தேன் நாட்டு பைங்கிளி - 7

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,450
113
Germany
அத்தியாயம்: 7

ஆண்டாள் கொடுத்த உணவுப் பொதியைத் தன் பைக்குள் பத்திரப்படுத்தி, மார்பிற்குக் குறுக்கே போட்டுக் கொண்டவள், கரிகாலனின் பைக்கில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் ஏறி அமர, கரிகாலன் வியப்புடன் பார்த்தான் வானதியை.

"கொஞ்சம் நாளா உன்னோடு முகத்துல ஒளி வட்டம் தெரியுதே வானு! ஏன்?" என்று வினவியபடி வண்டியை இயக்காமல் இருக்க,

"ஒளியும் இல்லை. வட்டமும் இல்லை. போவம் காலாண்ணா. நேரம் போகுது. பிறகு ரயில பிடிக்க ஏலாது." என்று முதுகில் தட்டினாள். தங்கையின் மலர்ந்த முகத்தைப்‌ பார்த்தபடியே, சாவியைத் திருகியவன்,

"ஆஃபீஸ் போக இவ்ளோ ஆர்வமா இருப்பன்னு நான் நினைக்கவே இல்ல வானு. அதுவும் சில நாளா நீ ரொம்ப குஷியா கிளம்பிப் போற." என்றவன் தன்னிடம் பேசவே இல்லை என்பதுபோல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வந்தாள்.

அவனுக்கு எதுவோ பரிவதுபோல் இருந்தது. ஆதலால் எதுவும் கேட்காது அவளை நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றான்.

அலுவலக நேரம் என்பதால் சற்றுக் கூட்டமாகவே இருக்க, ரயிலில் தனக்கென ஒரு இடத்தைத் தேடிப் பிடித்து அமர்ந்துகொண்டவள், தன் பையைத் தூளாவி ஓர் அட்டையை எடுத்துப்பார்த்தாள். விரல்கள் தன்னையறியாது அட்டையை வருடி ரசித்தன.

உள்ளம் தேன் பாகாய் இனித்துப்போக, இதழ்கள் மென்னகையில் விரிந்தன. ரகசிய சிரிப்பு போலும். அந்தச் சிரிப்பை யாருக்கும் காட்டாது தன் புறங்கைக்குள் மறைத்து வைத்தாள். ஆனாலும் இமை ஓரங்கள் சுருங்கி அவளின் பரவச நிலையைக் காட்டிக்கொடுத்தன.

சந்தோஷமாக உள்ளாள் என்பதைக் கண்டவர் சொல்லும் வண்ணம் அவள் இருக்க, இங்கு ஒருவன் கோபமாக உள்ளான் என்று கண்டவர் சொல்வர்.

அப்படியே வானதிக்கு நேர் எதிராக, அடக்கப் பட்டக் கோபத்துடன் தன் வாலெட்டைத் துளாவிக் கொண்டிருந்தான் வர்மா.

"மச்சான் இருக்கா? இல்லயா?"

"..."

"எதையாது சொல்லு டா? ரோட்டோரமா நின்னு வித்த காட்டீட்டு இருக்க." என ஆகாஷ் கத்த, உச்சுக்கொட்டினான் வர்மா.

"பத்து மணிக்கு மீட்டிங் இருக்கு டா. லேட்டா போன அந்த ‘டபேரா’ தலையன் வாசிக்க ஆரம்பிச்சிடுவான்."

"கொஞ்ச நேரம் சும்மா இருடா. நானே காணும்னு டென்ஷனா இருக்கேன்." என்றான் வண்டியின் handlebar pouch-சில் தேடியவாறே.

"காணுமா? டேய்... டேய்... என்னடா சொல்ற... இப்பெல்லாம் லைசன்ஸ் இல்லாம ஓட்டுனா பத்தாயிரம் பைன் டா. அதுவும் ஆன் ஸ்பாட்ல போடுவான். நான் கொஞ்சம் அதிகமாவே பேசிட்டேன். இப்ப அவன்ட்ட போய் லைசன்ஸ் இல்லன்னு சொன்னா பைன் போட மாட்டான், drunk and drive-ல தூக்கி உள்ள வைச்சிவான்." என்க, அவனைக் கண்டு கொள்ளாது தன் தேடுதலைத்தொடர்ந்தான்.

"இன்னைக்கி யாரு முகத்துல முழிச்சேனே தெரியலயே. எல்லாமே தப்பு தப்பா நடக்குது." எனப் புலம்பியபடியே நின்றான் ஆகாஷ்.

அவனின் புலம்பலுக்குச் சரியான காரணங்கள் உள்ளன. காலையில் இருந்து நடந்துகொண்டிருக்கும் அனைத்தும் அவர்களுக்கு விரோதமாவே அமையும் பொழுது புலம்பல்கள் இல்லை என்றால் எப்படி?

எப்பொழுதும் மகனுக்காக காலை உணவுக் கொடுத்துவிடுவார் வெண்மதி. இன்று அவரின் உடல் நலன் காரணமாக கொடுத்தனுப்பவில்லை. காலை உணவைக் கடையில் உண்ணச்சென்றனர் இருவரும். அது அலுவலகம் புறப்படும் வழக்கமான நேரத்தைத் தாமதமாகிக்கியது.

விரட்டிப் பிடித்து நேரத்திற்குச் சென்று விடலாம் என்று வண்டியில் பறந்துசென்றனர். தலைக்கவசம் அணியாது பயணித்த அவர்களின் வேகம் பார்த்த போக்குவரத்து அதிகாரி, கை நீட்டி, ஓரம் கட்டுமாறு சைகை செய்தார். ‘இருக்கும் டென்சனில் இது வேறா!’ என்று அவன் நேராகச் செல்லப்பார்க்க, லத்தியைச் சுழற்றியபடி பாதையை மறித்து நின்றார்.

வழக்கமாக கேட்பது கேட்கப்பட்டது. அதான் குடித்து விட்டு வண்டி ஓட்டுகிறாயா? தலை கவசம் ஏன் அணியவில்லை? ஒட்டுநர் உரிமம் எங்கே? என்று.

"சார், எங்களப் பாத்தா குடிகாரன் மாதிரியாத் தெரியுது?" என்று ஆகாஷ் கோபமாக எகிற,

"முதல்ல லைசன்ஸ் காட்டு. அப்றம் பாத்து சொல்றேன்." என உரிமத்தைக் கேட்டார்.

வர்மா தன் பர்சில் அதைத் தேடிக்கொண்டிருந்தான்.

"ஊருக்குள்ள கொல்ல பையளுக லைசன்ஸ் இல்லாமத் தான் ஓட்டுறானுங்க. அதுவும் 18 வயசுக்குக் கீழ இருக்கச் சின்ன பொடுசுங்க. அவனுங்களையெல்லாம் விட்டுடுங்க, ஆஃபிஸ் போற எங்கள மாதிரி டிசன்ட்டான பசங்கள, சிக்னலுக்கு சிக்னல் நிக்க வச்சி‍, அது இருக்கு! இது இருக்கா!ன்னு கேட்டு பர்ஸ்ச சுரண்ட வேண்டியது. மாசக் கடைசி ஆகிட்டா இவனுங்க கல்லாவ நிரப்ப, முக்குக்கு முக்கு நின்னு காசு பாக்குறதெல்லாம் ஒரு பிழைப்பு." என்று இதழ்களுக்குள் முணுமுணுக்க அது எதிரில் விறைப்புடன் நின்றிருந்த காவலருக்குக் கேட்டிருக்க வேண்டும்.

"எல்லாம் ஒழுங்கா இருந்தா எங்க கிட்ட காட்டிட்டு கிளம்பிட்டே இருக்க வேண்டியது தான். ஏன் பேசி நேரத்த விரையம் பண்ற. லைசன்ஸ் எங்க? இல்லன்னா பைனக் கட்டு." என்று கத்திய காவலரும் கோபமாகிவிட்டார் போலும்.

ஏற்கனவே அவர்களின் க்ரைம் ரேட் ஏறிக்கொண்டே இருக்க, இதில் உரிமம் இல்லை என்று சொன்னால் என்னாக்கும்?

"மச்சான் digilocker மாதிரி எதுலயாது உன்னோட லைசன்ஸ்ஸ ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருந்தா அதைக்காட்டு மச்சான்... தப்பிச்சி போய்டாலம்."

"காட்டலாம் தான். ஆனா நான் எந்த லாக்கர்லயும் என்னோட டாக்குமெண்ட்ஸ்ஸ ரிஜிஸ்டர் பண்ணி வைக்கல." என்றவனின் மீது பாயச்சென்றான் ஆகாஷ்.

"என்னங்க தம்பிங்களா! லைசன்ஸ் இருக்கா இல்லையா?" என்றார் காவலர்.

"இருக்கு சார்... ஆனா அது வீட்டுல இருக்கு. நம்மலன்னா எங்க கூட வீட்டுக்கு வாங்க. எடுத்துக்காட்டுறோம்." என்று காமெடி செய்தவனை மட்டுமல்ல வர்மாவையும், வகை தொகைப்பார்க்காது நான்கு காவலர்கள் கூடி நின்று திட்டுயும், அறிவுரைகள் வழங்கியும், சில நிமிடங்கள் போக்குரத்து சேவை செய்யவைத்தும், அனுப்பிவைத்தனர். கூடவே உரிமம் இல்லாது வாகனம் ஓட்டியதற்கு அபராதம் வாங்கிக்கொண்டு, ரசீதை நீட்டினர்.

ஆகாஷ் அதை ஏதோ அவார்டு வாங்கியது போல் பெருமிதத்துடன் வாங்கிக் கொண்டு பைக்கில் ஏறி அமர்ந்தான். பாவம் நம் வர்மாவிற்குத் தான் முசுமுசுவென ஏறியது. அவனால் ஏற்கவே முடியவில்லை,‌ நடு ரோட்டில் அத்தனை பேர் பார்க்க, காவலர் திட்டியதையும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியதையும்.

அவமானமாக உணர்ந்தான். உடனே காவல் நிலையத்திற்குச் சென்றவன் தன் ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டதாகப் புகார்செய்து, நகல் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்து விட்டுத்தான் அலுவலகமே சென்றான்.

வர்மா அப்படித்தான். மிஸ்டர் பர்பெக்ட் என்று சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும் யாரும் தன்னைக் குற்றமாக ஒரு சொல் கூறுவதையும் ஏற்காதவன்.

ஏற்றிருந்தால் தந்தையுடன் சண்டையிட்டிருக்க மாட்டான். அவனின் காதலியும் முன்னாள் காதலியாகியிருக்க மாட்டாள். என் செய்வது?

அருள்மொழிவர்மன், எப்பொழுதும் நேரம் தவறாது இருக்கையில் இருப்பான். இன்று உச்சுப் பொழுதாகியும் கண்ணில் படவில்லை. விசாரித்தப் பின் தான் தெரிந்தது அவன் அலுவலகமே வரவில்லை என்று.

புயலோ, மழையோ, வெயிலோ, குளிரோ எது வந்தாலும் வரவில்லை என்றாலும் வர்மா அலுவலகத்தில் டான் என்று ஆஜராகி விட்டுவான்.

அவன் பணிக்குச் சேர்ந்த இத்தனை ஆண்டுகளில் இது தான் அவனின் முதல் விடுப்பு என்று பேசிக்கொள்ள, வானதிக்குச் சந்தோஷம் தாள முடியவில்லை.

மறுநாள் சித்ராவுடன் பேசிபடியே முதல் தளத்தில் நின்றவள், வர்மா வேக நடையுடன் லிஃப்ட்டிற்குள் நுழைவதைக் கண்டாள். அவனின் நிதான நடை பிரண்டிருப்பதை அறிந்தவள், அதை அருகில் சென்று ரசிக்க வேண்டி,

"பிறகு பாப்பம். பை." என்று சித்ராவிற்குக் கை அசைத்துவிட்டு, மிருதுளாவை இழுத்துக்கொண்டு,‌ அதற்குள் நுழைந்தாள்.

இருகரத்தையும் கட்டிக்கொண்டு‍, புருவ சுழிப்புடன், சுவரில் சாய்ந்து நின்ற வர்மாவையே வைத்த கண் வாங்காது பார்த்தபடி இருந்தாள் வானதி.

'நீ சைட் அடிக்க என்னை ஏன் பக்கி தரதரன்னு இழுத்திட்டு வந்த?' என்று பற்களைக் கடித்தபடி மிருதுளா‌ நின்றாள்.

அது தினமும் நடப்பது தான். அவன் அவளின் பார்வை வட்டத்திற்குள் நுழைந்து விட்டால், நிழலாய் அவன் பின்னே செல்லும் அவளின் பார்வை.

அதை அவன் உணர்ந்து திரும்பிப்பார்க்கவில்லை என்றாலும், ஆகாஷ் திரும்பிப்பார்ப்பான். வானதி அவனுக்குக் காலை வணக்கம் வைத்து புன்னகைப்பாள்.

அவனும், "இந்த வர்ஷம் நடக்கப்போற ப்ரோ கபடி லீக்ல, எந்த டீம்க்காக கரிகாலன் விளையாடப் போறான்?" என்று கேட்டுவிட்டுச் செல்வான்.

ஆகாஷும் வர்மாவும் ஒரே கல்லூரி. பல ஆண்டுகளாக நண்பர்கள். ஆனால் கரிகாலன் வேறு கல்லூரி. ஆதலால் கரிகாலன் இவர்களின் நண்பன் கிடையாது. எதிரி என்று சொல்லலாம். ஏனெனில் கல்லூரிகளுக்கிடையே நடக்கும் கபடி போட்டியில் எப்பொழுதுமே வர்மாவும் கரிகாலனும் எதிர் எதிராகத்தான் விளையாடுவர். அந்த விளையாட்டு மூக்கை உடைத்து ரத்தம் சொட்டும் அளவிற்கு பயங்கரமாக இருக்கும். கரிகாலன் அட்டாக் செய்து புள்ளிகளை எடுப்பதில் வல்லவன். நம் வர்மா அதைத் தடுக்கும் டிபன்ஸ். முட்டிக் கொள்ளவில்லை என்றால் தான் ஆச்சர்யம்.

வர்மா சிறப்பாக விளையாடிய போதும் ஆகாஷ், கரிகாலனின் விசிறி. இப்பொழுதும் அவனின் ஆட்டத்தை ரசித்துப்பார்ப்பான். சென்றமுறை தேசிய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் கரிகாலன் பங்கேற்றிருந்தான். இந்தாண்டு எந்த அணிக்காக அவன் விளையாடப் போகிறான் என்பதை தினமும் கேள்வியாக வானதியின் முன் வைப்பான்.

இன்றும் வைத்தான்.

"அண்ணாட பேர டீம்ல சேத்திருக்காங்க. தமிழ் தலைவாஸ்ல இல்லை. ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ்." என்றாள்.

"அந்த டீமா!! சூப்பர் டீமாச்சே!. சீசன் 1, சீசன் 9 வின்னர் அவங்கதான். செம்ம டீம். அது யாரோடதுன்னு தெரியுமா? ஐஸ்வர்யா ராய் ஹஸ்பெண்ட் அபிசேக் பச்சனோடது. கப் வின் பண்ணா! ஐஸ்வர்யா ராய் வீட்டுல அவங்க கையாலயே விருந்து சாப்பிடலாம்." என்று சந்தோஷமாகச் சொல்லிய ஆகாஷைத் திரும்பிப்பார்த்து‌ முறைத்துவிட்டு அருள்மொழி இறங்கிச் செல்ல,‌ பின்னாலேயே செல்ல இருந்த ஆகாஷைப் பிடித்தவள்,

"எங்க வால் மாதிரி பின்னாலயே போறிங்க. இண்டைக்கு உங்கட நண்பன்ர முகத்தில் ஜீவனக் காணோம். நேற்றும் ஓபிஸ்ல ஆளக் காணல்ல. என்னவும் பிரச்சனையா?" என்று நடந்ததை அறியும் ஆவலில், அக்கறையுடன் வினவ,

"அதை ஏம்மா கேக்குற?" என ஆரம்பித்தவன், நேற்று நடந்த கதையைச் சொல்ல, வானதி தன் பையில் இருந்த அட்டையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.

"திரும்ப அப்ளே பண்ணிருக்கான். லேட்டானாலும் வாங்கிக்கலாம். அதுவரை டிராபிக் போலிஸ்காரனுகள சமாளிக்கணும். அதுக்குப்போய் மூஞ்சிய தொங்கப்போட்டுட்டு இருக்கான். எவனும் இவன கேள்வியே கேட்டிடக் கூடாது. உடனே மரம் ஏறிடுவான்.”

“குரங்காட்டம்." என வானதி எடுத்துக்கொடுக்க,

“அப்படித்தான்…” என்று தன் தலையில் அடித்துக்கொண்டவன்,

“நான் போய் தரை இறக்கி விடுறேன்.” என்று வர்மாவின் கேபினை நோக்கிச்சென்றான். அங்கு குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தவனைச் சமாதானம் செய்கிறான் என்பது நிறமில்லாத கண்ணாடி சுவரின் காரணமாகத் தெளிவாகத்தெரிந்தது.

மெல்லிய புன்னகையுடன் தன் இருக்கையை அடைந்தவள், தன் பையில் இருந்து வர்மாவின் லைசன்ஸை எடுத்தாள். நிமிர்ந்து அவனின் கேபினைப் பார்த்து, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

வரிசையாகச் செல்லும் சிட்டெறுப்பின் வழித்தடத்தில் தடைக்கல்லாய் இலையை போட்டால், அது வழித்தடம் காணாதுபோன படபடப்பில் இங்கும் அங்கும் சற்று நேரம் அழைந்து திரிந்து பின் வரிசைக்கு வந்துசேரும்.

சிறுவயதில் அப்படி ஒரு விபரீத விளையாட்டை எறும்புடன் விளையாடிப் பார்த்தவள், இப்பொழுது வர்மாவுடன் விளையாடுகிறாள்.

அவனின் புகைப்படத்திற்கு ஸ்கெட்ச் கொண்டு அலங்காரம் செய்யத்தொடங்கினாள்.

ஒற்றை மீசைக்குப் பக்கத்தில், பூனைக்கு இருப்பதுபோல் கூடுதலாக இரண்டு கோடுகளை வரைந்து வைத்தவள், அவனின் மூக்கின் நுனிக்கு கலர் கொடுத்து வைத்தாள். புருவங்களை உயர்த்தி அடர்த்தியாக்கியவள்,

"இப்பத் தான் பாக்க பக்கா மூஞ்சூறு காட்டன்னாட்டம் வடிவா இருக்கான். அழகுப் பெடியன்." என்று அட்டையுடன் பேசிப் பத்திரப்படுத்தி மறைத்து வைத்துவிட்டு வேலையைக் கவனித்தாள்.

அவனை டென்சனாக்கி விட்டு இவள் கூலா இருக்கிறாள். எப்படி இவளுக்கு அவனின் உரிம அட்டைக் கிடைத்திருக்கும்.

அந்த ஞாயிறு, செந்தூரத்தின் மகளின் நிச்சயதார்த்தம். அங்குதான் கிடைத்தது அருள்மொழியின் வாலெட்.

சுத்தமாக வானதிக்கு விரும்பமே இல்லை அங்கு செல்ல. அதுவும் சுஜித்ராவின் முகத்தில் முழிப்பது பெரும் பாவம் என்று தயாராகாது அறைக்குள் முடங்கிக் கிடக்க,

"வானும்மா... பச்சையா? இல்ல இந்த ஊதா கலர ஐயன் பண்ணி வைக்கவா?" என்று இரு வேறு நிறத்தில் உடைகளை எடுத்துக்கொண்டு வந்தார் ஆண்டாள்.

"நான் ஒண்டும் கட்ட இல்லை. என்னை விட்டுப் போட்டு நீங்க வெளிக்கிடுங்க." என்றாள்.

"எது வரலயா! செந்தூர் தம்பிட்ட இருந்து கிளம்பிட்டீங்களான்னு கேட்டு பத்து தடவ கால் வந்திடுச்சி. அவருக்காகவாது கிளம்பும்மா." என்க, அவள் அரக்கியாய் அமர்ந்திருந்தாள்.

"கரிகாலா!! இவ என்ன சொல்றான்னு வந்து கேளேன்." என்று மகனிடம் கோர்த்துவிட்டார் ஆண்டாள்.

"நான் அங்க வந்தா பெரிய பிரச்சனைகள் வரும் காலாண்ணா. நானும் திரும்பி குடுக்காம திரும்ப மாட்டன்." என்றவளின் தலையில் தட்டி,

"உன்னை யாரு திருப்பி தர வேண்டாம்னு சொன்னா. நீ குழாயடி சண்டை போட்டாலும் விளக்கி விடாம வேடிக்க பாக்க நான் ரெடி தான். கிளம்பு. நான் உஃபருக்கு சொல்லிட்டேன். எட்டு நிமிஷத்துல டாக்ஸி வந்திடும். விழா முடியுற வரை உன் பெரியம்மாக்கு பாடி கார்ட்டா இரு." என்க, வானதி உற்சாகமாகவே கிளம்பினாள்.

சகாயத்தைக் கடையில் பிக்கப் செய்து கொண்டு ஐவரும் புறப்பட்டுச்சென்றனர்.

வானதியின் அன்னை உமையாளின் நிராகரிக்கப்பால் சிவதாண்டவத்தின் மனைவி நாகேஸ்வரியின் தங்கை ராஜேஸ்வரியைச் செந்தூரத்திற்குக் குறித்த முகூர்த்தத்திலேயே மணமுடித்து வைத்தனர். அக்கா, தங்கை என இருவரும் ஒரகத்திகளாக ஒரே வீட்டில் இருக்க, ஆண்டாள் மட்டும் வேற்று ஆளாகி விலக்கி வைக்கப்பட்டார். சிவதாண்டவம், உடன் பிறந்தவன் என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்ற உண்மையைச் சகாயத்திற்குக் உணர்த்திவிட்டார். அந்தக் கதை தான் நமக்குத் தெரியுமே.

இப்பொழுது ஈஸ்வரி சகோதரிக்கள் வரவேற்பில் நின்றாலும், செந்தூரம் மட்டுமே இன்முகத்துடன் வரவேற்றார்.
 
Last edited:

Author: நிதனிபிரபு
Article Title: தேன் நாட்டு பைங்கிளி - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.