• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தேன் நாட்டு பைங்கிளி - 1

நிதனிபிரபு

Administrator
Staff member


அத்தியாயம்: 1

விடியலை எதிர் நோக்கி காத்திருக்கும் வைகறைப் பொழுது அது.

அலைகள் அதிகம் புரளாது, தேக்கி வைக்கப்பட்ட தொட்டி நீராய் ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாது காட்சி தந்தது அந்த ஆறும் கடலும் கலக்கும் முகத்துவாரப் பகுதி. ஆற்றுக்கும் கடலுக்குமான இடைவெளியை மணல் திட்டுகள் நிரப்பியிருக்க, மரத்தால் செய்யப்பட்ட மிதவைகள் அங்கும் இங்கும் மிதந்து கொண்டிருந்தன.

மிதவையில் இருந்த மீனவர்கள் எழுந்து நின்று, தாங்கள் சுருட்டி வைத்திருந்த வலையை நீரிற்குள் அள்ளி வீச, அது குடை போல் அழகாய் விரிந்து நீரில் அமிழ்ந்தது.

அதை வைத்தக் கண் வாங்காது பார்த்தபடி நின்றிருந்தாள் ஒரு மங்கை.

மீன் பாடும் தேன் நாடு என்ற வர்ணனை வார்த்தைகளைச் சொந்தம் கொண்டாடும், கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பு மாகாணம் அது. எவ்வித கலப்பும் இல்லாத தூய தமிழை, அங்குள்ள மனிதர்களின் வாய் மொழியாகக் கேட்கலாம். அத்தனை இனிமையாக இருக்கும்.

இலங்கை என்றாலே இனிமையும் அழகும் ரம்மியங்களும் கொட்டிக் கிடக்கும் நாடு தானே!

பல ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையின் நீண்ட பாலம் என்ற பெருமையை இழந்திருந்தது கல்லடி பாலம். அந்த லேடி மனிங் பாலத்தின் இரும்பு தடுப்புகளில் சாய்ந்து நின்று கொண்டு, காலைக் கதிரவன் உச்சி ஏறிக் கொண்டிருக்கும் அழகைக் கவனித்துக் கொண்டிருந்தாள் வானதி.

கவலைகொண்டு, இரு கரத்தையும் கட்டிக் கொண்டு நின்றிருந்தாள் அவள். இருளைக் கிழித்து, தகதகவெனப் பொன் மஞ்சள் கீற்றை ஆசியாய் அவளின் முகத்தில் அள்ளி வீசிய ஆதவன், பெண்ணவளை மட்டுமல்லாது இந்தப் பூரண ஜகத்தையே வண்ணமயமாய் மாற்றியது.

காலை வேளை என்பதால் சாலையில் ஜன நடமாட்டம் அரிதாகத்தான் இருந்தது. ஆனால் நேரம் செல்லச் செல்ல, வெயிலின் தாக்கத்தைப் போல் மனித நடமாட்டமும் கூடிக் கொண்டே போனது.

சர் சர் என்ற வேகத்தில் வாகனங்கள் கடந்து செல்ல, அவரவர், அவரவர் அலுவலுக்காகப் பரபரத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவள் மட்டும் எவ்வித சலனமும் இன்றி வெகு நேரமாக நின்றிருந்தாள் அங்கு. முகத்தில் கண்ணீர் வடிந்தோடிய வடுக்கள் காணப்பட்டன.

அசைவற்று நின்றவள்‍, அழுது முடித்து விட்டாள் போலும். இமைகளை மூடி, விழிகளுக்குள் தேங்கி நின்ற கண்ணீரை மொத்தமாக வெளியேற்றி விட்டுத் திரும்பியவளுக்காக அவளின் மிதிவண்டி காத்திருந்தது.

மணி முள்ளின் வேகத்தில் மிதிவண்டியை அவள் மிதித்துக் கொண்டிருக்க, உதடுகள் மட்டும் மெல்லிய அசைவுடன் முணுமுணுத்துக் கொண்டே இருந்தன.

"ஏன்? இந்தக் கடவுளுக்கு என்னில இவ்வளவு கோபம் எண்டு விளங்கல்ல. நான் என்னவும் பிழ செஞ்சிருந்தா, பிழைக்கானத் தண்டனை எனக்குத் தர வேணும். ஏன் என்ர தாய் தகப்பனுக்கு தந்து, என்னை... என்னை... இப்படி… இப்படியொரு ஒரு நிர்க்கதியான சூழலில் நிக்க வச்சி வேடிக்கை பார்க்க வேணும்." என்று வெதும்பிக் கொண்டிருந்தவளின் வயதோ வெறும் பதின்மூன்று.

எந்த வயதிலும் யாரும் வாழ்க்கையில் இழக்கக் கூடாத தாயையும் தந்தையையும் ஒருங்கே அந்த வயதில் கடவுளிடம் தூக்கிக் கொடுத்து விட்டு யாருமற்று நிற்பவளுக்கு ஆறுதல் அவளும் அவளின் எட்டு வயது தம்பி பார்த்திபேந்திரனும் தான். தாய் வழி, தந்தை வழி சொந்தங்கள் என இரத்த உறவுகள் இருந்த போதும், தாய் தந்தைக்கு அவர்கள் நிகராக மாட்டார்கள் என்பதைக் கடந்த சில மாதங்களாக உணரத் தொடங்கியிருந்தாள் வானதி.

நத்தை வேகத்தில் பயணப்பட்டாலும், வீடு வந்து சேர்ந்துவிட்டாள்.

சாலையின் தொடக்கத்திலேயே கண்டு விட்டாள் அந்தச் சிவப்பு நிற மகிழுந்தை. தன் வீட்டு வாசலில் ஏன் அது நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது அவளுக்கு நன்கு தெரியும்.

கடந்த ஒரு மாதமாகவே அந்த காரையும் அதில் வருபவர்களையும் அறவே வெறுத்திருந்தாள் அவள். ஆதலால் ஆர்வமில்லாது, வந்து வீட்டார்களா! என்று எரிச்சலுடன் மிதித்தாள் மிதிவண்டியை.

எரிச்சல் தான்…

அவர்களால் தானே இத்தனை நேரம் பாலத்தில் நின்று நகர் பார்வை செய்தது.

சென்ற முறை போல் இந்த முறையும் காலம் கடத்தினால் சென்று விடுவார்கள் என்று நினைக்க, அதற்கு நேர்மாறாக வந்து காத்திருந்தனர். திரும்பி எங்காவது சென்று விடலாமா என்று கூட யோசனைகள் வர,

அவளின் மூளையோ, 'அடியே! மட்டி வானு!... உன்ர புத்திய யாருட்டயாவது கடன் குடுத்து வச்சிருக்கியா?. கொடுத்திருந்தா உடனே அதை மீட்டு, அதைத் தட்டி, கசக்கிப் பிழிந்து பார். அது சொல்லும் உன்ர முயற்சி ஒண்டும் பலிக்காது எண்டு. தப்பி எங்கயுமே போக ஏலாது எண்டு.

அப்படியே செல்ல வேண்டும் எண்டாலும் எங்கு செல்வாய்? யார் இருக்கா உனக்கும் உன்ர தம்பிக்கும் புகலிடம் தர. கொடுக்க முன்வாரவங்களயும் நீ அலைக்கழித்துக் கொண்டிருக்கிறாய். இப்படியெல்லாம் செய்து விட்டு பிறகு என்ன தான் செய்யப் போகிறாய் நீயும் உன்ர தம்பியும்?' என்று அது கேள்விகள் கேட்க, மனம் சுணங்கிப் போய்விட்டது.

வெறுப்புடன் தன் மிதிவண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றாள். செல்லும் முன் மகிழுந்திற்குக் கோபமான ஒரு உதையைக் கொடுக்கத் தவறவில்லை.

"எங்க போன பிள்ளை? நேரம் ஆகவும், காண இல்ல எண்டு பயந்திட்டம். அவங்க வந்து காத்துக் கிடப்பாங்க எண்ட நினைப்பு இருக்கா உனக்கு!. வீட்ட அடையாம ஊர் சுத்திக் கொண்டிருக்காய்… கழுதை..." என்று வசைபாடினார் தமிழ்செல்வி. அவளின் அப்பம்மா..‌. அவரைக் கவனியாது கடந்து செல்லப் பார்க்க, குரல் உயர்த்தி அவளின் பாதங்களை நிலத்தில் வேர் விடச் செய்தார் அவர்.

"ஒரு வார்த்த சொல்லிப் போட்டு போறதுக்கு என்ன? பொம்பளப்பிள்ளைக்கி பொறுப்பு இருக்க வேணும். திமிரும் அகம்பாவமும் இருக்க கூடாது. இதுவர எப்படியோ இருந்த, அது படி இனியும் இருக்கலாமெண்டு நினைக்காத. உன் ஒருத்திய நம்பித்தான் உன்ட தம்பி இருக்கான். அவனுக்கும் அப்பனும் அம்மையும் இல்லை. அக்கா எண்ட ஒருத்தி தான். அதையும் இல்லையெண்டு ஆக்கி விடாதே.” என்று ஆதங்கத்தைக் கொட்டினார் அவர்.

அத்தனை நேரம் கண்ணீருடன் அறையில் இருந்த பார்த்திபன், வேகமாக வந்து தமக்கையின் கரத்தைக் கட்டிக் கொண்டான்.

அவனின் கவலை தோய்ந்த முகம் 'என்னை அநாதையாக விட்டு விட்டு சென்று விடாதே அக்கா.' என்றது. அவனுக்காகவாவாது இவர்களின் பேச்சைக் கேள் என்று அவளின் மனம் இறைஞ்ச, அமைதியாகத் தமிழ்செல்வியின் வசவுச் சொற்களைக் கேட்டபடி நின்றாள்.

செவியில் அவரின் குரல் கேட்டாலும், அவளின் பார்வை வட்டம், நாற்காலியில் பொறுமையற்று அமர்ந்திருந்த இளைஞனைச் சுட்டிக் காட்டியது. அவனின் முகம், அடக்கப்பட்ட கோபத்தால் கன்றி சிவந்திருப்பதைப் பார்க்காமலேயே உணரமுடிந்தது வானதியால். அதற்காகவே இன்னும் தாமதமாக வந்திருக்கலாம் என்று தோன்றி உள்ளுக்குள் ஒரு வித குதுகலிப்பைத் தந்தது.

"உன்ட தம்பியெல்லாம் நல்ல பிள்ளையாய் எல்லாத்தையும் எடுத்துப் போட்டு வெளிக்கிட்டு தயாராய் நிக்கிறான். நீ மட்டும் சொன்னதக் கேட்டு, ஊர் சுத்தாம பொறுப்பா இருந்தால் அவன்ட பாரம் குறைஞ்சிருக்கும். எங்க போய் இருந்தாய் இவ்வளவு நேரம்?" என்றதற்குப் பதில் இல்லை அவளிடம். அது அவரின் கோபத்தை அதிகமாக்க,

"உன்னட்ட தான் கதைச்சுக் கொண்டு இருக்கன் பிள்ளை. எங்கே போயிருந்த நீ?" என்று கோபமாய்க் கேட்ட தமிழ்செல்விக்கு,

"ஊரெல்லாம் சுத்த இல்ல அப்பம்மா. சும்மா... பாலத்தில நிண்டு போட்டு வந்தன்." என்று சின்னக் குரலில் சொன்னவள்,‌

"இங்க இருக்கவே எனக்கு மூச்சு முட்டுது. சுத்தமானக் காத்து வேணும் எண்டு போனன்." என்றாள் அந்த இளைஞனை முறைத்துப் பார்த்தவாறு. அமர்ந்திருந்த இளைஞன் எழுந்து கொண்டான்.

"நான் வெளிய இருக்கேன் சித்தப்பா." என்று விட்டு அவளை முறைத்தபடி வெளியேறினான்.

'காத்து வாங்கப் போனாளாம்... ஹிம்... எங்களுக்கும் தான் இவளால மூச்சு முட்டுது. எந்தப் பாலத்து மேல நின்று காத்து வாங்கன்னு தான் தெரியல. இருக்குற சூழ்நிலை தெரியாம ஜாலியா ஊர் சுத்திட்டு வந்திட்டு கதை அளக்குறா! இடியட்...' என்று முணுமுணுத்தபடி அவன் செல்ல,

"ஜாலியாச் சுத்திக் கொண்டு வர்றதை நீங்கள் பாத்தீங்களா? வாய் இருக்கு எண்டு கண்டதைக் கதைக்க வேணாம். கதையளக்கிறேனாம் கதை... உங்கட நிலமையைக் காட்டிலும் எங்கட நிலை தான் மோசமா கிடக்கு. அதை எப்படிச் சொல்லி விளக்கினாலும், விளங்கவே விளங்காது உங்களுக்கு." என்று அவள் கத்த, கேட்க அவன் இல்லை.

"எங்களுக்கு நல்லாவே புரியுது வானதி... அதுனால தான் உங்க மனசு மாற நேரம் கொடுத்து காத்திருக்கோம்." என்று செந்தூரம் சொல்ல, அவரை முறைக்க முடியாது வெற்றுப் பார்வை பார்த்து வைத்தாள் வானதி.

அவர் சொல்வது உண்மை தானே.

அவர்களுக்காகத் தானே இங்கே கூடாரமிட்டிருக்கிறார்கள் இருவரும்.

அவரையும் அவரின் அண்ணன் மகன் கரிகாலனையும் விரட்டி அடிக்க வேண்டி, பலவற்றைப் செய்து பார்த்து விட்டாள். அவள் அடித்த வேப்பில்லைக்குக் கரிகாலனுக்கு ஆத்திரம் வந்து வெகுண்டெழுந்து விட்டான். ஆனால், செந்தூர் மட்டும், ஆணி அடித்தார் போல் உறுதியுடன் நிற்கிறார்.

அவரின் பிடிவாதத்திற்கு இசைந்து கொடுப்பதில் வானதிக்குத் துளியில் விருப்பமில்லை. ஆனால் கொடுத்துத்தான் ஆக வேண்டும். ஏனெனில் தற்போதிருக்கும் சூழலில் அவர்கள் தான் அவளுக்கும் அவளின் தம்பிக்கும் உதவ முன் வந்த உறவுகள்.

அத்தோடு கல்லூரி செல்லும் வயதில் இருக்கும் கரிகாலன் தான் வானதியின் பெரியம்மா மகன். கரிகாலனின் அன்னை ஆண்டாளும் வானதியின் அன்னை உமையாளும் ஒரே கருவூலத்தில் பிறந்தவர்கள்.

செந்தூரத்திற்கு வானதியின் தந்தை யோகராசாவின் வயதிருக்கும். அவளின் தந்தையின் சாயலில் இல்லை என்றாலும் செந்தூரத்தின் குரலில் இருக்கும் கனிவும், அன்பும், அவளின் சிடுசிடுத்த பேச்சையும், முறைப்பையும், சாரல் மழை பொழிந்து தணிய வைத்தது. அது மட்டுமல்ல வேறு சில காரணமும் இருந்தது செந்தூரத்திடம் தன் கோபத்தைக் காட்ட முடியாது பணிந்து செல்ல.

"கோர்ட்டுல வாங்க வேண்டிய எல்லாம் பேப்பர்ஸ்ஸும் வாங்கியாச்சி. நாங்களும் இங்க வந்து ஒரு மாசமாகுது. அங்க போட்டது போட்ட படி கிடக்குது. காலனுக்கும் காலேஜ் திறந்திடுவாங்க. இதுக்கு மேலயும் விரையம் பண்ண நேரமோ காசோ எங்க கிட்ட இல்லை. அதுனால இந்த முறை புரிஞ்சுக்க வேண்டியது நீ தான்ம்மா." என்றவர், அர்த்தம் பொருந்திய பார்வை ஒன்றை அந்த இரு சிறார்களின் மீது வீசி விட்டு,

"நாளைக்கி காலைல கொழும்புல இருந்து ஃப்ளைட். இப்பவே புறப்பட்டாத்தான் சரியா இருக்கும்." என்று பயணச் சீட்டை தமிழரசியிடம் காட்டி விட்டு, தன் சட்டைப் பைக்குள் பத்திரப் படுத்தினார்.

ஏனெனில், "உங்கட உதவி ஒண்டும் தேவை இல்லை. எங்கள கவனிச்சுக் கொள்ள யாரும் வேணாம். நானே என்ர தம்பிய பாத்துக் கொள்வன். உங்கட கூட வாரதுல துளியும் விரும்பம் இல்லை. இனி ஒரு தரம் எங்குக்கு முன்னுக்க வந்து இது போல் கதைச்சிக் கொண்டு நிக்காதீங்க." என்று ஆத்திரத்துடன் மொழிந்து கிழித்தெறிந்து விட்டாள்.

இப்பொழுது அவளுக்கு வேறு மார்க்கம் இல்லை.

"பத்து நிமிஷம் வேணும்." என்க, செந்தூரத்தின் அதரங்கள் அழகாய் விரிந்தன.

"கார்ல வெய்ட் பண்றோம்." என்றவர் பார்த்திபனை அழைத்துக் கொண்டு பின் இருக்கையில் ஏறி அமர்ந்தாள்.

"என்ன சொன்னா?" என்ற கரிகாலன் முகத்தில் எரிச்சல்.

"ம்… வெய்ட் பண்ணு. வந்திடுவா." என்றார் நிம்மதி பெருமூச்சு ஒன்றை விட்டபடி. உச்சுக் கொட்டி இறுகி அமர்ந்திருந்தவனிடம்,

“பொறுமைய விட்டுடாம இறுக்கி பிடிச்சு வை கரிகாலா. ஊர் போய் சேந்த பின்னாடியும் தேவைப்படும்." என்றவர் அவனின் முறைப்பைச் சம்பாதிப்பதற்கு முன் பார்த்திபனிடம் பேசத் தொடங்கினார்.

அறைக்குள் சென்றவள் தன் தாய் தந்தையின் புகைப்படச் சட்டம் மற்றும் அவர்களின் நினைவுகளைத் தாங்கிய பல பொருள்களை ஒரு பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

"இதையெல்லாம் என்னத்துக்கு எடுக்கிற பிள்ளை. விமானத்துல இவைகள அனுமதிப்பாங்களா?" என்ற கேட்டுக் கொண்டே வந்த தமிழ்செல்வி,

"நல்ல பிள்ளையாய் இருக்கணும். என்னிட்ட முரண்டு பிடிச்சி பதிலுக்குப் பதில் கதைக்கிற மாதிரி அங்குள்ள ஆக்களுட்டயும் கதைக்காத. அங்க இருக்கிறவங்களுக்கு உன்ன பெத்தவங்கள்ள கோபம் இருக்கும். உன்ர அம்மா செய்த காரியம் அப்படி.

கட்ட மாட்டன் எண்டு பத்திரிக்கை அடிச்ச பிறகு, குடும்பத்த விட்டு உன்ர அப்பனோட ஓடி வந்தவ தான் அவ. செந்தூரம்… அந்தப் பெடியன் தான் அது. விரும்பப்பட்டு கட்டக் கேட்டவ அவமானப்படுத்திட்டு போன பிறகும், உங்கட அம்மா மேல வச்சிருக்குற காதலுக்காக வேண்டி உங்க ரெண்டு பேரயும் கூட்டிக் கொண்டு போறார்.

அவருட வீட்டு சூழலும் சீரா இருக்கும் எண்டு நினைக்க ஏலாது. மனவருத்ததுல ஒண்டு ரெண்டு வார்த்தை பேசி வச்சா கொஞ்சம் பொறுத்துப் போ பிள்ளை.

என்ன வளர்ப்பு எண்டு உன்ர அம்மாவையும் அப்பாவையும் மத்தாள்கள் பழிக்காமல் நட. தம்பியையும் பத்திரமா பாத்துக்கோ." என்று அறிவுரைகளை வழங்க, அவரை வெறுப்புடன் பார்த்து விட்டு பெட்டியுடன் நடக்கத் தொடங்கினாள். வெளியேறும் முன்,

"இவ்வளவு அக்கறை இருக்குறவங்க எங்களை ஏன் அவங்களோட அனுப்பி வைக்கணும்?. சொந்த பேரனையும் பேத்தியையும் வளக்க ஏலாது எண்டு சொல்லி போட்டு, இப்ப பொறுமை கவனம் எண்டு நடிப்புக் காட்டி கண்ணீர் விட்டா துடைக்க விரல் எப்படி வரும்?" என்று சூடாகக் கேட்க, அவளின் பேச்சு அவருக்குச் சுருக்கென்றிருந்தது.

மகன் வழி பேத்தி தான்... ஆனால் அவருக்கு மகன் மட்டும் இல்லயே. மகள்களும் உண்டு.
இப்பொழுது வரை அவர்களை அண்டி வாழ்ந்து கொண்டிருப்பவர், எப்படி இந்தப் பிள்ளைக்களுக்கும் சேர்த்து வயிற்றை நிறைப்பார். மகள்களின் சுடு சொல்லிற்குப் பதில் சொல் சொல்லாது, அடங்கி அமைதியாக வானதி இருப்பாள் என்ற நம்பிக்கை கடுகளவும் அவரிடத்தே இல்லாத போது, நித்தமும் வழக்காடுவது எங்கனம்?

பிள்ளைகள் நல்ல முறையில் வளர்கிறார்களோ இல்லையோ பிரச்சனைகள் நெடுநெடுவென வளர்ந்து கொண்டே போகும்.

அதனால் தான் யோகராசன் இறந்து போகவும் உமையாள் பிறந்த வீட்டார் பார்த்துக் கொள்ளட்டும் என்று பொறுப்பை ஒப்படைத்து அனுப்பி வைக்கிறார்.

காரில் ஏறி அமர்ந்த வானதிக்கு நெஞ்செல்லாம் அடைத்தது. நான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டுச் செல்வது துக்கத்தைத் தூக்கி தொண்டைக்குள் வைத்தது போல் பாரமாக இருந்தது.

கழுத்தை வளைத்து தன் வீட்டைப் பார்த்தாள். வாசலில் நிறுத்தியிருந்த சைக்கிள் அவளின் தந்தையின் பரிசு.

"முதல் பிள்ளையா வந்தா வாங்கித் தருவன் எண்டு தானே சொன்னீங்க. காசு எடுத்து வச்சிக் கொள்ளுங்கள், நாளைக்கி இன்னேரம் ரிசல்ட் வந்திடும்." என்று ஆர்ப்பரித்த மகளுக்கு, கடை கடையாக அழைந்து வாங்கித் தந்தார் யோகராசன்.

 

நிதனிபிரபு

Administrator
Staff member
"முன்னுக்கு பாத்து ஓட்டு மகள். அடம்பிடிச்சு வாங்கி வச்சா மட்டுக்க போதாது. எடுத்து பழகோணும். இல்லையெண்டால் நான் கடைகாரனிட்ட திரும்பி குடுத்திடுவன்.” என்று மிரட்டி,

“பிடியை இறுக்கமாப் பிடிச்சி வளைக்காம போங்க. அப்பா உன்னோட வாரன்." என்று தைரியத்தை ஊற்றி, இருக்கையின் அடியில் கை வைத்து, மிதிவண்டியை ஓட்ட கற்றுத் தரும்போது கூறிய யோகராசாவின் குரலும், இப்பொழுதும் காதிற்குள்ளேயே கேட்டது.

அவர்கள் இறந்து விட்டார்கள் என்று சொன்னால் நம்ப மாட்டாள் அவள். உடல் தான் மாண்டிருக்கிறது ஆன்மா தங்களைச் சுற்றிக் கொண்டு தான் இருக்கிறது என்று முழுமையாக நம்புவதால் தனித்து விடப் பட்ட உணர்வு அவளுக்கு எப்பொழுதும் வந்ததே இல்லை.

யோகராசா நடமாட முடியாது படுக்கையில் விழுந்ததும், உமையாள் தன் வார்த்தைகளால் பிள்ளைகள் இருவரின் மனத்தையும் பதப்படுத்தி வைத்திருந்தார். அதனால் இருவரின் உயிரற்ற உடல்கள் இடுகாட்டிற்குச் செல்லும் போதும் திடமாய்த் தன் தம்பிக்காக இருந்தாள்‌‌.

ஆனால் அவர்களின் நினைவுகளை விட்டு, இந்த ஊரை விட்டுத் தூரமாகச் செல்ல நேரிடும் என்று அவள் கிஞ்சிற்றும் நினைக்கவில்லை. அது தான் அதிக வலி கொடுத்தது அவளுக்கு.

விழிகள் கோடிட்டு இருக்க, "அக்கா... அழாதீங்க... அப்பாவும் அம்மாவும் எப்பவும் நம்மளோட தான் இருப்பாங்களாம். நாம அழுது அவங்கட நிம்மதிய கெடுக்க கூடாதாம்." என்று பெரிய மனிதன் தோரணையில் பேசி, தமக்கையின் கன்னத்தைத் துடைக்க, மெல்ல இதழ் விரித்தவள்,

"இனி அழ மாட்டன். அவங்கள மட்டுமில்ல என்ர தம்பியிட சந்தோஷத்துக்காகவும் நான் அழ மாட்டன்." என்றாள் பார்த்திபனின் முன்னுச்சியில் தலை புதைத்து,

"கதையில பெரிய மனுஷன் வாடை வீசுதே! யாரு சொன்னது இதை உனக்கு?"

"நான் தான் சொன்னேன். உன்னை மாதிரி லூசுத் தனமா இல்லாம அவனாவது தெளிவா இருக்கணும். ஒரு வீட்டுக்கு ஒரு அழு மூஞ்சி போது. அதுக்கும் மேலன்னா தாங்க முடியாது. முக்கியமா நான் தாங்க மாட்டேன்." என்றான் கரிகாலன்.

அதைக் கேட்டவளின் முறைப்பு பலமாக இருந்தது. கூடவே,

'பெரிய மனுஷி சின்னப் பிள்ளைத் தனமா நடந்துக்கிட்டா... சின்னப் பையன் பெரியாள் மாதிரி தான் பேசுவான்.' என்று உதட்டிற்குள் முணுமுணுத்ததும் கேட்டு விட,

"யாரும் உங்களோட கதைக்க இல்ல" என்று வெடுக்கென்று சொன்னவளைத் திரும்பி பார்த்து முறைத்தான் அவன்.

இருவருக்குள்ளும் வார்த்தைகள் தடிக்கத் தொடங்கும் முன், "காலா... கொஞ்சம் அமைதியா இரு... சின்னப் பிள்ளைக் கிட்ட வார்த்தையாடிக்கிட்டு." என்று அண்ணன் மகனிடம் சொன்னவர்,

"போதும்... இனி யாரும் யாரையும் ஜாடை பேச வேண்டாம். ஊர் போய் சேருற வரை வாயைத் திறக்கக் கூடாது." என்று கட்டளையைப் பொதுவாக இட்டு விட்டு அமைதியாகி விட்டார்.

அவரின் பேச்சுக்குக் கிடைத்த மரியாதையா அல்லது வாயாடும் விரும்பம் இல்லாததாலா தெரியவில்லை இருவரும் ஒருவரிடம் ஒருவர் பேசாது வந்தனர்.

அவளிடம் தான் கரிகாலன் பேசவில்லை. ஆனால் பார்த்திபனிடம் எதையாவது கேட்டுக் கொண்டே வந்தான். அந்தச் சிறுவனும் தன்னை விட பெரிய வயதில் இருக்கும் கரிகாலனிடம் மயங்கி, தங்களைப் பற்றியும், தங்கள் ஊரைப் பற்றியும் பேசிக்கொண்டே வந்தான்.

வானதி…

உமையாள் யோகராசாவின் தவப்புதல்வி...

இந்தோ-இலங்கையின் கலவையிலான பெண் சிற்பம் அவள்.

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட யோகராசா, கல்லூரி மேற்படிப்பிற்காகச் சென்னை வந்தபோது ஆரம்பமானது அவர்களின் காதல்.

உமையாள் என்ற பெயரைக் கேட்ட மாத்திரமே யோசராசாவிற்கு அவரின் மீது இனம் புரியாத ஈர்ப்பு வந்து விட்டது.

உமையாளுக்கும் யோகராசாவின் குணமும் மனமும் பிடித்துப் போக கல்லூரி நாள்கள் காதலிலுடன் நகர்ந்தன.

படிப்பு முடியவும், யோகராசாவிற்கு மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக வேலை கிடைக்க, அவர் நாடு திரும்பியிருந்தார். அவரின் தங்கைகளைக் கரை சேர்க்கும் வரை கல்யாணத்திற்கு அணை போட்டு வைத்தார்.

ஆனால் உமையாள், தன் வீட்டில் மாப்பிள்ளைப் பார்க்கத் தொடங்கியதும் தன் காதலை போட்டுடைத்தார்.

வேறு வேறு நாடு, வேறு வேறு கலாச்சாரம், வேறு வேறு இனம் என்பதெல்லாம் அவர்களின் காதலுக்கு இல்லவே இல்லை. ஆனால் கல்யாணத்திற்கு உண்டு என்பது போல் எதிர்ப்பு பலமாக இருந்தது உமையாளின் வீட்டில்.

உமையாளின் பலத்த மறுப்புக்கு மத்தியில் அவருக்குத் திருமண ஏற்பாடு செய்ய, உமையாள் ஓடி வந்து விட்டார் யோகராசாவிடம்.

திரும்பி தாயகம் செல்ல வேண்டிய அவசியமே இல்லாது பார்த்துக் கொண்டார் யோகராசா. தன் தாயின் மறுப்பையும் மீறி, கோயிலில் வைத்து தாலி கட்டி, தன் துணையாக உமையாளை ஏற்று இரு மக்கள் செல்வங்களுடன் கவிதையாய் ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர்.

அந்த விபத்து மட்டும் நடக்கவில்லை என்றால் யோகராசாவின் கூடு கலைய வேண்டிய சூழ்நிலை வந்திருக்காது.

ஆறு மாதங்களுக்கு முன் படுத்த படுக்கையாகி, பின்
உயிர் துறந்து இரு மாதங்கள் முடிந்து விட்டன.

கணவன் நடமாடவில்லை என்றாலும் உயிரோடு இருக்கிறார் என்ற நிம்மதியில் இருந்த உமையாளுக்குப் பேரிடி தான் அவரின் இறப்பு.

கணவனின் இழப்பு மாரடைப்பைத் தந்ததால் அடுத்தடுத்து வந்த நாள்களில் கணவனிடமே சென்று விட்டார்.

யோகராசாவிற்கு விபத்து நடந்த போதே, தமிழ்ச்செல்வியிடம் தன் குழந்தைகள் பாதுக்காப்பாக இருக்காது என்பதை, யோகராசாவின் தங்கைகளின் நடவடிக்கைகள் மூலம் புரிந்து கொண்டவர்,‌ அறுந்து போனதாக நினைத்த தன் தாய் வீட்டிற்குத் தகவல் அளித்தார்.

இந்தியாவின் அவரின் அக்கா ஆண்டாளைத் தவிர்த்து யாரும் இல்லை. உமையாளின் தாயும் தந்தையும் இறையடி சேர்ந்திருக்க, இருந்த ஒரே அண்ணனும் வெளிநாட்டு வேலை என்று பறந்திருந்தார். ஆண்டாளுக்கும் தங்கை செய்து வைத்த காரியத்தில் ஆத்திரம் குறையாது தான் இருந்தது.

ஏனெனில் அவரின் கொளுந்தனாரானா செந்தூரத்துடன் தான் உமையாளின் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மேடை வரை வந்த திருமணத்தில் தங்கை ஓடி விட்டாள் என்பது அவரின் புகுந்த வீட்டில் ஆண்டாளுக்கு இருந்த மதிப்பையும் மரியாதையையும் சிதைத்திருந்தது.

ஆதலால் உமையாள் அனுப்பிய கடித்ததிற்கு எதிர்வினை ஆற்ற முடியாத கையறு நிலையில் அவர் இருக்க, இம்முறை அந்தக் கடிதத்தை உமையாள் செந்தூரத்திற்கு அனுப்பி வைத்தார்.

அதில் தன் குழந்தைகளின் நலனை மட்டுமே வேண்டி இறைஞ்சியிருந்தார். அதைப் படித்த செந்தூரம்,
வானதியையும் பார்த்திபேந்திரனையும் இலங்கையிலேயே விட்டுச் செல்லமில்லாது, இதோ தன்னுடன் தன் நாட்டிற்கு, தன் ஊருக்கே அழைத்துச் செல்கிறார்.

கொழும்பு விமான நிலையம் என்ற பெயர் பலகையைப் பார்த்ததும் வானதிக்கு விம்மிக் கொண்டு வந்தது.

தன் நாட்டை விட்டு... தான் வளர்ந்த ஊரை விட்டு... தன் தாய் தந்தையின் நினைவுகளை விட்டு செல்ல உள்ளோம் என்பது வேம்பாய்க் கசக்க, உடமைகளை எடுக்க கூட மறந்தவளாக காருக்குள் சிலை போல் அமர்ந்திருந்தாள் வானதி.

"என்ன மேடம்! பல்லாக்கு இளவரசி கணக்கா உள்ளுக்குள்ளயே உக்காந்திருக்கீங்க. இறக்கி விட இளவரன் வேணுமோ!" என்றவனை அவள் முறைக்க,

"இறங்கி வா... வந்து உங்க லக்கேஜ்ஜ தூக்குங்க. எங்கிட்ட ரெண்டு கைத் தான் இருக்கு. அதுல என்னோட லஜ்கேஜ்ஜத்தான் தூக்கிக்க முடியும்." என்ற கரிகாலன் கதவைத் திறந்து விட்டு, கரம் பற்றி வெளியே இழுத்துப் போட்டான்.

அப்பொழுது அந்தச் சிலை உயிர் பெறவில்லை. உடமைகளைத் தள்ளிக் கொண்டு அவன் பின்னே அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவளின் இதயத்தை உளியால் அடிப்பது போல் இருந்தது. இதயத்துடிப்பு கூட வலி தருமா? என்றிருந்தது அவளுக்கு.

அதிலும், சென்னைச் செல்ல இருக்கும் விமானம் எந்தத் தடவாளத்தில் இருந்து புறப்படும் என்ற ஆங்கில அறிவிப்பைக் கேட்டதும், 'நான் லங்காவை விட்டு எங்கும் வரமாட்டன்...' என்று கத்திக் கதறி சிறு பிள்ளை போல் உருண்டு பிரண்டு அழ வேண்டும் என்றிருந்தது.

ஆனால் கரிகாலன், அவளின் தோளில் கரம் பதித்து இழுத்துச் சென்றான் விமானத்திற்குள்.

பாதுகாப்புப் பட்டையைப் போட்டு விட்டவன், அவளின் இருண்ட முகத்தைக் கண்டு, "எதையும் நினைக்காத வானதி... நடக்குறது எல்லாம் நல்லதுக்குத் தான்." என்றான் கனிவானக் குரலில்.

அதைக் கேட்காது மலங்க மலங்க முழித்தபடி கலக்கத்துடன் வெளியே பார்த்தாள் மங்கை.

நேரம் வந்ததும் இயந்திரப் பறவை, தான் ஏற்கனவே விரித்து வைத்திருந்த இறக்கையைத் தூக்கிக் கொண்டு சிறிது தூரம் ஓடி, பின் மேலே எழும்பத் தொடங்கியது.

கண்ணாடி தடுப்பு வழியே தன் மண்ணைக் கண்டவளுக்குத் தவிப்புடன், தன் உயிரின் ஒரு பாதியை யாரோ அறுத்து கீழே கிடத்தியது போல் வாட்டம் வந்தது.

முதலில் மரங்கள், மனிதர்கள் எல்லாம் சின்னதாகி, பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் விளையாட்டு பொம்மையாகியது. பூமியில் வேர் விட்டு ஓடிக் கொண்டிருக்கும் நதிகள் எல்லாம் நீல நிறத்தில் கண்களுக்குக் காட்சி தந்தன.

தன் நாட்டின் நீர் வளத்தைக் கண்டு வியந்த நொடி, எல்லாம் நீராய் மாறி, நிலம் குட்டியாகி, இந்தியப் பெருங்கடலின் முத்து முழுமையாகத் தெரிந்தது. தன் சொந்த பூமியை விட்டு சொந்தமில்லாமல் செல்கிறாள். இனி தனக்கும் அந்தத் தேசத்திற்கும் உறவில்லை என்பதில் விழியிலில் முத்துக்கள் உருண்டுத் திரண்டு வெளியேறின.

சில நிமிடங்களில் நிலமும் மறைந்து போனது, மேகக் கூட்டங்களுக்கு மத்தியில்...

வானத்தை வெறித்தபடி இருந்தவளின் தோளில் தட்டி, மீண்டும் கீழே பார்க்கச் சொன்னான் கரிகாலன். இமைகளைக் வேகமாக மூடிக் கொண்டாள் பார்க்க மாட்டேன் என்பது போல்.

"நீ பாக்க விரும்பலன்னாலும் உன்னோட மிச்ச வாழ்க்கை அங்க தான். நீ சென்னை வாசி தான்." என்று கரிகாலன் காதில் சொல்ல, உக்கிரமாய் முறைத்தாள் அவள்.

'இந்தியா, இலங்கை எண்டாலே எல்லோருக்கும் நினைவு வருவது இராமாயணம் தான். என்ர இடத்தை அந்த ஒப்பற்றக் காவியத்துடன் ஒப்பிடுவது பெரும் தவறு தான். ஆனாலும் இரு நாடுகளுக்கும் பொதுவாய் இருக்கும் அதனுடன் ஒற்றுமைப் படுத்திச் சொல்வதைத் தவிர, வேறு ஏதும் தோன்றவில்லை. எனக்குத் தெரிந்த காவியமும் அது மட்டும் தான்.

ஆதலால் பிழையாக நினைக்க வேண்டாம்.

இந்த விமானம் தான், பழங்காலத்துல சொல்லப்பட்ட புஷ்பக விமானம். அதான் ராவணனிடம் உண்டு எண்டு சொல்வாங்களே அது. அதில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் நான் சீதை எண்டால், நான் எங்கும் ஓடி விடக் கூடாது எண்டு என்ர கரத்தைச் சிறைப் பிடித்து வைத்திருக்கும் கரிகாலன் தான் இராவணன். பத்து தலைகள் இல்லாது ஒற்றைத் தலை கொண்ட இராவணேஷ்வரன்.

என்ன ஒண்டென்றால் அந்த இராவணன் சீதையை இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கடத்தி வந்தான். இந்த இராவணன் என்னை இலங்கையில் இருந்து இந்தியாக்குக் கூட்டிக் கொண்டு போறான். தலைகீழாக நடக்கிறது என்ர வாழ்க்கையில்.

அத்தோடு என்னை எந்த ராமன் லங்காவுக்கு மீட்டு வருவான் என்பது தெரியவில்லை. வருவானா என்பதும் புதிர் தான்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்டால் என்ர வாழ்க்கையில் இதுவரை எந்த ராமனையும் சந்தித்தது இல்லை நான்.

அசோக வனம் எண்ட இந்தச் சிங்கார சென்னையில் இருந்து, காப்பாற்றி, என்னை என்ர நாட்டுக்கே கூட்டிச் செல்லும் ராமனை நான்… இந்தியாவில் தேடிக் கண்டு பிடிக்க வேண்டுமா! இல்லை இலங்கையில் கண்டுபிடிக்க வேண்டுமா!. அவன் எனைத் தேடி வருவானா! எங்க இருக்கான் அவன்.’

இது வானதியின் மனக் குமுறல். அவளின் ஆசைகளை நிவர்த்தி செய்து, யாருடன் எப்படித் தன் சொந்த பூமி திரும்புகிறாள் என்று பார்க்கலாம்...
 
Top Bottom