தேன் நாட்டு பைங்கிளி - 17

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,450
113
Germany
அத்தியாயம்: 17

நீ இழந்த ஒன்றை இழந்ததாகவே கருதி விட்டொழிவது சாலச்சிறந்தது. தேடுகிறேன், நேசிக்கிறேன், மறக்க மறுக்கிறேன் என்று இழப்பின் பின் அழைத்திருந்தாய் என்றால் கடைசியில் காயப்படப் போவது நீ மட்டும் தான்.

இதை வர்மாவிற்கு அனுப்ப வேண்டி இணையத்தில் தேடிப்பிடித்து வைத்திருந்தாள். இப்பொழுது அது அவளுக்கே உபயோகப்படும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

மனத்தில் இதை உருப்போட்டார் போல் சொல்லிக்கொண்டே உறங்க முயன்றாள் வானதி. ஆனால் அது பளிச்சென இதயத்தில் ஒட்டாது, உருண்டொடி தரையில் தவண்டது.

நினைவுகள் மாலையில் அலுவலகத்தில் நடந்ததை அசைபோட்டது.

அருள்மொழிவர்மன் கூறிய காதலில், அதிர்ச்சி விலகாது அவள் நிற்க, எழுந்து அவளின் முன் வந்தான். உடல் அசைவற்று கருமணிகள் மட்டும் அவனுடன் இங்கும் அங்கும் பயணித்தன.

"எப்ப இருந்துன்னு எக்ஸ்சாட்டா தெரியல நதி. உன்னை எனக்குப் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. உங்கூட வாழ்நாள் முழுக்க வாழணும்னு ஏக்கம் இருக்கு. இதுக்கு முன்னாடி நான் உங்கிட்ட நடந்துக்கிட்ட விதம் தப்பு தான். அது வெறுப்பால வந்தது. என்ன காரணம் சொன்னாலும் தப்ப சரியாக்கிட முடியாது. நீ சொன்ன மாதிரி நமக்குள்ள நிறைய இடைவெளி இருக்கு. இனி அது இருக்காது. நம்ம காதல் அதை நிரப்பும்.‌" என்று அகம் மகிழச் சொன்னவன், வானதியெனும் சிலைக்கு உயிர் கொடுக்க வேண்டி அவளின் மெல்லிய விரல்களை எடுத்து தன் உள்ளங்கைக்குள் வைத்து, வலிக்காது தட்டிக்கொடுத்தான்.

என்ன தான் வெறுக்கிறேன் என்றாலும் அவளுக்குள் இருக்கும் தனக்கான நேசம் ஆழியைப் போல் வற்றாது என்று முழுமையாக நம்பினான். அது உண்மை தான் என்றாலும் அள்ளிப் பருத முடியாத உவர்நீர் என்பதை மறந்துவிட்டான். ஆனால் அவளுக்கு நினைவிருந்தது.

விருட்டென அவனின் கரத்தில் அடைபட்டிருந்த தன் விரல்களை உருவிக்கொண்டவள் தீயாய் முறைத்தாள். ஏன் என்று புரியாது நின்றவனிடம்,

"சாராயம் என்னவும் குடிச்சிருக்கீங்களா?" என்று கேட்டது, நிச்சயம் அவனுக்கு அவமானமாகத்தான் இருந்தது.

‘என் காதல் உலறலாகத் தெரிகிறதா இவளுக்கு?’ என்ற ஆயாசத்தில் விழிகளை அழுத்தமாக மூடித் திறந்தவன்,

"I’m not an alcoholic." என்க,

"பிறகு ஏன் பகல்லயே பிணாத்துறீங்க?" என்றவள்,

"ஓ!!! நீங்கள் என்னைக் காதல் செய்றீங்களா?"

'இத்தனை நேரமாக அதைத்தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.' என்ற முகபாவனை அவனிடம் வந்துசென்றது.

"எஸ்..." என்க, வானதி சிரிக்கத்தொடங்கினாள்.

பாவம் அவனின் காதலுக்காக, காதலியிடம் போராட வேண்டி வரும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டான். காதலைச் சொன்னதும் உடனே கட்டியணைத்து, முகம் முழுவதும் வெட்கத்தின் சாயலைப் பூசிக் கொண்டு, முத்தமழை பொழிவாள் என்று எண்ணியிருப்பானோ!

அவனின் அரண்ட பார்வையைப் பார்த்தால் அப்படித்தான் போலும்.

"நாம… நமக்குள்ள காதல்!! ஹா... நான் எப்பவாது உங்களைக் காதலிக்கிறேன் எண்டு சொல்லி இருக்கேனா?" என்று வெடிப்பு சிரிப்பு சிரித்தவளை உக்கிரமாகப் பார்த்தவன்,

"சொன்ன." என்று பற்களைக் கடித்தான்.

"காதலிச்சன் எண்டு தானே சொல்லியிருப்பன்."

"ஆமாம்..." என்றபோது அவனுக்குள்ள கோபம் தலைதூக்கியது.

"இதில் எங்க இருக்கு நிகழ்காலம். நான் சொன்னது இறந்த காலம். என்ர காதல குழி தோண்டி புதைச்சு அஞ்சு வருஷமாகுது. கல்லறையில் சிதஞ்சி கிடக்கும் ஒண்ட திரும்பவும் எழுப்புறது நடக்காத காரியம். என்ர காதல் எப்பயோ செத்துப் பொயிட்டு."

"நிஜமா?" என்றான் புருவங்களை உயர்த்தி.

"ம்..." என்றவள் தோள் உயர்த்த,

"அப்ப எதுக்காக எனக்கு லெட்டர்ஸ் அனுப்புன?" என்றான் அவளின் முகத்தை ஆராய்ந்தவாறு. சிறு சலனம் கூட அதில் உண்டாகவில்லை.

"நானா?" என ஆச்சர்யமாக விழி விரித்தவளிடம் கடிதங்களைக் காட்டி, அதை அனுப்பியது நீ தான் என்றவன், அவளின் விரல்பற்றி,

“எனக்குக் கேட்டது நதி. ‘எழும்புங்க மொழி எழும்புங்க…’ன்னு நீ கதறுன குரல். ஹாஸ்பிடல்ல கண்மூடிக் கிடந்தப்ப என்னோட காதுல கேட்டுக்கிட்டே இருந்தது. நீ… நீ… எனக்கு ஆக்சிடன் ஆனப்ப என்னைப் பாக்க வந்தது உண்மை தான நதி.” என்றவனின் பரிதவிப்பு அவளைப் பாதிக்காமல் இல்லை.

வீரம், கர்வம், கம்பீரம், ஆண்மையின் இலக்கணம் என்று ஓர் ஆணின் குணங்களை உவமையுடன் ஒப்பிட்டு எடுத்துக் காட்டலாம். ஆனால் எந்த உவமையுடன் சொன்னாலும், காதல் கொண்ட ஆடவனின் தவிப்புக்கு நிகராகாது.

மறுக்கப்படும் காதல் எத்தனை உறுதிகொண்ட ஆண் மகனையும் நிலைகுலையச் செய்யும். இங்கு வர்மாவையும் குலைத்திருந்தது. நீ கொண்ட காதலுக்கு உயிர் உள்ளது என்பதற்கு இவையெல்லாம் சாட்சி என்றான் வர்மா.

எப்பேர்ப்பட்ட மனிதனாக இருந்தாலும் காதலியிடம் காதலுக்காக யாசிப்பதைப் பார்க்கையில் கல் மனம் உருகாது போகுமா!

தன் மனக்கண்ணில் வேந்தனாக உருவகப்படுத்தி இதய சிம்மாசனத்தில் அரசாட்சி புரிந்து கொண்டிருப்பவன், பைத்தியக்காரன் போல் அவளின் முன் நிற்பதைக் கண்டும், வானதியின் இறுகிய இதயம் இழக மறுத்து,

"உங்கட கற்பனை சூப்பரா இருக்கு." என்றாள் அலட்சியமாக.

"என்னோட லவ் அர்த்தமில்லாத கற்பனைனு சொல்ற?" என்றபோதும் பரிதாபமாக இருந்தது வர்மாவைப் பார்க்கையில்.

"எஸ்..." என்று அவனின் முன் இருகரங்களையும் கட்டிக்கொண்டு நின்று,

"உங்களுக்கு விபத்து நடந்தது எண்டு செய்தியாக் கூட என்ர காதுக்கு வரல்ல. பிறகு எப்படி நான் குரல மட்டும் கலட்டி தர முடியும். நீங்க காட்டின லெட்டர்ஸ்… இதெல்லாம் உங்கள்ள அக்கறை வச்ச ஆரோ செய்திருப்பாங்களே தவிர காதல் இல்ல."

"எனக்குத் தெரியும் இது காதல் கடிதம் இல்லன்னு."

"பிறகு ஏன் இதை என்னிட்ட காட்டி காதல் எண்டு உளறுறீங்க?”

“இந்த அக்கறை உன்னோடதுன்னு சொல்றேன்.”

“இல்ல… என்ரது இல்ல. எனக்குள்ள உங்க மேல எந்த ஃபீலிங்கும் இல்ல.” என்க, அவன் பதில் வாதம் செய்தான். அவளின் காதலையும் தன் நேசத்தையும் உணர்ந்தும் வேகத்தில் பேசிக்கொண்டே போக, அதை நிறுத்த வேண்டி,

“ஏன் காதல் காதல் எண்டு கதைக்கீறிங்க? உங்களுக்குக் காதலிக்கணும் எண்டா உங்கட தகுதிக்கு ஏத்தா மாதிரி யாரையாது கண்டுபிடிச்சி கலியாணம் கட்டுங்க. என்னிட்ட வந்து காதல் எண்டு கண்டதையும் கற்பனை செய்து விசராட்டம் பிதற்ற வேணாம்." என்று விட்டு நடக்க,

'யாரைப் பைத்தியம் என்கிறாய்?' என்ற ஆத்திரம் மேலோங்க, அவளின் கரம் பற்றித்தடுத்தான் வர்மா.

அவனின் பிடியில் உள்ள அழுத்தம் வலியைத் தந்தது. தன் இதயத்தில் உள்ள மொத்த வலியையும் தன் பிடியின் மூலம் அவளுக்குள் கடத்திக்கொண்டிருந்தான்.

"விடுங்க... எனக்கு நோகுது..." என்றாள் கையைத் திருகியபடி. ஆனால் இம்மியும் அசைய மறுத்து அவன் நிற்க, சரியாக கதவைத்திறந்து கொண்டு ஆகாஷ் வந்தான்,

"என்ன பிரச்சினை?" என்று கேட்டவாறு.

இருவரும் நிற்கும் கோலம் கண்டவன், வேகமாக தன் நண்பனைப் பிடித்திழுத்து வானதிக்கு விடுதலை தந்தான்.

விட்டால் போதுமென்று, ஓடிச் சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள். தன் மாநிறக் கையில் சிவப்பு வண்ணப் பட்டையை மணிக்கட்டில் பூசி விட்டிருக்க, அதைத் தடவியபடி அமர்ந்திருந்தாள்.

எரிச்சல் அதிகமாக இருந்தது. கண்கள் கோடிட, அவளுக்கு ஆறுதல் சொல்ல யாரும் முன் வரவில்லை, மமதி உட்பட.

வர்மாவும், ஆகாஷும் சண்டையிட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது.

சற்று நேரத்திலெல்லாம் ஆகாஷ் வானதியிடம் வந்து, "உனக்கு எங்க சௌகரியமா இருக்கோ அங்க ஜாயின் பண்ணிக்க வானதி. உன்னோட மெயில மூவ் பண்ணிடுவான்." என்று சொல்லி மமதியின் முறைப்பை வாங்கிக்கொண்டு நின்றான்.

வர்மா, "மமதி, உங்க மேரேஜ் வரைக்கும் மிஸ்.வானதி உங்க டீம்லயே இருக்கட்டும். நீங்க லீவ் முடிஞ்சி வர்றப்ப எந்த செக்சனுக்கு வேண்ணாலும் போட்டும். யாரையும் வலுக்காட்டாயமா இருக்க வச்சா எந்தப் பலனும் இருக்காது." என்றுவிட்டு சென்றவன், மமதி மற்றும் அவளின் அணியில் உள்ளவர்கள் கோபத்தைக் கொட்டித் தீர்க்க அவகாசம் வழங்கி விட்டுச்சென்றான்.

"ம்ச்... மமதி நல்ல பிள்ள. நல்லா ஃப்ரெண்டா பழகினா. முதல் நாள் இருந்து இண்டைக்கு வர என்னைச் சுகமாத் தான் வச்சிருந்தா. அவளுக்குப் போய் நான் கரைச்சல் குடுத்திட்டன். நாளைக்கு எப்புடி அவள்ட முகத்தில் முழிப்பன்?" என்ற புலம்பலுடனேயே கோழித் தூக்கம் தூங்கிஎழுந்தாள்.

காலையில் சுரத்தையே இல்லாது பைக்கில் ஏறியமர்ந்தவளிடம், "ஆஃபிஸ்ல எதுவும் பிரச்சனையா வானு?" என்ற அக்கறையானக் கேள்வியுடன் ஏற்றிச் சென்றான் கரிகாலன்.

அவனிடம் அனைத்தையும் கூறி முடித்தாள், வர்மாவின் காதல் உட்பட அனைத்தையும்.

"ஜெய் சார் பாவம் காலாண்ணா. இந்தக் காட்டானுக்குக் கீழ இருக்க ஏலாது எண்டு நான் புலம்பினதுக்குத் தான் மெயில் போடச் சொன்னார். அதுவும் என்ர நல்லதுக்குத் தான் சொன்னார்."

"வானு, இந்த உலகத்துல யாரும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உதவியோ ஆலோசனையோ சொல்றது கிடையாது."

"காலாண்ணா அவர் நல்ல குணம். அண்டைக்கு எனக்காக பேசினது அவர் மட்டும் தான். என்ர பக்கம் அவர் தான் நின்டார். அதால அவருக்கு ப்ரமோசன் கூட கிடைக்க இல்ல. இந்தக் காட்டான் தான் நிப்பாட்டி வச்சிருக்கான்."

"லூசா வானு நீ! அவனுக்கு ப்ரமோசன் கிடைக்காததுக்கு காரணம் அவனோட அஜாக்கிரதை. நீ இல்லை. நீ பில்ல தப்பா எழுதிட்ட... ஓகே... ஹார்பருக்கு அனுப்புறதுக்கு முன்னாடி சரி பாக்க வேண்டியது யாரு? அவன் தான. அந்த இடத்திலயே உன்னோட தப்ப கண்டுபிடிச்சி, திருத்திருந்தான்னா சரக்கு ஸ்மூத்தா சிப் ஏறிறுக்கும். செய்யல. என்னைக் கேட்டா அருள் பண்ணது சரின்னு தான் சொல்வேன்.” என்ற கரிகாலனுக்கு ஜெய் வானதியின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்க்க முயன்று சீன் போடுவதாகத் தோன்றியது.

“உன்னோட அனுதாபவத்தைச் சம்பாதிச்சி உங்கூட பழகி, பேசி, உங்கிட்ட தன்னை நல்லவனா காட்டிக்க நினைக்கிற நடிகன். அன்னைக்கி உன்னைத் தவிர வேற யார் அந்த இடத்துல இருந்திருந்தாலும் முழு தப்பயும் தூக்கிப் போட்டுடு இவன் தப்பிச்சிருப்பான். சுயநலவாதி." என்று வானதியைத் தெளியவைக்க முயன்றான்.

கரிகாலன் சொன்னது சரியாக இருக்குமோ? என்ற யோசனையுடன் வந்தவளுக்கு சக ஊழியர்களின் புறக்கணிப்பு வருத்தத்தைத் தந்தது. கலகலவென இல்லையென்றலும் பார்த்தால் புன்னகைத்து இரண்டொரு வார்த்தைகள் நன்றாகப் பேசிச் செல்லும் டீம் மெட்ஸ் அனைவரும், அவளைக் கண்டதும் முகம் திரும்பிக்கொண்டனர்‌.

இதில் இந்த ஜெய் வேறு, "உன்னோட வீட்டுல எதுவும் சொன்னாங்களா வானு?" என்று தினமும் மூன்று வேளையும் கேட்டு வைத்தான்.

வர்மாவும் அவளைக் கண்டும் காணததுபோல் கடந்துசெல்ல, நாள்களைச் சோர்வுடன் நகர்த்தினாள்.

அன்றும் ஜாதகம் பொருந்தி வந்ததா? என்று அவளிடம் ஜெய் கேட்டுவைக்க, "என்ட கைல தான் தந்தீங்களா! ஆருட்டக் குடுத்தீங்களோ அவங்களுட்ட கேட்டு தெரிஞ்சு கொள்ளுங்க. எனக்குக் கரைச்சல் தராதீங்க." என்று கடிந்துகொண்டு மின்தூக்கிக்குள் செல்ல, அவளைத் தொடர்ந்த வந்த, வர்மா பொத்தானை அழுத்தினான்.

அவன் தன்னை நக்கலாகப் பார்த்து சிரிக்கிறான் என்பது அப்பட்டமாகத் தெரிய, சுவரில் சாய்ந்து நின்றுகொண்டாள் அவனைக் கவனியாதவாறு.

உதடுகளைக் குவித்து விசிலடித்தபடி அவளின் அருகில் சாய்வாக நின்றவன், "ஊடலா நதி? நாயகன் கூட!" என்றதும், அவனை நிமிர்ந்து பார்த்துமுறைத்தவள்,

"எனக்கு நாயகன் எண்டு ஒருவரும் இல்ல." என்றாள் பற்களைக் கடித்துக் ‌கொண்டு.

"இல்லயா!! ஜாதகத்தப் பத்தியெல்லாம் பேசவும் நான் உன்னோட வருங்காலம்னு நினைச்சேன். உனக்குத்தான் காலத்தப் பிரிச்சி பிரிச்சி பேசி பழக்கமிருக்கே." என்று சீண்ட, எதுவும் சொல்லாது இறங்கிச்சென்றாள்.

செல்லும் அவளின் நடையில் இருந்த சோர்வு அவனை உறுத்தியது. பளிச்சென விளக்கி வைத்த வெண்கலச் சிலையென இருப்பவளின் வாட்டம் ஏன் என்ற யோசனையுடனே தன் கேபினுக்குள் சென்றான்.

மூன்று நாட்களாக அலுவலகம் தங்காதவன், இன்று முழுவதும் வானதியின் வாட்டத்திற்குக் காரணம் அறிய வேண்டி வெளியே செல்லவில்லை.

கண்ணாடி வழியே தன் நதியையே பருகிக் கொண்டிருந்தவனுக்கு, மமதி, பேசாது முகம் திரும்புவதும், அலுவலக ஊழியர்களின் புறக்கணிப்பும் தெரியவந்தது.

வானதி கணினியின் எதையோ தட்டச்சிட்டுக் கொண்டிருக்க, திரையில் வர்மாவின் செய்தி திடீரென முளைத்தது.

வர்மா, "மமதிய சமாதானம் செஞ்சா எல்லாம் சரியாக வாய்ப்பிருக்கு."

வானதி, "சமாதானமா!! அவ என்ர முகத்தக் கூட பார்க்கிறா இல்ல!"

"நாளைக்கு அவளோட பிறந்தநாள். அவளுக்குப் பிடிச்ச எதையாது வாங்கி கிஃப்ட் பண்ணு. கோபம் போகலன்னாலும் குறைய வாய்ப்பிருக்கு.‌"

"என்ன கிஃப்ட் குடுக்க?"

"இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ண நாம ஈவ்னிங் கேட்‌ கிட்ட மீட் பண்ணலாமா?” என்று கேட்டிருக்க, நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “NO” என்று இதழசைத்து,

“மூஞ்சூறுக்கு ஆசைதான்.” என்று எழுதி அனுப்ப,

“எல்லா ஆசையும் ஒரு நாள் நிறைவேறும் நதி.” என்றுவிட்டு தோள்களைக் குளுக்கிக் கொண்டான் குறுநகையுடன்.

மறுநாள் காலையில் மமதியின் பிறந்ததாள், அலுவலகத்திலேயே கொண்டாடப்பட்டது. மமதிக்கு அவள் வியந்து போகும் ஒரு பரிசைக்கொடுத்தாள் வானதி.

Lithops அது ஒரு கல் செடி. பார்வைக்குக் கடற்கரையில் இருக்கும் கூலாங்கல் போன்று தெரியும். ஆனால் அது உயிருள்ள தாவரம். அதன் பூக்கள் மிகவும் அழகாக இருக்கும். தென்னாப்பிரிக்காவைப் பூர்வீகமாகக்கொண்ட அது கூலாங்கல் தாவரம் அல்லது உயிர்கல் என்றும் சொல்லலாம்.

மமதியின் மேஜையில் அநேக அலங்காரச் செடிகளைப் பார்த்திருக்கிறாள். தினமும் அதற்கு தண்ணீர் விட்டு கவனமாகப் பராமரிப்பதையும் பார்த்திருக்கிறாள். ஆதலால் அதுபோன்ற ஒன்றைத்தேடி அழைந்து வாங்கி நீட்ட,

"வாவ்... வானு ரொம்ப அழகா இருக்கு. தேங்க் யூ சோ மச்." என்றாள் மமதி எக்களிப்புடன்.

"சாரி மமதி. நான் என்ர பிரச்சினை முக்கியம் எண்டு நினைச்சு, உன்னப் பற்றி யோசிக்க இல்ல." என்று வருத்தம் தெரிவிக்க,

"அதெல்லாத்தையும் விடு. இன்னைக்கி ஈவ்னிங் நம்ம ஆஃபிஸ் பக்கத்துல இருக்குற கபேல சின்ன ட்ரீட். நீயும் அவசியம் வரணும்." என்று அழைப்பு விடுத்தாள்.

வீட்டிற்குத் தகவல் சொல்லிவிட்டு மமதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டாள் வானதி. விருந்து அவர்கள் அணியில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் என்பதால் தோழிகள் இருவரையும் உடன் அழைத்து வரவில்லை.

ஆகாஷ், தன் எதிர்கால மனைவிக்கு ஆசையுடன் கேக்கை வாயில் ஊட்டி விட்டு, முகத்தில் பூசி விட்டு என இருவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்க, கையில் குளிர்பானத்தை வைத்துக்கொண்டு, ஓரமாக ஃபோனை நோண்டியவாறு நின்றிருந்தான் அருள்மொழிவர்மன்.‌

அவனின் அருகில் சென்றவள், "தேங்க்ஸ்..." என்றாள்.

"என்ர மெயில், மமதியிட ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணும் எண்டு நினைக்கல்ல. இண்டைக்கு அவட கோபம் தணிஞ்சு பொயிட்டு. அதுக்குக் காரணம் நீங்க தான். சோ, தேங்க்ஸ்." என்க, அன்று கரிகாலன் கூறிய வசனத்தை வர்மாவும் கூறினான்.

"இங்க எதுவும் இலவசமா கிடைக்காது நதி."

"அப்படியா! மமதியட விடயத்தில், எனக்கு உதவி செய்யப் போய் உங்களுக்கு என்ன கிடைச்சது?"

"ம்... நிம்மதி."

"ஹாஹாங்..."

"எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. இக்கட்டான ஒரு சூழ்நிலை வந்தப்ப, ‌யாரும் கூட இல்ல…‌ ஆகாஷ தவிர்த்து. எனக்கு அவன் ரொம்ப முக்கியம். எனக்கு நிறைய இடங்கள்ல சப்போட்டா இருந்திருக்கான். வெல்விசர், நண்பன்னு அவன் என்னோட லைப்ல நிறைய முக்கியமான ரோல் ப்ளே பண்ணிருக்கான். சோ... "

"சோ..." என்றாள் புரியாது.

"நீயும் மமதியும் சண்டை போட்டுக்கிட்டா பாதிப்பு எங்க நட்புக்குத்தான்.” என்றபோது வானதியின் புருவங்கள் சுருங்கின.

“நட்பா! லைஃப் பார்ட்னரான்னு கேக்குற மாதிரியான வாய்ப்ப நாங்க கொண்டு வரக்கூடாதுன்னு நினைக்கிறோம்."

"விளங்கல." என்றாள் நூதலை வில்லென வளைத்து.

"அதாவது நானும் ஆகாஷ்ஷூம் ஃப்ரெண்ட்ஸ். ஓகேவா! எங்களுக்கு வரப் போற மனைவிகளும் நண்பர்களா இருந்தா எங்களுக்கு தானே நல்லது. சோ… நீயும்… மமதியும்…" என்று முடிக்கும் முன் வானதி சத்தமாகச் சிரித்தாள்.

"உங்கட பிதற்றலுக்கு முடிவே இல்லயா! மூண்டு நாள் போனதும் நீங்க அதை மறந்திருப்பீங்க எண்டு நினைச்சன்.” என்று சிரித்தவளின் மீது ரசனையோடு பார்வைச் செலுத்தினான்.

“காதலே உயிரோட இல்ல என்றன். நீங்க லைஃப் பார்ட்னர் வரை... ஹாஹ்ஹா..." என்றபடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.

அவளின் சிரிப்பு ரசிக்கும்படி மட்டுமல்லாது அவனுள் இருக்கும் உணர்வுகளைத் தட்டி எழுப்பும்படியும் இருந்தது. செப்பிதழ்கள் விரிக்க, பவளப் பற்கள் மின்னியதில், கன்னங்கள் தங்கமென தகித்து, கிங்கினியாய் அவளின் சிரிப்புச் சத்தத்தை செவி சேர்த்தது.

தன்னுள் உண்டான உணர்வைக் கொட்டி விடும் வேகத்தில், அவளின் இடைப்பற்றி இழுத்தான்.

இழுத்த வேகத்தில் அவனின் மார்பில் மோதி நின்றவளின் காதில், "எனக்கு zombie பிடிக்கும் நதி." என ரகசியமாகச் சொன்னவன், பிடித்திருந்த இடையின் இறுக்கத்தைக் கூட்டிட, அவனின் தீண்டலில் உறைந்துவிட்டாள் பெண்.

கந்தரத்தில் வீசிய ஆடவனின் சூடான மூச்சுக் காற்றும் அவளை மீட்டெடுக்கவில்லை. சற்றே இறங்கியிருந்த பெண்ணவளின் நாடியைப்‌ பிடித்து உயர்த்தியவன்,

"என்னைக்கா இருந்தாலும் என்னோட லைஃப் பார்ட்னர் நீ தான் நதி. கல்யாணம் கட்டாயம் நடக்கும். இந்த நதி என்னுள்ள சங்கமிக்கப் போற நாள் ரொம்ப தூரத்துல இல்ல." என்றவனின் பேச்சில் இருந்த கர்வம் சிலிர்க்கவைத்தது.

"உங்கட ஸ்டேடஸ். நான் ஆல்ரெடி கதைச்சா மாதிரி தூரம்… நிறைய தூரம்." என்று சின்னக் குரலில் சொல்ல,

"அந்தத் தூரத்த குறைச்சு, இல்லாம ஆக்க முடியும் நதி." என்க, அவள் முடியாது என்பது போல் தலையசைக்கப்‌ போக, அவளின் விழிகளை உற்று நோக்கி, தீவிமானக் குரலில்,

“எனக்கு நீ வேணும் நதி… நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றான் காதலோடு.

"கலியாணம் விளையாட்டு விஷயமில்ல."

"நானும் விளையாடுற அளவுக்கு ப்ளே பாய் இல்ல. I am serious." என்றவன் தான், உயர்த்தியிருந்த முகத்தில் வறண்டிருந்த பெண்ணவளின் அதரங்களில் தன் உதடுகளை இதமாய் ஒற்றி எடுத்து, அவளுடனான தன் முதல் முத்தத்தைப் பதிவுசெய்தான்.

ஊசி முனைக்கு வந்து நிற்கும் உணர்வுகள் யாவும் அவளுள் இறங்கிடச் சொல்லி கெஞ்சாமல் இல்லை. ஆனால் பூவிதழில் தென்றலாய் உரசிச்சென்று உணர்ச்சிகளுக்கு அணைபோட்டான்.

இது வர்மாவிற்குள் முளைக்கும் இரண்டாவது காதல். காமத்தைத் தேடாது, காதலை இறைஞ்சி அதீத கவனத்துடன் கையாட நினைத்தான். எந்த விதத்திலும் தன் ஆண்மைக்கு உயிர் கொடுத்து நிதானத்தை இழக்கக் கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தான். தன்னவளை உடல் ரீதியில் நெருங்காது, தன் உள்ளக் கிடங்கைப் புரியவைக்க முயன்றான்.

காதல், மனைவி என்பதைத் தாண்டி. நிரந்தர உறவாக, அவனின் உயிராக அவளை மாற்றிக் கொள்ளத் துடித்தான்.
 
Last edited:

Author: நிதனிபிரபு
Article Title: தேன் நாட்டு பைங்கிளி - 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.