நான் அறிய நீ - 09

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
மனதில் உருவாகிய பிடித்ததை உரியவரிடம் எத்தி வைத்தால் பாரம் குறைந்து போவதற்கு, அது சுமையல்லவே.

பிடித்தம் என்பது ஒரு உணர்வு. இன்னொருவர் மீது ஏற்படும் ஈடுபாடு.

'நான் அறிந்த, அறிய விரும்புகிற முதல் பெண்ணுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்' என எழுதியவன் அந்த கடதாசியை கசக்கி பேண்ட் பாக்கெட்டில் ஒழித்து விட்டு, 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரார்த்தனா.. இனி எல்லாம் இனிதாகட்டும்' என்று பின்வாங்கி சில மணிநேரங்களே கழிந்திருக்க, எழுதிக் கசக்கியதை அவளிடமே தெரிவித்தவன் அவஸ்தையுடன் காத்திருக்க, ஒன்லைனில் இருந்த பெண் எந்தப் பதிலையும் தரவில்லை.

ஏதாவது அனுப்புவாள் என பார்த்துக் கொண்டே இருந்தான்.

முதல் முறையாக இருவரும் குட் நைட் கூறிக் கொள்ளாமலே உறங்கினர். இல்லை, உறங்க முயன்றனர்.

தேங்காய் துருவும் சத்தத்தில் காலையில் கண் விழித்தாள் பிரார்த்தனா.

கடிகார முட்கள் ஏழு மணியை விரட்டிக் கொண்டிருக்க, உள்ள நேரத்தில் அவள் குளித்து வெளிக்கிட்டு பஸ் ஹோல்ட் நோக்கி ஓடத் தான் அவகாசம் உள்ளது.

ராஜேஸ்வரியும் தங்கை வீட்டில் இருந்து வந்து விட்டமையால், அவருக்குரியதை செய்து வைக்க வேண்டிய பொறுப்பும் காத்திருக்க, வேகமாக காலைக் கடன் முடித்து அடுப்படி சென்றாள்.

தாளிப்பு வாசனையுடன் சட்டியில் எதையோ கிளறிக்கொண்டிருந்த நிலானி வியர்த்து இருந்தாள்.

குக்கரில் சாதம் வேக, முட்டைக் குழம்பு சூடாக இறக்கி இருந்தது.

வீடு வாசல் தட்டித் துடைத்து கூட்டிப் பெருக்கி துப்புரவாக்கும் பொறுப்பை மாத்திரம் தான் எடுத்து செய்வாள் நிலானி. அதையும் சனி ஞாயிறுகளில்.

அடுக்களை அலுவல்களை சீண்டக் கூட மாட்டாள். தனக்கு தேவையான முட்டை ஆம்லெட் போட, ஸ்நாக்ஸ் வறுப்பது தவிர்த்து அடுப்பு பக்கம் வரமாட்டாள்.

"டீ ஊத்திட்டன். சோறு கறியும் முடிஞ்சிது. காலமைக்கு உப்புமா செய்திருக்கிறன். நீ வேலைக்கு வெளிக்கிடு" கிண்டியதை மூடிக் கூறினாள்.

ஞானோதயமா இது? குற்றமுள்ள நெஞ்சு. எரித்து விட்ட மனதை குளிர்விக்க உதவுகிறாளாமா?

மழை இருட்டில் கண்ட காட்சி நினைக்கும் போது மேனியில் நடுக்கம் எடுக்க, தாய்க்கு பால் கரைத்துக் குடிக்கக் கொடுத்தவள் துண்டுடன் பாத்ரூம் செல்ல "கொஞ்சம் நில்லுக்கா" எனக் கிட்ட வந்தவள் 'என்ன?' என நோக்கும் போதே எதையோ அவளது முகத்தில் தடவினாள்.

பன்னீர் ரோஜா வாசனையுடன் கன்னங்கள் குளிர,

"என்ன இது?" என முகத்தை சுருக்க,

"முல்தானி மெட்டி.. நான் பூச குளைச்சன்.. கூடுதலா எடுத்துட்டன்.. வேஸ்டா போயிரும்.. அப்ளை பண்ணி விடுறன்" குளிராக கூறி நெற்றியில் பூச,

"எனக்கு நேரம் போகுது.." என உதறினாள் பிரார்த்தனா.

கொஞ்சமும் கோபிக்காமல் "வேஸ்டா போயிரும் அக்கா.. ரெண்டு நிமிஷம் இரு. நீ உடம்புக்கு சோப் போட்டு குளிச்சிட்டு கடைசியா முகம் கழுவினா போதும்..ரிசல்ட் வரும்" என தடவுவதில் கவனமாக இருந்தாள்.

என்ன தால்ஜாப்பு இது!

நேற்று ஒரு முகம்,

விடிந்ததும் ஒரு முகம்,

தங்கையின் முகம் காண கூட பிடிக்காமல் கசக்க, தவறு செய்பவளைத் தட்டிக் கேட்க கையாலாகாத வீட்டை நினைத்தே வேதனைப்பட,

"அவ்வளவு தான்.. முடிஞ்சுது. குளிச்சிட்டு லாஸ்டா முகம் கழுவு.." என கிண்ணத்தை கழுவப் போனாள்.

"ப்ச், முடி எல்லாம் பூசுபட்டிருக்கு.." தலைக்கும் சேர்த்து குளித்தவளுக்கு புடவை உடுத்தவே போதுமானதாக இருந்தது நேரம்.

ஈரக் கூந்தலை விரித்து கொஞ்சமாக சேர்த்து கிளிப்பில் இறுக்கி கைப்பை எடுத்து வெளிவர, அவளுக்கான இரண்டு வேளை உணவை கட்டி வைத்து குளிக்கப் போயிருந்தாள் நிலானி.

முழு மனதாக மகிழ்ச்சி பட முடியவில்லை.

வீதியில் இறங்கியவளின் இறுக்கம் அலுவலகம் சேரும் வரைதான்.

"குட் மோர்னிங் தனா.. பளிச் எண்டு இருக்கே முகம். என்ன ஸ்பெஷல்?" அவளுடனே சைன் வைத்த வசுமதி கேட்க பிரார்த்தனா புருவம் சுருக்கினாள்.

"உண்மையடி பிள்ள, ஷைனா இருக்கு முகம்.. வடிவா இருக்கிறாய்" என்றாள்.

"தனாக்கா, இண்டைக்கு வடிவா இருக்கிறிங்க.." தற்காலிக பயலுனராக ஆறு மாதங்களுக்கு இணைந்துள்ள ரேணுகா என்கிற பெண்ணும் சொல்ல, பிரார்த்தனா அவளை நிமிர்ந்து பார்த்தாள்.

நிலானி கற்கும் அதே NVQ6 கோர்ஸ் முடித்த ரேணுகா இவளை நிலானியின் அக்காவாக அறிந்திருக்க, தங்கையின் சீனியராக அவளை இவளுக்கும் நன்கு தெரியும்.

'சிக்ஸ் மந்த் ட்ரெயினிங் உங்கட ஒஃபிஸ்ல செய்யலாமா எண்டு ரேணு கேக்குறா.. கேட்டுப்பாக்குறியா?' என்று நிலானி அறிமுகப்படுத்தி விட, பிரார்த்தனா இருக்கும் தைரியத்தில் தான் அந்த பெண் இங்கு வந்து சேர்ந்தது.

"இண்டைக்கு மட்டும் தானா?" வசுமதி கிண்டல் பண்ணவில்லையோ என புன்னகை காட்ட,

"எண்டைக்கும் விட இண்டைக்கு கொஞ்சம் கூடுதலா வடிவா இருக்குறிங்க.." என்று ரேணுகா புத்திசாலியாக சமாளித்தது.

தனது எண்ணை தன்மையான சருமம் பற்றி அறியாதவளா பிரார்த்தனா. வீட்டில் இருந்து வந்த ஒரு மணி நேரமே தாக்கு பிடிப்பாள். பத்து மணிக்கு மேல் பூசிய டே க்ரீம் எண்ணெயாக கசிய ஆரம்பிக்கும். முகம் பிசுபிசுக்க தொடங்கி அவளுடைய நிறம் சோபை இழந்து விடும்.

அகன்று அடர்ந்த புருவமும் ஆழமான கண்களுமே அவளை கவனிக்க வைக்கும் ஒரே ஆயுதம்.

'மஞ்சள் பூசுங்க தனா.. எல்லா வகையான ஸ்கின்னுக்கும் அது நல்லம்..ஒரு பக்க விளைவும் இல்ல..' பழகிய சில நாளிலேயே ரமணி வழங்கிய அறிவுரையை, அது ஒன்று தான் குறை எனக்கு, நான் எப்படியோ இருக்கிறேன், யார் பார்க்க போகிறார்கள் என்னை என்ற விரக்தி மனநிலையில் ஒதுக்கி விட்டாள்.

"இந்த லெட்டர்ஸ ஃபைல் பண்ணுங்க" என ஒரு கட்டு பேப்பரை ட்ரெயினிக்கு வேலையாக ஒதுக்கியவள், காலை உணவுக்கு அமரும் போதும் அதே வகை பாராட்டை ரமணி வாயாலும் கேட்டாள்.

அவள் அகத்தையே படிக்கும் ரமணி, முகத்தை படிக்காமலா விடுவார்.

"நல்ல செஞ்செழிப்பா இருக்கு தனா முகம் இண்டைக்கு" என்றவர் "என்ன விசேஷம்?" என பொடி வைத்து சிரிக்க,

வரோதயன் தந்த பரிசின் மாயம் அதுவென அவராக ஒரு கற்பனையில் மிதப்பார் என ஊகித்தவள்,

"காலையில தங்கச்சி எதையோ பூசி விட்டாள் அக்கா..முல்தானி மெட்டியாம்.."

"நல்லம் தனா, இயற்கையாகனதுகள பூசினால் நல்லம். முகம் எவ்வளவு பொலிவா இருக்கு பாருங்க. வேற ஒருவரும் சொல்ல இல்லையா?" என அதையும் கண்கள் சிரிக்க அர்த்தமாகவே வினவ, வரோதயன் அவள் கண் முன் வந்து போனான்.

அவனை அவள் நேருக்கு நேர் இன்னும் சந்திக்கவில்லை. அவனும் கெனீஷாவும் பின் வரிசையில் கதை பேசியபடி வேலை செய்வதை விழி வட்டத்தில் கண்டிருந்தாள்.

"தங்கச்சிக்கு கோர்ஸ் முடிஞ்சிதா தனா, டெக்னிகல் கொலேஜ் தானே போறா" ரமணி சடுதியாக நிலானி பற்றி விசாரிக்க,

"ஓம் அக்கா. இந்த மாசத்தோட கோர்ஸ் முடியுது.." என்றாள்.

"ட்ரெயினிங் இருக்கு தானே.. இங்க எங்கட ஒஃபிஸ்லயே ஆறு மாசத்துக்கு எடுப்பம். பத்தாயிரம் பேமெண்ட் கிடைக்கும். உதவியா இருக்கும் உங்களுக்கு"

"நானே அதைப்பத்தி கதைப்பம் எண்டு இருந்தன் அக்கா. நீங்க தான் கதைக்கணும் சேர்ட.."

"கோர்ஸ முடிஞ்சதும் லெட்டர் எடுத்து கூட்டிட்டு வாங்களன். நான் கதைக்கிறன்.."

உப்பு மாவை டிஃபன் பாக்ஸ் மூடியில் பங்கு பிரித்து அவருக்கு கொடுத்தவள் நிலானி நறுக்கிப் போட்ட காரட் பீன்ஸ்களை பொறுக்கி ஒன்று சேர்க்கும் அநாவசிய வேலையில் இறங்கி "அக்கா.. நிலானி.." என குரலை இறக்கும் போது,

"ரமணி மிஸ், சேர் வரவாம்!" என பாலசிங்கம் வந்தார்.

"என்னையா??" உண்ட பாதியில் எழுந்து கை கழுவிய ரமணி செல்ல, தனா தனித்துப் போனாள்.

வழக்கமே இது. மாகாண பணிப்பாளர் அழைக்கும் போது காலுக்குள் நிற்க வேண்டும். AO, CC மாத்திரம் அல்ல அனைவருக்குமே இது பொருந்தும். நிமிடம் தாமதித்தாலும் பணிப்பாளரின் அதிருப்திக்கு ஆளாகி கோபத்திலும் விழ வேண்டி வரலாம்.


ரமணி, பட்டர் பூசிய ஆட்டா மா ரொட்டி எடுத்து வந்திருக்க, நிலானி செய்த உப்புமாவை முடித்த பிரார்த்தனா, ரொட்டியில் கடிக்கும் போது டைனிங் அறையுள் பிரவேசித்தான் வரோதயன், அவன் பின்னாலேயே கெனீஷா.

"போதும் கெனி.."

"உங்களுக்காகவே மெனெக்கெட்டு எடுத்து வந்தால் போதும் என்றிங்கள். ரெண்டு தான் மிச்சம் வரோ.. சாப்பிடுங்க"

"போதும். நான் இனிப்பு பெருசா விரும்புற இல்ல..."

அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் தோள் அளவு வளர்ந்து கெட்ட கெனீஷா, கையில் உள்ளதை அவன் வாயிலேயே அடைத்து விட்டாள்.

ஊட்டியதை விழுங்கியவன் கெனீஷாவை கோபிக்கவில்லை.

"ஷர்ட்ட பழுதாகிப்போடாத.. whiteஷர்ட்.."

"ஸ்வீட் பிடிக்காம யாரும் இருப்பாங்களா.. ஓவரா பண்றீங்கள்"

"நல்ல வேளை குலாப்ஜாமுனா போனது. லட்டா இருந்தால் என்ர கதை முடிஞ்சிது.."

கடித்த ரொட்டியை மெல்ல மறந்து, இருவரையும் பார்த்தாள் பிரார்த்தனா.

"குலாப் ஜாமூன்ர அருமை தெரியுதில்லை உங்களுக்கு. சரி வாய துடையுங்க. வடிவா துடையுங்க. மீசையில ஒட்டி இருக்கு பாருங்க.." பிராத்தனாவும் அங்கிருக்கிறாள் என்று கண்டு கொண்டதும் கெனீஷாவுக்குள் ஏதோ ஒன்று உருக்கொண்டு தாராளமா அவனைத் தொட்டுப் பேசினாள்.

எவ்வளவு நேரம் மெல்லாது வைப்பது ரொட்டியை. உமிழ் நீருடன் தாக்கம் புரிந்தது நுனி நாக்கில் இனிக்க, கடினப்பட்டு விழுங்கி மிகுதியை சுற்றி வைத்து எழுந்தாள்.

அவள் கை கழுவ வரும் போது தான் வரோதயன் கண்டான் அவளை. தித்திப்பை விளங்கி அவளிடம் புன்னகைக்க பிரார்த்தனா நிமிர்ந்து பார்த்தாள் இல்லை.

அவன் இழைத்த தவறென்னவென்று வரோதயனுக்கு தெளிவில்லை.

அலுவலகத்தில் அவளிடம் பேச வாய்ப்பு அமையாமற் போக, இரவுக்கு காத்திருந்து, சரியாக எட்டு மணிக்கு "ஹாய்" அனுப்பினான்.

இது ஒரு எளிய கணக்கு. அவன் தாய் காமாட்சி அடுப்படி வேலை முடித்து ஆறுதலாக அமரும் நேரம் எட்டு மணி. பிரார்த்தனாவுக்கும் வீட்டில் வேலை இருக்கும் என்று எட்டு மணிக்கு பிறகே கூப்பிடுவான்.

நேற்று போல இன்றும் பதில் இல்லை.

"தம்பி சாப்பிட வா.."

உணவு முடித்து ஒன்பதுக்கு "தூக்கமா?" எனக் கேட்டான்.

இரண்டு செய்திகளையும் பூட்டிய திரையில் படித்தவள் புலனம் திறந்து உட் செல்லவில்லை. திமிராகவே அலட்சியம் செய்தாள்.

"பிராத்தி" ராஜேஸ்வரி அழைத்தார்.

"கூப்பிட்டிங்களா?"

"வந்துட்டாளா நிலானி?"

குண்டூசியால் குத்திய பலூன் போல வரோதயன் மீது குவிந்திருந்த கவனம் வெடித்துப் பறக்க, தங்கை இன்னும் வீடு வரவில்லை என்பது உறைத்தது.

"இல்ல.. வருவா"

"நேரம் என்ன இப்ப? அப்பன் மகன தான் தங்கட கோலத்தில விட்டாச்சுது. இந்த பிள்ளைக்கு என்ன துணிவு??"

அவர் அரட்ட ஆரம்பித்தார்.

ஐந்து, ஆறு, ஏழு என தாமதித்து இருக்கிறாள்.

எட்டு ஆகியதில்லை. இன்று ஒன்பதும் கடந்து விட்டது. ஏன் வரவில்லை.

மிச்சம் மீதியுள்ளதையும் பறக்க விட்டு விட்டாளா?

என்ன செய்கிறாள்? எங்கே நிற்கிறாள்?

கோபத்துடன் தங்கைக்கு அழைத்தாள். நிலானியின் எண் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: நான் அறிய நீ - 09
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
அச்சோ எங்க போனாலோ????
லவ் பண்றவன் நல்லவன் தானா?????
என்னவாம் இந்த கோணி பைக்கு😬😬😬😬😬😬