நான் அறிய நீ - 05

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
மாலை ஐந்துக்கு வீடு தட்டினான் வரோதயன்.

விளக்கு வைக்க முன்பே மகனைக் கண்டது மகிழ்ச்சி காமாட்சிக்கு. தேநீர் தந்தவரிவிடம் மதியம் சமைத்தாரா சாப்பிட்டாரா என விசாரித்தான்.

"ஓம் தம்பி, நீ என்ன செய்தாய்.. உன்னப் பத்தின யோசன தான் எனக்கு. காலையில சாப்பாட சமைச்சு கட்டித் தந்து விடுறன் எண்டாலும் கேட்டாய் இல்ல. என்ன சாப்பிட்டாய்.. ஒஃபிஸ் கென்டீன் தானா.."

"நான் இண்டைக்கு வெளியில, கடையில சாப்பிட்டன் அம்மா.." என்று பொய் சொன்னவன் தேயிலை கோப்பையை உறிஞ்ச, வாசலில் நின்ற மாமரத்தில் காகம் கரைந்தது.

"ச்சூ.. நேரம் கெட்ட நேரத்தில கத்துது.." கையை கல்லாக பாவித்து எறிந்த காமாட்சி காகத்தை விரட்ட வரோதயன் பின்வாசல் கட்டு வழியாக கொல்லைப்புறம் சென்றான்.

காமாட்சியின் வளவு ஒரு மாமரச் சோலை. இரண்டு ஏக்கருக்கு மேல் வரும் வீட்டுக் காணியில் சுற்றிலும் தென்னையும் மாவும் பலாவும் காவல் காக்கும்.

சாயங்காலங்களில் காற்றாட அமருவதற்கு தோதாக மாமர நிழலின் கீழ் தென்னங் குற்றிகளை நட்டு வைத்திருக்கிறான் வரோதயன்.

பஞ்சு, ராசு, இல்லாமல் தனியாக அமர்ந்தவனின் காய்ந்த குடலில், சூடான தேயிலைச் சாயம் சர்க்கரையுடன் இறங்கியது.

தாயின் கைப் பக்குவத்தில் ருசித்துப் பழகிய நாவுக்கு கென்டீன் உணவு ஒத்து வரவில்லை நேற்று. பக்கத்தில் நல்ல ஹோட்டலாக பார்த்து வரலாம் என மதியம் கிளம்பும் போதே பிரார்த்தனாவைக் கண்டான்.

வீதி வெயிலில் திக்கில்லாமல் கண் அலைந்து நடந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றவன் அவள் எதிரில் வந்தும் கூட அவள் அவனைக் கவனிக்கவில்லை.

அதீத பதட்டம்.

நிலை கெட்ட ஒரு பதகளிப்பு.

நான் கொண்டு போய் விடவா எனக் கேட்டதும் மறு பேச்சின்றி தொற்றிக் கொண்டது அவனை என்னவோ ஏதோ என்று யோசிக்க வைத்தது.

நேரா போங்க..

அதுல வலது பக்கம் திரும்பணும்..

ரவுண்டபோட்டால வெட்டுங்க..

நேரா விடுங்க..

இதுல தான்..

சரி நிப்பாட்டுங்க..

ப்ரேக் பிடித்து நிறுத்துவதற்குள் வண்டியில் இருந்து பாய்ந்து விடுவாளோ என்று பயந்தான்.

வண்டியை ஸ்டான்ட் போட்டு திரும்புதற்குள் வீட்டு கேட் திறந்து கதவு திறந்து மறைந்திருந்தாள்.

அவன் என்ன செய்ய வேண்டும் அவன்? உள்ளே செல்ல வேண்டுமா? இதில் காத்திருக்க வேண்டுமா?

யோசித்த நொடியில் வியர்த்தோடி வந்தவள் 'ஒரு ஆட்டோ பிடியுங்களன்.. அம்மாவ ஹொஸ்பிடல் கொண்டு போகணும்' என கை உதற, கடந்து வந்த சந்தியில் முட்சக்கர வண்டி தரிப்பிடம் கண்ட நினைவில் பைக்கில் ஏறி முறுக்கிப் பறந்தவன் வண்டி கூட்டி வரும் போது பிரார்த்தனாவைக் காணவில்லை.

தேடி வீட்டினுள் நுழைந்தான்.

பல்லாண்டு பழமையான அந்தக் காலத்து பழுப்பு வீடு அது. பொருளாதார நலிவை சிதிலமடைந்த சீமெந்துத் தரையும் பெயின்ட் உதிர்ந்த சுவரும் காயப்பட்ட மரத் தளபாடங்களும் பறைசாற்றின.

கூடத்தில் அவன் தயங்கிய நொடியில் "வரோதயன் கொஞ்சம் வாறிங்களா.. அம்மாவ தூக்கணும்" என்ற இறைஞ்சல் குரல் கேட்டது.

அழுக்குத் திரைச்சீலையை ஒதுக்கி இரண்டு எட்டில் புகுந்தவன் அதிர்ச்சியில் மிரண்டு நின்றான்.

அவன் தாய் வயதை ஒத்த நரை முடி பெண்மணி இரத்த கறையுடன் அரைக் கண்ணில் மகளின் கையில் தளர்ந்து வழிந்தார்.

என்ன நடந்தது?

அவன் மனம் தான் கேட்டது. சூழ்நிலையை கையில் எடுத்து அவசியப்பட்டவரைத் தூக்கிக் கொண்டான்

ஆஸ்பத்திரியில் அனுமதிக்க தேவையான இத்தியாதிகளை கூடையில் சேகரித்து வைத்திருந்தவள் அவன் பின்னால் வந்து கதவை பூட்டி கேட்டைச் சாத்தினாள்.

ஆட்டோவில் தாயை இருக்க வைத்ததும் அமர்ந்து தன்னில் சாய்த்து தாங்கிக்கொண்டு அவனை அவள் பார்த்த பார்வையில் ஒரு கோடி நன்றி தெரிந்தது.

'என்ன நடந்த அம்மாக்கு.. எந்தத் ஹொஸ்பிடல் போகணும் தங்கச்சி?' ஆட்டோ சாரதியின் கேள்விக்கு பதில் கொடுத்தாள்.

ஆட்டோ விரைந்ததும் வரோதயனும் பைக்கை மிதித்து பின் தொடர்ந்தான். திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையில் வந்து நின்றனர்.

வண்டியை நிறுத்தி அவன் வருவதற்கு காத்திருக்கவில்லை. வாசலில் நின்ற சுகாதார ஊழியர்கள் ஸ்ரச்சர் தள்ளி வந்து பிரார்த்தனாவின் தாயை அள்ளி அதில் வைத்து உருட்டிப் போயினர்.

'தாங்க் யூ! நீங்க ஒஃபிஸ் போங்க.. நான் ரமணி அக்காவோட கதைக்கிறன்..' என்றாள்.

'வேற எதாவது தேவையா?'

'இல்ல.. நான் பாத்துக் கொள்வன். நீங்க போங்க. நியூ அப்பார்ட்மெண்ட். இன் அவுட் எல்லாம் ஸ்டிக்டா பாப்பாங்க. லஞ்ச் ஹவர் முடிய முதல் ஒஃபிஸ் போங்க..' அவன் நன்மைக்கு உரைத்து விட்டு தாய் பின்னால் விரைந்தாள்.

அங்கிருந்து அலுவலகம் திரும்ப வழி தெரியாமல் கூகுள் மெப்பிடம் கேட்டு கல்வித் திணைக்களத்தை அடைந்தான்.

"எப்ப மச்சான் வந்த?" ராசு பக்கத்து வீட்டு கொல்லை புற வேலிப் படலை திறந்து வந்தான்.

"இப்ப தான்.."

"நீ பொயிட்டாய்.. இண்டைக்கு என்ர பைக்க தூக்கிட்டு பொயிட்டான்டா பஞ்சன்.." அலுத்து அவனுக்கு அடுத்துள்ள தென்னங்குற்றியில் அமர்ந்த ராசு "என்ன விசேஷம் இண்டைக்கு, என்ன சொல்லிச்சு புதுப் புள்ள.." பிரார்த்தனாவைத் தான் கேட்கிறான்.

"நேற்று முதலாம் நாள், இண்டைக்கு ரெண்டாம் நாள். அப்புடித் தானேடா நான் வேலைக்கு சேர்ந்து.."

"ஓ!"

"ரெண்டு நாளும் என்னவோ ரெண்டு வருஷம் ஆகின மாதிரி இருக்கு. ரெண்டு வருஷத்துக்கு மேல பழகி அறிஞ்ச தெரிஞ்ச மாதிரி இருக்கு அந்த பிள்ளைய" வித்தியாசமாக உரைத்தான்.

கடகடவென சிரித்த ராசு "ஒரு மாதிரி கிடக்கு கதை எல்லாம். என்ன நடந்த? கண்டதும் காதலோ.."

ஆறிப் போன தேநீர் கோப்பையை குறையோடு கீழே வைத்தவன் "அந்த புள்ளட வீட்ட போனன் மச்சான் நான் இண்டைக்கு" என்றான்.

ராசு கண்கள் மச்சானை கேலியாக பார்த்தன. நண்பன் பஞ்சு இல்லையே இந்த இடத்தில் வரோதயனை கிண்டல் செய்து துவைத்துப் போட என்று கவலைப்பட்டன.

"எப்புடி போன.. அந்த பிள்ளையே கூட்டி போனதா.."

"ஓம்.."

"ஒரு கதைய நம்புற மாதிரி சொல்லடா.. நேற்ற விட இது பயங்கரமா கிடக்கு. பஞ்சு இருக்கணும் இந்நேரத்துக்கு.."

"உண்மையடா.. உண்மையா தான் சொல்றன்.. நடந்ததுகள்ள தலை வால் விளங்காம காரண காரியம் தெரியாம நானும் குழம்பி போய் தான் இருக்கன்.." என்றான் வரா.

"என்ன விஷயம்? மொட்டையா சொல்லாம தெளிவா கதை.."

வரோதயன் நடந்ததைச் சொல்ல ராசு பயந்து போய் விட்டான்.

"என்னடா இது.. தாய் ரெத்த வெள்ளத்தில பேச்சு மூச்சு இல்லாம கிடந்தாவா.. ஆர் என்ன செய்த?"

"தெரியாதே.. ஒண்டும் கதைக்கிற நிலைமை இல்லயே. அவ திரும்ப வர இல்லயே ஒஃபிஸூக்கு.."

"மச்சான், திருகோணமலை சனம் உரத்த ஆக்கள். எதுக்கும் துணிஞ்சவளுகள். அது யாரு என்ன நடந்த ஒண்டும் தெரியாமல் ஒண்டுலயும் தலை போடாத நீ. பொம்பிள பிள்ள கூப்பிட்டாலே யோசிச்சு தான் போகோணும். நீ கூப்பிடாமலே போய் நீயாத் தலைய குடுத்து இருக்கிறாய். நாளைக்கு ஏதாவது வில்லங்கம் வந்திரும்..."

பத்திரிகை செய்திகளை ஃபோனில் வலம் வரும் மர்ம நடப்புகளை கூறி வரோதயனை எச்சரிக்கை செய்தான் ராசு.

கை கட்டி கேட்டுக் கொண்டிருந்தவன் மனதில் பிரார்த்தனாவின் பார்வை படம் போல் பதிந்திருந்தது. அதில் கள்ளம் கபடம் வேஷம் நாடகம் எதையும் காணவில்லையே அவன்.

***

தலையை மறைத்து வெள்ளை தொப்பி அணிந்தது போல் கட்டுப் போட்டு படுத்திருந்த ராஜேஷ்வரியை எடுப்பி சாய்ந்து உட்கார வைத்து கலந்த சத்துப் பாலை குடிக்கக் கொடுத்தாள் பிரார்த்தனா.

வாங்கி வந்த பழப் பையை சுமந்து பாலா நிற்க, 'வேணாம் எண்டு சொல்லாம தாரத எல்லாம் வாங்கி குடியுங்கம்மா.. " என்று அக்கறையாக சொல்லிக் கொண்டிருந்தார் ரமணி.

"ரத்தம் போயிருக்கு. அதெல்லாம் ஊறணுமே.."

"அதுக்கு தான் ஒரு போத்தல் ரெத்தம் ஏத்தினாங்க.." ராஜேஸ்வரி பால் க்ளாஸை ஒதுக்கிப் பிடித்து சொல்ல

"ஓம்! அது ஏத்தினாலும், நாங்களும் சத்தா சாப்பிட்டு ஊற வச்சி எடுக்கணும்" என்றார் ரமணி.

"வெளிக்கிடுவம் ரமணி" பாலா மகளை வகுப்பில் இருந்து அழைத்து வர நேரம் ஆவதை நினைவு படுத்தினார்

ராஜேஷ்வரியை பருக சொல்லி விட்டு அவர்களுடன் விடுதி வாசல் வரை வந்தாள் பிரார்த்தனா.

சற்று தூரம் வந்ததும் "நீங்க ஷாலுவ க்ளாஸ்ல இருந்து கூட்டி போய் வீட்ட விட்டுட்டு வாங்களன் பாலு. நான் இந்த பிள்ளையோட கதைச்சிட்டு வாரன்.." என கணவரை தன் இருப்பு இந்தப் பெண்ணுக்கு சில நிமிடங்களாவது அவசியம் என உணர்த்தி கணவரை அனுப்பி வைத்த ரமணி "என்ன நடந்த தனா?" என ஆதங்கமாக கேட்க "என்ன எண்டு சொல்ல அக்கா நான்?" என அழுது விட்டாள்.

"தனா.. அழாதேங்க தனா.. "

தோளோடு நெருங்கித் தட்டித் தந்தார்.

இரண்டு கோட்டையும் துடைத்து "இவட வாய் தான் அக்கா எல்லாத்துக்கும் காரணம். அவர் குடிகாரன் கோபக்காரன் எண்டு தெரிஞ்சும் வாய் குடுத்து வாங்கி கட்டி இருக்கா.. இப்ப யாருக்கு கஷ்டம் நான் தானே பாடுபடுறன்.. "

"அழாதிங்க பிள்ள.. குடும்பத்தில ஒருத்தர் கூட பொறுப்பு இல்லாம இருந்தா எப்புடி.. நீங்க மட்டும் எல்லாத்தையும் இன்னும் எத்தின காலத்துக்கு தாங்கிக் கொண்டு போக போறிங்க தனா"

"எனக்கு ஒண்டுமே கேக்காதிங்க அக்கா.. எனக்கே பதில் தெரியாது.. ரத்தம் ஏத்த காசு கட்ட, கழுத்தில கிடந்த செயின அடகு வச்சிருக்கன். சத்து மா வாங்க உங்களுட்ட கடன் வாங்கி இருக்கன். இதெல்லாம் தெரியாம ரெத்தம் ஒரு போத்தல் ஏத்தி இருக்கு எண்டு பொறுப்பே இல்லாம திமிரா பதில் சொல்றா பாத்திங்களா.. நேற்று வந்து அட்மிட் பண்ணிட்டு உடுப்பு கூட மாத்தாம அவங்களோட நிக்கிறன் நான். என்னப் பத்தி யோசிக்கிறாங்களா யாராவது?" தாய் தந்தை தங்கை தம்பி அனைவர் மீதுள்ள கோபமும் ஆற்றாமையும் கண்ணீராகவே பொங்கியது.

எதுவும் பேசாமல் அவளை அணைத்து தட்டிக் கொடுத்த ரமணி "மற்றவங்க திருந்தாட்டி நாம தான் திருத்தணும் தனா. செய்யாட்டி செய்ய வைக்கணும். மொத்தமா தலையில அள்ளிப் போட்டுட்டு தியாகி மாதிரி துன்பப் படக்கூடாது. இங்க உள்ள பல கேஸ் திருந்தாத ஜென்மங்கள் தான்.. திருத்தப் பாருங்க. எல்லாம் மாறும்..."

"அவங்கள நான் திருத்துறதா.." விரக்தியாக சிரித்தாள்.

"அவங்க என்ன பிழை செய்யுறாங்க? அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க செய்யுறது தான் சரி அக்கா. உங்களுக்குத் தான் என்னால கஷ்டம்! இந்த காச அடுத்த மாச சம்பளத்தில தாரன்" என்றாள்.

"அதெல்லாம் அவசரம் இல்லப் பிள்ள. எனக்கு சரியான கவலை நேற்றே வந்து பார்க்க ஏலாம போனது. சொல்ல மறந்துட்டன், புதுப் பெடியன் வரோதயன் காலையிலயே உங்கள விசாரிச்சவர். உங்கட நம்பர் குடுத்தன்.. எப்புடித் தெரியும் எண்டு கேட்டன்.. பெடியன் எனக்கிட்டயே பொய் சொல்றார், ஒஃபிஸ்ல கதைச்சாங்களாம் பிராத்தனா மிஸ்ட் அம்மாவுக்கு சுகம் இல்லை எண்டு.." எனச் சிரித்தார் அவள் மனநிலையை மாற்ற.

ரமணியிடம் மாத்திரம் பேசி இருந்தாள் பிரார்த்தனா. குடிகார அப்பா வாய் கார தாயின் மண்டையை அடித்து கிழித்து விட்டார் என்று வெளியே தெரிவது அவமானம். இயலாத தாய் பாத்ரூமில் வழுக்கி விழுந்தாள் என்பதே ஆஸ்பத்திரியிலும் அலுவலகத்திலும் அவள் கூறிய பொய்.

'பாலாண்ணாட சொந்த காரர் தானே ரமணி அக்கா. அவர் தான் ரோட்ல தெய்வம் மாதிரி வந்தார். அவரோட தான் வீட்ட வந்து அம்மாவ ஹொஸ்பிடல் கூட்டி வந்தன்' என அவள் உண்மை விளம்பி இருக்க, வரோதயன் அதை மறைத்திருந்தான் அவனுடன் கிளம்பி போனது என்பது அவளுக்கு அசௌகரியமாக போய் விடக் கூடாது என்ற கண்ணியத்தில்.

மூன்று தினங்களுக்கு வைத்து வைத்திய சிகிச்சை அளித்து நான்காம் நாள் காலையில் விடுவித்தனர் ராஜேஷ்வரியை.

வீட்டுக்கு அழைத்து வந்தால், கூடத்தில் நல்லவராக அமர்ந்திருந்த வருணனைக் கண்ட ராஜேஷ்வரி
"இந்தக் கொல காரன் இருக்கிற வீட்டுல நான் இருக்க மாட்டன்.. இவன வெளிய அனுப்பு. இல்லாட்டி என்னக் கொண்டு போய் என்ர அக்கா தங்கச்சியிட்ட விடு.." என்றார் காட்டமாக.

"எங்கம்மா.." நம்பமாட்டாத அதிர்ச்சியில் கேட்டாள் பிரார்த்தனா.

"வசந்தாட்ட போக போறன் நான்.."

'வசந்தா' என்ற பெயர் கேட்டதும் மடமடவென உள்ளே முறிந்தது பிரார்த்தனாவுக்கு.

அபூர்வமாக வீட்டில் இருந்த தம்பி விமலனிடம் அவர் கேட்கும் இடத்திற்கு அழைத்துப் போகச் சொன்னவள் ஒற்றை ஆளாக உள்ளே வந்தாள்.

ராஜேஸ்வரி தனது தங்கை வீட்டுக்கு போக கேட்டார் என்பதை ஜீரணிக்க இயலவில்லை பிரார்த்தனாவால். மனைவியை தாக்கி துர் காரியம் நிகழ்த்திய தகப்பனை, ஒரு நாள் கூட தாயுடன் வந்து ஆஸ்பத்திரியில் தங்க நினையாத தங்கையை கோபிக்க திராணி அற்றவளாக கடந்தாள்.

*

அடுத்த வாரம் முதல் நாள் திங்கள் கிழமை அது. கடமைக்கு கையொப்பம் வைத்த வரோதயன் தனக்கு மேலுள்ள சைன் கண்டு எதிர்பார்ப்போடு நிமிர்ந்தான்.

அவன் நோக்கிய இடத்தில் சீட் காலியாக கிடந்தது. பேனையின் தொப்பியை அணிந்து பேண்ட் பாக்கெட்டில் செருகியவன் யூனிட்டை சுற்றிப் கண் ஓட்டினான்.

"பிரார்த்தனா மிஸ் எக்கவுண்ட்ஸ் ப்ராஞ்ச் போயிருக்காங்க.." யாரோ கேட்டதற்கு யாரோ பதில் சொன்னார்கள்.

முதல் தளம் திட்டமிடல் பிரிவு, இரண்டாவது நிர்வாகம், மூன்றாவதே கணக்கு பிரிவு.

வரோதயன் படிகளில் ஏறினான். பிரார்த்தனா படிகளில் இறங்கினாள். வளைவில் ஒருவரை ஒருவர் சந்தித்தனர்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: நான் அறிய நீ - 05
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
Aww பிரத்தனா..... எவளோ கஷ்டம் தான் இவளும் படுவா.....
இந்த வாய் வெச்சிட்டு இப்படி இருக்கே இந்த அம்மா....
பெரியம்மா இல்ல சித்தியா வசந்தா?????
அப்படியே இருக்கட்டும் விடு தனா..... அப்ப தான் அவங்களுக்கு உன் அருமை தெரியும்.....பட் wait... அப்ப தெரிய வாய்பிருக்க என்ன????