அத்தியாயம் 1
"நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல
அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல
அந்த கவல நோக்கு புரியவில்ல
நான் தொட்டா என்ன
சுட்டா விடும் வாங்கோ
அட கிட்டே வந்து
முத்தம் ஒன்னு தாங்கோ"
மணி அதிகாலை இரண்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நந்திபட்டினம் பேரூராட்சியின் பேருந்து நிலையத்தை ஒட்டிய நான்கு முக்கு சாலை அது.
இரவு ரோந்துக்கென்று வந்து நான்கு முக்கிற்கும் நடுவில் நின்றிருந்தது அந்த போலீஸ் ஜீப். அதில் தான் ஜானகி அம்மா கணீர் குரலில் பாடிக்கொண்டிருக்க, பேனட்டின் மேல் கண்ணை மூடி மல்லாக்க படுத்திருந்த ஆரன், வலது கையால் அதற்கு ஏற்ப தாளம் தட்டி கொண்டிருந்தான், அந்நேரத்திற்கு அந்த பாட்டை ரசிக்கவும் முடியாமல் அது அலறும் சத்தத்திற்கு தூங்கவும் முடியாமல், 'தேமே' என ஜீப் அருகில் இருட்டை சுற்றி சுற்றி வேடிக்கைப் பார்த்து நின்றான் சப் இன்ஸ்பெக்டர் மதுரன்.
"விடியவே போகுது, வீட்டுக்கும் போ மாட்றாரு இந்த மனுஷன். ஆளு மட்டும் சன்யாசி. ஆனா பாட்ட கேளு! இந்நேரம் இந்த கிளுகிளுப்பு தேவைதானா?" என புலம்பி நின்றான். பாட்டு சத்தத்தில் சம்மந்தபட்டவனுக்கு கேட்காது என்ற தைரியத்தில் வாய்விட்டே முனங்கினான் அவன்.
மேலும் அரைமணி நேரம் சென்றிருந்தது, நான்கு கிளுகிளுப்பு பாட்டும் ஓடி முடிந்துவிட்டது.
ஆரன், "மதுரன்" என திடீரென அழைத்த சத்தத்தில், மதுரன் விழிக்க,
"நின்னுட்டே தூக்கமா?" என நிமிர்ந்து அமர்ந்தவன் மொபைல் எடுத்து மணி பார்த்தான், பின் மதுரனிடம் திரும்ப, "என்ன சார்?" என மதுரன் அப்போதும் விழித்து நிற்க,
"ரைட். நல்லா முழிச்சுங்கோங்க. ஆடு தானா சிக்க வருது. அங்க அந்த சலூன் பில்டிங் சைட்ல இருந்து ரொம்ப நேரமா ஒருத்தன் நம்மள எட்டி எட்டி பாத்துட்டு நிக்றான். போய் கூட்டிட்டு வாங்க அவன. பாட்டு கச்சேரி கேட்க நிக்காம்னா இங்க வந்து நம்மளோடவே நின்னு கேட்கட்டும். கண்ண நல்லா முழிச்சுட்டு போங்க" எனவும் சொல்ல,
"ஓகே சார் எஸ் சார்" என்றவன், ஆரன் கை காட்டிய திசையில் ஓட, அங்கிருந்து ஒருவன் வேகமாக ஓட்டமெடுப்பது தெரிய, தெளிந்துவிட்டான் மதுரன். ஐந்து நிமிட ஓட்ட பந்தயத்தின் முடிவில் அவனை சட்டை காலரோடு பிடித்திழுந்து வந்து நிறுத்திவிட்டான்.
"மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்னன்னு ரொம்ப நேரமா அங்கிருந்து உத்து உத்து பாத்தியே என்னடா விஷயம்?" என்ற ஆரன் இன்னுமே பேனட்டில் தான் காலாட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
"சார் சார் சும்மா தான் சார் நின்னேன். இங்கிட்டு வந்தா கூப்பிட்டு திட்டுவீங்களோன்னு அங்கேயே நின்னேன் சார்" என வந்தவன் பயந்து பேச,
"சும்மா போறவன் வாரவனயெல்லாம் திட்டுறது தான் என் வேலையா? ஏன் எனக்கு வேற வேலை இல்லையா? என்ன மதுரன், அவனும் சொல்றான் நீங்க கேட்டுட்டு நிக்றீங்க?" என்றான்,
"சரிதான் டீ கடை திறக்க இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு, டைம் பாஸுக்கு ஆள புடிச்சுட்டாரு. மாட்னடி" என மதுரன் முனங்கியது, மாட்டியவன் காதிலும் விழ, பயமாக இருந்தாலும், நேரம் போகவும் விட்டுவிடுவான் என்ற நம்பிக்கை கொஞ்சம் வந்திருந்தது.
"உன் பேரென்ன? இந்நேரம் இங்க என்ன செய்ற?" என மதுரன் அவனை அதட்டி கேட்க,
"நா பரமசிவம் சார், சாய்பாபா கோவில் தெரு தான் என் வீடு. இங்க என் ப்ரண்ட் தான் சார் வர சொன்னான், அவன நம்பி தான் வந்தேன் ஆனா அவன ஆள காணும்"
"யாரு உன் ஃப்ரெண்ட்? எதுக்கு இந்நேரம் வர சொன்னான்?"
"பேசணும்னு தான் சார்"
"சரி அவந்தான் வரலைல, அப்ப நீ திரும்ப வீட்டுக்கு தானே போயிருக்கணும்? எதுக்கு வெயிட் பண்ண?" என்றான் மதுரன்.
"அவன் வருவானோன்னு தான் சார், ஏதோ முக்கியமான விஷயம் பேசணும் ஹெல்ப் வேணும்னு சொன்னான் சார்"
"பொய்யாடா சொல்ற" என மதுரன் அவன் பின்னந்தலையில் அடிக்க,
"இல்ல சார் இல்ல சார் உண்மையா சார், இங்க பாருங்க அவன் ஃபோன் பண்ண ஹிஸ்டரி கூட இருக்கு" என ஃபோனை எடுத்து காட்டி பம்மினான் பரமசிவம்.
இருவரையும் அதுவரை இடது முட்டியை ஊன்றி லேசாக சரிந்து அமர்ந்து பார்த்திருந்த ஆரன், நிமிர்ந்து நிதானமாக கையை முறுக்கி முதுகை வளைத்து என நெளிப்பெடுத்தான் பின் குதித்து கீழே இறங்கி மதுரனிடமும் பிடிபட்டவனிடமும் வர, இன்னும் பயந்தான் பரமசிவம்.
மெதுவாக அவன் தோளில் கைப்போட்டு, "இதுவரை எத்தனை ரேப்பு, எத்தனை கொலை பண்ணிருப்ப?" என கேட்க,
"சார்?" என பரமசிவம் அதிர,
"இருபத்திரெண்டு கேஸ் இருக்குல்ல உன்மேல?"
"அதெல்லாம் ஆள் இல்லன்னு புடிச்சு எழுதிடுவாங்க சார். நா எதுவுமே பண்ணல" என்றான் சட்டென்று.
"நீ பண்ணல ஆனா நா பண்ண போறேனே? ஒரே ஒரு கொலை உன்னைய மட்டும் பண்ணிக்கிறேனே ப்ளீஸ்" என ஆரன் சொல்லவும், பரமசிவம் பிடிங்கிகொண்டு ஓட முயல, அப்படியே சட்டையோடு இழுத்துபிடித்து கூட்டிவந்து ஜீப்பில் ஏற்றிவிட்டான் ஆரன், மதுரன் லாக்கை வண்டியோடு அவன் இருக்கைகளையும் சேர்த்து மாட்டினான்.
வண்டி திருநெல்வேலி கமிஷனர் அலுவலகம் கிளம்பியது, ஆரன் ஜீப்பை எடுக்க உடன் ஏறிக்கொண்டான் மதுரன்.
"சார்"
"ம்ம்"
"இவன் சனிக்கிழமை வர்றதா தான சார் இன்ஃபர்மேஷன் வந்துச்சு?"
"ஆமா, அவனா தான் வந்து சிக்கிட்டான், போய்ட்டு சனிக்கிழமை வாடான்னு அனுப்பி வைக்கவா முடியும்?"
"நோ சார். இவன பிடிக்கத்தான் வெயிட் பண்ணிட்ருந்தோமான்னு கேட்க வந்தேன் சார்?" என்றான் கேள்வியை மாற்றிப்போட்டு.
"பின்ன விடிய விடிய உங்க கூட நின்னு கிளுகிளுப்பான பாட்ட கேட்கணும்னு எனக்கு என்ன வேண்டுதலா?" என்றதும் மேலும் கேட்காமல் வாயை மூடிக்கொண்டான் மதுரன்.
மீண்டும் ஆரனே, "கமிஷ்னருக்கு மெசேஜ் குடுங்க" என்றதும் அவனும் அழைத்து கூறிவிட்டான்.
'க்ரைம் ப்ராஞ்ச் கமிஷனர் அலுவலகம்' வந்து ஜீப் நின்றது. நான்கு காவலதிகாரிகள் வேகமாக வர, "உங்களுக்கான ஸ்ட்ரெஸ் ரீலீஃப். வச்சு பிரிச்சு மேயணும், இவன் கதறல்ல தான் இன்னைக்கு திருநெல்வேலியே விடியணும். என்ஜோய்" என ஆரன் சொல்ல,
"சார் சார் விட்டுடுங்க சார் தெரியாம பண்ணிட்டேன்" என பரமசிவம் கதற கதற இழுத்துச் செல்லப்பட்டான். அவன் ஐந்து வருடமாக தேடப்படும் முக்கிய குற்றவாளி. ஆனால் ஊருக்குள் சாதாரணமாக வந்து வந்து சென்றுக் கொண்டிருக்கிறான். வெட்டு குத்து என பயமின்றி செய்வதால் கொஞ்சம் பெரிய ஆட்கள் உதவி இருக்க, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அவன் குற்றங்கள் பல்கி பெருகி விட்டன. கண்ணுக்கு முன் நடமாடியவனை தேடிக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்துவிட்டனர் உள்ளூர் காவல்துறையினர். இப்போது பரமசிவம் பெரிய இடத்திலேயே கைவைத்துவிட, பிடித்தடைக்க வேண்டிய கட்டாயம். அதற்காக மாற்றலில் தான் வந்திருந்தான் ஆரன்.
அடுத்ததாக அவனும் மதுரனும் கமிஷ்னர் அறை செல்ல, அதிகாலை நான்கு மணி, ஆனாலும் இவன் ஆளை பிடித்துவிட்டேன் என சொல்லவும் வந்திருந்தார் அவர்.
"எப்டி புடிச்சீங்க ஆரன்?"
"அவன் பொண்டாட்டி தான் அவன் ஃப்ரண்ட் ஒருத்தன் ஃபோனடிச்சான் எப்ப வேணா வருவான்னு சொல்லுச்சு. அவன் பஸ்ஸ்டாண்ட் வழில தான் வருவான்னு அவன் ஃப்ரண்டு மூலமாவே பேசவச்சு வரவச்சு பிடிச்சாச்சு" என்றவனை முறைத்தார் கமிஷனர்.
"இன்னைக்கு அவன எப்படி புடிச்சீங்கன்னு கேட்கல. இவந்தான் ஆளுன்னு எப்படி கண்டுபிடிச்சீங்கன்னு கேட்டேன்?"
"அப்படி தெளிவா கேட்கல நீங்க. இவந்தான் ஆளுன்னு லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல இவனுக்கு தனி ஆல்பமே இருக்கு. அல்ரெடி இருபத்திரெண்டு கேஸ் இருக்குற ஒருத்தன பிடிக்குறதா கஷ்டம்? கழுத்துல தழும்பு, கைல பாம்பு டேட்டூ, கால்ல ரெண்டாவது விரல் மடிஞ்சுருக்குறது, இதெல்லாம் அஞ்சு வருஷத்துக்கு முன்ன அவன் பண்ண முதல் ரேப்ல பாதிக்கப்பட்ட பொண்ணு கொடுத்த டெத் ஸ்டேட்மெண்ட்ல இருக்கு. அதுக்கு அப்புறம் வந்த ஒவ்வொரு கேஸ்லயும் இதுல ஒன்னொன்ன ஒவ்வொருத்தர் சொல்லிருக்காங்க. ஆளோட அழகு அப்படி"
"இவன அப்படியே கோர்ட்ல ப்ரொடியுஸ் பண்ணறோம் நாம" என்றார் ஜாக்கிரதையாக கமிஷ்னர்.
"தாராளமா பண்ணுங்க சார்" என்றான் ஆரன். அவன் முடிக்கும் கேஸ்களின் வரலாறு அவர்கள் துறையில் அவ்வளவு பிரபலம்.
"நீங்க ஏன் பிடிக்குற கேஸ் எல்லாம், ஆபீஸ் வர கூட்டிட்டு வந்து அடிச்சு உறிச்சுட்டு, அப்புறம் ரோட்ல ஓடவிட்டு பிடிச்சு ஹாஸ்பிடலைஸ் பண்ணி. எதுக்கு இவ்வளவு?" என இங்கு இவன் சேர வந்தன்று கேட்டதற்கு,
"விசாரணை கமிஷனுக்கு ஸ்கெட்ச் ட்ராயிங் கரெக்டா குடுக்கணுமே சார், ஆரன் வந்தா தான் மொத்தமா பிரச்சனைய முடிச்சு விடுவாம்னே கூப்பிடுறது, அப்புறம் ஏன் செஞ்ச எதுக்கு செஞ்சன்னு திருப்பிட்டு என்னைய கேட்குறது. நா என்ன பண்ணட்டும்?" என்றிருந்தான்.
இன்று அதை நினைவு வைத்தே முன் ஜாக்கிரதையாக பேசினார், "இங்கலாம் அப்படி முடியாது. உங்களுக்கு ஸ்கெட்ச் போட்டு ட்ரா பண்ணி தூக்கிட்டு போயிடுவாங்க தெரியும்ல?" எனவும் சொல்ல,
"ஆமா வாண்டட் லிஸ்ட்ட ரோட்ல ஃப்ரீயா விட்ருங்க போலீஸ்காரன படம் வரைஞ்சு பிடிங்க. நல்லாருக்கும்" என்றதும் மதுரன் அவ்வளவு நேரமும் அடக்கிக் கொண்டு நின்ற சிரிப்பை சிரித்துவிட, முறைத்தார் கமிஷ்னர்.
"இது அடுத்த கேஸ். ஆறு வருஷம் முன்ன நடந்தது. ஒரு பொண்ணு சூசைட் பண்ணிட்டான்னு கேஸ் முடிச்சாச்சு. இப்ப அதுல சந்தேகம்னு அந்த பொண்ணோட அண்ணா கேஸ் குடுத்துருக்கதால அது ரீ ஓபன் ஆகிருக்கு" என நீட்ட,
"முடிச்சுடலாம்" என்றவன் கேஸ் ஃபைலுடன் எழும்ப,
"ஆரன்?" என அவர் ஆட்சேபிக்க,
"கேஸ தான் சார் சொன்னேன்" என்றவன் நக்கல் சிரிப்புடன் கிளம்பிவிட, மதுரன் சல்யூட் வைத்து, மற்ற எவிடென்ஸ் ஃபைலுடன் கிளம்பிவிட்டான்.
"இவன சமாளிக்கறதுக்குள்ள" என்ற கமிஷனர் தலையை அயர்வாக ஆட்டிக்கொண்டார்.
பரமசிவத்தை பிடிக்க வேண்டும் ஆனால் அவர்கள் தலை உருளகூடாது என்றால் அதற்கு விடாகண்டனாக ஒருவன் வேண்டும். அப்படித்தான் திருநெல்வேலி வந்திருந்தான் ஆரன் சர்வேஷ்வரன், க்ரைம் ப்ராஞ்ச் ஏசிபி. விசாரணை கமிஷன் ஏறி இறங்கியே பதவி உயர்வுகள் பெற்றவன். இருபத்தி இரண்டு வயதில் போலீஸ் வேலைக்கு சேர்ந்தவன், அதன்பின் தமிழ்நாடு மட்டுமின்றி, சிபிஐ க்கு மாற்றப்பட்டு ஆந்திரா, கேரளா, மும்பை, கடைசியாக சென்னை வரை மாற்றல் வாங்கிச் சென்று வந்துவிட்டான். அவனை கூட வைத்துக்கொண்டாலும் பிரச்சனை பத்திவிட்டுவிட்டாலும் பிரச்சனை என்ற கதையாக தான் இருக்கும். மாற்றிவிடும் அரசாங்கமே மீண்டும் தேவைக்கு அவனை இழுத்துக் கொள்ளும்.
இதோ சென்னையில் போஸ்டிங்கில் இருந்தவனை, இந்த கேஸை முடிக்க, திருநெல்வேலி கமிஷ்னரே கேட்டு அழைத்துக்கொண்டார். பத்து வருட, பனிரெண்டு வருட பழைய முடிக்கபடாத கேஸ்களை எடுத்து முடிக்கவே பெரும்பாலும் அவனை நாடுவர். வருபவன் மொத்தமாக முடித்துவிட்டு சென்றுவிடுவான்.
"கேஸ முடிக்க கூப்பிட்டோமா ஆள முடிக்க கூப்பிட்டோமா?" என விசாரணை கமிஷன் வைத்தால்,
"மறுபடியும் தப்பிக்க பாக்றான். அல்ரெடி பல வருஷமா டாட்டா காட்னவன இப்பவும் விட்டுட்டா போலீஸ் மேல பப்ளிக்குக்கு என்ன மரியாதை இருக்கும்? சுட வேண்டிய சூழ்நிலை ஆனா கூட விரட்டி தான் பிடிச்சோம். அவன் உருண்டு பிரண்டு கைய கால உடச்சுகிட்டா என்ன செய்ய முடியும். ஹாஸ்பிடல்ல சேர்த்து ப்ராப்பரா அவனுக்கு ட்ரீட்மெண்ட் கூட பார்த்தாச்சு, அவனுக்கு ஆயுசு இல்ல" என பேசுபவனை, முறைக்கவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் விட்டுவிட்டு சென்றுவிடுவர். கொஞ்சமும் வார்த்தை மாறாமல் இதை தான் பத்து வருடங்களாக சொல்லிக்கொண்டிருக்கிறான் என்கையில் சிரிப்பு வரும்தானே!
கமிஷ்னர் அறையிலிருந்து வெளியே வந்தவன், "ஒரு டீ சொல்லுங்க மதுரன்" என்றவாறு வாசல் படியிலேயே அமர, மதுரன் கை காண்பித்ததிலேயே, எதிரிலிருந்த டீ கடையிலிருந்த பையன் இரண்டு டீயுடன் வந்துவிட்டான். உள்ளே பரமசிவம் அலறும் சத்தம் காதை அடைத்தது.
ஆரன் குடித்துக்கொண்டிருந்த டீ பாதிக்கு வந்திருந்தது, சரியாக அந்நேரத்தில் பரமசிவத்தை உள்ளிருந்து விரட்டிவிட, அவன் வெளியே ஓடிவந்த வேகத்தில் இவர்களையும் தாண்டிக்கொண்டு ரோட்டில் கண்முன் பாராமல் ஓடி தண்ணி லாரியில் விழுந்திருந்தான்.
"கேஸ் க்ளோஸ்டு மதுரன். இன்னைக்கு ஃபுல் ரெஸ்ட். எந்த காலும் வரக்கூடாது. வந்தாலும் எடுக்க மாட்டேன்" என்றவன், ஸ்டேஷனில் நின்ற அவன் ஸ்பெலென்டரில் கிளம்பிவிட்டான்.
ஆரன் சர்வேஷ்வரன், சொந்த ஊர் தென்காசி, அப்பா இளங்கோவன் ஜவுளிக்கடை வைத்திருக்கிறார், அம்மா தங்கமாடத்தி கடையில் கணவருக்கு உதவிக்கு சென்று வருபவர், அக்கா புனிதா, வினயன் என்பவருடன் திருமணம் முடித்து பெங்களூரில் ஐடியில் இருவரும் வேலையில் இருக்கின்றனர், அக்கா மகள் அன்ஷிகா வயது ஐந்து, யூகேஜியில் இருக்கிறாள்.
ஆரன், ஊர் ஊராக சுற்றி வரும் முப்பெத்திரண்டு வயது தரமான பேச்சிலர். அழகன் தான், போலீஸ் மிடுக்கில் திமிராக சுற்றி வருபவன், வாய் துடுக்கும் கொஞ்சம் உண்டு. நான்கு வருடங்களாக பெண் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இவன் வேலையில் மாற்றலாகி சென்று கொண்டே இருப்பதே இவனுக்கு பெண் கிடைப்பதில் பெரிய தடையாக வந்து நிற்கிறது.
கடந்த ஒரு வருடமாக சென்னையில்தான் இருந்தான்.
சென்னையை காண்பித்து அவனுக்கு திருமணத்தை முடித்துவிடலாம் என அவன் வீட்டில் அரும்பாடு பட்டனர். ஆனால் அனைத்தும் புஸ்ஸென்று தான் போனது. ஜாதகம் சரிவரவில்லை, பெண் அம்சமாக அமையவில்லை, வேலையில் இல்லாத பெண்ணாக வேறு தேடினர். அவனோடு கூடவே அலைய வேண்டுமே! அதனால் வேலை பார்க்கவே விருப்பமில்லாத பெண்ணாக வேறு தேடினர், அதற்கே இவனுக்கு பெண் தர யாரும் முன்வரவில்லை.
திருநெல்வேலியிலிருந்து இரண்டு மணிநேரம் தொலைவில் உள்ள ஊர் தான் தென்காசி. இங்கு வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. இங்கு வீடு எடுத்து தான் தங்கியிருக்கிறான். வண்டியை எடுத்த நேரம் தென்காசியில் இருக்கும் அவன் வீட்டிற்கும் சென்றுவிடுவான். இதோ இப்போதும் அவன் வீட்டுக்கு தான் வந்து நின்றான். பூட்டிய வீடே வரவேற்றது.
"ம்ச் வரல வரலன்றது, வந்தா வீட்ட பூட்டிட்டு கிளம்பி போயிடறது" என எரிச்சலோடே தங்கமாடத்திக்கு அழைத்தான்.
"விஷ்வா கண்ணு? வீட்டுக்கா வந்து நிக்க?" என்றார் தங்கமாடத்தி சந்தோசமாக. அவனாக காலையிலேயே அழைத்திருக்கவும் கண்டுகொண்டார்.
"நீ எங்க நிக்ற?"
"ரேஷன் கடை வர வந்தேன்யா. காலைலயே வந்தா கூட்டமில்லாம இருக்கும். அப்புறம் வெயில்ல வந்து நிக்க ஆவலைலப்பு?" என்க,
"சரி அங்கேயே நில்லு வரேன்" என கிளம்ப போக,
"உன் பின்னாடி உக்காந்து வந்தா நீ எந்நேரம் கீழ உருட்டி தள்ளுவன்னு பயந்துட்டே வரணும்யா. சாவிய ரோசா செடி தொட்டிகிட்ட தான் வச்சுட்டு வந்தேன். நீ உள்ளார போய் தண்ணிய குடி அம்மா மயிலா ஆட்டோவுல ஓடி வந்துருவேன்" என்றார் அவர் அவனைவிட வேகமாக.
"ஆட்டோவுல ஓடி வருவியா நீ? எங்கயாச்சு கூட்டி போகணும்னு கேளு அப்ப பேசிக்கிறேன் உன்ன" என்றவன், சாவியையும் தேடி எடுத்தான். ஒரே இடத்தில் வைத்தால் யாரும் கண்டுகொள்வர் என மாற்றி மாற்றி வைப்பது தான் அவர் வழக்கம்.
இரண்டு படுக்கையறை கொண்டு தாராளமான பெரிய வீடு தான் ஆரன் வீடு. மேலே ஒரு போர்ஷன் கீழ் போலவே இருக்க அதை வாடகைக்கு விட்டிருந்தனர். வீட்டின் முன் இருக்கும் சின்ன வராந்தாவில், மாதுளை, எலுமிச்சை, மூன்று வகை ரோஜா செடிகள் வைத்திருந்தார் தங்கமாடத்தி.
நேராக அவன் அறை சென்றவன், குளித்தான், சமையலறை சென்று, மூன்று தோசை வார்த்து, பொடியை வைத்து உண்டான் மீண்டும் அறைக்குள் வந்து படுத்துவிட்டான்.
மகன் வீடு வந்திருக்கிறான் என அரக்க பறக்க ஓடி வந்தவர் கண்டது பூட்டிய அறையை தான். எழுப்பினாலும் கடித்துவைத்துவிடுவான் என அவனை அப்படியே விட்டவர், மதியதிற்கு அவனுக்கு பிடித்தமாக சமைக்க, கணவருக்கு அழைத்து கடைக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு, ரேஷனில் வாங்கிய பொருட்களை அதனதன் இடத்தில் வைத்தவர், அதில் கோதுமையை தண்ணீரில் அலசி, மாடிக்குச் சென்று விரித்து காயவிட்டுவிட்டும் வந்தார்.
மீண்டும் கதவை பூட்டிவிட்டு, அவருக்கு எப்போதும் ட்ரைவர் வேலை பார்க்கும், மயிலா ஆட்டோவை அழைத்துக்கொண்டு, மார்க்கெட் சென்றவர், குழம்புக்கு வஞ்சரம் மீனும், பொரிப்பதற்கு பாறை மீனுமாக வாங்கிகொண்டு வந்தவர், அவன் எழும்புமுன் கடகடவென சமைத்துவிட்டார்.
அடுத்தும் சும்மா இருக்கவில்லை, அவரின் சித்தி முறையில் இருப்பவர் ஒரு வரன் இருப்பதாக இரண்டு நாட்கள் முன் தான் கூறியிருக்க, அவருக்கு அழைத்து, "விஷ்வா வந்துருக்கான் சித்தி. பொண்ணு ஃபோட்டோ அனுப்புங்க, நா கையோட பேசி பாக்றேன்" என கேட்க,
"நானே உன்ட்ட பேசணும்னு இருந்தேன். அவங்க வீட்ல ரொம்ப இஷ்டமா இருக்காங்க மாடத்தி. இவன் ஃபோட்டோவ பாத்ததும் சரின்னுட்டாங்க. நல்லா தெரியுமாம் நம்ம விஷ்வாவ. ஜாதகம் கூட முக்கியமில்லன்னுட்டாங்க. பொண்ணு வீட்ல இவ்வளவு இறங்கி வர்றது இதான் முதல் தடவை. விட்றாத சொல்லிட்டேன்" என்றார் சித்தியாகப்பட்டவர்.
"நல்லது சித்தி. நா கண்டிப்பா பேசுறேன். நீங்க ஃபோட்டோ அனுப்புங்க. ஜாதகமு கேளுங்க, நாம பாத்துகிடுவோம்"
"சரி நா கேட்டு வாங்கி அனுப்புறேன்" என்றவர், ஒருமணிநேரத்தில் அனுப்பியுமிருந்தார். அதை மகள் புனிதாவிற்கும் அனுப்பி அவளிடமும் பேசியாகிவிட்டது. பொண்ணும் பார்க்க அழகாக இருக்க, தங்கமாடத்திக்கு திருப்தி தான். இன்னும் ஜாதகம் பொருந்த வேண்டும், மகனுக்கு பிடிக்க வேண்டும் என்ற இரண்டு மட்டும் வரிசையில் நின்றது, அதற்கு வேண்டுதலோடு மகன் வர காத்திருக்க, மூன்று மணிக்கு மேல் தான் எழுந்து வந்து தரிசனம் தந்தான் அவர் மகன். இளங்கோவனும் மதிய உணவிற்கு அப்போது தான் வீட்டினுள் நுழைந்தார்.
"மூணு மணி வர சாப்பிட வராம என்னப்பா?" என்றான் தகப்பனிடம்.
"ஒரு கல்யாண வீடு க்ரூப் ஜவுளி எடுக்க வந்துட்டாங்கப்பா. பாதில விட்டுட்டு வர முடியல அதான் நின்னுட்டேன்" என்றவர், கையை கழுவிக்கொண்டு நேராக சாப்பிடத்தான் வந்தமர்ந்தார்.
"நீயும் வா விஷ்வா" என தங்கமாடத்தி இருவருக்கும் எடுத்து வைக்க, இளங்கோ கடையில் நடந்ததை பேசியபடி உண்ண, மகன் கேட்டபடி உண்டான்.
"ரெண்டு நாள் நிப்பியா விஷ்வா?" என்றார் திடீரென்று தங்கமாடத்தி,
"இல்லம்மா காலைல கிளம்பணும். என்னவாம்?" என சாப்பிட்டு முடித்தவன், சிங்கில் கைகழுவி திரும்பி வந்து வினவ,
"ஒரு பொண்ணு ஃபோட்டோ வந்துருக்கு"
"சரி!" என்றான் தலையை ஆட்டி,
அவன் முகத்திலிருந்து ஒன்றும் கண்டுபிடிக்கமுடியாமல் போக, கணவரை பார்க்க, அவரும் அவனை தான் பார்த்திருந்தார்.
"என்னம்மா முழிக்க? மேல சொல்லு" என்றவன் ஹாலில் சோஃபாவில் சென்று அமர்ந்தான். தங்கமாடத்தி விறுவிறுவென அவர் ஃபோனை எடுத்து வந்து நீட்டினார்.
அவன் அதை வாங்காமல், “இப்டி உட்காரு” என கைக்காட்ட, அருகில் அமர்ந்து மறுபடியும் நீட்டினார்.
“இரும்மா. பொண்ண நீ பாத்தியா?”
“பாத்துட்டேன். பாப்பாக்கும் அனுப்பிட்டேன். அவளும் பொண்ணு நல்லாருக்குன்னு சொன்னா”
“சூப்பர். அப்ப பொண்ணு பாக்க நேர்ல போணும்ல?” என்றான் அவனே,
“நீ ஃபோட்டோ பார்த்து உனக்கு பிடிக்கணும்ல? பிடிச்சுட்டா சொல்லிட்டு போலாம்”
“நீ பாத்துட்டல்ல? நா நேர்லயே பாத்துக்குறேன்” என்றான் இலகுவாக,
“ஜாதகம் பாக்கணும்”
“பாரு. பாத்துட்டு சொல்லு, நேர்லயே போலாம்” என்றவன், டிவியை போட்டுக்கொண்டு சாய்ந்துபடுத்துவிட,
அவன் வசதியாக படுக்க இடம் விட்டு எழுந்து கொண்ட தங்கமாடத்தி கணவரிடம் வர,
“சாயந்தரமே போய் பாத்துட்டு வந்துருவோம். எதுக்கு மூஞ்சிய தூக்குற?” என்றார் அவர்.
“இவன் என்ன நினைக்காம்னே தெரியலங்க. நாம பேசும்போதுலாம் சரிசரின்னுறான். அப்றம் அது இல்லன்னு ஆகிடுது அதுக்கும் சரிதான்னுட்டு போயிடுறான். கல்யாணம் பண்ணுற ஆசை இருக்குமா இருக்காதா இவனுக்கு புரியவே மாட்டேங்குது. இப்பவும் இவன் ஒன்னுமே கேட்காம சரின்னுட்டானேன்னு எனக்கு பக்குன்னு இருக்குங்க, இதுவும் புட்டுக்குமோ?” என பயந்து கேட்க,
“நீயா எதாவது யோசிக்காத. அவனுக்கு அவன் வேலையே பெரிய தலைவலி, அதனால இதுல இன்ட்ரெஸ்ட் காட்டாம இருக்கான். கல்யாணம் முடிஞ்சா தானா மாறிக்குவான்” என்றார் இளங்கோவன்.
அதன் பின்னரும் சோஃபாவில் படுத்தவாக்கில் தூக்கத்தை தொடர்ந்துவிட்டான் ஆரன். இளங்கோவும், மாடத்தியும் ஜாதகத்தைத் தூக்கி கொண்டு ஜோசியரை பார்க்க கிளம்பிவிட்டனர். ஓய்வு நேரம் என முடிவாகிவிட்டால், ஆரன் தன் ஃபோனை மொத்தமாக அமர்த்தி தான் விடுவான். சென்றவர்கள் வந்து இரவு உணவிற்கு எழுப்பும் வரை தூக்கம் தான் அவன்.
“ஜாதகம் ஒத்துவரலப்பா” என்றார் இளங்கோ அவரே,
“சரி அப்ப வேற பொண்ண பாருங்க. நைட்டுக்கு சாப்பிட லைட்டா போதும். ஏர்லி மார்னிங் கிளம்பிடுவேன்மா” என்றவன் அறைக்குள் சென்று, குளித்து வேறு உடை மாற்றி வர, உம்மென்று இருந்தார் தங்கமாடத்தி.
“இனி மாத்த மாட்டாங்களா விஷ்வா?” என்றார் இளங்கோ.
“அடுத்த கேஸும் அங்கதான். இன்னும் மூணு நாளு மாசம் திருநெல்வேலி தான் டூட்டி இருக்கும்பா, அடுத்த ட்ரான்ஸபெர் வர்ற வர”
“உனக்கு டூட்டிக்கு போனா மட்டுமே போதும்” என்றார் தங்கமாடத்தி எரிச்சலாக, அவருக்கு இந்த பெண்ணும் இல்லையென்றாகிவிட்ட கடுப்பு.
அவரை இன்னும் கடுப்பேற்றவே, “நீ வருஷம் ஃபுல்லா பொண்ணு தேடிட்டே இருந்தா நா டூட்டிய மட்டும் தான் பாக்க முடியும்” என்றவன் முட்டைதோசையை ரசித்து சாப்பிட்டான்.
“நானா முடிக்க மாட்டேங்குறேன். உனக்கு அமைய மாட்டேங்குது. முதல்ல உன்ன யாரு போலீஸ் ஆக சொன்னது?”
“போலீஸான பொண்ணு குடுக்க மாட்டாங்கன்னு நீ அப்பவே சொல்லிருக்கணும்மா”
“சொன்னா மட்டும் கேட்ருப்ப நீ?”
“இப்ப என்ன உன்னால முடியலன்னு ஒத்துக்கோ” என்றான், அவன் நிதானமாக தான் பேசியபடி உண்டான், தங்கமாடத்தி தான் டென்ஷனை குறைக்க வழி தெரியாமல் சமையல் பாத்திரத்திலும் தோசை கரண்டியிலும் காட்டிக்கொண்டிருந்தார்.
“என்ன முடியாது? எப்படி முடியாம போவும்னு பாக்றேன். இந்த வருஷம் வைகாசில உன் பிறந்தநாள் முடியறதுகுள்ள உன் கல்யாணத்த முடிக்கிறேனா இல்லையா பாரு” என அடுப்பின முன் நின்று சபதம் வேறு எடுத்துகொண்டார்.
“கீப் த ஸ்ப்ரிட்மா” என்றவன், சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றுவிட்டான். அவன் அம்மாவை மறுபடியும் உத்வேகபடுத்திவிட்டு மறுநாள் காலையில் சொன்னதுபோல் ட்யூட்டிக்கும் கிளம்பிவிட்டான்.
திருநெல்வேலி வந்தவன், நேராக அவன் அங்கு வாடகைக்கு தங்கியிருக்கும் வீட்டிற்கு தான் வந்தான். அந்த வீடு மதுரன் அவனுக்காக பார்த்து தந்தது. அவனுக்காக பார்த்தானா அவனுக்கு அவனே பார்த்தானா என்பது ஆரனுக்கும் சந்தேகமான விஷயமாக தான் இருக்கிறது. இதோ இப்போதும் ஆரனுக்கு முன் அவன் வீட்டில் மதுரன் நின்றான்.
அவனை மேலும் கீழும் பார்த்தவாறே வண்டியை நிப்பாட்டி கூலர்ஸை கழற்றி இறங்கியவன், “என்னைய பார்க்க வந்தீங்க இல்லையா மதுரன்?” எனக் கேட்டபடி மாடி ஏறினான். கீழ் போர்ஷனில் ஓனர் குடும்பம் இருந்தது.
“ஆமா சார். நேத்து ஃபுல்லா நீங்க ஆஃப், அதான் ஃப்ரெஷா அடுத்த கேஸ ஸ்டார்ட் பண்ணணுமே, டிஸ்கஸ் பண்ணலாம்னு வேகமா வந்தேன்” என்றான் சூட்டிப்பாக,
“அவ்வளவு ஆர்வம்?” என கேட்ட ஆரன் கதவை திறந்து உள்ளே செல்ல,
“ஆமா சார்” என்றவன் வெளியேவே நின்றான்.
“உள்ள வரமாட்டீங்க. வெளில தான் உங்களுக்கு காத்தோட்டமா இருக்கும் இல்லையா?” எனவும் கேட்க,
“ஆமா சார்!” என முப்பத்தியிரண்டு பல்லையும் காட்டினான் மதுரன்.
ஆரன், “யோவ் உன்ன?” என பல்லை கடித்தபடி, சட்டையை முறுக்கிவிட்டுக்கொண்டு வேகமாக வெளியே வந்தவன், எதிர் வீட்டை கண்ணால் காண்பித்து, அங்கு அமர்ந்திருந்தவளை காட்டி, “ஒரு போலீஸ்காரன் பாக்ற வேலையவா நீ பாக்ற? அந்த பொண்ணா நீ சைட்டடிக்கிறது?” என கேட்க,
அங்கு அவன் காட்டிய அந்த எதிர்வீட்டில், ஒரு கையில் டீயுடனும், மற்ற கையில் ஒரு நாளிதழுடனும், முன் வராந்தாவில் கிடக்கும் கூடை ஊஞ்சலில் லேசாக ஆடியபடி அமர்ந்திருந்தாள் லஷ்மி நிலாயினி. முகம் அந்த நாளிதழுக்குள் மறைக்கப்பட்டிருந்தது.
“இல்ல இல்ல, அது லஷ்மி! என் காலேஜ்மேட்” என்றான் மதுரன்.
“இல்ல இல்லங்குற பின்ன காலேஜ்மேட்டுங்குற? என்ன உன் கணக்கு? உனக்கு டைம் பாஸாக எனக்கு இங்கன வீடு பாத்து குடுத்துருக்கனா உன்ன என்ன செய்யலாம்?” என ஆரன் மீண்டும் எகிறிக்கொண்டு செல்ல,
“சார் சார். ஒரு நிமிஷம் சார் ஒரே ஒரு நிமிஷம் ப்ளீஸ்” என கெஞ்சி கையை முறுக்கிக்கொண்டு வந்தவனை நிறுத்தினான் மதுரன்.
“சரி சொல்லுங்க” என மறுபடியும் மரியாதை தர,
“நீங்க வா, போ ன்னே கூப்பிடுங்க சார். நா உங்கள விட அஞ்சு வருஷம் ஜுனியர்”
“சரிடா சொல்லு. அந்த பொண்ணு இல்லயா?”
“நோ சார். லஷ்மியும் நானும் பிகாம் ஒரே பேஜ்மேட். அப்றம் சேம் கோச்சிங் சென்ட்டர் அவ ஐஓபில மேனேஜர் ஆகிட்டா, நா போலீஸ் ஆகிட்டேன்”
“இது ஒரு காரணம்னு தான் எனக்கு இங்க வீடு பாத்தியா? அப்ப எதுக்கு இங்கயே நின்னு அந்த பொண்ணு வீட்ட உத்து உத்து பாக்ற?”
“அது சைட்டடிக்கத்தான் சார்”
“உன்ன பொளக்க போறேன் பாரு”
“லஷ்மிக்கு ரெண்டு சிஸ்டர்ஸ் உண்டு சார்”
“ஓ! சாருக்கு எத்தனாவது சிஸ்டர்?”
Author: Vishakini
Article Title: நிலவின் அக ஒலி - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நிலவின் அக ஒலி - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.