• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நான் அறிய நீ - 21

STN - 85

New member
"என்ன இதுல படுத்திருக்கா?" என்ற கேள்வியில் முழிப்புத் தட்டியது பிரார்த்தனாவுக்கு.


லுங்கியை மடித்து கட்டிய விமலன் கொல்லைப்புறம் செல்ல, ஒற்றை கையில் தலை வைத்து படுத்து விட்டவள் எழுந்தமர்ந்தாள்.



வைகாசி வெயில் பாதி வராண்டாவை ஆக்கிரமித்திருக்க, நாற்காலியில் மடக்கி வைத்த கால் இரண்டையும் பிரித்து தரையில் வைத்தாள்.



நேரம் ஏழு இருந்து எட்டுக்குள் இருக்கலாம்.



விடியல் விழிப்பு இயல்பாக நிகழ வேண்டும். ஆறாகிட்டா.. அஞ்சாகிட்டா எனப் பதறாமல் தூக்கம் கலைய வேண்டும்!



பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில் இருந்தே, வீட்டு வேலைகளை கவனிக்க பொழுது புலர முன் கண் கசக்கி படுக்கையை பிரியம் இல்லாமல் பிரிவது பழகிவிட்ட ஒன்று பிரார்த்தனாவுக்கு.



அவள் ஒத்தாசை புரியாமல் சிறு சம்பல் கூட அரைக்க மாட்டாள் தாய் ராஜேஸ்வரி.



தேங்காம் துருவு.. சின்னச் சீரகம் எடு.. அடுப்ப பாரு.. உப்பு எடு.. புளி கரை..



ஏவிக் கொண்டே இருப்பாள்.



சிறு பராய சர்விஸ் தான், தாய் அடுப்பங்கரையில் இருந்து விரைவில் ஒதுங்கவும் மகள் பொறுப்பேற்கவும் தோதாகியது.



தனக்கென ஒரு வேலையும், வருமானமும் தேடிக் கொண்டாலும் வீட்டில் வேலை செய்வது விதிக்கப்பட்டது.



புடவை கடையில் பாதம் வலிக்கு நின்றும், ஸ்டூடியோவில் இருக்கை தந்தும்,
அரசு உத்தியோகம் எடுத்த பிறகே ஆசுவாசம் கிடைத்தது.



அங்க என்ன இரும்பு அடிக்கிற வேலையா, கல்லுடைக்கிற வேலையா.. மேசை கதிரைல இருந்துட்டு வார தானே..எனும் ராஜேஸ்வரி
அலுவலகம் இருந்து அவள் வருவதற்கே காத்திருப்பார்.



கோப்புகளோடு மல்லுக்கட்டி மாடிக்கும் தரைக்கும் ஏறி இறங்கி பப்ளிக் நாளில் ஆளுக்கு ஒரு சிக்கலுடன் வரும் டீச்சர்ஸை சமாளித்து பணி முடித்து வீடு சேரும் போது சீமெந்து வாளி சுமந்த சித்தாள் மாதிரி மனசும் உடம்பும் சோர்ந்து போய் கிடக்கும்.



கைப்பையை கழற்றி வைக்க மட்டுமே அவங்காசம் கிடைக்கும் வீட்டில். சுழல வேண்டும்.



சனி ஞாயிறில் மேலதிக நேரக் கடமைக்கு ஓடுவாள். மாசம் எட்டு பத்தாயிரம் அதிகமாக கிடைக்கும். மாச செலவுக்கு ஆகும் அது. பொது விடுமுறை ஒன்றைத் தவற விட்டாலும் மாச கடைசியில் துண்டு விழுந்து ரமணியிடம் கை மாறும் நிலை வரும்.



OT செய்யும் உத்தியோகத்தர்களுக்கு விடுமுறை தருவதற்கு நிர்வாகம் விரும்புவதில்லை.



இந்த வருடம் பிறந்து ஆறு மாதம் முடியவில்லை. விடுமுறை கணக்கு எகிறி விட்டது. ராஜேஸ்வரியுடன் ஆஸ்பத்திரியில் நின்றது, நிலானியை தேடி அலைந்தது, இதோ, கந்தளாய் போய் பார்த்தீபனை சந்தித்து வந்த பிறகு எடுத்து நிற்கும் லீவு என்று கணக்கு கூடி விட்டது.



"என்ன, இண்டைக்கும் வேலைக்கு போகல்லயா?" கொல்லைக்கு சென்றவன் கால் நனைத்து வந்து கேட்டான்.



கண்ணோடு சேர்த்து முகத்தை கசக்கி எழுந்தவள் உள்ளே சென்றாள்.



ராஜேஸ்வரி இன்னும் உறக்கத்தில் இருக்க, வருணனும் எழந்திருக்கவில்லை.



அறை ஜன்னல் திறந்து கலைந்த முடியை கோதிக் கட்டினாள். கை தூக்கி கூந்தலை முடியக் கூட சோம்பலாக இருந்தது. உடம்பு கல்லை விழுங்கியது போல கனத்தது.



பெண் சுதந்திரம் என்பது என்ன?



ஊர் சுற்றுவதா?



விரும்பியதை உடுத்துவதா?



நினைத்ததை தின்பதா?



வேண்டும் பொழுது வேலையை ஒதுக்கிப் போட்டு கை கால் பரப்பி தளர்த்தி விழுந்து ஓய்வெடுக்க முடிகிறதா ஒருத்தியால்? அவள் சுதந்திரமாக சுவாசிக்கிறாள்.



பெண்களின் குறைந்த பட்ச கனவும் அதுவே.



அலுவலக பணிக்கு லீவு போடலாம். வீட்டு வேலைக்கு?



டம்பளரில் நீர் நிரப்பவும் வளைகரம் வேண்டி இருப்பது பெண்களுக்கு சாபக்கேடு.



வேலைக்கு லீவு போட்ட பிரார்த்தனா டீ ஊற்ற எழுத் தான் வேண்டும். சமையலை கவனிக்க வேண்டும், பா்திரம் கழுவ வேண்டும்.


உறங்கம் வராமல் விழித்துக் கிடந்து, சாமத்தில் எழுந்து வராண்டா இருட்டுக்கு துணை இருந்து, கண் அசந்து ஒரு பக்கமாக சாய்ந்த கழுத்து நெறி கண்டிருக்க, அதை தடவினாள்.



"தேத்தண்ணி ஊத்தல்லயா?" விமலன் எட்டிப் பார்த்தான்.


"வாரன்.."


"என்ன நிண்டுட்டே நித்திர கொள்றியா? எஸ்டிமேட் வச்சன், பாத்தியா?"


"எங்க?" கண் மூடி கழுத்தை நீவிக் கொண்டே கேட்க,



"எங்கயா? நேற்று வச்சன். உன்னிட்ட சொல்லிட்டு தானே வச்சன்" தம்பி வள் என விழுந்தான்.



இமை திறந்து "லோனுக்கு கதைச்சிருக்கன் விமல். உன்ர கைக்கு காசு வரும்.."



"இதே தான் நாலு மாசமா சொல்றிங்க. எஸ்டிமேட் கேட்டது பொய்க்கு தானே? என்னில நம்பிக்கை இல்லாம தானே? தங்கச்ச நம்பி எவ்வளவு செலவழிச்சிருப்பா.. ஏமாத்திட்டு ஓடிப் போனாள்.. ஏமாத்துறவங்கள தான் நம்புவாய் நீ.."



"ஓம்! நான் ஏமாளி தான். நீங்க புத்திசாலியா இருந்தா சந்தோஷம்"

உடற் பாரத்தை தூக்கிப் போட்டு வீட்டு வேலையை கவனிக்கச் சென்றாள்.



உள்ள செல்வத்தை அழித்தொழித்தானே தகப்பன், சேர்த்து வைக்கும் திறமையற்று போறாளே தாய், எதிர்காலத்திற்கு என்ன நன்மை செய்துள்ளாள் அக்கா? என்று புருபுருக்க ஆரம்பித்தான் விமலன்.



அவ்வளவு தான். இரண்டு நாளாக மீள முடியாது தவித்த பார்த்தீபன் ஓரம் ஒதுங்கி, இழுபறியில் கிடக்கும் டிப்பார்மன்ட் கடனைப் பெறும் வழி என்ன என்று தலை வலித்தது.



ஒன்பது மணிக்கு ரமணி அழைத்தார். "அட்டன்டன்ஸ் களோஸ் பண்ண போறன், ஷோட் லீவா நீங்க?" என்று கேட்டார்.


அலைபேசியை சத்தமாக வைத்து பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தவள் "லீவ் போடுங்கக்கா" என்றாள்.



"இண்டைக்கு வாரன் எண்டிங்க!"



"நாளைக்கு நாளையண்டைக்கெல்லாம் ஹொலிடே தானே..திங்கள் வாரன்"



"தனா?"



"சமாளியுங்க அக்கா.."



"இப்புடியே எத்தின நாளைக்கு தனா? எடுக்கிற லீவு பிரயோசனமா இருக்கணும். நான் சொன்னத பத்தி யோசியுங்க. எனக்கு நல்ல முடிவா சொல்லணும்.."




"என்னப் பத்தி யோசிக்கிற நேரம் நீங்க, பாலு ஷாலுவ பத்தி நினைச்சாலாவது பிரயோசனம் ரமணி"



"இந்த கதை வேணாம். உங்கட வீட்ட நிண்டால் தெளிவு வராது. ஒழுங்கா ஒஃபிஸ் வெளிக்கிட்டு வரப் பாருங்க.." கண்டித்து விட்டே வைத்தார் ரமணி.



காலை உணவு பரிமாறும் போது ராஜேஸ்வரி கேட்டார். "ஏன் வேலைக்கு போகாம நிக்கிறாய்?" என்று.



"நிக்கிறன்.." என்பதோடு முடித்து விட்டவள், வீட்டை ஒதுக்கி விட்டு படுக்க, வரோதயனிடம் இருந்து அழைப்பு வந்தது.



ரமணி வந்து போன பிறகு அவனிடம் இருந்து கிடைக்கும் நான்காவது அழைப்பு இது.



கடந்தவை போலவே இதைவும் ஏற்காமல் விட்டவள் அழுக்கு நைட்டியுடன் படுத்திருக்க, மோட்டார் வாகன சத்தம் கேட்டது கேட்டில்.


ஜன்னலில் பார்த்தாள். கருப்பு கார் வீட்டு முன் தரித்திருக்க, நிலானி அதிலிருந்து இறங்கி நின்றாள் தனது காதலனுடன்.

அல்ல,


காதலன் அல்லவே அவன், கணவன்.



வண்டிக்குள் தலை விட்டு சாரதியிடம் பேசியவனை இணைத்துக் கொண்டு கேட் திறக்கிறாள்.



ஜன்னல் விட்டு விலகி சுவரில் சாய்ந்த பிரார்த்தனா நம்பவில்லை, நிலானி வந்திருக்கிறாள் என்பதை.



வருவேன் என்று எப்போது இருந்தோ சொல்கிறாளாம் தாயிடம். அவள் எங்கே இனி இந்தப் பக்கம் வருவது என்று நினைத்து இருந்தாள்.



வந்திருக்கிறாள்.



என்னவாக இருக்கும்?



உள்ளே அவர்கள் நுழையும் அரவம், அம்மா என்று அழைக்கும் சத்தம் கேட்டது.


"பிரார்த்தி" ராஜேஸ்வரி கூப்பிடுகிறார்.



"பிரார்த்தி!" அவரே எழுந்து செல்வதும் விளங்குகிறது.



கதவைத் தாழ் நீக்கியதும் அமைதி நிலவ, வந்தவர்கள் உள்ளே நுழைவதை உணர முடிகிறது.



"வா.. நல்ல பிள்ள நீ.. இப்ப தான் வழி தெரிஞ்சிருக்கு" ராஜேஸ்வரியின் குரல் தழுதழுக்க, அடடா அதிசயம், நிலானி கூட அன்பாக பேசுகிறாள் தாயிடம்.



நல்லது!



சுவரோடு வேர் பிடித்து நின்றாள் பிரார்த்தனா. அழுக்கு நைட்டி, வாரிச் சுற்றிய சிக்குக் கொண்டைக் கோலத்தில் வெளியே செல்ல இயலாது என்று வந்தவர்களை தவிர்க்க காரணம் கற்பித்துக் கொண்டாள்.



"நிண்டு போறியா நிலானி?"



"இல்லம்மா, உன்னப் பார்க்க தான் வந்தன்.. சொன்னன் தானே வருவன் எண்டு. ரிஷி கம்பனி வேலையா வந்தார்.. நானும் வெளிக்கிட்டன். இப்ப போகணும்"



"இங்க என்ன வசதி இருக்கு, உங்கள நிக்கச் சொல்ல.. கவனமா போங்க! பார்த்துக் கொள்ளு தம்பி. உதவிக்கு சனம் இருக்கா உங்கட பக்கம்? மாமனார் மாமியார் எல்லாம் நல்லமா?"



"அம்மா, எல்லாம் நான் சொல்லி இருக்கிறன் தானே.. அவர என்ன கேக்குறிங்க.. நான் பொயிட்டு திரும்பி ட்ரிங்கோ வரக் கிடைச்சா கட்டாயம் வருவன்.."



அரை மணி நேரமே கழிந்திருக்கும். யுகம் யுகமாக அறையில் அடைந்திருப்பது போல பிரார்த்தனாவுக்கு புழுங்க, உடை மாற்றி போய் வந்த பெண்ணை காணுவோமா.. என்ற எண்ணம் தலை தூக்கையில்,
வெளியே பேச்சு சத்தம் அடங்கி பிரார்த்தனாவுள் வெறுமை படர்ந்தது.



எட்டி ஜன்னலில் பார்த்தாள். கார் நிற்கிறது. சாரதி இறங்கி வீதியை வேடிக்கை பார்க்கிறான்.



இன்னும் போகவில்லை. பிறகு சத்தம் இல்லையே?



பின்னால் அரவம் உணர்ந்து திரும்பினாள்.



நிலானி நின்றிருந்தாள் கதவில்.



குறைந்த பட்சம் பத்து வித்தியாசம் சொல்லலாம் நிலானியில், அன்று கண்டதற்கும் இன்று காண்பதற்கும்.



எடை அதிகரித்து, நிறம் கூடி, மினுமினுப்பாகி செழுமையடைந்திருந்தாள்.



தொள தொள சட்டை அணிந்திருந்த அவளது மேடிட்ட வயிற்றில் பார்வை தன்னிச்சையாக படிய, உள்ளே வளரும் சூலின் பெரியம்மா வயிற்றில் சிலிர்க்கிறதோ...


"ஒஃபிஸ் போயிருப்பாய் எண்டு நினைச்சன் அக்கா.." நிலானியின் பேச்சில் சிறு தடுமாற்றம்.



இறுகி நின்றிருந்த பிரார்த்தனா விறைப்பாக ஏறிட்டாள்.



"அண்டைக்கு உன்னிட்ட கேட்கத் தோணல்ல.. கேட்டிருந்தாலும் உண்மையா உணர்ந்து கேட்டிருக்க மாட்டன்.. சொறி!!"


பிரார்த்தனா அசரவில்லை.


"நான் உனக்கு ஒண்டுமே செய்யல்ல. நீ எனக்கு எல்லாமே செய்து இருக்கா.. இப்ப நான் இப்ப அம்மா ஆக போற நேரத்துல தான் தெரியுது அதெல்லாம்.."



"இன்னும் நிறைய சொல்ல தோணுது... உன்ன துன்பப்படுத்தனதுக்கு சொறி! எனக்காக நீ பதறுவாய்எண்டு நினைக்கல்ல.. "



பிரார்த்தனாவுக்கு புதிதாக இருந்தது. யாரும் அவளிடம் மன்னிப்பு கோரியதில்லை. அவள் அன்பு புரிந்து நன்றி நவில்ந்ததும் இல்லை.



கையிலுள்ள பையை காட்டி, "இது உனக்காக வாங்கிட்டு வந்தன். சல்வார். இந்தக் கலர் உனக்கு வடிவா இருக்கும்.." அழுக்கு நைட்டிக்காரியை பாசப் பார்வை பார்த்து விட்டு படுக்கையில் ஜவுளிப் பையை வைத்து விட்டு சென்று விட்டாள் நிலானி.


பிரார்த்தனாவால் தான் நம்ப இயலவில்லை.


கார் சத்தம் கரைந்த பிறகு வெளியே வந்தாள். ராஜேஸ்வரி முகத்தில் பூரிப்பை கண்டாள்.



"மனசுக்கு திருப்தியா இருக்கு பிள்ள.. நல்ல பொருத்தமா இருக்கிறான் பெடியன்.. சும்மா பேச்சளவில சொல்றா.. எங்க வரப் போறா எண்டு நினைச்சன்.. பரவால்ல பாசம் இருக்கு தான்.. இந்தா இத பிடி" என ஒரு கட்டு பணத்தை நீட்ட பிரார்த்தனா புருவம் சுருங்க ஏறிட்டாள்.


"நிலானி தந்துட்டு போகுது.."


"நிலானியா?"


"ஓம் பிள்ள.."




கட்டுப் பெரிது. ஐந்தாயிரம் ரூபாய் நோட்டுகள் அத்தனையும். குறைந்தது ஐம்பதாயிரம் இருக்கலாம்.


விமலுக்கு நூறு கொடுப்பதற்கு சண்டை வலிக்கும் நிலானி அவன் கடை போட காசு தந்து போகிறாளா! பிரம்மித்தாள்.


"விமலுக்கு தொழில் தொடங்க குடுக்க சொல்லி தந்துட்டு போறாள். பிடி.. நல்ல வாழ்க்கைய அமைச்சதும் தன்ர குடும்பம் தன்ர வாழ்க்கை எண்டு ஒதுங்காமல் பிறந்த குடும்பத்த நினைச்சிருக்கு பாரு.. புத்தி உள்ள புள்ள தானும் புழைச்சி தன்னச் சார்ந்தவர்களையும் புழைக்க வைக்கும்.."


விமலுக்கு நூறு ரூபாய் கொடுப்பதற்கு சண்டை வலி்க்கும் நிலானி அவன் கடை போட பணம் தந்து போகிறாளாம். கோணேசர் பூமியில் பூமி அதிர்ச்சி ஏதும் வரப் போகிறதா!



"விமலனும் உருப்பட்டு உன்ர வாழ்க்கையும் ஒரு வழிக்கு வந்தால் போதும்.. என்ர காலம் பொயிட்டுது. இந்த வீட்ட உனக்கு எழுதி ஒரு நல்லத நடத்தி பாக்கணும்.."
ராஜேஸ்வரி பூரிப்பிலும் நம்பிக்கையிலும் பேச, பிரார்த்தனாவோ, நிலானியைச் சிந்தித்தாள்.



*


வெள்ளியோடு இணைந்த பௌர்ணமி தினம் அது.


இலங்கை அரசியல் சாசனம், இலங்கை ஒரு மத சார்பற்ற நாடென்று கூறினாலும், சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் பௌத்த மதத்திற்கு சிறப்பு ஏற்பாடுகளே உண்டு.



சிறுபான்மை மக்களுக்கு அதில் கிடைக்கும் ஒரே நன்மை பௌத்தர்களின் புனித தினமான பௌர்ணமிக்கு பொது விடுமுறை தருவது.



வார இறுதியுடன் பௌர்ணமியையும் சேர்த்து மாதத்தில் குறைந்தது ஒன்பது தினங்கள் ஓவர் டைம் கணக்கு பார்க்கும் பிரார்த்தனா இன்றும் வேலைக்கு கிளம்பாதது ராஜேஸ்வரியை சந்தேகம் கொள்ள வைத்தது.



"என்ன பிரார்த்தி.. ஒஃபிஸ்ல எனவும் பிரச்சினையா?"


"இல்ல! ஏன்?"


"வேலைக்கு போக இல்ல"


"அரசாங்க வேலைல என்ன பிரச்சினை வரப் போகுது? நான் அங்க கல் உடைக்கிறனா, மண் சுமக்கிறனா.. சும்மா மேசை கதிரைல இருந்துட்டு வார தானே.. இங்க வேலை இருக்கு" என்றவள் இழுத்து போட்டு வீட்டு வேலை பார்த்தாள்.


தூசு தட்டி, தரை துடைத்து, அடுப்படி துப்பரவு செய்து,
துணி துவைத்து சமையலிலும் இறங்கிய பெண்ணிடம் “காளி கோயிலுக்கு பொயிட்டு வருவமா..” எனக் கேட்டார் ராஜேஸ்வரி.


அழுக்கு நைட்டியில் இருந்தவள் தலை தூக்கி தாயை ஏறிட்டாள்.


ஆண்டுக் கணக்காகிறது ராஜேஸ்வரி கோவில் குளம் சென்று. கணவனுடன் கசந்ததும் பத்தியை கை விட்டாயிற்று. சாமி பூஜை புரஸ்காரம் என்று முன்பும் அவ்வளவு ஈடுபாடு காட்டியதில்லை தான். ஆனாலும், ஒரேயடியாக ஒதுக்கியதும் இல்லை.



இளைய பெண் வந்து போன சந்தோஷம், நிலானி நன்றாக வாழ்கிறாள் என்ற மகிழ்ச்சி, மகனுக்கு நல்லது நிகழப் போகிற நம்பிக்கை, சாமியை எண்ணிப் பார்த்து இருக்கலாம்..


வெள்ளிக்கிழமை சமையலை, கீரை, கத்தரிக்காயுடன் எளிதாக முடித்து விட்டு தலைக்கு குளித்தவள், ராஜேஸ்வரியை தயார்படுத்தினாள்.


என்ன புடவை உடுத்த போகிறார் எனக் கேட்க,

"நிலானி வாங்கி வந்தத எடன்!" என்றார்.


"அதையா! அதுக்கு ப்ளவுஸ்?"


"பழச ஒண்டு பொருத்தமா எடன்.."


சித்திரை பொங்கலுக்கு வாங்கிக் கொடுக்கும் துணியை ஒரு நாளும் பண்டிகை அன்றே உடுத்தியதில்லை ராஜேஷ். ஆஸ்பத்திரி க்ளினிக் போகும் போது அணிந்து கொள்வார். எனக்கு என்ன பண்டிகையும் கொண்டாட்டமும் என்று ஒரு பிடிவாதம் அது.


நல்ல பாம்பழ மஞ்சளில் சில்க் புடவை வாங்கி வந்திருந்தாள் நிலானி. பச்சை வண்ண ஜாக்கெட் கொடுத்து உடுத்தி விட்டவளுக்கு, 'இது உனக்கு' என்று வைத்துப் போன பையை பிரித்துப் பார்க்கும் ஆர்வம் வந்தது.



பிரித்தால், அடர் சிவப்பு சுடிதார் கவர்கிறது.


'எனக்கு நீ உடுப்பு எடுக்காத. உனக்கு கலர் பார்த்து எடுக்க தெரியாது. நீ எடுத்தா டல்லா தெரிவன் நான். காச தா, நான் எடுப்பன்' என்பாள் ஒவ்வொரு தைப்பொங்கல் சித்திரைக்கும் நிலானி.


அந்த சண்டைகார முரட்டு வாண்டு இன்று பிரார்த்தனாவுக்கு துணி எடுத்து வந்திருக்கிறது.


பார்த்தீபன், ரமணி, விரோதயன், விமலன் என அலைக்கழிந்தவள் சிவப்பு சுடிதாரில் செஞ்செழிப்பாக திகழ்ந்தாள் கண்ணாடியில்.


ஆட்டோவை வரவழைத்து ராஜேஸ்வரியை உட்கார வைத்து அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.


திருகோணமலை நகர் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் ஆலயம். அம்மாளாச்சி ஆட்சியில் திருகோணமலையில் நல்லாசி கிடைப்பதாக நம்புகிறது ஊர்.


பூரணை விசேஷத்தில் வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர் கூட்டம் அடிப்பட, ஓரிடத்தில் உட்காரக் கேட்டார் ராஜேஸ்வரி.


உள்ளே அமர்ந்ததும் "நீ போய் சுத்தி கும்பிட்டு, தேங்காய உடைச்சுட்டு வா" என்றார்.


"நானா கேட்டன் கோயிலுக்கு வரணும் எண்டு?"


"இந்தக் காலோட கோயில சுத்தி நொண்டி அடிக்கணுமா நான்.. போ பிரார்த்தி"


முன்றலில் கற்பூரம் கொளுத்தி, தேங்காயுடன் சுற்றி வந்தவள் ராஜேஸ்வரி வேண்டியதையே நிறைவேற்றம்மா என்று கும்பிட்டு உடைக்க, கணபதி ஆலயத்தில் இருந்து வெளிவந்த பச்சை வண்ணப் பட்டுப் புடவை அவள் கருத்தை கவர்ந்தது.


"நெருப்பெட்டி இருக்காம்மா?" நேராக வந்து இவளை தான் கேட்கிறார் பச்சை சேலை.


அருகில் அவருடைய முகம் பார்த்துப் புன்னகைத்தவள் கையில் உள்ளதை கொடுக்க, தீ சட்டி எடுக்க வந்திருந்த வரோதயனின் தாய் காமாட்சி மண் சட்டியில் சூடம் கொளுத்தி வேப்பிலையை பந்தாக வைத்து தலையில் சுமந்து கோயிலை வலம் வரச் சென்றார். அவர் கூடவே வயசுப் பெண் சட்டியில் கற்பூரம் போட்ட படி சென்றது.


வேண்டுதலை முடித்து பிரார்த்தனாவை தேடி வந்து இரவல் வாங்கிய தீப்பெட்டியை தந்தார் காமாட்சி.


"பரவால்லம்மா, இருக்கட்டும்"


"நாங்க எடுத்து வந்தத இங்க தான் யாரோ வாங்கினாங்கள்.. மறந்து கொண்டு பொயிட்டாங்கள். நாங்களும் அதே பிழைய விடக் கூடாதே. பிடியுங்க அம்மா"


"தூரத்தில இருந்து வந்திங்களா?"


"நாங்க மூதூர். கற்பூரச் சட்டி எடுக்க நேர்த்தி வச்சிருந்தன். நிறைவேற்ற வந்தன்.." என்றவர் "பஞ்சுவுக்கு எடு! ராசுவையும் காணேல்லயே.." என்றார் கூட நின்ற பெண்ணிடம்.


பிரார்த்தனா அந்த பெயர்களைக் கேட்டதும் புன்னகை விரிய,
"வரோதயன்ர அம்மா தானே நீங்க?" அவரைக் கேட்டாள்.


காமாட்சி அம்மையாரின் வதனம் ஆச்சரியமாக மலர்ந்தது. "தம்பிய தெரியுமா?"


"ம்ம்.." தெரிந்தது கையளவு என்பதாக தன்னடக்கம் காண்பிக்க,


"அத்தான தெரியுமா? மாமிய தெரியுமா.."


"இவங்கள இப்ப தான் பா்குறன்"


"எப்புடி மதிச்சிங்க?" பஞ்சு ராசுவுக்கு மாற்றி மாற்றி அழைத்துக் கொண்டிருந்த பெண்ணும் பேச்சில் கலக்க,


இவர் கட்டி இருக்கும் புடவை இவர் மகன் என்னை கொழும்புக்கு அழைத்து போன நன்றிக் கடனுக்காக நான் அன்பளிப்பு செய்தது என்பாளா, வரோதயனின் பெண் அம்சமாய் அவரில் ஜாடை கண்டேன் என்பாளா?


“யாரோட வந்திங்கம்மா நீங்க?”


“அம்மாவோட.. அங்க இருக்கிறாங்க”


“நல்லம்! தம்பியையும் கூப்பிட்டன். வேலைக்கு போகணுமாம் எண்டார். பூரண நாள்ள என்ன வேலை வைக்கிறாங்க உங்கட ஒஃபிஸ்ல?"


ஒரு நாளேனும் OT க்கு வராத வரோதயன், OT யை தவற விடாத அவள் வருவாள் என்று எதிர்பார்த்து போயிருப்பாராக இருக்கும் என்று எண்ணும் உள்ளத்தில் கிண்கிணி மணி ஒலிக்க,


"மிச்சம் காலமா கேக்கிறம், கல்யாணம் செய் எண்டு. இப்ப தான் ஓம் எண்டு ஒத்து வந்திருக்கிறார். நீ வராட்டி போ தம்பி எண்டு மருமகள கூட்டிக் கொண்டு வந்துட்டன் கோயிலுக்கு..” என்றார் காமாட்சி.

பிரார்த்தனா அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் அந்த பெண்ணைப் பார்த்தாள்.


மருமகள்!


வரோதயனுக்கு பேசி முடித்த பெண்ணா இது??



அவளது நெஞ்சுக் கூடு வெகு வேகமாக உலர்கிறது.
 
Last edited:
Top Bottom