தேன் நாட்டு பைங்கிளி - 16

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,451
113
Germany
அத்தியாயம்: 16

க்ளிக்... க்ளிக்... என்ற சத்தம் அவனின் எரிச்சலை உச்ச நிலைக்குக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. அதே எரிச்சலோடு தன் முன் நின்றுகொண்டிருந்த இரு மங்கைகளையும் பார்த்தான். மமதி, அவனின் காரமானப் பார்வையை வானதிக்கு பார்சல் செய்துகொண்டிருந்தாள்.

ஆனால் அவளோ! யாரையும் பார்க்காது, கையில் வைத்திருந்த பேனாவின் பின் பக்கத்தை அழுத்தி, பேனா முனையை வெளிக்கொண்டு வருவதும், உள்ளேயே வைத்திருப்பதுமாக சத்தமெழுப்பிக் கொண்டிருந்தாள்.

ஏற்கனவே ஜானகி அனுப்பி இருந்த மின்னஞ்சலால் கோபமுற்றிருந்தவன், அவள் எழுப்பிய சத்தத்தில் எழுந்துவந்து, கையில் இருந்த பேனாவைப் பிடுங்கிஎறிந்தான்.

"What’s your exact problem miss Vanathi?" என்று அடிக்குரலில் உருமி, இரு கரத்தையும் பின்னால் கட்டிக்கொண்டு 'பேசு...' என்பதுபோல் அவகாசம் கொடுத்து நிற்க, அவனின் கோபம் கண்டவள் உடல் நடுங்கிப்போனாள். மமதியும் தான்.

"மெ...மெயில்ல... டிட்டெயில்லா... அனுப்பிருக்கேன் சார்." என்றாள்.

"அதைப் பாத்ததுனால தான் விளக்கம் கேக்குறேன் இடியட். என்ன பிரச்சனை உனக்கு? உனக்கு மமதி மேல என்ன கம்ளைண்ட்?" என்றவன் திரும்பி மமதியைப்பார்த்தான்.

அவளோ, "இதுல என்னோட மிஸ்டேட் எதுவும் இல்லை சார். நான் என்னோட டீம் மெட் கூட ஹெல்தி ரிலேசன்ஷிப் தான் மெய்டன் பண்றேன். என்னோட டிம் மெட்ஸ்ஸும் ஜென்யூன் பர்சன்ஸ் தான். இவளுக்கு வேறகாரணம் இருக்கலாம்." என்ற மமதிக்கு வானதியின் மீது வருத்தமும் கோபமும் ஒருசேர வந்தது.

வரத்தான் செய்யும். ஏனெனில் வானதி, வேறு பிரிவிற்கு மாற்றல் வேண்டும் என்று HR-க்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளாள். காரணம் இல்லாது மாற்ற முடியாதே!

வர்மாவின் மீது குற்றம் சுமத்த மனமில்லை. அவனின் எதார்த்தமான அண்மையும் பார்வையும், அவளுக்குள் மரித்து, புதைத்து வைத்திருக்கும் உணர்வுகளைத்தட்டி எழுப்பிக்கொண்டிருந்தது. என்னேரம் வேண்டுமானாலும் அவனின் பால் சாய்ந்து விடலாம் என்பதால், அசௌகரியமாக உணர்கிறேன் என்று பொதுவானப் புகாரை முன்வைத்தாள்.

ஒரு பெண், அசௌகரியம் என்கிறாள் என்றதும், மேலிடம் என்னவென்று விசாரிக்கச் சொல்லி, அதன் மேலாளரான வர்மாவிடமே பொறுப்பைக் கொடுத்தது.

அவனுக்குத் தெரியும் தன்னால் தான் அவள் இவ்வாறு செய்கிறாள் என்று.

தன்னைத் தவிர்க்கத்தான் என்றாலும் மமதியை விசாரணை வளையத்திற்குள் இழுத்து விட்டவளின் மீது கோபம் கட்டுக்கடங்காது வந்தது.

ஆகாஷ்ஷிற்குக் கரிகாலனினைப் பிடிக்கும் என்ற காரணத்தால் தான், அவனின் தங்கையான வானதியைத் தன் அணிக்குக் கேட்டு வாங்கினாள் மமதி. நட்பாகவும் பழகினாள். இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருந்தது. ஆனால் இப்பொழுது அவள் அளித்திருக்கும் புகார் மமதிக்கும் அவப்பெயரைத் தரும். ஆதலால் அவளும் வானதியின் மீது கோபமாகத்தான் இருந்தாள், வர்மா கத்தும் வரை.

அவனின் குரலில் இருந்த காட்டம் பெண்கள் இருவருக்கும் அச்சத்தைத் தர,

"என்ன ரீசன் மிஸ்.வானதி? இங்க எது உங்கள uncomfortable-லா feel பண்ண வைக்குது?" என்றபடி அவளின் முகம் பார்த்து நிற்க, அவள் பேசவில்லை.

"Look at me…” என்றதும் முகத்தை உயர்த்தியவள்,

“Answer…" என்றதால் தயக்கத்துடன் மமதியின் பக்கம் விழி உருட்டினாள்.

"நீங்க போங்க மமதி. நான் டீல் பண்ணிக்கிறேன்." என்று மமதியை அனுப்பிவைத்தான். அவளோ திரும்பித் திரும்பி பார்த்தபடி சென்றாள் வெளியே.

இருவரும் கண்ணாடிக் கூண்டிற்குள் இருப்பதால் பேசிவது கேட்பதில்லை. ஆனால் வெளியே இருப்பவர்களுக்குக் காட்சிப்பொருளாக மாறி இருந்தனர்.

மமதிக்கு வானதியைப் பார்க்க பாவமாக இருந்தது. உடனே ஆகாஷிற்கு அழைத்துவிட்டு, வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்துடன் சேர்ந்து அமர்ந்துகொண்டாள்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தவன், அதை ஆட்டியவாறே, "நான் தானா உன்னோட uncomfortable?" என்க, சற்றும் யோசியாது பதில் தந்தாள்,

"ஓம்..." என்று‌.

அவளைக் குறுகுறுவெனப் பார்த்தவன் விளக்கம் கேட்கவில்லை. அவனுக்குத் தெரிந்திருந்தது, அவளைத் தான் சலனப்படுத்துகிறோம் என்பது‌. அவளின் பார்வையில் எட்டிப்பார்க்கும் நாணம். நெருங்கிச் செல்கையில் பூக்கும் குறு வியர்வை. தந்தி அடிக்கும் உதடுகள். சில்லிட்டிருக்கும் உள்ளங்கைகள். தாளமிடும் கால்கள் என அவளின் உடல் மொழிகள் அனைத்தும் அவன் மேல் அவள் கொண்டுள்ள காதலைச் சொல்லாமல் சொல்லியது. ஆனால் அதை அவளால் ஏற்க முடியவில்லை.

"என்னால ஏலாம இருக்கு. உங்களத் தூரமா பாத்து, ஒரு ஓரமா நான் மட்டும் கிடந்து மருகேக்க ஒண்டும் தோணேல்ல. ஆனா இப்ப..."

"இப்ப..." என்றான் புருவம் உயர்த்தி குறும்பாக. அது புரிந்தவள்,

"நீங்க என்னிட்ட வித்தியாசமா நடந்து கொள்றது எனக்கு விளங்குது..”

"என்ன வித்தியாசம்?" என்றான் ஏதும் அறியாதது போன்று.

"உங்கட டி சர்ட்ல ஆரம்பிச்சி, நேத்து பைக்ல உலா வந்தது வரை எல்லாம் வித்தியாசமா கிடக்கு. இது மாதிரி முதல் இல்ல நீங்க. என்னில கூடுதலா உரிமை எடுத்துக் கொள்றீங்க. அதால என்ர பேர உங்கட பேரோட சேத்து, இங்குள்ளவங்க பகிடி பண்றாங்க. எனக்கு கிசுகிசுப்பாக இருக்க பிடிக்கல. நான்... உங்கள விட்டு தூரம் இருக்கத்தான் விரும்புறன்" என்றாள் தட்டுத்தடுமாறி.

மூன்று நாட்களுக்கு முன்,

'It's over' என்று அவள் அனுப்பிய குறுஞ்செய்தி புரியவில்லை வர்மாவிற்கு. எதை முடித்து வைக்கப்போகிறாள் என்ற யோசனையுடன் அன்றைய அலுவலகம் வர, பார்க்கிங்கிலேயே நின்றிருந்தாள் வானதி.

"நதி! இங்க ஏன் நிக்கிற?"

"உங்களப் பார்க்கத் தான்." என்றதும் பனி மழை பொழிய, ஆவலுடன் அவளின் அருகில் வந்தான்.

"இந்தாங்க. இது உங்களுக்குத் தான்." என்று ஒரு கவரை நீட்ட, அதைப் பிரித்துப் பார்த்தவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

அது டீ சர்ட். அன்று அவன் அவளுக்குத் தந்ததைப் போல் உல்லன் நூலில் கைப் பின்னல் போட்டு, அவளே பின்னியிருக்கிறாள் அந்த பனியனை.

"வாவ்... நதி! இது சூப்பரா இருக்கு. நீயே?"

"ஓம்... சரியா இருக்கா எண்டு போட்டு பாத்து சொல்லுங்க." என்க, அவன் இடம் பொருள் பார்க்காது சட்டைப் பட்டன்களைக் கலையத் தொடங்கினான்.

"என்ன செய்றீங்க?" என்றபடி இரண்டடி பின்னால் நகர்ந்தாளே தவிர, திரும்பிக்கொள்ளவில்லை.

'பப்ளிக்கா அவனே கூச்சம் பாக்காது கலட்டும் போது நான் ஏன் அவன்ர பக்கம் பாக்காம திரும்ப வேணும்.' என்ற மிதப்பு இருந்தது அவளிடம்.

"நீ தான போட்டுப் பாக்கச் சொன்ன!"

"பிறகு பாக்கலாம் தானே?"

"இது செட்டானா ஈவ்னிங் அழைய வேண்டியது இருக்காதே!" என்றான். அது சரியென இருக்க, தலையை அசைத்துவிட்டு நகர இருந்தவளிடம், சட்டைப் பாக்கெட்டிற்குள் இருந்தவற்றை நீட்டினான்.

"ஷர்டுக்கு மேலயே போடலாம்..." என்றபோது அவளின் குரல் அவனின் வெற்று மார்பை உரசியபடி மெலிந்தது.

"பிட்டிங் சரியா இருக்காது." என்றவன் சட்டையையும் கலட்டி அவளிடம் கொடுத்தான். அதை வாங்கும் போது வருடிச்சென்ற அவனின் விரல்கள் பெண்ணவளின் உணர்வுகளையும் உரசிவிட்டுச் சென்றிருந்தன.

இதற்கு முன் இவனைச் சட்டையில்லாது பார்த்ததே இல்லையா? என்றால், அநேகமுறை பார்த்திருக்கிறேன் என்பாள்.

"இப்போதாவது பேண்ட் எண்டு இடுப்புக்கு கீழ மூடியிருக்கிறான். நான் பார்க்கும் சமயமெல்லாம் வெறும் சாட்ஸ் மட்டும் தான் உடுத்தியிருப்பான். தொடையைக் கூட முழுசா மூடியிருக்காது."

சுஜித்ராவின் அண்ணன் மற்றும் அவனின் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் வர்மா குதித்தாடியது நினைவு வந்துசென்றது. அவளின் அறையிலிருந்து, ஜன்னல் கம்பிகள் வழியே அவனையே ரசித்து பார்த்தபடி இருப்பாள்.

தூரம் தான்... கண் தொடும் தூரம். ஆனால் இப்பொழுது பார்ப்பது கைத்தொடும் தொலைவு. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று நன்கு புரிந்தது வானதிக்கு.

விழிகள் அவனின் தேகத்தை அணு அணுவாக ஊர்வலம் செல்ல, அதை உணர்ந்தவன், குறுநகையுடன் அவள் பின்னிய டி சர்ட் அணிந்து பார்த்தான்.

கைகளை உள்ளே விட்டு தலை வழியாக அணிந்து பார்த்தபோது கனகச்சிதமாக அவனின் உடலை இறுகியும் பற்றாது, தொளதொளவென தொங்கிக்கொண்டும் இருக்காது, ஒட்டிவைத்தார் போலிருந்தது.

"பர்பெக்ட்டா இருக்கு." என்றவன், பனியனின் நெஞ்சுப் பகுதியில் v என்ற ஆங்கில எழுத்து எம்ராயிடரி செய்யப்பட்டிருந்தைக் கண்டு, "இதென்ன?" என்பதுபோல் ஏறிட்டவன்,

"இது என்னோட டீ சர்ட்ல இருக்காதே!" என்றான் குறும்புடன்.

அவளின் முதல் எழுத்தை ஆசையுடன் தைத்திருந்தாள்.

"ஓம்... இல்ல தான். இனி யாருக்கும் உதவி எண்டு தானம் பண்ணி, மிரட்டி உருட்டி ஊர் சுற்ற வைக்க கூடாது எண்ட நினைப்பு உங்களுக்கு எப்பவும் இருக்கணும். அதுக்குத் தான் இது." என்றவள் சத்தமாகச் சிரித்த அவனின் கம்பீரத்தை‌ ரசித்துச் சொன்னாள். தேக்கு மரமென வலுவேறி இருந்த ஆடவனின் தேகம் கைத்தேர்ந்த சிற்பி செதுக்கிய கிரேக்கசிலை தான்.

அவளின் கையில் பனியனைத் தந்தவன், சட்டையை அணிந்துகொள்ள, அவளுக்குத்தான் மூச்சு முட்டியது அவனின் பேரழகில்.

கைகள் சட்டையை அணிந்து கொண்டிருந்தாலும், கண்கள் அவளை அன்றி வேறு எங்கும் பார்க்க மாட்டேன் என்றன. அவளும் அவனின் பார்வைக்குச் சளைக்காது அவனையே பார்த்துவைத்தாள்.

இருவரின் மொழிகளாக விழிகள் பேசிக் கொள்ள, அவனின் இமை ஓரங்கள் சுருங்கியதையும், வளைந்திருந்த இதழ்கள் ரசனை மிகு சிரிப்பைச் சிந்துவதையும் கண்டு, நாணம் தாளாது, தோல்வியை ஏற்றுக் கொண்டு நிலம் பார்த்தாள்.

"போகலாமா?" என்ற கணீர் குரலில் திடுக்கிட்டு திரும்பிநடக்க, இருவரும் சேர்ந்து நடைபயின்றனர்.

"இதெல்லாம் எப்ப கத்துக்கிட்ட நதி?"

"வீட்ட வந்து டீச்சர் கத்து தந்துட்டு போவாங்களா!!! உங்கட பெரிய அத்தைட ஏற்பாடு. நீங்க பார்த்தில்லையா?" எனக் குத்தலாகக்கேட்டாள்.

குத்தலுக்குக் காரணம், “ஒன்னும் தெரியாத முட்டாள் தத்தி.” என்று அவனின் முன் சுஜித்ரா திட்டுவாள். அவனும் அது உண்மை என்று நினைத்திருப்பானோ என்றதால் வந்தக் குத்தல்.

"உங்கட மாமா வீட்டுல ரூமுக்குள்ளயே சாப்பிட்டு, தூங்கி, அடைஞ்சி தத்தியாக் கிடந்தன் எண்டு நினைச்சிங்களா! என்னால முடிஞ்சது கத்துக்கிட்டே தான் இருந்தன். என்ர பொழுத பயனுள்ளதா மாத்த நினைச்சி."

"குட்... உல்லன் தவிர வேற என்னென்ன திறமைய ஒழிச்சி வைச்சிருக்க உனக்குள்ள?" என்றதற்குப் பதில் சொன்னவாறே இருப்பிடம் வந்தடைந்தனர். இருவரும் பேசிசிரித்தபடி சென்றது ஜெய்க்குப்‌ பிடிக்கவில்லை.

அவனின் காதலுக்கு ஒரு வழி கிடைத்தாக வேண்டும் என்பதால் அவளின் வீட்டாருடன் பேச ஏற்பாடு செய்தான். ஆனால் அன்று ஜாதகம் வாங்கிச்சென்றவர்கள், "எங்களுக்கு நம்பகமான ஜோசியர் ஊர்ல இல்ல தம்பி. ஒரு வாரம் ஆகுமாம். வந்ததும் அவர்ட்ட காட்டிட்டு என்ன ஏதுன்னு விவரம் சொல்றோம்." என்று மலுப்பலானப் பதிலைத் தர, எதிர்மறையான பதில்தான் கிடைக்கும் என்பதை உணரத் தொடங்கியவன், வானதியுடனானத் தன் நெருக்கத்தை அதிகப்படுத்த நினைத்தான். அவளின் நிழலாக மாறி அவள் பின்னாலேயே சுற்றினான். வானதி அதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

அன்று, கேண்டினில் வானதிக்கு எதிராக அமர்ந்து கொண்டு தன் காதலை எடுத்துச் சொல்ல நினைக்க, அவளின் அருகில் கிடந்த இருக்கையை வர்மா வந்து நிரப்பினான்.

"ஹே நதி! இன்னைக்கும் மீனா? டெய்லி எடுத்துக்கிற! சலிக்காதா உனக்கு?" என்றபடி அவளின் டப்பாவில் இருந்து எடுத்து உண்டான்.

"வர்மா சார், டி சர்ட் எப்படி?"

"இனி ஈவினிங் எங்க ஃப்ரெண்டு எங்க கூட டயம் ஸ்பென்ட் பண்ண அலோ பண்ணுவீங்க தான?" என்று சித்ராவும் மிருதுளாவும் மாறி மாறி கேட்க, வர்மா திரும்பி வானதியைப் பார்த்தான்.

"நமக்குள்ள என்ன கள்ள உறவா! யாருகிட்டயும் சொல்லாம மறைச்சி மறைச்சி ரகசியமாய் செய்ய." என முணுமுணுத்தது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.

"ஓ!! எஸ்... இனி கண்டிப்பா உங்க ஃப்ரெண்ட்ட கூட்டிட்டு சுத்த மாட்டேன். அவ எனக்காக குடுத்தது ரொம்ப பிடிச்சிருக்கு. அதுலயும் அந்த v மார்க்..." என்று நெஞ்சைத் தட்டிக்கொடுத்தவன்,

"சொல்ல வார்த்தையே இல்லை. ரொம்ப நன்றி நதி..." என்று பாராட்டுகிறேன் என்ற பெயரில் அவளின் தோளில் கைக்கொடுத்து, புஜத்தில் தட்டிப்பேச, கன்னங்கள் பூப்பூக்க வானதி மறுப்பு சொல்லாது நின்றதை, ஜெய்யால் பொறுக்க முடியவில்லை.

ஏற்கனவே தன்னைவிட வயதில் சிறியவன், தன் பதவி உயர்விற்கு ஆப்பு வைத்தவன் என்ற காழ்ப்புணர்ச்சியில் இருந்தவன், வானதியையும் தட்டிக்கொண்டு சென்று விடுவானோ என்ற ஐயம் வந்தது.

ஆதலால் அலுவலகத்தில் வானதிக்கும் வர்மாவிற்கும் இடையே சம்திங்... என்ற கிசுகிசுப்பைப் பரப்பிவிட்டான்.

யாரும் தன்னை உற்று நோக்கி கவனிப்பதை வானதி விரும்பமாட்டாள். கூட்டத்தில் ஒருத்தியாய் இருந்துவிட்டு செல்லவே ஆசைப்படுவாள்.

ஸ்பாட் லைட் அடித்து யாரும் தன்னைத் தேடக்கூடாது என்பவள், நிச்சயம் தன் பெயருடன் இணைந்து வரும் வர்மாவை வெறுப்பாள். அவளுக்கு ஆறுதலாக இருந்து அவளைத் தாங்கி தன் காதலைப் புரியவைப்போம் என்று திட்டம் தீட்டி வைத்திருந்தான்.

அது கிட்டத்தட்ட பழிக்கவும் செய்தது.

"நீ அவனுக்கு கீழ இருக்குறவரை இந்தப் பேச்ச நிப்பாட்ட முடியாது வானு. வேற செக்சனுக்கு மாறு." என்று அவன் தந்த ஐடியாவால் தான் மெயில் அனுப்பியதே.

ஆனால் மமதி வந்து, "ஏன் வானு இப்படி பண்ண? உனக்கு எம்மேல என்ன கோபம்?" என்று கேட்டபின் அவசரப்பட்டு விட்டோமோ என்றிருந்தது.

முழுதாக ஒரு வட்டமே அடித்துவிட்டது நொடி முள். ஆனால் அங்கிருந்தவர்களில் நிலையில் மாறுதல் இல்லை.

சாய்வு நாற்காலியை விட்டுத்தாராது, தன்முன் இருந்தவளைப் பார்த்தபடி அவன் இருந்தான் என்றால், பெயர் பலகையில் அச்சிட்டிருந்த அவனின் பெயரை எழுத்துக்கூட்டிப் பலமுறை வாசித்துக்கொண்டிருந்தாள் அவள். இருவருக்கும் இடையை இளைந்தாடிய மௌனத்தை,

"இங்க இருந்து எந்த செக்சனுக்கு மாற ப்ளான் போட்டு வச்சிருக்க?" என்று கலைத்தான்.

"ஹாங்... குடோன்ல வேகன்சி இருக்கெண்டு..."

"உன் நாயன் ஜெய் சூர்யா சொன்னானா? அவன் பேச்சக் கேட்டுத்தான மெயில் அனுப்பின?" என்று பற்களைக் கடிக்க, கோபத்துடன் தலைதூக்கினாள் வானதி.

"கண்ட மாதிரி கதைக்க வேணாம். அவர் என்ர நாயகன் இல்லை." என்றாள் எச்சரிப்பது போன்று.

"நாயகன் இல்லன்னா யாரு அவன் உனக்கு? பிரதரா? ஃப்ரெண்ட்டா?"

“எப்படி இருந்தாலும் உங்களப்போல வில்லன் இல்ல”

“அப்ப நாயகன் தான்னு ஒத்துக்கிற!”

"ஏன் தேவையில்லாம கதைக்கிறிங்க? எனக்கு உங்களுக்கு பக்கத்தில வேலை செய்ய விருப்பம் இல்ல."

"ஏன் டி என்ன விட்டு தூரம் போறதுலயே குறியா இருக்க? விட்டுட்டு போய்ட்டா மட்டும் சும்மா இருப்பேனா!"

"மரியாதை இல்லாமல் கதைக்க வேணாம்."

"கதைச்சா? என்ன பண்ணுவ. உன் நாயகன கூட்டீட்டு வருவியா? அன்னைக்கு மாதிரி, இன்னைக்கும் உனக்காக வந்து எம்முன்னாடி நிப்பானா!”

"இதை… இதைத் தான் சொன்னன், வித்தியாசம் எண்டு. என்ர முகம் பாத்து பேச கூட தகுதி பாக்குறவர் எனக்கு ஆர் கதாநாயகன் எண்டு ஆராய்ச்சி செய்றதும்,‌ டி போட்டு உரிமையோட கதைக்கிறதும், தோள்ல கைப் போட்டு பாராட்டுறதும், பைக்ல கூட்டிக்கொண்டு போறதும்.. என்னால ஏற்றுக்கொள்ள ஏலாம இருக்கு.”

“பழகித் தான் ஆகணும்.”

“என்ன?” என்பதுபோல் அவள் பார்க்க,

“Because I love you. நீ மட்டுமில்ல நானும் உன்னை லவ் பண்றேன்.” என்று நிதானமாக, அழுத்தமாக அவளின் முகம் பார்த்துச் சொல்ல, சட்டென எழுந்துகொண்டாள் வானதி.
 
Last edited:

Author: நிதனிபிரபு
Article Title: தேன் நாட்டு பைங்கிளி - 16
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
379
83
Chennai
வானு....வில்லன் ஜெய் தான்....பேட் பெல்லா.....அவன் தான் உன் பேரை இப்படி டேமேஜ் ஆக்கி வெச்சி இருக்கான்