அத்தியாயம் 17
அவன் கையில் இருந்த ஃபோனை வேகமாக பிடிங்கி பார்த்தாள் அனன்யா. அவன் ஃபோனில் தெரிந்தது அவளின் நம்பரே தான்.
ஒருபக்கம் நிஜமாக கோபம் இருந்தாலும், அவள் விரும்பினவரை தான் அம்மா மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்து இருக்காங்கன்னு மகிழ்ச்சியும் தோன்றியது.
ஆனாலும் அஸ்வின் எதையும் அவளிடம் சொல்லாமல் மறைத்தது அவளுக்குள் கோபத்தை ஏற்படுத்தியது.
எனவே அனன்யா கோபமாக வெளியே செல்ல போக. வேகமாக அவளின் கைகளை பிடித்துக் கொண்ட அஸ்வின்,
“அனன்யா… ப்ளீஸ் உட்காரு. உன் கோபம் நியாயமானது தான். ஆனா, நான் பேசினா தான் உனக்கு என் பக்கம்
இருக்கும் நியாயம் புரியும்.” என்றான் பாவமாக.
அவள் அமைதியாக, அவன் எதிரில் உட்கார்ந்தாள். அஸ்வின் இரண்டு காஃபியை ஆர்டர் செய்ய.
“எனக்கு வேண்டாம்”என்றாள் அனன்யா.
“பசியோடு இருந்தா உன்னோட கோபம் இன்னும் அதிகமாகும். எப்படியும் எதுவும் சாப்பிடாமல் ஓடி வந்திருப்ப.” என்றான்.
அதன்பின் அவள் அமைதியாக காஃபியை குடித்தாள்.
அவள் குடித்து முடித்த பின் அஸ்வின், “ஏ. ஹச் ஃபேஷன் ஹவுஸ் என்னோட பிராண்ட் தான்.”
அனன்யா அவனை முறைக்க.
“இங்க பாரு அனன்யா, அன்னைக்கு நான் உண்மையை தான் சொன்னேன். நீ என் கிட்ட என்ன கேட்ட? ஏ. ஹச் ஃபேஷன் ஹவுஸ்ல வேலை பார்க்கிறேன்னு தானே கேட்ட. நான் அங்க வேலை செய்யலை. நான் தான் அந்த பிராண்டோட ஓனர்.” என்றான்.
அவள் கொஞ்சம் அமைதியாக, மீண்டும் அஸ்வினே தொடர்ந்தான், “இரண்டு வருஷம் முன்னாடி நான் உன்னை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தது சோசியல் மீடியாவில் தான். அதுவும் நீ ஆரம்பித்த புதிதில், உங்க அம்மாவோடு நிறைய டிரஸ் டிசைன் பற்றி வீடியோ போடுவ. அதில்தான் நான் ஃபர்ஸ்ட் இம்ப்ரஸ் ஆனேன்.
உன் வீடியோ பார்த்தப்பவே, நான் கண்டுபிடிச்சுட்டேன் நீ ப்ரொபஷனல் பேஷன் டிசைனர் இல்லை. ஆனா, உன்னோடு டிசைன் எல்லாம் ரொம்ப யுனிக்கா இருந்தது. உங்க அம்மாவோட ஸ்டிச்சிங்கும் எனக்கு பிடித்திருந்தது. அதுக்காக உங்களை தேடி வரணும்னு நான் நினைக்கலை. காரணம் சோசியல் மீடியா மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை.
என்னோட கிளோஸ் பிரண்ட் தான் கவின். அவனை பார்க்க தான் அன்னைக்கு ஒரு நாள் அவன் வீட்டிற்கு போனேன். அப்போ தான் நான் உன்னையும், அரசி ஆன்ட்டியையும் பார்த்தேன்.
கவின் மூலமா தான், நீங்க ரொம்ப வருஷமா அந்த அப்பார்ட்மெண்டில் இருப்பதாகவும். அரசி ஆன்ட்டி சிங்கிள் பேரன்ட்டா உன்னை வளர்த்தாங்கன்னு தெரிந்தது.
அவங்களை சந்தித்தேன், என்னோடு சேர்ந்து வேலை செய்ய கூப்பிட்டேன். அவங்க முதல்ல தயங்கினாங்க. நான் உங்க வீடியோஸ் பார்த்திருக்கேன், அந்த டிசைன் ஐடியா ரொம்ப நல்லா இருக்கு அதான் கேட்டன்னு சொன்னதும்.
உன்னோட வேலைக்கு அங்கீகாரம் கிடைச்சதாலே சரின்னு சொன்னாங்க. உன்னையும் சேர்த்து தான் வேலைக்கு கூப்பிட்டேன். நீ தான் ஆன்ட்டி கிட்ட பிராண்டே பிடிக்காது, பிராண்ட் கம்பெனியில் வேலை செய்ய மாட்டேன்னு சொல்லிட்ட.
ஏ.ஹச் மென்ஸ் ஷோரூம் கொஞ்சம் பிரபலமா இருந்தது. ஏ.ஹச் லேடீஸ் ஷோரூம் ஆரம்பித்த புதிது. ஆன்ட்டி, அப்புறம் கொஞ்சம் பேரோட ஐடியாவை வைத்து தான் லேடீஸ் டிரஸ் டிசைன்ஸ் ஆரம்பித்தேன்.
ஒரு வருஷம் அப்படியே போனது. அப்ப அப்ப ஆன்ட்டி உன்னை பத்தி நிறைய சொல்லுவாங்க நீ பிறந்தநாள் கொண்டாட மாட்டேன்னு, உனக்கு பிடிச்ச ஸ்னாக்ஸ்.உனக்கு பிடிச்சது, பிடிக்காதது எல்லாத் பத்தியும் சொல்லுவாங்க. நீதான அவங்க உலகம்.உன்ன சுத்தி தான் வாழ்ந்தாங்க,வாழ்றாங்க.
அவங்க தனியா உன்னை வளர்த்ததாலும், அவங்க கடந்த காலத்தை நினைச்சு உன்னோட கேரக்டர், பிகேவியர் ரொம்ப பாதிப்பதாகவும் சொல்லுவாங்க.
அப்படி இருக்க ஒரு நாள் அவங்க என்கிட்ட வந்து,
“தம்பி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றார் கவியரசி.
“என்ன ஆன்ட்டி?”என்றான் அஸ்வின்.
“கொஞ்சம் பர்சனல் விஷயம்.”
“ஓகே சொல்லுங்க ஆன்ட்டி.”
“நான் ஒன்றரை வருஷமா, உங்களோடு வேலை செய்றேன். எனக்கு உங்களை நல்லா தெரியும். நீங்க ரொம்ப நல்ல பையன், நேர்மையானவர்.
நீங்க பணக்காரர் நாங்க ஏழை உங்களுக்கும் எங்களுக்கும் ஒத்து போகாதுனு எவ்வளவோ என் மனசை சமாதானம் செய்தாலும். என் மனசு கேட்க மாட்டேங்குது. நீங்க என் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” என்றுக் கேட்டார்.
“ஆன்ட்டி உணமையை சொல்லணும்னா. வீடியோல பர்த்தப்பவே எனக்கு உங்க பொண்ணு மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது.”
“அதான் ஃபேஷன் டிசைனிங் பிடிக்காத என்னை இவ்வளவு பெரிய பதவியில் வேலை தர காரணமா?”
“கண்டிப்பா இல்லை ஆன்ட்டி. உங்க பொண்ணோட டிரஸ் டிசைனும், உங்க வேலையும் பிடிச்சு போய் தான் வேலையே தந்தேன். உங்களுக்கே தெரியும் வேலை விஷயத்தில் நான் ரொம்ப கண்டிப்பா இருப்பேன்னு. அப்படி இருக்கும் போது ஒரு பெண் மேல் வந்த ஈர்ப்புக்காக அவங்க அம்மாவுக்கு வேலை தருவேனா?”
சிரித்துக் கொண்டே, “இல்லை.” என்றார்.
“உங்க பெண் மேல் வந்த ஈர்ப்பு காதலா மாற நீங்க தான் காரணம்.”
“நான் என்ன தம்பி செய்தேன்?”
“உங்க பெண்ணை பற்றி என்கிட்ட பேசுவீங்களே. அப்படியே அவங்க என் மனசில் வந்துட்டாங்க. ஸ்டேட்டஸ் பற்றி நீங்க கவலைபட தேவையே இல்ல ஆன்ட்டி. உங்க பொண்ணோட டிரஸ் டிசைனை மார்ககேட்டில் இறக்கினா போதும் நீங்க பெரிய பணக்காரர் ஆகிடுவீங்க.”
“அதுக்கும் நீங்க தான் காரணமா இருப்பீங்க.” என்றார் கவியரசி.
“திறமை உங்க பொண்ணு கிட்ட இருக்கே.”
“சரி தம்பி.”
“உங்க பொண்ணு கிட்ட பேசிட்டு சொல்லுங்க. நாங்க பெண் பார்க்க வரோம்.”
“உங்க அம்மா, அப்பாவுக்கு சம்மதமா தம்பி.”
“அவங்களுக்கு அனன்யாவை ரொம்ப பிடிக்கும் ஆன்ட்டி .”
“சந்தோஷம் தம்பி.”
அப்புறம் பத்து நாள் கழித்து அவங்க,
“தம்பி… என்னை மன்னிச்சிடுங்க, என் பெண் வேற பையனை காதலிக்கிறாளாம்.” என்றார்.
“இட்ஸ ஓகே ஆன்ட்டி. இதுக்கு போய் ஏன் மன்னிப்பு கேட்கிறீங்க. உங்களுக்கு மாப்பிள்ளையா இல்லைனா என்ன மகனா நான் இருக்கேன். நீங்க ரொம்ப தைரியமான பெண். எப்பவுமே நீங்க எனக்கு ரோல் மாடல் தான்.” என்றான்.
“உன்னை கல்யாணம் செய்துக்க போற பொண்ணும் ரொம்ப லக்கி.” என்றார்.
அப்புறம் ஒரு மாசத்திலே அவங்க இறந்துட்டாங்க. என்னால் நம்பவே முடியலை. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?”
“என்ன?” என்றாள் அனன்யா கண்ணீரோடு.
“ஆன்ட்டி இறுதி காரியம் எல்லாம் செய்தது நான் தான்.”
அவள் அவனை அதிர்ச்சியாக பார்க்க.
“உனக்கு அன்னைக்கு என்னென்ன சந்திச்ச நினைவே இல்லைல. உன் கண் முன்னாடி தான் நான் இருந்தேன். உன் மனசில நான் பதியவே இல்லை. நீயும் ஆன்ட்டியை தான் பார்த்துட்டே இருந்த.
மனசுக்கு கஷ்டமா இருந்தது. உன் கிட்ட என்ன பேசுறதுன்னு தெரியல. அதான் நானும் அமைதியா இருந்தேன். உன்னோட லவ்வர் உன்னை பார்த்துப்பான் இருந்துட்டேன்.”
“உனக்கு கடவுள், ஆத்மா இதில் எல்லாம் நம்பிக்கை இருக்கான்னு தெரியலை. ஆனா எனக்கு நம்பிக்கை உண்டு.
சரியா மூன்று நாட்கள் கழித்து, நான் தூங்கிட்டு இருந்தேன் அப்போ கனவில், ‘உன்னை நம்பி தானே என் பெண்ணை விட்டு வந்தேன். நீ ஏன்
அவளை கவனிக்கலை' என்று ஆன்ட்டி கனவில் வந்து சொன்னாங்க.
நான் பயந்து தூக்கத்திலிருந்து எழுந்தேன். அப்போ டைம் நைட் ஒரு மணி, ஏதோ சரியில்லைனு மனசு அடிச்சுக்கிச்சி. நான் கவின்க்கு கால் செய்தேன்.
ஆனா அவன் நைட் டைம்ல ஒரு பெண் தனியா இருக்க வீட்டிற்கு போகமாட்டேன்னு சொல்லிட்டான்.
நான் வேகமா காரில் வந்தேன். எனக்கு அப்போவே உன்னை பார்த்தாகணும்னு எண்ணம். வேற எதை பற்றியும் யோசிக்காம, உன் வீட்டு கதவை உடைத்து உள்ளே வந்தோம்.
ரத்தம் கையிலிருந்து ஊத்திக்கிட்டிருந்தது. அதுவரைக்கும் என்னை திட்டிட்டு இருந்த கவின் பயந்துட்டான். நானும் அவனும் சேர்ந்து உன்னை தூக்கி காரில் போட்டு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம்.
அந்த அரைமணி நேரம் தான் இப்போ நீ என் முன்னாடி உட்கார்ந்து இருக்க காரணம். ஏன்னா அன்னைக்கு அரை மணி நேரம் கழித்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருந்தா கூட உன் உயிரை காப்பாற்றி இருக்க முடியாது டாக்டர்ஸ் சொன்னாங்க.
எனக்கு உன்மேல் கோபம் அதான் உனக்கு நினைவு திரும்பினதும் உன்னை பார்க்க வரலை.
கவின் மூலம் விஷயம் தெரிந்ததும், இன்னும் கோபம் அதிகமானது.
உங்க அம்மாவை பத்தி ஒரு நிமிஷம் கூட நீ யோசிக்கலை. உங்க அம்மாவை விட வேற யாரும் லைப்ல அதிகம் கஷ்டப்பட்டுருக்கமாட்டாங்க. அவங்க பொண்ணா இருந்துக்கிட்டு, அவங்க வளர்ப்பு நீ இப்படி ஒரு முடிவு எடுத்தது எனக்கு கோபம்தான்.
உங்க அம்மா நினைத்திருந்த உங்க அப்பா விட்டு போனதுக்கு அப்புறம் உன்ன அபார்ட் பண்ணியிருக்கலாம், இல்லைனா நீ பிறந்ததும் உன்னை எங்காவது விட்டுட்டு , அவங்க வேறு வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.
ஆனா, அவங்க உனக்காக வாழ்ந்தாங்க. அவங்க ஒரு நாள் கூட தற்கொலை செய்ய நினைக்கலை. ஆனா நீ தற்கொலையே செய்திருக்க.
அப்புறம் கவின் மூலமா உன்னை கொஞ்சம் கொஞ்சமா சரி செய்தேன். அவனும் அந்த நிகழ்வுக்கு அப்புறம் உன் மேல் அக்கறையா இருக்க ஆரம்பித்தான்.
நீயே எடுத்தது தான் இந்த சோலோ ட்ரிப் முடிவு. அதை நினைத்து நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
நானே எதிர்பார்க்காதது நீ என்னை பார்க்க வந்தது தான். அன்னைக்கு எனக்கு சந்தோஷமா தான் இருந்தது. ஆனா, நீ உங்க அம்மா கடைசி ஆசைக்கா என்னை கல்யாணம் செய்துக்கிறதில எனக்கு விருப்பம் இல்லை. அதான் அன்னைக்கு உன்னை நான் பார்க்கலை.
உன் கூட சேர்ந்து இருக்க வாய்ப்பை தேடிட்டு இருந்தப்ப தான், உன் ட்ரிப் ஆர்கனைஸ் பிளான் பத்தி தெரிந்தது. அதான் நானும் உன்னோட ட்ரிப்க்கு வந்தேன்.
நேற்று உன் காதலனா இருந்தேன், இன்று உன் அம்மா பார்த்த பையனா இருக்கேன் அவ்வளவுதான்.” என்றான்.
அனன்யாவிடம் அமைதி.
“இப்போ சொல் நான் செய்ததில் ஏதாவது தப்பிருக்கா?”
“இல்லை.”
“அப்புறம் ஏன் சோகமா இருக்க.”
“இந்த பத்து நாள் நான் பட்ட மன உளைச்சலுக்கு என்ன சொல்ல போறீங்க?”
“நீ ஒழுங்கா ட்ரிப் முடிந்த அன்னைக்கே காதலை சொல்ல வேண்டியது தான?”
“அதுக்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை தருவீங்களா. நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் உங்களை ஏத்துக்கவும் முடியாம விட்டு தரவும் முடியாம.”
“சரி விடு கல்யாணத்துக்கு அப்புறம் நீ எனக்கு தண்டனை கொடு.”
“நான் உங்களை கல்யாணம் செய்துக்க போறேன்னு சொல்லையே”
“அனன்யா திரும்ப முதலிருந்து ஆரம்பிக்காதே. மீ பாவம்.”
“இந்த விஷயத்தை பத்தி தான் நேற்று ஹரிஷ் எல்லாத்தையும் பேசி முடிங்கன்னு சொன்னானா?”
“ஆமா. உங்க அம்மா பார்த்த பையன் நான்னு தெரியும் போது, நீ ரொம்ப கோபப்படுவனு தான். அவன் எஸ்கேப் ஆகிட்டான். ‘நீங்க லவ்வர்ஸ் இன்னைக்கு அடிச்சிப்பீங்க. நாளைக்கு ஒன்னு சேர்ந்துடுவீங்க. என்னை விட்டுடுங்கன்னு’ சொன்னான்.”
“அவன் என் கிட்ட ஒருநாள் சிக்காமலா இருப்பான். என் கையில் சிக்கிய அன்னைக்கு அவனுக்கு இருக்கு கச்சேரி.” என்றாள் அனன்யா.
“அனன்யா… நாம எப்போ கல்யாணம் செய்துக்கு போறோம்?”
“எனக்கு எப்போதுனாலும் ஓகே அஸ்வின்.”
“அம்மாவ சீக்கிரமே தேதி பார்க்க சொல்றேன்.”
“சரி நான் கிளம்பிறேன்.”
“அனன்யா… வா நீயும் நானும் லவ்வர்ஸ்ஸா ஊர் சுற்றலாம்.”
“வர மாட்டேன். இது தான் நான் உனக்கு தர தண்டனை. எங்கையா இருந்தாலும் கல்யாணத்திற்கு அப்புறம் போகணும்.”
“நான் உன்னை கல்யாணத்துக்கு அப்புறம் கவனித்துக் கொள்கிறேன். ஆனா, நாளைக்கு ஒரு முக்கியமான பேஷன் ஷோ இருக்கு. அதுக்கு மட்டும் நீ என் காதலியா வரணும்.”
“ஓகே. டைம், லொகேஷன் டெக்ஸ்ட் பண்ணுங்க.”
“நானே வந்து உன்னை கூட்டிட்டு போறேன்.”
“ஓகே பாய்.”
“நான் வந்து விடுறேன்.”
“நோ..நோ.” என்றவள் சென்றுவிட்டாள்.
மறுநாள்,
பிறந்தநாள் உடையில் அனன்யா ரெடியாகி ஹாஸ்டலுக்கு வெளியில் நின்றாள். அஸ்வின் காரை அவள் அருகில் நிறுத்த, ஏறிக் கொண்டாள் அனன்யா.
வேகமாக அவளை இழுத்து அணைத்தவன், அவளின் உதட்டில் அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்தான்.
பின் வண்டியை ஸ்டார்ட் செய்தான். அனன்யா அதிர்ச்சியோடும், சிறு வெட்கத்தோடும் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
“இந்த டிரஸ் போட்டு உன்னை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்ப, எனக்கு இப்படி செய்யணும்னு ஆசையா இருந்தது. ஆனா, அப்போ என்னாலா செய்ய முடியலை, அதான் இப்போ செய்தேன்.
இந்த டிரஸ் நான் தான் உனக்காக ஸ்பெஷலா டிசைன் பண்ணினேன். அதை ஆன்ட்டி கிட்ட கொடுத்தேன்.”
அவள் இதை எதிர்பார்க்கவில்லை, “நிஜமாவா?”
“ஆமா.”
அதன்பின் அவள் எதுவும் பேசவில்லை.
பேஷன் ஷோ நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்தவன், அவளை முன் இருக்கையில் உட்கார வைத்தவன், “அனன்யா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வந்து உன்கூட இருக்கேன்.” என்றான்.
“ஓகே அஸ்வின். நீங்க போங்க நான் இருந்துப்பேன்.”
அவன் வேகமாக ஒரு அறைக்குள் சென்றுவிட்டான்.
பத்து நிமிடத்தில் அவள் அருகில் அவன் வந்து உட்கார, பேஷன் ஷோ ஆரம்பமானது.
மாடல்கள் அணிந்து வந்த உடையை பார்த்த அனன்யா அஸ்வினை திரும்பி பார்த்தாள்.
அவள் எப்படி உணர்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
காரணம் அவை எல்லாம் இவளும் கவியரசியும் டிசைன் செய்த உடைகள்.
அரைமணி நேரம் சென்றிருக்க, அனன்யாவின் கையை பிடித்து ஒரு அறைக்கு அழைத்துச் சென்றான்.
“சோபியா… இவங்க என்னோட லவ்வர். இவங்க இயல்பாவே அழகா தான் இருப்பாங்க சோ, லைட்டா டச் அப் மட்டும் பண்ணு.” என்றான் அஸ்வின்.
“அனன்யா… பயப்படாதே நீ இப்போ என்னோட சின்ன ராம்ப் வாக் பண்ணனும். ப்ளீஸ் நோ சொல்லாதே. இவங்க ரெடி பண்ணதும் பின்னாடி வந்துடு, நான் அங்க இருப்பேன்.”
'யோசிக்க கூட நேரம் தராதவனை' கோபமாக பார்த்தவள், “ஓகே” என்றாள்.
“ஸ்வீட் கேர்ள்” என்று அவள் கன்னம் தட்டியவன், வேறு அறைக்கு சென்றுவிட்டான்.
அஸ்வின் சொன்னது போல் ரெடியாக ஸ்டேஜ் பின்னால் அனன்யா வந்து நிற்க. அஸ்வின் அவளை நோக்கி நடந்து வந்தான். அவள் அதிர்ச்சியாக அவனை பார்க்க.
“செல்லம்… ஷோ முடிஞ்சதும் பேசிக்கலாம். இப்போ என்னோடு நடந்து வா.” என்றான்.
அவளின் கைகளை பிடித்துக் கொண்ட அஸ்வின் அனன்யாவோடு, ஸ்டேஜ் ஏறினான். அஸ்வினோடு கை கோர்த்து நடந்தாள் அனன்யா. பின் இருவரும் நடுவில் நின்றுவிட்டு கீழே இறங்கினர். அத்தோடு பேஷன் ஷோ முடிந்தது.
பலர் வந்து இருவரையும் வாழ்த்திவிட்டு, டிசைனையும் பாராட்டிவிட்டு சென்றனர்.
முக்கிய வேலைகளை முடித்த அஸ்வின் மீதியை பி.ஏ ரவியை பார்க்க சொல்லிவிட்டு, அனன்யாவோடு வெளியே வந்தான்.
இருவரும் காரில் ஏறிக் கொண்டனர்.
“எப்போ இந்த ஷோக்கு ஏற்பாடு செய்த?”
“டிரஸ் டிசைன் ஆறு மாதம் முன்னாடியே ஆரம்பித்தேன். பேஷன் ஷோ ஏற்பாடு இந்த ட்ரிப் முன்னாடி தான் முடிவு செய்தேன். பேஷன் ஷோ டேட் வந்து பத்து நாள் முன்னாடி பிளான் பண்ணி இருந்தேன். நீ உடனே காதலை சொல்லிடுவன்ற நம்பிக்கையிலா. ஆனா நீ லேட் பண்ணதால், ஷோவையும் மாற்றிவிட்டேன்.”
“இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கை இருக்கக்கூடாது.”
“இவ்வளவு அழகான பையனுக்கு எந்த பொண்ணும் நோ சொல்ல மாட்டாங்க. அந்த நம்பிக்கை தான்.”
அனன்யா அவனை அடிக்க, அவள் கைகள் இரண்டையும் தன் ஒரு கைக்குள் கொண்டுவந்தான் அஸ்வின்.
அவளை தன் கைகளுக்குள் கொண்டுவரவும், அவன் தோளில் சாய்ந்த அனன்யா, “அஸ்வின்… அம்மா உயிரோடு இருந்திருந்தா, இப்ப ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க.”
“ஆமா அனன்யா.”
“கேட்க மறந்துட்டேன், இந்த டிரஸ் நான் அம்மா பார்த்த பையனுக்கு வாங்கியது. அது எப்படி உன் கைக்கு வந்தது. நான் தரவே இல்லையே”
“ என்றைக்கா இருந்தாலும், அது கடைசியில் என் கைக்கு தான் வருங்கிறதால அன்னைக்கே வேனில் இருந்து எடுத்துக்கிட்டேன். நீயும் ரோஜா இன்சிடென்ட் டென்ஷன்ல டிரஸ்ஸை மறந்துட்ட. சரி ட்ரஸ் எனக்கு எப்படி இருக்கு?”
“ரொம்ப அழகா இருக்கு.” என்றவள். அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
இந்த கார் பயணம் போல் இவர்கள் வாழ்கை பயணமும் என்றென்றும் இனிமையாக இருக்கும்.
முற்றும்.