அத்தியாயம் 4
“காய்ஸ் நீங்க போய் விளையாடுங்க.” என்றாள் அனன்யா.
“நாங்க எல்லாம் விளையாடிட்டோம்.” என்றான் ஜெய்.
“நாங்களும் எல்லாம் விளையாடிட்டோம்.” என்றான் ஹரிஷ்.
“நான் இன்னும் நிறைய ஆக்டிவிட்டீஸ் செய்யணும்” என்றான் அஸ்வின்.
அவனை முறைத்துக் கொண்டே, “மிஸ்டர் அவங்க கை, காலை உடைத்தது மட்டும் இல்லாமல், அவங்களை எவ்வளவு நேரம் வேனில் வெயிட் பண்ண வைக்க பிளான் பண்ணுறீங்க?” என்றாள் அனன்யா.
“நான் என்னமோ அவங்களை கீழே தள்ளுன மாதிரி பேசுறீங்க. அவங்களுக்கு நான் உதவி செய்யல அவ்வளவு தான். கீழே விழும் போதும் தன்மையா உதவி கேட்கலை. அதுவும் இல்லாமல் அவங்க ஹரிஷ் கிட்ட அப்படி நடந்துக் கிட்டது தப்பு.” என்றான் அஸ்வின்.
“சரி அதைவிடுங்க. மெஜாரிட்டி போகலாம்னு சொல்லுறாங்க. சோ நீங்க இப்போ வந்து தான் ஆகணும் மிஸ்டர்.” என்றாள் அனன்யா.
அவளை முறைத்துக் கொண்டே அவன் வெளியே செல்ல. அவனை தொடர்ந்து அனைவரும் வெளியே வந்திருந்தனர்.
எல்லோரும் வேனில் ஏற, வேன் வர்கலா நோக்கி செல்ல ஆரம்பித்தது.
வண்டியில் ஏறிய அனன்யா உட்காராமல், நின்றுக் கொண்டு, அனைவரையும் பார்த்தப்படி, “ஃப்ரெண்ட்ஸ்… இனி நாம ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்.” என்றாள்.
“ஃபர்ஸ்ட் டேவே என்னோட ட்ரிப்பை இப்படி சிலர் ஸ்பாயில் பண்ணிட்டாங்க. வேறு எங்காவது போகலாம்னு பார்த்ததேன்.” என்று காலையில் ரோஜா பேசிய அதே மாடுலேஷனில் சொன்னான் ஹரிஷ்.
“ஹரிஷ்… நம்ம ட்ரிப் மோட்டிவ்வே ஸ்ட்ரெஸ் பண்ணாம, ரிலாக்ஸா ஊரை சுற்றி பார்ப்பது தான். என்னோட இன்றைக்கான பிளான் இது மட்டும் தான். நேற்று தான் நீங்க எல்லாம் டிராவல் பண்ணி இங்க வந்திருக்கீங்க. அதுக்கு தான் இந்த ரெஸ்ட்.”
“ஓகே பியூட்டி.”
“ ஏர்லி மார்னிங் ஃபை ஓ க்ளாக்கு சன் ரைஸ் பார்த்துட்டு அப்படியே ஜனார்த்தன சுவாமி கோவிலுக்கு போயிட்டு வரலாம். டிரஸ் கோட் முக்கியம் பாய்ஸ் வேஷ்டி, சர்ட்.கேர்ள்ஸ் சாரீ, சுடி, ஹாஃப் சாரீ. டிரஸ் இல்லைனா ஈவ்னிங் ஏற்பாடு பண்ணிக்கோங்க.
கோயிலுக்கு போயிட்டு வந்துட்டு ரெஸ்ட் எடுங்க. ஈவ்னிங் போர் ஓ கிளாக் நார்த் கிளிப்ல சன் செட் பார்த்துட்டு, நைட் பார்ட்டி என்ஜாய் பண்ணலாம். நம்ம டைமிங் நைட் பத்து மணி வரைக்கும் தான். அதுக்கு மேல் இருக்க விரும்பினால், நீங்களே தான் ஹோட்டலுக்கு வந்தாகணும், வேன் கடைசியா பத்து மணிக்கு அங்கிருந்து கிளம்பிடும்.” என்றாள்.
டிரைவர் வேகமாக வண்டிய திருப்ப, பேலன்ஸ் இல்லாமல் விழ போன அனன்யாவை, ஒற்றை கையால் அவளின் இடையில் கை வைத்து கீழே விழாமல் பிடித்துக் கொண்டான் அஸ்வின்.
“இந்த இன்ட்ராக்ஷன்ஸ்லாம் வண்டியிலிருந்து இறங்கின பின் சொன்னா என்னவாம்?” என்றான் அஸ்வின்.
கம்பியை பிடித்து சரியாக நின்றவள், “ரோஜாவுக்கு பெய்ன்னா இருக்கும், அவங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்னு தான் இப்போவே சொல்றேன்.” என்றாள் அனன்யா படபடப்பாக.
“சீக்கிரமா முடிங்க.” என்றான்.
“மிஸ்டர் ராஜேஷ் உங்க வைஃப்க்கு எந்த பிரச்சனையும் இல்லைனா நாளைக்கு மார்னிங் வாங்க, இல்லைனா ஈவினிங் எங்களோடு ஜாயின் பண்ணிக்கோங்க. எப்போ வரிங்கன்னு குரூப்ல மெசேஜ் போட்டுடுங்க. ஹாஸ்பிடல் லொகேஷன் மெசேஜ் அனுப்பி இருக்கேன். நீங்க ஹோட்டலுக்கு போனதும் உங்க வைஃப்பை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க.” என்றாள்.
பல்லை கடித்துக் கொண்டு, ”ஓகே” என்றான் ராஜேஷ்.
உட்கார சீட்டை தேட, கடைசி சீட்டில் ரோஜா படுத்து இருக்க, அஸ்வின் அருகில் உள்ள சீட்டை தவிர மற்ற சீட்டில் அனைவரும் உட்கார்ந்திருக்க, வேறு வழி இல்லாமல் முதல் சீட்டில் அஸ்வின் அருகில் உட்கார்ந்தாள் அனன்யா.
உடல் அசதியில் உட்கார்ந்த ஐந்து நிமிடத்தில் ஜன்னல் மேல் தலை சாய்த்து தூங்க ஆரம்பித்தாள் அனன்யா. கொஞ்ச நேரத்தில் தலை அஸ்வின் தோளில் மேல் வந்து சரிய. அவளை நன்றாக தோளில் சாய்த்துக் கொண்டான்.
“ஹோட்டல் வந்தாச்சு. எழுந்திரு அனன்யா.” என்று அஸ்வின் இரண்டு முறை எழுப்பிய பின்பே கண் திறந்தவள்.
அவன் மேலே சாய்ந்து தூங்கியது புரிய பதட்டமாக, பத்தாதற்க்கு லேசாக அவன் தோளில் ஜொள்ளு ஊத்தியிருந்தது.
ஹாண்ட் கர்சீப் ஆல் அதை வேகமாக துடைத்தவள், “ஐ எம் சாரி. அசந்து தூங்கிட்டேன்னு நினைக்கிறேன்” என்றாள்.
“நோ ப்ராப்ளம். நீங்க கை எடுத்தீங்கனா நான் போவேன்.” என்றான் அஸ்வின்.
இன்னும் அவன் மேல் பாதி சாய்ந்திருந்தவள், வேகமாக நகர, அவன் எழுந்து சென்றான்.
தலையில் கை வைத்தவள், ‘நான் ஏன் டா இவர் கிட்ட மட்டும் இப்படி பல்ப் வாங்குறேனோ?’ என்று புலம்பியவள் தன்னை சரி செய்துக் கொண்டு வெளியே வந்தாள்.
டிரைவரிடம்“அண்ணா… மிஸ்டர் ராஜேஷ் ஹாஸ்பிடல் போகணும்னு சொன்னா, அவங்களை கூட்டிட்டு போயிட்டு வந்து விட்டுட்டு நீங்க போங்க. நாளைக்கு காலையில் ஐந்து மணிக்கு வந்துடுங்க.” என்றாள் அனன்யா.
ரிசப்ஷனில் தன் பெயரை சொல்லி சாவியை வாங்கிக் கொண்டு அஸ்வினும் மேலே வர, தூக்கம் கலையாமல் லிஃப்டில் ஏறி நின்றாள் அனன்யா. அவளின் நிலையை பார்க்கும் போது அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. அவள் அறைக்கு சென்று கதவை சாத்தும் வரை பார்த்துக் கொண்டிருந்தான் அஸ்வின். அவள் அறை கதவு நன்றாக தாழ் போட்டதை சரிப் பார்தத பின்பே, தன் அறைக்கு சென்றான் அஸ்வின். தன் அறைக்கு சென்ற அனன்யா, உடைக் கூட மாற்றாமல் தூங்கி விட்டாள்.
ஏழு மணி போல் எழுந்த அனன்யாவிற்கு தலை வலிக்க ஆரம்பித்தது. உடை மாற்றித் தன்னை சுத்தம் செய்தவள், கீழே சென்று காஃபியை ஆர்டர் செய்துவிட்டு, கிளப் ஓரம் அமைந்திருந்த டைனிங் ஏரியாவில் கடலை பார்ப்பது போல் உடாகார்ந்துக் கொண்டாள்.
அவளின் கண்களை யாரோ மூட. “ஹரிஷ்…” என்றாள்.
“எப்படி கண்டுபிடிச்ச? என்னையே நினைச்சிட்டிருந்தியா?” என்றான் ஹரிஷ்.
“அப்படியெல்லாம் இல்லை. என் கிட்ட இப்படி உரிமையா பழக இப்போ இருக்க ஒரே ஆள் நீதான்.”
“ஏன் எப்பவும் யாருமே இல்லாதது போல் பேசுற?”
“ஆபிசியல்லி நான் இப்போ அனாதை தான். எனக்கு எந்த உறவும் இல்லை. ஒரே ஒரு வெல்விஷர் ஆர் கார்டியன் இருக்காங்க, அதுக்கு அப்புறம் கிடைத்த நண்பன் நீ மட்டும் தான். என்னோட உலகம் ரொம்ப சின்னது.”
“உன்னோட பேரன்ட்ஸ் எங்க?”
“என்னோட பயாலஜிக்கல் பாதர் நான் பிறக்கும் முன்னாடியே என்னையும், அம்மாவையும் விட்டுட்டு ஓடி போயிட்டாரு. என்னோட அம்மா நாலு மாசம் முன்னாடி இறந்துட்டாங்க.”
“ ஹே… சாரி அனன்யா”
“இட்ஸ் ஓகே ஹரிஷ்”
“உனக்கு ஒன்னுனா நான் வருவேன். நம்மோடது வெறும் இந்த ட்ரிப் முடியும் வரையான நட்பு இல்லை. லைஃப் லாங் நாம ஃப்ரெண்ட்ஸ் ஓகே?” என்று அவன் கை நீட்ட. புன்னகையோடு கை குலுக்கினாள் அனன்யா.
“நீயேன் கல்யாணம் செய்துக்க கூடாது.”
“கண்டிப்பா பண்ணிப்பேன் ஹரிஷ். ஆனா இப்ப இல்ல.என்னோட நயவனை தான் தேடிட்டிருக்கேன்.”
“நயவனா… அப்படினா?”
“விருப்பத்திற்குரியவன் அர்த்தம். எங்க அம்மா எனக்காக பார்த்த பையன்.”
“அப்போ அஸ்வின்?”
“நான் எப்போ டா அவரை கல்யாணம் செய்துக்க போறேன்னு உன்கிட்ட சொன்னேன்?”
“வரும் போது வேன்ல ஒரே ரொமான்ஸ் தான். ஹீரோயின் தடுமாறி கீழே விழுகிறதென்ன ஹீரோ காப்பாத்துறதென்ன? ஹீரோ தோளில் ஹீரோயின் சாய்ந்து தூங்குறதென்ன?”
“நீ கூடதான் ரோஜாவை கீழே விழாமல் பிடிச்ச.”
“ஆமா. நான் எல்லோருக்கும் உதவி செய்வேன். ஆனா அஸ்வின் ரோஜாவை அவ்வளவு உயரத்திலிருந்து விழும்போது பிடிக்காம, நீ லேசா தடுமாறுனதுக்கே உன்னை விழாமல் பிடிச்சது தானே. அப்போ ரோஜாவை பார்க்கணுமே அவ்வளவு கோபம் அவள் முகத்தில்.”
“நான் அதுக்கு என்ன செய்ய முடியும்? நீ அஸ்வினை தான் கேட்கணும்.”
“அது சரி தான். ஆனா, அவர் தோளில்…” என்று அவன் ஆரம்பிக்கும் போதே.
“டேய்… அதுவும் எனக்கே தெரியாமல் நடந்தது. நேற்று இரவு ஒழுங்கான தூக்கம் இல்லை. வெளியே சுற்றிட்டு வேனில் ஏறியதும் என்னை மீறி அசந்து தூங்கிட்டேன்.”
அவளின் காஃபி வர, “உனக்கு சொல்லவா ஹரிஷ்?”
“நான் முன்னாடியே குடிச்சிட்டேன். எனக்கு வேண்டாம், நீ குடி.”
காஃபியை குடித்துக் கொண்டே, ”எங்க உன்னோட ஃப்ரெண்ட்ஸை காணும்.”
“அவங்களும் உன்னை மாதிரி சரியான தூங்கு மூஞ்சிங்க. நல்லா தூங்கிட்டு இருக்காங்க. எனக்கு ரொம்ப போர் அடிச்சது, அதான் நான் கார்டன்ல வாக் போலாம்னு வந்தேன். உன்னை பார்த்ததும் இங்க வந்துட்டேன்.” என்றான்.
அவனின் ஃபோன் இசைக்க, “ஹலோ ஸ்வீட் ஹார்ட் எப்படி இருக்க?” என்றான்.
“ஒன்னும் கேட்கலை, இரு வரேன்” என்று ஃபோனில் சொன்னவன்.
“பியூட்டி… அம்மா கிட்ட ஃபோன் பேசிட்டு வரேன். இங்க சிக்னல் இல்லை.” என்றவன் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.
அவள் அருகில் இருந்த சேரில் வந்து உட்கார்ந்த ராஜேஷ், “உங்க அம்மா உயிரோட இருந்தப்ப சுடிதார் தானே போட்டுட்டு ஐடி ஆஃபீஸ்க்கே வருவ. இப்போ என்னடானா ஜீன்ஸ், ஷர்ட்ன்னு சுத்திட்டிருக்க. நம்ம காதலிச்ச ஒரு வருஷம் என்னோட நகம் கூட உன் மேல் படாம பார்த்துக் கிட்ட இப்போ என்னடான்னா காலையில் ஒருத்தன், நைட் ஒருத்தன்னு இருக்க. உங்க அம்மா மேல போனதுக்கு அப்புறம் நீ இப்படி இருப்பன்னு தெரிந்திருந்தா, உன்னை ஆறு மாசம் நல்லா யூஸ் பண்ணிட்டே தூக்கி போட்டிருப்பேன். இப்பவும் ஒன்னும் இல்லை ஒன் நைட் ஸ்டண்ட் ரெடியா? எவ்வளவுன்னு சொல்லு.” என்றான்.
கண் கலங்க, அமைதியாக தலை குனிந்து, பதிலின்றி அமர்ந்திருந்தாள்.
“நீ இங்க ரூட் விட்டுட்டு இருக்கியே, இப்ப உன்னோட வைஃப் தனியா தானே இருப்பாங்க. நான் அவங்களுக்கு துணைக்கு இருக்கேன். அப்படியே அவங்க ரேட் என்ன…’’ என்ற அஸ்வினை சொல்லக்கூட விடாமல்.
“டேய்…” என்றான் ராஜேஷ்.
“உன்னோட வைஃப்னா உனக்கு அவ்வளவு கோபம் வருதுல. அதே வேற பொண்ணுனா இனிக்குதோ. கொன்னுடுவேன் ராஸ்கல், பத்து நாள் இருக்க இடம் தெரியாமா இருந்துட்டு ஓடிடணும். இன்னொரு தடவை அனன்யா கிட்ட நீ பேசுனதை பார்த்தேன் உன்னை அடிச்சே கொன்னுடுவேன். நீ இப்போ அனன்யா கிட்ட பேசியதை வீடியோ எடுத்து வைத்திருக்கேன், அதை ரோஜா கிட்ட காட்டவும் யோசிக்க மாட்டேன்.” என்றான் அஸ்வின்.
ரோஜாவின் பெயரை கேட்டதும் பயம் வந்தாலும் வெளி காட்டாமல் கோபமாக எழுந்து சென்றுவிட்டான் ராஜேஷ்.
“இப்படி ஒருத்தன் தரம் தாழ்ந்து பேசும் போது, அவனை ஓங்கி அடிக்காமல் தலை குனிந்து உட்கார்ந்திருக்க.”
அவனை கண்ணீரோடு அடிப்பட்ட பார்வை பார்த்தவள், “உயிரா நேசிச்சவனே இப்படி பேசும் போது, எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணணும்னு தெரியலை. நேற்று வரைக்கும் அவனை மறக்க முடியாம நான் கஷ்டப்பட்டேன். இன்னைக்கு இவனை போய் காதலிச்சேனேன்னு வெறுப்பா இருக்கு.” என்றவள் எழுந்து செல்ல.
அவள் பாதை தெரியாமல் தடுமாற, அவளின் கையை பிடித்த அஸ்வின், அவளோடு லிஃப்ட் ஏறினான். அவளின் அறைக்கு வெளியே அவளை கூட்டி வந்து, நிறுத்தியவன்,
“நடந்ததை உன்னால் மாற்ற முடியாது. கடவுள் புண்ணியத்தால், இப்படி ஒருத்தன் கிட்ட இருந்து தப்பித்ததை நினைத்து சந்தோஷப்படு. அவன் சொன்னதால் மட்டும் நீ தப்பான பொண்ணாக மாட்ட. நீ நல்ல பொண்ணுன்னு இங்க யாருக்கும் நிருபிக்க வேண்டியதில்லை. உனக்கு நீ உண்மையா இருந்தா போதும். உனக்கு சாப்பாடு ஆர்டர் பண்றேன், சாப்பிட்டு நிம்மதியா தூங்கு. இப்போ ரூமுக்கு போ” என்றான்.
அவனின் வார்த்தைகளே அவளின் மனதில் ஒலித்துக் கொண்டிருக்க, அமைதியாக உள்ளே சென்று கதவை அடைத்தாள். இப்போதும் கதவு சரியாக தாளிடப்பட்டதை உறுதி செய்துவிட்டே, அவனது அறைக்கு சென்றான் அஸ்வின்.
அன்னையின் புகைப்படத்தை கையில் எடுத்த அனன்யா, “அம்மா… நீ இப்போ என் கூட இருந்திருந்த நீயும் இப்படிதான் என்னை சமாதானம் பண்ணியிருப்ப. நான் இவனுக்காக தற்கொலை செய்துக்க முயற்சி பண்ணேன்னு நினைக்கும் போது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. இனி இவனை நினைத்து நான் என்னைக்குமே வருத்தப்பட மாட்டேன்.” என்றாள்.
ஃபோனில் இன்று எடுத்த வீடியோவை எடிட் செய்து, வாய்ஸ் ஓவர் செய்து, சோசியல் மீடியாவில் அப்லோட் செய்தாள்.
சரியாக இவள் வேலையை முடித்து நிமிர, இவளின் அறை கதவு தட்டப்படது. இவளுக்கான உணவு வந்திருந்தது, அதை வாங்கிக் கொண்டு, இவள் திரும்ப அஸ்வின் அவன் அறை முன் நின்றிருந்தான். அவனை பார்த்து சின்னதாக சிரித்து, தலை அசைத்துவிட்டு உணவோடு உள்ளே சென்றாள்.
மிகவும் எளிமையாக செரிக்கக் கூடிய உணவுகள் இருக்க, அதை சாப்பிட்டு விட்டு தூங்க சென்றாள் அனன்யா.
காலையிலே நேரமாக எழுந்து தயாராகி கீழே, வேன் அருகே வேகமாக வந்தாள். அஸ்வின் வேட்டி, சட்டையோடு நின்றிருந்தான்.
“குட் மார்னிங் அஸ்வின்” என்றாள் அனன்யா புன்னகையோடு.
“குட் மார்னிங்.”
ஐந்து நிமிடத்தில் ஒவ்வொருவராக வந்துவிட்டனர். இரவே ரோஜா காலை வரவில்லை, மாலை வருவதாக மெசேஜ் செய்திருந்தாள்.
“அழகே… பொறாமைப்படும் பேரழகு’’ என்றான் ஹரிஷ்.
“டேய்… காலையிலே ஆரம்பிச்ச. போய் வண்டியில் ஏறு.” என்றாள் அனன்யா.
வேன் கோவில் அருகில் இருந்த கடற்கரையை நோக்கி சென்றது. அங்கு போய் அனைவரும் ஒன்றாக மணலில் உட்கார, சூரியனும் அழகாக கடளுக்குள் இருந்து வெளியே எட்டி பார்த்தது.
கவலைகள் மறந்து காலையிலே மனதிற்குள் அமைதி நிலவியது. தியானம் செய்த உணர்வு தான் அனைவருக்கும். அருகில் இருந்த கடையில் காலை டீ, காஃபி குடித்தனர்.
பின் கோவிலை நோக்கி சென்றனர். கோவிலுக்கு வெளியே பூ வாங்கி வைத்துக் கொண்டனர் பெண்கள்.
“அனன்யா… ஐ எம் ஹரிஷ் நான் இதை சொல்லியே ஆகணும் நீங்க அவ்வளவு அழகு” என்று சினிமா டயலாக் ஹரிஷ் பேச.
“டேய்… வா டா” என்றவள் அழகாக வெட்கப்பட்டாள்.
“ஒன் ஃபோட்டோ பிளீஸ்.” என்றவன் அவளை தன் கேமராவில் ஒரு படம் எடுத்துக் கொண்டான்.
“சரி போதும் வா போகலாம்.” என்றாள்.
இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஜனார்த்தன சுவாமி கோவில். கேரளத்தின் கட்டடக்கலையை எடுத்துச் சொல்வது போல் அமைந்திருந்தது.
காலை நேரம் என்பதால் கூட்டம் குறைவாக இருக்க. நல்லபடியாக, விரைவாக விஷ்ணு சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தனர்.
வேனில் ஏறி ஹோட்டலை நோக்கி சென்றனர். ஹரிஷ், அனன்யா அருகில் உட்கார்ந்து, அவளிடம் வம்பு செய்துக் கொண்டே வந்தான்.
“ப்ரெண்ட்ஸ் ஈவினிங் எல்லாரும் மீட் பண்ணலாம்.” என்றவள், அனைவரையும் அனுப்பி வைத்தாள்.
“என்னோடு செல்ஃபி எடுக்க வா பியூட்டி” என்ற ஹரிஷ் அவள் அருகில் சென்று கேமராவை திறந்தான்.
ஃபோன் ஸ்கிரீன்யில் அஸ்வின் இருவருக்கும் நடுவில் நிற்க, இருவருமே அவனை திரும்பி பார்த்தனர்.
‘நீ எப்போ எங்களுக்கு நடுவில் வந்த?’ என்று வாய்க்குள் புலம்பிக் கொண்டே, அவனை முறைத்து பார்த்தான் ஹரிஷ்.
“ஃபோட்டோ எடு” என்றான் அஸ்வின்.
வேறு வழியின்றி ஃபோட்டோ எடுத்தான் ஹரிஷ். அந்த படம் அவ்வளவு அழகாக இருந்தது.
“நீ போ அனன்யா.” என்றான் அஸ்வின்.
“நில்லு…” என்று சொல்ல வந்த
ஹரிஷ் தோள் மேல் கை போட்டு அவனை பேச விடாமல் தடுத்தான் அஸ்வின்.
அனன்யா திரும்பி பார்க்க. “ஒன்னும் இல்லை, நான் ஹரிஷ் கிட்ட பேசணும். நீ ரூமுக்கு போ” என்றான் அஸ்வின்.
“என்ன பேசணும்?” என்றான் ஹரிஷ்.
“என்ன இன்னைக்கு ரொம்ப அனன்யா கிட்ட வழியிற.”
“அப்படி தான் நான் செய்வேன். நீங்க யாரு அனன்யாவுக்கு ?”என்று கேட்க.
“இந்த ட்ரிப் முடியும் போது நான் அனன்யாவிற்கு யாருன்னு சொல்றேன்.” என்ற அஸ்வின் சென்றுவிட்டான்.