• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நான் அறிய நீ - 23 (ப்ரீ ஃபைனல்)

STN - 85

Moderator
உங்கள மனசுல வச்சி தான் கல்யாணத்துக்கு ஓம் சொன்னேன் என்றவனை இமைக்காமல் பார்த்தாள் பிரார்த்தனா.



அவன் வரிக்கு வரி வலியுறுத்தி கொண்டே இருக்குறான். அவளுக்கு தான் அதன் வீரியம் தாங்குதில்லை.



அவளது சளைக்காத பார்வையில் அவனுக்கு நாணத்தோடு தொடர்பு பட்டதோர் உணர்வு படர்ந்தது. மீசை ஓரம் குறுநகையை பேணினான்.



"புதுசா சொல்லயே நான்.. ஏற்கனவே நிறைய தடவை சொன்ன ஞாபகம்"



"என்னப் பற்றி எல்லாம் தெரிஞ்ச பிறகும் மாறல்லயா அந்த எண்ணம்.."



"தெரிஞ்ச பிறகு தான் இன்னும் ஸ்ட்ரோங்காகி இருக்கு"



"என்ர கடந்த கால வாழ்க்கை, ஃபெமிலி சிட்டுவேஷன்.. இதெல்லாம் தெரிஞ்சுமா வரோதயன்??"



"ஏன் நம்ப மாட்டன் என்றிங்க?"



"நான் கொஞ்சம் சிக்கலான ஆள் வரோதயன். நீங்க பார்த்தத வச்சி, கேட்டத வச்சி மட்டும் கல்யாணம் வரை யோசிக்கிறிங்களே எண்ட பயம் தான்.."



"பயமுறுத்துறிங்களா.. ஆனா நீங்க தான் பயந்திருக்கிறீங்க.. பிரச்சினை இல்ல.. வெளிய வந்திரலாம்.."



"என்னப் பற்றி உங்களுக்கு தெரியாது"



"தெரிஞ்சி கொள்ள இன்னும் என்ன இருக்கு?"



"நிறைய இருக்கு.." உறுதியாக சொன்னாள்.



"சொல்லுங்க! தெரிஞ்சி கொள்றன்!" தயாராக அவள் புறமாக சாய்ந்தமர்ந்தான்.



"நானே சொல்லவா? தங்களப் பற்றி தாங்களே குறைவா சொல்ல மாட்டாங்க. நான் தான் சரி என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும்"



"சரி"



"என்ன சரி?"



"நீங்க சொல்றது சரி"



"போட்டிக்கு கதைக்கிறிங்க வரோதயன்.."



"உங்களுக்கு சார்பா தான் கதைக்கிறன்.."



"அத தான் பிழை என்றன்.."



"சரி, இன்னும் எவ்வளவு காலம் தேவை உங்களப் பற்றி நான் தெரிஞ்சி கொள்ள?"



இருவரும் எதிர் எதிர் சோஃபாவில் உட்கார்ந்து இருக்க, வரோதயன் சோஃபா நுனிக்கு வந்திருந்தான்.



"இப்படி கேட்டால் எப்புடி?"



"நீங்களா முன்வந்து நாம கல்யாணம் செய்வம் எண்டு சொல்லும் வரைக்கும் வெயிட் பண்றன் நான்.."



பிரார்த்தனா அவன் கண்ணையே பார்த்தாள். இதழை நாவால் ஈரம் செய்தாள்.



"நான் தீபன் அத்தானுக்காக காத்திருந்தவ.. எப்பயாவது தேடி வருவார், வரும் போது அவருட வைஃபாவே இருக்கணும் எண்டு நினைச்சி இருந்தவ. லவ் பண்ணின காலத்தில இருந்த மாதிரியே அவர் என்ன விட்டுட்டு போன பிறகும் உண்மையா இருந்தவ.."



வரோதயன் கனிவாக பார்த்தான் அவளை.



"தீபன் வேற குடும்பம் அமைச்சிக் கொண்டார் எண்டு தெரிஞ்ச உடனே, நானும் அதுமாதிரி.."



அவனுக்குப் புரிந்தது.



"விளங்குது பிரார்த்தனா.... நீங்க டைம் எடுங்க.. அவசரம் இல்ல. வெயிட் பண்றன் நான்"



"நான் எண்டு உங்களப் பற்றி மட்டும் கதைக்கிறிங்க.. உங்கட வீட்டுல ஒத்துக் கொள்வாங்களா.. உங்கட அம்மா விரும்புவாங்களா? பிராக்டிகலா கதையுங்க!"



சிறு சிரிப்புடன் வரோதயன் வாதிட்டான். பெரு அவஸ்தையுடன் அவனது அலையில் பிரார்த்தனா அடிபட்டாள்.



கமுக்கமான சிரிப்புடன் பாலாவும், பளீர் சிரிப்புடன் ரமணியும் மெள்ளப் பிரவேசித்தனர்.



தனா எழுந்து நிற்க,



"இருங்க பிள்ள. நீங்க ஒண்டும் சொல்லத் தேவையில்ல. டிஸ்ரர்ப் பண்ணதுக்கு சொறி! நேரம் பாருங்க. வரோதயன் இனி மூதுர் போகணும்"



ஓடருக்கு எடுத்த இரவு விருந்திற்காக கை நனைத்து எழுந்தனர்.



வரோதயனே பிரார்த்தனாவை அழைத்து செல்வது என்பது அவர்களது அடுத்த திட்டமாக இருந்தது.



"நான் வரத் தேவையில்ல தானே தனா, போவிங்க தானே.." வாசலுக்கு வந்த பிறகு பாலு கேலி செய்தார்.



"பகிடி பண்ணி பிள்ளைய குழப்பாதிங்க. பொயிட்டு வாங்க வரா. தனா, வழி சொல்லுங்க.."



"அதெல்லாம் அவ வடிவாச் சொல்லுவா.. நீ யோசிக்காத ரமணி .."



கேட்டில் நின்று கிண்டல் செய்தபடி வழி அனுப்பி வைத்தனர்.



வாகன விளக்குகள் மின்னிய திருகோணமலை சாலையில் பிரார்த்தனாவை ஏற்றிக் கொண்டு கலந்தான் வரோதயன்.



"ரமணி அக்காவா இன்வைட் பண்ணின, பிறந்த நாளுக்கு?"



"மகளுக்கு பிறந்த நாள் எண்டு தெரியாது எனக்கு. நீங்க வருவீங்க. வந்து கதையுங்க வரா எண்டு கூப்பிட்டாங்க"



அலுவலகத்தில் கண்ட அதே உடையில் அவன் இருப்பதை வியர்வை வாசம் உணர்த்தியது.



மனம் விரும்பும் பெண்ணைக் கவர, வானத்தை வளைக்க வேண்டில்லை. இது போன்ற சிறு சிறு தியாகங்களும் பெண்மையின் பூட்டுகளைத் திறக்கும். பிரார்த்தனா அவன் வாசம் சுவாசிப்பது புதிதுமல்ல.




"அந்த ஜங்ஷன்ல நிப்பாட்டுங்க வரோதயன்.."
"ஏன்?"
"பைக்ல போய் இறங்கினா பாக்குறவங்கள் ஏதாவது சொல்வாங்கள்.."



"யாருக்கு பயப்படுறிங்க?"



"பயம் இல்ல. அப்பாவே பட்டம் கட்டிட்டார். வேற ஆக்கள் சொன்னால் என்ன? நீங்க இதுல நிப்பாட்டுங்க"



சந்தியில் நிறுத்தினான். சட்டெனக் கவ்விய கனமான மௌனத்துடன் விடைபெற்றவளை நிறுத்தி, பாக்கெட்டில் இருந்தை எடுத்து நீட்டினான்.



வீதி விளக்கு வெளிச்சத்தில் அது என்னவென்று தெரிந்ததும் ஏன், எப்படி என்று பார்த்தாள்.



எதுவுமே சொல்லவில்லை அவன். சிறு புன்னகையுடன் கிளம்பி விட்டான்.



நடையில் வீடு வந்து சேர்ந்தாள். கை பைக்குள் வைத்ததை எடுத்தாள். வட்ட, கோபுர வடிவ பொட்டுப் பாக்கெட்டைப் பிரித்தாள். வரோதயன் தந்ததில் ரத்த சிவப்பு வட்டப் பொட்டு எடுத்து சுடிதாருக்கு பொருத்தமாக வெற்று நெற்றியில் ஒட்டிப் பார்த்தாள்.



பொட்டு தவிர்ப்பும் அலங்காரத் தவிர்ப்புக்குள் அடக்கம். தீபனை பிரிந்த பிறகு திலகம் வைப்பதில்லை.
புருவ மத்தியில் ஒட்டிய சிவப்பு புள்ளி முகத்திற்கு பிரகாசமான சோபை கொடுத்தது.



கண்ணாடி முன் வெகு நேரம் நின்றாள். உடை மாற்றி ரமணி கட்டித் தந்த உணவை ராஜேஸ்வரிக்கு வைத்துக் கொடுத்து, அப்பா தம்பிக்கும் எடுத்து வைத்து விட்டு ஃபோன் பார்த்தாள்.



மெசேஜ் வந்ததிருந்தது "சேஃபா போனிங்களா?" என்று.



"நான் கேக்கணும். நீங்க பொயிட்டிங்களா?"



"வந்துட்டன். ஜங்ஷன்ல விட்டுட்டு வந்தது ஒரு மாதிரி இருக்கு"



"நோ ப்ராப்ளம் வரோதயன். நான் வந்துட்டன்..கேட்ல இறக்கினா வித்தியாசமா பார்ப்பாங்க. இவ்வளவு நாள் தனியா தான் போனா வந்தா, இப்ப புதுசா யாரையோ புடிச்சிருக்கா எண்டு கதைப்பாங்கள்.."



அவனிடம் பதில் இல்லை.



"நித்திரையா?"



"இல்ல, வராம போகாம இருந்தா எப்டி தெரிஞ்சி கொள்றது எண்டு யோசிக்கிறன்..."



"விளங்கல்ல?"



"திரும்பி வாசியுங்க"



வாசித்த பிரார்த்தனா மௌனமாக இருந்தாள்.



"சரி யோசிக்காதிங்க. உங்கள தொந்தரவு செய்ய மாட்டன். சும்மா தான் கேட்டன்.. உங்களுக்கு பிடிக்காட்டி நான் வர மாட்டன். ஆனா நீங்க வரல்லாம்.."



"நான் எங்க வரணும்?"



"இங்க, மூதூருக்கு, எங்களின்ர வீட்டுக்கு"



புன்னகைத்தாள். அதையே அவனுக்கு ஸ்மைலியாக அனுப்பினாள். ராத்திரி இளகியதாக கழிந்தது.



அடுத்தடுத்த பகல்களும் இரவுகளும் அவர்களுக்காக வந்து போயின. அவர்கள் கதைப்பதற்காகவே பிறந்தன. பகலில் நேரிலும் இரவில் எழுத்திலும் பேசிக் கொண்டனர்.



தனது ஐயத்தை பொருத்தமான ஒரு நேரத்தில் முன்வைத்தாள். "உங்கட அம்மாவுக்கு சம்மதமா வரோதயன்.. அவங்க எப்டி என்னப் போல ஒரு பிள்ளைய மருமகளா ஏற்றுக் கொள்வாங்க?"

அவனும் நேரம் காலம் பார்த்து இருந்தான்.


"கோல் பண்ணவா??" என்று கேட்டான்.



"ஏன்?"



"டைப் பண்ணி விரல் நோகுது"



உரையாடல் அலைபேசி அழைப்பாக விஸ்திரமடைந்தது.



"உங்கள போல எண்டால் என்ன பிரார்த்தனா, உங்களுக்கு என்ன குறைச்சல்?"



"ஏற்கனவே கல்யாணம் ஆகி, ஒத்து வராம ஹஸ்பண்ட் கை விட்டுப் போன ஆள் நான்"



"அப்புடி பார்த்தால் நானும் ஒரு வகையில கல்யாணம் ஆனவன் தான். என்னையும் வேணாம் எண்டு ஒருத்தி விட்டுட்டு போயிருக்கா"



ஏதோ தமாஷ் பண்ணுறான் என்று நினைத்தாள்.



"எனக்கும் ஒரு தடவை கல்யாணம் ஆகி இருக்கு பிரார்த்தனா?" சின்னதாக சிரித்தான்.



பிரார்த்தனா மௌனமாக குழம்ப,



"யுத்த காலத்தில எங்கட தாய்மாருக்கு ஒரு அச்சம் இருந்தது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். போராட்டத்துக்கு ஆள் சேர்க்கிற எங்கட ஆக்கள் ஒரு பக்கம், பதினஞ்சு வயசுக்கு மேல உள்ள தமிழ் பெடியங்கள் பொம்பிளப் பிள்ளைகள பயங்கரவாதியாக பாக்குற சிங்கள ராணுவம் ஒரு பக்கம்"



"ரெண்டு பக்கமும் இருந்து தங்கட பிள்ளைகள காப்பாற்ற தமிழ் தாய்மாருக்கு தெரிஞ்ச ஒரே வழி நாட்ட விட்டு பிள்ளைகள வெளிநாடு அனுப்பிறது, அது ஏலாட்டி, சின்ன வயசுலயே அவங்களுக்கு கல்யாணம் கட்டி வைக்கிறது.."



"இதுல எங்கட அம்மா அப்பா கையில எடுத்த வழி எங்களுக்கு கல்யாணம் செய்து வைக்கிறது. அண்ணாக்கு பதினெட்டு வயசுலயே செஞ்சி வச்சாங்கள். அதே மாதிரியே எனக்கும்..." என்றதும் பிரார்த்தனாவுக்கு இதயம் விட்டு விட்டு துடித்தது.

ஓம்! நிஜம் அது!


பதினான்கு வயதிலேயே பெரிய பையன் தோற்றத்தை அடைந்து விட்டான் வரோதயன். காமாட்சி அம்மாவுக்கு அடிவயிற்றில் பீதி அவனை பார்த்து. இந்தப் பக்கம் விடுதலை போராட்டத்தில் இழுத்து விடுவார்களோ தன் பிள்ளையை என்றும், மறு பக்கம் மீசை வளர்ந்து தோளுக்கு மேல் உயர்ந்த இளந்தாரியை ராணுவம் பகை பாராட்டி இழுத்து போய்விடுமோ என்றும் உயிர் பயம்.



காமாட்சி அம்மா போலவே, இளைஞர் யுவதிகளை வைத்திருந்த தாய்மார்கள் தங்கள் மக்களை காக்க சின்ன வயதிலேயே பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது ஒரு வழக்கம்.



போர் உச்சம் பெற்ற காலம் அது. மூதுர் மக்கள் இடம்பெயர்ந்த காலம். வெளிநாட்டுக்கு அனுப்ப வழி இன்றி மூத்த மகனுக்குச் செய்ததையே இளையவனுக்கும் செய்தார் காமாட்சி.



வரோதயனின் தந்தை வழியில் சொந்தம். அயல வீடும் கூட. மச்சாள் முறை கலைவாணி வரோதயனுடனே படித்தவள். அவளுக்கும் வயதுக்கு மீறிய வளர்ச்சி அந்த பதினைந்து வயதில். வாய் துடுக்கானவள். நன்றாக படிக்க கூடியவள். வரா வரா என்று ராசு பஞ்சு போல, அவன் வட்டத்தில் ஒருத்தியாக வலம் வந்தவள்.



கிபிர் விமானங்கள் தலைக்கு மேல் பறக்க, அடிபாடு உச்சம் பெற்ற காலகட்டத்தில் ராணுவம் ஊருக்குள் ஊடுருவி விட்டிருந்தது. போராளிகள் பின்வாங்கி இருந்தனர். இளம் பிள்ளைகளை காப்பாற்ற வரோதயனுக்கும் கலைவாணிக்கும் முடிச்சு போட்டு கணவன் மனைவி என்று பதிந்தனர் முகாம்களில் தாய் தந்தையர்.



ராசுவுக்கு அர்ச்சனா ஜோடி சேர்ந்ததும் அங்கே தான். பஞ்சுவுக்கு அவனது சிறுவன் தோற்றம் கழுகு பார்வையில் இருந்து தப்ப உதவியது.



மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டி, நெற்றியில் குங்குமம் வைத்தால் பெண்ணையும் அவள் கணவனையும் இராணுவத்தின் பயங்கரவாதி பார்வையில் இருந்து தப்பிக்க இயலும். அதை மீறிப் பல நூறு இளைஞர் யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டது வேறு கதை.



"அந்த மாதிரி தான் எனக்கும் கலைவாணிக்கும் கல்யாணம் முடிஞ்சுது.. அதுக்கு பிறகு கதை வேற மாதிரி மாறிச்சிது" எனத் தொடர்ந்தான் வரா.



வன்செயல்களுக்கு பயந்து பதினைந்து வயதில் கணவன் மனைவியாக பதிவாகிவர்களை நிஜ தம்பதிகளாகவே இரு குடும்பமும் பார்க்க ஆரம்பித்தது. ஏன், வரோதயன் கூட தங்கள் இருவருக்கும் இடையே பந்தம் உறுதியானதாக நம்பினான். பாவனைக்கு கட்டிய மஞ்சள் கயிற்றை முறைப்படி அக்கினி வளர்த்து மந்திரங்கள் ஓதி பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் கரம் பிடிப்பர் என்று எண்ணினான்.



முகாமில் இருந்து புனர்வாழ்வு பெற்று ஊரில் குடியேறி படிப்பை தொடர்ந்த போது கலைவாணியின் குடும்பம் ஐரோப்பாவில் குடியேறும் வாய்ப்பு வந்தது, சொந்த பந்தத்தால். வாய்ப்பை தவற விடாமல் கிளம்பிச் சென்றவர்கள் மருமகன் என்று அவனையும், மருமகள் என்று அவளையும் சொந்தம் கொண்டாடியே பழகினர் இருவீட்டாரும்.



வரோதயன் ஏ.எல் படிப்பை முடித்ததும் 'ஸ்வீடன்' வரச் சொல்லி அழைத்தார் வாணியின் தந்தை. அம்மாவை விட்டு போக மனம் இல்லை இவனுக்கு. கலைவாணியை நாட்டுக்கு வரக் கேட்டான் அவன். ஐரோப்பாவில் பழகிய பெண் பொட்டல் காட்டுக்கு மீண்டும் வருமா?



இடைவெளி சிறிது சிறிதாகி, சில வருடங்களில் கலைவாணிக்கு கல்யாணமாம் என்று செவிவழி கேள்வியுற்றார் காமாட்சிக்கு.



மானசீகமாக அவளை மனைவி என்று நினைத்து இருந்தவனுக்கு அது பெருத்த அடி.



"ஏழு வருஷத்துக்கு முந்தின கதை பிரார்த்தனா இது. அப்ப அது சீரியசா இருந்தது எனக்கு.. வாணியில வஞ்சம் வளர்த்து வச்சிருந்தன். என்ன ஏமாற்றிப் போட்டாள்.. நான் இப்பிடியே தான் இருப்பன் கல்யாணம் கட்டாமல்.. அவளுக்கு அது தான் சரியான தண்டனை எண்டு எண்டெல்லாம் அவள பழி வாங்க நினைச்சன்.."



"அவள் அங்க சந்தோஷமா இருக்கிறாள், ஃபெமிலியோட. அம்மாவோட கதைப்பாள். வரோதயன கல்யாணம் செய்ய சொல்லுங்க மாமி, என்ன நினைச்சிட்டு இருக்க வேண்டாம் எண்டு சொல்லுங்க எண்டுவாள்"



"உன்ன நினைச்சிட்டு யாரு இருந்தாங்க எண்டு நான் சிரிச்சிக்கொள்ளுவன். எனக்கு கல்யாணம் செய்யணும் என்ற எண்ணம் வரல்ல. வயல், தோட்டம், பயிர் வேலையோட நாள் போச்சுது. எப்பயோ முடிச்சி வச்ச பி.ஏ டிகிரிக்கு பட்டதாரி நியமனம் கிடைச்சதும் வேலைக்கு போறதா இல்லையா எண்டு ரெண்டு மனமா இருந்தன். அம்மா தான் குடும்பத்துல உத்தியோகம் எடுத்த ஒரு புள்ள நீயா இரு எண்டு ஆசைப்பட்டு அனுப்பி வச்சாங்க.. அந்த நாள்.. அது அதுக்கு பிறகு நடந்தது உங்களுக்கு தெரியும்.." என்றான்.



கிழிந்த அவனது பேண்ட் காட்சியும் நீடித்த சம்பவமும் இருவர் இதழ்களும் முறுவலித்துக் கொண்டன.



"சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்த குழப்பத்தில மகன் கலைவாணிய நினைச்சிட்டு கல்யாணம் செய்யாயமல் இருக்கிறான் எண்டு அம்மாவுக்கு கவலை. உங்கள எனக்கு புடிச்சிருக்கு உங்கள தான் கல்யாணம் செய்வன் எண்டா கண்ண மூடிட்டு ஒத்துக் கொள்வாங்க" என்றான்.


கேட்க இனித்தது. இன்னும் கதைத்தனர். மணிக் கணக்கில் பேசினர்.



தம்பியின் கடை முதலீட்டு பற்றி வரோதயனிடம் பகிர்ந்தாள். நிலானி பணம் தந்ததைப் பற்றிச் சொன்னாள்.



"பழக் கடையோட சேர்த்து கூல் பார் போடுறதா சொல்றார்.. சீசனுக்கு நல்லா போகும் தானே.. அத வச்சி கடைய டெவெலொப் பண்ணுவாராம்.." என்றாள்.



இத்தனை நாள் பழக்கத்தில் விமலனின் குணம் அறிந்திருந்தவன் "லோன் எடுத்து நீங்க குடுக்கிறிங்க சரி, மொத்த காசும் உங்கட தங்கச்சி போடுறதா சொல்லுங்க. கடனா நினைச்சி வட்டியோட திருப்பணும் எண்டு கண்டிஷனா கேளுங்க.." என்றான் யோசனையாக.



அப்படியே விமலனிடம் பேசினாள்.



"நிலானி தந்தாளா? அப்ப நீ தரல்லயா?" குற்றம் கண்டான் விமல்.



"நிலானிக்கு நான் செலவழிச்சத, இப்ப அவ நல்லா இருக்குற காலத்தில திருப்பி தந்திருக்கிறா. நீயும் அப்டி தான் செய்யணும்.." முதல் முதலாக கண்டிப்புடன் பேச, கோபப்பட்டான் தம்பி.



"நான் எண்டால் மட்டும் மண் புழுவும் பாம்பா சீறுது என.. பார்ப்பம்" என்று ஏக வசனம் பேசி பணத்தை வாங்கினான்.

ஆனி ஆடி வெயில் பருவம் என்பதால் பழரசத்திற்கு கேள்வி இருந்தது. கை நிறைய வருமானம் வந்ததும் வீட்டு செலவில் பங்கெடுக்கவில்லை அவன். "நீ தான் கடன திருப்பணும் எண்டியே! போட்டத எடுத்துட்டு இருக்கிறன்.." என்றான்.


வருணனுக்கும் கூல் பாரில் வேலை கொடுத்தான். கடை வரவு செலவு பற்றி அப்பா பிள்ளை இருவரும் வீட்டில் ஆரோக்கியமாக விவாதிப்பதைக் கேட்க சந்தோஷமாக இருந்தது.



ஐப்பசி ஆரம்பத்தில் மழை பருவத்திற்கு முன்பே வாடகைக் கடையை விஸ்தரித்து சில்லறை கடை போட்டான். வளர்ச்சியைக் கண் முன்பு கண்டவள் காசுக் கணக்கு பார்க்கவில்லை. ஆனால் விமல் விபரமாக இருந்தான். ஒரு நாள் வியாபாரம் முடித்து வரும் போது கையோடு ஒரு பெண் பிள்ளையை அழைத்து வந்தான்.



"யாருடா இது?" கேட்ட தாயிடம், "லவ் பண்றன். அவள்ட வீட்டுல விருப்பம் இல்ல. வெளிய வந்துட்டாள். இனி இங்க தான் இருப்பாள்" என்றான்.



"அக்கா ஒருத்தி இருக்கிறா, கரை ஏறாமல் என்ற நினைப்பு இருக்கா உனக்கு?" தொண்டை நரம்பு விடைக்க, ராஜேஸ்வரி எகிற,



"அவ இருப்பா, காலம் முழுக்க இருப்பா. எனக்கு பசிச்சா அவவா சாப்பிடுவா.. வீட்டுல எனக்கும் பங்கு இருக்கு. மூண்டு பேருக்கும் சேர்த்து தானே எழுதுறிங்க.. நாங்க ஒரு பக்கமா இருக்கிறம்.."



சட்டமாக பேசியவனை குறுக்கே கை கட்டி சுவரில் சாய்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பிரார்த்தனா.

 
Top Bottom