• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிலவின் அக ஒலி - 7

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 7

நிலாயினி வங்கியின் தெரு முனை வரை அவ்வளவு கவனமாகத் தான் சென்றாள். அந்த தெருவிற்குள் நுழைந்த பின்னரே கொஞ்சம் ஆசுவாசம் கொண்டாள். அவள் பிரச்சனையை அவளே சரிபார்த்து பழக்கிக் கொண்டதால் ஆரனைத் துணைக்கழைக்கலாம் என்ற எண்ணமே அவளுக்கு வரவில்லை. அவனிடம் கூறிவிட்டபடியால் பெரிதாக எந்தப் பிரச்சனையும் வந்துவிடாது என்ற நம்பிக்கையும் இருந்தது. அதையும் மீறிய பயமும் இருந்தது. இரண்டையும் உள்ளுக்குள் வைத்தே தான் வங்கி முன் வந்து வண்டியை நிறுத்தினாள்.

அவள் வண்டியை விட்டு இறங்கும் முன், "ஹாய் நிலா!" என வந்து நின்றான் ஒருவன்.

"எஸ்!" என்றாள் தைரியமாகவே,

"கல்யாணம்னு சொல்லிருக்கேன். இவ்ளோ சிம்பிளா வந்து நிக்கிற? சேரில வந்துருக்கலாம்ல?"

"யார் நீங்க?"

"குருதேவ். இதோ இது என் வீடு இங்கிருந்து தான் உன்ன ஒரு வருஷமா ஃபாலோ பண்றேன். பட் அதுக்கும் முன்னவே உன்ன எனக்கு தெரியும். நீ இங்கேயே இல்லாதனால உன்கிட்ட வர லேட்டாகிடுச்சு. நா இங்க இருந்து பாக்றது உனக்குத் தெரியும்னு எனக்கும் தெரியும். அந்த ஏசிபி உன்ன மிரட்டிருப்பான்னும் தெரியும். அதான் ஸ்டெரெயிட்டா மேரேஜ் ப்ரப்போசலோட வந்துட்டேன்" என சிரிக்க,

"சாரி நீங்க யாருன்னு எனக்கு தெரியல"

"நிலா! கமான்" என்றான் குருதேவ்.

"எனக்கு உங்கள யாருன்னு தெரியல சார். நீங்களும் எதோ மிஸ் அன்டர்ஸ்டான்டிங்க்ல பேசிட்ருக்கீங்கன்னு நினைக்கிறேன். இனி இப்படி வந்து நிக்காதீங்க. எனக்கு இதெல்லாம் பிடிக்காது" என்றவள், கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு, வண்டியிலிருந்து லஞ்ச் பையையும் எடுத்தாள்.

"பேசாம வந்தா வேலை ஈசியா முடியும். இல்லனா நா வேறமாதிரி நடந்துப்பேன். அது உனக்கு தான் நல்லதில்ல" என சிரித்தபடியே மிரட்டினான்.

"என்ன பண்ணுவ? எங்க பண்ணுப் பாப்போம்?" என அவள் முறைக்க, அவளின் முக மாற்றத்தைக் கவனித்திருந்த வங்கி செக்யூரிட்டி, "என்னாச்சு மேடம்?" என வேகமாக அவள் அருகில் வந்துவிட்டார்.

"யோவ் போயா. உன்னைய யாரு இப்ப கூப்பிட்டா?" என ஒரு நொடியில் அவரைத் தள்ளிவிட்டுவிட்டான் குருதேவ்.

"ஹே என்ன பண்ற?" என்றவள் குனிந்து அவரைத் தூக்கப் போக, வங்கியினுள் இருந்தும், அப்போதென வேலைக்கு வந்திறங்கியவர்களும் என எல்லாரும் வேகமாக வந்துவிட, குருதேவ்விற்கு டென்ஷன் அதிகமானது.

"ஒழுங்கா வந்திரு நிலா. என்னைய டென்ஷன் ஏத்திப் பாக்காத, அப்புறம் என்ன செய்வேன்னு தெரியாது" என குருதேவ் மிரட்ட,

"யார் மேடம் இவன்?" என்றனர் சக ஊழியர்கள்.

"தெரியல. சும்மா உளறிட்ருக்கான். இவன நா இதுக்கு முன்ன பாத்ததே இல்ல" என்றாள் நிலா எரிச்சலுடன்.

"டேய் என்ன? எங்க வந்து பிரச்சனைப் பண்ற? போலீஸ்ட்ட பிடிச்சுக் குடுக்கவா? பேங்க்ல திருட வந்தியா நீ? போறியா என்ன? ஊருக்குள்ள நிறைய பைத்தியங்க இப்படி தான் சுத்துது, எல்லாத்தையும் தன்வந்திரில கொண்டு சேர்க்காம தெருவுல விட்டு வேடிக்கைப் பாக்றாங்க" என ஆண்கள் நான்குபேர் மிரட்டவும் பயந்துவிட்டான் குருதேவ்,

"சார் ப்ளீஸ் சார். நா நிலாவ நாலஞ்சு வருஷமா லவ் பண்றேன் சார். நிலா உன்கிட்ட வந்து சொல்லாம நா லவ் பண்ணேன் நிலா. நீ வேலைக்குன்னு எங்கெங்கயோ போனாலும் நா உன்ன தான் நினைச்சுட்ருந்தேன் நிலா. என்னைய வேணாம்னு சொல்லாத. நா பாவம் நிலா. நீ இல்லனா நா செத்தே போயிடுவேன் நிலா. உனக்காக நா நிறைய காசு சேர்த்து வச்சுருக்கேன். என்னைய லவ் பண்ணு நிலா. கல்யாணம் பண்ணிக்கோ நிலா. நீ இல்லாம என்னால வாழவே முடியாது நிலா" என ஆண்கள் தள்ளிவிட விட நிலாவிடம் கெஞ்சிக்கொண்டு முன்னேறி வந்துகொண்டே இருந்தான் குருதேவ். உடனே உடனே மாறும் அவன் முகத்தை குழப்பமாக தான் பார்த்தாள் நிலாயினி, 'மனநலம் குன்றியவனோ?' என்றுகூட தோன்றியது அவளுக்கு.

"என்ன பேங்க் வாசல்ல மாநாடு? ஸ்ட்ரைக் எதுவும் பண்றீங்களா? பெர்மிஷன் வாங்கியாச்சா? என்ன மேனேஜர் மேடம் சொல்லுங்க?" என வண்டியைக் கூட்டத்தின் நடுவில் கொண்டு நிறுத்தி நின்றான் ஆரன் விஷ்வேஷ்வரன். அவன் குரலில் அனைவரும் அவனிடம் திரும்பினர்.

அவனைக் கண்டதும் அதுவரை இழுத்துப்பிடித்த தைரியத்தை அப்படியே சரியவிட்டாள் நிலாயினி. அழவேண்டும் போலிருந்தது, ஆனால் இருக்கும் இடம் கருதி அதை அடக்கினாள். கண்கள் லேசாக கலங்கும் போலிருந்தும், அதைக் கண்ணைச் சிமிட்டி சரி செய்து, பாவமாக ஆரனைப் பார்த்தாள்.

வங்கி ஊழியர்கள் அவனிடம் விஷயத்தை விளக்கிக்கொண்டிருக்க, அணிந்திருக்கும் கூலிங் கிளாஸ் வழி அவன் பார்வை மொத்தமும் அவன் நிலவின் மேல் தான்.

ஆரனையும் மதுரனையும் பார்த்ததுமே, குருதேவ் ஓடிவிட முனைய, இழுத்துப் பிடித்திருந்தனர் அங்குள்ள மக்கள்.

"சார் இது நம்ம ரோமியோ சார். அங்க ஆண்டாள் டெத் விசாரிக்க போனோமே. அங்க நின்னு சீன் போட்ட சாரு தான்" என மதுரன் இறங்கிச் சென்று அவனைப் பார்த்துவிட்டு சொல்ல,

"உன்னைய அன்னைக்கே என்ன சொன்னேன்? பேசிபாரு. பிடிக்கலன்னு சொல்லிட்டா விலகிருன்னு தான சொன்னேன்"

"பேசிப் பாக்க தான் சார் வந்தேன்" என்றான் குருதேவ் நடுங்கியவனாக.

"சார் ஒரே பிரச்சனை சார். எங்க செக்யூரிட்டியத் தள்ளிவிட்டுட்டு மேடம் மேல பாய பார்த்தான் சார்" என்றார் ஒருவர்.

"கம்ப்ளைன்ட் குடுக்றீங்களா மேனேஜர் மேடம்? உள்ள தூக்கி வச்சு லாடங்கட்டிட்டா இனி யார்ட்டயும் இப்டி நடந்துக்கத் தோணாது" என இப்போதும் நிலாவில் தான் பார்வை.

"இல்ல சார் பிரச்சனை பெருசாக வேணாம். இனி அந்த பையன் எங்கிட்ட பிரச்சனை பண்ணக் கூடாதுன்னு வார்ன் மட்டும் பண்ணுங்க" என்றாள்.

"பேங்க்ல வந்து பிரச்சனைப் பண்ணான்னு நாங்க வேணா கேஸ் தரோம் சார். இவன் மறுபடியும் வந்து பிரச்சனை பண்ணக் கூடாது" என்றனர் மற்ற ஊழியர்கள்.

"சார் வேணாம் சார். லவ் பண்ணக் கூடாதுன்னு எந்த சட்டமு சொல்லல தான சார். லவ் பண்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்கக் கேட்டது தப்புன்னு அரெஸ்ட் பண்ணுவீங்களா சார்? நிலாக்கு இன்னும் கல்யாணம் ஆகல தான சார். அப்ப அவள யார் வேணா அப்ரோச் பண்ணலாமே சார்?" என்றான் குருதேவ். அவன் பேச்சே வித்தியாசமாக தான் தெரிந்தது.

"ஓ! இன்னும் வேற பண்ணுவியா நீ? கல்யாணம் ஆனாலும் ஆகலனாலும் சம்மந்தப்பட்ட பொண்ணுக்குப் பிடிக்காம நீ என்ன பண்ணாலும் அது அஃபன்ஸ் தான். பத்து நாள் கம்பி எண்ண விட்டா எல்லாம் சரியா போயிடும். போவோமா?" என்றான் ஆரன் விரல் நீட்டி எச்சரித்து.

"இனி இனி பண்ண மாட்டேன் சார்
சாரி சார்" என்றான் உடனேயே.

"என்ன பண்ண மாட்ட?"

"நிலாவ ஃபாலோ பண்ண மாட்டேன் சார்"

"பண்ணக் கூடாது. இது லாஸ்ட் வார்னிங் உனக்கு" என மிரட்ட, விறுவிறுவென எதிரே இருந்த அவன் வீட்டினுள் சென்றுவிட்டான் குருதேவ்.

"இங்க தான் இவன் வீடா?" என அனைவருமே அதிர்ந்து தான் பார்த்தனர்.

"இங்கேயே இருக்கான் இவன தெரியாதா உங்களுக்குலாம்?" என்றான் மதுரன்.

"பாத்ததே இல்ல சார் இவன. இப்பதான் இங்க வந்துருக்கானோ என்னவோ. இந்த வீடு எப்பவும் பூட்டியே தான் கடக்கும். இன்னைக்கு தான் திறந்திருந்தே பாக்றோம்" என்றார் செக்யூரிட்டி. அவர்தானே எப்போதும் வெளியே இருக்கக் கூடியவர்.

"இனி பிரச்சனைப் பண்ண மாட்டான்னு நினைக்கிறேன். அப்படி பண்ணா மேனேஜர் ஒரு கால் குடுங்க, வந்துத் தூக்கிட்டுப் போயிடுறேன்" என ஆரன் சொல்ல, கண்கள் சுருக்கிப் பார்த்தாள் நிலாயினி.

"லஷ்மியோட ராசி சார். அவளுக்கு எதிர் வீட்ல இருக்கவங்க எல்லாருக்கும் அவ மேல லவ் வந்துடுது" என மதுரன் மெதுவாக சொல்ல,

"க்ரௌட க்ளியர் பண்ணு மேன்" என்றான் ஆரன்.

நிலாவிடம் திரும்பிய ஆரன், "மேனேஜர் மேடம் வர்றீங்களா ஒரு ஜுஸ் குடிச்சுட்டு வருவோம்" என அழைக்க, ஒரு நொடி யோசித்தாலும் உடனே சரி என தலையாட்டினாள். கையிலிருந்த லஞ்ச் பேக்கை அவள் அறையின் வெளியே அமர்ந்திருக்கும் பெண்ணிடம் கொடுத்து உள்ளே வைக்கச் சொன்னவள், ஸ்கூட்டியை எடுக்கப் போக,

"டபுள்ஸ் ஓட்டுவியா?" என்றான் ஆரன்.

"ஆ! நீங்க உங்க வண்டீல வாங்க"

"இதென்னமா இந்தா இருக்கக் கடைக்கு ரெண்டு வண்டியா? நாடே பெட்ரோல் தட்டுபாடுல போயிட்ருக்கும்போது நாம பொறுப்பில்லாம நடக்கலாமா?"

"அதுக்காகலாம் உங்கள வண்டில ஏத்திக்க முடியாது ஏசிபி சார்"

"சரி அப்ப நீ வந்து என் வண்டீல ஏறு"

"கல்யாணத்துக்கு முன்ன நோ டபுள்ஸ் ஏசிபி" என அவள் ஸ்டிரிக்டாக சொல்ல,

"நடுவுல ஹேண்ட்பேக் வச்சுட்டு பாதுகாப்பா கூட உட்காருடி" என பல்லைக் கடித்தான்.

"நோ!" என்றாள். இருவரையும் சுவாரஸ்யமாக பார்த்தவாறு தான் ஊழியர்கள் உள்ளே சென்றனர்.

"மேடம் ஏசிபி சார தான் கல்யாணம் பண்ணப் போறாங்களா?" என மதுரனிடம் கேட்கவும் செய்ய,

"ஆமா, எப்டியும் நெக்ஸ்ட் மந்த் கல்யாணம் இருக்கும்" என அடித்துவிட்டான் மதுரன்.

"டேய் மதுரா!" என ஆரன் அரட்டி அழைக்கவும்,

"சார் சும்மா சொல்லிட்ருந்தேன் சார். நல்ல காரியம் சீக்கிரம் நடக்கட்டுமேன்னு" என மழுப்பியபடி ஆரனிடம் வர,

"என்ன சொல்லிட்ருந்த?"

"கேட்கலையா உங்களுக்கு? நானா தான் உளறுனேனா?" என்க,

"பைக்கப் பிடி. மேடம் கூட வாக்கிங்ல தான் வரணுமாம். உனக்கு எதுவும் வேலை இருந்தா முடிச்சுட்டு அரைமணி நேரத்துல, அந்த காலேஜ் ஆப்போசிட் ஐஸ்கிரீம் கடைக்கு வந்துரு" என சொல்லி சாவியைக் கொடுத்து இறங்கி நடக்கத் துவங்க,

"போற இடத்துலலாம் வேலை இருந்தா பாருன்னுட்டு போயிடுறாரு. நா என்ன தூர்வார்ற வேலையா பாக்றேன்? படக்குன்னு உட்கார்ந்து குழிய தோண்டுறதுக்கு?" என புலம்பினான் மதுரன்.

அங்கு நடக்கத் துவங்கியவனிடம் சென்று, "நா ஸ்கூட்டில முன்னாடி போயிடவா?" என்றாள் நிலாயினி.

"கொன்றுவேன்டி உன்ன" என விரல் நீட்டி மிரட்டவும், பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, அவனோடு சேர்ந்து நடந்தாள். இருவரும் மெதுவாக நடக்க, இவர்களை அங்கு எதிர்வீட்டின் ஜன்னலிலிருந்து குரோதமாக பார்த்து நின்றான் குருதேவ்.

"எனக்கு ஏன் ஃபோன் பண்ணல நீ?" என்றான் நாலடி எடுத்து வைத்ததும்.

"இவ்ளோ பேர் இருக்காங்க, ப்ளஸ் என்னால என்னைய பாதுகாத்துக்க முடியும்னு ஒரு எண்ணம்"

"ஆசிட் எதுவும் தூக்கி அடிச்சுருந்தா?" என்றான் பந்து வீசுபவன் போல கையைச் சுழற்றி,

"ஆசிட் தூக்கி அடிச்சுருந்தா நீங்க வந்தாலும் என்னைய காப்பாத்திருக்க முடியாது தானே?"
 

நிதனிபிரபு

Administrator
Staff member
"அடிப்பாவி நா ஒரு போலீஸ்காரன். இப்டி தாங்கிப் பிடிச்சு உன்மேல ஒரு சொட்டு விழவிடாம பண்ணிருப்பேன் தெரியுமா?" என அவளருகில் அணைப்பது போல் வர,

"ரோட்ல சேட்டை பண்ணாம வாங்க" என்றாள் நிலாயினி.

இருவரும் பேசியபடி அந்த ஐஸ்கிரீம் கடையை அடைந்திருக்க, "என்ன ஜுஸ் வேணும் உனக்கு?" என்றான் உள்ளே நுழைந்ததும்,

"இங்க ஃபலூடா நல்லாருக்கும் ட்ரை பண்றீங்களா?" என்றாள் அவளே,

"நீ சொன்னப்றம் ட்ரை பண்ணாமலா?" என்றவன் இருவருக்கும், 'ஃப்ரூட் பலூடா' சொல்லிவிட்டு வந்தமர்ந்தான்.

"எங்க வீட்டு சிட்யூவேஷன உங்கம்மாட்ட சொல்லிட்டீங்களா?" என கேட்டு அவன் முகத்தைப் பார்க்க,

"என்ன சொல்லணும்?"

"உண்மைய அப்படியே சொல்லிடுங்க. எதுவும் கூட குறைச்சுன்னு மறைக்க வேணாம். இங்க எனக்கு நிறைய மாப்ள வீடு என் வேலைய வச்சு வரும், ஆனா அப்பா விஷயம் தெரிஞ்சதும் அப்படியே சொல்லிக்காம போயிடுவாங்க. சிலது எனக்கே செட்டாகாதுன்னு தோணும். அவங்கட்ட, என் தங்கச்சிங்க என் பொறுப்புன்னு சொல்லுவேன் போயிடுவாங்க. அவங்க ரெண்டு பேரும் ஸ்டெடி ஆகட்டும்னு தான் இவ்ளோ தூரம் கொண்டு வந்தேன். இப்ப நீங்க?"

"ம்ம் நான்?"

"உங்க வீட்ல எல்லாமே சொல்லுங்க. அப்றம் எதுவும் பிரச்சனைன்னு வந்து நிக்க வேணாம். ப்ளீஸ்"

"சரி பாத்துக்கலாம்" என்றான் சுமூகமாக.

"எப்போ பேசுவீங்க?"

"எப்போ பேசட்டும்?"

"சீக்கிரமே சொல்லிட்டா. அவங்களுக்கு ஓகேவா இல்லையான்னு தெரிஞ்சுக்கலாம்" என இழுத்தாள்,

"தெரிஞ்சுட்டு?"

"என்ன கொஸ்டீனா கேக்றீங்க?" என உதட்டை சுழிக்க,

"நீ ஏன் பாதில பாதில நிறுத்துற?" என்றான் அவனும்.

"உண்மைய சொல்லி கல்யாணம் பண்ணிப்போம்"

"ஓகே!" என முடித்துவிட்டான். அவனையே முறைத்துப்பார்த்தாள், "என்ன முறைப்பு?" என்றான் புருவம் உயர்த்தி.

"டீடெயிலா பேசவே மாட்டீங்களா? 'இப்படி சொல்றேன், அம்மா ஒத்துப்பாங்க, இல்லனா ஒத்துக்க மாட்டாங்க சமாளிக்கணும், இல்லனா நா இப்படி எதாவது பேசி சம்மதிக்க வச்சுடுவேன்' இந்தமாதிரிலாம் விளக்கமா பேச மாட்டீங்களா?"

"மொத்தத்துல அவங்கள நா ஒத்துக்க வச்சுடணும். மேட்டர் அவ்ளோ தானே?" என தோளைக் குலுக்க, ஃபலூடா வந்துவிட்டது. அவள் அதை மேசையில் வைத்து, இடது கையில் டிஸ்யூ கொண்டு க்ளாஸைப் பிடித்து, மேலிருக்கும் நட்ஸில் கொஞ்சம், பழங்களில் கொஞ்சம், ஐஸ்கிரீமில் கொஞ்சம் என ஒரே ஸ்பூனில் சேர்த்தெடுத்து வாயில் வைக்க நிமிர,ஈஔ எதிரிலிருந்தவன் க்ளாஸோடு மடமடவென குடித்துக்கொண்டிருந்தான், பாதி டம்பளர் காலியாகியிருக்க, கையில் எடுத்ததை அப்படியே வைத்தவாறு குனிந்து அவன் டம்பளரில் மிச்சமிருக்கும் அளவையும் அவன் குடிக்கும் வேகத்தையும் பார்த்தாள்.

"குனிஞ்சு என்னப் பாக்ற நீ?" என்றவன் க்ளாஸிலிருந்ததைக் குடித்தே முடித்திருக்க.

"இதுக்கு நீங்க ஜுஸே வாங்கி குடிச்சுருக்கலாம். ஃபலூடாவ யாராவது இப்படி மொடா குடியா குடிப்பாங்களா?" என்றாள்.

"நீ வேணா உன்னோடதுல மெதுவா எப்படி சாப்பிடறதுன்னு சொல்லித் தர்றியா?"

"ஒன்னும் வேணாம் போங்க" என்றவள் வேகமாக சாப்பிட முயன்றாள், முயற்சி மட்டுமே, எதிரே அமர்ந்து குறுகுறுவென பார்த்திருப்பவன் வேறு அதிக தொந்தரவாக இருந்தான்.

"எப்படி வந்தீங்க கரெக்ட்டா?" என்றாள் அவன் பார்வையைத் தவிர்க்க எண்ணி.

"குருதேவ்வ நேர்ல பாக்குற ஆசைல தான் உன்ன ஃபாலோ பண்ணேன். பாத்துட்டேன்" இப்படியே அவள் ஒன்று கேட்க, அவன் அதற்கு குதர்க்கமாக பதில் சொல்ல, அவள் முறைக்க, இவன் அவளை சீண்ட என அரைமணி நேரம் கழிந்துவிட, பில்லை அவனே கட்ட, இருவரும் கிளம்பி வெளியே வந்தனர்.

மதுரன் அங்கு தான் காத்துநின்றான், "நா போயிடுவேன் நீங்க கிளம்புங்க" என நிலாயினி சொல்லியும், அவளை வங்கி வரை சென்று விட்டுவிட்டே திரும்பினான்.

"இதுக்கு நா இங்கேயே நின்றுபேன்ல சார்?" என அவர்கள் பின்னரே வந்திருந்த மதுரனை டீலில் விட்டுவிட்டான்.

அடுத்து இருவரும், தற்கொலை செய்துகொண்டதாக சேகரித்து வைத்திருந்த பத்து பெண்களின் வீட்டினரிடம் விசாரிக்கச் சென்றனர்.

அதில் ஆறு பெண்கள் மதி ஃபெர்டிலிட்டி மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்திருப்பது தெரிய வந்தது. எல்லோருமே லெனின் ரோஸ் கல்லூரி மாணவிகள் தான் என்பது கூடுதல் ஒற்றுமை.

பனிரெண்டு பேரில், ரத்னா, ஆண்டாள் உட்பட எட்டு பெண்கள், ஒரே கல்லூரி, ஒரே இடத்தில் சிகிச்சை, கர்ப்பமாகும் முன் தற்கொலை என்று இறந்திருந்தனர். மீதி நான்குபேரும் அதே கல்லூரி என்றாலும், குழந்தை இன்மை காரணம் என்றாலும், மதி மருத்துவமனைக்கு அவர்கள் வந்திருக்கவில்லை. ஒரு பெண் தொடர் கருக்கலைப்பால் தூக்கிட்டுக்கொண்டுவிட்டாள், ஒரு பெண் அதிக ரத்தப்போக்கால் தூக்கிட்டுக் கொண்டுவிட்டாள், மற்றொரு பெண் ஆண் குழந்தை இல்லை என தூக்கிட்டுக் கொண்டிருக்கிறாள், மற்றவள் கர்ப்பவாய் புற்றுநோய் வந்திருக்க வலிதாங்க முடியாமல் தற்கொலை செய்திருக்க, குழந்தையும் இல்லாமலிருந்ததால் அதையே காரணமாக்கியிருந்தனர்.

அடுத்த வந்த நாட்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் செல்வதும், அங்கு அக்கம்பக்கத்தினரிடமும் என விசாரணையில் தான் கழிந்தது அவர்கள் இருவருக்கும். இவ்வாறு அதில் நான்கு வழக்குகள் குறைந்திருக்க அதைப் பிரித்துவிட்டு எட்டாக குறைத்தனர்.

"இனி விசாரிக்க வேண்டியது மதி ஃபெர்டிலிட்டி ஹாஸ்பிடல் தான் சார்" என்றான் மதுரன்.

"ஃபேஸ்புக்ல ஃபில்டர் பண்ணி காமன் ஃப்ரென்ட்ஸ் எடுக்க சொன்னேனே என்னாச்சு?"

"அது நிறைய இருக்கானுங்க சார். எல்லாம் ஒரே காலேஜுங்குறதால, முந்நூறு நானூறுன்னு ம்யூச்சுவல் ஃப்ரெண்ட்ஸ் காட்டுது"

"அதுல காமன் சைட்ஸ்?"

"நாம ரத்னா கேஸ்லயும் ஆண்டாள் கேஸ்லயும் பொண்ணுங்க பேர்ல ஒரு நாளு ஃபேக் ஐடி எடுத்தோமே? அவனுங்க இங்கயும் ஃப்ரெண்டா தான் இருக்கானுங்க. அதுப்போக இன்னும் எத்தன ஃபேக் ஐடி இருக்குன்னு தெரியல சார். இவனுங்க நாலு பேரும் வளைச்சு வளைச்சு மேசேஜா போட்டுத் தாக்கிருக்கானுங்க. சில பொண்ணுங்க ரிப்ளை பண்ணிருக்காங்க, சிலர் பண்ணல"

"அப்ப அவனுங்க நாலு பேரையும் முதல்ல தூக்கணும். அட்ரெஸ் ட்ரேஸ் அவுட் பண்ணு" என்றான்.

இந்த விசாரணைகளிலேயே அந்த வாரம் அவர்களுக்கு சென்றிருந்தது.

அன்று இரவு வெகு தாமதமாக தான் வீடு வந்திறங்கினான் ஆரன். மேலே படி ஏறும்போது எதிர்வீட்டை சாதாரணமாகப் பார்க்கத் திரும்ப, வெளியே ஊஞ்சலில் ஒரு உருவம் அமர்ந்திருப்பது தெரிந்தது. அதன் உடல்வாகு வைத்தே அது நிலா தான் எனக் கண்டுகொண்டிருந்தான்.

"மணி பதினொன்னு ஆகுது, இந்நேரம் இங்க என்ன பண்றா?" என்றவன், அவளுக்கு ஃபோனில் அழைக்க, கண்ணை மூடி கூடை ஊஞ்சலில் சாய்ந்திருந்தவள், மடியில் கிடந்த ஃபோன் சத்தத்தில், அதை எடுத்து பார்த்தாள். மேலேறியிருந்தவன் அதையும் அங்கிருந்து பார்த்தபடி வந்து சுவற்றில் சாய்ந்து நின்றான்.

ஆரனின் அழைப்பு என்றதும், தன்னால் அவளும் அவன் வீட்டைப் பார்க்க, அங்கு நிற்பவன் வெளி விளக்கு வெளிச்சத்தில் வரிவடிவமாக தெரிந்தான். ஃபோனை எடுக்க அவன் சைகையில் சொல்ல, எடுத்து காதில் வைத்தாள்.

"தூங்காம என்ன பண்ற நீ?"

"எங்கம்மா வீட்டுக்கு வந்துட்டாங்க"

"சரிம்மா, அதுக்கு நீ ஏன் வெளில உட்கார்ந்துருக்க? அம்மா கூட சண்டையா?"

"அவரையும் கூடவே கூட்டிட்டு வந்துருக்காங்க"

இது நிச்சயம் அவன் எதிர்பார்த்த ஒன்றுதான். அவன் விசாரித்தவரையில், நிலாவின் அப்பாவிற்கும் அவரின் தரமற்ற உறவுக்கும் இடையில் வேறு ஏதோ பெரிய பிரச்சனை வந்துவிட்டிருந்ததாக விசாரித்த இன்ஸ்பெக்டர் கூறியிருந்தார். நிலாவின் அப்பா அவர்களை விட்டு விலக முயல்வதும், அவர்கள் விடாமல் அவரை தொந்தரவு செய்வதுமாக தான் இருக்கின்றனர். அவர்களுக்குள் என்னப் பிரச்சனை, அவர்கள் மீது புகார் கொடுங்கள் என காவல்துறை கேட்டும், 'செல்வகுமார் வாயே திறக்கவில்லையாம், "நா எந்த கேஸும் குடுக்கல, அவங்கள மறுபடியும் என் வழிக்கு வராம மட்டும் இருக்க வார்ன் பண்ணிவிடுங்க சார்" என்று தான் திரும்பத் திரும்பக் கூறினார்' என்றிருந்தார். அப்பவே இவன் முடிவிற்கு வந்திருந்தான், மீண்டு வருபவர், இங்கு தான் வந்து நிற்பார் என்று. அதனாலேயே அவன் அம்மாவிடம், அவள் அப்பா வரட்டும் என்றிருந்ததும், அவளிடம் பிடிகொடுக்காமல் பேசியதும் கூட.

"சரிடி அதுக்கு எதுக்கு நீ வெளில உட்கார்ந்துருக்க?"

"எனக்கு பிடிக்கல. இங்க இருக்கவே பிடிக்கல. எட்டு வருஷமா எங்க போனாருன்னே தெரியாதவர, கூடவே இருந்து எல்லாம் பார்த்து இப்ப வீட்டுக்கும் கூட்டிட்டு வந்து நிக்றாங்க" என்றவள் விசும்பவே செய்தாள்.

"உன் தங்கச்சிங்களா எங்க?"

"இங்க தான் இவ்ளோ நேரம் நின்னாங்க. நாந்தான் உள்ள விரட்டி விட்டுட்டேன். எங்கையாச்சும் போயிடணும் போல இருக்கு" என்றாள் பாவமாக.

"ஏன் நிலாம்மா? உன் அம்மா அவரோட வேற எங்கையாச்சும் போயிருந்தா உனக்கு ஓகேவா?"

"எப்படி இப்படி இவங்களால முடியுது? இவங்க வேணாம்னு விட்டுட்டு இன்னொருத்தியோட போனவர, திரும்பி அடிபட்டு வந்ததும் ஏத்துக்க முடியுமா? உறுத்தாதா? அவர் மூஞ்ச பாக்கும்போதுலாம் அவர் பண்ணத் துரோகம் கண்ணுக்கு முன்ன வராதா? ஒரு மகளா எனக்கே இவ்ளோ அருவருப்பா இருக்குன்னா அவங்களுக்கு எவ்ளோ இருக்கணும். எப்படி அவரக் கூட்டிட்டு வீடு வர வந்து நிக்றாங்க? உடம்பு சரியாகுற வர இங்க இருக்கட்டுமாம் அப்றம் போயிடுவாராம். ஹேரு தான் போவாரு. எனக்கு அவ்வளவு எரிச்சலா வருதுங்க" என அவள் பேசுவதை பொறுமையாகக் கேட்டு நின்றான்.

"என்ன பண்ணலாம் நிலா? இப்படி வெளிலயே உட்கார்ந்துருக்க போறியா?"

"ஆமா விடிஞ்சதும் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் தேடி போயிடலாம்னு இருக்கேன். ஒருமாதிரி சாக்கடைகுள்ள இருக்க மாதிரி இருக்கு எனக்கு"

"அடிவாங்குவ நிலா!" என்றான் ஆரன்.

ஒழுக்கம் தவறிய மனிதரை முழுமையாக வெறுத்துவிட்டாள் என அவ்வார்த்தையில் புரிந்துகொண்டான் ஆரன் விஷ்வேஷ்வரன். இதைவிட கொடுமைகாரர்களையும் கேடு கெட்டவர்களையும் பார்த்துக் கடந்து வருபவன் அவன். அதனால் அவனுக்கு செல்வகுமார் மீதும், 'வேண்டாதத செஞ்சுட்டு இப்ப அத அழிக்க முடியாம முழிக்காரு' என்ற எண்ணம் மட்டுமே.

"உங்களுக்கு புரியலல? எனக்கு இங்க இருக்க இருக்க எரிச்சலா இருக்கு. ஒருமாதிரி ஸ்ட்ரெஸ் ஆகுறேன் நான்"

"உன் தங்கச்சிங்கள என்ன பண்ணுவ? அவங்களுக்காக தான மேரேஜ கூட தள்ளிட்டு வந்த?"

"அவங்க சின்னப் பிள்ளைங்க இல்ல? நா வெளியூர்ல வேலைப் பாத்தப்பவும் அவங்கள நா பாத்துட்டு தான் இருந்தேன். இப்பவும் அப்படி நினைச்சுப்பேன். சீக்கிரம் சந்திராக்கு கல்யாணம் பண்ணணும். தீக்ஷி எப்படியும் சமாளிப்பா"

"உன் அம்மா?"

"அவங்களுக்கு என்ன? நா என்ன பேசுனாலும் இப்பக் கேட்டுக்குற நிலைமைல இல்ல. போன புருஷன் திரும்ப வந்துட்ட சந்தோஷத்துல இருக்காங்க. இருக்கட்டும்"

"அவங்க உன் பேச்சக் கேட்கலன்னு தான் உனக்கு ரொம்ப கோவமா நிலா?"

"அதும்தான்னு நினைக்கிறேன். இவ்ளோ நாள் நாந்தான் இவங்கள எல்லாம் பாத்துட்ட மாதிரி ஒரு ஃபீல்ல இருந்துட்டேன். அப்ப எல்லாம் என் பேச்ச கேட்டவங்க இன்னைக்கு அவர் வரவும் கேட்கல, அவருதான் முக்கியம்னு போய்ட்டாங்க. அது எனக்கு உள்ள ரொம்ப டிஸ்டர்ப் ஆகுது. அப்ப நா இவங்களுக்கு ஒன்னுமே இல்லையான்னு தோணுது. எனக்கே தெரியுது நா பாத்துக்கிட்டேன்றதுக்காக அவங்க ஒன்னும் எனக்கு அடிமை இல்லையே என் பேச்சத்தான் கேட்கணும்னு சொல்றதுக்கு? அதான் எனக்கு இங்க இருக்க வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்"

எல்லாம் யோசித்திருக்கிறாள் என புரிந்தவனுக்கு சிரிப்பும் வந்தது, "மாட்னடா ஆரா. எதாவது சின்ன விஷயத்துல சிக்குனாலும் சிக்கன் பிரியாணி தான்டா நீ" என அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான்.

"நீ பாட்டுக்கு ஹாஸ்டல் போய்ட்டனா அப்ப நான்?" என்க,

"நீங்க என்ன? ஆள் இல்லாத அநாதை பிள்ளைன்னு பேசுங்க உங்க வீட்ல, அப்பவும் ஓகேனா கல்யாணம் பண்ணிப்போம்"

"இவ்ளோ கோவக்காரியா நீ?"

"ஆமா ரொம்ப வரும். சமாளிக்கணும் வேற வழியில்ல உங்களுக்கு"

"சரி அத அப்றம் சமாளிப்போம். கல்யாணம் பண்ணிப்போமா நிலா?" என்றான் அவளையே பார்த்து,

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், "உங்க வீட்லப் பேசுங்க" என்றாள்.

"நா சொல்றத பொறுமையா கேட்பியா?"

"என்ன சொல்லப் போறீங்க?"

"ஒரு ஒன் மந்த் வெயிட் பண்ணு. உங்கப்பாவ பத்தி எதுவும் நாம பேசிக்க வேணாம். சத்தமில்லாம உன்ன கல்யாணம் பண்ணி நா என்னோட கூப்பிட்டுக்குறேன்"

"அதுவர நா ஹாஸ்டல்ல தான் இருப்பேன்"

"நிலாம்மா!"

"ப்ளீஸ். நீங்க உங்க வீட்ல இத சொல்லவே அசிங்கப் படுறீங்க. இத சொன்னா என்னையும் அதவச்சு ட்ரீட் பண்ணுவாங்கன்னு யோசிக்கிறீங்க. எனக்கு புரியுது அது தப்பாவும் தெரியல. நீங்க என்னப் பண்ணணுமோ பண்ணுங்க ஆனா அதுவர நா ஹாஸ்டல்ல தான் இருப்பேன்"

"சரியான அடம்டி நீ"

"ஆமா கொஞ்சம் உங்கள மாதிரி தான்"

"நா ரொம்ப ஃப்லெக்ஸிபில் உன்ன மாதிரி இல்ல. சரி இப்ப உள்ள போய் படு" என சொல்லிக் கொண்டிருக்கையிலேயே,

"நீ பேசி முடிப்ப வந்து படுக்கலாம்னு பார்த்தா நீ பேசிட்டே இருக்க, எங்களுக்கு தூக்கம் வருது, நாங்க காதுல காட்டன் வச்சாச்சு சோ நீ பேசிட்டு வந்தே படு" என்ற சந்திராவும் தீக்ஷியும் தலையணைப் போர்வையோடு வந்து அவள் அமர்ந்திருந்த ஊஞ்சலின் கீழேயே விரித்துப் படுத்தனர்.

நிலா விழிக்க, ஃபோனில் அவர்கள் பேச்சையும் நேராக அவர்கள் செயலையும் பார்த்திருந்தவன், சிரிப்புடன், "போனா இந்த பிள்ளைங்களையும் கூட்டிட்டுப் போ. இல்லனா கொஞ்சம் பல்லைக் கடிச்சுட்டு அமைதியா இரு. நா வேகமா நம்ம வேலைய முடிச்சுடுறேன்" என்றான்.

"ம்ச் நா மூச்சு முட்டி செத்துடாம இருந்தா கட்டிக்கோங்க" என்றாள் சோகமாக,

"வெளுக்கத்தான் போறேன் உன்ன" என அவன் மிரட்ட, அவள் பேச என மேலும் அரைமணி நேரம் கடத்தி, அவளுக்கு கண்கள் சொருக துவங்கிய பின்னரே அழைப்பை நிறுத்தினான். அவள் கூடையிலேயே கைகளையும் கால்களையும் சுருக்கித் தூங்கிவிட, இவன் அங்கேயே தான் நின்றிருந்தான்.

நிலாயினி பேச்சு சத்தம் நின்ற பத்து நிமிடத்தில் வினோதினி வெளியே வந்தார். தனது மூன்று பெண்களையும் பார்த்து மௌனமாக கண்ணீர் வடித்தார். சற்று நேரம் அங்கேயே சுவற்றில் சாய்ந்து அமர்ந்துவிட்டார். அதையும் மேலிருந்து பார்த்தபடி தான் இருந்தான் ஆரன் விஷ்வேஷ்வரன்.

விடியல் வரை அங்கு தான் மொபலை பார்த்துக்கொண்டு அங்குமிங்கும் நடந்தபடி இருந்தான். ஐந்து மணி ஆகவும், தங்கமாடத்திக்கு அழைத்து, "ம்மா, நிலாவ வந்து பொண்ணு கேளும்மா. எல்லாம் பேசி முடிச்சிடு. ஒன்மந்த்ல கல்யாண தேதியும் இருக்க மாதிரி முடிவு பண்ணிடு" என சொல்ல,

"ஏன்டா? புனிதா வரணும்ல?"

"நீ பேசி முடி, இனி ஸ்கூல் லீவ் தான பாப்பாக்கு. அவளையும் ஒரு வாரம் லீவ் போட்டுட்டு வர சொல்லுவோம்" என்க,

"ஆமா அதுவும் சரிதான்" என்றவர் மகள் பேத்தி விடுமுறை மகன் திருமணம் எல்லாம் சேர குதூகலமாகிவிட்டார். அடுத்த நிமிடம் புனிதாவிற்கும் அழைத்துப் பேச, அனைத்தும் படுவேகமாக தயாராகியது. ஆரனும் அழைத்து புனிதா மற்றும் அவள் கணவன் இருவரிடமும் பேசிவிட்டான்.

விடியத் துவங்கியிருக்க, ஊஞ்சலில் சுருண்டு உறங்கிக் கொண்டிருந்தவள் முகம் இப்போது நன்கு தெரிய, "கெட் ரெடி நிலா டூ பி மைன்" என அவளுக்கு ஒரு செய்தியை அனுப்பிவிட்டே, வீட்டினுள் சென்றான்.

எட்டு மணி போல் மதுரன் வந்து எழுப்பவுமே எழுந்து கொண்டான். இருவரும் அவர்கள் வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட, அங்கு நிலாயினி வீட்டில், சந்திராவும், தீக்ஷியும் தான் உர்ரென்ற முகத்துடன் வலம் வந்தனர். நிலாயினி அவள் அம்மாவையும் அப்பாவையும் ஆட்களாகவே கண்டு கொள்ளவில்லை.

"லஷ்மி! லஷ்மி!" என வினோ பேச வந்தபோதும்,

"சந்திரா, நா இங்க இருக்கணும்னா இவங்க ரெண்டு பேரும் என்ட்ட பேசவே கூடாது. இல்ல பேசதான் செய்வேன்னு அடம் பிடிச்சாங்கன்னா நா ஹாஸ்டல் பார்த்துப் போயிடுவேன். என்ன செய்யட்டும்னு கேட்டு சொல்லு" என்றவள், அவள் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.

அதன் பின்னரே ஆரனின் செய்தியைப் பார்த்துவிட்டு அவனுக்கு அழைக்க, அவன் விஷயத்தை சொல்ல, "இன்னைக்கேவா?" என்றாள் அதிர்ந்து.

"ஆமா சீக்கிரம்னு நீதானம்மா சொன்ன?"

"ஆனாலும்?"

"நான் ஃபார்முக்கு வந்துட்டேன். பேக் அடிச்ச வெளுத்துபுடுவேன்" என்றான் மிரட்டலாக.

"வீட்டு சிட்யுவேஷன தான் யோசிக்கிறேன். அவங்கட்ட நானே பேசல. இப்ப உங்க வீட்ல இருந்து பேச வருவாங்க, அவங்கட்ட தான பேசுவாங்க"

"என்னைக்குனாலும் அவங்கட்ட தான் வந்து பேசணும். பேசாம எப்படி கல்யாணம் பண்ணுறது? மே பி உங்க அம்மாவும் அதுக்காக தான் உங்கப்பாவ வரட்டும்னு விட்ருக்கலாம். வர்றவங்க பேச்செல்லாம் கேட்குறதுக்கு பதில், வீட்டுக்குள்ள அவங்க நிம்மதி மட்டும் போறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லன்னு தோணிருக்கலாம்" என்றான்.

"இல்லனா மட்டும் இங்க யாருக்குமே தெரியாதாக்கும்? எப்படியும் தெரியவரும் பேச்சும் வரும். பொண்ணுங்க நாங்க அசிங்கப்பட்டு நிக்கணும்"

"சரி அந்தப் பேச்சே வேணாம். இன்னைக்கு வந்து எல்லாம் பேசிடுவாங்க. இந்த மந்த்துலயே மேரேஜ் ஃபிக்ஸ் பண்ண சொல்லிருக்கேன். நல்லா அழகா ரெடியாகிட்டு ஒரு செல்ஃபி எடுத்து அனுப்புப் பாப்போம்"

"எனக்கு டென்ஷனா இருக்கு உங்களுக்கு ஜாலியோ?"

"நீயும் ஜாலியா இரு நிலா" என அமைதியாக சொல்ல, "சரி!" என்றுவிட்டாள்.

சந்திரா, தீக்ஷி இருவரையும் அறைக்குள் அழைத்து விஷயத்தைச் சொல்ல, "பாத்துக்கலாம் லஷ்மி. நாமளா எதையும் சொல்ல வேணாம். அவங்களா கேட்டா சமாளிச்சுக்கலாம்" என்றாள் சந்திரா.

அடுத்த மேல் வேலைகள் அனைத்தையும், மூன்று பெண்களுமே பார்க்க, வினோதினியும், செல்வகுமாரும் புரியாமல் பார்த்திருந்தனர். முதல் நாள் வீட்டுக்குள் வந்த நிமிடம் தொட்டு செல்வகுமார் இந்த நொடிவரை பேச்சே இல்லை. இவர்களுடன் இருப்பதே போதும் என அமைதியோ அமைதி என்று தான் இருந்தார்.

பத்து மணி போல், தங்கமாடத்தியும், இளங்கோவனும், உடன் வேறு மூன்று பெண்மணிகளும் வீட்டினுள் வந்தமர, நிலாயினியும் புடவைக் கட்டிப் பெண்ணாக தயாராகி நிற்கக் கண்டு தான் வினோதினி, செல்வகுமார் இருவருக்கும் விஷயம் புரிந்தது.

செல்வகுமார் அதிர்ந்துப் பார்க்க, வினோதினிக்கு அழுகையே முட்டிவிட்டது, ஆனாலும் பெண்ணிற்கான நல்ல காரியம் என அடக்கிக் கொண்டவர் பேச்சில் கலந்தார்.

"பொண்ணு கேட்டு வந்துருக்கோம். எதிர்வீட்ல இருக்க ஆரன் விஷ்வேஷ்வரன் தான் எங்க பையன். உங்கப் பொண்ணப் புடிச்சுருக்குன்னு சொன்னான். அதான் நேரடியா பேசிடலாம்னு வந்துட்டோம். பையன் போலீஸ்ல க்ரைம் ப்ராஞ்சுல இருக்கான். நாற்பத்தெட்டாயிரம் சம்பளம். ஜாதக பொருத்தம் பாக்கணும்னு நினைக்கல, பொண்ணு மட்டும் போதும்னு கிளம்பி வந்துட்டோம். இனி நீங்க தான் சொல்லணும்" என தங்கமாடத்தியே படபடவென்று பேச,

"எங்க பொண்ணுட்டையும் பேசிருக்காரு உங்க புள்ள. அவளுக்கு பிடிச்சுருக்குன்னா எங்களுக்கும் சம்மதம் தான்" என்றார் வினோதினி.

"உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு மகன் சொன்னான். இப்ப பரவால்லயா?" என்றார் இளங்கோவன் செல்வகுமாரிடம்.

"பரவால்லங்க" என்ற செல்வகுமாருக்கு பேச்சே வரவில்லை,

சந்திராவும், தீக்ஷியும் தான், டீயும் பண்டங்களும் கொடுத்துப் பரிமாறினர், கேட்ட கேள்விகளுக்கும் கலகலப்பாக பதில் கூறினர்.

மற்றவர்களிடம் போல், தான் தான் அடுத்தப் பிள்ளைகளுக்கு, எல்லாம் செய்ய வேண்டும் என சொல்ல முடியவில்லை, அவள் அப்பாதான் நடுநாயகமாக அமர்ந்திருக்கிறாரே அதனால் வேறெதுவும் பேச இடமில்லை அங்கு அவளுக்கு.

"லவ் மேரேஜ் மாதிரி தான் இதும் பிள்ளைகளுக்குப் பிடிச்சுருச்சு இனி ஜாதகம்லாம் பார்த்து என்னத்துக்கு. உங்களுக்கு யாரும் தெரியும்னா கேளுங்க இந்த மாசத்துலயே கல்யாண தேதியும் முடிவு பண்ணிடலாம்" என ஒரு பெண்மணி சொல்ல,

"நீங்களே பாத்திடுங்களேன். பத்தாம் தேதிக்கு மேல எதுனாலும் சரிதான்" என்றார் வினோதினி.

வந்தவர்களில் ஆரனின் சித்தியாகப்பட்டவர், எழுந்து வெளியே சென்று யாருக்கோ அழைத்து பேசிவிட்டு, அடுத்த பதினைந்து நிமிடங்களில், "வைகாசி நாளு நல்லாருக்காம்" என வந்து எல்லோரிடமும் சொல்ல, வினோதினியும் நிலாயினியை திரும்பிப் பார்த்துவிட்டு, தலையை அசைக்க, வந்தவர்களில் மூத்த பெண்மணி எழுந்து வந்து நிலாயினிக்கு தலை நிரம்ப மல்லிகைப் பூவை வைத்துவிட்டார்.

ஆரன் விஷ்வேஷ்வரன், லஷ்மி நிலாயினி திருமணம் நிச்சயமானது.
 
Top Bottom