• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தூரத்து வெண்ணிலா தாகம் தீர்க்குதே 22

STN - 62

New member
அத்தியாயம் 22

ஆறு மாதங்கள் கழித்து.

கொழும்பு மாநகரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த நெருக்கடியான சாலையில் தன் வாகனத்தை லாவகமாக இயக்கிக் கொண்டிருந்தான் வாகீஷன்.

கருங்கொடி தீவு வாகீஷனுக்கு கொழும்பில் என்ன வேலை, கார் டாக்ஸி ஓட்டுகின்றான்.

ஆம் அன்று போலீஸ் ஸ்டேஷனில் அவன் அல்லி மலரை கடைசியாக பார்த்தது. அதன் பிறகு நிராளினியை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.

அவள் ஊரிலேயே இல்லை என்பது நன்றாக தெரிந்தது. அவனவள் இல்லாத ஊரில் அவனுக்கு என்ன வேலை, இதோ தன் காதலை தளபதியாக கொண்டு படை எடுத்து விட்டான் கொழும்பிற்கு.

ஊரில் திருமணம் ஏன் நடக்கவில்லை என்று கேட்டவர்களுக்கு, ஜெயந்திக்கு உடம்பு சரியில்லை. மருத்துவத்திற்காக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாகவும், துணைக்கு நிராளினி இருப்பதாகவும் காரணமாக கூறப்பட

இந்த காதல் கிறுக்கனின் காதிலும் அந்த தகவல் விழ, தன் உயிரானவள் எங்கே என்று தெரியாமல் ஓய்ந்து போய், பித்து பிடித்து திரிந்தவன் கொழும்பிற்கு வந்து விட்டான்.

தன்னை விட்டு விடச் சொல்லி தன்னவள் சொன்னாலும், அவளின்றி அவனுக்கு ஏது மூச்சு. தூரத்திலிருந்து என்றாலும் அவளை பார்க்க வேண்டும், தன் கண்களில் அவளை நிறைத்து கொண்டே காலம் முழுவதும் வாழ்ந்து விட சித்தம் போலும்.

தன் பிரியமானவளை தேட வேண்டும் என்பதற்காகவே டாக்ஸி ஓட்டுகின்றான். ஒவ்வொரு சவாரி ஏற்றச் செல்லும் போதும் அவளாக இருக்கக் கூடாதா என்ற எதிர்பார்ப்பில் சென்று ஏமாற்றம் அடைந்தாலும் சோர்ந்து போகவில்லை.

இதோ இன்றும் நவலோக வைத்தியசாலைக்கு ஒரு சவாரிக்காக வந்திருக்கின்றான்.

வைத்தியசாலை முன்பு வண்டியை நிறுத்தியவன் புக் செய்த நம்பருக்கு அழைப்பை எடுத்து, அந்த பக்கம் ஹலோ என்பதற்கு முன்பே "ஹலோ நான் லொகேஷன் வந்துட்டேன்..." என்று சொல்ல

"ம்ம்.. டூ மினிட்ஸ்..." என்ற பெண்ணின் குரல் பதிலாக வர

கண்கள் உருள, இதழ் தானாக "நி..ரா..." என்று முணுமுணுக்க 'இது அவள் குரல் தானே...' என்று இதயத்திடம் கேட்க அதுவும் ஆம் என்று தான் சொன்னது.

அழைப்பு எப்போதோ துண்டிக்கப்பட்டிருக்க, எகிறி குதிக்கும் மனதோடு விழிகளும் துள்ள ஒருவித தேடலுடன் அங்கு நின்ற பெண்களை பார்க்க

கண்டு கொண்டான் அவன் காதல் சித்திரத்தை. கையில் ஃபோனை வைத்துக்கொண்டு இவன் கார் நம்பரை கண்டு கொண்டவள், தன் தாயுடன் கோயில் தேர் போல அசைந்து வர

இங்கு இவனோ நிஞ்சு அடைக்க, தொண்டைக்குழியில் வந்து இதயம் துடிக்க, நிலை குத்திய விழிகள் தெறித்து விழ, மூச்சு எடுக்க முடியாமல் திணறி போய் அமர்ந்து இருந்தான்.

தன் உயிரானவளை தேடினான் தான் ஆனால் இப்படி கிடைப்பாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லையே.

நிராளினி காரை திறந்து ஜெயந்தியுடன் பின் பக்கம் ஏற போக, சிலைக்கு உயிர் வந்தவன் போல் காரில் இருந்து இறங்கியவன், சுற்றி வந்து நிராளினி முன்பு நிற்க, பெண்ணவளுக்குமே இன்ப அதிர்ச்சி தான்.

அவளோ அவள் கண்களை நோக்க, அவன் பார்வை அவள் பூசிய பொசு பொசு வயிற்றில் இருந்தது. ஆம் ஐந்து மாத மேடிட்ட வயிற்றுடன், பிங் நிற மெட்டர்னிட்டி உடையில் புது பொலிவுடன் நின்று இருந்தாள்.

இருவரும் எதுவும் பேசவில்லை. பேசும் நிலையிலும் இல்லை.

என் குழந்தை என்னவள் மணி வயிற்றில் என்ற பேரானந்தம் ஒரு பக்கம், ஏன் இத்தனை நாட்கள் தன்னிடம் சொல்லவில்லை, தன்னை தேடி வரவில்லை என்ற ஆதங்கம் மறுபக்கம் என்று உணர்வின் பிடியில் சிக்கிக் கொண்டது ஆடவன் மனது.

இருவரையும் சுயத்திற்கு கொண்டு வருவதற்காக ஜெயந்தி "நிராளி!..." மகளின் தோளை தொட

"ஹா! ஆ.. போகலாம்..." என்றவள் அவன் யாரோ என்பது போல் காரில் ஏற போக,

எரிந்து சாம்பலாகி, சரிந்து உதிர்ந்தது அவன் காதல் மனது. இப்போது கூட தன் தோள் சாய தோன்றவில்லையா என்று இதயம் கண்ணீர் வடித்தது.

பின்பக்கம் ஏற போனவளை தடுத்து, முன்பக்க கதவை திறந்து விட, தாயை ஒரு நொடி திரும்பி பார்த்தவள் முன் பக்கம் ஏறிக்கொண்டாள்.

ஜெயந்தியும் பின்பக்கம் ஏறிக்கொள்ள, சுற்றி வந்து டிரைவர் சீட்டில் ஏறிக்கொண்டவன் கண்கள் மூடி, உள் மூச்சை இழுத்து விட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன் காரை எடுத்தான்.

அடி கண்ணால் அடிக்கடி அவன் மகவை தாங்கிய மணி வயிற்றைப் பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டினான்.

எத்தனை இருந்தால் என்ன எல்லாவற்றையும் தாண்டி நான் அப்பாவாகி விட்டேன் என்ற எண்ணமே எல்லை இல்லா மகிழ்ச்சியை தந்தது.

உள்ளுக்குள் ஆயிரம் உணர்வுகள் ஆழிப்பேரலையாய் கொந்தளித்தாலும், நிரா என்று அவள் பெயரை கேட்டாலே ஆயிரம் பாவனைகளை காட்டும் அவன் முகம் நிர்மலமாக இருந்தது.

தன்னை விட்டு விடச் சொன்னவள் விரும்பி தன் மகவை சுமக்கின்றாளா, இல்லை வேண்டா வெறுப்பாக சுமக்கின்றாளா எதுவும் புரியவில்லை.

எதையும் அவன் யோசிக்கும் நிலையிலும் இல்லை. அவனைப் பொறுத்தவரை அன்று நடந்த கூடல் காதலின் சங்கமம். அவளுக்கு எப்படி என்பதை அவனால் உணர முடியவில்லை.

அவனுக்கு எங்கே தெரியப் போகின்றது பெண்ணவளின் மனநிலை. தன் காதலை குடும்பத்தினருக்கு விளக்கிச் சொல்லி, தன் மன்னவனுடன் மீண்டும் சேர ஏதாவது வழி கிடைக்குமா என்று வேண்டாத தெய்வம் இல்லை.

என்னதான் அவள் வாய் வழியாக எடுத்து கூறினாலும், அவள் வீட்டினர் புரிந்து கொள்ள தயாராக இல்லை. அவள் வேண்டிய தெய்வங்களினால் தானோ என்னவோ வரமாக அவள் வயிற்றில் அவளவன் உயிர் துளி உருவாகியிருந்தது.

தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்த அன்று அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரின் அளவை அளந்து சொல்லிவிட முடியாது.

இதோ கொஞ்சம் கொஞ்சமாக தாயையும் தந்தையையும் கரைத்து ஓரளவுக்கு சரி கட்டி விட்டாள். அவள் தமயன் மட்டுமே முறுக்கி கொண்டு இருக்கின்றான்.

வாகீஷனுக்கு அவன் அப்பாவாகிய இனிய செய்தியை சொல்லாததற்கு காரணமும் நிரஞ்சன் தான். அவன் தான் சொல்லி விட்டானே இவள் விலகி இருக்கும் வரை அவனுக்கு எந்த தீங்கும் நேராது என்று.

அப்படி இருக்க நீ தந்தையாகி விட்டாய் என்ற செய்தி தன்னவன் காதில் விழுந்த மறு நொடி தன்னை தேடி வந்து விடுவான் என்பது தெரிய, நிரஞ்சனை ஓரளவு சமாதானப்படுத்தி விட்டு தகவல் சொல்லலாம் என்பது அவள் எண்ணம்.

காலத்திற்கும் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் இந்த சிறிய பிரிவு வேண்டும் என்றே தோன்றியது. அதிலும் மீண்டும் தன் கணவனும் தன் அண்ணனும் முட்டிக் கொண்டு நிற்பதை பார்க்கும் அளவிற்கு தைரியம் அவளுக்கு இல்லை.

நிராளினி கர்ப்பமாக இருப்பது எப்போது தெரிய வந்ததோ அப்போது இருந்து நிரஞ்சன் அவளுடன் பேசுவதில்லை.

இதோ கொழும்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடி வைத்து விட்டான். போன மாதம் மாதாந்திர பரிசோதனைக்கு கூட அவனும் தான் கூட சென்றான்.

ஆனால் இதுவரை கனிவான பார்வையோ, பேச்சு வார்த்தையோ கிடையாது. அவன் மனதில் என்ன இருக்கின்றது என்பது புரியாமல் வாகீஷனையும் இதற்குள் இழுத்து விட அவள் விரும்பவில்லை.

அவள் விரும்பவில்லை என்றால் என்ன, அவன் காதல் சும்மா இருக்குமா என்ன, இதோ அலைந்து திரிந்து தேடி கண்டுபிடித்து விட்டானே, பார்த்த நொடியே கண்டுகொண்டான் அவன் காதல் மனைவி கர்ப்பமாக இருப்பதை.

இதற்கு மேல் அவன் தள்ளி நிற்பான் என்று தோன்றவில்லை. அதே நேரம் அவள் சொன்ன வார்த்தையை மீறி நடக்க மாட்டான் என்று தெரியும்.

அவனிடம் என்ன சொல்வது, என் குழந்தை உருவானதை என்னிடமே ஏன் சொல்லாமல் விட்டாய் என்று கேட்டால் எப்படி சமாளிப்பது? எதுவுமே புரியவில்லை சற்று பதற்றமும் யோசனையுடனுமே அமைதியாக பயணத்தை தொடர்ந்தாள் நிராளினி.

அவள் டாக்ஸி புக் பண்ணும் போதே அனுப்பி இருந்த லொகேஷனில் வண்டியை கொண்டு வந்து நிறுத்தியவன், தவிப்பாக அவள் முகம் பார்த்தான்.

அவளுக்குமே இறங்கி வீட்டினுள் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. விரல் நகங்களை ஆராய்ந்த படி கண்களை உருட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஜெயந்திக்கு இருவரின் மனநிலையும் புரிந்தது. அதே சமயம் நிரஞ்சனுக்கு இந்த விடயம் தெரிய வந்தால் என்ன நடக்குமோ என்று பயமாகவும் இருந்தது.

அதற்காக மகளை இப்படியே வைத்திருக்க முடியாதே, முறைப்படி நடந்ததோ இல்லையோ திருமணமாகி இப்போது வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் மகள் கணவனுடன் சேர்ந்து நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டார்.

வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் தேவராசாவின் விருப்பமும் அதுதான். ஆனால் பிரதீபன் வீட்டினருக்கு நிராளினி காணாமல் போன விடயம் தெரியவந்து அவர்கள் பேசிய வசைப்பேச்சுகள் கொஞ்ச நஞ்சம் இல்லை.

அந்த மாப்பிள்ளையை பார்த்தது நிரஞ்சன் தான் என்பதால் அத்தனை அவமானங்களையும் தாங்கி நின்றது அவன் ஒருவன் மட்டுமே. அந்த கசடுகள் அவனை இளக விடவில்லை.

மகளின் வாழ்க்கை எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவிற்கு நிரஞ்சனின் முழு சம்மதமும் முக்கியம் என்பதால் பெற்றவர்கள் இருவரும் பொறுமையுடன் இருக்கின்றனர்.

"நிராளி நீ கதைச்சிட்டு வா..." என்று சொன்ன ஜெயந்தி இறங்கி வீட்டினுள் சென்று விட்டார்.

மருமகன் என்று மரியாதை கொடுத்து, வீட்டினுள் கூப்பிடும் அளவிற்கு அவர் நிலைமை இருக்கவில்லை, அவன் எதிர்பாக்கவும் இல்லை.

"க்ஹூம்.. எ.. எத்தன மாசம்...?" அவன் தான் முதலில் ஆரம்பித்தான்.

"அஞ்சு..."

"ம்ம்.. இப்போ செக்கப்புக்கா போன...?"

"ஓம்..."

"என்ன சொன்னாங்க.. நீ ஓகேவா..."

"ம்ம் எல்லாம் நோர்மல் தான்..."

"என்ன..." உதடு கடித்தவன் "என்ன புள்ளனு தெரியுமா?..."

"ம்ம்.. ஆம்பள புள்ள..." என்று அவள் சொல்ல, முகத்தை மற்றைய பக்கம் திருப்பிக் கொண்டவன் கண்களின் ஓரம் ஒரு துளி கண்ணீர்.

"இன்னைக்கு ஸ்கேன்ல தான் சொன்னாங்க..." என்று கூடுதல் தகவல் வேறு சொன்னாள்.

இன்று என்ன குழந்தை என்று வைத்தியர் கூறிய போது, அதை தன்னவனிடம் சொல்ல வேண்டும் என்று அவள் மனது அடித்துக் கொண்டது அவளுக்கு தானே தெரியும்.

கள்ள மனது போல, மனதில் இருப்பவனிடம் சொல்லிவிட்டது போல இதோ கண் முன் வந்து நிற்கின்றான்.

எத்தனை நேரம் அமைதியாக இருந்தனரோ, அதன் பின் அவனும் பேசவில்லை, அவளும் பேசவில்லை இருவரும் தத்தமது துணையின் அருகாமையை ஆழ்ந்து அனுபவித்தனர்.

சற்று மெலிந்து, கண்ணில் கருவளையத்துடன், அடர்ந்த தாடியுடன் இருக்கும் காளையை ஓரப்பார்வையால் அவளும்...

ஒரு சுற்று பருத்து, முகத்தில் கூடுதலாக பருக்கள் பூத்து இருக்க, மேடிட்ட வயிறுறுடன், வனப்புகள் புது பொழிவு பெற்று ஜொலிக்கும் காரிகையை காந்த பார்வையால் அவனும் கவ்விக் கொண்டிருந்தனர்.

அவர்கள் ஏகாந்த தனிமையை குழைக்க ஜெயந்தி வந்து "நிராளி!..." என்று அழைத்தார்.

பெண்ணவள் நிமிர்ந்து ஆடவனைப் பார்த்தாள். இரு விழிகளும் தூண்டில் போட, மறு ஜோடி விழிகள் மாட்டிக் கொண்டது. பிரிக்கவே மனது இன்றி பிரித்துக் கொண்டு நிராளினி இறங்கிக் கொள்ள, அவனும் மனதே இல்லாமல் வண்டியை எடுத்தான்.

*****
இதோ மணி நல்லிரவு இரண்டு. தான் தங்கி இருக்கும் ஒற்றை அறையில், டிவியில் ஒளிபரப்பாகும் படத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் வாகீஷன். அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சுதாகரன்.

நிராளினியை பார்த்து விட்டு வந்த மறுநொடியே, சுதாகரனுக்கு அழைத்து உடனே வருமாறு கூற, அவனும் அடித்து பிடித்து இரவு 12 மணிக்கு வந்து சேர, இரண்டு மணி நேரமாக புலம்பிக் கொண்டிருக்கின்றான்.

குடித்து விட்டு புலம்பினால் கூட பரவாயில்லை, அவன் தான் ஒன்றுக்கு மற்ற ஒன்று சப்டியூட் வைத்து இருப்பானே,

சித்தாலேபே ஓமத்திரவகம், அதை தான் குடித்து விட்டு புலம்பல். கொடுமை என்னவென்றால் சுதாகரனும் அதே ஓமத்திரவகத்தை குடித்துக் கொண்டு, காதில் ரெத்தம் வராத குறையாக கேட்டுக் கொண்டிருக்கின்றான்.

"நான் அப்பாவாக போறேன்டா.. ஆனா அவ என்னுட்ட சொல்லல..."

"அடேய் இதேதானேடா ரெண்டு மணிநேரமா சொல்லிட்டு இருக்க.. வேற ஏதாவது சொல்லி புலம்புடா..."

"நான் தப்பு பண்ணிட்டேன் டா..."

"தப்பு பண்ணுனதால தானே டா நீ அப்பாவான..."

"அது இல்லடா.. நான் அவள கடத்தி இருக்க கூடாது டா..."

"எப்பா!.. கடத்தி கர்ப்பமும் ஆக்கிட்டு இப்போ மனசு உறுத்துதோ..."

"டேய் தப்பா கதைக்காத.. கல்யாணம் பண்ணி கர்ப்பமாக்கினேன்..."

"ம்க்கும்.. ரொம்ப பெருமதான்..."

"இல்லையா பின்ன.. ஒரு நாள் தான்டா வாழ்ந்தேன்.. நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல..." என்றவன் சோகமாக

டிவியில் சில்லுனு ஒரு காதல் படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, அதில் யோதிகா சூர்யாவிடம் (ஒரு நாள் வாழ்ந்து இருந்தாலும் ஒரு யுகம் வாழ்ந்த திருப்பதி கிடைச்சிருக்கும்னு எழுதி இருக்க கௌதம்) என்று கண்ணீர் உருக வசனம் பேச,

வாகீஷனோ "பொய்யி!.. பொய்யி!.. ஒரு நாள் வாழ்ந்தா போதுமா எவன் சொன்னான்.. எட்டு வருஷம் அவள்ட நெனப்போட வாழ்ந்தப்போ நிம்மதியா இருந்தேன்.. ஒரே ஒரு நாள் அவ கூட ஊனும் உயிருமா வாழ்ந்தேன்.. அப்போத்துல இருந்து செத்து செத்து புழைக்குறேன்.. ஒரு நாள் வாழந்துட்டு உயிரானவள பிரியுறது நரக வேதனடா.. ஏன்டா அந்த ஒரு நாள் வாழந்தோம்னு இருக்கு.. என்ட ஃபீலிங்ஸ் உனக்கு புரியுதா?..." என்று விடாமல் புலம்ப

"சரிதான்.. பொண்டாட்டிய பிரிஞ்சவன் கூடலாம் சகவாசம் வைக்க கூடாதுன்னு எனக்கு புரிஞ்சுது..." என்று சுதாகரன் சலித்துக் கொள்ள

"எனக்கு என்ட நிரா வேணும்டா.. என்ட புள்ள அவ வயித்துக்குள்ள.. தொட்டுப் பாக்க கூட ஏலல.. எப்டி இருக்கு தெரியுமா?.. என்னோட வாழ விரும்பலன்னு சொன்னவள், என்ட பிள்ளைய விரும்பி சுமக்கிறாளா? இல்ல விதியேனு சுமக்கிறாளா தெரியல டா.. ஆக மொத்தத்துல பிடிக்காத ஒரு வாழ்க்கைய அவள வாழ விட்டுட்டேன்ல..." என்று வாகீஷன் சொல்ல

"டேய் அன்டைக்கே சொன்னேன்ல.. நிராளி உன்ன வேணாம்னு நினைக்கல.. உன்னோட நல்லபடியா வாழணும்னு நினைச்சு தான் விலகி இருக்காள்னு தோணுது.. பொண்டாட்டி வேணும்னா நீ உன்ட மச்சான கரெக்ட் பண்ணு, அது ஒன்னு தான் வழி..." என்று சுதாகரன் சொல்ல

"சரிடா.. என்ன இருக்கட்டும், எப்டிடா என்ன வேணாம்னு சொல்லலாம்.. என்ன விட்டுட்டு போனா அத கூட நீ சொன்ன காரணங்களுக்காக ஒத்துக்கலாம்.. நான்தான் சொன்னேனேடா அவள தவிர எனக்கு எதுவுமே முக்கியமில்லனு.. என்ட புள்ள உருவானது கூட எனக்கு தெரியல டா..."

"டேய் விடுடா.. எத்தன தடவடா சொல்றது..." என்று சலித்துக் கொண்டான் சுதாகரன்.

நிராளினி அன்று விட்டுச் சென்ற பின்னர் அவளுடன் வாழந்த அவன் வசந்தமாளிகைக்கு சென்று "போயிட்டாடா.. என்ட உசுற கொத்தோட உருவி எடுத்துட்டு போயிட்டா..." என்று கதறி துடித்தது அவனைக்கூட கண்கலங்க வைத்ததே .

எத்தனை சமாதானங்கள் கூறியும் வாகீஷனை ஒரு நிலைக்கு கொண்டு வர பத்து நாட்களுக்கு மேலானது. அதன் பின்னர் தான் சுதாகரன் போலீஸூக்கு கொடுத்த பணத்தைப் புரட்டி அவனிடம் கொடுத்து விட்டு, நிராளினியை தேடியதும்... கொழும்பிற்கு வந்ததும்...
 
Top Bottom