாத.. எல்லாத்தையும் நான் பாத்துப்பேன்.. நீ ஒரு வார்த்த சொல்லு போதும்..."

இதோ நீ ஒரு வார்த்தை சொல்லு போதும் அது அவனின் வரம் அல்லவா. இப்போது அவள் உயிரை கேட்டால் கூட காலடியில் சமர்ப்பிப்பானே.

உயிரைத்தான் கேட்கப் போகின்றாள். இமைகளை இருக்க மூடி திறந்தவள் எழுந்து நின்று, அந்த அகண்ட விழிகளில் எந்த உணர்வுகளையும் காட்டாமல்

அவன் முகம் பார்த்தவள் "என்ன விட்டுடுங்க.. தயவு செஞ்சு கையெழுத்து போடுங்க.. இதோட எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்.. எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..." என்று சொல்ல

உயிரை கீறிய கத்தி இன்னும் கொஞ்சம் ஆழமாக இறங்கியதில் மூச்சு திணறியது அந்த காதல் பித்தனுக்கு.

இருந்தும் அவள் சொல்லிவிட்டாள் அவன் கேட்காமல் போவானா என்ன. அவளை பார்த்தபடியே ஒரு விரக்தி புன்னகையுடன் அந்த காகிதத்தில் தன் தலையெழுத்தை மாற்றும் கையெழுத்தை போட்டான்.

கைகேயி கேட்ட இரண்டு வரங்கள் அந்த யுகத்தையே மாற்றி அமைத்தது. இங்கும் இரண்டு வரங்கள் ஒருவன் வாழ்க்கையை மாற்றி அமைத்தது.

ஒரு வரம் உயிருடன் வாழ வைத்தது ஒரு வரம் உயிருடன் சாக வைத்தது.

அந்த இரண்டு வரங்களில் தசரத மன்னனும் மகிழவில்லை, கைகேயியும் திருப்தி அடையவில்லை.

இங்கும் அதே நிலை தான். என்ன ஒன்று அவர்களுக்கு மூன்றாவது வரம் இல்லை. இவர்களுக்கு....

வாகீஷனோ கையெழுத்து போட்ட மறு நொடி தொய்ந்து மேஜையில் இரு கைகளையும் குற்றி நின்றான். இத்தனை நேரம் இல்லாத உடல் வலி இப்போது வந்தது போலும்.

சுதாகரன் ஓடி வந்து நண்பனை தாங்கிக் கொண்டான்.

நிரஞ்சன் எழுந்து கொண்டவன் "சரி சேர் பாத்து பண்ணிடுங்க.. இதுக்கு பிறகு என்ட தங்கச்சி பக்கம் இவன் வந்தான், அடுத்த தடவ இவன்ட குடும்பத்து மேல கை வைக்க வேண்டி வரும்..." என்று போலீஸ் அதிகாரியிடம் சொன்னவன்

நிராளினியிடம் "அத கழட்டி குடு..." என்று சொல்ல

திடுக்கிட்டவள் "எத..." என்றாள் தடுமாறி

"உன்ட கழுத்துல கிடக்கிறத..." என்றவன் கையில் இருந்த அவள் போட்டிருந்த உடை பையை விசிறி அடித்தவன் "ஆருக்கு ஆரு சீதனம் தாரது..." என்று திட்டினான்.

அண்ணனான அவன் தானே தங்கைக்கு எல்லாம் செய்ய வேண்டும், அதைக் கூட செய்ய விடாமல் தடுத்த கோபமாக இருக்கலாம்.

நிராளினி திகைத்து நின்றது ஒரு நொடிதான். மறுகணமே அவள் கண்ணாளன் சூட்டிய பொற்தாலியை கழுத்து வழியாக கழட்டி இருந்தாள்.

தாலிக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் அவன் இல்லை. ஆனால் காதலின் சாட்சியாக தன்னவளை சொந்தமாக்கியது அதை வைத்து தானே.

அதை கழட்டியதும் செத்தே போனான். அவனின் மொத்த பாரத்தை உணர முடிந்தது சுதாகரனால்.

கழட்டிய தாலியை தன் காதல் கணவனின் முகம் பார்க்க முடியாமல் எங்கோ பார்த்தபடி நீட்ட, அதை வாங்கக்கூட பிரஞ்ஞை இன்றி அவளையே பார்த்து இருந்தான் அந்த அப்பாவி காதலன்.

இடையில் நின்ற நிரஞ்சன் தான் அவள் கையில் இருந்ததை வாங்கி வாகீஷன் கையில் திணித்தான்.

ஆண்மகன் அனைவர் முன்னிலையிலும் அழக்கூடாது என்று அடக்கி வைத்த கண்ணீர் குளம் நிற்க, இடது கண்ணில் இருந்து ஒரு துளி முத்து உருண்டு விழுந்தது.

காலையில் அரங்கேறிய கூடலின் போது, தன் சொந்தமானவள் என்ற முழு உரிமையை உணர்த்திய அந்த தாலிக்கு, அவன் பூவையவள் நெஞ்சுக்குழியோடு சேர்த்து எத்தனை முத்தம் வைத்தான் என்று கணக்கே இல்லை.

நேற்று மூன்று மணிக்கு அவள் பூங்கழுத்தில் ஒய்யாரமாக தொங்கிய தாலி, இன்று மூன்று மணிக்கு பரிதாபமாக அவன் கையில்.

ஓர் நாளில் அவன் வாழ்க்கை முடிந்ததா...

நிரஞ்சன் தங்கையின் கையை பிடித்துக் கொண்டு செல்ல, திரும்பியும் பார்க்காமல் சென்றவள் வலது கை மூடி இருக்க, உள்ளங்கைக்குள் கருப்பு கயிற்றில் கோர்த்த மோதிரம்.

கூடலின் போது மங்கயவள் முகத்தை தொட்டு முத்தாடிய மோதிரத்தை மாயவன் அறியாமல் கை பற்றி விட்டாள்.

ஆண்டாண்டு காலம் அழியாத காதலின் மற்றும் ஒரு அடையாளமாக ஏற்றுக் கொள்ள அனைத்து தகுதிகளும் அடங்கிய, விலை மதிக்க முடியாத பொக்கிஷம் அல்லவா அது.

வாகீஷன் கண்கள் கையில் இருந்த தாலியில் பதிந்த அதே கணம், தன் கையில் இருந்த கருப்பு கயிற்றில் விழிகளை பதித்தாள் பாவை.

இது காதலின் வேள்வி. ஆகுதியாக கண்ணீரையும், வழிகளையும் கொடுத்து தான் வரம் வாங்க வேண்டும்...

அண்ணன் தங்கை இருவரும் சென்ற பின்னரும் நிலை கொள்ள நண்பர்கள் இருவருக்கும் சில நிமிடங்கள் எடுத்தது.

"இங்க பாருங்க.. என்னதான் மெயின் பிரச்சின முடிஞ்சாலும் கேஸ் போட்டத மாத்த ஏலாது.. உங்களுக்கு சம்பந்தம் இல்லன்னு மட்டும் எழுதலாம்.. வேன முன்னாடியே காணலனு ஒரு என்ரி எழுதி தாங்க.. அதோட கேஸ அப்டியே கோர்ட்டுக்கு போட்டா கோடி கூட தண்ட பணம் கட்ட வேண்டி வரும்.. ஒரு 25 லட்சம் கட்டிட்டு உன்ட பிரண்ட வெளிய எடுத்துக்க..." என அந்த போலீஸ் அதிகாரி கூறி விட

சுதாகரன் வக்கீலை வைத்து எவ்வளவு பேசியும் எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

நிரஞ்சனின் திட்டப்படி கையெழுத்து வாங்கிய பின்னர் விட்டு விடத்தான் வேண்டும். ஆனால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றால் சும்மா விட்டுவிடுவார்களா என்ன.

போதைப்பொருள் கடத்திய வழக்கில் கோட்டிற்கு அனுப்பக் கூடாது அவ்வளவு தானே, ஆனால் காசு கறந்து விடலாம் அல்லவா அதிலேயே குறியாக இருந்தனர்.

வக்கீல் பேசியதில் 15 லட்சமாக குறைத்து இருந்தனர். ஆனால் இன்றே கட்ட வேண்டும் என்ற நிபந்தனை வேறு.

என்னதான் வாகீஷனிடமும் பணம் இருந்தாலும், பெயர் செல்வாக்கு என்ற ஒன்று நிரஞ்சனையும் வாகீஷனையும் வேறு படுத்தி காட்டிவிட்டது.

"வாகீ என்னடா பண்றது.. அவ்ளவு காசு உன்கிட்ட..." என்று கேட்க

இல்லை என்று தலையாட்டினான். "அதுதான் எதுவும் இல்லன்னு போயிட்டாளே..தாலி தா ஈடு வைக்கலாம்..." என்று கேட்க

சுதாகரனை முறைத்தவன் "இது என்ட நிராட..." என்று சொல்லி நெஞ்சோடு பொத்திக் கொள்ள

"ம்க்கும்.. உன்ட நிரா..." என்று பல்லை கடித்தவன் "சரி கார் டொக்குமெண்ட் வச்சு எங்கேயாவது கேட்டு பாக்கவா...?" என்று கேட்க

"என்னடா உனக்கு.. அவளுக்காக வாங்கின எதுலயும் கைய வைக்காத.. காசு கட்டாட்டி என்ன நான் ஜெயிலுக்கு போறேன்..." என்று விட்டேந்தியாக சொல்ல

"நீ எல்லாம் திருந்த மாட்ட..." என்றவன் வீட்டிற்கு சென்று, கீர்த்தனாவின் நகையை வாங்கி ஈடு வைக்க, அது போதவில்லை.

அவனிடமும் பெரிதாக எதுவும் இருக்கவில்லையே. வேறு வழியில்லாமல் அவன் பஸ்ஸின் டொக்குமெண்ட்களை தெரிந்த ஒருவரிடம் கொடுத்து, மீதி பணத்தை புரட்டினான்.

எல்லாவற்றையும் சரிகட்டி எடுக்கவே இரவு ஒன்பது மணியானது. "எப்டிடா காசு...?" என்று கேட்க

"வீட்ட போய் கதைக்கலாம் வா..." என்று வாகீஷனை முதலில் போலீஸ் நிலையத்திலிருந்து அழைத்து வந்தான்.

வரும்போது நிறுத்தி வைக்கப்பட்ட வேனை பார்க்க அத்தனை கஷ்டமாக இருந்தது. தொழிலுக்காக என்று அவன் முதலில் வாங்கி போட்டது அதைத்தான்.

ஊருக்கு வரும் வரை குடும்பத்துடன் வெளியூர் அல்லது சுற்றுலா செல்பவர்களுக்கு வாடகைக்கு விட்டு உழைத்து இருக்கின்றான்.

ஏன் தன்னவளை கடத்தி வந்ததும் அதில் தான், முதல் முறை அவள் வாசம், அவள் ஸ்பரிசம் உணர்ந்தது அதனுள் தான்.

"மச்சான் வேன வெளிய எடுக்கணும்.. வக்கீல்ட்ட கேளு என்ன பண்ணலாம்னு..." என்று சொல்ல

சுதாகரன் சரி என்ற பின்னர் தான் வீட்டிற்கு வந்தான். வரும் வழியில் மருத்துவமனைக்கு சென்று விட்டு தான் வந்தனர்.

வைத்தியர் அட்மிட்டாக சொல்லியும் கேட்காமல் வீட்டிற்கு போக வேண்டும் என்று சொல்ல, சுதாகரனும் அவன் நிராளினியோடு இருந்த வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் திலகம் இருக்கும் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

"இதுக்கு மேல அம்மாட்ட மறைக்க ஏலாது டா.. உனக்கு கல்யாணமாகி போலீஸ் ஸ்டேஷன் போய், அந்த கல்யாணம் எதுவும் இல்லைன்னு எழுதி தந்துட்டு வந்து இருக்க.. அதுலயும் பாதி உயிராகி வந்திருக்க.. இப்பயும் எதுவும் சொல்லாம மறைச்சா நானெல்லாம் என்ன மனுஷன்..." என்று சொன்ன சுதாகரன் எல்லாவற்றையும் திலகத்திடம் கூறிவிட்டு

தண்ட பணம் எப்படி கிடைத்தது என்பதையும் கூறிவிட்டு சென்றான்.

மகனைப் பற்றிய அனைத்து விடயங்களும் தெரியவந்ததில் திலகத்திற்கு பேரதிர்ச்சி தான்.

அதிலும் இத்தனை கஷ்டப்பட்டும் மகனின் வாழ்க்கை இப்படியாகிவிட்டது என்று
மிகவும் வேதனையாக இருந்தது.

ஆனாலும் மகனுக்காக எதையும் காட்டிக் கொள்ளவில்லை. அவனை தேற்றுவதற்காக மடியில் போட்டு தட்டிக் கொடுத்தார்.

அவனும் அவரிடம் எதுவும் கூறவில்லை, அவளின் நினைவுகளுடன் அன்னை மடியில் கிடந்தான்.
 
Top Bottom